கிமு 101ஆம் ஆண்டு...
அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு இலங்கைத் தீவின் பெரும்பகுதியை ஆண்டு கொண்டிருந்த தமிழ் மன்னன் எல்லாளன் தெற்கில் இருந்து படையெடுத்து வந்த சிங்கள மன்னனாகிய துட்டகைமுனுவால் வெற்றி கொள்ளப்படுகிறான். 72 வயது நிரம்பிய எல்லாளனிற்கும் இளைஞனான துட்டகைமுனுவிற்கும் இடையில் நடந்த தனிச் சண்டையில் எல்லாள மன்னன் வீரச் சாவு அடைகிறான்.
இந்த நிகழ்வை இன்று வரை சிங்களப் பேரினவாதம் போற்றிக் கொண்டாடி வருகிறது. தமிழர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், துட்டகைமுனு பௌத்த சாசனத்தை காப்பாற்ற போர் செய்த சிங்கள மன்னன் என்றும் பாடசாலைகளில் போதிக்கப்படுகிறது.
சிங்கள பேரினவாதத்தால் "வரலாற்று நூல்" என்று சொல்லப்படுகின்ற "மகாவம்சம்" எல்லாள மன்னன் தமிழ்நாட்டில் இருந்து படையெடுத்த வந்த சோழ மன்னன் என்று சொல்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி ஒரு மன்னன் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. தமிழ்நாட்டின் கல்வெட்டுக்களிலோ, இலக்கியங்களிலோ எல்லாளன் பற்றிய குறிப்புகள் தென்படவில்லை.
நடுநிலையான ஆராய்ச்சியாளர்கள் எல்லாளன் இலங்கைத்தீவின் வட பகுதியில் இருந்து வந்தவன் என்று சொல்கிறார்கள். வன்னியில் உள்ள பூநகரிப் பகுதியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த எல்லாளன் கிமு 145ஆம் ஆண்டில் அனுராதபுரத்தின் மீது படையெடுத்து வெற்றிகண்டான் என்று சொல்கிறார்கள்.
எல்லாள மன்னன் படையெடுத்து ஏறக்குறைய 2150 ஆண்டுகள் கழிந்த பின்பு மீண்டும் புதிய எல்லாளன்கள் வன்னியில் இருந்து அனுராதபுரத்தின் மீது படையெடுத்து சிங்களப் பேரினவாதத்தின் இதயத்தை நொருக்கிவிட்டிருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதலை தாம் எதிர்பார்க்கவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமாகிய கேஹலிய ரம்புக்வல்ல கூறியுள்ளார். ஆனால் மாவீரர் வாரம் அண்மிப்பதால் விடுதலைப் புலிகள் ஒரு பெரும்தாக்குதலை நடத்துவர்கள் என்று எதிர்பார்த்து அனுராதபுர வான்தளம் உட்பட சிறிலங்காவின் அனைத்து படைமுகாம்களும் உசார்படுத்தப்பட்டிருந்தன என்பதுதான் உண்மை.
ஆனால் அதையும் மீறி அனுராதபுர வான்தளத்தை தகர்த்து விடுதலைப் புலிகள் பெரும் சாதனை ஒன்றை நிலைநாட்டியிருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் அனுராபுரம் வரை எப்படி வந்து தாக்குதல் நடத்தி, இத்தனை அழிவுகளை ஏற்படுத்தினார்கள் என்பது சிறிலங்கா அரசுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவும், வேவுப்படையணியும் பெரும் பங்களிப்பை இந்தத் தாக்குதலில் வழங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
தரை வழியாகத் தாக்குதலை தொடுத்த 21 கரும்புலிகளும் அனுராதபுர வான்தளத்தின் அருகில் இருக்கின்ற நுவரக்குளத்தின் ஊடாக உள்நுளைந்திருக்கலாம் என்று சிறிலங்காவின் பாதுகாப்புத்தரப்பு கருதுகிறது. நுவரக்குளம் வான்தளத்தில் இருந்து ஏறக்குறைய ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. ஏற்கனவே வன்னியில் இருந்து வந்து அனுராதபுரத்தில் தங்கியிருந்த கரும்புலிகள் பின்பு படகுகளின் மூலம் நுவரக்குளத்தின் ஊடக பயணம் செய்து வான்தளத்திற்கு சற்றுத் தொலைவில் காட்டுப் பகுதியில் தரையிறங்கி, அங்கிருந்து நடந்து வந்து வான்தளத்தை அடைந்து தாக்குதல்களை தொடுத்துள்ளனர் என்று நம்பப்படுகிறது.
