Friday, November 30, 2007

மலேசியத் தமிழர் போராட்டமும் ஈழத் தமிழர் போராட்டமும் ஒன்றா?

மலேசியாவில் ஏறக்குறைய 150 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தங்களை மலேசிய அரசு ஒதுக்குவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

மலேசியாவில் தமிழர்கள் மட்டும் ஒதுக்கப்படவில்லை. முஸ்லீம்கள் அல்லாத அனைவருமே ஒதுக்கப்பட்டுத்தான் வருகின்றனர். மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 60 வீதமானவர்கள் இஸ்லாமிய மக்களாக இருக்கின்றனர். இஸ்லாம் மதத்தை அரசுமதமாக மலேசியா பிரகடனப்படுத்தியிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் முன்னுரிமை வழங்கக்கூடியவாறு ஏற்பாடுகளை மலேசிய அரசு செய்துள்ளது.

மலேசிய அரசு இயற்றியுள்ள பல சட்டங்கள் மனித உரிமையை மீறுகின்ற சட்டங்களாக இருக்கின்றன. மலேய இனத்தவர் அனைவரும் பிறப்பால் இஸ்லாமியர்கள் என்ற சட்டத்தை மலேசிய அரசு கொண்டிருக்கிறது. இதன்படி இவர்கள் மதம் மாறுவது மிகக் கடினமானது. வேறு மதத்தை சார்ந்த ஒருவரை திருமணம் செய்வதும் நடைமுறைச் சாத்தியமற்றது.

அப்படி ஒருவர் வேறு மதத்தவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால், இஸ்லாம் மதத்திலிருந்து அவர் விலக வேண்டும். இரண்டு வருடங்கள் இஸ்லாம் மத மார்க்கத்தை பின்பற்றாத வாழ வேண்டும். இதை அதற்கான அலுவலகம் உறுதி செய்ய வேண்டும். பின்பு இஸ்லாமிய மத நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, மதத்திலிருந்து விலகியதற்கான தண்டனையைப் பெற்று முற்றுமுழுதாக இஸ்லாம் மதத்திலிருந்து விடுபட்டு, வேறு மதத்தவரை திருமணம் செய்யலாம். இவ்வளவையும் மலேசியாவில் செய்வது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது.

அண்மையில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் ஒரு இந்துவை திருமணம் செய்து விட்டார். மலேசியச் சட்டத்தின்படி ஒரு முஸ்லீம் வேற்று மதத்தவரை திருமணம் செய்ய முடியாது என்பதால், அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். அவருடைய திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. சட்ட விரோத திருமணம் செய்ததற்காக அந்தப் பெண் நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். கடைசியில் அவர் இந்தியாவில் உள்ள அவருடைய பெற்றொரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.

மலேசியாவின் நிலை இதுதான். இஸ்லாமியர் அல்லாத மக்கள் அங்கே பல விதங்களில் ஒதுக்கப்படுகின்றனர். பௌத்தர்களாக இருக்கின்ற சீனர்கள் மலேசியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுவதால், அவர்களை மலேசிய அரசின் நடவடிக்கைகள் பெருமளவில் பாதிப்பதில்லை.

அதிகம் பாதிக்கப்படுவது கிறிஸ்தவர்கள், இந்துக்கள், மலேசியப் பழங்குடியினர் போன்றவர்கள்தான். இவர்கள் இடையிடையே மேற்கொள்ளும் மலேசிய அரசிற்கு எதிரான போராட்டங்கள் வன்முறை மூலம் அடக்கப்படுகின்றன.

அண்மையில் இந்தியர்கள் மேற்கொண்ட போராட்டம் பலருடைய கவனத்தை ஈர்த்தது. தடையை மீறி பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஒன்று கூடியதும், அவர்களை காவல்துறையினர் வன்முறையை கையாண்டு கலைத்ததும் கவனத்தை ஈர்ப்பதற்கான காரணங்கள் ஆகின.

