Wednesday, October 31, 2007

டக்ளஸ் கொடுத்த பணத்திற்கு என்ன ஆனது??!!

தமிழ்மணத்தில் தலித் மாநாடு பற்றி பல விவாதங்கள் நடத்து கொண்டிருந்த போது "கள்ள மௌனம்" சாதித்த சோபசக்தி இப்பொழுது வாய் திறந்திருக்கிறார்.

"மாநாட்டை நடத்தியவர்கள் புலிகளின் எதிர்ப்பாளர்கள்' என்று சிலர் இணையத்தளங்களில் ஓயாமல் கூக்குரலிடுகிறார்கள். போததற்குச் சிலர் வெளியான மாநாட்டு உரைகளிலிருந்து அசைக்க முடியாத எடுத்துக்காட்டுகளைக் காட்டித் தலித் அரசியலாளர்கள் புலிகளின் எதிர்ப்பாளர்கள் என்றும் நிறுவியிருக்கிறார்கள். இதற்கு எதற்கு இவர்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பதுதான் எனக்கு உண்ணாண விளங்கவில்லை. நாங்கள்தான் பல வருடங்களாகவே "நாங்கள் அரசியலில் புலிகளின் சற்றேனும் விட்டுக்கொடுக்காத எதிரிகள்" என்று தமிழில் மட்டுமல்லாது பிரஞ்சு, ஆங்கிலம், சிங்களம், மலையாளம் எனப் பல பாஷைகளிலும் எழுதிவருகிறோமே! ஒளிவுமறைவில்லாமல் சொல்லி வருகிறோமே!"

இப்படி சோபாசக்தி தன்னுடைய தளத்தில் எழுதியிருக்கிறார். இதை முதலிலேயே சொல்லித் தொலைத்திருந்தால் பல கசப்புணர்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். "தலித் மாநாடு" என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் ஒன்று கூடுகிறார்கள் என்று நாம் மீண்டும் மீண்டும் சொல்வது உண்மை என்பதை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். மாநாடு நடக்கும் வரை கள்ள மௌனம் சாதித்து விட்டு இப்பொழுது கொக்கரிப்பதிலிருந்து இவர்களின் தீய நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

இதை விட சோபாசக்தி எழுதிய இன்னொரு விடயம் எனக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

டக்ளஸ் தேவானந்தா கொடுத்த பணம் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு போய்ச் சேரவில்லையாம். மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பணம் இல்லாமல் கஸ்ரப்படுகிறாராம்.

சோபாசக்தி எமக்கு காதுகுத்த முனைகிறாரா?

இப்படி ஒரு செய்தியைச் சொல்லி சோபாசக்திக்கு மாநாட்டு ஏற்பட்டாளர்கள் காது குத்தியுள்ளார்களா?

இந்தியா செல்வதற்கு வைத்திருக்கும் பணத்தில் சிறிதை இரக்கப்பட்டு தமக்கு கொடுப்பார் என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்களா?

உண்மையிலேயே டக்ளஸ் பணம் கொடுக்காது ஏமாற்றி விட்டாரா?

கொடுத்த பணத்தை இடையில் யாராவது அமுக்கி விட்டார்களா?

நிறையக் கேள்விகள் எழுகின்றன. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதால், அனைத்திற்குமே சந்தர்ப்பங்கள் உள்ளன. எதற்கும் இதைப் பற்றி உள்வட்டாரங்களில் விசாரித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு பத்திரிகை அலுவல்கள் இருக்கின்றன. நாளை "தீபாவளி இறுவட்டு" வேலைகள் முடிக்க வேண்டும். தொடர்ந்து வரும் நாட்களில் இறுவட்டுக்களை வினியோகிக்கும் வேலை இருக்கிறது.

தற்பொழுது "டக்ளஸ் கொடுத்த பணத்திற்கு என்ன ஆனது" என்று கண்டுபிடிக்கும் புலனாய்வு வேலைகளில் ஈடுபடுவது உடனடியாக சாத்தியம் இல்லை. இந்த வேலையை நண்பர் சாத்திரி மேற்கொண்டால் நல்லது. எனக்கு வேலை மிச்சம்.

Friday, October 26, 2007

தமிழச்சி, மாசிலா, தமிழ்நாட்டு உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்!

தலித் மாநாடு என்ற பெயரில் பாரிஸில் பத்மநாபா குழு, ஈபிடிபி, புளொட், ஈஎன்டிஎல்எவ், ஜிகாத் போன்ற ஒட்டுக்குழுக்கள் நடத்திய சந்திப்பு முடிந்து விட்டது. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் 90 வீதமானவர்கள் இந்த ஒட்டுக்குழுக்களின் ஐரோப்பிய பிரதிநிதிகளாக செயற்படுவது பலரும் அறிந்த ஒரு விடயம்.

இந்த ஒட்டுக் குழுக்களை சாராத சில தனிநபர்களும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்கள். ஆனால் அவர்களிலும் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தமிழீழப் போராட்டத்தை எதிர்த்து ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்து வருபவர்கள்தாம்.

தலித் மாநாடு என்ற பெயரில் ஒட்டுக் குழுக்களின் சந்திப்புத்தான் நடக்க இருக்கிறது என்பதை நாம் பலவகையில் அம்பலப்படுத்தி வந்தோம். பலர் எம்முடைய பக்கள் உள்ள உண்மைகளைப் புரிந்து கொண்டார்கள். சிலர் வேண்டுமென்றே அடம்பிடித்தார்கள்.

அப்படி அடம்பிடித்தவர்களில் தமிழச்சி முக்கியமானவர். தற்பொழுது அவரிடம் இருந்து ஒரு கனத்த மௌனம்தான் வெளிப்படுகிறது. பகுத்தறிவுள்ள அவர் நிலைமைகளை நேரில் கண்டு, குறிப்பிட்ட சந்திப்புக்களில் கலந்து கொண்ட அனைவரும் புலி எதிர்ப்பு சிந்தனையை கொண்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தால் நல்லது.

ஆனால் ஒரு விடயம் சற்று நெருடுகிறது. பெண்கள் சந்திப்பும், தலித் மாநாடும் விடுதலைப் புலிகள் மீது அவதூறுகைள பரப்புவதற்கே நடைபெறுகிறது என்று நாம் வாதாடினோம். அப்படி இல்லை என்று சொன்னவர், அவரே அங்கே விடுதலைப் புலிகள் மீது அவதூறுகளை செய்து விட்டு வந்திருப்பதாக, "தேனி", "தூ" போன்ற சிங்கள சார்பு ஊடகங்கள் தகவல் தருகின்றன.

விடுதலைப் புலிகளால் தான் பட்ட துன்பங்களை தமிழச்சி விபரித்தார் என்று "தேனி" சொல்கிறது. விடுதலைப் புலிகள் தன் மீது அவதூறுகளை பரப்பியதாக தமிழச்சி குற்றம் சாட்டினார் என்று "தூ" சொல்கிறது.

ராஜேஸ்வரிக்கு மறுத்து பதில் எழுதிய தமிழச்சியும் கூட அதில் "ஒரு புறம் எல்டிடிஈ அவதூறுகளை பரப்புகிறது" என்று எழுதுகிறார்.

தமிழச்சி விடுதலைப் புலிகள் தனக்கு துன்பங்கள் தரவில்லை என்று மறுப்பறிக்கை கொடுத்திருக்கறார். ஆனால் புலிகள் தன்னைப் பற்றி அவதூறுகளை பரப்புவதாக எழுதுகிறார். தலித் மாநாட்டிலும் புலிகள் அவதூறு பரப்புவதாக சொல்லியிருக்கிறார்.

தலித் மாநாடு பற்றி அவதூறு பரப்புவதாக எம்மை நோக்கி குற்றம் சாட்டியவர், கடைசியில் அவரே விடுதலைப் புலிகள் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக ஒரு கடைந்தெடுத்த பொய்யைச் சொல்லி விட்டு வந்திருக்கிறார்.

தமிழச்சி பற்றி அவதூறு பரப்பிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் யார்? என்ன விதமான அவதூறுகளை அவர்கள் பரப்பினார்கள்?

இந்தக் கேள்விகளுக்கு நான் எந்தப் பதிலையும் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்ல முடியாது என்று எனக்குத் தெரியும்.

நாம் பெண்கள் சந்திப்பை பற்றி என்ன சொன்னோமோ, அதுதான் அங்கு நடைபெற்றது. அதை தமிழச்சியே ராஜேஸ்வரியின் கட்டுரையை வெளியிட்டு நிரூபித்தும் விட்டார்.

இப்பொழுது ஒரு கேள்வி. அனுராதபுர வான் தளத்தை தகர்த்து அழித்த கரும்புலிகள் அணியில் இடம்பெற்ற அந்த மூன்று பெண் கரும்புலிகளும் ராஜேஸ்வரி படித்த கட்டுரைக்குள் அடங்குகிறார்களா என்பதை தமிழச்சி ஒரு முறை சொல்வாரா? வேண்டாம். இதற்கும் பதில் சொல்ல வேண்டாம். அந்த பெண் போராளிகளை பதில் என்ற பெயரில் யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்.

தலித் மாநாட்டில் "இது விடுதலைப் புலிகளுக்கு எதிரானது இல்லை" என்று அறிவிக்க முயன்றதற்கே அங்கே பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. தலித் மாநாடு வெளிப்படையாகவே "தமிழ் தேசியம் தலித் மக்களுக்கு எதிரானது" என்று பிரகடனம் செய்து விட்டது.

இதற்கெல்லாம் எமக்கு ஒரு பதிலும் விளக்கமும் இனி வேண்டாம். சில பொறுக்கிகள் செய்த ஆத்திரமூட்டும் செயல்களால் அவசரப்பட்டு தமிழச்சி சில தவறுகளைச் செய்து விட்டார். பரவாயில்லை. நடந்தது நடந்துவிட்டது. இனிமேலாவது பெரியார் விழிப்புணர்வு இயக்கம் இது போன்ற தமிழின விரோத செயற்பாடுகளுக்கு துணை போகாது இருக்கட்டும்.

தந்தை பெரியாரை தலித் மக்களின் விரோதி என்று பிரச்சாரம் செய்கின்ற ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதே போன்ற விடுதலைப் புலிகளையும் தலித் மக்களின் விரோதிகள் என்று பிரச்சாரம் செய்கின்ற ஒரு கூட்டம் ஈழத் தமிழிரடையேயும் இருக்கிறது.

ஆனால் தந்தை பெரியாரும் தலித் மக்களின் விரோதி அல்ல. விடுதலைப் புலிகளும் தலித் மக்களின் விரோதிகள் அல்லர். இருவருமே தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திப்பவர்கள். அதற்காக பாடுபடுபவர்கள்.

தந்தை பெரியாரை தமிழின விரோதி என்று "குருவிகள்" எழுதுகிறார். விடுதலைப் புலிகளை தலித் விரோதிகள் என்று சோபாசக்தி எழுதுகிறார். இதில் எதை நம்பினாலும், அவர்கள் பகுத்தறிவு அற்ற வெங்காயங்களாகத்தான் இருக்க முடியும்.

தற்பொழுது தமிழச்சி கடைப்பிடிக்கும் மௌனம் வரவேற்கத்தக்கது. சில நையாண்டிப் பதிவுகள் வந்தும், அதைக் கண்டு கொள்ளாது, தொடர்ந்தும் பெரியார் கருத்துக்களை வலைப் பதிவேற்றி வருவது மகிழ்ச்சியை தருகிறது. இதற்கு நான் நன்றி சொல்கிறேன்.

ஈழத் தமிழர்களின் அரசியலுக்குள் சிக்குப்படாது பெரியார் கொள்கைகளை பரப்புகின்ற பணியை தமிழச்சி தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதற்கு என் போன்ற ஈழத் தமிழர்கள் என்றும் துணையாக இருப்போம்.