இந்தப் பெரும் தாக்குதல் குறித்து கிடைத்த சில தகவல்களின்படி அதிகாலை 3.20 மணியளவில் 21 பேர் கொண்ட கரும்புலிகளின் அணி இரண்டு அணிகளாக உள்நுளைந்தது. நவீனரக தானியங்கித் துப்பாக்கிகளோடும், சிறியரக டாங்கி எதிர்ப்புப் பீரங்கிகளோடும் உள்நுளைந்த கரும்புலிகளின் அணிகள் தாக்குதலை ஆரம்பித்தன.
ஒரு அணி அங்கிருந்த காப்பரண்களையும், விமான எதிர்ப்பு பீரங்கி நிலைகளையும் கைப்பற்றிக் கொண்டது. சிறிலங்காப் படையின் நிலைகளை கைப்பற்றி, அங்கிருந்த கனரக ஆயுதங்களின் மூலமே சிறிலங்காப் படையினர் மீது தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடித் தாக்குதலினால் வான்படைத் தளத்தில் பெரும் அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டது. கரும்புலிகளின் ஒரு அணி பாதுகாப்புச் சூடு வழங்க, மற்றைய அணி வான்தளத்தில் தரித்து நின்ற வானூர்த்திகளை தகர்த்து அழித்தது.
இந்த நேரத்தில் சிறிலங்காப் படையினருக்கு புதிய ஒரு அதிர்ச்சியாக அங்கு வந்த வான்புலிகளின் இரண்டு விமானங்கள் குண்டுகளை வீசின. வான்புலிகளின் குண்டுவீச்சில் வான்படைத் தளத்தில் இருந்த ஆயுதக் கிடங்கும், எண்ணைய் குதமும் அழிக்கப்பட்டது. குண்டுகளை வீசிவிட்டு வான்புலிகளின் விமானங்கள் இரண்டும் மீண்டும் தளம் திரும்பின.
இதற்கிடையில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்தது. அனுராதபுரத்தில் இருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள மிகிந்தலைப் பகுதியில் சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான பெல் ரக உலங்குவானூர்த்தி ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்த வானூர்த்தி விழுந்தது பற்றி பலவிதமான செய்திகள் உலாவுகின்றன.
முதலில் வான்புலிகளின் விமானம் ஒன்றை சிறிலங்காப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அது சிறிலங்காப் படையினரின் வானூர்த்தி என்று பின்பு அனைவருக்கும் தெரிந்து போனது. சிறிலங்காப் வான்படையின் வானூர்த்தியை வான்புலிகளின் விமானம் என்று நினைத்து சிறிலங்காப் படையினரே சுட்டு வீழ்த்தி விட்டனர் என்று சொல்லப்படுகிறது.
வவுனியாவில் இருந்து படையினருக்கு உதவிக்கு வந்த இந்த பெல் ரக உலங்குவானூர்த்தி விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்து வீழ்ந்து நொறுங்கிப் போனதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் சிறிலங்காப் பாதுகாப்புத் தரப்பின் பேச்சாளர் உலங்குவானூர்த்தி தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவே வீழ்ந்ததாக கூறுகிறார்.
சில மாதங்களிற்கு முன்னர் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் மீது வான்புலிகளின் இரண்டு விமானங்கள் தாக்குதல் நடத்த வருவதாக தகவல் வந்த போது, வான்புலிகளின் விமானங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுராதபுரத்தில் இருந்து மேலெழுந்த எம் ஐ 24 ரக உலங்குவானூர்த்தி திடீரென்று வீழ்ந்து நொறுங்கியது. தற்பொழுது இரண்டாவது தடவையாகவும் அப் பகுதியில் வானூர்த்தி ஒன்று வீழந்ததானது ஒரு மர்மமான நிகழ்வாகவே சிலரால் பார்க்கப்படுகிறது.