இந்தப் போராட்டம் தமிழர்கள் மத்தியிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மலேசியாவில் வாழும் இந்தியர்களில் 85 வீதமானவர்கள் தமிழர்கள் என்பதுதான். இந்தத் தமிழர்கள் தமிழ்நாட்டுடனும் தமிழீழத்துடனும் நெருங்கிய உறவைப் பேணி வருகிறார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பதால், இவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இருந்தும், ஈழத் தமிழர்களிடம் இருந்தும் ஒலிக்கின்றன. இன்னும் ஒரு சிலர் ஒருபடி மேலே போய், ஈழத் தமிழர்களின் போராட்டத்தோடு மலேசியத் தமிழர்களின் போராட்டத்தை ஒப்பிட்டு பேசியும் எழுதியும் வருகின்றார்கள்.

தேமுதிக கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் "மலேசியத் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாது விட்டால், அங்கும் இலங்கைப் பிரச்சனை போன்று உருவாகிவிடும்" என்று கூறியுள்ளார். வேறு சிலரும் இதே போன்ற கருத்தை கூறியுள்ளனர். மலேசியாவில் ஈழத்தில் உருவானதைப் போன்று ஆயுதப் போராட்டம் உருவாகலாம் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "சுடரொளி" நாளிதழ் செய்தி வரைகிறது.

மலேசியத் தமிழர்களின் போராட்டத்தை ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தோடு ஒப்பிடுவது என்பது, தமிழீழப் போராட்டத்தை மலினப்படுத்திவிடும் என்பதை இவர்கள் இலகுவாக மறந்து விடுகிறார்கள்.

மலேசியாவில் தமிழர்கள் பூர்வீக காலத்தில் இருந்த வாழ்கின்ற ஒரு இனம் அல்ல. சோழர் காலத்தில் மலேசியா தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தாலும், மலேசியாவில் தமிழர்கள் குடியேறியது ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்புதான். இலங்கையின் மலையகத்திலும், தென்னாபிரிக்காவிலும் பிரித்தானிய ஆட்சியாளர்களால் கூலித் தொழிலாளர்களாக தமிழர்கள் குடியேற்றப்பட்டது போன்று மலேசியாவிலும் நடந்தது.

மலேசியாவில் தமிழர்கள் ஒதுக்கப்படுவதன் காரணம் அவர்கள் தமிழர்கள் என்பது அல்ல. அவர்கள் இஸ்லாமியர் அல்லாதவர்கள் என்பதே காரணம். மலேசியாவில் தமிழ் மொழிக்கு மற்றைய மொழிகளோடு சமமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் போராடுபவர்கள் தமிழர்கள் என்பதாலும், அவர்களுடைய போராட்டம் நியாயம் என்பதாலும், அவர்களை ஆதரிக்க வேண்டிய கடமை அனைத்து தமிழர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்களின் போராட்டத்தை ஈழத் தமிழர்களின் போராட்டத்தோடு ஒப்பிடும் அறிவுகெட்டத்தனமான வேலையை யாரும் செய்ய வேண்டாம்.

"இலங்கையிலே உள்ள தமிழர்கள் அனைவரும் வந்தேறு குடிகள், அவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள், தமிழர்கள் இலங்கையின் பூர்விகக் குடிகள் அல்ல, அவர்களுக்கு இங்கே நாடு கேட்பதற்கு உரிமை இல்லை" என்று சிங்களவர்கள் செய்கின்ற பிரச்சாரத்திற்கே இந்த ஒப்பீடு வலுச் சேர்க்கும்.

ஒரு நாட்டிற்குள் சிறுபான்மையினர் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் சம அந்தஸ்து கோரி நடத்தும் போராட்டமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய அபாயத்தை இந்த ஒப்பீடு கொடுக்கின்றது. காரணம் அவ்வாறான ஒரு போராட்டமாகத்தான் மலேசியத் தமிழர்களின் போராட்டம் ஊடகங்களால் வெளிப்படுத்தப்படுகிறது.

