Friday, September 22, 2006

களங்கப்படுத்தப்படும் விருதுகள்!

உலகின் மிக உயர்ந்த விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. 1901ஆம் ஆண்டில் இருந்து நோபல் பரிசு பல விதமான துறைகளுக்கு வழங்கப்படுகிறது. சமாதானத்திற்கான நோபல் பரிசு பெறுபவர்கள் மிக உயர்ந்த மதிப்பு மிக்க மனிதர்களாக கொள்ளப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் அன்றிலிருந்து இன்று வரை நோபல் பரிசு வழங்கப்படுவதில் பலவிதமான அரசியல் தலையீடுகள் இருக்கின்றன. சமாதானம், அமைதி போன்ற வார்த்தைகளை கேட்பவர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருகின்ற பெயர் மகாத்மா காந்தி. ஆனால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இறந்த பிறகும் பலருக்கு விருதுகள் வழங்கப்படுவது உண்டு. ஆனால் மகாத்மா காந்தி இறந்த பிறகு கூட நோபல் பரிசு வழங்கப்படவில்லை. நோபல் பரிசு வழங்குகின்ற கமிட்டிக்கு அதற்கான சிந்தனையே வரவில்லை.ஆனால் 1993இல் வில்லியம் கிளார்க் என்பவருக்கும் 1994இல் இசாக் ரபின் என்பவருக்கும் சமாதானத்திற்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. வில்லியம் கிளார்க் அன்றைய தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதி. நீண்ட காலம் கறுப்பின மக்களை அடக்கி ஒடுக்கி வந்த ஒரு மனிதர். அப்பாற்கைற் என்னும் கொடிய அடக்குமுறைக்கு பொறுப்பானவர். பல அப்பாவி கறுப்பின மக்களின் சாவுகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர். இப்படிப்பட்ட வில்லியம் கிளார்க் 27 ஆண்டுகள் தன்னுடைய இனத்திற்காக இருட்டுச் சிறையில் வாடிய நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து சமாதானத்திற்கான நோபல் பரிசை 1993 ஆண்டு பெற்றார்.இசாக் ரபின் அன்றைய இஸ்ரேலிய பிரதமர். பாலஸ்தீன மக்கள் மீது இராணுவ அடக்குமுறையை ஏவியவர். ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் சாவுக்கு காரணம் ஆனவர். இவர் 1994ஆம் ஆண்டு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசீர் அராபத்துடன் இணைந்து சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றுக் கொண்டார்.இதில் வேடிக்கை என்னவென்றால் சமாதான நோபல் பரிசு பெற்ற யாசீர் அரபாத் இல்லாமல் போனால்தான் இஸ்ரேலில் சமாதானம் வரும் என்று அமெரிக்கா சில ஆண்டுகள் கழித்துச் சொன்னது. இவைகளை விட பெரும் வேடிக்கை ஒன்று 1987இல் நடக்க இருந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கியதற்காக ஜெ.ஆர் ஜெயவர்த்தனவிற்கும் ராஜீவ்காந்திக்கும் சமாதான நோபல் பரிசு கிடைக்கும் என்று செய்திகள் பரவின. நல்ல வேளையாக அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு நோபல் பரிசு உட்பட சர்வதேச மதிப்பு மிக்கதாக கருதப்படுகின்ற விருதுகள் பெரும்பான்மையான மற்றைய விருதுகளைப் போன்று சில மறைமுகக் காரணங்களுக்காக கொடுக்கப்படுகின்றவை ஆகி விட்டன. இந்தக் காரணங்கள் இவ் விருதுகளை களங்கப்படுத்தியும் விட்டன.