Tuesday, November 28, 2006

எமது உடனடியான பணி!

மாவீரர் தினத்தில தேசியத் தலைவர் நிகழ்த்திய மாவீரர் தின உரை தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் புத்துணர்வையும் தோற்றுவித்துள்ளது. ஈழப் பிரச்சனையில் தலையிட்ட வெளிநாடுகள் இதுவரை பாடி வந்த "ஐக்கிய இலங்கை" என்று பல்லவிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

கடைசியாக நடந்த ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் போது மேற்குலகம் முன்வைத்த நான்கு கோட்பாடுகளில் "ஐக்கிய இலங்கை" என்பது முக்கியமான கோட்பாடாக இருந்தது. அப்பொழுது நாம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்.

"ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு" என்கின்ற கோட்பாடு ஒரு பாரிய அத்துமீறல் ஆகும். தமிழினம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திர தனியரசு அமைப்பதற்கு போராடி வருகிறது. ஆயினும் கடந்த 5 வருடங்களாக பேச்சுவார்த்தை மேசையில் தமிழீழத்தை வலியுறுத்தாது தமது நல்லெண்ணத்தை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆகவே சிறிலங்கா அரசும் பதிலுக்கு "ஐக்கிய இலங்கை" என்பதை அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு முன்னம் வலியுறுத்தாது இருப்பதே சரியாக இருக்கும். ஆனால் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் "ஐக்கிய இலங்கையை" வலியுறுத்துவதன் மூலம் ஒரு பகை நடவடிக்கையை மேற்கொள்கிறது என்றே கொள்ள வேண்டும். தற்பொழுது மேற்குலகமும் வெளிப்படையாக "ஐக்கிய இலங்கை, ஒருமைப்பாடு" என்று பேசுவது மிகவும் பக்கசார்பானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.

இப்படி விடுதலைப்புலிகளின் நல்லெண்ணத்தை கண்டுகொள்ளாது "ஐக்கிய இலங்கை" என்ற கோட்பாட்டையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்த உலக நாடுகளுக்கு தற்பொழுது தங்களுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தேசியத் தலைவர் உலக நாடுகளை நோக்கி தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான போராட்டத்தை அங்கீகரிக்குமாறு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார். உலக நாடுகளை தமிழீழத் தனியரசை அங்கீகரிக்க செய்வதற்கான உந்துதலை வழங்க வேண்டியது அந்தந்த நாடுகளில் வாழுகின்ற தமிழ் மக்களின் மாபெரும் கடமையாகும்.

இதை விட தமிழ் மக்கள் முன் முக்கியமான ஒரு பணி இருக்கிறது. தமிழினத்திற்கு என உலகில் ஒரு நாட்டை அமைக்கின்ற போராட்டத்திற்கு நல்லாதரவு வழங்கி பக்கபலமாக செயற்பாடுமாறு தேசியத் தலைவர் உலகத் தமிழினத்தை நோக்கி அன்போடு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் தமிழிகத்தில் வெளிவருகின்ற தினத்தந்தி, விடுதலை போன்ற சில ஊடகங்களே தேசியத்தலைவரின் மாவீரர்தின உரைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளன. மற்றைய பெரும்பாலான ஊடகங்கள் தேசியத் தலைவரின் தமிழ்நாட்டு மக்களுக்கான அழைப்பை இருட்டடிப்பு செய்துள்ளன. முக்கியத்துவம் கொடுக்க தவறியுள்ளன. தனியரசு தீர்மானம் பற்றி செய்தி போட்ட ஊடகங்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லப்பட்ட செய்தியை மறைத்து விட்டன. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய மாபெரும் எழுச்சியை மழுங்கடிப்பதே இந்த இருட்டடிப்பின் நோக்கமாக இருக்கும்.

ஆகவே உலகத் தமிழினத்தின் பெருந்தலைவராகிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமிழினத்தை நோக்கி விடுத்திருக்கின்ற செய்தியை உலகில் வாழுகின்ற எட்டுக் கோடிக்கும் மேற்பட்ட தமிழிர்களிடம் கொண்டு போய் சேர்க்கின்ற கடமை எமக்கு உண்டு. இதுவே நாம் உடனடியாக செய்ய வேண்டிய முதலாவது பணியாக இருக்கிறது.

Sunday, November 26, 2006

ரிபிசி மீது மீண்டும் தாக்குதல்!

ரிபிசி வானொலி நிலையம் 24.11.06 இரவு தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் சென்ற பிறகு சிலர் உள் நுளைந்து அங்கிருந்த கருவிகளை அடித்து சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இதனால் ரிபிசி வானொலி சில நாட்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் பின்னணி குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரிபிசி வானொலி விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கிற ஒரு வானொலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறிலங்கா அரசுக்கான பரப்புரைகளை பெருமளவில் மேற்கொள்வதால், ரிபிசி வானொலி சிறிலங்கா அரசின் பணத்தில் இயங்குவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்தும் உண்டு. இனவாத சிங்கள அரசின் இரண்டாவது தூதரகம் போன்று ரிபிசி இயங்குவது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விசனம் உண்டு.

இந்த நிலையில் ரிபிசி வானொலி மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. ரிபிசி வானொலி ஏற்கனவே இரண்டு முறை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படி ரிபிசி தாக்குதலுக்கு உள்ளாகின்ற ஒவ்வொரு முறையும் ரிபிசி தரப்பு விடுதலைப்புலிகள் மீதும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் பழியைப் போட்டு வந்தது. ஆனால் அதை ரிபிசி தரப்பினரால் நிரூபிக்க முடியவில்லை. மக்களும் அதை நம்பவில்லை. மாறாக காப்புறுதிப் பணம் பெறுவதற்காக அவர்களே தங்களுடைய நிலையத்தை சேதப்படுத்தியிருப்பார்கள் என்ற சந்தேகமே மக்கள் மனதில் மேலோங்கி இருந்தது.

இப்பொழுது மீண்டும் ரிபிசி வானொலி நிலையம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருப்பார்கள் என்பது நம்பக்கூடியதாக இல்லை. மாவீரர் தினத்திற்கு இரண்டு நாட்களே இருக்கின்ற நிலையில் இது நடந்துள்ளது. இலண்டனில் மாவீரர் தினம் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இந்த மாவீரர் தின நிகழ்வுகளை குழப்புவதற்கு சிறிலங்காவின் தூதரகமும், ஒட்டுக்குழுக்களும் பல முயற்சிகளில் இறங்கி உள்ளனர். பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், காவல்துறை போன்றவற்றிற்கு புகார் மேல் புகார் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு கெடுபிடிகள் வருவது போன்ற ஒரு செயலை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருக்க மாட்டார்கள்.

அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிபிசியில் நடந்த ஒரு கைகலப்பு சம்பந்தமான வழக்கும் சென்ற வாரமே லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கைகலப்பிலும் ரிபிசி தரப்பு விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆகவே விடுதலைப்புலிகள் மீது பழியைப் போட்டு மாவீரர் தினத்தை குழப்புகின்ற அல்லது அதிக கெடுபிடிகளை உருவாக்குகின்ற நோக்கோடு, ரிபிசி வானொலி மீதான தாக்குதலை சிறிலங்கா அரசுக்கு சார்பானவர்களே மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமே வலுத்துக் காணப்படுகிறது.

இந்த இடத்தில் சிலரால் இன்னும் ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக ரிபிசி வானொலி சிறிலங்கா இராணுவத்தின் துணைக் குழு ஒன்றின் தலைவராகிய கருணாவின் உரையை மாவீரர் தினத்தில் ஒலிபரப்பி வந்தது. ஆனால் கருணா குழுவுக்குள் ஏற்பட்ட பிளவு ரிபிசியிலும் எதிரொலித்தது. ரிபிசி வானொலியில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருணா குழுவில் இருந்து பிரிந்த பரந்தன்ராஜன் குழுவை சேர்ந்தவர்கள். ஆகவே இம்முறை கருணாவின் உரையை ஒலிபரப்ப மறுத்துவிட்டார்கள். கருணாவின் உரையை ஒலிபரப்ப வேண்டும் என்று கருணா குழுவால் ரிபிசிக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. அத்துடன் ரிபிசி வானொலியில் உள்ள கருணாவின் ஆதரவாளர்களும் அழுத்தம் கொடுத்துள்ளார்கள். இதனால் ரிபிசிக்குள்ளேயே அடிதடி நடக்கின்ற அளவிற்கு சென்றதாகவும், ஆயினும் கருணாவின் உரையை ஒலிபரப்ப முடியாது என்று பரந்தன்ராஜன் குழுவினர் உறுதியாக கூறிவிட்டார்கள் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த கருணா குழுவினரே ரிபிசி மீதான தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்றும், அனேகமாக இதை ரிபிசியில் இருக்கின்ற கருணாவின் ஆதரவாளர்களே செய்திருப்பார்கள் என்றும், அவர்கள் தங்களின் கருத்தை உறுதியான முறையில் சொன்ன பொழுது, அதில் இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை எம்மால் மறுக்க முடியவில்லை.

இப்படி ரிபிசி மீது நடந்த தாக்குதல் குறித்த பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் எது உண்மை என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

Tuesday, November 21, 2006

மாவீரர் வாரமும் எதிர்பார்ப்புக்களும்!

நவம்பர் மாதம் இலங்கைத்தீவின் அரசியலில் ஒரு பரபரப்பை, திருப்பத்தைக் கொடுக்கின்ற மாதம். அதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதோ! நவம்பர் மாதம் வந்து விட்டது. இலங்கைத் தீவின் அடுத்த ஆண்டு அரசியல், இராணுவப் போக்கை தீர்மானிக்கின்ற மாவீரர் வாரம் அண்மிக்கிறது.

மாவீரர் தினம் 1989ஆம் ஆண்டில் இருந்து தமிழீழ மக்களால் நினைவுகூரப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முதலாவதாக வீரச் சாவடைந்த சங்கர் என்கின்ற சத்தியநாதனின் நினைவு நாள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு, அந்த நாளில் தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை ஈந்த அனைத்து போராளிகளும், பொதுமக்களும் நினைவு கூரப்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக மாவீரர் தினம் என்பது மாவீரர் வாரம் என்று பரிமணித்து நினைவு கூரப்படுகிறது. இந்த மாவீரர் வாரம் நெருங்க, நெருங்க தமிழீழ மக்களிடம் பரபரப்பும், எதிர்பார்ப்பும் அதிகரிக்கும். சிங்கள அரசும், அதன் இராணுவ இயந்திரமும் திகிலோடு மாவீரர் வாரத்தை எதிர்கொள்ளும்.

மாவீரர் வாரம் மேலும் இரண்டு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது. அக் காரணங்களில் மிகவும் முக்கியமான தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை. இந்த உரை தமிழீழத்தின் அடுத்த ஆண்டிற்கான கொள்கை விளக்க உரையாக அமையும். இலங்கைத் தீவின் அடுத்த ஆண்டு அரசியல் நிலவரம் எப்படி இருக்கப் போகிறது என்பதை ஓரளவு எதிர்வு கூறுவது தேசயத் தலைவரின் இந்த மாவீரர் தின உரையை வைத்துத்தான்.

இரண்டாவது காரணம் மாவீரர் வாரத்திலோ, அல்லது அதற்கு அண்மைய நாட்களிலோ விடுதலைப்புலிகள் ஒரு பெரும் தாக்குதலை நடத்துவார்கள். இந்தப் பெருந்தாக்குதல் ஒவ்வொரு முறையும் பெரும் வெற்றி அடைவதோடு, சிறிலங்காவின் இராணுவத்தை சின்னபின்னமாக்கி விட்டுத்தான் ஓயும். விடுதலைப்புலிகள் தாக்குவார்கள் என்று தெரிந்தும் சிறிலங்கா இராணுவத்தால் விடுதலைப்புலிகளின் தாக்குதலை முறியடிக்க முடிந்தது இல்லை.

சிறிலங்கா அரசோடு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை ஆரம்பித்த பிறகுதான் சிறிலங்கா அரசு மாவீரர் வாரத்தை சற்று நிம்மதியோடு கழிக்கத் தொடங்கியது. ஆனால் இப்பொழுது நிலமைகள் மீண்டும் மோசமாகி பேச்சுவார்த்தைகள் ஒரு புறமும் மோதல்கள் மறு புறமும் நடக்கின்ற ஒரு புதிய நிலை உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் தேசியத் தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு, ஏதாவது தாக்குதல் நடக்குமா என்ற எதிர்பார்ப்பும் சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது.

சென்ற ஆண்டும் இதே காலப் பகுதியில் நிலமை மோசமடைந்து காணப்பட்டது. சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகள் மீது தமிழீழம் எங்கும் நிழல் யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தது. அத்துடன் மக்கள் படையினருக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் பல இடங்களில் மோதல்கள் நடந்தன. இனவாத சிந்தனையோடு மகிந்தவின் அரசு பதவியேற்றும் சில வாரங்கள்தான் ஆகி இருந்தன.

அந்த நிலையில் சென்ற ஆண்டு வந்த மாவீரர் வாரமும் பலத்த எதிர்பார்ப்புக்களை உருவாக்கி விட்டிருந்தது. தேசியத் தலைவர் யுத்தத்தை அறிவிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலானவர்களிடம் பரவிக் கிடந்தது. ஆனால் தேசியத் தலைவரின் உரை அவ்வாறு அமையவில்லை. அதனாற்தான் என்னவோ, இந்த முறை சென்ற ஆண்டோடு ஒப்பிடுகின்ற பொழுது எதிர்பார்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது.

ஆனால் நாள் நெருங்க, நெருங்க எதிர்பார்ப்பு இயல்பாக அதிகரிக்கவே செய்யும். பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது அந்தரத்தில் தொக்கி நிற்பதாலும், மோதல்கள் தொடர்வதாலும், தேசியத் தலைவரின் உரை மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது.

இந்த நேரத்தில் இன்னும் ஒரு எதிர்பார்ப்பு சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு தேசியத் தலைவர் மகிந்த அரசுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்து விட்டது என்றும், அதனால் இந்த மாவீரர் தின உரையில் தேசியத் தலைவர் சிறிலங்க அரசுக்கு எதிரான யுத்தத்தை பிரகடனப்படுத்துவார் என்ற கருத்தும் சிலரிடம் காணப்படுகிறது. ஆகக் குறைந்தது அதிரடியாக ஒரு மிகக் குறுகிய காலக் கெடுவையாவது அறிவிப்பர் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் தேசியத் தலைவர் மாவீரர் தின உரையில் ஒரு யுத்தத்தையோ, காலக்கெடுவையோ அறிவிப்பார் என்று நான் நினைக்கவில்லை.

மாவீரர் தின உரை என்பது ஒரு தேசத்தின் தலைவரால் ஒரு புனித நாளில் வெளியிடப்படுகின்ற ஒரு கொள்கை விளக்க உரை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறான ஒரு உரையில் யுத்தப் பிரகடனங்கள், காலக்கெடுக்கள், சவால்கள் போன்றன இடம்பெற மாட்டாது.

இம் முறை மாவீரர் தின உரை பெரும்பாலும் சர்வதேசத்தை நோக்கியதாகவே இருக்கும் என்று நம்பலாம். சிறிலங்கா அரசின் தொடர்ச்சியான போர் அணுகுமுறைகளையும், மேற்குலகின் வாக்குறுதிகளையும், வேண்டுகோள்களையும் மதித்து விடுதலைப்புலிகள் முழு அளவிலான போரை ஆரம்பிக்காதது மாத்திரம் அன்றி பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியதையையும் சுட்டிக்காட்டி சர்வதேசத்தை ஒரு தீர்க்கமான நிலையை எடுக்குமாறு தேசியத் தலைவர் தனது உரையில் வலியுறுத்தக்கூடும். இதுவே மாவீரர் தின உரையின் முக்கிய பகுதியாக அமையும்.

சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் மேற்குலகின் அழுத்தம் விடுதலைப்புலிகள் மீதே அதிகமாக இருந்தது. விடுதலைப்புலிகளின் ராஜதந்திரம் மிக்க நடவடிக்கைகளாலும், ஆச்சரியப்படத்தக்க பொறுமையாலும் விடுதலைப்புலிகள் மேற்குலகின் அழுத்தங்களை சிறிலங்கா அரசை நோக்கி திருப்பி விட்டிருக்கிறார்கள். தற்பொழுது சர்வதேசத்தின் மீது விடுதலைப்புலிகள் அழுத்தம் போடுகின்ற நிலை வந்திருக்கிறது என்று சொன்னால் கூட அது மிகையாக இருக்கப் போவதில்லை. இன்றைக்கு மேற்குலக நாடுகள் வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளிடம் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி விட்டு வருவதை இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

இப்பொழுது அழுத்தம் என்பது சிறிலங்கா அரசின் மீதே மேற்குலக நாடுகளால் போடப்படுகிறது. ஆனால் சிறிலங்கா அரசின் விட்டுக்கொடாத் தன்மையால் ஒர தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டிய நிலைக்கு மேற்குலகம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை ஒரு உந்துதலாக அமையக் கூடும்.