அத்துடன் இதிலே இன்னும் ஒரு பிரச்சனையும் இருக்கிறது. ஈழத் தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கின்ற காங்கிரஸ் கட்சியும், பிஜேபியும் மலேசியத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. இதன் மூலம் தாம் தமிழர் விரோதக் கட்சிகள் அல்ல என்று தோற்றத்தை உருவாக்கலாம் என்று இவை கணக்குப்போடுகின்றன. இந்த நேரத்தில் ஈழத் தமிழரினதும் மலேசியத் தமிழரினதும் போராட்டங்கள் ஒன்றுதான் என்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதானது, தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இக் கட்சிகளின் உண்மை முகத்தை காட்ட முடியாத நிலையைக் கொடுக்கும்.

இவை எல்லாவற்றையும் விட விடுதலைப் புலிகள் குறித்த தேவையற்ற சந்தேகங்களையும் மலேசிய அரசுக்கு விதைக்கின்ற வேலையை இந்த ஒப்பீடு செய்துவிடும் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

ஆகவே ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தையும், மதரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒரே தராசில் வைப்பதில் உள்ள அபத்தத்தை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மலேசியாவில் மொழி, இனம் என்ற பாகுபாடு இல்லாமல் இஸ்லாமியர் அல்லாத அனைவரும் ஒதுக்கப்படுகின்றனர். பிரித்தானிய காலனித்துவ அரசால் கூலித் தொழிலாளர்களாக மலேசியாவில் குடியேற்றப்பட்ட தமிழர்களை இந்த மதரீதியான ஒடுக்குமுறை கடுமையாக பாதிக்கின்றது. இதற்கு எதிராக அவர்கள் போராட வேண்டும். அந்தப் போராட்டத்திற்கு அனைத்து தமிழர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

மலேசிய அரசு செய்வது மனித உரிமை மீறல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை நோக்கிச் வெகுவேகமாகச் செல்லும் மலேசிய அரசு மற்றைய மதத்தவர்களுக்கு சம உரிமைகளை வழங்குமா என்பது ஒரு பெரும் கேள்விக்குறிதான். ஆயினும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடத்தான் வேண்டும்.

தமிழர்களின் வழிநடத்தலில் நடைபெறும் இந்தப் போராட்டம் வெற்றிபெற்று மலேசியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், இந்துக்கள், சீக்கியர்கள், பழங்குடியினர் என்று அனைவரும் சமஉரிமையோடு வாழும் நிலை வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

Monday, November 26, 2007

மாவீரர் நாள் - புலிகளின் தளபதிகளை குறிவைக்கும் சிறிலங்கா அரசு!

தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் பெரும் எழுச்சியுடன் நடாத்தப்பட்டு வருகின்றது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவீரர்களை நினைவுகூர்ந்து நடத்தப்படுகின்றன. நேற்று ஞாயிற்றுக் கிழமை தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் முதலாவது மாவீரர் லெப்ரினன்ற் சங்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

யாழ் குடாவிலும் மக்கள் பல்வேறு வகையான நிகழ்வுகளின் மூலம் மாவீர்களை நினைவுகூர்ந்து வருகின்றார்கள். பலத்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அவர்கள் துணிவுடன் இச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இன்று யாழ் குடாவில் தேசியத் தலைவரின் 53ஆவது அகவையை முன்னிட்டு மக்கள் கேக் வெட்டியும் இனிப்புப் பண்டங்களை பரிமாறியும் தமது உணர்வை வெளிப்படுத்தினர். வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி போன்ற இடங்களில் இந் நிகழ்வுகள் இடம் பெற்றன.

அத்துடன் பருத்தித்துறையில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரின் 524ஆவது படைப் பிரிவின் முகாமிற்கு சிலர் இனிப்புப் பண்டங்களை தபால் மூலம் அனுப்பியுள்ளனர். இதனால் படையினர் பெரும் கோபமுற்று தபால்காரரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

இதே வேளை கொழும்பில் மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 64 சிறைக் கைதிகளினால் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தினம் கொண்டாடப்பட்டுள்ளது. கேக் மற்றும் இனிப்புகள் பரிமாறப்பட்டன.

பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் தாம் விடுதலைப் புலிகளோடுதான் நிற்கின்றோம் என்பதை உறுதியாக எடுத்துக்காட்டியுள்ளனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓரளவு நடைமுறையில் இருந்த காலத்தில் யாழ் குடாவில் பல பொதுமக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகளில் பங்குபற்றினர். இவர்களை இனங்கண்டு வைத்திருந்த சிறிலங்காப் படையினர் பின்பு நேரடியாகவும், ஒட்டுக் குழுக்கள் மூலமும் இந்த பொதுமக்களை படுகொலை செய்தனர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகளில் பங்குபற்றிய பலர் வன்னிக்கு தப்பி ஓடி வந்தனர். வன்னிக்கு செல்ல முடியாத நிலையில் இருந்த மற்றையவர்கள் தேடித் தேடிப் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் யாழ் குடாவில் இனி இல்லை என்று நிலை வந்த பின்புதான் இந்தக் கொலைகள் ஓரளவு குறைந்தன.

ஆனால் மக்களின் உணர்வுகளை துப்பாக்கிக் குண்டுகள் மூலம் அடக்க முடியாது என்பது மறுபடியும் நிரூபணம் ஆகியுள்ளது. யாழ் குடா என்கின்ற திறந்த வெளிச் சிறையில் உள்ள மக்கள் என்றாலும் சரி, கொழும்பில் மகசீன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் என்றாலும் சரி, தமது விடுதலை நோக்கிய உணர்வுகளை வெளிப்படுத்தி நிற்கின்றனர்.

இதே வேளை வன்னியில் மாவீரர் தின நிகழ்வுகளின் போது பல நாசகர வேலைகளை நடத்துவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவீரர் தின நிகழ்வுகளின் போது, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் துயிலும் இல்லங்களில் நினைவுச் சுடர் ஏற்றுவது வழமை. இவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தளபதிகளை குறி வைப்பதற்கு ஒரு தனிப்பிரி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஆழ ஊடுருவும் படைப் பிரிவைச் சேர்ந்த பலரும் அதிகளவில் வன்னிக்குள் ஊடுருவியுள்ளனர். நேற்று புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர் ஒருவரும் பொதுமகன் ஒருவரும் கொல்லப்பட்டனர். கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் நோயாளர் காவுவாகனத்தின் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.

விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இவர்கள் வன்னிக்குள் நுளைந்துள்ளனர். ஆள ஊடுருவும் படையணியினரை தேடி அழிக்கும் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர். இன்று மன்னார் கட்டையடம்பன் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணியை சேர்ந்த ஒருவர் விடுதலைப் புலிகளின் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலும் அவரிடம் இருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

வன்னி மீது சிறிலங்கா வான்படையும் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. நேற்று கிளிநொச்சி தர்மபுரத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட நான்கு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

இன்று புதுக்குடியிருப்பிலும், கிளிநொச்சியிலும் சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் ஒரு சிறுவன் படுகாயமடைந்தான். 18 வீடுகள் சேதமடைந்தன. விமானங்கள் வட்டமிடுவதைக் கண்ட மக்கள் பாதுகாப்புத் தேடிக் கொண்டதால், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

சிறிலங்கா அரசு இத் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்கள் மீது நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முந்தைய இரவு இத் தளங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டதாக தமக்கு தகவல்கள் கிடைத்ததாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு வான்படையையும், ஆழ ஊடுருவும் படையணியையும் முடுக்கி விட்டுள்ளது இதன் மூலம் உறுதியாகிறது.

Friday, November 09, 2007

வைகோவிற்கு "உதயன்" எத்தனை தொகுதிகள் ஒதுக்கும்?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளிதழான "உதயன்" 06.11.07 அன்று வெளியிடப்பட்ட இதழில் ஒரு ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. ஈழத் தமிழர் விரோதப் போக்குக் கொண்ட ஜெயலலிதாவிற்கு வால் பிடிப்பதற்கு, உலகத் தமிழர்களுக்கு வைகோ பதில் சொல்ல வேண்டும் என்று உதயன் எழுதியிருக்கிறது.

உதயன் வைகோவிடம் இருந்து என்ன பதிலை எதிர்பார்க்கிறது? அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதா? அப்படி விலகினால் விரைவில் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவின் கட்சிக்கு உதயன் எத்தனை தொகுதிகளை ஒதுக்கிக் கொடுக்கும்? மதிமுக சார்பில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்யும்? இவைகளை உதயன் உலகத் தமிழர்களுக்கு விளக்குமா?

ஜெயலலிதா கலைஞரின் ஆட்சியைக் கலைப்பதற்கு ஏதாவது வழி கிடைக்குமா என்று தூங்கும் போதும் சிந்திக்கின்ற ஒருவர். அவர் கலைஞரின் இரங்கல் கவிதையை வைத்து ஒரு சட்டப் பிரச்சனையை கிளப்ப முனைகிறார். இதை கலைஞர் சரியான முறையில் எதிர்கொள்வார். இதற்குள் வைகோவை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜெயலலிதாவாது சட்டப் பிரச்சனையைத்தான் கிளப்பினார். ஆனால் கலைஞரோடு கூட்டணி அமைத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியனர் என்ன செய்தனர்?

கலைஞர் இரங்கல் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் விட்டார்களா? மனித குலமே வெட்கப்படக்கூடிய ஒரு ஈனச் செயலைப் புரிந்தனர். தமிழ்நாட்டில் சில இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் தமிழ்செல்வனின் வீரச்சாவை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

இவ்வாறான காட்டுமிராண்டிகளோடு கூட்டணி வைத்திருப்பதற்கு கலைஞர் உலகத் தமிழர்களுக்கு பதில் சொல்வாரா?

வேண்டாம். எந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவரும் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படையில் அமைக்கின்ற கூட்டணிகளுக்கு யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்.

தமிழ்நாட்டில் இரண்டாவது பலம் வாய்ந்த கூட்டணியில் தமிழீழத்திற்கு ஆதரவான ஒரு கட்சி இருப்பது ஈழத் தமிழர்களுக்கு நன்மையே தவிர, தீமை அல்ல. வைகோ தன்னுடைய தமிழீழ ஆதரவுக் குரலை சற்றும் தொய்வின்றி எழுப்புகின்றார். அவருக்கு ஈழத் தமிழர்கள் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள்.

கலைஞரை மகிழ்ச்சிப்படுத்தம் நோக்கில் ஈழத் தமிழ் ஊடகங்கள் வைகோவை புண்படுத்த வேண்டாம்.

Wednesday, November 07, 2007

தீபாவளி தமிழர் திருநாள் அல்ல

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் "தீபாவளி தமிழர் திருநாள் அல்ல" என்ற இறுவட்டை (CD) வெளியிட்டுள்ளது.

இந்த இறுவட்டில் தீபாவளி பற்றிய என்னுடைய 55 நிமிட உரை உள்ளது. சற்றுப் பொறுமையாக கேட்க வேண்டும்.

500 இறுவட்டுக்களாவது வினியோகிக்கும் திட்டத்தில்தான் நாம் இருந்தோம். ஆனால் தமிழ்செல்வன் அவர்களுடைய வீரச்சாவு எம்மை பெரும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் சோர்விலும் ஆழ்த்திவிட்டது.

தற்பொழுது சற்றுத் தேற்றிக்கொண்டு 200 வரையிலான இறுவட்டுக்களை வினியோகித்துள்ளோம்.

அந்த இறுவட்டில் உள்ள உரை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

http://www.webeelam.com/deepavali.mp3