தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பிரச்சார நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாரிஸில் "தலித் மாநாடு" என்ற பெயரில் சிலருடைய சந்திப்பு நடைபெற உள்ளது. இதற்கான விளம்பரங்களை சிங்கள அரசுக்கு சார்பான ஊடகங்கள் செய்து வருகின்றன.
சாதியத்தை இரும்புக்கரம் கொண்டு விடுதலைப் புலிகள் ஒடுக்கி வரும் வேளையில், சாதியத்தை கட்டிக்காப்பவர்கள் என்ற வினோதமான குற்றச்சாட்டை அந்த விடுதலைப் புலிகள் மீதே தெரிவிப்பதற்கும், அதன் அடிப்படையில் தொடர் பிரச்சாரங்கள் செய்து தமிழ்நாட்டில் உள்ள தமிழீழத்திற்கு ஆதரவான தலித் இயக்கங்களுக்குள் ஊடுருவுவதற்கும் இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.
இந்தச் சந்திப்பிற்கான ஒழுங்குளை சிறிலங்கா அரசு ஈபிடிபி ஒட்டுக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மூலம் செய்திருக்கிறது.
இந்த நிலையில், "தலித் மாநாடு" என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக சதி நடைபெறுவதை அறியாத தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலர், "தலித் மாநாட்டை" வரவேற்கும் மனநிலையில் உள்ளனர். ஓரிருவர் "தலித் மாநாட்டை" தமது வலைப்பதிவுகளில் விளம்பரப்படுத்தவும் துணிந்துள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் தமிழீழ ஆதரவாளர்களாக அறியப்பட்டவர்கள் என்பதுதான் இதில் உள்ள வேதனையான வேடிக்கை.
ஒருவிதத்தில் பார்க்கும் போது "தலித்" என்று வருகின்ற போது, இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, ஆதரவு கொடுப்பது என்பது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான். இந்தியா முழுவதும் கோடிக் கணக்கான தலித் மக்கள் பார்ப்பனிய இந்துக்களால் அனுபவிக்கும் கொடுமை மிகப் பெரியது. ஈழத் தமிழர்கள் சிங்களவர்களால் அனுபவிக்கின்ற கொடுமையை விட, இந்தியாவில் தலித் மக்கள் அனுபவிக்கும் கொடுமை அதிகம் என்று துணிந்து சொல்லலாம்.
இந்த மக்களுக்காக போராடுவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அமைப்பு இதுவரை உருவாகவில்லை என்பதையும், அப்படி உருவாகிய பலம் வாய்ந்த கட்சிகளும் வாக்கு அரசியலுக்குள் சிக்குப்பட்டு, தடம் மாறி விட்டதையும் இங்கு வேதனையோடு குறிப்பிட வேண்டும். சில சிறிய கட்சிகளும் மனித உரிமை அமைப்புக்களுமே தலித் மக்கள் பிரச்சனையில் ஓரளவு கவனம் செலுத்துகிறார்கள்.
தலித் மக்கள் அனுபவிக்கும் கொடுமையை சரியாக உணர்ந்தவர்கள் யாருமே, ஐரோப்பாவில் தலித் மக்களின் பெயரில் ஒரு மாநாடு நடக்க இருக்கிறது என்கின்ற செய்தியை மட்டும் அறிந்தவுடன் மகிழ்ச்சி அடையவே செய்வர். ஆதரவு கொடுக்கவும் முனைவர். இது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
மறுபுறம் ஈழத் தமிழர்களும் இப்படியான குண இயல்புகளைக் கொண்டவர்கள்தான் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ்நாட்டிலே மதவெறி இயக்கமான ஆர்எஸ்எஸ் "ஈழ ஆதரவு மாநாடு" என்ற பெயரில் ஒரு மாநாட்டை நடத்தினால், அப்பொழுது பல ஈழத் தமிழர்கள் மகிழ்ச்சி அடையவே செய்வார்கள்.
தமக்கு ஆதரவான குரல் யார் கொடுத்தாலும், அதன் பின்னணிகளை ஆராயாது, ஆதரவு கொடுக்கின்ற தன்மை ஓடுக்கப்பட்ட இனங்களை சேர்ந்த பலரிடம் உண்டு. சில நாட்களுக்கு முன்னர் மதவாதக் கட்சியான பிஜேபி ஈழத் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பதாக அறிவித்த போது, பல ஈழத் தமிழர்கள் அது குறித்து வரவேற்பையே வெளியிட்டனர்.