இங்கே சொல்லப்படுகின்ற அழுத்தங்கள், வாக்குறுதிகள் போன்றவைகள் உள்ளுக்குள் நடக்கின்ற விடயங்களே அன்றி வெளிப்படையாக நடக்கின்ற விடயங்கள் அல்ல என்பதை இதை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வருடம் சிறிலங்கா அரசு ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தியதாலும், பல நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளதாலும், விடுதலைப்புலிகள் நடத்துகின்ற நவம்பர் மாத பெருந்தாக்குதல்கள் போன்று இம் முறையும் நடைபெறுமா என்ற கேள்வியும் சிலரிடம் உண்டு. ஆனால் மாவீரர் வாரத்தை குழப்புகின்ற நோக்கோடும், விடுதலைப்புலிகளை உச்சகட்ட சீற்றத்திற்கு ஆளாக்கி, விடுதலைப்புலிகளாகவே முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பிக்கச் செய்கின்ற நோக்கோடும் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தாக்குதலுக்கு சிறிலங்கா அரசு திட்டமிடுவதாக தாயகத்தில் இருந்து வருகின்ற சில செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசை இவ்வாறான ஒரு தாக்குதலை செய்ய விடாது தடுப்பதற்காக விடுதலைப்புலிகள் முன்கூட்டியே ஒரு தற்காப்புத் தாக்குதலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதை இந்தச் செய்தி சொல்கிறது. ஆனால் விடுதலைப்புலிகள் சர்வதேச சமூகத்திடம் இது குறித்து முறையிட்டு அழுத்தங்கள் மூலம் சிறிலங்கா அரசை இது போன்ற தாக்குதலில் ஈடுபட விடாது தடுக்கின்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது.

விடுதலைப்புலிகளின் இம் முயற்சி வெற்றி பெறுவதிலேயே மற்றையவைகள் தங்கி உள்ளன. அவ்வாறு விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்துவதாக இருந்தால் கூட அவைகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறாத வகையிலேயே இருக்கும். முடிக்கின்ற வேளையில் ஒன்றைச் சொல்ல வேண்டும்.

இங்கே கூறப்பட்டிருக்கின்ற சில கணிப்புக்கள் அப்படியே பலிக்க வேண்டும் என்றும் எந்தக் கட்டாயமும் இல்லை. விடுதலைப்புலிகளையும் அவர்களின் செயற்பாடுகளையும் சரியான முறையில் யாராலும் கணிக்க முடியாது. அப்படி கணிக்கப்பட முடியாதவர்களாக இருப்பதும் அவர்களின் வெற்றியின் காரணங்களில் ஒன்று. விடுதலைப்புலிகள் செய்த பிறகோ அல்லது சொன்ன பிறகோதான் சில விடயங்கள் புரிய வரும். விடுதலைப்புலிகளைப் பற்றி முற்கூட்டியே சொல்லப்பட்ட கணிப்புக்கள் சில வேளைகளில் சரியாக இருக்கும், சில வேளைகளில் தவறாக இருக்கும்.

ஆனால் விடுதலைப்புலிகள் செய்கின்ற கணிப்புக்கள் ஒருபோதும் தவறாக இருந்தது இல்லை.

Monday, November 13, 2006

'புற'த்திலும் புலத்திலும் பெண் கவிஞர்கள்!

சங்க கால இலக்கியத்தில் புறநானூற்றில் ஒரு பாடல் உண்டு. தமிழனுடைய வீரத்தைப் பற்றி பேசுகின்ற பொழுது இந்தக் புறநானூற்றுப் பாடல் சொல்லுகின்ற கதையை இன்று வரை உதாரணம் காட்டுகிற அளவிற்கு புகழ் பெற்ற பாடல் அது. அந்த பாடலின் சுருக்கம் இதுதான்.

ஒரு பெண் தன் கணவனை போருக்கு அனுப்புவாள். கணவன் போரில் வீரச் சாவு அடைந்து விடுவான். கணவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரனாக வீழ்ந்தான் என்ற செய்தி கேட்டு பெருமை கொள்வாள். அடுத்த நாள் போருக்கு தன் மகனை அனுப்புவாள். மகனும் போரில் இறந்து விட்டான் என்று செய்தி வரும். ஆனால் கூடவே இன்னும் ஒரு செய்தி வரும். அவளுடைய மகன் புறமுதுகு காட்டி ஓடுகின்ற பொழுது, முதுகில் காயம் பட்டு இறந்தான் என்பதே அந்தச் செய்தி. இதைக் கேட்ட அந்தப் பெண் துடித்துப் போவாள். போர்க்களம் நோக்கி ஓடுவாள். இறந்து கிடக்கும் உடல்களுக்குள் தன்னுடைய மகனை தேடுவாள். மகனைக் கண்டு பிடித்தவள், ஓடிச் சென்று மகனுடைய உடலைப் பார்க்கிறாள். மகன் மார்பில் காயம் பட்டு இறந்து கிடக்கிறான். தன்னுடைய மகனைப் பற்றி வந்த செய்தி பொய்யென்றும், உண்மையில் அவன் ஒரு வீரனாக மார்பில் காயம் பட்டு இறந்தான் என்றும் புரிந்து கொள்கிறாள். தன்னுடைய மகனை எண்ணி பெருமை கொள்கிறாள்.

ஈழத்தில் தாய்மார் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்புகின்ற பொழுது அவர்களை புறநானூற்று தாய் என்று சொல்வதன் காரணமும் மேற்சொன்ன புறநானூற்றுப் பாடல்தான். புறநானூற்றுப் பாடல்களில் வருகின்ற கதைகளில் ஒன்றைச் சொல்லும்படி கேட்கின்ற பொழுது, உடனடியாக சொல்லப்படுவதும் மேற்சொன்ன கதைதான். இந்தக் கதை ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. இந்தக் கதையை தருகின்ற பாடலை பாடியவர் காக்கைபாடினியார் என்கின்ற ஒரு பெண் புலவர்.

சங்க இலக்கியங்களை எழுதியவர்களில் 40இற்கும் மேற்பட்டவர்கள் பெண்புலவர்கள் என்று அறிய முடிகிறது. புறநானூற்றுப் பாடல்களை எழுதிய 32 புலவர்களில் 16 பேர் பெண்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைவரும் அறிந்த முக்கியமான சங்க கால புலவர் அவ்வையார். இவரே புறநானுற்றுப் பாடல்களில் அதிகமான பாடல்களை பாடியவர். நானூறு பாடல்களில் 33 பாடல்களை அவ்வையார் மட்டும் பாடி உள்ளார். அவ்வையார் அன்றைய மன்னர்களை இடித்து உரைக்கின்ற அளவிற்கு, போர்களில் சமாதானம் செய்கின்ற அளவிற்கு அரசியல் அந்தஸ்தும் பெற்றிருந்தார்.

அவ்வையாரின் பின் வந்த பல பெண் புலவர்கள் அவ்வையார் என்ற பெயரிலேயே தம்மையும் அழைத்துக் கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அதே வேளை ஆணாதிக்க சமூகம் பல அவ்வையார்களை ஒரு அவ்வையார் ஆக்கி விட்டது என்ற கருத்தும் உண்டு. அதியமானுடன் நட்புக் கொண்டிருந்த அவ்வையார், நல்வழி எழுதிய அவ்வையார், சேரமான் நாயனார் காலத்து அவ்வையார் என்று பல அவ்வையார்கள் வாழ்ந்தார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

சங்க காலத் தமிழர்களின் சமயத்தை ஆராய்கின்ற பொழுது, ஒரு பெண் புலவரின் பாடல் முக்கியமான சான்றுகளை தருகிறது. தாய்நாட்டைக் காக்க போரில் வீராச் சாவு அடைந்த ஒரு வீரனின் நடுகல்லை வணங்குவது பற்றி அல்லூர் நல்முல்லையார் என்ற பெண் புலவர் பாடி வைத்திருக்கிறார். கைம்பெண்களின் அவலத்தை, பெண்ணியக் கருத்துக்களை பெருங்கோப்பெண்டு என்ற பெண் புலவர் பாடியிருக்கிறார்.

புறநானுறில் இப்படி புகழ் பெற்ற பெண் புலவர்களின் படைப்புக்கள் விரவிக் கிடக்கின்றன. அதே போன்று அகநானுற்றுப் பாடல்களிலும் பெண் புலவர்கள் இருக்கிறார்கள். சங்க காலப் பெண் புலவர்களில் அவ்வையாருக்கு அடுத்தபடி புகழ் பெற்றிருந்த வெள்ளி வீதியார் என்ற பெண் புலவர் அகநானூற்றுப் பாடல்களில் பலதை பாடியுள்ளார்.

இவ்வாறு தமிழை அழகுபடுத்திய பெண் புலவர்களின் வரலாறு சங்க காலத்தோடு முடிந்து விடவில்லை. கி.பி 7, 8ஆம் நூற்றாண்டளவில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்தில் வாழ்ந்த அவ்வையார், ஆண்டாள் என்று தொடர்ந்தது. ஆண்டாளுடைய பாடல்களில் இருக்கின்ற இலக்கிய ரசனை வேறு எங்கும் இல்லை என்று சிலர் சொல்வார்கள். சிலர் ஆண்டாளை கம்பருடன் ஒப்பிட்டு பேசுவார்கள். உண்மையில் ஆண்டாளுடைய பாடல்களை படிக்கின்ற பொழுது, யாருமே அதில் மயங்கவே செய்வார். அதில் சொட்டுகின்ற கவி ரசம் அற்புதமானது. படிப்பவரை சொக்கிப் போகச் செய்வது.

இப்படி அவ்வையார்(கள்), காக்கைபாடினியார், வெள்ளிவீதியார், ஆண்டாள் என்று நீண்டு கொண்டு போன வரிசை திடீரென்று நின்று போய்விட்டது. ஆண்டாளுக்குப் பிறகு ஒரு பெண் புலவரை தேடிப் பார்த்தால், யாருமே அப்படி தென்படவில்லை என்பது ஒரு சோகமான செய்தி.

இன்றைக்கு புலம் பெயர் நாடுகளில் ஆண்களை விட பெண்களே அதிகமாக கவிதை எழுதுகிறார்கள். ஐரோப்பா, கனடா, அவுஸ்ரேலியாவின் ஒவ்வொரு நகரங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுடைய கவிதைகளின் வீச்சு ஒரு எல்லைக்குள் நின்று விடுகிறது. அல்லது கவிதைகளில் வீச்சே இல்லாமல் இருக்கிறது.

இந்தக் கவிஞர்களுடைய கவிதைகளில் புதிய விடயங்கள் இருப்பதில்லை. புதிய கருத்துக்கள் இருப்பதில்லை. புதிய காட்சிகள் இருப்பதில்லை. புதிய சொற்கள் இருப்பதில்லை. இதற்கு எமது ஆணாதிக்க சமூகமும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். பெண்கள் வீட்டிலும், தொடர் நாடகங்களிலும் அடைபட்டுக் கிடப்பதால் அவர்களிடம் புதிய தேடல்கள் இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. புதிய தேடல்கள் இல்லாததால் பெண் கவிஞர்களின் கவிதைகள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றி வருகின்றன.

உலக அரசியல், பகுத்தறிவு, வர்க்கப் போராட்டங்கள், சாதியம் போன்றவற்றையெல்லாம் பெரும்பாலும் பெண்களின் கவிதைகள் தொட்டுச் செல்வதில்லை. அதற்கான தேடல்களை செய்வதிலும் பெண் கவிஞர்கள் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.

புலத்திலே உள்ள பெரும்பாலான பெண் கவிஞர்கள் பெரும்பாலும் வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் கவிதை வாசிப்பதன் மூலமே தங்களுடைய கவிதைகளை வெளிக் கொணர்கிறார்கள். அந்தக் கவிதைகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே மாதிரியே இருக்கும். ஒருவர் முதலாவதாக சொன்ன வரியை வேறு ஒருவர் நான்காவதாக சொல்லுவார். ஒரு வரியை இரண்டு தடவைகள் சொல்ல வேண்டும் என்பது கட்டாய வழக்கமாக இருக்கும்.

இதை படிக்கின்ற பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி வரும். இதை எழுதுகின்ற நான் ஒரு சிறந்த கவிஞனா என்று? இதை எழுத எனக்கு என்ன தகுதி என்று அடுத்த கேள்வியும் தொடர்ந்து வரும். நான் சிறந்த கவிஞனோ, இல்லையோ, ஆனால் ஒரு மிகச் சிறந்த ரசிகன். நீங்கள் என்னிடம் ஆண்கள் எழுதிய 50 கவிதைகளையும் பெண்கள் எழுதிய 50 கவிதைகளையும் பெயரிடாமல் கொண்டு வாருங்கள். நான் சரியான முறையில் எது ஆண்கள் எழுதியது, எது பெண்கள் எழுதியது என்று பிரித்துக் காட்டுகிறேன். அதில் தவறுகள் வந்தால் கூட அவைகள் பத்துக்குள்தான் இருக்கும். அது முடியாது போனால் நான் சொன்னது தவறு என்று ஏற்றுக் கொள்கிறேன்.

இதில் இன்னும் ஒரு கொடுமை உண்டு. ஒரு சோக நிகழ்ச்சி நடந்தால் போதும். அதற்கான அஞ்சலி நிகழ்வில் பெண் கவிஞர்கள் வரிசையாக வந்து தங்களுடைய கவிதைகளின் மூலம் மேலும் துன்பத்தை தருவார்கள்.

சுனாமி வந்த பொழுதும் இதுதான் நடந்தது. வந்த அலை திரும்பிப் போகவில்லை. இங்கே இவர்கள் கவிதை வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். செஞ்சோலையில் குண்டு வீழ்ந்தது. மீட்புப் பணி முடியவில்லை. அதற்குள் கவிதைகள் அணி வகுத்து விட்டன. கடைசியாக வாகரையில் குண்டு வீசப் பட்ட பொழுதும், பெண் கவிஞர்கள் வானொலிகளில், தொலைக்காட்சிகளில் வந்து கவிதைகளை வீசி விட்டுப் போனார்கள்.

இதற்கான காரணம் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அடுத்த குண்டு எப்பொழுது விழும் என்ற இவர்கள் கவிதை எழுதி தயாராக வைத்திருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்று ஒரு கருத்து உண்டு.

ஒரு சாவு வீட்டில் ஆண்கள் காரியங்களைக் கவனிக்க, பெண்கள் சுற்றி இருந்து ஒப்பாரி பாடுவார்கள். அந்த ஒப்பாரியின் மூலம் தனிப்பட்ட கோப தாபங்களையும் சிலர் தீர்த்துக் கொள்வார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. எப்படி இருந்தாலும், அந்தப் பெண்களின் சோகம் அந்த இடத்தில் பாடலாக வெளிப்படுகிறது. இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த ஒப்பாரி வைக்கும் பழக்கும் குறைந்து விட்டாலும், அந்தத் தன்மை மரபணுக்கள் வழியாக காவிச் செல்லப்பட்டிருக்கலாம். அதன் வெளிப்பாடாக சோக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற பொழுது பெண்கள் கவிதை வாசிப்பதாக இருக்கக் கூடும். இப்படி ஒப்பாரிக்கு பதிலாக கவிதைகள் வாசிக்கப்படுகின்றனவா என்பது உண்மையிலேயே ஆய்வுக்கு உட்பட்டத்தப்பட வேண்டிய ஒரு விடயம். மாவீரர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவர்கள் வந்து மீண்டும் கவிதை வாசிக்கப் போகிறார்களே என்று நினைக்க பயமாக இருக்கிறது. சென்ற முறை அவர்கள் எழுதிய அதே கவிதைகள்தான் இம் முறையும் வரப் போகின்றன. இம் முறை சில வசனங்கள் இடம் மாறி இருக்கப் போகின்றன. அவ்வளவுதான்.

மொத்தத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள பெரும்பாலன பெண் கவிஞர்கள் ஒரே விதமான பாணியில் ஒரே விதமான கவிதைகளை எழுதி காலத்தை வீணே கடத்திக் கொண்டு போகிறார்கள். சில விதிவிலக்குகள் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் விதிவிலக்குகள் பொதுவிதி அல்ல. இங்கே பெண் கவிஞர்களை நோக்கி இதை எழுதுவதற்கும் காரணம் உண்டு. நான் முன்பே சொன்னது போன்று புலம்பெயர்ந்த நாடுகளில் அதிகமாக கவிதை எழுதுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு கவிதைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கின்ற கடப்பாடு அதிகம் உண்டு.