கடைசியாக யுனெஸ்கோவின் மன்ஜித் சிங் விருது களங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விருது சமாதானத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் கொடுக்கப்படுகின்ற விருதாகும். இம் முறை இவ் விருது சிறிலங்கா அரசின் கைக்கூலியும், ஒட்டுக்குழுக்களின் ஆலோசகரும், தமிழர் விடுதலைக் கூட்டணியை ஜனநாயகத்திற்கு விரோதமான வழியில் கைப்பற்றி இருப்பவருமான வீரசிங்கம் ஆனந்த சங்கரிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து புலம்பெயர்ந்து வழும் தமிழ் மக்கள் இலத்திரனியல் கையெழுத்து வேட்டையில் இறங்கி இருக்கிறார்கள். அதிலே பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழ் இனத்தால் நிராகரிக்கப்பட்டவரும் அரச பயங்கரவாததிற்கு துணை போகின்றவருமான வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு சமாதான விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளமையானது எமக்கு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி போன்றவைகள் ஆனந்தசங்கரிக்கு சிங்கள இனவாதக் கட்சிகளால் பலமுறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளதன் பின்னணியை யுனெஸ்கோ நிறுவனம் நடுநிலையோடு ஆரயத் தவறி உள்ளதாக நாம் கருதுகிறோம்.சிறிலங்காவின் சமாதானச் சூழ்நிலையை இல்லாது ஒழிப்பதற்கு தீய சக்திகளால் பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாதி கருணா “தமது கூட்டணிக்கு தலைமை தாங்குவதற்கு ஆனந்த சங்கரி பொருத்தமானவர்” என்று முன்மொழிந்துள்ளதையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.அகிம்சைவாதி அன்னை பூபதியையும், ஈழத்து காந்தி எனப் போற்றப்படும் தியாகி தீலிபனையும் பல இடங்களில் பல முறை கொச்சைப்படுத்தியவருக்கு மகாத்மா காந்தியின் நினைவாக விருது கொடுப்பது பெரும் முரண்பாடு ஆகும்.ஆனந்த சங்கரி தமிழ் மக்கள் மீது பயங்கரவாதம் புரியும் ஓட்டுக்குழுக்களின் ஆலோசகராக செயற்பட்டு வருகிறார். அத்துடன் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவும் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். மிக அண்மைய உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தாலும், இணைத் தலைமை நாடுகளினாலும், ஐநா சபையாலும் கண்டிக்கப்பட்ட செஞ்சோலை படுகொலைiயு ஆனந்த சங்கரி கண்டிக்கத் தவறி இருந்தார். அது மட்டுமன்றி செஞ்சோலை படுகொலையை நியாயப்படுத்திய சிங்கள அரசின் கருத்துக்களையே ஆனந்த சங்கரியும் வெளியிட்டிருந்தார். ஆனந்த சங்கரி தலைமை வகிக்கின்ற கட்சியின் இணையத் தளத்தில் ஒட்டுக் குழுக்களிற்கு ஆதரவான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அக் குழுக்களின் இணையத் தளங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன.ஆனந்த சங்கரி அரச பயங்கரவாதத்திற்கும், ஒட்டுக் குழுக்களிற்கும் ஆதரவு அளிப்பதை சகிப்புத்தன்மையுடன் எதிர்கொள்ளும் தமிழ்மக்களே உண்மையான சகிப்புத்தன்மை மிக்கவர்கள்யுனெஸ்கோ நிறுவனம் ஆனந்த சங்கரிக்கு மதன் ஜீத் சிங் விருதை அளிப்பதானது ஒட்டுமொத்த தமிழ் இனத்தை அவமதிப்பதுடன், இதற்கு முன்பு இவ் விருதைப் பெற்றவர்களையும் அவமதித்து மதன் ஜீத் சிங் விருதிற்கும் பெரும் களங்கத்தையும் உருவாக்குகிறது.
இவ்வாறு ஆனந்த சங்கரிக்கு சமாதானத்திற்கான யுனெஸ்கோ விருதை வழங்குவதை எதிர்த்து தமிழ் மக்கள் தமது கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்.ஆனந்த சங்கரிக்கு இவ் விருதுடன் ஏறக்குறை ஒரு கோடி ருபாய்கள் வழங்கப்பட இருக்கிறது. தான் இதுவரை செய்து வந்த பணிகளால் நிறைய பணம் செலவாகி உள்ளதாகவும், அதனால் இப் பணம் தனக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஆனந்த சங்கரி பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உண்மையில் ஆனந்த சங்கரி அரசியல் ரீதியாக வெகு வெகு குறைவான பணத்தையே செலவு செய்திருக்கிறார். சில ருபாய்கள் செலவு செய்து பேனாவும் கடுதாசியும் வாங்கி அவ்வப் போது தேசியத் தலைவருக்கு கடிதம் எழுதுவார். இதை விட ஆனந்த சங்கரி வேறு எதுவும் செய்யவில்லை. மற்றையபடி அரசின் செலவிலேயே வெளிநாடுகளுக்கு சென்று தனது எஜமானர்களுக்கான பிரச்சாரத்தை மேற்கொள்வார். ஆகவே ஆனந்த சங்கரிக்கு எப்படி பணம் செலவானது என்பது ஒரு மர்மமான விடயமே. அந்த மர்மத்தை மற்றவர்கள் அராய்வதால், இதில் அதை தவிர்த்துக் கொள்வோம். ஆனந்த சங்கரி சில ருபாய்கள் செலவு செய்து தற்பொழுது ஒரு கோடி ருபாய்களை சம்பாதித்திருக்கிறார். உண்மையில் ஆனந்த சங்கரி கெட்டிக்காரர்தான். ஆனால் இந்த நேரத்தில் ஆனந்த சங்கரி சிறிது எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கொழும்பில் பணக்காரர்களை கடத்தி பணம் பறித்துக் கொண்டிருக்கின்ற கருணா குழு பழக்கதோசத்தில் ஆனந்த சங்கரியையும் கடத்திக் கொண்டு போய்விடப் போகிறது.சீரியசாக ஆரம்பித்த கட்டுரை ஆனந்த சங்கரியின் பெயர் வந்தவுடன் எங்கேயோ போய்விட்டது. மீண்டும் விடயத்திற்கு வருகிறேன். இவ்வாறான சர்வதேச விருதுகள் தகுதி இல்லாதவர்களுக்கு அரசியற் காரணங்களாலேயே வழங்கப்படுகிறது. ஆனந்த சங்கரிக்கும் அவ்வாறே வழங்கப்பட்டது.இதற்கு முன்பு இம் மாதம் 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையை வாசித்தவர்கள் ஒரு முக்கியமான பாரதூரமான விடயத்தைக் கவனித்திருப்பார்கள். அந்த அறிக்கையில் "பிரபாகரனும் கருணாவும் சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தி இருந்தது. அந்த அறிக்கையின் மற்றைய இடங்களில் விடுதலைப்புலிகள் என்று குறிப்பிட்ட ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் "பிரபாகரனும் கருணாவும்" என்று குறிப்பிட்டிருந்தது.கருணா சிறிலங்கா அரசின் பாதுகாப்பிலும் தயவிலும் காலம் தள்ளுவதை ஐரோப்பிய ஒன்றியம் அறியாமல் இல்லை. ஆயினும் கருணாவிற்கு தேசியத் தலைவருடன் சம அந்தஸ்து கொடுப்பது போன்று ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அத்துடன் கருணாவை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி வேறு கூறுகிறது. நாளை கருணா-அரசு பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்கிறோம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.இவ்வாறு மேற்குலகம் கருணாவை முன்னிறுத்த முனைவதற்கும், ஆனந்த சங்கரிக்கு விருது கொடுப்பதற்கும் பின்னணி ஒன்றாகவே இருக்க முடியும். இதன் மூலம் மேற்குலகம் விடுதலைப்புலிகளை எச்சரிக்க விரும்புகிறது. எங்கள் சொற்படி ஆடாவிட்டால் புதிய மாற்றுத் தலைமைகளை உருவாக்குவோம் என்று சொல்கிறது. ஆனால் மேற்குலகின் இந்த நாடகம் தமிழ் மக்கள் முன் பலிக்கப் போவதில்லை. இது போன்ற முயற்சிகளை பல முறை முறியடித்துள்ள விடுதலைப்புலிகளும் தமிழ் மக்களும் இம் முறையும் மேற்குலகம் மேற்கொள்கின்ற முயற்சிகளை முறியடிப்பார்கள்.