இந்த நேரத்தில் தோழர் மாசிலாவிற்கும் நான் நன்றியை சொல்ல வேண்டும். தமிழச்சியின் தோழர் என்ற முறையில் அவர் தமிழச்சிக்காக வாதாடினார். அதில் சில சொற்களை அவசரப்பட்டு சிந்தியாது பயன்படுத்தி இருந்தார். ஆனால் ஒரு விடயத்தில் அவர் தெளிவாக இருந்தார்.

ஈழத் தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்த தலித் மாநாட்டை அவர் தன்னுடைய வலைப்பதிவில் விளம்பரப்படுத்தவில்லை. தமிழச்சி தினமும் தலித் மாநாட்டிற்கு விளம்பரம் செய்த போதும், மாசிலா தலித் மாநாட்டை விளம்பரப்படுத்தாது அமைதி காத்தார். இது அவருடைய தெளிவான சிந்தனையை காட்டுகிறது. தமிழச்சியின் நெருங்கிய தோழராக இருந்தாலும், இந்த விடயத்தில் நடுநிலையை கடைப்பிடித்த மாசிலாவிற்கு என்னுடைய நன்றிகள்.

அத்துடன் தலித் மாநாட்டின் உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு எமக்காக வாதாடிய தமிழ்நாட்டு உறவுகளுக்கும் என்னுடைய நன்றிகள். பெரியார் சிந்தனைகளை பரப்ப நாம் இணைந்து பணியாற்றுவோம்!

Wednesday, October 24, 2007

மீண்டும் வந்த எல்லாளன்கள்

கிமு 101ஆம் ஆண்டு...

அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு இலங்கைத் தீவின் பெரும்பகுதியை ஆண்டு கொண்டிருந்த தமிழ் மன்னன் எல்லாளன் தெற்கில் இருந்து படையெடுத்து வந்த சிங்கள மன்னனாகிய துட்டகைமுனுவால் வெற்றி கொள்ளப்படுகிறான். 72 வயது நிரம்பிய எல்லாளனிற்கும் இளைஞனான துட்டகைமுனுவிற்கும் இடையில் நடந்த தனிச் சண்டையில் எல்லாள மன்னன் வீரச் சாவு அடைகிறான்.

இந்த நிகழ்வை இன்று வரை சிங்களப் பேரினவாதம் போற்றிக் கொண்டாடி வருகிறது. தமிழர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், துட்டகைமுனு பௌத்த சாசனத்தை காப்பாற்ற போர் செய்த சிங்கள மன்னன் என்றும் பாடசாலைகளில் போதிக்கப்படுகிறது.

சிங்கள பேரினவாதத்தால் "வரலாற்று நூல்" என்று சொல்லப்படுகின்ற "மகாவம்சம்" எல்லாள மன்னன் தமிழ்நாட்டில் இருந்து படையெடுத்த வந்த சோழ மன்னன் என்று சொல்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி ஒரு மன்னன் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. தமிழ்நாட்டின் கல்வெட்டுக்களிலோ, இலக்கியங்களிலோ எல்லாளன் பற்றிய குறிப்புகள் தென்படவில்லை.

நடுநிலையான ஆராய்ச்சியாளர்கள் எல்லாளன் இலங்கைத்தீவின் வட பகுதியில் இருந்து வந்தவன் என்று சொல்கிறார்கள். வன்னியில் உள்ள பூநகரிப் பகுதியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த எல்லாளன் கிமு 145ஆம் ஆண்டில் அனுராதபுரத்தின் மீது படையெடுத்து வெற்றிகண்டான் என்று சொல்கிறார்கள்.

எல்லாள மன்னன் படையெடுத்து ஏறக்குறைய 2150 ஆண்டுகள் கழிந்த பின்பு மீண்டும் புதிய எல்லாளன்கள் வன்னியில் இருந்து அனுராதபுரத்தின் மீது படையெடுத்து சிங்களப் பேரினவாதத்தின் இதயத்தை நொருக்கிவிட்டிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலை தாம் எதிர்பார்க்கவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமாகிய கேஹலிய ரம்புக்வல்ல கூறியுள்ளார். ஆனால் மாவீரர் வாரம் அண்மிப்பதால் விடுதலைப் புலிகள் ஒரு பெரும்தாக்குதலை நடத்துவர்கள் என்று எதிர்பார்த்து அனுராதபுர வான்தளம் உட்பட சிறிலங்காவின் அனைத்து படைமுகாம்களும் உசார்படுத்தப்பட்டிருந்தன என்பதுதான் உண்மை.

ஆனால் அதையும் மீறி அனுராதபுர வான்தளத்தை தகர்த்து விடுதலைப் புலிகள் பெரும் சாதனை ஒன்றை நிலைநாட்டியிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் அனுராபுரம் வரை எப்படி வந்து தாக்குதல் நடத்தி, இத்தனை அழிவுகளை ஏற்படுத்தினார்கள் என்பது சிறிலங்கா அரசுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவும், வேவுப்படையணியும் பெரும் பங்களிப்பை இந்தத் தாக்குதலில் வழங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

தரை வழியாகத் தாக்குதலை தொடுத்த 21 கரும்புலிகளும் அனுராதபுர வான்தளத்தின் அருகில் இருக்கின்ற நுவரக்குளத்தின் ஊடாக உள்நுளைந்திருக்கலாம் என்று சிறிலங்காவின் பாதுகாப்புத்தரப்பு கருதுகிறது. நுவரக்குளம் வான்தளத்தில் இருந்து ஏறக்குறைய ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. ஏற்கனவே வன்னியில் இருந்து வந்து அனுராதபுரத்தில் தங்கியிருந்த கரும்புலிகள் பின்பு படகுகளின் மூலம் நுவரக்குளத்தின் ஊடக பயணம் செய்து வான்தளத்திற்கு சற்றுத் தொலைவில் காட்டுப் பகுதியில் தரையிறங்கி, அங்கிருந்து நடந்து வந்து வான்தளத்தை அடைந்து தாக்குதல்களை தொடுத்துள்ளனர் என்று நம்பப்படுகிறது.

இந்தப் பெரும் தாக்குதல் குறித்து கிடைத்த சில தகவல்களின்படி அதிகாலை 3.20 மணியளவில் 21 பேர் கொண்ட கரும்புலிகளின் அணி இரண்டு அணிகளாக உள்நுளைந்தது. நவீனரக தானியங்கித் துப்பாக்கிகளோடும், சிறியரக டாங்கி எதிர்ப்புப் பீரங்கிகளோடும் உள்நுளைந்த கரும்புலிகளின் அணிகள் தாக்குதலை ஆரம்பித்தன.

ஒரு அணி அங்கிருந்த காப்பரண்களையும், விமான எதிர்ப்பு பீரங்கி நிலைகளையும் கைப்பற்றிக் கொண்டது. சிறிலங்காப் படையின் நிலைகளை கைப்பற்றி, அங்கிருந்த கனரக ஆயுதங்களின் மூலமே சிறிலங்காப் படையினர் மீது தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடித் தாக்குதலினால் வான்படைத் தளத்தில் பெரும் அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டது. கரும்புலிகளின் ஒரு அணி பாதுகாப்புச் சூடு வழங்க, மற்றைய அணி வான்தளத்தில் தரித்து நின்ற வானூர்த்திகளை தகர்த்து அழித்தது.

இந்த நேரத்தில் சிறிலங்காப் படையினருக்கு புதிய ஒரு அதிர்ச்சியாக அங்கு வந்த வான்புலிகளின் இரண்டு விமானங்கள் குண்டுகளை வீசின. வான்புலிகளின் குண்டுவீச்சில் வான்படைத் தளத்தில் இருந்த ஆயுதக் கிடங்கும், எண்ணைய் குதமும் அழிக்கப்பட்டது. குண்டுகளை வீசிவிட்டு வான்புலிகளின் விமானங்கள் இரண்டும் மீண்டும் தளம் திரும்பின.

இதற்கிடையில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்தது. அனுராதபுரத்தில் இருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள மிகிந்தலைப் பகுதியில் சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான பெல் ரக உலங்குவானூர்த்தி ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்த வானூர்த்தி விழுந்தது பற்றி பலவிதமான செய்திகள் உலாவுகின்றன.

முதலில் வான்புலிகளின் விமானம் ஒன்றை சிறிலங்காப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அது சிறிலங்காப் படையினரின் வானூர்த்தி என்று பின்பு அனைவருக்கும் தெரிந்து போனது. சிறிலங்காப் வான்படையின் வானூர்த்தியை வான்புலிகளின் விமானம் என்று நினைத்து சிறிலங்காப் படையினரே சுட்டு வீழ்த்தி விட்டனர் என்று சொல்லப்படுகிறது.

வவுனியாவில் இருந்து படையினருக்கு உதவிக்கு வந்த இந்த பெல் ரக உலங்குவானூர்த்தி விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்து வீழ்ந்து நொறுங்கிப் போனதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் சிறிலங்காப் பாதுகாப்புத் தரப்பின் பேச்சாளர் உலங்குவானூர்த்தி தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவே வீழ்ந்ததாக கூறுகிறார்.

சில மாதங்களிற்கு முன்னர் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் மீது வான்புலிகளின் இரண்டு விமானங்கள் தாக்குதல் நடத்த வருவதாக தகவல் வந்த போது, வான்புலிகளின் விமானங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுராதபுரத்தில் இருந்து மேலெழுந்த எம் ஐ 24 ரக உலங்குவானூர்த்தி திடீரென்று வீழ்ந்து நொறுங்கியது. தற்பொழுது இரண்டாவது தடவையாகவும் அப் பகுதியில் வானூர்த்தி ஒன்று வீழந்ததானது ஒரு மர்மமான நிகழ்வாகவே சிலரால் பார்க்கப்படுகிறது.

ஒரு புறம் பெல் ரக உலங்குவானூர்தி இவ்வாறு மர்மமான முறையில் கீழே விழுந்து நொறுங்க, மறுபுறம் கரும்புலிகள் அனுராதபுர வான்தளத்தில் நின்ற மற்றைய வானூர்த்திகளை தகர்த்து அழித்தனர். காலை விடிந்து 9 மணியான போது கரும்புலிகளால் 8 வானூர்த்திகள் அழிக்கப்பட்டிருந்தது. இதை கரும்புலிகள் வன்னியில் உள்ள தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தினார்கள்.

ஆனால் சண்டை 11 மணிவரை நீடித்தது. தொடர்ந்து பல வானூர்த்திகளையும் வான்படைத் தள நிலைகளையும் அழித்த கரும்புலிகள் கடைசியில் வீரச் சாவைத் தழுவிக் கொண்டார்கள். கரும்புலிகள் உறுதிப்படுத்தியதன் படி 8 வானூர்த்திகள் அழிக்கப்பட்டதை விடுதலைப் புலிகள் உத்தியோகமாக அறிவித்தார்கள். ஆனால் மொத்தமாக எத்தனை வானூர்த்திகள் அழிக்கப்பட்டன என்பதை சிங்கள ஊடகங்கள்தான் வெளியிட்டன. சிறிலங்காவின் படைத் துறை அதிகாரிகள் தமக்கு தெரிந்த ஊடகவியலாளர்களிடம் விசயத்தை கசிய விட்டிருந்தார்கள்.

அதிகாலை 3.20 மணியில் இருந்து முற்பகல் 11 மணி வரை நீடித்த சண்டையில் சிறிலங்கா வான்படை 18 வானூர்த்திகளை இழந்து விட்டது. சிறிலங்கா வான்படை வரலாற்றிலேயே ஏற்பட்ட அதி கூடிய இழப்பாக இது கருதப்படுகிறது.

ஒரு படை நடவடிக்கைக்கு உறுதுணையாக விளங்கக்கூடிய இரண்டு எம் ஐ 24 ரக உலங்கு வானூர்த்திகள், இரண்டு எம் ஐ 17 ரக உலங்கு வானூர்த்திகள், ஒரு பெல் 212 ரக உலங்கு வானூர்த்தி ஆகியன சிறிலங்காப் படைகள் இழந்தவகைளுக்குள் அடங்கும்.