அது முடியாவிட்டால் ஒன்று செய்யுங்கள். நான் குறிப்பிட்ட விதிவிலக்குகளுக்குள் அடங்குபவர்களில் நீங்களும் ஒருவர் என்று எண்ணி ஆறுதல் பட்டுக் கொள்ளுங்கள். அல்லது என்னை ஆணாதிக்கவாதி என்றும், திமிர் பிடித்தவன் என்றும் திட்டி கவிதை எழுதி சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள்.

Sunday, November 05, 2006

"பொருத்தம் பார்த்தல்" என்னும் ஆபாச மோசடி!

இன்று எம்மவர் மத்தியிலே காதல் திருமணம், பேச்சுத் திருமணம் என்று இரு வகையான திருமணங்கள் காணப்படுகின்றன. முன்னைய காலத்தில் தமிழர்கள் காதல் திருமணம் மட்டுமே செய்து வந்தார்கள். அதுவே தமிழர் பண்பாடாகவும் இருந்தது. பின்பு தமிழினத்திற்குள் ஆரியர்களால் வர்ணாச்சிரம தர்மத்தின் பெயரில் ஜாதிகள் திணிக்கப்பட்ட பொழுது, ஜாதியைக் காப்பதற்காக பேச்சுத் திருமணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குள் பார்ப்பனர்கள் எண்ணில் அடங்காத ஆபாசங்களையும் நுளைத்துவிட்டனர். இன்று வரை ஜாதியோடு, பேச்சுத் திருமணத்தையும் எமது தமிழர்கள் கைவிடாமல் கட்டிக் காத்து வருகிறார்கள். இதில் இடையிடையே காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா? என்று பட்டிமன்றமும் நடத்துவார்கள்.

இந்த பேச்சுத் திருமணத்தில் பொருத்தம் பார்ப்பது முக்கியமான ஒன்றாக இருக்கும். இதைப் போல ஒரு முட்டாள்தனமான விடயம் உலகத்தில் இருக்க முடியாது. இந்தப் பொருத்தம் பார்ப்பதில் "திரிம்சாம்சம்" போடுதல் என்கின்ற ஒரு விடயம் உண்டு. இதன் மூலம் வரப் போகும் பெண்ணின் குணத்தை அறிய முடியுமாம்.

இதன்படி ஏறக்குறைய 40 வீதமான தமிழ் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் லக்கினத்தை கணித்து எந்த திரிம்சாம்சத்தில் எவ்வகையான குணங்களை அப் பெண் கொண்டிருப்பாள் என்பதை சோதிடரத்னங்கள் பின்வரும் முறையில் கணிப்பார்கள். அதனை படியுங்கள்.

ஒரு பெண்ணின் லக்கினம் மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்தால்:-

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் பூப்படைவதற்கு முன்பே தகாத உறவு வத்திருப்பாள்.

2. சுக்கிரனின் திரிம்சாம்சமாக இருந்தால் கணவனைத் தவிர பிற ஆடவருடன் தகாத உறவு வைத்து இருப்பாள்.

3. புதனின் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் சூழ்ச்சிக் காரப் பெண்ணாக இருப்பாள்.

4. குருவின் திரிம்சாம்சத்திலே பிறந்து இருப்பாளேயானால் மிகவும் நல்லொழுக்கமுடைய பெண்ணாவாள்.

5. சனியின் திரிம்சாம்சத்தில் பிறந்து இருந்தால் ஏழ்மைமிக்க பெண்ணாக இருப்பாள்.

கன்னி, மிதுனம் லக்கினங்களுக்கு,

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் ஒரு சூழ்ச்சிக்காரப் பெண்ணாக இருப்பாள்.

2. சுக்கிரன் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் பிற ஆடவருடன் தொடர்பு வைத்து இருப்பாள்.

3. புதன் திரிம்சாம்சமாக இருந்தால் மிக நல்லொழுக்கத்துடன் நல்ல குணங்களுடன் இருப்பாள்.

4. குரு திரிம்சாம்சமாக இருந்தால் நற்குணவதியாக இருப்பாள்.

5. சனி திரிம்சாம்சத்தில் பிறந்தால் அந்தப் பெண்ணிற்கு சிற்றின்பங்களில் நாட்டமிருக்காது.

ரிஷபம், துலாம் லக்கினமாக ஆனால்,

1. செவ்வாய் திரிம்சாம்சமானால் பெண்ணின் நடத்தை திருப்திகரமாக இருக்காது.

2. சுக்கிரன் திரிம்சாம்சமானால் நல்ல பெண்ணாகவும், படித்த பெண்ணாகவும் இருப்பாள்.

3. புதன் திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் கெட்டிக்காரப் பெண்ணாக இருப்பாள்; கலைகளில் நாட்டம் இருக்கும்.

4. குரு திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் நல்ல குணவதியாக இருப்பாள்.

5. சனி திரிம்சாம்சமாக இருந்தால் அந்தப் பெண்ணுக்கு 2-ம் திருமணம் ஆகும்.

கடக லக்கினத்திற்கு,

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல நடத்தை உள்ள பெண்ணாக இருக்க மாட்டாள்.

2. சுக்கிரன் திரிசாம்சமும் நல்ல நடத்தை உள்ள பெண்ணாக இருக்க மாட்டாள்.

3. புதன் திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல படித்த கெட்டிக்காரப் பெண்ணாக இருப்பாள்.

4. குரு திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல பண்புள்ள பெண்ணாக இருப்பாள்.

5. சனி திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் கொடிய குணமுள்ளவளாக இருப்பாள். கணவனையே கொல்லும் அளவிற்கு அவளுக்குக் கொடூரம் இருக்கும்.

சிம்ம லக்கினமாக இருந்தால்,

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் பேச்சு மிகுந்து இருக்கும், குணங்களில் ஆண்மைத்தனம் நிறைந்து இருக்கும்.

2. சுக்கிரனின் திரிம்சாம்சத்தில் இருந்தால் நடத்தை நன்றாக இருக்காது.

3. புதனின் ஆதிக்கத்திலிருந்தால் குணத்தில் ஆண்மைத்தனம் இருக்கும்.

4. குருவின் ஆதிக்கத்திலிருந்தால் நல்ல உயர் பதவியில் இருப்பவரைக் கைப்பிடிப்பர்.

5. சனியின் திரிம்சாம்சத்திலிருந்தால் தன் சொந்த மதத்தின்மீது பற்றுதல் குறைவாக இருக்கும்.

மகரம், கும்பம் லக்கினமாக இருந்தால்,

1. செவ்வாய் ஆதிக்கத்திலிருந்தால் மிகவும் சிறிய வேலைகளைச் செய்பவளாக இருப்பாள்.

2. சுக்கிரன் ஆதிக்கத்திலிருந்தால் நல்ல பெண்ணாக இருக்க மாட்டாள்.

3. குரு ஆதிக்கத்திலிருந்தால் நல்ல குணமுடைய பெண்ணாக இருப்பாள்.

4. சனி திரிம்சாமசத்திலிருந்தால் கீழ்த்தரமான ஆண்களுடன் சேருவாள்.

5. புதன் ஆதிக்கத்திலிருந்தால் கெட்டிக்காரப் பெண்ணாக இருப்பாள்.

தனுசு,மீனம் லக்கினமாக இருந்தால்,

1. செவ்வாயின் ஆதிக்கத்திலிருந்தால் நற்குணங்களை உடையவளாக இருப்பாள்.

2. சுக்கிரனின் ஆதிக்கத்திலிருந்தால் நடத்தை நன்றாக இருக்காது.

3. புதனின் ஆதிக்கத்திலிருந்தால் கலைத்துறையில் சிறந்து விளங்குவாள்.

4. குருவின் ஆதிக்கத்திலிருந்தால் நற்குணவதியாக இருப்பாள்.

5. சனியின் ஆதிக்கத்திலிருந்தால் சிற்றின்பத்தில் அதிக நாட்டம் காட்ட மாட்டாள்.

இதனை படிக்கின்ற பொழுது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? எனக்கு ஒன்று தோன்றுகிறது. பொருத்தம் பார்க்கும் சோதிடர்களையும் அதற்கு துணை போகின்றவர்களையும் செருப்பால் அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

Tuesday, October 31, 2006

படிப்பினைகளை மறந்த சிறிலங்கா அரசு!

ஜெனீவாவில் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் நடந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை எதிர்பார்த்தது போன்று தோல்வியில் முடிவடைந்து விட்டது. விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் தாயகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இப் பேச்சுவார்த்தை பற்றி விடுதலைப்புலிகள் எவ்வித நம்பிக்கையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், மேற்குலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் பங்கு பற்றினர். ஆனால் சிறிலங்கா அரசு ஏ9 பாதையை திறப்பதற்கு மறுத்து விட்ட நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து விட்டது.

இப் பேச்சுவார்த்தையில் உலக நாடுகளின் விருப்பங்கள் என்று எரிக் சொல்கைம் வெளியிட்டுள்ள சில கோட்பாடுகள் கவனிக்கத் தக்க விடயங்கள் ஆகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேச்சுக்கள் நடைபெற வேண்டும் என்றும், இதுவரை இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து இன மக்களும் திருப்திப்படும் வகையில் தீர்வு அமைய வேண்டும் என்றும், அவ்வாறான தீர்வு இலங்கைத்தீவின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் உட்பட்ட தீர்வாக இருக்க வேண்டும் என்றும் உலக நாடுகள் எதிர்பார்ப்பதாக எரிக் சொல்கைம் தெரிவித்தார். இதில் கடைசி இரண்டு விடயங்களும் எக் காரணம் கொண்டும் நடைமுறை சாத்தியமற்றவைகள் ஆகும்.

தமிழ் மக்கள் திருப்திப்படக்கூடிய தீர்வை சிங்களம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது. அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு சிங்களத்தின் சிந்தனையில் பாரிய மாற்றம் உருவாக வேண்டும். அப்படி ஒரு மாற்றம் உருவாவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் சிங்களத் தலைமைகளால் இன்றுவரை எடுக்கப்படவில்லை. ஆகவே அனைத்து இன மக்களும் திருப்திப்படும் வண்ணம் ஒரு தீர்வு இலங்கைத்தீவில் சாத்தியமற்ற ஒன்றாகும்.

கடைசிக் கோட்பாடான "ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு" என்கின்ற கோட்பாடு ஒரு பாரிய அத்துமீறல் ஆகும். தமிழினம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திர தனியரசு அமைப்பதற்கு போராடி வருகிறது. ஆயினும் கடந்த 5 வருடங்களாக பேச்சுவார்த்தை மேசையில் தமிழீழத்தை வலியுறுத்தாது தமது நல்லெண்ணத்தை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆகவே சிறிலங்கா அரசும் பதிலுக்கு "ஐக்கிய இலங்கை" என்பதை அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு முன்னம் வலியுறுத்தாது இருப்பதே சரியாக இருக்கும். ஆனால் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் "ஐக்கிய இலங்கையை" வலியுறுத்துவதன் மூலம் ஒரு பகை நடவடிக்கையை மேற்கொள்கிறது என்றே கொள்ள வேண்டும். தற்பொழுது மேற்குலகமும் வெளிப்படையாக "ஐக்கிய இலங்கை, ஒருமைப்பாடு" என்று பேசுவது மிகவும் பக்கசார்பானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.

ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் தரப்பில் மேற்குலகின் இந்த "ஐக்கிய இலங்கை" கோட்பாடு குறித்து வெளிப்படையான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஊடகவியலாளர்கள் சுப.தமிழ்செல்வனிடம் இது குறித்து கேட்ட பொழுதும் அவர் நேரடியாக அதற்கு பதில் அளிக்கவில்லை. இவைகள் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் கலந்த சந்தேகங்களை உருவாக்கியது. ஆயினும் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த கடைசி நாள் சுப.தமிழ்செல்வன் ஊடகவியலாளர்களை சந்தித்த பொழுது ஒரு வாசகத்தின் மூலம் அந்த சந்தேகங்களை போக்கினார். ஊடகவியலாளர் சந்திப்பை வழமைக்கு மாறாக "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற தாரக மந்திரத்துடன் சுப.தமிழ்செல்வன் முடித்து வைத்தார். எரிக்சொல்கைம் "ஐக்கிய இலங்கை" என்று ஆரம்பித்து வைத்த பேச்சுவார்த்தை "தமிழீழமே புலிகளின் தாகம்" என்று முடிந்தது.

இப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததற்கு காரணம் ஏ9 பாதையை சிறிலங்கா அரசு திறக்க மறுத்ததே ஆகும். இப் பாதையை திறக்க மறுப்பதன் மூலம் யாழ் குடாவில் இருந்த மற்றைய பகுதிகளுக்கும், மற்றைய பகுதிகளில் இருந்து யாழ் குடாவிற்கும் மக்கள் சுதந்திரமாக சென்று வருவதற்கு உள்ள உரிமையை சிறிலங்கா அரசு மறுக்கிறது. முக்கியமாக யாழ் குடாவிற்கு அனைத்துவிதமான பொருட்கள் செல்வதையும் தடுத்து அறிவிக்கப்படாத ஒரு பொருளாதாரத்தடையை சிறிலங்கா அரசு விதித்துள்ளது.

இது சில பழைய சம்பவங்களை நினைவு படுத்துகிறது. ஈழப் போர் மூன்றும் ஏறக்குறைய இவ்வாறான ஒரு பிரச்சனையில் இருந்தே ஆரம்பம் ஆனது. அன்று விடுதலைப்புலிகள் சந்திரிகா அரசை பூநகரி இராணுவ முகாமை அகற்றி சங்குப்பிட்டிப் பாதையை திறந்து விடக் கோரினர். அப்பொழுது யாழ் குடாவையும் வன்னியையும் இணைக்கின்ற பாதைகளாக ஆனையிறவும், புநகரியும் இருந்தன. ஆனையிறவு சிறிலங்கா இராணுவத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்ததால், விடுதலைப்புலிகள் புலிகள் பூநகரிப் பாதையை மாற்று யோசனையாக முன்வைத்தனர். இதற்காக பேச்சுவார்த்தைகளையும், கடிதப் பரிமாற்றங்களையும் நடத்தினர். சந்திரிகா அரசுக்கு இரு தடவைகள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் சந்திரிகா அரசு விடுதலைப்புலிகளின் கோரிக்கையை உதாசீனம் செய்தது. கடைசியில் ஈழப் போர் 3 ஆரம்பமானது.

தற்பொழுது நடக்கின்ற பேச்சுவார்த்தையும் மீண்டும் ஒரு பாதைப் பிரச்சனையில் வந்து முட்டி நிற்கிறது. இது சிறிலங்கா அரசு வரலாற்றில் இருந்து எந்தவிதமான படிப்பினைகளையும் கற்றுக்கொள்வதில்லை என்பதையும், அவ்வாறு கற்றுக்கொள்கிற படிப்பினைகளையும் விரைவில் மறந்துவிடுகிறது என்பதையும் காட்டுகிறது. சிறிலங்கா அரசு இன்று யாழ்குடாவிற்கான வாசலாக உள்ள முகமாலையை மூடி உள்ளது. அன்று யாழ் குடாவிற்கான வாசல்களாக இருந்த ஆனையிறவும் பூநகரியும் இன்று யாருடைய கைகளில் இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சிறிலங்கா அரசு ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Friday, October 27, 2006

தாலி! (குறுங்கதை)

கி-பி 17ஆம் நூற்றாண்டு - தமிழ்நாட்டில் ஒரு கிராமம்

அந்த மூன்று பெண்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். பின்னால் சிலர் குதிரைகளில் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களின் முகங்களில் தாடி வளர்ந்திருந்தது. தமிழ் மண்ணிற்கு அந்நியமான ஆடைகளையும் மொழியையும் கொண்டிருந்தார்கள். கைகளில் வாளோடும் கண்களில் காமவெறியோடும் அவர்கள் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டிருந்தார்கள். குதிரைகளின் வேகத்திற்கு அந்தப் பெண்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் அந்தப் பெண்களை பிடித்து விட்டார்கள். ஒரு பெண் அழுது கொண்டு ஏதோ சொல்ல அவளை மட்டும் விட்டுவிட்டு மற்ற இரண்டு பெண்களையும் தூக்கிக் கொண்டு போனார்கள்.

இதை எல்லாம் தொலைவில் இருந்து இரண்டு அழகான விழிகள் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தது. அந்த விழிகளுக்கு சொந்தக்காரியான அவளும் அந்தக் கிராமத்தில்தான் இருக்கிறாள். அவளுக்கு தெரிந்து இத்தோடு பதினைந்து பெண்களை கொண்டு போய்விட்டார்கள். ஆட்சி அவர்களின் கையில் இருப்பதால் அவர்களை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவள் கலக்கத்தோடும் சிந்தனைகளோடும் வீடு நோக்கி நடந்தாள்.