ஒரு புறம் பெல் ரக உலங்குவானூர்தி இவ்வாறு மர்மமான முறையில் கீழே விழுந்து நொறுங்க, மறுபுறம் கரும்புலிகள் அனுராதபுர வான்தளத்தில் நின்ற மற்றைய வானூர்த்திகளை தகர்த்து அழித்தனர். காலை விடிந்து 9 மணியான போது கரும்புலிகளால் 8 வானூர்த்திகள் அழிக்கப்பட்டிருந்தது. இதை கரும்புலிகள் வன்னியில் உள்ள தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தினார்கள்.
ஆனால் சண்டை 11 மணிவரை நீடித்தது. தொடர்ந்து பல வானூர்த்திகளையும் வான்படைத் தள நிலைகளையும் அழித்த கரும்புலிகள் கடைசியில் வீரச் சாவைத் தழுவிக் கொண்டார்கள். கரும்புலிகள் உறுதிப்படுத்தியதன் படி 8 வானூர்த்திகள் அழிக்கப்பட்டதை விடுதலைப் புலிகள் உத்தியோகமாக அறிவித்தார்கள். ஆனால் மொத்தமாக எத்தனை வானூர்த்திகள் அழிக்கப்பட்டன என்பதை சிங்கள ஊடகங்கள்தான் வெளியிட்டன. சிறிலங்காவின் படைத் துறை அதிகாரிகள் தமக்கு தெரிந்த ஊடகவியலாளர்களிடம் விசயத்தை கசிய விட்டிருந்தார்கள்.
அதிகாலை 3.20 மணியில் இருந்து முற்பகல் 11 மணி வரை நீடித்த சண்டையில் சிறிலங்கா வான்படை 18 வானூர்த்திகளை இழந்து விட்டது. சிறிலங்கா வான்படை வரலாற்றிலேயே ஏற்பட்ட அதி கூடிய இழப்பாக இது கருதப்படுகிறது.
ஒரு படை நடவடிக்கைக்கு உறுதுணையாக விளங்கக்கூடிய இரண்டு எம் ஐ 24 ரக உலங்கு வானூர்த்திகள், இரண்டு எம் ஐ 17 ரக உலங்கு வானூர்த்திகள், ஒரு பெல் 212 ரக உலங்கு வானூர்த்தி ஆகியன சிறிலங்காப் படைகள் இழந்தவகைளுக்குள் அடங்கும்.
எம் ஐ 24 மற்றும 17 ரக வானூர்த்திகளை பறக்கும் டாங்கிகள் என்று அழைப்பார்கள். மிக், கிபீர் போன்ற யுத்த வானூர்த்திகளை வாங்குவதை விட அதிகளவு எம் ஐ 24 ரக வானூர்த்திகளை வாங்குவதே சிறந்தது என்று அமெரிக்க இராணுவ வல்லுனர்கள் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்கி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவ்வளவு தூரம் இந்த உலங்கு வானூர்த்திகள் பயன் மிக்கவை.
பெல் 212 வானூர்த்தி தாக்குதலோடு வினியோகப் பணிகளையும், படையினரை ஏற்றி இறக்குகின்ற வேலைகளையும் மேற்கொள்ளக் கூடியது.
பொதுவாக அனுராதபுர வான்தளத்தினுள் ஒரிரு உலங்கு வானூர்த்திகள்தான் நிற்பது வழக்கம். மற்றையபடி ஒரு பயிற்சி வானூர்த்தித் தளமாகவே அனுராபுர வான்தளம் பேணப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது பல தாக்குதல் உலங்கு வானூர்த்திகள் அங்கே நிறுத்தப்பட்டிருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று மன்னார் பகுதியில் ஆறு மாதங்களாக தொடர்ந்து நடந்து வரும் சண்டைகள். இச் சண்டைகளிற்கு இந்த உலங்குவானூர்த்திகள் இடையிடையே பயன்படுத்தப்பட்டு வந்தன. அத்துடன் வரும் நாட்களில் எம் ஐ ரக உலங்குவானூர்த்திகளை அதிகளவில் சண்டைகளில் ஈடுபடுத்தவும் சிறிலங்காப் படை திட்டமிட்டிருந்தது.