பிஜேபி திடீரென்று ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிக்க முனைந்ததன் காரணங்கள் அரசியல் சார்ந்தவை. இன்றைக்கு தமிழ்நாட்டில் ராமர்பாலப் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பிஜேபியின் செல்வாக்கு மேலும் குறைவடைந்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்று நம்பப்படும் சேது சமுத்திரத் திட்டத்தை பிஜேபி தடுக்க முனைவதால், தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற பெயரையும் பிஜேபி பெறத் தொடங்கி இருக்கிறது. இந்த நேரத்தில் பிஜேபியும் சிவசேனைக் கட்சி கையாண்ட அதே வழியை கையாளத் தொடங்கி இருக்கிறது.
சிவசேனை ஒரு காலத்தில் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற பெயரைப் பெற்றிருந்தது. மும்பையில் வாழ்ந்த தமிழர்களை அங்கிருந்து விரட்டி அடிக்கின்ற வேலையைத்தான் அப்பொழுது சிவசேனை செய்து வந்தது. பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் மும்பையில் இருந்து சிவசேனைக் கட்சியினரால் அடித்துத் துரத்தப்பட்டு, சொத்துக்களை இழந்து தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள்.
கடைசியில் அதே சிவசேனைக் கட்சி ஈழத் தமிழர்களை ஆதரிப்பதாக அறிக்கை விட்டு, "தமிழர்களுக்கு எதிரான கட்சி" என்று தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை மாற்றுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டது. ஆனால் தமிழீழ மக்களிற்கு ஆதரவாக பெரியார் இயக்கங்களோ, தலித் இயக்கங்களோ போராடியது போன்று காத்திரமான முறையில் சிவசேனைக் கட்சி எதையும் செய்தது இல்லை. சில அறிக்கைகள் வெளியிட்டதோடு சரி.
தற்பொழுது சிவசேனை கையாண்ட அதே வழியை பிஜேபியும் கையாள முனைகிறது. ஆனால் பார்ப்பனியத்தால் இறுகக் கட்டப்பட்டிருக்கும் பிஜேபி உண்மையான ஆதரவை ஈழத் தமிழர்களுக்கு வழங்காது என்பதுதான் உண்மை. புலிகள் வேறு, தமிழர்கள் வேறு என்ற "இந்தியப் பார்வையை" கொண்டிருக்கும் ஒரு கட்சியாகத்தான் பிஜேபி இருக்கிறது.
பிஜேபி ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கப் போவதாக அறிவித்த போது, தமிழ்நாட்டின் ஈழ ஆதரவுக் கட்சிகள் சங்கடத்தில் ஆழ்ந்தன. பெரியார் கட்சிகள் ஆதரவும் தெரிவிக்காது, எதிர்ப்பும் தெரிவிக்காது மௌனம் சாதித்தன.
பழ. நெடுமாறன் ஆதரவு தெரிவித்ததோடு, பிஜேபியின் நிவாரண பொருட்கள் சேகரிப்பை ஆரம்பித்தும் வைத்தார். பிஜேபி என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு கேடு விளைவிக்கும் ஒரு கட்சி என்பதையும், நிவாரணப் பொருட்கள் சேகரிப்பது பிஜேபியின் அரசியல் நலன்களிற்காகவே என்பதையும் நன்கு உணர்ந்திருந்தும் பழ.நெடுமாறன் அவர்கள் வெளிப்படையாக ஆதரவு கொடுத்தார். பழ. நெடுமாறன் அவர்கள் தடுமாறிய ஒரு நிகழ்வாகவே மற்றைய ஈழ ஆதரவுக் கட்சிகள் இதைக் கருதுகின்றன.
திருமாவளவன் ஒருவர்தான் பிஜேபியின் இந்த நடவடிக்கையை வெளிப்படையாக எதிர்த்தார். மதத்தின் பெயரால் ஈழத் தமிழ் மக்களுக்கு உதவுவது தவறு என்று அறிவித்தார்.
பிஜேபியும் ஒரே ஒருநாள் நிவாரணப் பொருட்களை சேகரிப்பதாக போக்கு காட்டிவிட்டு, தனது வழமையான வேலையைப் பார்க்கப் போய் விட்டது.
இதே போன்று தமிழ்நாட்டில் இந்து மக்கள் கட்சி, தனித் தமிழர் சேனை போன்ற மதவாதக் கட்சிகள் ஈழத் தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்துவதும் உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் மதவெறியை வளர்ப்பதிலும், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கலவரங்களை நடத்துவதிலும், பெரியார் சிலைகளை உடைப்பதிலும் இந்த அமைப்புக்களே முன்னணியில் நிற்கின்றன.