அவள் கணவன் வெளியூரில் நடக்கும் ஏறுதழுவல் விளையாட்டிற்கு சென்றிருந்தான். அவன் அந்த ஊரிலேயே பெரும் வீரனாகத் திகழ்ந்தான். சிலம்பம், மல்யுத்தம் என்று அனைத்தும் கற்றிருந்தான். அவளும் ஒரு வீரனையே திருமணம் செய்வேன் என்று காத்திருந்து காளை அடக்கிய அவனை திருமணம் செய்து கொண்டாள். அவனைப் பற்றியும் அவன் வீரம் பற்றியும் அவள் மிகவும் பெருமை கொண்டிந்தாள். இந்தக் கிராமத்தில் உள்ள மற்ற ஆண்களும் என் கணவனைப் போல் வீரர்களாக இருந்தால், இந்த வெறியர்களை விரட்டி அடித்து விடலாம் என்று மற்றைய பெண்களுடன் பேசுவாள். அதில் அவள் கணவன் குறித்த பெருமையோடு அந்த வெறியர்களை துரத்தி அடிக்க வேண்டும் என்ற ஏக்கமும் சேர்ந்திருக்கும்.

இதுவரை காதால் மட்டும் கேள்விப்பட்டிருந்த அவர்களின் வெறியாட்டத்தை இப்பொழுது கண்ணாலும் கண்டு விட்டாள். அவளால் இருப்புக் கொள்ள முடியவில்லை. விட்டுக்குள்ளே அங்கும் இங்கும் நடந்தபடி அடிக்கடி வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் அவளது கணவன் குதிரையில் கம்பீரமாக வருவது தெரிந்தது.

கணவன் வீட்டுக்குள் வந்ததும்தான் கவனித்தாள். கையில் ஒரு வினோதமான பொருள் ஒன்றை வைத்திருந்தான். மஞ்சள் நிறத்தில் மாட்டுக்கு கட்டுகின்ற கயிறின் பருமனோடு அது இருந்தது. தூக்குக் கயிறும் அப்படித்தான் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறாள்.

"இது என்ன?" ஆச்சரியமாக அவனிடம் கேட்டாள். "இது தாலி" அவன் சொன்னான். அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. "தாலி இப்படியா இருக்கும்? தாலி மிகவும் மெல்லிதான நூலில் அல்லவா இருக்கும்?" அவள் திகைப்பு நீங்காதவளாக கேட்டாள். "தாலியை முன்பு பனை ஓலையிலும் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்படி தாலியை நான் இதுவரை கண்டது இல்லையே?" அவளின் கேள்வி தொடர்ந்தது. "இல்லை, இனிமேல் இதுதான் தாலி, அது மட்டும் அல்ல, இனிமேல் இதை எல்லோரும் பார்க்கும் வண்ணம் தினமும் அணிந்திருக்க வேண்டும், களற்றவே கூடாது" அவன் சொல்லிக் கொண்டே போனான். அவளுக்கு எதுவுமே புரியவில்லை. தாலி என்பது திருமணத்தின் போது ஒரு அடையாளமாக கட்டப்படுகின்ற ஒன்று என்று அவளுக்கு தெரியும். ஆனால் அதை எல்லோருக்கும் தெரிவது போன்று எந்த நேரமும் அணிந்து கொண்டு இருப்பதில்லை. அதனால் அவன் சொல்வது எல்லாம் அவளுக்கு புரியாத புதிராக இருந்தது. "பெண்களை காப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு, அவர்கள் திருமணமான பெண்களை ஒன்றும் செய்ய மாட்டார்களாம், அதனால் எங்களுக்குள் பேசி அருமையான வழி ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறோம், அதுதான் இந்தத் தாலி, இதுதான் இனி பெண்களுக்கு வேலி" அவன் பெருமையாக அந்தப் புதுவகையான தாலிக்கான காரணதை சொன்னான்.

அடுத்த நாள் அவளைக் காணவில்லை. அவன் எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. சில மாதங்கள் கழித்து வேறொரு ஊருக்கு சென்று வந்தவர்கள் செய்தி சொன்னார்கள். அங்கு ஒரு தாடிக்காரனுடன் அவள் சிரித்துப் பேசியபடி ஒன்றாக குதிரையில் போவதை அவர்கள் கண்டார்களாம்.

Thursday, October 26, 2006

சிறுவர் பாதுகாப்புச் சட்டம்!

தமிழீழ நீதித்துறை தமிழீழத்தில் வாழும் சிறுவர்களின் உரிமைகளை பேணும் பொருட்டு "சிறுவர் பாதுகாப்பு சட்டத்தை" உருவாக்கி வெளியிட்டுள்ளது. 83 பிரிவுகளை அடக்கிய இச் சட்டமூலத்தில் சிறுவர் தொழில், சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள், சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற மிக முக்கிய விடயங்கள் அடங்குகின்றன. இச் சட்டத்தை தமிழீழ நீதித்துறை உருவாக்கி இருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என கொள்ளத்தக்கது. தமிழீழத்தின் இறமையை இச் சட்டம் காத்து நிற்கிறது.

இச் சட்டம் படையில் சிறுவர்களை சேர்ப்பதற்கான வயது எல்லைகளை நிர்ணயிக்கிறது. 17 வயதிற்கு உட்பட்டவர்களை படையில் சேர்த்துக் கொள்வதும், 18 வயதிற்கு உட்பட்டவர்களை சண்டைகளில் ஈடுபடுத்துவதும் இச் சட்டத்தின்படி குற்றங்கள் ஆகின்றன.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது சிறிலங்கா அரசும், மேற்குலக நாடுகளும் வைக்கின்ற முக்கிய குற்றச் சாட்டாக சிறுவர்களை படையில் சேர்க்கின்ற விவகாரம் இருந்து வந்தது. விடுதலைப்புலிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதற்காக சிறுவர்களை படையில் சேர்க்கின்ற விவகாரத்தை பேச்சுவார்த்தை நிரலில் சேர்க்க வேண்டும் என்று சிறிலங்கா அரசு வலியுறுத்தி வந்தது. கடந்த ஜேனீவா பேச்சுவார்த்தையில் இது குறித்து விடுதலைப்புலிகளிடம் உறுதிமொழியும் கேட்கப்பட்டது.

ஒரு விடுதலைப்போராட்டம் என்பது மக்கள் போராட்டம் ஆகும். அதில் அனைத்து மக்களும் மத, சாதி, பால், வயது வேறுபாடு இன்றி கலந்து கொள்வார்கள். இதுநாள் வரை உலகத்தில் நடந்த அனைத்து விடுதலைப் போராட்டங்களும் அப்படித்தான் நடந்தன. இதற்கு மேற்குலக நாடுகளும் விதிவிலக்கல்ல. தமிழீழத் தேசியத் தலைவர் கூட 14 வயதிலேயே போராட்டத்தில் இணைந்து விட்டதாக சொல்வார்கள். அடக்கப்படுகின்ற, அழிக்கப்படுகின்ற இனம் அரசியல் தெளிவு பெறுவதற்கு 18 வயது அவசியம் இல்லை. ஆனால் இன்று உலகின் பார்வை மாறி வருகிறது. 18 வயதிற்கு உட்பட்டவர்கள் சண்டைகளில் ஈடுபடுவது பற்றி மாறுபாடான கருத்துக்கள் வலுப் பெறுகின்றன.

இதற்கு இணங்க விடுதலைப்புலிகளும் கடந்த சில வருடங்களாகவே 17 வயதிற்கு உட்பட்டவர்களை படையில் சேர்ப்பதில்லை. 18 வயதிற்கு உட்பட்டவர்களை சண்டைகளில் ஈடுபடுத்துவதும் இல்லை. ஆயினும் ஆண்டுக்கு இரு தடவையாவது ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர் உரிமை மையங்கள் விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதாக புள்ளி விபரங்களை வெளியிடும். யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவும் அறிக்கைகள் வெளியிடும். இதில் பெரும்பாலானவை பொய்யான தகவல்களாக இருக்கும். அல்லது சிறுவர்கள் வயதை மறைத்து விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்ததாக இருக்கும்.

விடுதலைப்புலிகளும் முடிந்தவரை வயது குறைந்தவர்களை இனம் கண்டு மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தாலும், விடுதலை போராட்டத்திற்கு எதிரான சக்திகள் இவ் விவகாரத்தை தூக்கிப் பிடித்தபடிதான் இருக்கின்றன.

இப்பொழுது அவைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் "சிறுவர் பாதுகாப்புச் சட்டம்" வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் தமிழீழத்தில் சிறுவர்களை படையில் சேர்ப்பது என்பது ஒரு சட்டப் பிரச்சனை. 17 வயதிற்கு உட்பட்ட ஒருவர் படையில் சேர்க்கப்பட்டால், கண்காணிப்புக் குழுவிடமோ, வேறு சர்வதேச நிறுவனங்களிடமோ முறையிட வேண்டிய அவசியம் இல்லை. அருகில் உள்ள தமிழீழ காவல்துறையிடம் முறையிட்டு நீதி பெற முடியும்.

ஆகவே சிறிலங்கா அரசோ, கண்காணிப்புக்குழுவோ, மேற்குலகமோ "சிறுவர் பாதுகாப்பு" குறித்து விடுதலைப்புலிகளிடம் பேசத் தேவையில்லை. எம்மிடம் போதுமான அளவு அதற்கான சட்டங்கள் இருக்கின்றன.

Saturday, October 21, 2006

தீபா"வலி"யும் தமிழரும்!

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.

ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் "தீபாவளி வாழ்த்துக்கள்" சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.

ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின் மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.

இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது.

ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.

சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். புராணக் கதைகளை ஆரய்ந்த பாரதத்தை சேர்ந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்களும், மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அசுரர்கள் என்று திராவிடர்களையே குறிப்பிடப்படுகிறது என்று கூறி உள்ளார்கள்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள். கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன.

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது.

எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள். இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலைவீரனின் நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ கொண்டாட வைத்து விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்.

இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை. எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை. கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை. இப்படி யாராக இருந்தாலும், ஒரு இறப்பு கொண்டாடப்படுவதில்லை.

ஆனால் நாம் எமக்காக உயிரை ஈந்த ஒரு மன்னனின் நாளை தீபாவளி என்று மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். இந்த நிலை மாறும் நாளே உண்மையில் தமிழினம் விடுதலை அடைந்த நாளாக இருக்கும். -

வி.சபேசன் (20.10.06)

(குறிப்பு: இக் கட்டுரை சென்ற ஆண்டு தீபாவளியை ஒட்டி எழுதப்பட்ட "தீபாவளி-தமிழனை அழித்த நாள்" என்ற கட்டுரையின் இன்னொரு வடிவமே)

Friday, October 20, 2006

தலை நிமிர்ந்து பார்க்காதவள்! (குறுங்கதை)

அவளை இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். அவள் புலம்பெயர் நாடொன்றில் வாழ்பவள். அழகானவள். தாய் தந்தை சொல்லை தட்டாதவள். நவநாகரீக உடைகள் அணிவது அவளுக்கு பிடிக்காது. தமிழ் கலாச்சாரப்படி வாழ்பவள் என்று அவளைப் பற்றி மற்றவர்கள் பேசுவார்கள். இதில் அவளுக்கு பெருமையும் கூட.

அவளுக்கு ஒரு நண்பி இருக்கிறாள். இல்லை, இருந்தாள். அந்த நண்பி 16 வயதில் இருந்தே வேற்று இனத்தவன் ஒருவனைக் காதலித்தாள். அவனுடன் நகரம் முழுவதும் சுற்றினாள். 18 வயது ஆனவுடன் அவனுடன் ஒன்றாக வாழவும் சென்று விட்டாள். கடந்த 5 வருடமாக திருமணம் செய்யாமல் அவனுடனேயே வாழ்ந்த வருகிறாள். அந்த நண்பியைப் பற்றி அந்த நகரத்தில் உள்ளவர்கள் பலவாறு பேசுவார்கள். அந்த நண்பி அணிகின்ற உடைகள் பற்றியும், துணைவனுடன் டிஸ்கோ செல்வது பற்றியும் பேசி பொழுது போக்குவார்கள்.

இதனால் அந்த நண்பியுடன் அவள் பேசுவதை அவளது பேற்றோர்கள் தடை செய்து விட்டார்கள். தமது மகளும் "கெட்டுப்" போய் விடுவாள் என்ற அச்சம் அவர்களுக்கு.

இப்படி கட்டுப்பாடாக வளர்ந்த அவளை இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். வந்தவன் அழகாக இருந்தான். அவனைப் பார்த்தவுடன் அவளுக்குப் பிடித்து விட்டது. அவளுடைய குடும்பம் அவனுடைய குடும்பத்துடன் வழமையான வார்த்தைகளையும் உணவுகளையும் பரிமாறிக் கொண்டது. தொடர்ந்து பேசி நல்ல நாள் பார்ப்போம் என்று சொல்லி அவர்கள் பிரிந்தார்கள். சில நாட்களில் உண்மையாகவே பிரிந்து விட்டார்கள். அவனுடைய குடும்பத்தின் பின்னணி பற்றி திடீரென வந்த ஒரு செய்தி அல்லது வதந்தி அவளுடைய தந்தையை யோசிக்க செய்தது. கடைசியில் அவன் வேண்டாம் என்று முடிவெடுக்கவும் வைத்தது.

அவளுடைய பெற்றோருக்கு அவள் ஓரே மகள் என்பதால் அவளுடைய திருமணத்தில் அவர்கள் மிகவும் கவனமாகவும் கண்டிப்பாகவும் இருந்தர்கள்.

அவளால் இப்பொழுது கவலைப்பட மட்டுமே முடிந்தது. இந்த சில நாட்களில் அவனை மனதுக்குள் அவள் பல முறை ரசித்திருக்கிறாள். அவனுடன் வாழ்வதை எண்ணிப் பார்த்திருக்கிறாள். அவனுடன் மாலை வேளைகளில் நதிக் கரையில் நடந்து போவதாக கனவு கண்டிருக்கிறாள். இன்னும் என்னென்னமோ கற்பனை செய்திருக்கிறாள். இப்பொழுது அந்தக் கற்பனைகள் வெறும் கற்பனைகள் ஆகி விட்டன.

ஆனால் இது அவளுக்கு முதற் தடவை அல்ல. இதற்கு முன்பும் நான்கு பேர் அவளை பெண் பார்த்திருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் ஒவ்வொரு விதத்தில் அழகாகவே இருந்தார்கள். புகைப்படம் பார்த்து அவளுக்கு பிடித்திருந்த பின்பே பெண் பார்க்கும் படலம் அரங்கேறுவதால், அவர்களையும் அவளுக்கு பிடித்தே இருந்தது. ஆனால் அவர்களுடன் அவள் நடத்திய கனவுலக வாழ்க்கையும் ஒவ்வொரு காரணங்களால் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இதில் ஒருவனுடன் எல்லாம் முற்றாகி தொலைபேசியில் அவனுடன் உரையாடுகின்ற அளவிற்கு வந்தது. ஆனால் அதுவும் சீதனப் பிரச்சனையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடக்கமால் போய் விட்டது. தற்பொழுது வந்தவன் ஐந்தாவது. அதுவும் குடும்பப் பின்னணி சரியில்லை என்று நிறுத்தப்பட்டு விட்டது.

பின்பு மீண்டும் புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. அவளுக்கு பிடித்தவர்களை பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. அவளுக்கும் பெற்றோருக்கும் பிடித்தவர்களை ஜாதகத்திற்கு பிடிக்கவில்லை. இப்படி புகைப்படங்களில் நிறையப் பேரை பார்த்து ஒருவாறு ஒன்று சரிவருகிறது.

அவளை மீண்டும் பெண் பார்க்க வருகிறார்கள். இப்பொழுது வந்தவனும் அழகாக இருக்கிறான். வந்தவனை அவளுக்கு பிடித்திருக்கிறது. அவளின் அம்மா அவனிடமும் அவனின் பெற்றோரிடமும் பெருமையாகச் சொல்கிறாள். "எங்கள் மகளை நாங்கள் மிகவும் கட்டுப்பாடாக வளர்த்திருக்கிறோம், இதுவரை எங்கள் மகள் ஒரு ஆணைக் கூட தலை நிமிர்ந்து பார்த்தது இல்லை...." அம்மா சொல்லிக் கொண்டே போகிறாள்.

Thursday, October 19, 2006

உதவி செய்யுங்கள்!

என்னுடைய இடுகைகளுக்கு மறுமொழியிடப்படுகின்ற போதும், தமிழ் மணத்தில் "அண்மையில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்" பகுதியில் வருவதில்லை. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள்!

கலைஞர் பற்றிய ஒரு பார்வை!