எம் ஐ 24 மற்றும 17 ரக வானூர்த்திகளை பறக்கும் டாங்கிகள் என்று அழைப்பார்கள். மிக், கிபீர் போன்ற யுத்த வானூர்த்திகளை வாங்குவதை விட அதிகளவு எம் ஐ 24 ரக வானூர்த்திகளை வாங்குவதே சிறந்தது என்று அமெரிக்க இராணுவ வல்லுனர்கள் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்கி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவ்வளவு தூரம் இந்த உலங்கு வானூர்த்திகள் பயன் மிக்கவை.

பெல் 212 வானூர்த்தி தாக்குதலோடு வினியோகப் பணிகளையும், படையினரை ஏற்றி இறக்குகின்ற வேலைகளையும் மேற்கொள்ளக் கூடியது.

பொதுவாக அனுராதபுர வான்தளத்தினுள் ஒரிரு உலங்கு வானூர்த்திகள்தான் நிற்பது வழக்கம். மற்றையபடி ஒரு பயிற்சி வானூர்த்தித் தளமாகவே அனுராபுர வான்தளம் பேணப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது பல தாக்குதல் உலங்கு வானூர்த்திகள் அங்கே நிறுத்தப்பட்டிருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று மன்னார் பகுதியில் ஆறு மாதங்களாக தொடர்ந்து நடந்து வரும் சண்டைகள். இச் சண்டைகளிற்கு இந்த உலங்குவானூர்த்திகள் இடையிடையே பயன்படுத்தப்பட்டு வந்தன. அத்துடன் வரும் நாட்களில் எம் ஐ ரக உலங்குவானூர்த்திகளை அதிகளவில் சண்டைகளில் ஈடுபடுத்தவும் சிறிலங்காப் படை திட்டமிட்டிருந்தது.

அடுத்த காரணம் இதை விட முக்கியமானது. அது வான்புலிகளோடு சம்பந்தப்பட்டது. வான்புலிகளின் விமானங்களை எதிர்கொள்வதற்கு மிக் 29 ரக வானூர்த்திகளை கொள்வனவு செய்ய முயன்று, அதன் பிறகு பல்வேறு காரணங்களால் அத் திட்டம் கைவிடப் பட்டது. அதற்கு பதிலாக அனுராதபுர வான்தளத்தில் எம் ஐ ரக உலங்குவானூர்த்திகளை நிறுத்தி வான்புலிகள் வருகின்ற போது, உடனடியாகப் புறப்பட்டுச் சென்று வான்புலிகள் மீது வானத்தில் வைத்தே தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காகவே வானில் வைத்து தாக்குதல் நடத்தக்கூடிய எம் ஐ ரக வானூர்த்திகள் அனுராதபுர வான்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. அத்துடன் கே 8 ரக வானூர்த்தி ஒன்றும் அங்கே நின்றது. கே 8 ரக வானூர்த்தி பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டாலும், அதற்கு இரவில் தொழிற்படும் திறமை உண்டு. வான்புலிகளின் தாக்குதல் இரவிலேயே இதுவரை இடம்பெற்றதால், கே 8 ரக வானூர்த்தி வான்புலிகளை எதிர்கொள்ளக் கூடியதாக கருதப்பட்டது.

கடந்த ஏப்ரல் 26 வான்புலிகளின் விமானங்கள் வருவதாக தகவல் கிடைத்ததும் கட்டுநாயக்காவில் இருந்து இரண்டு கே 8 ரக விமானங்கள் மேலெழுந்து வட்டமிட்டு வான்புலிகளை எதிர்கொள்ளத் தயாராகியது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வான்புலிகளை எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கது என்று கருதப்பட்ட கே 8 ரக வானூர்த்தி ஒன்றும் அனுராதபுர வான்தளத் தாக்குதலில் அழிக்கப்பட்டு விட்டது.

மொத்தத்தில் வான்புலிகளை எதிர்கொள்ளும் திறன் மிக்கவையாகக் கருதப்பட்ட 6 வானூர்த்திகளை சிறிலங்கா வான்படை இழந்து விட்டது.

அத்துடன் பீச் ரக கண்காணிப்பு வானூர்த்தி அழிக்கப்பட்டதும் சிறிலங்கா வான்படைக்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. வன்னியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பீச் கிராவ்ற் வானூர்த்தி அதி நவீனமானதும் மிக விலை உயர்ந்ததும் ஆகும். பீச் கிராவ்ற் ரக வானூர்த்தி ஒன்றின் விலை ஏறக்குறைய 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த ரகத்தில் இரண்டு வானூர்த்திகள் மட்டும்தான் சிறிலங்கா வான்படையிடம் இருந்தது. இதில் ஒன்று தற்பொழுது அழிக்கப்பட்டு விட்டது.

இவைகளோடு பிரீ 6 ரக பயிற்சி வானூர்த்திகள் எட்டும், ஆளில்லாத உளவு விமானங்கள் மூன்றும் அழிக்கப்பட்டன. மொத்தம் 18 வானூர்த்திகளோடு, ராடர் நிலையங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஆயுதக் கிடங்கு, எண்ணெய் குதம் என்று சிறிலங்கா வான்படை பேரழிவைச் சந்தித்திருக்கிறது. அத்துடன் 18 படையினர் கொல்லப்பட்டும் 30 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக தெரிய வருகிறது.

விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்பில் நிற்பதாக பரப்புரை செய்து வந்த சிறிலங்கா அரசு அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறது. மன்னாரில் படை நடவடிக்கையை தொடர்வதற்கோ, வான்புலிகளை எதிர்கொள்வதற்கோ கொண்டுள்ள வலிமையில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டதானது சிறிலங்கா அரசுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் இதோடு நிற்கப் போவதில்லை. 21 எல்லாளன்கள் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் நாசம் விளைவித்து விட்டார்கள். விரைவில் ஆயிரக் கணக்கில் சங்கிலியன்களும் உட்புகுந்தால் என்ன ஆகும் என்ற கேள்விதான் தற்பொழுது சிங்கள அரசின் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறது.

Friday, October 19, 2007

"பிஜேபியின் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பும் பாரிஸ் தலித் மாநாடும்"

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பிரச்சார நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாரிஸில் "தலித் மாநாடு" என்ற பெயரில் சிலருடைய சந்திப்பு நடைபெற உள்ளது. இதற்கான விளம்பரங்களை சிங்கள அரசுக்கு சார்பான ஊடகங்கள் செய்து வருகின்றன.

சாதியத்தை இரும்புக்கரம் கொண்டு விடுதலைப் புலிகள் ஒடுக்கி வரும் வேளையில், சாதியத்தை கட்டிக்காப்பவர்கள் என்ற வினோதமான குற்றச்சாட்டை அந்த விடுதலைப் புலிகள் மீதே தெரிவிப்பதற்கும், அதன் அடிப்படையில் தொடர் பிரச்சாரங்கள் செய்து தமிழ்நாட்டில் உள்ள தமிழீழத்திற்கு ஆதரவான தலித் இயக்கங்களுக்குள் ஊடுருவுவதற்கும் இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.

இந்தச் சந்திப்பிற்கான ஒழுங்குளை சிறிலங்கா அரசு ஈபிடிபி ஒட்டுக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மூலம் செய்திருக்கிறது.

இந்த நிலையில், "தலித் மாநாடு" என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக சதி நடைபெறுவதை அறியாத தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலர், "தலித் மாநாட்டை" வரவேற்கும் மனநிலையில் உள்ளனர். ஓரிருவர் "தலித் மாநாட்டை" தமது வலைப்பதிவுகளில் விளம்பரப்படுத்தவும் துணிந்துள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் தமிழீழ ஆதரவாளர்களாக அறியப்பட்டவர்கள் என்பதுதான் இதில் உள்ள வேதனையான வேடிக்கை.

ஒருவிதத்தில் பார்க்கும் போது "தலித்" என்று வருகின்ற போது, இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, ஆதரவு கொடுப்பது என்பது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான். இந்தியா முழுவதும் கோடிக் கணக்கான தலித் மக்கள் பார்ப்பனிய இந்துக்களால் அனுபவிக்கும் கொடுமை மிகப் பெரியது. ஈழத் தமிழர்கள் சிங்களவர்களால் அனுபவிக்கின்ற கொடுமையை விட, இந்தியாவில் தலித் மக்கள் அனுபவிக்கும் கொடுமை அதிகம் என்று துணிந்து சொல்லலாம்.

இந்த மக்களுக்காக போராடுவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அமைப்பு இதுவரை உருவாகவில்லை என்பதையும், அப்படி உருவாகிய பலம் வாய்ந்த கட்சிகளும் வாக்கு அரசியலுக்குள் சிக்குப்பட்டு, தடம் மாறி விட்டதையும் இங்கு வேதனையோடு குறிப்பிட வேண்டும். சில சிறிய கட்சிகளும் மனித உரிமை அமைப்புக்களுமே தலித் மக்கள் பிரச்சனையில் ஓரளவு கவனம் செலுத்துகிறார்கள்.

தலித் மக்கள் அனுபவிக்கும் கொடுமையை சரியாக உணர்ந்தவர்கள் யாருமே, ஐரோப்பாவில் தலித் மக்களின் பெயரில் ஒரு மாநாடு நடக்க இருக்கிறது என்கின்ற செய்தியை மட்டும் அறிந்தவுடன் மகிழ்ச்சி அடையவே செய்வர். ஆதரவு கொடுக்கவும் முனைவர். இது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

மறுபுறம் ஈழத் தமிழர்களும் இப்படியான குண இயல்புகளைக் கொண்டவர்கள்தான் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ்நாட்டிலே மதவெறி இயக்கமான ஆர்எஸ்எஸ் "ஈழ ஆதரவு மாநாடு" என்ற பெயரில் ஒரு மாநாட்டை நடத்தினால், அப்பொழுது பல ஈழத் தமிழர்கள் மகிழ்ச்சி அடையவே செய்வார்கள்.

தமக்கு ஆதரவான குரல் யார் கொடுத்தாலும், அதன் பின்னணிகளை ஆராயாது, ஆதரவு கொடுக்கின்ற தன்மை ஓடுக்கப்பட்ட இனங்களை சேர்ந்த பலரிடம் உண்டு. சில நாட்களுக்கு முன்னர் மதவாதக் கட்சியான பிஜேபி ஈழத் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பதாக அறிவித்த போது, பல ஈழத் தமிழர்கள் அது குறித்து வரவேற்பையே வெளியிட்டனர்.

பிஜேபி திடீரென்று ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிக்க முனைந்ததன் காரணங்கள் அரசியல் சார்ந்தவை. இன்றைக்கு தமிழ்நாட்டில் ராமர்பாலப் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பிஜேபியின் செல்வாக்கு மேலும் குறைவடைந்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்று நம்பப்படும் சேது சமுத்திரத் திட்டத்தை பிஜேபி தடுக்க முனைவதால், தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற பெயரையும் பிஜேபி பெறத் தொடங்கி இருக்கிறது. இந்த நேரத்தில் பிஜேபியும் சிவசேனைக் கட்சி கையாண்ட அதே வழியை கையாளத் தொடங்கி இருக்கிறது.

சிவசேனை ஒரு காலத்தில் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற பெயரைப் பெற்றிருந்தது. மும்பையில் வாழ்ந்த தமிழர்களை அங்கிருந்து விரட்டி அடிக்கின்ற வேலையைத்தான் அப்பொழுது சிவசேனை செய்து வந்தது. பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் மும்பையில் இருந்து சிவசேனைக் கட்சியினரால் அடித்துத் துரத்தப்பட்டு, சொத்துக்களை இழந்து தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள்.