இவைகளை எல்லாம் சிந்தியாது இந்த அமைப்புக்கள் ஈழத் தமிழர்களின் பெயரில் நடத்துகின்ற போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஈழத் தமிழர்களின் ஊடகங்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன. தங்களின் பெயரில் தமிழ்நாட்டில் நடக்கின்ற அரசியல் விளையாட்டுக்கள் குறித்து சில ஈழத் தமிழர்களே விழிப்பாக இருக்கிறார்கள். மற்றவர்கள் குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒட்டுமொத்த தமிழினத்திற்கே கேடானவை என்பதை மறந்து, அவைகளின் நடவடிக்கைகளை வரவேற்கும் மனநிலையில்தான் இருக்கிறார்கள்.
இவ்வாறன ஒரு நிலைதான் சிங்கள அரசின் ஏற்பாட்டில் பாரிஸில் நடக்க இருக்கும் தலித் மாநாடு குறித்து சில தமிழ்நாட்டு உறவுகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. "தலித்" மக்களின் உரிமைகள் குறித்து மிகவும் அக்கறையோடு இருப்பவர்கள், "தலித்" என்ற பெயரினால் தடுமாறி விட்டார்கள்.
ஆனால் "ஈழ ஆதரவு மாநாடு" என்ற பெயரில் ஈழ விடுதலைக்காக போராடும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டால் எப்படி இருக்குமோ, அதே போன்றுதான் ஒடுக்கப்படும் மக்களின் பெயரில் ஈழத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது என்பதும் இருக்கும். இந்த உண்மையை தடுமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே நேரத்தில் தமிழினத்திற்கு எதிரான பல செயற்பாடுகள் நடக்கின்றன. எந்த நிலையிலும் தமிழீழ மக்களிற்கு ஆதரவு கொடுக்கின்ற தலித், மற்றும் பெரியார் இயக்கங்களின் பெயரை மாசுபடுத்தும் நடவடிக்கைகளை சிலர் ஐரோப்பாவில் மேற்கொள்கிறார்கள். அதே நேரத்தில் மதவாதக் கட்சிகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு போன்ற ஒரு தோற்றத்தை தமிழ்நாட்டில் காட்ட முனைகிறார்கள்.
தமிழீழ மக்களிற்கு என்றும் துணையாக நிற்கும் அமைப்புக்கள் ஈழத் தமிழர்களிடம் இருந்து தள்ளிநிற்கும் நிலையை உருவாக்குகின்ற வேலைகள் மெதுமெதுவாக நடைபெறுகின்றன. இன்றைக்கு அவைகள் பெரியளவில் தாக்கங்கள் எதையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், காலப் போக்கில் இதன் பாதிப்புக்கள் உணரப்படலாம்.
மொத்தத்தில் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் சரி, "ஈழம், தலித், பெரியார்" போன்ற பெயர்களை உச்சரிப்பவர்களை ஆராய்ந்து பார்க்காது ஏற்றுக்கொள்வது தீமைக்கே வழிவகுக்கும்.
6 comments:
யாரும் இதுவரை பின்னூட்டம் இடாததால், இந்தக் கட்டுரையின் தலைப்பை "தமிழச்சியும் ஓசைசெல்லாவும்" என்று மாற்றுவோமா என்று எனது தோழர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன்.
What sort of comment is it?
You too? Let the cheap gimmick to others. You do not need to use it.
By the way I certainly agree with the contents of your post.
நடுநிலையாக நின்று எழுதியிருக்கிறீர்கள். ஆனால் பழ. நெடுமாறன் ஐயா தடுமாறி விட்டார் என்பது போல் எழுதியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஈழத் தமிழருக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பதற்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்கின்ற போது, மறுப்பதுதான் அவருக்கு மிகவும் சங்கடமானது.
//மொத்தத்தில் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் சரி, "ஈழம், தலித், பெரியார்" போன்ற பெயர்களை உச்சரிப்பவர்களை ஆராய்ந்து பார்க்காது ஏற்றுக்கொள்வது தீமைக்கே வழிவகுக்கும்.//
தங்கள் கருத்தை யானும் வழிமொழிகிறேன்!!
தலித் மாநாட்டைப் பற்றி உங்களுடைய கட்டுரை ஒன்றையும் காணவில்லையே?
தலித் என்ற பெயரில் இவர்களது ஊடுருவல் கண்டிக்கத்தக்கது.
அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
Post a Comment