அடுத்த காரணம் இதை விட முக்கியமானது. அது வான்புலிகளோடு சம்பந்தப்பட்டது. வான்புலிகளின் விமானங்களை எதிர்கொள்வதற்கு மிக் 29 ரக வானூர்த்திகளை கொள்வனவு செய்ய முயன்று, அதன் பிறகு பல்வேறு காரணங்களால் அத் திட்டம் கைவிடப் பட்டது. அதற்கு பதிலாக அனுராதபுர வான்தளத்தில் எம் ஐ ரக உலங்குவானூர்த்திகளை நிறுத்தி வான்புலிகள் வருகின்ற போது, உடனடியாகப் புறப்பட்டுச் சென்று வான்புலிகள் மீது வானத்தில் வைத்தே தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காகவே வானில் வைத்து தாக்குதல் நடத்தக்கூடிய எம் ஐ ரக வானூர்த்திகள் அனுராதபுர வான்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. அத்துடன் கே 8 ரக வானூர்த்தி ஒன்றும் அங்கே நின்றது. கே 8 ரக வானூர்த்தி பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டாலும், அதற்கு இரவில் தொழிற்படும் திறமை உண்டு. வான்புலிகளின் தாக்குதல் இரவிலேயே இதுவரை இடம்பெற்றதால், கே 8 ரக வானூர்த்தி வான்புலிகளை எதிர்கொள்ளக் கூடியதாக கருதப்பட்டது.
கடந்த ஏப்ரல் 26 வான்புலிகளின் விமானங்கள் வருவதாக தகவல் கிடைத்ததும் கட்டுநாயக்காவில் இருந்து இரண்டு கே 8 ரக விமானங்கள் மேலெழுந்து வட்டமிட்டு வான்புலிகளை எதிர்கொள்ளத் தயாராகியது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வான்புலிகளை எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கது என்று கருதப்பட்ட கே 8 ரக வானூர்த்தி ஒன்றும் அனுராதபுர வான்தளத் தாக்குதலில் அழிக்கப்பட்டு விட்டது.
மொத்தத்தில் வான்புலிகளை எதிர்கொள்ளும் திறன் மிக்கவையாகக் கருதப்பட்ட 6 வானூர்த்திகளை சிறிலங்கா வான்படை இழந்து விட்டது.
அத்துடன் பீச் ரக கண்காணிப்பு வானூர்த்தி அழிக்கப்பட்டதும் சிறிலங்கா வான்படைக்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. வன்னியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பீச் கிராவ்ற் வானூர்த்தி அதி நவீனமானதும் மிக விலை உயர்ந்ததும் ஆகும். பீச் கிராவ்ற் ரக வானூர்த்தி ஒன்றின் விலை ஏறக்குறைய 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த ரகத்தில் இரண்டு வானூர்த்திகள் மட்டும்தான் சிறிலங்கா வான்படையிடம் இருந்தது. இதில் ஒன்று தற்பொழுது அழிக்கப்பட்டு விட்டது.
இவைகளோடு பிரீ 6 ரக பயிற்சி வானூர்த்திகள் எட்டும், ஆளில்லாத உளவு விமானங்கள் மூன்றும் அழிக்கப்பட்டன. மொத்தம் 18 வானூர்த்திகளோடு, ராடர் நிலையங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஆயுதக் கிடங்கு, எண்ணெய் குதம் என்று சிறிலங்கா வான்படை பேரழிவைச் சந்தித்திருக்கிறது. அத்துடன் 18 படையினர் கொல்லப்பட்டும் 30 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக தெரிய வருகிறது.
விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்பில் நிற்பதாக பரப்புரை செய்து வந்த சிறிலங்கா அரசு அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறது. மன்னாரில் படை நடவடிக்கையை தொடர்வதற்கோ, வான்புலிகளை எதிர்கொள்வதற்கோ கொண்டுள்ள வலிமையில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டதானது சிறிலங்கா அரசுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தாக்குதல் இதோடு நிற்கப் போவதில்லை. 21 எல்லாளன்கள் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் நாசம் விளைவித்து விட்டார்கள். விரைவில் ஆயிரக் கணக்கில் சங்கிலியன்களும் உட்புகுந்தால் என்ன ஆகும் என்ற கேள்விதான் தற்பொழுது சிங்கள அரசின் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment