நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 62வது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத் தொடரினை ஒட்டி விடுதலைப் புலிகள் ஐக்கியநாடுகள் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே விடுதலைப் புலிகளால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் "இறைமை" பற்றி சற்று ஆராய்தல் பொருத்தமாக இருக்கும். தமிழீழம் என்கின்ற தனியரசு எவ்வாறு உருவாகும், எந்த நாடுகளும் அங்கீகரிக்காத போது அது எப்படிச் சாத்தியமாகும் போன்ற கேள்விகளும் பலரிடம் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை புரிந்து கொள்வதற்கும் "இறைமை" பற்றி புரிந்து கொள்வது அவசியம்.
Sovereignty என்று அழைக்கப்படும் இறைமைக்கு அறிஞர்கள் பலவாறு விளக்கம் கொடுப்பார்கள். பொதுவாக ஒரு அரசு அல்லது மக்கள் தன்னடைய நாட்டின் மீது கொண்டிருக்கும் உச்ச அதிகாரத்தையும், அந்த அதிகாரம் மற்றைய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதையும் "இறைமை" என்பதற்குள் அடக்குவார்கள்.
இந்த "இறைமை" என்பது பலவிதமாக வகைப்படுத்தப்பட்டிருக்கும். இவைகளில் அனைத்து வகைகளையும் நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழீழம் இன்றைக்கு கொண்டிருக்கும் இறைமையின் வகைகள் குறித்தும், அங்கீகாரம் பெற வேண்டிய இறைமையின் வகைகள் குறித்தும் எமது பார்வையை செலுத்துவோம்.
மக்களிடம் இறைமை இருக்கிறது என்று அரசியல் அறிஞர்கள் சொல்வார்கள். தமிழீழ மக்கள் பல முறை ஒருமித்து வழங்கிய தீர்ப்பின் மூலமும், தமிழீழத் தனியரசை உருவாக்குவதற்காய் போராடுவதற்கு ஒரு பலம் வாய்ந்த அமைப்பினை உருவாக்கியதன் மூலமும் தம்மிடம் உள்ள இறைமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அதை விட முக்கியமாக தமிழீழத்தின் பல பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஒரு நிழல் அரசை நடத்தி, அங்கு சட்டதிட்டங்களை உருவாக்கியிருப்பதன் மூலம் "நிச்சயத் தன்மையுள்ள சட்ட வடிவ இறைமையை" (Defacto and De Jure Sovereignty) வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தேர்தல் மூலமோ, சட்டப்படியோ ஒரு அரசு ஆட்சிக்கு வரத் தேவையில்லை. புரட்சி, பலப் பிரயோகம் போன்ற வழிகளிலும் ஆட்சிக்கு வர முடியும். அப்படி ஒரு அரசு ஆட்சிக்கு வந்தாலும் கூட, அந்த அரசு உடனடியாகவே தனது மக்கள் மீது நிச்சயத் தன்மையுள்ள இறைமையை பெற்றுவிடுகின்றது.
இது போன்ற அரசுகளை சர்வதேசம் காலப் போக்கில் அங்கீகரித்தும் விடுகின்றன. சில அரசுகளை அனைத்து நாடுகளும் அங்கீகரிக்காது விட்டாலும், குறிப்பிட்ட காலம் வரை சகித்துக் கொண்டும் இருக்கின்றன.
பாகிஸ்தனின் அதிபர் முஸராப் சட்டரீதியாகவோ, தேர்தல் மூலமோ அதிகாரத்திற்கு வந்தவர் அல்ல. ஆனால் அவருடைய அரசை சர்வதேசம் அங்கீகரித்தது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியையும் சில வருடங்கள் சர்வதேசம் சகித்துக் கொண்டு, ஒரு அரசுக்குரிய தொடர்புகளை பேணித்தான் வந்தன. இதற்கு காரணம் இவர்கள் தமது நாட்டின் மீது "நிச்சயத் தன்மையுள்ள இறைமையை" பெற்றுக் கொண்டதுதான்.
இதே போன்று மக்கள் புரட்சியின் மூலம் அதிகாரத்திற்கு வந்த ஈரானின் கொமெய்னி, கியுபாவின் பிடல்காஸ்ரோ போன்றோர் அமைத்த அரசுகளும் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டன. இங்கே "மக்கள் இறைமை" என்பதும், "நிச்சயத் தன்மையுள்ள இறைமை" என்பதும் கருத்தில் எடுக்கப்பட்டு சர்வதேசத்தால் அங்கீகாரத்தை பெறுகின்றன.
தமிழீழ மக்களிடம் "மக்கள் இறைமை" இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் "நிச்சயத் தன்மையுள்ள இறைமை" இருக்கிறது.
இவைகளை விட இறைமையை "உள்ளக இறைமை" (Internal Sovereignty) என்றும் "வெளியக இறைமை" (External Sovereignty) என்றும் இரண்டாகப் பிரிப்பார்கள். "உள்ளக இறைமை" என்பது ஒரு அரசு தன்னுடைய நிலப் பரப்பில் அனைத்துவிதமான அதிகாரங்களையும் செலுத்துகின்ற தன்மை ஆகும். ஒரு அரசினால் தன்னுடைய நிலப் பரப்பில் வாழுகின்ற மக்களை கட்டுப்படுத்த முடிகின்ற போது, அந்த அரசு "உள்ளக இறைமை" கொண்ட அரசாகக் கருதப்படுகிறது.
"புற இறைமை" என்பது ஒரு அரசு பிற நாடுகளுடன் அரசுரீதியான தொடர்புகளை பேணுவது, தூதரக உறவுகளைக் கொண்டிருப்பது, பிற நாடுகளுடன் உடன்படிக்கைகளை செய்து கொள்வது போன்ற விடயங்களைக் குறிக்கும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமது நிர்வாகப் பகுதிகளில் "உள்ளக இறைமையை" கொண்டிருக்கிறார்கள். ஆனால் மற்றைய நாடுகளுடன் அரசுரீதியான உறவுகளைப் பேணவோ, உடன்படிக்கை செய்யவோ அனுமதி அளிக்கின்ற "வெளியக இறைமை" அற்றவர்களாக இருக்கிறார்கள். "மக்கள் இறைமை" பெற்றுள்ள தமிழீழ மக்கள் "வெளியக இறைமை" பெறுவதற்கும் உரிமை உள்ளவர்களாக இருந்தும், இன்றுவரை சர்வதேசம் தமிழீழ மக்களின் முற்றுமுழுதான இறைமையை அங்கீகரிக்கவில்லை.
இங்கே ஒரு கேள்வி வருகிறது. சர்வதேசம் விடுதலைப் புலிகள் நடத்துகின்ற அரசின் "நிச்சயத் தன்மையுள்ள சட்ட வடிவ இறைமையையும்" "உள்ளக இறைமையையும்" அங்கீகரித்துள்ளதா என்பதே அந்தக் கேள்வி. இதற்கு பதில் "ஆம்" என்பதுதான். இந்த இறைமை வகைகளை விடுதலைப் புலிகளின் நிர்வாகம் கொண்டுள்ளதை அங்கீகரித்ததனாலேயே "புரிந்துணர்வு ஒப்பந்தம்" உருவானது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் அவர்களின் ஆளுமையை அங்கீகரித்தது. விடுதலைப் புலிகளின் படையணிகள், காவல்துறை, நீதிநிர்வாகம் போன்றவை செயற்படுவதை ஏற்றுக்கொண்டது. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியல் சிறிலங்காவின் சட்டவடிவச் செயற்பாடுகளை நடைபெறாது என்பதை ஏற்றுக் கொண்டது. உதாரணமாக சிறிலங்கா அரசின் காவல்துறை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்வது ஒப்பந்த மீறலாக சொல்லப்பட்டது.
இவ்வாறு சர்வதேசம் விடுதலைப் புலிகளின் நிர்வாக அரசை "நிச்சயத்தன்மையுள்ள சட்ட வடிவ இறைமை" உள்ளதாகவும், "உள்ளக இறைமை" உள்ளதாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அங்கீகரித்தது.
போர் நடைபெற்று வருகின்ற இன்றைய மோசமான நிலையிலும் விடுதலைப் புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்காது இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். தமிழீழ மக்களின் இறைமையை சர்வதேசம் அங்கீகரிப்பதில் ஏற்பட்ட ஒரு சாதகமான திருப்பமாக விடுதலைப் புலிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பார்க்கிறார்கள்.
இந்த இடத்தில் ஆழிப் பேரலை பொதுக்கட்டமைப்பு பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். தமிழீழ அரசு தன்னுடைய "வெளியக இறைமையை" வெளிப்படுத்துவதன் ஒரு படியாக இந்த பொதுக்கட்டமைப்பு அமைந்திருக்கும். ஆனால் சிறிலங்கா அரசு நீதிமன்றம் மூலம் அதை தடுத்து விட்டது. தமிழீழம் "வெளியக இறைமை" நோக்கி பயணிப்பதன் ஆரம்பமாக பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தம் அமைந்து விடும் என்று சிறிலங்கா அரசு கருதியதானேலேயே, சர்வதேச அழுத்தங்களையும் மீறி நீதிமன்றம் மூலம் பொதுக்கட்டமைப்பு உருவாகாமல் தடுத்தது.
ஆகவே புரிந்துணர்வு ஒப்பந்தமாக இருக்கட்டும், பொதுக்கட்டமைப்பாக இருக்கட்டும், விடுதலைப் புலிகள் பல விட்டுக் கொடுப்புக்களோடு இவைகளுக்கு சம்மதிப்பதை, தமிழீழத்தின் முற்றுமுழதான இறைமையை சர்வதேசம் அங்கீகரிக்கச் செய்வதற்கான போராட்டத்தின் பகுதிகளாகவே பார்க்க வேண்டும்.
விடுதலைப் புலிகளும், தமிழீழ மக்களும் கொண்டுள்ள இறையை பார்க்கின்ற அதே நேரம், மறுபக்கமாக சிறிலங்கா அரசின் இறைமையைப் பார்ப்போமாக இருந்தால், சிறிலங்கா அரசு தன்னுடைய பகுதி என்று சொல்கின்ற நிலப் பரப்புகளில் "இறைமை" இழந்த நிலையில் இருப்பதைப் காணலாம்.
தமிழீழத்தில் சிறிலங்கா அரசு "மக்கள் இறைமையை" கொண்டிருக்கவில்லை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் "நிச்சயத் தன்மையுள்ள சட்ட வடிவ இறைமையை" கொண்டிருக்கவில்லை, "உள்ளக இறைமையை" கொண்டிருக்கவில்லை. இவைகளை எல்லாம் சிறிலங்கா அரசு இழந்து விட்டது.
தமிழீழம் தன்னுடைய இறைமையை காப்பதற்கும், சர்வதேச நாடுகள் அங்கீகரிப்பதற்கும் போராடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு தமிழீழத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் நிலைநாட்டப்பட்டுள்ள "நிச்சயத்தன்மையுள்ள சட்ட வடிவ இறைமை" மற்றும் "உள்ளக இறைமை" ஆகியன தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலைநாட்டப்படுகின்ற போது, தமிழீழத்தின் முற்றுமுழுதான இறைமையை சர்வதேசம் அங்கீகரிக்கும். "மக்கள் இறைமை" மூலம் இது நிலைநாட்டப்படுவதால், சர்வதேசம் தமிழீழத்தை அங்கீகரிப்பதற்கு சட்டரீதியான காரணங்கள் முற்றுமுழுதாக இருக்கின்றன.
ஆகவே புலம்பெயர்ந்துள்ள தமிழர்களாகிய நாம் தமிழீழம் உருவாவது குறித்த தேவையற்ற சந்தேகங்களை விட்டுவிட்டு, தமிழீழ மக்கள் தமிழீழப் பிரதேசம் முழுவதையும் நிர்வாகிப்பதற்கு எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.
2 comments:
நீங்கள் இங்கே தமிழீழம் என்று சொல்லிக்கொள்வது வன்னியையா?
தமிழீழ வரைபடத்தின் படியான பிரதேசங்களில் புலிகளுக்கோ தமிழ் மக்களுக்கோ எந்த இறைமையும் இருப்பதாகத் தெரியவில்லை.
அப்படியே அந்தப்பகுதிகளை படைவலுவைப் பயன்படுத்திப் பிடித்து (:-)) வைத்துக்கொண்டு இறைமையை நிலைநாட்ட ஏகாதிபத்தியங்கள் அனுமதிக்கும் என்றும் நான் நினைக்கவில்லை.
சரி, வன்னியையே எடுத்துக்கொண்டாலும், அங்கேயிருந்து வரும் மக்களுடைய கருத்துக்கள் அவ்வளவு நம்பிக்கையளிப்பதாய் இல்லை. பிரச்சாரங்களும் பாதையடைப்பும் இல்லாதவிடத்து வன்னியிலிருந்து வெளியேறி கொழும்பில் அல்லது வெளிநாடொன்றில் பாதுகாப்பாக குடியேறிவிடவே அங்குள்ள மக்கள் விரும்பக்கூடும்.
சர்வதேச நகர்வுகள் இங்கே தனிநாட்டை பெற்ற்த்தருவதற்கான நோக்கங்களோடு இருக்கப்போவதுமில்லை. இங்கே பதற்றம் நிலவுவதே அவர்கள் தேவையாக இருக்கும். அப்படியே திரு மாஸ்டர் சொல்வதைப்போல, சர்வதேசத்துக்கு தமிழீழம் தேவைப்படுகிற காலம் வந்தால்தான் உண்டு.
சிறீலங்கா இறைமையை இழந்து நிற்கிறதென்று சொல்லி ஒப்பிட முனைவது மிகப்பலவீனமான தர்க்கம்.
அப்படியானால் கிழக்கில் நாங்கள் இழந்தது எதனை?
எம்மைவிட சிறீலங்கா பலசாலியாக இருப்பதை நாம் இப்போதெல்லாம் ஒப்புக்கொள்ள மறுத்து வருவது வேடிக்கை.
யூ என் பீ ஆட்சி ஒன்று நிறுவப்படுமானால் நான் இன்னுமின்னும் தோற்றுப்போவோம். உண்மையில் ராஜபக்ச புலிகளைக் காப்பாற்றி வருகிறார்.
சிறீலங்கா படைபலத்தில் மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் தமிழர்களைப் , புலிகளைப் பல முனைகளிலும் வெற்றி கொள்கிறது.
"மோட்டுச் சிங்களவன்" என்ற ஆதிகால மதர்ப்பு மனநிலை எம்மை மோடயா க்கள் ஆக்கிக்கொண்டு வருவதுதான் நிதர்சனம்.
இந்தக்கட்டுரை மூலம் தமிழீழ ஆர்வலர்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளிப்பது உங்கள் நோக்கமாக இருந்தால், நல்லதே. ஆனால் கட்டுரை பலவீனமானது.
1. ஏகாதிபத்தியங்கள் ஏற்றுக்கொள்ளாத தமிழீழத் தனியரசை நிறுவிக்காக்க எம்மால் முடியுமா?
2. ஏகாதிபத்தியங்கள் ஏற்று ஆசீர்வதிக்கும் தமிழீழத்தை எப்படி பெறுவது? அப்படி ஒரு தமிழீழம் தேவையா?
3. பன்னாட்டு நிறுவனங்களும் மிகப்பெரும் மூலதனங்களும் திருகோணமலை உள்ளிட்ட கிழக்கிலங்கையில் பாய்ந்துவிட்டபிறகு அதனை படை வலுவைப் பயன்படுத்தி பிடித்து வைத்திருத்தலும் இறைமையை நிறுவுதலும் சாத்தியமா?
4. தமிழீழக் கனவுக்கு பலியாகப்போகும் தமிழ் உயிர்கள் இன்னும் எத்தனை இலட்சம்?
5. படைவலுவை விட்டுவிட்டால், அரசியல் ரீதியாக தமிழீழத்தை நோக்கி புலிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதித்திருக்கும் குறிப்பிடத்தக்க சாதனைகள் எவை?
6. வன்னி மக்கள் வன்னியில் இருக்க விரும்புகிறார்களா? (நேர்மையான பதில்!)
7. சிறீலங்கா படையும், அரசாங்கமும் படுதோல்வியடைவதை இந்தியாவும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஏற்றுக்கொள்ளுமா?
நான் "மக்கள் இறைமை" என்பது குறித்தும் இந்தக் கட்டுரையில் பேசியிருக்கிறேன். தமிழீழத்தில் சிறிலங்கா அரசு "மக்கள் இறைமையை" கொண்டிருக்கவில்லை.
இன்றைக்கு வன்னியில் நிலைநாட்டப்பட்டுள்ள "நிச்சயத்தன்மையுள்ள இறைமை", "உள்ளக இறைமை" போன்றவை தமிழீழம் முழுவதும் நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவ வேண்டும் என்றுதான் எழுதியிருக்கிறேன்.
எத்தனையோ நாடுகளின் படைகள் தோற்பதை உலகம் விரும்பாத போதும், அந்தப் படைகள் தோற்றுப் போனதையும், பின்பு வெற்றி பெற்றவர்களை உலகம் ஏற்றுக் கொண்டதையும் நாம் வரலாற்றில் பார்த்திருக்கிறோம்.
எம்மில் பலருக்கு நாம் போரில் வெற்றி பெற்றாலும், உலகம் எமது நாட்டை அங்கீகரிக்குமா என்ற கேள்வி உள்ளது. அவர்களுக்கான ஒரு பதிலாகவே இந்தக் கட்டுரையை எழுதினேன்.
நான் இந்தக் கட்டுரையின் ஊடாகச் சொல்ல முனைவது "பலம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை" என்பதைத்தான். இந்தப் பலம்தான் உலக நாடுகளை தலையிடச் செய்தது. நாளையும் இதே பலம்தான் தமிழீழ மக்களின் இறைமையை அங்கீகரிக்கச் செய்யும்.
இதைச் சொல்கின்ற போது, உலகம் தமிழீழ மக்களின் இறைமையில் ஏதாவது ஒன்றை அங்கீகரித்து இருக்கிறதா என்று கேள்வி எழுகிறது. அதற்கும் இந்தக் கட்டுரையில் சிறிய விளக்கத்தை கொடுத்திருக்கிறேன்.
எமது புலம்பெயர் தமிழர்கள் பின்னடைவுகளால் சலிப்புறாது, நம்பிக்கையீனங்களை வளர்க்காது, எமது போராட்டத்தை பலப்படுத்தி, தமிழீழ மக்கள் தமது தாயகத்தில் இறைமையை நிலைநாட்டுவதற்கு தம்மாலான அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன்.
(உங்களுடைய சில கேள்விகள் நீளமாகவும் பதில் தர வேண்டிய கேள்விகளாக இருக்கின்றன. அதற்கு தனியாகத்தான் கட்டுரை எழுத வேண்டும்.)
Post a Comment