கடைசியில் அதே சிவசேனைக் கட்சி ஈழத் தமிழர்களை ஆதரிப்பதாக அறிக்கை விட்டு, "தமிழர்களுக்கு எதிரான கட்சி" என்று தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை மாற்றுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டது. ஆனால் தமிழீழ மக்களிற்கு ஆதரவாக பெரியார் இயக்கங்களோ, தலித் இயக்கங்களோ போராடியது போன்று காத்திரமான முறையில் சிவசேனைக் கட்சி எதையும் செய்தது இல்லை. சில அறிக்கைகள் வெளியிட்டதோடு சரி.

தற்பொழுது சிவசேனை கையாண்ட அதே வழியை பிஜேபியும் கையாள முனைகிறது. ஆனால் பார்ப்பனியத்தால் இறுகக் கட்டப்பட்டிருக்கும் பிஜேபி உண்மையான ஆதரவை ஈழத் தமிழர்களுக்கு வழங்காது என்பதுதான் உண்மை. புலிகள் வேறு, தமிழர்கள் வேறு என்ற "இந்தியப் பார்வையை" கொண்டிருக்கும் ஒரு கட்சியாகத்தான் பிஜேபி இருக்கிறது.

பிஜேபி ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கப் போவதாக அறிவித்த போது, தமிழ்நாட்டின் ஈழ ஆதரவுக் கட்சிகள் சங்கடத்தில் ஆழ்ந்தன. பெரியார் கட்சிகள் ஆதரவும் தெரிவிக்காது, எதிர்ப்பும் தெரிவிக்காது மௌனம் சாதித்தன.

பழ. நெடுமாறன் ஆதரவு தெரிவித்ததோடு, பிஜேபியின் நிவாரண பொருட்கள் சேகரிப்பை ஆரம்பித்தும் வைத்தார். பிஜேபி என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு கேடு விளைவிக்கும் ஒரு கட்சி என்பதையும், நிவாரணப் பொருட்கள் சேகரிப்பது பிஜேபியின் அரசியல் நலன்களிற்காகவே என்பதையும் நன்கு உணர்ந்திருந்தும் பழ.நெடுமாறன் அவர்கள் வெளிப்படையாக ஆதரவு கொடுத்தார். பழ. நெடுமாறன் அவர்கள் தடுமாறிய ஒரு நிகழ்வாகவே மற்றைய ஈழ ஆதரவுக் கட்சிகள் இதைக் கருதுகின்றன.

திருமாவளவன் ஒருவர்தான் பிஜேபியின் இந்த நடவடிக்கையை வெளிப்படையாக எதிர்த்தார். மதத்தின் பெயரால் ஈழத் தமிழ் மக்களுக்கு உதவுவது தவறு என்று அறிவித்தார்.

பிஜேபியும் ஒரே ஒருநாள் நிவாரணப் பொருட்களை சேகரிப்பதாக போக்கு காட்டிவிட்டு, தனது வழமையான வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

இதே போன்று தமிழ்நாட்டில் இந்து மக்கள் கட்சி, தனித் தமிழர் சேனை போன்ற மதவாதக் கட்சிகள் ஈழத் தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்துவதும் உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் மதவெறியை வளர்ப்பதிலும், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கலவரங்களை நடத்துவதிலும், பெரியார் சிலைகளை உடைப்பதிலும் இந்த அமைப்புக்களே முன்னணியில் நிற்கின்றன.

இவைகளை எல்லாம் சிந்தியாது இந்த அமைப்புக்கள் ஈழத் தமிழர்களின் பெயரில் நடத்துகின்ற போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஈழத் தமிழர்களின் ஊடகங்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன. தங்களின் பெயரில் தமிழ்நாட்டில் நடக்கின்ற அரசியல் விளையாட்டுக்கள் குறித்து சில ஈழத் தமிழர்களே விழிப்பாக இருக்கிறார்கள். மற்றவர்கள் குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒட்டுமொத்த தமிழினத்திற்கே கேடானவை என்பதை மறந்து, அவைகளின் நடவடிக்கைகளை வரவேற்கும் மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

இவ்வாறன ஒரு நிலைதான் சிங்கள அரசின் ஏற்பாட்டில் பாரிஸில் நடக்க இருக்கும் தலித் மாநாடு குறித்து சில தமிழ்நாட்டு உறவுகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. "தலித்" மக்களின் உரிமைகள் குறித்து மிகவும் அக்கறையோடு இருப்பவர்கள், "தலித்" என்ற பெயரினால் தடுமாறி விட்டார்கள்.

ஆனால் "ஈழ ஆதரவு மாநாடு" என்ற பெயரில் ஈழ விடுதலைக்காக போராடும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டால் எப்படி இருக்குமோ, அதே போன்றுதான் ஒடுக்கப்படும் மக்களின் பெயரில் ஈழத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது என்பதும் இருக்கும். இந்த உண்மையை தடுமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே நேரத்தில் தமிழினத்திற்கு எதிரான பல செயற்பாடுகள் நடக்கின்றன. எந்த நிலையிலும் தமிழீழ மக்களிற்கு ஆதரவு கொடுக்கின்ற தலித், மற்றும் பெரியார் இயக்கங்களின் பெயரை மாசுபடுத்தும் நடவடிக்கைகளை சிலர் ஐரோப்பாவில் மேற்கொள்கிறார்கள். அதே நேரத்தில் மதவாதக் கட்சிகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு போன்ற ஒரு தோற்றத்தை தமிழ்நாட்டில் காட்ட முனைகிறார்கள்.

தமிழீழ மக்களிற்கு என்றும் துணையாக நிற்கும் அமைப்புக்கள் ஈழத் தமிழர்களிடம் இருந்து தள்ளிநிற்கும் நிலையை உருவாக்குகின்ற வேலைகள் மெதுமெதுவாக நடைபெறுகின்றன. இன்றைக்கு அவைகள் பெரியளவில் தாக்கங்கள் எதையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், காலப் போக்கில் இதன் பாதிப்புக்கள் உணரப்படலாம்.

மொத்தத்தில் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் சரி, "ஈழம், தலித், பெரியார்" போன்ற பெயர்களை உச்சரிப்பவர்களை ஆராய்ந்து பார்க்காது ஏற்றுக்கொள்வது தீமைக்கே வழிவகுக்கும்.

Thursday, October 18, 2007

அறியாமையின் உச்சக்கட்டம்

பெண்கள் சந்திப்பில் விடுதலைப் புலிகளுக்கு "ஆதரவாகவும்" பெண் போராளிகளைப் "போற்றியும்" வாசிக்கப்பட்ட கட்டுரையில் இருந்து சில வரிகள்.

புலிகளின் தலைமை இன்று, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிப் போய் அன்றைய கடவுளர்களின், சங்கத் தலைவர்களின் இடத்தை எடுத்துக்கொண்டு இலங்கைத் தமிழ்ப்பெண்களைத் தங்கள் உடமைகளாகவும் தங்களின் போருக்கு உயிரைக் கொடுக்கவும், உயிரைக் கொடுக்கும் குழந்தைகளைப் பெற்றுக் கொடுப்பவர்களாகவும் நடத்துகிறார்கள்.

மனித உரிமைகளை மீறிப் பெண்களையும் வயது குறைந்தவர்களையும் போர்முனைக்கு அனுப்புவதைப் புலிகள் மிகவும் சாதாரண விடயமாகக் கருதுவது உலகத்தின் மனித உரிமைச் சட்ட திட்டங்களையும் பென்களுக்கான சமுக உரிமைகளையும், பெண்களைப் பாதுக்கக்கும் சமுதாயப் பொறுப்பையும் அவர்கள் எள்ளளவும் மதிப்பது கிடையாது என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

இன்றைய பல விடுதலைப்போராட்டக்குழுக்களில் மிகவும் கொடிய வன்முறைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப்புலிகள் மிகவும் பயங்கரக் குழுவாகப் பல நாடுகளாற் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

1983ம் ஆண்டின் இனக்கலவரத்தில் அனாதைகளான பல இளம் தமிழ் ஏழைக் குழந்தைகள் புலிகளின் முகாம்களின் வளர்க்கப்பட்டார்கள். குழந்தைப் படைவீரர்களைப் பாவிப்பதில் புலிகள் முன்னிடம் வகிக்கிறார்கள். அவர்களிடம் 5000 குழந்தைச் சிப்பாய்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தக் குழந்தைச்சிப்பாய்கள் சிலருக்குப் பன்னிரண்டு வயது என்று மனித உரிமைச்சங்கம் தன் அறிக்கையிற் குறிப்பிட்டிருக்கிறது.

அந்த அனாதை இல்லங்களில் வளர்பவர்கள் பலர் தற்கொலைதாரிகளாகப் பயிற்சி பெற்றார்கள். புலிகளின் கட்டுப்பாட்டிலும் போதனைகளிலும் வாழ்ந்து பழகிய சிலர் தாங்களாகவே முன்வந்தார்கள். தலைவர் உட்படப் பல ஆண் ஆயுததாரிகள் பலர் திருமணம் செய்து குழந்தை குட்டிகள் பேரப்பிள்ளைகள் காணும் நிலையிலிருக்கும்போது பெண்புலித் தலைவிகள் யாரும் அப்பெரும்பேற்றைப் பெற்றதாகப் பத்திரிகைச்செய்திகள் வரவில்லை.

புலிகளுக்குத் தேவையான வீரர்களைப் பெற்றுக்கொடுப்பதும், பிறந்த குழந்தைகளைப் புலிகளிடம் ஒப்படைப்பதும் ஒப்பற்ற தமிழ்த் தேசிய சேவையாகக் கருதப்படுகிறது.

இலங்கை இராணுவத்தினர் பாலியற் கொடுமைசெய்வதற்காகவே தமிழ்ப்பகுதிகளுக்கு வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்புவதற்குப்பெண்கள் தற்கொலைத் தாக்குதல்கைச்செய்வது இன்றியமையாத விடயம் என்று இடை விடாமற் பிரசாரம் செய்யப்படுகிறது. தமிழ்ப்பெண்களின் கற்பைக்காப்பாற்றத் தமிழ்ப் பெண்கள் முன்வரவேண்டுமென்று தூண்டப்படுகிறது. வெளி உலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுப் புலிகள் சொல்வதுதான் சரி என நம்பும் அப்பாவித்தமிழ்ப் பெண்களின் உயிர் மிகவும் மலிவான விதத்தில் பாவிக்கப்படுகிறது.

அசுரர்களை அழிக்க வந்த கார்த்திகேயனைத் தலைவரைப் பணிவதும், நினைப்பதும் அவரைப்பாதுகாக்க கார்த்திகைப்பெண்களாகத் தற்கொலைதாரிகளைப் பயிற்சிசெய்வதும் நவநாகரீக உலகில் எங்கும் நடக்காத கொடுமை.

கட்டுரையில் இருந்த சில பகுதிகள் மட்டும்தான் தரப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையில் பெண் போராளிகளை கொச்சைப் படுத்தி எதுவும் இல்லை என்று தமிழச்சி சொல்கிறார். இந்தக் கட்டுரையின் இணைப்பை தந்து புலிகளுக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்பதை தான் நிரூபித்து விட்டேன் என்று புளுகாங்கிதப்படுகிறார்.

ஞானி போன்றவர்கள் கலைஞருக்கு ஆதரவாக எழுதுவது போன்று எழுதிய கட்டுரைகளையே, அதன் உள் அர்த்தத்தைக் கண்டுபிடித்து பிரித்து மேய்கிறவர்கள் தமிழ்மணத்தில் இருக்கிறார்கள். வெளிப்படையாகவே விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தியுள்ள இந்தக் கட்டுரையை "விடுதலைப் புலிகளுக்கு எதிரானது அல்ல" என்று நம்பிவிடுவார்கள் என்று எண்ணுகின்ற அறியாமையை என்னவென்று சொல்வது?

Wednesday, October 17, 2007

"போஸ்" கொடுக்கும் தமிழச்சிகள்!

சென்ற ஆண்டு கேரளாவைச் சேர்ந்த இந்தியாவின் பிரபல பெண்ணிய எழுத்தாளரான கமலாதாஸிடம் ஆனந்த விகடன் பேட்டி கண்டது. அப்பொழுது அவரிடம் "உங்களுக்கு பிடித்த தலைவர் யார்" என்று கேட்கப்பட்டது.

கமலாதாஸ் எவ்வித தயக்கமும் இன்றி பளிச் என்று சொன்னார், "புலிகளின் தலைவர் பிரபாகரன்". அத்துடன் புலிகளை இந்தியா தீவிரவாதியாக சித்தரிப்பது தவறு என்றும் சொன்னார்.

இத்தனைக்கும் கமலாதாஸ் ஒரு தமிழ் பெண்மணி அல்ல. ஆனால் தமிழ் மக்களின் தலைவரையும், விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயத்தன்மையையும் உணர்ந்தவராக இருந்தார்.

இப்படி வேற்று இனத்தை சேர்ந்த பலரே தமிழீழ மக்களின் போராட்டம் சரியானது என்று ஏற்றுக் கொள்கின்ற போது, கூலிக்கு மாரடிக்கும் தமிழர்கள் சிலர் தமிழீழ போராட்டத்தை கொச்சைப் படுத்தி துரோகம் புரிந்து வருகின்றார்கள். இந்த இழிவான செயலில் ஆண்களுக்குப் போட்டியாக சில பெண்களும் ஈடுபடுவதுதான் வேதனையானது.

சம உரிமை என்பதை தவறாகவே புரிந்து வைத்திருக்கும் இந்தப் பெண்கள் துரோகம் செய்வதிலும் சம உரிமை வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.

தமிழீழத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஒரு பெண்கள் குழு ஆண்டு தோறும் சந்தித்துக் கலந்துரையாடுவது வழக்கம். இந்த ஆண்டும் "பெண்கள் மாநாடு" என்று பெயரில் இருபதிற்கும் குறைவானவர்கள் கூடினார்கள். இவர்களின் உள்நோக்கம் புரியாத சிலரையும் பெண்ணுரிமை என்று சொல்லி சந்திப்பிற்கு அழைத்திருந்தார்கள்.

வழமை போன்று இந்த ஆண்டும் தமிழீழப் போராட்டத்தை வேறவேறு வடிவங்களில் கொச்சைப்படுத்தினார்கள். இந்த பெண்கள் சந்திப்பை ஒழுங்கு செய்வதில் முன்னணியில் நின்று வேலை செய்யும் இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் "இலங்கையில் தமிழ் பெண் தற்கொலைதாரிகள்" என்று ஒரு கட்டுரையை வாசித்தார்.

அந்தக் கட்டுரையின் மூலம் தமிழீழப் போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகள், பெண் போராளிகள் என்று அனைத்தையுமே இழித்துரைத்தார். ஈழப் பிரச்சனை பற்றி மற்றவர்களும் இதையொத்த செயலைத்தான் இந்தச் சந்திப்பில் செய்தனர். இவர்கள் சென்ற ஆண்டும் இதைத்தான் செய்தார்கள். இந்த ஆண்டும் செய்தார்கள். இனிமேலும் செய்வார்கள்.

தமிழீழ மக்களின் மிகப் பலமான ஆயுதமாக உயிராயுதம் இருக்கிறது. இந்த உயிராயுதமாகிய கரும்புலிகளை கலைக்கச் சொல்லி ஏகாதிபத்திய அமெரிக்காவும் சொல்கிறது. பார்ப்பனிய இந்தியாவும் சொல்கிறது. இனவாத சிங்கள அரசும் சொல்கிறது. இந்தப் பெண்கள் சந்திப்பும் சொல்கிறது.

இதில் இருந்தே இவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

பெண் விடுதலை என்பதில் பல புரட்சிகளை தமிழீழ தேசம் செய்து காட்டியிருக்கிறது. பல நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களில் பெண்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள். சண்டைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட பெண்கள், சண்டை முடிந்ததும் மீண்டும் அடுக்களைக்கு அனுப்பப்பட்டார்கள். குழந்தை பெறுவதற்கு அனுப்பப்பட்டார்கள்.

ஆனால் தமிழீழத்தில் மட்டும்தான் பெண்களும் நிர்வாகத்தில் சம அளவு பங்கேற்கிறார்கள். தமிழீழத்தில் நடைபெறும் நீதித்துறை, காவல்துறை, அரசியல்துறை, நிதித்துறை மற்றும் பல நிறுவனங்களில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

யுத்த களங்களில் கூட பெண்களுக்கு பின்தள வேலைகள் மட்டுமே மற்றைய நாடுகள் வழங்குகின்றன. தமிழீழத்தில் பெண்களே பல சண்டைகளை முன்னின்று நடத்தி சிங்களப் படைகளை விரட்டி அடித்து சாதனை புரிந்திருக்கிறார்கள்.

இப்படி போர் என்றாலும் சரி, நிர்வாகம் என்றாலும் சரி, பெண்களுக்கு சம உரிமையை தமிழீழ தேசம் வழங்கி இருக்கிறது. பழமைவாத மரபுகளுக்கு பல நூற்றாண்டுகளாக சிக்குப்பட்டிருந்த தமிழர் தேசம் கண்டுள்ள மாற்றங்கள் வியக்கத்தக்கன. மிகப் பெரும் புரட்சிகள் இவைகள். வீடுகளிலும் வீதிகளிலும் இருந்த பெண்ணடிமைத்தனத்தில், இன்றைக்கு வீதிகளில் இருந்த பெண்ணடிமைத்தனம் பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் பெண்கள் வீதிகளுக்கு வந்து இனவாத அடக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்வதை தமது தொழிலாக சில பெண்கள் கொண்டுள்ளார்கள். தங்களை தமிழச்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள், அப்படிச் சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும்.

பெரும் வல்லரசுகளை எதிர்த்து புரட்சி செய்கின்ற பெண்கள் தமிழீழத்தில்தான் இருக்கின்றார்கள் என்பதை காகிதத்தில் கலகம் புரிவதாக சொல்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் பெண்களின் எழுச்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களிடம் போய் தங்கள் கலகத்தை காட்ட வேண்டும்.

ஆனால் காகிதக் கலகக்காரர்களும் தமிழீழ பெண்களின் எழுச்சிக்கு எதிரானவர்களுடன் கைகோர்த்து புகைப்படத்திற்கு "போஸ்" கொடுக்கிறார்கள். இவர்களால் புகைப்படத்திற்கு "போஸ்" கொடுக்க மட்டும்தான் முடியும். இதைவிட பெண்களுக்கான விடுதலையில் ஒரு மாற்றத்தையும் செய்ய முடியாது.

ஆனால் ஒரு காலத்தில் முகத்திற்கு பவுடர் பூசி நகை அணிந்து புகைப்படத்திற்கு "போஸ்" கொடுத்துக் கொண்டிருந்த தமிழீழத்தின் பெண்கள் கூட்டம், இன்றைக்கு வேர்த்து வடிகின்ற முகத்தோடு உச்சி வெய்யிலில் மக்களின் விடுதலைக்காக பணி செய்து கொண்டிருக்கிறார்கள். புரட்சி செய்கின்ற இந்தப் பெண்கள் தமிழீழத்தில் இருந்து பெண்ணடிமைத்தனத்தை முற்றிலுமாக இல்லாது ஒழிப்பார்கள்.

http://www.webeelam.com

Friday, October 12, 2007

தமிழச்சிக்கு மீண்டும் ஒரு விளக்கம்!

தமிழச்சி,

நீங்கள் தமிழ்சோலையில் தவறுகள் நடப்பதாக கருதினால், அதைக் கண்டிக்க உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. அதற்காக நீங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் ஆகி விட மாட்டீர்கள்.

தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் பல நிறுவனங்கள் உண்டு. இவைகளில் நடக்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

தமிழ்சோலை பற்றி நீங்கள் எழுதியதால், உங்களை விடுதலைப் புலிகளுக்கு எதிராக சித்தரிக்க இராஜகரன் போன்றவர்களால்தான் முடியும்.

நான் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டேன். நானே பல செயற்பாடுகளை விமர்சித்து எழுதியது உண்டு. ஆகவே உங்களை விமர்சிக்கக்கூடாது என்று சொல்ல மாட்டேன்.

ஆனால் தமிழ்சோலை குறித்து நீங்கள் எழுதியுள்ள தகவல்கள் பக்கசார்பானவை என்று அதை படிக்கின்ற அனைவருமே புரிந்து கொள்கிறார்கள். ஆகவே அதை மட்டும் படித்துவிட்டு எம்முடைய கழகம் கருத்துச் சொல்வது பொறுப்பான செயல் அல்ல. நாம் விசாரித்த வகையில் அந்தப் பெண் மீதும் தவறு இருப்பதாக தெரிகிறது. ஆகவே இதில் எம்மால் நடுநிலை வகிக்க மட்டுமே முடியும்.

இதைவிட எந்த ஒரு நிறுவனத்திற்கும் தனக்கு இடைஞ்சல் என்ற கருதுகின்றவர்களை வெளியேற்ற முழு உரிமையும் உண்டு. நாம் யாரும் வெளியில் இருந்து கொண்டு, நீங்கள் இவரை சேர்க்கத்தான் வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

பிரான்ஸில் பலர் நடத்துகின்ற பாடாசாலைகள் உண்டு. அந்தப் பிள்ளைகள் படிக்க விரும்பினால், வேறு பாடசாலைகளிலும் சென்று படிக்க முடியும். இரு தரப்புக்கும் ஒத்து வரவில்லை என்கின்ற போது, வீணாக பிரச்சனை செய்து கொண்டிருக்காது, வேறு வழியைப் பார்ப்பதுதான் சிறந்தது. சுலபமாக பிரச்சனையும் தீர்ந்துவிடும்.

இவை எல்லாவற்றையும் விட நான் இதை ஒரு பாரதூரமான பிரச்சனையாகப் பார்க்கவில்லை என்பதையும் நான் சொல்ல வேண்டும். நீங்கள் இந்தப் பிரச்சனையை ராமர் பாலப் பிரச்சனையோடு ஒப்பிட்டுக் கேள்வி கேட்பது எனக்கு ஆச்சரியத்தைத்தான் எழுப்புகிறது. நீங்கள் வேண்டும் என்றே இந்தப் பிரச்சனையே உள்நோக்கத்தோடு பெரிது படுத்துகிறீர்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

எதுவாயிருப்பினும் தமிழ்சோலை பற்றிய உங்கள் விமர்சனத்தால் நான் உங்களை தமிழீழ மக்களுக்கு எதிரானவராக கருதவில்லை. தமிழ்சோலையில் நடந்த பிரச்சனையையும் நான் பாராதூரமானதாகப் பார்க்கவில்லை. அதை நீங்கள் விமர்சித்ததையும் பாராதூரமானதாக நான் பார்க்கவில்லை.

ஆனால், "தலித் மாநாடு" என்ற பெயரை சம்பந்தமில்லாத வகையில் வைத்துக் கொண்டு, நடக்க இருக்கும் தமிழீழ விடுதலைக்கு எதிரான பிரச்சார கூட்டத்திற்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதும், அதை விளம்பரப்படுத்தும் நோக்கில் சோபாசக்தியின் இணைப்பை வழங்கி விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புவதாலுமே, உங்களை நான் சந்தேகப்படுகிறேன். இதை விட வேறு எந்தக் காரணமும் இல்லை.

நீங்கள் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "தமிழச்சி பற்றி செய்திகள் அறிய" என்று உங்களைப் பற்றி அவதூறாக ஒருவர் எழுதியதன் இணைப்பை என்னுடைய தளத்தில் கொடுத்துவிட்டு, நான் தமிழச்சிக்கு எதிரானவர் இல்லை என்று சொன்னால், யாராவது நம்புவார்களா? உங்களைப் பற்றிய அவதூறுகளை நானும் பரப்புகிறேன் என்றுதானே அர்த்தம்.

தயவுசெய்து பகுத்தறிவோடு சிந்தியுங்கள். மீண்டும் தமிழ்சோலைப் பிரச்சனையிலேயே நின்று சிந்திக்காதீர்கள். எம்முடைய விமர்சனம் தமிழ்சோலை சார்ந்தது அல்ல.

நீங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடு ஒன்றிற்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்! விடுதலைப் புலிகள் பற்றிய அவதூறு நிரம்பிய இணைப்பை வழங்கி, அதை "செய்தி" என்று வேறு சொல்லி எதிர்பிரச்சாரத்தை முன்னெடுக்கிறீர்கள்! இவைகளின் அர்த்தம் என்ன?

தயவுசெய்து ஒன்றுடன் ஒன்றை முடிச்சுப்போட்டு சிந்திப்பதை விட்டுவிட்டு, பகுத்து அறிந்து சிந்தியுங்கள்! தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பிரச்சாரத்தை நிறுத்துங்கள்! இது நான் தோழமையுடன் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

Thursday, October 11, 2007

தோழர் தமிழச்சிக்கும் மற்றும் சிலருக்கும் கழகத்தின் விளக்கங்கள்

எமது புரட்சிகர பெரியார் கழகத்தின் சார்பில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மு. மயூரன் மற்றும் தமிழச்சி ஆகியோரால் சில கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன. மயூரனின் கேள்விக்கு சற்று நீண்ட விளக்கம் அளிக்க வேண்டும் என்பதால், அதை பிறதொரு சந்தர்ப்பத்தில் எமது கழகம் அளிக்கும்.

தற்பொழுது தமிழச்சியின் கேள்விகளுக்கு கழகத்தின் சார்பில் நான் சில விளக்கங்களை தருகிறேன்.

எல்லாவற்றிற்கும் முதல் என்னை அறியாதவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம். நான் பகுத்தறிவுப் பணிகளை கடந்த ஐந்து நாட்களில் ஆரம்பிக்கவில்லை. கடந்த ஏழு வருடமாகச் செய்து வருகின்றேன். இடையிடையே ஏற்படுகின்ற நெருக்கடியான சூழ்நிலைகளின் போது என்னுடைய பணிகளில் சற்றுத் தொய்வு ஏற்படுவது உண்டு. ஆனால் கடந்த இரண்டு வருடமாக தொய்வேதும் இன்றி பணியாற்றி வருகின்றேன். இவைகளை தமிழ்நாட்டில் வீரமணி, சுபவீ போன்றவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஆகவே ஐந்து நாட்களாகத்தான் என்னுடைய பணி நடைபெறுகிறது என்பது தவறான ஒரு கருத்து.

ஒரு அமைப்பு உருவாக்குவது பற்றி சென்ற ஆண்டு எம்மிடம் யோசனை உதித்தது. கடைசியில் இந்த ஆண்டின் பொங்கல் அன்று உருவாக்குவது என்று தீர்மானித்தோம். இந்த அமைப்பு உருவாக்குவது பற்றி "உண்மை" இதழின் பொறுப்பாசிரியர் நண்பர் பெரியார்சாக்கிரட்டீஸிடமும் பேசியிருந்தோம். இதை நீங்கள் நண்பர் பெரியார்சாக்கிரட்டீஸிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில காரணங்களால் ஒரு அமைப்பு உருவாவது தள்ளிப் போய்விட்டது. தற்பொழுதுதான் அனைத்தும் கைகூடி வந்திருக்கிறது. ஆகவே புரட்சிகர பெரியார் கழகத்தை உருவாக்குவதற்கு தமிழச்சிதான் காரணம் என்று சிலர் நம்புவதும் தவறு.

தமிழச்சியின் பெரியார் விழிப்புணர்வு இயக்கம் உருவான போது, நானும் எனது தோழர்களும் எமது கழகத்தை உருவாக்கும் திட்டத்தை கைவிட்டு, பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தில் இணைந்து பணியாற்றுகின்ற சிந்தனையில் இருந்தோம் என்பதை இந்த இடத்தில் சொல்ல வேண்டும். இது பற்றி நான் தமிழச்சியுடன் தொடர்பு கொண்டு பேசியும் இருக்கிறேன்.

ஆனால் தமிழச்சியின் சில நடவடிக்கைகள் அவருடன் ஒரே அமைப்பாக இயங்குவது கடினம் என்பதை எமக்கு உணர்த்தின. ஆகவே அவருடைய அமைப்பில் இணையும் திட்டத்தை கைவிட்டு, நாம் எமது கழகத்தை உருவாக்கி இரண்டு அமைப்புக்களும் ஒருமித்த கருத்துள்ள விடயங்களில் இணைந்து பணியாற்றுவது என்று தீர்மானித்தோம்.

ஆகவே பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தில் நாம் இணைய முடியாமல் போனதற்குத்தான் தமிழச்சி காரணமே தவிர, நாம் எமது கழகத்தை உருவாக்கியதற்கு தமிழச்சி காரணம் இல்லை. கழகம் என்ற பெயர் இல்லாது, தனிநபர்களாக செயற்பட்ட நாம் சென்ற ஆண்டு எடுத்த முடிவின்படி, தற்பொழுது கழகமாக செயற்படுகிறோம்.

சரி! இப்பொழுது தமிழச்சியின் கேள்விகளுக்கு வருகிறேன்.

1. மதம் சார்ந்த அனைத்து மூடப் பழக்க வழக்கங்களையும் கழகம் கண்டிக்கிறது. இதில் அதைக் கண்டிக்கிறதா, இதைக் கண்டிக்கிறதா என்று கேள்விக்கே இடமில்லை.

2. கழகத் தோழர்கள் அனைவருமே பல மாதங்களாக பகுத்தறிவுப் பணிகளில் பல வகைகளில் ஈடுபட்டுத்தான் வருகிறார்கள். துண்டுப்பிரசுரம், இணையத் தளம், பத்திரிகை, வானொலி என்று அனைத்து வழிகளிலும் எமது பணிகளை செய்துதான் வருகின்றோம். இது மேலும் விரிவுபடுத்தப்படும்

3. தமிழச்சி பெரியாரின் உரைகளை சிறப்பாக தட்டச்சு செய்வதற்காக அவரை கழகம் வாழ்த்துகிறது. அவருடைய தட்டச்சு திறமையை கழகம் பாராட்டுகிறது. (நான் தமிழச்சிக்கு தெளிவு இல்லை என்று ஏன் எழுதினேன் என்பதற்கு நேற்றே என்னுடைய விளக்கத்தை அளித்துவிட்டேன்)

4. இந்தத் தீர்மானத்திற்கு நீங்கள் கேட்ட கேள்வி அடுத்த தீர்மானத்திற்கே பொருந்துகிறது.

5. தமிழ்சோலை உட்படி தமிழைக் கற்பிக்கும் அனைத்து நிறுவனங்களையும் நாம் பாராட்டுகிறோம். ஒவ்வொரு பாடசாலைகளிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். தமிழ்சோலையை பற்றி தமிழச்சி பக்க சார்பாக எழுதி உள்ளதாக நான் நினைக்கிறேன். பெண் என்பதற்காக யாரும் தமிழ்சோலை நிறுவனத்தால் அவமானப்படுத்தப்படவில்லை. தமிழச்சி வழங்கிய ஒரு தவறான தகவலுக்காக கழகம் தன்னுடைய கருத்தை தெரிவிக்கத் தேவையில்லை.

6, 7 இந்தத் தீர்மானங்களுக்கு உங்களுடைய கேள்விகள் தலித் மாநாடு பற்றி இருப்பதால், அது பற்றிய தீர்மானங்கள் குறித்து உங்களுடைய கேள்விகளுக்கான பதிலோடு இந்தக் கேள்விகளுக்கும் பதில் தரப்பட்டிருக்கிறது.

8. தமிழீழ விடுதலையின் அவசியத்தை நீங்களும் ஏற்றுக்கொள்வதாக எழுதி உள்ளீர்கள். எழுத்தில் மட்டும் அல்லாது செயலிலும் அப்படி இருக்கும்படி கழகம் உங்களை அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.

9. இதற்கு நேற்று வழிமொழிவதாக எழுதியிருந்தீர்கள். இன்றைக்கு நிலவரம் தெரியாது என்று எழுதுகிறீர்கள். நீங்கள் தெளிவாக இல்லை என்று மீண்டும் இங்கே உறுதிப்படுத்தப்படுகிறது.

10. ஈழத்தின் தற்போதைய நிலவரம் தெரியாது என்றால், உங்களுடைய கொளத்தூர் மணி, வீரமணி, கனிமொழி, நெடுமாறன் போன்றோரிடம் கேட்டு அறிந்து கொள்ளும்படி கழகம் கேட்டுக் கொள்கிறது.

11. ஐரோப்பாவில் பகுத்தறிவுப் பணி செய்வதை தடை செய்யவில்லை. தடையின்படி விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்குவதோ, நிதி வழங்குவதோதான் குற்றம். மற்றையபடி நிறைய வேலைகளை செய்யலாம்.

12, 13, 14. உங்களுடைய கையைப் பிடித்துக் கொண்டு அழுது அந்த முதியவரிடம் போய், நீங்கள் தலித் மாநாட்டிற்கு போகிறேன் என்று சொல்லிப் பாருங்கள். அவர் இப்பொழுதும் அழுவார். அன்றைக்கு அழுததை நினைத்து இப்பொழுது அழுவார்.

தலித் மாநாடு பற்றி எமது கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாக, இந்த மாநாட்டின் பின்னால் இருப்பவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்பது கூறப்பட்டுள்ளது. இதை விட வேறு என்ன விளக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

தலித் மாநாட்டை பின்னால் இருந்து இயக்குபவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வேளாள மேலாதிக்கவாதிகள். இந்த வேளாள மேலாதிக்கவாதிகளை இயக்குவது சிங்கள அரசு. இதுதான் உண்மை.

தலித் மாநாட்டில் எவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்பதற்கு தமிழச்சி "ஈழத்தில் உள்ள தலித்களைப் பற்றி அறிவதற்கு" என்று சொல்லி வழங்கிய இணைப்பே ஆதாரம். தலித் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே தமிழச்சி விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை இந்த இணைப்பை வழங்கி ஆரம்பித்து வைத்துவிட்டார்.

சோபாசக்தி அதில் எழுதிய அத்தனை புரட்டுக்களும் தலித் மாநாட்டில் பேசப்படும். அவைகள் உண்மையென்று பார்வையாளர்கள் நம்பவைக்கப்படுவார்கள். சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு விடுதலைப் புலிகள் செய்துவரும் பணிகள் திட்டமிட்டு மறைக்கப்படும். இதுதான் தலித் மாநாடு என்ற பெயரில் நடைபெறும்.

இதுதான் நடைபெறும் என்பதற்கு தமிழச்சி வழங்கிய இணைப்பே கட்டியம் கூறுகிறது. இதன் பிறகும் யாராவது "தலித் மாநாடு விடுதலைப் புலிகளுக்கு எதிரானது அல்ல" என்று நம்புவார்களாக இருந்தால், அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடியும்.

தலித் மாநாட்டின் நோக்கம் தமிழீழ மக்களுக்கு எதிரானது. தலித் மாநாட்டையும், அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் கண்டிப்பதற்கு எமக்கு உரிமை உண்டு. தலித் மாநாடு என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களை குழப்புகின்ற செயலை நாம் கண்டிக்கின்றோம். தலித் மாநாடு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் செயற்பாடுகளை கண்டிக்கின்றோம். இவைகளுக்கு துணை போகின்ற அனைவரையும் நாம் கண்டிக்கின்றோம்.

மற்றையபடி தலித் மாநாட்டை நாம் தடை செய்யச் சொல்லவில்லை. மக்களை விழிப்பாக இருக்கும்படிதான் கேட்கின்றோம். தலித் மாநாடு நடைபெறவதைத்தான் நாமும் விரும்புகின்றோம். அப்படி நடந்தால்தான், சிலருடைய வேசம் கலையும். சிலருக்கு தெளிவு பிறக்கும்.