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி ஈழத் தமிழர்களிடம் இரு வேறு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரர் கலைஞர் மீது பெரும் பற்றும் நம்பிக்கையும் வைத்து அவரை ஒரு தமிழினத் தலைவர் என்ற வகையில் பார்க்க, மறு சாரர் அவரை வெறும் மூன்றாம் தர அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கின்றனர்.

இதில் கலைஞர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இவர்கள் கலைஞர் ஆட்சிக்கு வருகின்ற நேரங்களில் எல்லாம் தமிழினம் விடிவு பெற்று விட்டதாக துள்ளிக் குதித்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழ்வார்கள். இம் முறையும் வழமை போன்று "உலகத் தமிழினத் தலைவருக்கு" வாழ்த்துச் செய்திகள் அனுப்பி கலக்கி விட்டார்கள்.

ஆனால் தற்பொழுது கலைஞரை தமிழினத் தலைவர் என்று போற்றுபவர்களின் முகங்களில் கலைஞரே கரியைப் பூசி விட்டார். ஈழத்தில் நடக்கின்ற தமிழினப் படுகொலை குறித்து முறையிட சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை கலைஞர் சந்திக்க மறுத்தது மாத்திரம் அன்றி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பதையும் மறைமுகமாக தடுத்து விட்டார். ஆனால் இதற்குப் பிறகும் சில ஈழத் தமிழ் அமைப்புக்கள் கலைஞரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கும்படி மிகவும் பணிவாகவும் நயமாகவும் வேண்டுகோள்களை அனுப்பியபடி இருக்கின்றன. இப்பொழுதும் இவர்கள் கலைஞர் மீது நம்பிக்கை வைத்திருப்பது ஆச்சரியமான ஒன்று.

ஆனால் இவர்கள் நம்புகின்ற தமிழினத் தலைவரும், தமிழ் தேசியவாதியும் ஆன கலைஞர் தற்பொழுது இல்லை என்பதுதான் உண்மை. தனித் தமிழ்நாடும், பின்பு திராவிட நாடும் கேட்ட கழகத்தில், கட்சியில் இருந்த கலைஞர் இன்று முற்று முழுதாக இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டு விட்டார். இன்றைக்கு கலைஞர் தமிழ்நாட்டிற்கு சுயாட்சி வழங்குவது குறித்துக் கூட பேசத் தயார் இல்லை. இந்தக் கலைஞர் தமிழீழம் குறித்து பேசுவார் என்பது வெறும் கனவாகவே இருக்க முடியும்.

இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டுவிட்ட கலைஞர் இந்திய வெளியுறவுத்துறைக்கோ, அல்லது புலனாய்வுத்துறைக்கோ எதிராக ஒரு போதும் நடக்க மாட்டார்.

இதற்கு சில உதாரணங்களை சொல்ல முடியும்.

90 ஆம் ஆண்டில் பத்மநாபா, ராஜீவ்காந்தி அழிப்புக்கு முன்பு தமிழ்நாட்டிலே பழ.நெடுமாறன், சுபவீ போன்றவர்கள் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்திய இராணுவம் ஈழத்தில் நடத்திய படுகொலைகள் பற்றிய கண்காட்சி அது. அப்பொழுது தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் மீது தடை எதுவும் இருக்கவில்லை. கண்காட்சியும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள் பற்றியதுதான். ஆனால் ஆட்சியில் இருந்த கருணாநிதி அக் கண்காட்சியை தடை செய்தார். பழ.நெடுமாறன், சுபவீ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புகைப்படங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இக் கண்காட்சி இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு விரோதமானது என்று கலைஞர் இதற்கு விளக்கம் வேறு சொன்னார்.

பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் வேட்டை ஆடப்பட்டு வருகின்றனர். இதைக் கண்டித்தும் கச்சதீவை மீட்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் பல குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் கலைஞர் கச்சதீவு குறித்து ஜெயலலிதா அளவிற்கு கூட குரல் கொடுப்பது இல்லை. சிறிலங்கா கடற்படையினர் மீனவர்களை தாக்குகின்ற விவகாரமும், கச்சதீவு விவகாரமும் இந்திய வெளியுறவுத்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் என்பதால் கலைஞரின் குரல் இவ் விடயங்களில் மிகவும் ஈனமாக ஒலிக்கின்றது.

அதே போன்று தற்பொழுது தமிழ்நாட்டில் சில ஒட்டுக்குழுக்கள் செயற்படுவது கலைஞருக்கு தெரியாத விடயம் அல்ல. ஈழத்திலிருந்து அகதிகளாக ஓடி வருபவர்களில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்களா என்று கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தால் கூட மற்றவர்களிடம் இருந்து பிரித்து சிறப்பு முகாம்கள் எனப்படும் சிறைக்கூடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இப்படி கடுமையாக நடக்கின்ற கலைஞர் அரசு இந்த ஒட்டுக்குழுக்கள் விடயத்தில் பாராமுகமாகவே இருக்கிறது. அதற்கு காரணம் அவ் ஒட்டுக்குழுக்கள் விவகாரம் இந்திய புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்டது. தற்போதைய சிறிலங்கா மீதான இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஒரு அங்கம் இந்த ஒட்டுக் குழுக்கள்.

ஈழப் பிரச்சனையில் இந்திய அரசின் கொள்கைதான் மாநில அரசின் கொள்கையும் என்று கலைஞர் திரும்பத் திரும்ப சொல்லி வருவதும் இதன் ஒரு வெளிப்பாடே. இன்னொரு நாட்டில் நடக்கின்ற ஒரு விடுதலைப் போராட்டம் குறித்து இந்திய வெளியுறவுத் துறையே தனது கொள்கைகளை வகுத்துக் கொள்ளும். இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொண்ட ஒரு மாநில அரசு இக் கொள்கைகளுக்கு மாறாக தனிக் கொள்கைகளைக் கொண்டிருக்க முடியாது. இதையே கலைஞரும் சொல்கிறார்.

இவ்வாறு இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்ற கலைஞர் ஈழத் தமிழர்களின் விடிவுக்காக குரல் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

இவைகளை விட கலைஞர் ஈழத் தமிழர்கள் விடயத்தில் பாராமுகமாக நடப்பதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. அது அவருடைய பதவி சம்பந்தப்பட்டது. முதல்வர் ஆவதற்கும், தொடர்ந்து முதல்வராக இருப்பதற்கும், தனக்குப்பின் தனது மகன் ஸ்டாலின் முதல்வராக வருவதற்கும் அனைத்து விதமான "ராஜதந்திர" வழிகளையும் கையாளக் கூடியவர் கலைஞர்.

அறிஞர் அண்ணாவிற்கு பிறகு கலைஞர் முதன்முறையாக முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் அறிஞர் அண்ணாவிற்கு பிறகு நாவலர் நெடுஞ்செழியனே முதல்வராக வருவார் என்றே அப்பொழுது பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. அறிஞர் அண்ணாவிற்கு அடுத்த தலைவராகவும் நாவலர் நெடுஞ்செழியனே இருந்தார். அறிஞர் அண்ணா மறைந்ததும் அப்பொழுது இடைக்கால அரசின் முதல்வராக நெடுஞ்செழியன் பதவியேற்றார். ஆனால் சில நாட்களில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று கலைஞர் முதல்வரானார். இந்த சில நாட்களுக்குள் நடந்த மாற்றங்கள் குறித்து பலரும் பலவிதமாக சொல்வார்கள். நாவலர் நெடுஞ்செழியன் பெரிதும் வருத்தமுற்று கலைஞரைக் கண்டித்து அறிக்கை விட்டார். இரு வருடங்கள் அமைச்சரவையில் சேராதும் இருந்தார். அறிஞர் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்று அனைவரிடமும் இருந்த நாவலர் நெடுஞ்செழியனால் சாகும் வரை இரண்டாம் இடத்திலேயே இருக்க முடிந்தது.

எம்ஜிஆர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று கலைஞருக்கு போட்டியாக வளர்ச்சி கண்ட பொழுது, எம்ஜிஆரை கட்சியில் இருந்தும் மக்கள் மத்தியில் இருந்தும் ஓரங்கட்டுவதற்கு கலைஞர் பல வழிகளில் முயன்றார். எம்ஜிஆருக்கு மறைமுகமாக பல தொல்லைகளை கொடுக்கத் தொடங்கினார். இதை உணர்ந்து கொண்ட எம்ஜிஆரும் ஒரு பொதுக்கூட்டத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவது போன்று பேசி திமுகவில் இருந்து தன்னை வெளியேற்றச் செய்தார். அதன் பிறகு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதல்வராக இருந்தார். இறக்கும் வரை தோற்கடிக்கப்படாது முதல்வராக இருந்து சாதனை படைத்தார்.

எம்ஜிஆருக்குப் பிறகு திமுகவில் கலைஞருக்கு போட்டியாக வந்தவர் வைகோ. கலைஞருக்கு மட்டும் அல்ல. கலைஞருடைய வாரிசான ஸ்டாலினுக்கும் போட்டியாக வைகோ உருவெடுத்தார். கடைசியில் கொலைப் பழி சுமத்தப்பட்டு வைகோவும் வெளியேற்றப்பட்டார்.

திமுகவில் இருந்து சிவாஜிகணேசன் வெளியேறிதும் கலைஞரின் கைங்கர்யமே என்ற ஒரு கருத்தும் சிலர் மத்தியில் உண்டு.

இப்படி தனது கட்சியிலும் வெளியிலும் தன்னை மீறி யாரும் வரக் கூடாது என்பதில் கலைஞர் மிகவும் கவனமாக இருப்பார். 1969ஆம் ஆண்டில் கலைஞர் முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியதில் இருந்து இன்று வரை தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதிலும், ஆட்சி கவிழாமல் காப்பதிலும், கட்சிக்குள் எதிரிகளை வளரவிடாது தடுப்பதிலுமே பெரும்பாலும் கவனம் செலுத்தி வருகிறார். கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கொள்கையில் உறுதியும் துடிப்பும் கொண்ட கலைஞர் அதிகாரத்துக்கு வந்தவுடன் காணாமல் போய்விட்டார்.

கலைஞர் முதன் முறையாக முதல்வரான பொழுது புதுடெல்லியில் பதட்டம் சூழ்ந்து கொண்டது. ஒரு தீவிரவாதியான கலைஞரை எப்படி சமாளிப்பது என்று புதுடெல்லியில் உள்ளவர்கள் கலவரம் அடைந்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இருக்கவில்லை. கலைஞரோடு, அவரது குடும்பம், கட்சி என்று அனைவரையும் மிசா சட்டத்தில் சிறையில் அடைத்து கொடுமை செய்த இந்திராகாந்தியை சில ஆண்டுகள் கழித்து "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!" என்று கூட்டணி அமைத்துக் கொண்ட பொழுது, போராளி கருணாநிதி மறைந்து அரசியல்வாதி கருணாநிதி மட்டுமே எஞ்சியிருப்பது புலனாகியது.

இவ்வாறு அதிகாரத்தைக் காப்பதற்கு அனைத்தையும் செய்கின்ற கலைஞரின் ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. ஒரு முறை ஊழல் என்றும், மறுமுறை விடுதலைப்புலிகளின் ஊடுருவல் என்றும் காரணம் காட்டி கலைக்கப்பட்டது. இரண்டாம் முறை ஆட்சி கலைக்கப்பட்டதற்கும் விடுதலைப்புலிகளுக்கும் உண்மையில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை கலைஞர் நன்கு அறிந்திருந்த போதும், அதிகாரத்தின் மீது வைத்திருக்கும் ஆசை காரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து கலைஞர் தள்ளி நிற்கவே விரும்புகிறார்.

முதல்வர் பதவி எந்த நேரத்திலும் பறி போகக்கூடியது என்பது கலைஞருக்கு தெரியும். ஆனால் அவர் நிரந்தரம் என்று நம்பிய, மிகவும் விரும்பிய பதவி ஒன்று உண்டு. கலைஞருடைய தமிழாற்றலாலும், தமிழ் மொழியைக் காக்க ஆரம்ப காலங்களில் அவர் நடத்திய போராட்டிங்களினாலும் "உலகத் தமிழினத் தலைவர்" என்று அவரை அவரது தொண்டர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். கலைஞரை வாழ்த்துகின்ற யாரும் இப் பட்டத்தைக் குறிப்பிடாமல் வாழ்த்துவதில்லை. கலைஞர் தன்னை இப்படிக் குறிப்பிடுவதை மிகவும் ரசிக்கிறார் என்பதை வாழ்த்துபவர்கள் உணர்ந்து கொண்டதாலேயே, அவர்களும் அவ்வாறு வாழ்த்துவார்கள். ஆனால் இன்று "உலகத் தமிழினத் தலைவர்" என்ற பதவி அவரிடம் இல்லை. முன்பு கூட அதற்கான தகுதி அவரிடம் இருந்ததில்லை. "தமிழினத்தைக் காப்பாற்றுங்கள்" என்று கலைஞரிடம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிலையில் கலைஞர் இருக்கிறார் என்பது, அவர் தலைவரும், அல்ல தமிழரும் அல்ல என்று சொல்லத் தூண்டுகிறது. " தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைப்பதற்கு தொடர்ந்து போராடி வரும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களே "உலகத் தமிழினத் தலைவர்" என்று அழைக்கப்படுவதற்கு முற்று முழுதாக தகுதியானவர் என்பதை இன்று உலகத் தமிழினம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஏற்கனவே விடுதலைப்புலிகள் எம்ஜிஆருக்கு முன்னுரிமை கொடுத்தது குறித்த கோபம் கலைஞருக்கு உண்டு. தற்பொழுது பட்டம் பறி போய்விட்ட கடுப்பும் சேர்ந்து விட்டது. கலைஞருடை குணவியல்புகளை ஆராய்கின்ற பொழுது, அவர் தமிழீழ விடுதலைப் போரட்டத்தின் வெற்றி குறித்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவாரா என்பது கூட கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Wednesday, October 18, 2006

வீரப்பனின் இரண்டாம் ஆண்டு நினைவு!

இன்று வீரப்பனின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம். பின்வரும் கட்டுரை வீரப்பனின் ஓராண்டு நினைவில் எழுதப்பட்டது:

ஒகேனக்கல் என்பது தமிழ்நாட்டின் ஒரு எல்லைப் பகுதி. தமிழர்களுக்கு சொந்தமானது. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பிரதேசம். அதற்கு அப்பால் கர்நாடகம் உள்ளது. இப்பொழுது திடீரென்று ஓகேனக்கல் பகுதி தன்னுடையது என்று கர்நாடகம் சொந்த கொண்டாட ஆரம்பித்துள்ளது. கன்னட அதிகாரிகளும் காவல்துறையும் அங்கே ஆக்கிரமிப்பு செய்துவிட்டன. கையாலாகத தமிழ்நாடு அரசும் மற்றைய கட்சிகளும் கையை பிசைந்தபடி உள்ளன. இப்பொழுது மத்திய அரசின் ஆய்வுக்குழு வந்து ஓகேனக்கல் பகுதி யாருக்கு சொந்தம் என்று ஆய்வு செய்யப் போகிறதாம். இவ்வளவு காலமும் தமிழ்நாட்டின் பகுதியாகவிருந்த ஒரு இடத்தை உண்மையில் தமிழ்நாட்டுக்கு சொந்தமா என்று ஆய்வு செய்வதை தமிழர்கள் கைகட்டி ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு இழிவு நிலை.

ஆனால் சென்ற ஆண்டு 18.10.2004 வரை தமிழ் மண்ணை ஆக்கிரமிக்கும் எண்ணம் கன்னடர்களுக்கு வந்ததில்லை. ஒகேனக்கலும் அதை அண்டிய பகுதிகளும் வீரப்பன் என்கின்ற தமிழர் தன்னுடை ஆளுகையில் வைத்திருந்தார். அவருடைய பகுதிக்குள் கால் வைக்க யாருக்கும் துணிவு வரவில்லை. அந்த தமிழ் மண்ணிற்கு அவர் காவலிருந்தார்.

வீரப்பனை பலருக்கு சந்தனமரக் கடத்தல்காரராகவும் கொலைகாரராகவுமே தெரியும். ஆனால் அவருக்குள் நல்ல ஒரு இனப்பற்றும் கண்ணியமும் மிகுந்திருந்தது. அப்பாவி மக்களை வீரப்பன் துன்புறுத்தியதாக தகவல் இல்லை. அவர் அவரது பகுதியில் வாழ்நத மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக இருந்தார். அந்த மக்கள் இன்றும் வீரப்பன் மீது மிகவும் அன்பு வைத்திருக்கிறார்கள். முதலில் அரசியல்வாதிகளால் சந்தனமரக்கடத்தல்காரராக ஆக்கப்பட்ட வீரப்பன் காலவோட்டத்தில் ஒரு தமிழ் போராளியாக மாற்றம் பெற்றார். கர்நாடகத்திலோ அல்லது ஈழத்திலோ தமிழர்கள் துன்புறுத்தப்படுவதை கேள்விப்படும் போதெல்லாம் வீரப்பன் மிகவும் கொதிப்புற்று காணப்படுவார். கன்னட நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்கள் தமிழர்களுக்கு எதிரான கலவரத்தில் முன்னிலை வகிப்பவர்கள். கர்நாடக சட்டசபை உறுப்பினர் நாகப்பா தமிழர்களுக்கு எதிராக விசத்தை கக்குபவர். வீரப்பன் நடிகர் ராஜ்குமாரை கடத்தி வந்து தமிழ்நாட்டிற்கு கவேரி நீரை வழங்குதல், பெங்களுரில் திருவள்ளுவர் சிலையை திறக்கச் செய்தல், அப்பாவி தமிழ் கைதிகளை விடுவித்தல் போன்ற தமிழ்நாட்டின் கோரிக்கைகளை வலியுறித்தினார். கடைசியில் கர்நாடகத்தின் வாய்மூல உறுதி மொழிகளை ஏற்றும் கர்நாடகத்தில் உள்ள அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்கிற நல்லெண்ணத்திலும் ராஜ்குமாரை விடுவித்தார். பின்பு நாகப்பாவை கடத்தி வந்தும் தமிழர்களின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். பின்பு காவல்துறையினர் நாகப்பாவை விடுவிக்க மேற்கொண்ட முயற்சியில் நாகப்பா கொல்லப்பட்டார்.

வீரப்பன் பல முறை தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக கன்னட வெறியர்களுக்கு தண்டனை வழங்கியவர். கர்நாடக எல்லைக் கிராமங்களில் "தமிழர்களை தாக்கினால் வீரப்பன் வந்து சுட்டு விடுவான்" என்கின்ற பயம் கன்னடர்களுக்கு நன்றாகவே இருந்தது.

காலம் பிந்தியாயினும் தமிழ் போராளியாக மாறிய வீரப்பன் 18.10.2004 அன்று சதி செய்து கொல்லப்படும் வரை அவ்வாறே வாழ்ந்தார்.

இன்று வீரப்பன் இல்லை. ஒகேனக்கல் மண் பறிபோகப்போகிறது. ஒரு விடுதலை போராட்டத்திற்கு சிறந்த தளமாக விளங்கக்கூடிய வீரப்பனின் காட்டுப்பகுதியும், அந்த காட்டுப்பகுதியை அக்குவேறு ஆணிவேறாக அறிந்த இனப் பற்றுள்ள வீரப்பனும் இல்லாததன் வலி விரைவில் உணரப்படலாம். -

வி.சபேசன் (19.10.2005)

Friday, September 22, 2006

களங்கப்படுத்தப்படும் விருதுகள்!

உலகின் மிக உயர்ந்த விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. 1901ஆம் ஆண்டில் இருந்து நோபல் பரிசு பல விதமான துறைகளுக்கு வழங்கப்படுகிறது. சமாதானத்திற்கான நோபல் பரிசு பெறுபவர்கள் மிக உயர்ந்த மதிப்பு மிக்க மனிதர்களாக கொள்ளப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் அன்றிலிருந்து இன்று வரை நோபல் பரிசு வழங்கப்படுவதில் பலவிதமான அரசியல் தலையீடுகள் இருக்கின்றன. சமாதானம், அமைதி போன்ற வார்த்தைகளை கேட்பவர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருகின்ற பெயர் மகாத்மா காந்தி. ஆனால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இறந்த பிறகும் பலருக்கு விருதுகள் வழங்கப்படுவது உண்டு. ஆனால் மகாத்மா காந்தி இறந்த பிறகு கூட நோபல் பரிசு வழங்கப்படவில்லை. நோபல் பரிசு வழங்குகின்ற கமிட்டிக்கு அதற்கான சிந்தனையே வரவில்லை.ஆனால் 1993இல் வில்லியம் கிளார்க் என்பவருக்கும் 1994இல் இசாக் ரபின் என்பவருக்கும் சமாதானத்திற்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. வில்லியம் கிளார்க் அன்றைய தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதி. நீண்ட காலம் கறுப்பின மக்களை அடக்கி ஒடுக்கி வந்த ஒரு மனிதர். அப்பாற்கைற் என்னும் கொடிய அடக்குமுறைக்கு பொறுப்பானவர். பல அப்பாவி கறுப்பின மக்களின் சாவுகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர். இப்படிப்பட்ட வில்லியம் கிளார்க் 27 ஆண்டுகள் தன்னுடைய இனத்திற்காக இருட்டுச் சிறையில் வாடிய நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து சமாதானத்திற்கான நோபல் பரிசை 1993 ஆண்டு பெற்றார்.இசாக் ரபின் அன்றைய இஸ்ரேலிய பிரதமர். பாலஸ்தீன மக்கள் மீது இராணுவ அடக்குமுறையை ஏவியவர். ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் சாவுக்கு காரணம் ஆனவர். இவர் 1994ஆம் ஆண்டு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசீர் அராபத்துடன் இணைந்து சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றுக் கொண்டார்.இதில் வேடிக்கை என்னவென்றால் சமாதான நோபல் பரிசு பெற்ற யாசீர் அரபாத் இல்லாமல் போனால்தான் இஸ்ரேலில் சமாதானம் வரும் என்று அமெரிக்கா சில ஆண்டுகள் கழித்துச் சொன்னது. இவைகளை விட பெரும் வேடிக்கை ஒன்று 1987இல் நடக்க இருந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கியதற்காக ஜெ.ஆர் ஜெயவர்த்தனவிற்கும் ராஜீவ்காந்திக்கும் சமாதான நோபல் பரிசு கிடைக்கும் என்று செய்திகள் பரவின. நல்ல வேளையாக அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு நோபல் பரிசு உட்பட சர்வதேச மதிப்பு மிக்கதாக கருதப்படுகின்ற விருதுகள் பெரும்பான்மையான மற்றைய விருதுகளைப் போன்று சில மறைமுகக் காரணங்களுக்காக கொடுக்கப்படுகின்றவை ஆகி விட்டன. இந்தக் காரணங்கள் இவ் விருதுகளை களங்கப்படுத்தியும் விட்டன.கடைசியாக யுனெஸ்கோவின் மன்ஜித் சிங் விருது களங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விருது சமாதானத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் கொடுக்கப்படுகின்ற விருதாகும். இம் முறை இவ் விருது சிறிலங்கா அரசின் கைக்கூலியும், ஒட்டுக்குழுக்களின் ஆலோசகரும், தமிழர் விடுதலைக் கூட்டணியை ஜனநாயகத்திற்கு விரோதமான வழியில் கைப்பற்றி இருப்பவருமான வீரசிங்கம் ஆனந்த சங்கரிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து புலம்பெயர்ந்து வழும் தமிழ் மக்கள் இலத்திரனியல் கையெழுத்து வேட்டையில் இறங்கி இருக்கிறார்கள். அதிலே பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழ் இனத்தால் நிராகரிக்கப்பட்டவரும் அரச பயங்கரவாததிற்கு துணை போகின்றவருமான வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு சமாதான விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளமையானது எமக்கு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி போன்றவைகள் ஆனந்தசங்கரிக்கு சிங்கள இனவாதக் கட்சிகளால் பலமுறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளதன் பின்னணியை யுனெஸ்கோ நிறுவனம் நடுநிலையோடு ஆரயத் தவறி உள்ளதாக நாம் கருதுகிறோம்.சிறிலங்காவின் சமாதானச் சூழ்நிலையை இல்லாது ஒழிப்பதற்கு தீய சக்திகளால் பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாதி கருணா “தமது கூட்டணிக்கு தலைமை தாங்குவதற்கு ஆனந்த சங்கரி பொருத்தமானவர்” என்று முன்மொழிந்துள்ளதையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.அகிம்சைவாதி அன்னை பூபதியையும், ஈழத்து காந்தி எனப் போற்றப்படும் தியாகி தீலிபனையும் பல இடங்களில் பல முறை கொச்சைப்படுத்தியவருக்கு மகாத்மா காந்தியின் நினைவாக விருது கொடுப்பது பெரும் முரண்பாடு ஆகும்.ஆனந்த சங்கரி தமிழ் மக்கள் மீது பயங்கரவாதம் புரியும் ஓட்டுக்குழுக்களின் ஆலோசகராக செயற்பட்டு வருகிறார். அத்துடன் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவும் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். மிக அண்மைய உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தாலும், இணைத் தலைமை நாடுகளினாலும், ஐநா சபையாலும் கண்டிக்கப்பட்ட செஞ்சோலை படுகொலைiயு ஆனந்த சங்கரி கண்டிக்கத் தவறி இருந்தார். அது மட்டுமன்றி செஞ்சோலை படுகொலையை நியாயப்படுத்திய சிங்கள அரசின் கருத்துக்களையே ஆனந்த சங்கரியும் வெளியிட்டிருந்தார். ஆனந்த சங்கரி தலைமை வகிக்கின்ற கட்சியின் இணையத் தளத்தில் ஒட்டுக் குழுக்களிற்கு ஆதரவான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அக் குழுக்களின் இணையத் தளங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன.ஆனந்த சங்கரி அரச பயங்கரவாதத்திற்கும், ஒட்டுக் குழுக்களிற்கும் ஆதரவு அளிப்பதை சகிப்புத்தன்மையுடன் எதிர்கொள்ளும் தமிழ்மக்களே உண்மையான சகிப்புத்தன்மை மிக்கவர்கள்யுனெஸ்கோ நிறுவனம் ஆனந்த சங்கரிக்கு மதன் ஜீத் சிங் விருதை அளிப்பதானது ஒட்டுமொத்த தமிழ் இனத்தை அவமதிப்பதுடன், இதற்கு முன்பு இவ் விருதைப் பெற்றவர்களையும் அவமதித்து மதன் ஜீத் சிங் விருதிற்கும் பெரும் களங்கத்தையும் உருவாக்குகிறது.
இவ்வாறு ஆனந்த சங்கரிக்கு சமாதானத்திற்கான யுனெஸ்கோ விருதை வழங்குவதை எதிர்த்து தமிழ் மக்கள் தமது கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்.ஆனந்த சங்கரிக்கு இவ் விருதுடன் ஏறக்குறை ஒரு கோடி ருபாய்கள் வழங்கப்பட இருக்கிறது. தான் இதுவரை செய்து வந்த பணிகளால் நிறைய பணம் செலவாகி உள்ளதாகவும், அதனால் இப் பணம் தனக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஆனந்த சங்கரி பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உண்மையில் ஆனந்த சங்கரி அரசியல் ரீதியாக வெகு வெகு குறைவான பணத்தையே செலவு செய்திருக்கிறார். சில ருபாய்கள் செலவு செய்து பேனாவும் கடுதாசியும் வாங்கி அவ்வப் போது தேசியத் தலைவருக்கு கடிதம் எழுதுவார். இதை விட ஆனந்த சங்கரி வேறு எதுவும் செய்யவில்லை. மற்றையபடி அரசின் செலவிலேயே வெளிநாடுகளுக்கு சென்று தனது எஜமானர்களுக்கான பிரச்சாரத்தை மேற்கொள்வார். ஆகவே ஆனந்த சங்கரிக்கு எப்படி பணம் செலவானது என்பது ஒரு மர்மமான விடயமே. அந்த மர்மத்தை மற்றவர்கள் அராய்வதால், இதில் அதை தவிர்த்துக் கொள்வோம். ஆனந்த சங்கரி சில ருபாய்கள் செலவு செய்து தற்பொழுது ஒரு கோடி ருபாய்களை சம்பாதித்திருக்கிறார். உண்மையில் ஆனந்த சங்கரி கெட்டிக்காரர்தான். ஆனால் இந்த நேரத்தில் ஆனந்த சங்கரி சிறிது எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கொழும்பில் பணக்காரர்களை கடத்தி பணம் பறித்துக் கொண்டிருக்கின்ற கருணா குழு பழக்கதோசத்தில் ஆனந்த சங்கரியையும் கடத்திக் கொண்டு போய்விடப் போகிறது.சீரியசாக ஆரம்பித்த கட்டுரை ஆனந்த சங்கரியின் பெயர் வந்தவுடன் எங்கேயோ போய்விட்டது. மீண்டும் விடயத்திற்கு வருகிறேன். இவ்வாறான சர்வதேச விருதுகள் தகுதி இல்லாதவர்களுக்கு அரசியற் காரணங்களாலேயே வழங்கப்படுகிறது. ஆனந்த சங்கரிக்கும் அவ்வாறே வழங்கப்பட்டது.இதற்கு முன்பு இம் மாதம் 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையை வாசித்தவர்கள் ஒரு முக்கியமான பாரதூரமான விடயத்தைக் கவனித்திருப்பார்கள். அந்த அறிக்கையில் "பிரபாகரனும் கருணாவும் சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தி இருந்தது. அந்த அறிக்கையின் மற்றைய இடங்களில் விடுதலைப்புலிகள் என்று குறிப்பிட்ட ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் "பிரபாகரனும் கருணாவும்" என்று குறிப்பிட்டிருந்தது.கருணா சிறிலங்கா அரசின் பாதுகாப்பிலும் தயவிலும் காலம் தள்ளுவதை ஐரோப்பிய ஒன்றியம் அறியாமல் இல்லை. ஆயினும் கருணாவிற்கு தேசியத் தலைவருடன் சம அந்தஸ்து கொடுப்பது போன்று ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அத்துடன் கருணாவை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி வேறு கூறுகிறது. நாளை கருணா-அரசு பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்கிறோம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.இவ்வாறு மேற்குலகம் கருணாவை முன்னிறுத்த முனைவதற்கும், ஆனந்த சங்கரிக்கு விருது கொடுப்பதற்கும் பின்னணி ஒன்றாகவே இருக்க முடியும். இதன் மூலம் மேற்குலகம் விடுதலைப்புலிகளை எச்சரிக்க விரும்புகிறது. எங்கள் சொற்படி ஆடாவிட்டால் புதிய மாற்றுத் தலைமைகளை உருவாக்குவோம் என்று சொல்கிறது. ஆனால் மேற்குலகின் இந்த நாடகம் தமிழ் மக்கள் முன் பலிக்கப் போவதில்லை. இது போன்ற முயற்சிகளை பல முறை முறியடித்துள்ள விடுதலைப்புலிகளும் தமிழ் மக்களும் இம் முறையும் மேற்குலகம் மேற்கொள்கின்ற முயற்சிகளை முறியடிப்பார்கள்.

Wednesday, July 12, 2006

"சிவாஜி" திரைப்படத்தை புறக்கணிக்க நேரிடும்!