நான் நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம்!

பிரான்ஸில் இருக்கும் தோழர் தமிழச்சி அவர்கள் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த நேரத்தில் என்னுடைய 12 வயதில் நான் நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம் நினைவுக்கு வருகிறது.

அப்பொழுது யாழ் குடாவில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் கடும் போர் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் யாழ் குடாவில் உள்ள கொக்குவில் என்று இடத்தில் நான் இருந்தேன்.

சில தினங்களுக்கு முன்புதான் கொக்குவிலுக்கு அருகாமையில் உள்ள பிரம்படி என்னும் இடத்தில் விடுதலைப் புலிகளிடம் பலத்த அடி வாங்கிய இந்தியப் படை ஆத்திரத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை டாங்கிகளால் ஏற்றிக் கொன்றிருந்தது.

பலாலியில் இருந்து மெதுமெதுவாக இந்தியப் படைகள் முன்னேறிக் கொண்டு வந்தன. நானும் வேறு பலரும் அச்சத்தின் காரணாமாக கொக்குவிலில் இருந்த பாடசாலைகள், கோயில்கள் போன்றவற்றில் போய் தங்குவது உண்டு. பாடசாலைகள், கோயில்களை இந்தியப் படைகள் தாக்காது என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்தோம்

ஒரு நாள் நானும் வேறு பலரும் கொக்குவில் சந்தியில் உள்ள கோயிலில் இரவில் போய் தங்கியிருந்தோம். தூரத்தில் துப்பாக்கிச் சன்னங்களின் சத்தமும், செல் வீச்சுக்களின் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தன.

திடீரென்று சத்தங்கள் அதிகரித்தன. எமக்கு அருகாமையில் செல்கள் வந்து விழுவது போல் இருந்தது. எல்லோரும் கலக்க முற்றனர்.

கோயில் சாதரண ஓடுகளைக் கொண்டிருந்தது. செல்களில் இருந்து இந்த ஓடுகள் எம்மைப் பாதுகாக்காது. எல்லோருடைய கண்களும் பாதுகாப்பான இடங்களை தேடின.

அப்பொழுது கோயிலின் மத்தியில் முற்றுமுழுதாக கற்களால் கட்டப்பட்டிருந்த கருவறை என் கண்ணில் பட்டது. அந்தக் கருவறைக்குள் நான் ஓடினேன். ஓடிப் போய் கருவறைக்குள் கடவுள் சிலை அமைக்கப்பட்டிருந்த கல்லின் நுனியில் அமரவும் செய்தேன்.

என்னோடு பலரும் கருவறைக்குள் ஓடி வந்தனர். எம்மைப் பார்த்து மற்றவர்களும் கோயிலில் இருந்த ஒவ்வொரு கடவுள் சிலைகளின் அறைகளுக்குள்ளும் ஓடினர்.

இப்படி அன்றைக்கு பலர் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தினோம். ஈழத்தில் இருப்பவர்கள் என்றாலும் சரி, புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் என்றாலும் சரி, எம்மில் பலர் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்திவிட்டுத்தான் இருக்கிறோம்.

இப்பொழுது பிரான்ஸில் தமிழச்சியும் கருவறைப் போராட்டம் நடத்தப் போகிறார் என்று அறிகிறோம். நல்ல விடயம். ஆனால் என்னுடைய கவலை எல்லாம், தமிழச்சி கருவறைக்குள் நுழையும் போது, "மீண்டும் ஆமிக்காரன் வந்துவிட்டானோ" என்ற அச்சத்தில், எல்லோரும் கருவறைக்குள் நுழைந்து விட்டால், அனைவருக்கும் அந்தச் சிறிய இடம் போதுமா என்பதுதான்.

Tuesday, October 09, 2007

பெரியார் கழகம் வெளியிடும் இறுவட்டுக்கள்

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பும் நோக்கோடு தொடர்ந்து பல இறுவட்டுக்களை ( C D ) வெளியிட உள்ளது.

வரும் வாரத்தில் இரண்டு இறுவட்டுக்கள் வெளியிடப்பட உள்ளன.

கழகத் தோழர்களின் எழுச்சி உரைகளோடு வெளிவர இருக்கும் இந்த இறுவட்டுக்கள், இலவசமாகவே வினியோகிக்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

முதலில் வெளிவர இருக்கும் இறுவட்டுக்களின் தலைப்புக்கள்:

1। தீபாவளி தமிழர் திருநாள் அல்ல!

2। தமிழர் திருமணம் தமிழில் நடக்கட்டும்!

இந்தப் படைப்புக்களுக்கு ஆதரவு தரும்படி அனைவரையும் புரட்சிகர பெரியார் கழகம் கேட்டுக்கொள்கிறது.

பாரிஸில் தலித் மாநாடு - சிங்கள அரசின் திட்டமிட்ட சதி

பாரிஸில் நடக்க இருக்கும் தலித் மாநாடு குறித்து ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் அறிக்கை ஒன்றினை இன்று (09.10.07) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விபரங்கள்:

அன்பார்ந்த தமிழ் மக்களே!

பாரிஸில் "தலித் மாநாடு" என்ற பெயரில் சிங்கள அரசு நடத்த இருக்கும் சதி நடவடிக்கை குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பயனாய் ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதியொழிப்பு மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஈழத்தில் பயன்படுத்தப்படாத சொல்லாகிய "தலித்" என்னும் பதத்தினைக் கொண்டு பாரிஸில் ஒரு மாநாடு நடைபெற இருக்கிறது. "மாநாடு" என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், இது ஒரு சிலரின் சந்திப்பாகவே அமைய இருக்கிறது.

இச் சந்திப்பின் பின்னால் இருப்பவர்கள் உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்கள் அல்ல. தமிழர்களை அடிமைப்படுத்தியும், கொன்று குவித்தும் வருகின்ற சிங்கள இனவாத அரசே இச் சந்திப்பின் பின்னால் இருக்கிறது. சிங்கள இனவாத அரசு தன்னுடைய ஒட்டுக்குழுக்கள் மூலம் இச் சந்திப்பனை ஒழுங்கு செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பாரிஸ் வந்த ஈபிடிபி ஒட்டுக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவனந்தாவே இச் சந்திப்புகளுக்கான ஒழுங்குகளை செய்து விட்டுச் சென்றார். பாரிஸில் இருக்கும் தன்னுடைய ஆதரவாளர்களிடம் பெரும் தொகைப் பணத்தை வழங்கிய டக்ளஸ், தொடர்ந்து பல "மாநாடுகளை" நடத்தும்படி உத்தரவிட்டுச் சென்றுள்ளார். செலவு முழுவதையும் சிறிலங்கா அரசு பொறுப்பேற்கும் என்றும் உறுதி கூறி உள்ளார்.

"தலித்" என்கின்ற பெயரில் நடக்க இருக்கும் இச் சந்திப்பின் நோக்கம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானதாக பொய்ப் பிரச்சாரம் செய்து, தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதே ஆகும். அதற்காகவே "தலித்" என்ற பதம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

தமிழ் நாட்டில் எந்த நிலையிலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருபவர்கள் பெரியார் இயக்கங்களும், தலித் இயக்கங்களுமே. இந்த ஆதரவுத் தளத்தை சிதைப்பதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே பாரிஸில் நடக்க இருக்கும் "தலித் மாநாடு".

தந்தை பெரியார் பெயரிலும், தாழ்த்தப்பட்ட மக்கள் பெயரிலும் அமைப்புக்களை உருவாக்கி, அவைகளை விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கு பெற வைத்து, பல குழப்பங்களை உருவாக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சதித் திட்டத்தின் அடிப்படையில் சில சம்பவங்கள் நடக்கத் தொடங்கி உள்ளன.

ஆகவே உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை சிங்கள அரசின் சதி நடவடிக்கைகள் குறித்து விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

எதையும் சிந்தித்து ஆராய்ந்து செயற்பட வேண்டும் என்பதே தந்தை பெரியாரின் கொள்கை.

"கடவுள்" என்று வரும் போது, கடவுள் பக்தர்கள் எப்படி பகுத்தறிவை மறந்து, கேள்விகள் கேட்காது, ஆராய்ந்து பார்க்காது, மதத்திற்குள் மூழ்கிப் போகிறார்களோ, அதே போன்று, சில பெரியார் தொண்டர்களும் "பெரியார்", "தலித்" போன்ற சொற்களை கேட்டவுடன், பகுத்தறிவை மறந்து, ஆராய்ந்து பார்க்காது, சிங்கள அரசின் சதிக்குள் சிக்குப்பட்டு விடுகிறார்கள்.

தந்தை பெரியார் மிக அழகாகச் சொன்னார், "புலி வேசம் கட்டுபவனுடன் எச்சரிக்கையாக இருங்கள்". அதையே எமது பெரியார் கழகமும் சொல்கிறது. "பெரியார் வேசம்", "தலித் வேசம்" கட்டுபவர்களுடனும் எச்சரிக்கையாக இருங்கள்! பகுத்தறிவோடு சிந்தியுங்கள்!

வாழ்க பெரியார் புகழ்

- ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்

Monday, October 08, 2007

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்

புலம்பெயர்ந்து ஐரோப்பில் வாழும் தமிழ் இளைஞர்களால் ஐரோப்பிய மண்ணில் பகுத்தறிவை வளர்க்கும் நோக்கோடு "ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்" உருவாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் தன்னுடைய முதலாவது கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களை இயற்றியுள்ளது.

 • மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் அனைத்து செயற்பாடுகளையும் கழகம் கண்டிக்கிறது
 • மக்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துக்களை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை கழகம் முன்னெடுக்கும்
 • ஐரோப்பாவில் தனி மனிதர்களாகவும் அமைப்புக்களாகவும் பகுத்தறிவு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கழகம் பாராட்டுகிறது
 • தமிழர்கள் பல மொழிகளை கற்பதோடு தமது தாய்மொழியையும் கற்க வேண்டும் என்பதை கழகம் வலியுறுத்துகிறது
 • தாய்மொழியை கற்றுக் கொடுக்கும் பிரான்ஸின் தமிழ்சோலை, ஜேர்மனியின் தமிழாலயம் போன்ற நிறுவனங்களை கழகம் பாராட்டுகிறது
 • தமிழ்நாட்டின் சேதுசமுத்திரத் திட்டத்திற்கு தடை போடும் மதவாதிகளை கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது
 • தன்னுடைய முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்கைள நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்நாட்டிற்கு முழு உரிமையும் உள்ளது என்பதை கழகம் வலியுறுத்துகிறது
 • தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை கழகம் ஏற்றுக்கொள்கிறது
 • தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் நடத்தும் போராட்டத்தின் நியாயத்தன்மைகளை கழகம் ஏற்றுக்கொள்கிறது
 • தமிழீழத்தில் மேற்கொள்ளப்படும் பகுத்தறிவு சார்ந்த பணிகளை கழகம் பாராட்டுகிறது
 • இந்தப் பணிகள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை கழகம் வலியுறுத்துகிறது
 • ஐரோப்பாவில் தலித்தியம் என்ற பெயரில் இனவாத சிறிலங்கா அரசாலும், பார்ப்பனிய வேளாள மேலாதிக்கவாதிகளாலும் மேற்கொள்ளப்படும் குழப்பகர நடவடிக்கைகளை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது
 • மக்கள் நலனுக்கு விரோதமான இந்த மேலாதிக்கவாதிகள் தமது நலன்களை நிலைநாட்டுவதற்கு தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்த முனைவதை கழகம் வன்மையாக கண்டிக்கிறது
 • மக்கள் விரோத மேலாதிக்கவாதிகளை இனம் காணும்படி அனைவரையும் கழகம் கேட்டுக் கொள்கிறது

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகத்தின் இணையத்தளம் : http://periyareelam.blogspot.com/

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகத்தின் மின்னஞ்சல்: periyareelam@gmail.com

Monday, October 01, 2007

சாத்தியம்தானா தமிழீழம்??!!

நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 62வது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத் தொடரினை ஒட்டி விடுதலைப் புலிகள் ஐக்கியநாடுகள் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே விடுதலைப் புலிகளால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் "இறைமை" பற்றி சற்று ஆராய்தல் பொருத்தமாக இருக்கும். தமிழீழம் என்கின்ற தனியரசு எவ்வாறு உருவாகும், எந்த நாடுகளும் அங்கீகரிக்காத போது அது எப்படிச் சாத்தியமாகும் போன்ற கேள்விகளும் பலரிடம் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை புரிந்து கொள்வதற்கும் "இறைமை" பற்றி புரிந்து கொள்வது அவசியம்.

Sovereignty என்று அழைக்கப்படும் இறைமைக்கு அறிஞர்கள் பலவாறு விளக்கம் கொடுப்பார்கள். பொதுவாக ஒரு அரசு அல்லது மக்கள் தன்னடைய நாட்டின் மீது கொண்டிருக்கும் உச்ச அதிகாரத்தையும், அந்த அதிகாரம் மற்றைய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதையும் "இறைமை" என்பதற்குள் அடக்குவார்கள்.

இந்த "இறைமை" என்பது பலவிதமாக வகைப்படுத்தப்பட்டிருக்கும். இவைகளில் அனைத்து வகைகளையும் நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழீழம் இன்றைக்கு கொண்டிருக்கும் இறைமையின் வகைகள் குறித்தும், அங்கீகாரம் பெற வேண்டிய இறைமையின் வகைகள் குறித்தும் எமது பார்வையை செலுத்துவோம்.

மக்களிடம் இறைமை இருக்கிறது என்று அரசியல் அறிஞர்கள் சொல்வார்கள். தமிழீழ மக்கள் பல முறை ஒருமித்து வழங்கிய தீர்ப்பின் மூலமும், தமிழீழத் தனியரசை உருவாக்குவதற்காய் போராடுவதற்கு ஒரு பலம் வாய்ந்த அமைப்பினை உருவாக்கியதன் மூலமும் தம்மிடம் உள்ள இறைமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதை விட முக்கியமாக தமிழீழத்தின் பல பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஒரு நிழல் அரசை நடத்தி, அங்கு சட்டதிட்டங்களை உருவாக்கியிருப்பதன் மூலம் "நிச்சயத் தன்மையுள்ள சட்ட வடிவ இறைமையை" (Defacto and De Jure Sovereignty) வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தேர்தல் மூலமோ, சட்டப்படியோ ஒரு அரசு ஆட்சிக்கு வரத் தேவையில்லை. புரட்சி, பலப் பிரயோகம் போன்ற வழிகளிலும் ஆட்சிக்கு வர முடியும். அப்படி ஒரு அரசு ஆட்சிக்கு வந்தாலும் கூட, அந்த அரசு உடனடியாகவே தனது மக்கள் மீது நிச்சயத் தன்மையுள்ள இறைமையை பெற்றுவிடுகின்றது.

இது போன்ற அரசுகளை சர்வதேசம் காலப் போக்கில் அங்கீகரித்தும் விடுகின்றன. சில அரசுகளை அனைத்து நாடுகளும் அங்கீகரிக்காது விட்டாலும், குறிப்பிட்ட காலம் வரை சகித்துக் கொண்டும் இருக்கின்றன.

பாகிஸ்தனின் அதிபர் முஸராப் சட்டரீதியாகவோ, தேர்தல் மூலமோ அதிகாரத்திற்கு வந்தவர் அல்ல. ஆனால் அவருடைய அரசை சர்வதேசம் அங்கீகரித்தது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியையும் சில வருடங்கள் சர்வதேசம் சகித்துக் கொண்டு, ஒரு அரசுக்குரிய தொடர்புகளை பேணித்தான் வந்தன. இதற்கு காரணம் இவர்கள் தமது நாட்டின் மீது "நிச்சயத் தன்மையுள்ள இறைமையை" பெற்றுக் கொண்டதுதான்.

இதே போன்று மக்கள் புரட்சியின் மூலம் அதிகாரத்திற்கு வந்த ஈரானின் கொமெய்னி, கியுபாவின் பிடல்காஸ்ரோ போன்றோர் அமைத்த அரசுகளும் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டன. இங்கே "மக்கள் இறைமை" என்பதும், "நிச்சயத் தன்மையுள்ள இறைமை" என்பதும் கருத்தில் எடுக்கப்பட்டு சர்வதேசத்தால் அங்கீகாரத்தை பெறுகின்றன.

தமிழீழ மக்களிடம் "மக்கள் இறைமை" இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் "நிச்சயத் தன்மையுள்ள இறைமை" இருக்கிறது.

இவைகளை விட இறைமையை "உள்ளக இறைமை" (Internal Sovereignty) என்றும் "வெளியக இறைமை" (External Sovereignty) என்றும் இரண்டாகப் பிரிப்பார்கள். "உள்ளக இறைமை" என்பது ஒரு அரசு தன்னுடைய நிலப் பரப்பில் அனைத்துவிதமான அதிகாரங்களையும் செலுத்துகின்ற தன்மை ஆகும். ஒரு அரசினால் தன்னுடைய நிலப் பரப்பில் வாழுகின்ற மக்களை கட்டுப்படுத்த முடிகின்ற போது, அந்த அரசு "உள்ளக இறைமை" கொண்ட அரசாகக் கருதப்படுகிறது.

"புற இறைமை" என்பது ஒரு அரசு பிற நாடுகளுடன் அரசுரீதியான தொடர்புகளை பேணுவது, தூதரக உறவுகளைக் கொண்டிருப்பது, பிற நாடுகளுடன் உடன்படிக்கைகளை செய்து கொள்வது போன்ற விடயங்களைக் குறிக்கும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது நிர்வாகப் பகுதிகளில் "உள்ளக இறைமையை" கொண்டிருக்கிறார்கள். ஆனால் மற்றைய நாடுகளுடன் அரசுரீதியான உறவுகளைப் பேணவோ, உடன்படிக்கை செய்யவோ அனுமதி அளிக்கின்ற "வெளியக இறைமை" அற்றவர்களாக இருக்கிறார்கள். "மக்கள் இறைமை" பெற்றுள்ள தமிழீழ மக்கள் "வெளியக இறைமை" பெறுவதற்கும் உரிமை உள்ளவர்களாக இருந்தும், இன்றுவரை சர்வதேசம் தமிழீழ மக்களின் முற்றுமுழுதான இறைமையை அங்கீகரிக்கவில்லை.

இங்கே ஒரு கேள்வி வருகிறது. சர்வதேசம் விடுதலைப் புலிகள் நடத்துகின்ற அரசின் "நிச்சயத் தன்மையுள்ள சட்ட வடிவ இறைமையையும்" "உள்ளக இறைமையையும்" அங்கீகரித்துள்ளதா என்பதே அந்தக் கேள்வி. இதற்கு பதில் "ஆம்" என்பதுதான். இந்த இறைமை வகைகளை விடுதலைப் புலிகளின் நிர்வாகம் கொண்டுள்ளதை அங்கீகரித்ததனாலேயே "புரிந்துணர்வு ஒப்பந்தம்" உருவானது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் அவர்களின் ஆளுமையை அங்கீகரித்தது. விடுதலைப் புலிகளின் படையணிகள், காவல்துறை, நீதிநிர்வாகம் போன்றவை செயற்படுவதை ஏற்றுக்கொண்டது. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியல் சிறிலங்காவின் சட்டவடிவச் செயற்பாடுகளை நடைபெறாது என்பதை ஏற்றுக் கொண்டது. உதாரணமாக சிறிலங்கா அரசின் காவல்துறை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்வது ஒப்பந்த மீறலாக சொல்லப்பட்டது.

இவ்வாறு சர்வதேசம் விடுதலைப் புலிகளின் நிர்வாக அரசை "நிச்சயத்தன்மையுள்ள சட்ட வடிவ இறைமை" உள்ளதாகவும், "உள்ளக இறைமை" உள்ளதாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அங்கீகரித்தது.

போர் நடைபெற்று வருகின்ற இன்றைய மோசமான நிலையிலும் விடுதலைப் புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்காது இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். தமிழீழ மக்களின் இறைமையை சர்வதேசம் அங்கீகரிப்பதில் ஏற்பட்ட ஒரு சாதகமான திருப்பமாக விடுதலைப் புலிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பார்க்கிறார்கள்.

இந்த இடத்தில் ஆழிப் பேரலை பொதுக்கட்டமைப்பு பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். தமிழீழ அரசு தன்னுடைய "வெளியக இறைமையை" வெளிப்படுத்துவதன் ஒரு படியாக இந்த பொதுக்கட்டமைப்பு அமைந்திருக்கும். ஆனால் சிறிலங்கா அரசு நீதிமன்றம் மூலம் அதை தடுத்து விட்டது. தமிழீழம் "வெளியக இறைமை" நோக்கி பயணிப்பதன் ஆரம்பமாக பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தம் அமைந்து விடும் என்று சிறிலங்கா அரசு கருதியதானேலேயே, சர்வதேச அழுத்தங்களையும் மீறி நீதிமன்றம் மூலம் பொதுக்கட்டமைப்பு உருவாகாமல் தடுத்தது.

ஆகவே புரிந்துணர்வு ஒப்பந்தமாக இருக்கட்டும், பொதுக்கட்டமைப்பாக இருக்கட்டும், விடுதலைப் புலிகள் பல விட்டுக் கொடுப்புக்களோடு இவைகளுக்கு சம்மதிப்பதை, தமிழீழத்தின் முற்றுமுழதான இறைமையை சர்வதேசம் அங்கீகரிக்கச் செய்வதற்கான போராட்டத்தின் பகுதிகளாகவே பார்க்க வேண்டும்.

விடுதலைப் புலிகளும், தமிழீழ மக்களும் கொண்டுள்ள இறையை பார்க்கின்ற அதே நேரம், மறுபக்கமாக சிறிலங்கா அரசின் இறைமையைப் பார்ப்போமாக இருந்தால், சிறிலங்கா அரசு தன்னுடைய பகுதி என்று சொல்கின்ற நிலப் பரப்புகளில் "இறைமை" இழந்த நிலையில் இருப்பதைப் காணலாம்.

தமிழீழத்தில் சிறிலங்கா அரசு "மக்கள் இறைமையை" கொண்டிருக்கவில்லை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் "நிச்சயத் தன்மையுள்ள சட்ட வடிவ இறைமையை" கொண்டிருக்கவில்லை, "உள்ளக இறைமையை" கொண்டிருக்கவில்லை. இவைகளை எல்லாம் சிறிலங்கா அரசு இழந்து விட்டது.

தமிழீழம் தன்னுடைய இறைமையை காப்பதற்கும், சர்வதேச நாடுகள் அங்கீகரிப்பதற்கும் போராடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு தமிழீழத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் நிலைநாட்டப்பட்டுள்ள "நிச்சயத்தன்மையுள்ள சட்ட வடிவ இறைமை" மற்றும் "உள்ளக இறைமை" ஆகியன தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலைநாட்டப்படுகின்ற போது, தமிழீழத்தின் முற்றுமுழுதான இறைமையை சர்வதேசம் அங்கீகரிக்கும். "மக்கள் இறைமை" மூலம் இது நிலைநாட்டப்படுவதால், சர்வதேசம் தமிழீழத்தை அங்கீகரிப்பதற்கு சட்டரீதியான காரணங்கள் முற்றுமுழுதாக இருக்கின்றன.

ஆகவே புலம்பெயர்ந்துள்ள தமிழர்களாகிய நாம் தமிழீழம் உருவாவது குறித்த தேவையற்ற சந்தேகங்களை விட்டுவிட்டு, தமிழீழ மக்கள் தமிழீழப் பிரதேசம் முழுவதையும் நிர்வாகிப்பதற்கு எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.