இரு நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் திருமாவளவன் தலைமையில் ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும்படி ரஜனி, கமல் உட்பட அனைத்து திரையுலகினருக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இதே போன்ற ஒரு அழைப்பை இயக்குனர் தங்கர்பச்சானும் விடுத்திருந்தார். இயக்குனர் தங்கர்பச்சான் ஆனந்தவிகடனுக்கு வழங்கிய செவ்வியில் இந்த அழைப்பை விடுத்திருந்தார். இந்த செவ்வியின் பொழுது தங்கர்பச்சான் சில காட்டமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். "இருபது கோடி, முப்பது கோடின்னு போட்டுப் படமெடுக்கிறீங்களே... யாரை நம்பி? இந்தியாவுக்கு வெளியே உலகமெல்லாம் வாழ்கிற ஈழத் தமிழர்கள் உருவாக்கியிருக்கிற சந்தையை நம்பித்தானே? அப்போ அவங்க துயரத்திலும் நீங்க பங்கெடுக்கணுமா, இல்லையா?" என்றும் "ஒரு படம் முடிச்சுட்டு, துட்டை அள்ளிட்டு, ஆயில் மசாஜ் எடுக்கவும், இமயமலைக்கும், ஓய்வெடுக்க வெளிநாட்டுக்கும் போனா நாங்க எங்கே போறது? மனச்சாட்சி வேண்டாமா? நம்ம மக்களுக்கு ஒரு துன்பம் வரும் போது அதுக்கான பொறுப்பு வேண்டாமா? இந்தப் பிரச்னையைக் கண்டுக்காம இருக்கோமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி வேண்டாமா?" என்றும் மிகக் காட்டமாகவும் அதே வேளை நியாயமாகவும் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
தற்பொழுது இதை வேலை வெட்டியற்ற சில ரஜனி ரசிகர்கள் பிரச்சனையாக்க முயற்சிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜனிகாந்தை விமர்சித்ததற்காக தங்கர்பச்சான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இந்த ரசிகர்கள் குரல் எழுப்பி உள்ளார்கள். இவர்கள் விளம்பரத்துக்காகவே இவ்வாறு தங்கர்பச்சானை கண்டிப்பதாக தெரிகிறது. அத்துடன் தற்பொழுது இவ்வாறு குரல் எழுப்புகின்ற ரசிகர்கள் மிகக் குறைவானவர்களாகவும், பெரும்பான்மையான ரசிகர்கள் இதில் ஆர்வம் காட்டாதவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் வரும் நாட்களில் "தங்கர்பச்சான் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்கின்ற கோசம் மற்றைய ரஜனி ரசிகர்கள் மத்தியிலும் பரவலாம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இவ்வாறான ஒரு நிலையில் சில விடயங்களை நாம் சொல்லி வைக்க விரும்புகிறோம். இயக்குனர் தங்கர்பச்சானின் கருத்துக்கள் மிகச் சரியானவை. கேள்விகள் நியாயம் மிக்கவை. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழ் நாட்டு நடிகனுக்கும் உண்டு என்பதை சுட்டிக் காட்டிய இயக்குனர் தங்கர்பச்சான் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. வெளிப்படையாக அழைத்தும் ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணியில் கலந்து கொள்ளாத நடிகர்கள்தான் உண்மையில் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆகவே தேவையில்லாமல் பிரச்சனையை கிளப்புகின்ற ரசிகர்கள் மீது நடிகர் ரஜனிகாந்த் நடவடிக்கை எடுப்பது நல்லது. ரஜனி ரசிகர்களின் அர்த்தமற்ற நடவடிக்கைகள் நடிகர் ரஜனிகாந்திற்குத்தான் தீங்காக அமையும். தமிழினத்திற்காக குரல் கொடுக்கின்ற தங்கர்பச்சானுக்கு துணையாக தமிழர்கள் நிற்பார்கள். தங்கர்பச்சானுக்கு எதிராக ரஜனி ரசிகர்கள் போராட்டம் நடத்துவதையோ அல்லது அவ்வாறான ஒரு போராட்டத்தை நடிகர் ரஜனிகாந்த் கைகட்டி வேடிக்கை பார்ப்பதையோ உணர்வுள்ள தமிழர்கள் பொறுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். இதை நடிகர் ரஜனிகாந்தும் அவரது ரசிகர்களும் அலட்சியம் செய்தால், நடிகர் ரஜனிகாந்த நடித்து வெளிவர இருக்கும் "சிவாஜி" திரைப்படத்தை தமிழர்கள் புறக்கணிக்க நேரிடும்.

Sunday, June 18, 2006

கலைஞர் மீண்டும் தமிழினத்திற்கு துரோகம்!

கலைஞரின் அரசு ஈழத் தமிழர்களுக்கு செய்து கொண்டிருக்கும் ஒரு துரோகச் செயல் குறித்து அதிர்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கருணா குழுவினர் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கு கலைஞரின் அரசு அனுமதி அளித்துள்ளது என்பதே அந்த அதிர்ச்சிகரமான தகவல் ஆகும். இந்தத் தகவலை மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கருணா குழு தமிழகத்தில் ஆட்சேர்ப்பதற்கு ஈழத் தமிழரில் அக்கறை கொண்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கலைஞரின் அரசு அதை அலட்சியம் செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
கருணா குழுவுக்கான ஆட்சேர்ப்பு தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாம்களிலேயே நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சேர்ப்பு கருணா குழுவைச் சேர்ந்த பரந்தன்ராஜன் தலைமையில் நடைபெற்று வருகிறது. விடுதலைப்புலிகளின் தாக்குதல்களினால் கருணா குழுவிற்கு பெரும் ஆட்தட்டுப்பாடு நேர்ந்துள்ளது. ஈழத்தில் ஆட்களை திரட்ட முடியாத நிலையில் உள்ள கருணா குழு, பரந்தன்ராஜன் மூலம் தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழர்களை தமது குழுவில் சேர்க்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளது. ஈழத்தில் இருந்து படகுகள் மூலம் அகதிகளாக வருகின்ற தமிழ் மக்கள் மண்டப முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். அனைத்தையும் இழந்து நிற்கின்ற இவர்கள் தமிழ்நாட்டிலும் சிறைக் கைதிகள் போன்று மண்டப முகாம்களில் வைக்கப்படுவதினால் கடும் விரக்திக்கு ஆளாகிறார்கள். இவ்வாறு விரக்தியின் உச்சத்தில் நிற்பவர்களையே பரந்தன்ராஜன் குழுவினர் அணுகுகின்றனர். கருணா குழுவில் இணைவதற்கு சம்மதித்தால் உடனடியாக 10.000 ருபாய்கள் தருவதாகவும் ஈழத்திற்கு சென்றதும் மேலும் அதிகமான பணம் தருவதாகவும் ஆசை காட்டி வருகிறார்கள்.
இந்த பரந்தன்ராஜன் ஒரு வருடத்திற்கு முன்பு தமிழகத்தில் இருந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தான். இதை அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு சிலர் கொண்டு வந்ததை அடுத்து, பரந்தன்ராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அப்பொழுது இந்திய உளவுத்துறையாகிய "றோ" தலையிட்டு பரந்தன்ராஜனை விடுதலை செய்யும் படி தமிழக அரசுக்கு அழுத்தம் வழங்கியது. கடைசியில் தமிழகத்திற்குள் இனி காலடி வைக்க மாட்டேன் என்று எழுத்து மூலமான உத்தரவாதத்தை பரந்தன்ராஜனிடம் வாங்கிக் கொண்டு தமிழக அரசு பரந்தன்ராஜனை விடுவித்தது. இதன் பிறகு சிறிலங்காவிற்கு திரும்பிய பரந்தன்ராஜன் சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து பல அப்பாவித் தமிழ் மக்களை கொலை செய்து வந்தான். தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மீண்டும் இந்தியா திரும்பிய பரந்தன்ராஜன் தமிழகம் செல்லாது கர்நாடகத்தில் உள்ள பெங்களுரில் தங்கியிருந்தான். தற்பொழுது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பரந்தன்ராஜன் தமிழகத்தில் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளான்.
ஈழத்தில் தமிழ் மக்களை கொலை செய்வதற்கும், மீண்டும் யுத்தத்தை ஆரம்பிப்பதற்கான சதி நடவடிக்கைகளுக்கும் கருணா குழுவையே சிறிலங்கா அரசு பயன்படுத்தி வருகிறது. இதை கலைஞர் தலைமையிலான தமிழக அரசு நன்கு அறிந்தும், பரந்தன்ராஜனை தமிழகத்தில் கருணா குழுவிற்கு ஆட்களை சேர்ப்பதற்கு அனுமதித்துள்ளது. "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்", "தமிழ் கட்டாய பாடம்" போன்று நல்ல திட்டங்களைப் போட்டு சரியான பாதையில் நடை போடத் தொடங்கிய கலைஞரின் அரசு, சில நாட்களுக்கு முன்புதான் பெற்றோல் விலை உயர்வின் மூலம் தமிழக மக்களின் அதிருப்தியை சம்பாதித்தது. தற்பொழுது ஈழத் தமிழர்களின் தலையிலும் இடியை இறக்கி உள்ளது. ஜெயலலிதா தலைமையிலான முன்னைய அரசு செய்ததற்கு நேர் எதிராக செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக, ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு கலைஞர் அரசு துணை போவதானது, தமிழ் மக்களுக்கு செய்யக் கூடிய மிகப் பெரிய துரோகம் ஆகும். இதை உலகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

Saturday, June 03, 2006

பெரிய மனிதர்!

அந்தப் பெரிய மனிதர் ஆட்டு மந்தைகளுக்கு நடுவில் உட்கார்ந்திருந்தார். சாந்தமான அவரது முகம் ஒளி பொருந்தியதாக இருந்தது. அதை தெய்வீக ஒளி என்று அங்குள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள். அவரது போதனைகள் அந்தப் பகுதியில் அவரை மிகவும் பிரபலப்படுத்தியிருந்தன. ஆலோசனை சொல்வதோடு தீர்ப்பு வழங்குபவராகக் கூட அந்தப் பெரிய மனிதர் இருந்தார். அவரையும் அவரது சித்தாந்தங்களையும் எதிர்க்கின்ற மனிதர்களும் அங்கு இருந்தார்கள்.
திடீரென்று ஆடுகள் பரபரப்பாகின. அங்கும் இங்கும் ஓடின. பெரிய மனிதர் நிமிர்ந்து பார்த்தார். ஒரு கூட்டம் அவரை நோக்கி ஆவேசமாக வந்து கொண்டிருந்தது. பெரிய மனிதர் எவ்வித சலனமும் இன்றி, அவரை நோக்கி வருகின்ற கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். வந்து கொண்டிருக்கின்றவர்கள் ஆண்களாக இருந்தார்கள். பெரும்பாலும் இளைஞர்களாக வேறு இருந்தார்கள். கூட்டம் நெருங்கி வந்த பொழுதுதான் பெரிய மனிதர் அதைக் கவனித்தார். அவர்கள் ஒரு இளம் பெண்ணை இழுத்து வந்து கொண்டிருந்தார்கள்.
அந்தப் பெண்ணை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார். அவர் மட்டும் அல்ல, அவளை ஊரே அறிந்திருந்தது. உலகின் மிகப் பழமையான தொழிலை செய்கின்ற பாவப்பட்ட பெண் அவள். கசக்கப்பட்டதால் தேகமும் மனமும் வாடிப் போயிருந்தாள். அவளின் கண்களில் பீதி தெரிந்தது. அவளை உருவாக்கிய சமூகம் இப்பொழுது அவளை அழிப்பதற்காக இழுத்து வந்திருந்தது.
பெரிய மனிதர் தன் முன் நடுங்கியபடி நிற்கும் பெண்ணையும் கூட்டத்தினரையும் மாறி மாறிப் பார்த்தார். அவரது பார்வையில் ஆச்சரியமும் கேள்விகளும் தெரிந்தன. "இவள் பாவத் தொழிலை செய்பவள், இவளைத் தண்டிக்க வேண்டும்". கூட்டத்தினர் அவளை இழுத்து வந்த காரணத்தை உரத்த குரலில் சொன்னார்கள். அந்தக் குரலில் ஒருவிதமான அதிகாரத் தொனி இருப்பதை பெரிய மனிதர் கவனித்தார். அந்தப் பெண் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்துக்கு இடம் இல்லை என்பதை சொல்கின்ற தொனி அது. அவளை எப்படி தண்டிக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறார்களே தவிர, தண்டிக்க வேண்டுமா, இல்லையா என்று கேட்பதற்கு அவர்கள் வரவில்லை.
"இவளின் தலையை வெட்ட வேண்டும்" என்றார் ஒருவர்.
"இவளை உயிரோடு கொளுத்த வேண்டும்" என்றார் மற்றொருவர்.
"இவளை பட்டினி போட்டுக் கொல்ல வேண்டும்" என்றார் வேறொருவர்.
"இவளை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்" என்றார் இன்னொருவர்.
அந்த இடத்தில் நிறைய கற்கள் இருப்பதைக் கண்ட கூட்டம் "கல்லால் எறிந்து கொல்வோம்" என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. சிலர் கற்களை கையில் எடுத்தும் விட்டார்கள். பெரிய மனிதர் அவர்களை அமைதியாகப் பார்த்தார். "இவளிடம் செல்லாத ஒருவன், பாவம் செய்யாத ஒருவன் இவள் மீது கல்லை எறியட்டும்". பெரிய மனிதரின் குரல் கம்பீரமாக கணீர் என்று ஒலித்தது. இதை எதிர்பாராத கூட்டம் திடுக்கிட்டுப் போனது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பெரிய மனிதரின் கூற்றில் இருந்த நியாயம் அவர்களை வெட்கப்படச் செய்தது. அனைவரும் தலை குனிந்தார்கள். ஒரு நீண்ட நிசப்தம் நிலவியது.
ஒரு இளைஞன் கூட்டத்தில் இருந்து மெதுவாக வெளியே வந்தான். அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்தான். கூட்டம் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தது. இளைஞன் பெரிய மனிதரிடம் வந்தான். கல்லை அவர் முன் வைத்தான். "இவளிடம் செல்லாத நீங்கள், பாவம் செய்யாத நீங்கள் இவள் மீது கல்லை எறியுங்கள்". இளைஞனின் குரல் இன்னும் கம்பீரமாக ஒலித்தது.
இப்பொழுது பெரிய மனிதர் தலை குனிந்தார்.
- வி.சபேசன்

Tuesday, May 30, 2006

"தி இராவணன் கோட்" (The Ravana Code)

அயோத்தி மன்னன் இராமன் மாலை நேரம் ஆகியும் அந்தப்புரம் போகாமல், தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. இப்படி நடக்கும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அக்னி தேவன் மீது அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு. இராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்து மகிழ்ச்சியாகத்தான் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தான். இன்று தலையில் இடியை இறக்குகின்ற மாதிரி அந்த செய்தியை பணிப்பெண் வந்து சொன்ன பிறகு இராமனுக்கு உலகமே இருண்டு விட்டது. அக்னி தேவன் தன்னை இப்படி ஏமாற்றுவான் என்று இராமன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. "அவள் அக்னி தேவனையும் மயக்கி இருப்பாள்". இராமன் சந்தேகப்படவில்லை. உறுதியாகவே நினைத்துக் கொண்டான். இனி எப்படி வெளியே தலை காட்டுவது? இதற்கா இத்தனை இழப்புக்களும்? சனம் கை கொட்டிச் சிரிக்குமே? தம்பிமார்கள் கேட்டால் என்ன சொல்வது? சீதையின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் அனுமன் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இராமனின் மனதில் பல சிந்தனைகள் ஓடி அவனை மேலும் குழப்பின. "இருவரையும் கொன்று விடுவோமா?" இராமன் யோசித்தான். "வேண்டாம், கொன்று விட்டால் விசயம் எல்லோருக்கும் தெரிந்து விடும்". தனக்குத்தானே பேசிக் கொண்டான் ராமன். "கொல்வது என்றால் பணிப்பெண்ணையும் அல்லவா கொல்ல வேண்டும்". சிந்திக்க தலையே வெடித்துவிடும் போலிருந்தது இராமனுக்கு. அப்பொழுது அந்தப் பணிப்பெண் நடுங்கியபடி இராமனின் அருகில் மெதுவாக வந்தாள். "மாகாராஜா! என்னைக் எதுவும் செய்து விடாதீர்கள்! நான் இதை யாரிடமும் வெளியில் சொல்ல மாட்டேன்! சத்தியம் மகாராஜா! என்னை நம்புங்கள்!" கதறி அழுதாள் பணிப்பெண். "சத்தம் போடாதே! யாராவது வந்து விடப் போகிறார்கள்" இராமன் பணிப்பெண்ணின் வாயைப் பொத்தினான். "நான் தண்டிப்பது என்றால் சீதையை அல்லவா தண்டிக்க வேண்டும்! நீ பயப்படாமல் போ!" வெறுப்போடும், இயலாமையோடும் சொன்னான் இராமன். அந்த அழகான பணிப்பெண் கொஞ்சம் நம்பிக்கையோடும், கொஞ்சம் சந்தேகத்தோடும் திரும்பி நடந்தாள். திடீரென்று இராமனுக்கு ஒரு எண்ணம். "பழிக்குப் பழியாக நானும் இந்தப் பணிப்பெண்ணுடன்......". ஒரு முடிவோடு பணிப்பெண்ணை நோக்கிச் சென்ற இராமன் சட்டென்று நின்றான். "வேண்டாம், என் தந்தை போன்று நானும் இருக்க வேண்டாம்". அந்த நேரத்தில் இராமனுக்கு ஏற்பட்ட நல்ல சிந்தனை பணிப்பெண்ணைக் காத்தது. ஆனால் இப்பொழுது சீதையால் ஏற்பட்டிருக்கும் விபரீதத்திற்கு என்ன செய்வது என்று இராமனுக்கு புரியவில்லை. சீதை கர்ப்பமாக இருக்கின்றாள் என்று பணிப்பெண் ஓடி வந்து சொன்ன பொழுது இராமன் பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஓடி வந்த செய்தி சொன்ன அதே பணிப்பெண் பிரசவமும் பார்த்தாள். அழகான குழந்தையும் பிறந்து விட்டது. ஆனால் இராமனின் மகிழ்ச்சி தொலைந்து விட்டது. "என்ன செய்யலாம்? கடுமையாக சிந்திக்கத் தொடங்கினான் இராமன். சில நிமிடங்கள் கடுமையாக சிந்தித்த பிறகு அவனது மனதில் ஒரு திட்டம் உதித்தது. "விசயம் வெளியே தெரிவதற்கு முன்பு சீதையையும் குழந்தையையும் காட்டுக்கு அனுப்பிவிட வேண்டும்". முடிவு எடுத்து விட்டதால் சோகத்திலும் இராமனின் முகம் பிரகாசமாகியது. "ஒரு சலவைத் தொழிலாளி சீதையைப் பற்றி தவறாகப் பேசினான், அதனால் காட்டுக்கு அனுப்பிவிட்டேன் என்று எல்லோரிடமும் சொல்லிவிட வேண்டியதுதான்". இத்தனை துன்பத்திற்கும் குழப்பத்திற்கும் மத்தியிலும் ஒரு சூத்திரனை குற்றவாளியாக்குகின்ற திட்டத்தை தன்னால் போட முடிந்ததை நினைக்க இராமனுக்கு பெருமையாகவும் இருந்தது. காட்டுக்கு அனுப்புவதற்கு முன்பு ஒரு முறை சீதையை பார்க்க நினைத்தான். அந்தப்புரத்தை நோக்கி சத்தம் போடாமல் நடந்தான். சீதைக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. அருகில் குழந்தை விழித்தபடி படுத்திருந்தது. கிட்ட நெருங்கினான் இராமன். குழந்தை தனது பத்து தலைகளாலும் இராமனை நிமிர்ந்து பார்த்து அழகாகச் சிரித்தது.
- வி.சபேசன் (22.05.06)

தடைகளும் பரப்புரைகளும்!

ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப்புலிகள் மீது தடை கொண்டு வரப்போவதாக செய்திகள் வருகின்றன. சில வேளைகளில் இக் கட்டுரை எழுதி முடிப்பதற்குள் தடை வந்திருக்கலாம். தடை வரும் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்லிவந்த எனக்கு இந்த செய்தி அதிர்ச்சியை தரவில்லை. மேற்குலக நாடுகளின் நலன்களே இதுவரை போடப்பட்ட தடைகளுக்கும், இனிமேல் போடப்போகின்ற தடைகளுக்கும் அடிப்படையாக இருக்கின்றன. மேற்குலகின் நலன்களும் தமிழீழத்தின் நலன்களும் ஒன்றுபடும் வரையோ அல்லது தமிழீழமானது வெல்லப்பட முடியாத ஒரு தேசியம் என்பதை மேற்குலகம் உணரும் வரையோ இந்தத் தடைகள் விலக்கப்படப் போவதில்லை.
ஆனால் இந்தத் தடைகள் குறித்து சில வாரங்களிற்கு முன்பு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களால் ஒரு கட்டுரை வரையப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மேற்கொள்கின்ற பரப்புரையின் பலவீனமே இந்தத் தடைகளுக்கு காரணம் என்னும் சாரப்பட அவரது கட்டுரை அமைந்திருந்தது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் எழுத்தாற்றல் காரணமாகவும், அவர் கொண்டிருக்கும் சமூக, இலக்கிய அந்தஸ்தின் காரணமாகவும், அவரது கட்டுரை ஊடகங்களில் பெரும் முக்கியத்துவம் பெற்றது. இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து ஒரு வானொலியும் அவரிடம் செவ்வி கண்டது. அதன் போதும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் புலம்பெயர் தமிழர்களின் பரப்புரையின் பலவீனமே தடைகளுக்கு முக்கிய காரணம் என்று தன்னுடைய கருத்தை வலியுறுத்திக் கூறினார். பேராசிரியரை செவ்வி கண்டவர் தடுமாறிப் போய் "பூனைக்கு மணி கட்டுவது யார்" என்று கேட்கின்ற அளவிற்கு பேராசிரியரின் கருத்துக்களின் தாக்கம் இருந்தது. செவ்வி கண்டவருக்கு "பூனை யார்? மணி யார்? கட்டுவது யார்?" என்பதில் தெளிவு இருக்கவில்லை என்பதும் அப்பட்டமாகத் தெரிந்தது.
ஆனால் பேராசிரியரின் பரப்புரை குறித்த கருத்தில் பாதி சரியாகவும் பாதி தவறாகவும் இருக்கின்றது என்பதுதான் உண்மை. புலம்பெயர் நாடுகளில் பரப்புரை மிகவும் பலவீனமாக இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால் அதுதான் தடைகளுக்கு காரணம் என்று சொல்வதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பேராசிரியரின் இந்தத் தவறான கருத்து பிரச்சனையை திசை திருப்பி விட்டதிலேயே போய் முடிந்திருக்கிறது. பேராசிரியர் தடைகளையும் பரப்புரைகளையும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுத்தியது தவறு என்பதை தெளிவுபடுத்த சில விடயங்களைக் கூறுகிறேன்.
1960களிலும் 70களிலும் மேற்குலக நாடுகளில் பாலஸ்தீனியர்கள் செய்யாத பரப்புரைகளே இல்லை. மிகப் பெரும் அரசியல்வாதிகள், ராஜதந்திரிகள் என்று அனைவருடனும் தொடர்புகளை வைத்திருந்தார்கள். அந்தந்த நாட்டு மொழிகளில் பத்திரிகைகளை வெளியிட்டார்கள். வெளிப்படையான அலுவலகங்களை வைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒரு பேச்சாளர் இருந்தார். அவரால் அந்த நாட்டின் பிரதமர் வரை பேச முடிந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளின் மக்கள் மத்தியில் இஸ்ரேலை விட பாலஸ்தீனியர்கள் மீதே ஆதரவு மிகுந்திருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அனுதாபம் யூதர்கள் மீது இருந்தாலும், பாலஸ்தீனியர்களின் பரப்புரைகள் அந்த அனுதாபத்தை உடைத்தது. ஆனால் இவ்வாறு பரப்புரைகளில் மிகவும் பலமாக இருந்த அவர்களால், தமது பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மீதான தடைகளை தடுக்க முடியவில்லை. (வெளிப்படையாக இயங்கிய பாலஸ்தீன இயக்கத்தின் பேச்சாளர்கள் பலர் இஸ்ரேலின் புலனாய்வுப்பிரிவான மொஸாட்டால் கொல்லப்பட்ட பரிதாபம்தான் நிகழ்ந்தது) பாலஸ்தீனியர்களின் பக்கம் இருந்த நியாயத்தை மேற்குலகம் நன்றாக விளங்கிக் கொண்டிருந்தாலும், தமது நலன் கருதி அவர்கள் இஸ்ரேலின் பக்கம்தான் நின்றார்கள். பாலஸ்தீனியர்களுக்கு தடைகளைப் போட்டார்கள். பாலஸ்தீனியர்களின் பரப்புரைகள் மிகவும் பலமானவையாக இருந்தும், அவர்கள் அவர்களது சொந்த நாட்டில் பலவீனமாக இருப்பதால், இன்று அவர்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தைக்கூட மேற்குலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதே போன்று ஈராக் யுத்தத்தை எடுத்துக் கொள்வோம். ஈராக் யுத்தத்திற்கு எதிரான பரப்புரைகள் போன்று அண்மைக்காலத்தில் எந்த ஒரு பரபரப்புரையும் நிகழ்த்தப்படவில்லை. சொந்த நாட்டு மக்கள் விரும்பாத போது கூட மேற்குலகம் ஈராக் மீது படை எடுத்தது. ஈராக் மீது படை எடுப்பை மேற்கொண்ட நாடுகளின் முக்கிய அரசியல்வாதிகள் பலர் ஈராக் மீதான ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமது நாடுகளில் பரபரப்புரைகளை மேற்கொண்டார்கள். இன்றுவரை அவர்களின் பரபரப்புரைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஈராக் யுத்தத்தில் பங்கு கொண்ட நாடுகள் பல தமது ஈராக் பற்றிய அன்றைய முடிவு தவறானவை என்று இப்பொழுது ஏற்றுக்கொண்டாலும், தமது படைகளை தொடர்ந்து ஈராக்கில் வைத்திருக்கின்றன.
பரபரப்புரைகள் மிகவும் பலமானவையாக இருந்தும் பாலஸ்தீன இயக்கத்தின் மீது போடப்பட்ட தடைகளும், ஈராக் மீதான ஆக்கிரமிப்பும், மேற்குலகின் நலன்களுக்கு முன்னால் எந்தவிதமான பரபரப்புரைகளும் செல்லுபடியற்றவையாகி விடும் என்பதையே காட்டுகின்றன. அதே போன்று பரபரப்புரைகளில் மிகவும் பலவீனமாக இருந்த சில நாடுகள் விடுதலை பெற்றும் இருக்கின்றன.
கிழக்கு திமோர் என்கின்ற நாடு விடுதலை அடையும் வரை, உலகில் பெரும்பாலானவர்களுக்கு அவ்வாறான ஒரு நாடு இருப்பதே தெரியாது. எவ்வாறு முன்பு ஈராக் சிறிய நாடாகிய குவைத்தை ஆக்கிரமித்ததோ, அதே போன்று இந்தோனேசியா 1975இல் கிழக்குதிமோர் என்ற சிறிய நாட்டை ஆக்கிரமித்து தன்னுடைய ஒரு மாகாணமாக இணைத்துக் கொண்டது. இந்த ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐநா சபை ஒரு தீர்மானம் கொண்டு வந்ததோடு நின்று விட்டது. கிழக்கு தீமோர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தோனேசிய இராணுவம் கொடுரூமாக நசுக்கியது. உலகின் மிகப் பெரிய இனப்படுகோலை கிழக்கு திமோரில் நடந்தது. அன்றைய நிலையில் மேற்குலக நாடுகளுக்கு இந்தோனேசியாவின் நட்பு அவசியமாக இருந்தது. பின்பு 25 வருடங்களுக்குப் பிறகு மேற்குலக நாடுகளின் நலன்களில் மாற்றம் ஏற்பட்ட பொழுது, மேற்குலக நாடுகள் தலையிட்டு கிழக்கு திமோருக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தன. இத்தனைக்கும் கிழக்கு திமோர் மக்கள் மேற்கொண்ட பரப்புரை மிகப் பலவீனமாகவே இருந்தது.
இதே போன்று எரித்திரியா என்கின்ற நாடும் விடுதலை பெறும்வரை அறியப்படாத ஒரு நாடாக இருந்தது. எரித்திரியாவின் வரலாறு தமிழீழத்தின் வரலாற்றோடு ஓரளவு ஒற்றுமைகளைக் கொண்டது. காலனித்துவ நாடுகளால் எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டு, எதியோப்பியாவால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, பின்பு தமது பலத்தின் மூலம் விடுதலை பெற்று ஒரு நாடாக எரித்திரியா விளங்குகிறது. "எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி" என்கின்ற விடுதலை இயரிரிக்கம் எரித்திரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது. எரித்திரிய விடுதலைப் போராளிகளுக்கு ஆரம்பத்தில் அன்றைய சோவியத் யூனியன் உதவிகளை வழங்கியது. பின்பு எதியோப்பியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு எரித்திரியப் போராளிகளுக்கு எதிராகப் போர் தொடுத்தது. ஆயினும் போராளிகளை அவர்களால் வெல்ல முடியவில்லை. சோவியத் யூனியனின் இராணுவம் வெளியேறியது. இதற்கிடையில் எரித்திரியாவிலும் பல இயக்கங்கள் உருவாகி, அவர்கள் ஆடு, மாடுகளை கொள்ளையிட்டு துரோகச் செயல்களிலும் ஈடுபட்டு, பின்பு "எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி" இயக்கத்தினரால் அடக்கப்பட்டது ஒரு தனிக் கதை. 1991 ஆண்டு "எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி" எரித்திரியாவின் அனைத்துப் பகுதிகளையும் மீட்டெடுத்தது. தமது இராணுவ பலத்தின் மூலம் எதியோப்பியாவை பணியச் செய்த எரித்திரியா விடுதலை அடைந்தது. எரித்திரியர்களும் பரப்புரைகளில் பலவீனமாகவே இருந்தார்கள்.
பரப்புரைகள் பலவீனமாக இருந்தும், மேற்குலகின் நலன்களில் மாற்றம் ஏற்பட்ட பொழுது கிழக்கு திமோரும், வெல்லப்பட முடியாத இராணுவ பலத்தின் மூலம் எரித்திரியாவும் விடுதலை பெற்றன.
மேற்குலகின் நலன்கள் தமிழீழத்திற்கு சார்பானதாக மாறும் என்பதற்கான அறிகுறிகள் தற்போதைக்கு தென்படவில்லை. ஆனால் தமிழீழம் என்பது எவராலும் வெல்லப்பட முடியாத ஒரு தேசியம் என்பதை உலகுக்கு உணர்த்த முடியும். தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளும் மீட்டெடுக்கப்படுகின்ற பொழுது, ஆயிரம் தடைகள் இருந்தாலும் தமிழீழம் விடுதலை பெற்றே தீரும். ஆகவே தமிழீழத்தின் மீது போடப்படுகின்ற தடைகளாக இருக்கட்டும், அல்லது நாளை கிடைக்கவிருக்கும் சர்வதேச அங்கீகாரமாக இருக்கட்டும், இவைகள் பரப்புரைகளில் மாத்திரம் தங்கியிருப்பவைகள் அல்ல. பரப்புரைகளின் பலவீனம் காரணமாகவே தடைகள் வருவதாகக் கூறுவது, அதுவும் பேராசிரியர் சிவத்தம்பி போன்ற கல்விமான்கள் கூறுவது, விடயத்தை திசை திருப்புவதற்கு சமனாகும். விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தால் மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட மாமனிதர் சிவராம் அவர்கள் ("தாரகி") பேராசிரியர் சிவத்தம்பி அவர்களிடம் அரசியலை விடுத்து இலக்கியத்தை மட்டும் எழுதும்படி அடிக்கடி வலியுறுத்தி வந்தார். பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் அரசியற் கட்டுரைகள் குறித்து மாமனிதர் சிவராம் கொண்டிருந்த கருத்தை வலுப்படுத்துவது போன்று, பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் பரப்புரை சம்பந்தமான கட்டுரையும் செவ்வியும் அமைந்து விட்டன.
ஆனால் இவைகளை இங்கு படிப்பவர்கள் பரப்புரைகள் தேவையில்லை என்று நான் சொல்வதாக கருத வேண்டாம். பரப்புரைகளின் மூலம் தடைகளை தடுக்க முடியாது என்பதை நிறுவும் பொருட்டே இவ்வளவும் இங்கு கூறுப்பட்டது. எப்படி தமிழீழத்திற்கு ஆதரவாக சிறிலங்காவில் செய்யப்படுகின்ற பரப்புரைகள் சிறிலங்கா அரசின் நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதோ, அதே போன்று தமது நலன்களுக்காக தடைகளைப் போடுகின்ற மேற்குலகின் நிலையிலும் எமது பரப்புரைகள் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை தெளிவுபடுத்துவதே இக் கட்டுரையின் நோக்கம்.
அதே வேளை பரப்புரைகள் நிச்சயமாகத் தேவை என்பதை மிகவும் அழுத்தமாக கூறி வைக்க விரும்புகிறேன். முக்கியமாக தடைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து எமது பணிகளை செய்வதற்கு பரப்புரைகள் தேவை. பரப்புரைகள் மூலம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் தமிழீழத்திற்கு பயனுள்ள பல வேலைத் திட்டங்களை செய்ய முடியும். இது போன்ற பரப்புரைகள் (பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறிய "லொபி") ஒரு சில நாடுகளில் மட்டும்தான் நடைபெறுகின்றன. உதாரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலிய தொலைக்காட்சி ஒன்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழு இயங்குவதை அம்பலப்படுத்தியது. இது தமிழர்களின் "லொபி" இல்லாமல் நடந்திருக்க முடியாது. இதே தொலைக்காட்சி சில நாட்களின் பின்பு தமிழர்களுக்கு எதிரான செய்தியையும் ஒளிபரப்பியது. இதற்கு காரணமாக அவுஸ்ரேலியாவில் வாழும் சிங்களவர்களின் "லொபி" இருந்திருக்கும். ஆனால் இவைகளை இரு தரப்பினரும் வெளியில் சொல்ல மாட்டார்கள். இதே போன்று வேறு சில வேலைத்திட்டங்களும் செய்யப்படுகின்றன. ஆகவே பரப்புரைகள் எங்குமே நடைபெறவில்லை என்று கூறமுடியாது. ஆனால் இந்த பரப்புரைகள் மேலும் அதிகமாகச் செய்யப்பட வேண்டும் என்பதிலும், அனைத்து நாடுகளிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
தடைகளின் மத்தியில் எமது பணிகளை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டவர் மத்தியில் பரப்புரைகளைச் செய்வோம். எமது பலத்தின் மூலமே தமிழீழத்தை மீட்டெடுக்க முடியும் என்பதையும், அதற்கு தோள் கொடுக்கின்ற கடமை அனத்து தமிழர்களுக்கும் உள்ளது என்பதையும் உணரச் செய்வதற்கு, மிக முக்கியமாக எம்மவர் மத்தியிலும் பரப்புரைகளை செய்வோம்.
வி.சபேசன் (19.05.06)