Friday, October 26, 2007

தமிழச்சி, மாசிலா, தமிழ்நாட்டு உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்!

தலித் மாநாடு என்ற பெயரில் பாரிஸில் பத்மநாபா குழு, ஈபிடிபி, புளொட், ஈஎன்டிஎல்எவ், ஜிகாத் போன்ற ஒட்டுக்குழுக்கள் நடத்திய சந்திப்பு முடிந்து விட்டது. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் 90 வீதமானவர்கள் இந்த ஒட்டுக்குழுக்களின் ஐரோப்பிய பிரதிநிதிகளாக செயற்படுவது பலரும் அறிந்த ஒரு விடயம்.

இந்த ஒட்டுக் குழுக்களை சாராத சில தனிநபர்களும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்கள். ஆனால் அவர்களிலும் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தமிழீழப் போராட்டத்தை எதிர்த்து ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்து வருபவர்கள்தாம்.

தலித் மாநாடு என்ற பெயரில் ஒட்டுக் குழுக்களின் சந்திப்புத்தான் நடக்க இருக்கிறது என்பதை நாம் பலவகையில் அம்பலப்படுத்தி வந்தோம். பலர் எம்முடைய பக்கள் உள்ள உண்மைகளைப் புரிந்து கொண்டார்கள். சிலர் வேண்டுமென்றே அடம்பிடித்தார்கள்.

அப்படி அடம்பிடித்தவர்களில் தமிழச்சி முக்கியமானவர். தற்பொழுது அவரிடம் இருந்து ஒரு கனத்த மௌனம்தான் வெளிப்படுகிறது. பகுத்தறிவுள்ள அவர் நிலைமைகளை நேரில் கண்டு, குறிப்பிட்ட சந்திப்புக்களில் கலந்து கொண்ட அனைவரும் புலி எதிர்ப்பு சிந்தனையை கொண்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தால் நல்லது.

ஆனால் ஒரு விடயம் சற்று நெருடுகிறது. பெண்கள் சந்திப்பும், தலித் மாநாடும் விடுதலைப் புலிகள் மீது அவதூறுகைள பரப்புவதற்கே நடைபெறுகிறது என்று நாம் வாதாடினோம். அப்படி இல்லை என்று சொன்னவர், அவரே அங்கே விடுதலைப் புலிகள் மீது அவதூறுகளை செய்து விட்டு வந்திருப்பதாக, "தேனி", "தூ" போன்ற சிங்கள சார்பு ஊடகங்கள் தகவல் தருகின்றன.

விடுதலைப் புலிகளால் தான் பட்ட துன்பங்களை தமிழச்சி விபரித்தார் என்று "தேனி" சொல்கிறது. விடுதலைப் புலிகள் தன் மீது அவதூறுகளை பரப்பியதாக தமிழச்சி குற்றம் சாட்டினார் என்று "தூ" சொல்கிறது.

ராஜேஸ்வரிக்கு மறுத்து பதில் எழுதிய தமிழச்சியும் கூட அதில் "ஒரு புறம் எல்டிடிஈ அவதூறுகளை பரப்புகிறது" என்று எழுதுகிறார்.

தமிழச்சி விடுதலைப் புலிகள் தனக்கு துன்பங்கள் தரவில்லை என்று மறுப்பறிக்கை கொடுத்திருக்கறார். ஆனால் புலிகள் தன்னைப் பற்றி அவதூறுகளை பரப்புவதாக எழுதுகிறார். தலித் மாநாட்டிலும் புலிகள் அவதூறு பரப்புவதாக சொல்லியிருக்கிறார்.

தலித் மாநாடு பற்றி அவதூறு பரப்புவதாக எம்மை நோக்கி குற்றம் சாட்டியவர், கடைசியில் அவரே விடுதலைப் புலிகள் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக ஒரு கடைந்தெடுத்த பொய்யைச் சொல்லி விட்டு வந்திருக்கிறார்.

தமிழச்சி பற்றி அவதூறு பரப்பிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் யார்? என்ன விதமான அவதூறுகளை அவர்கள் பரப்பினார்கள்?

இந்தக் கேள்விகளுக்கு நான் எந்தப் பதிலையும் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்ல முடியாது என்று எனக்குத் தெரியும்.

நாம் பெண்கள் சந்திப்பை பற்றி என்ன சொன்னோமோ, அதுதான் அங்கு நடைபெற்றது. அதை தமிழச்சியே ராஜேஸ்வரியின் கட்டுரையை வெளியிட்டு நிரூபித்தும் விட்டார்.

இப்பொழுது ஒரு கேள்வி. அனுராதபுர வான் தளத்தை தகர்த்து அழித்த கரும்புலிகள் அணியில் இடம்பெற்ற அந்த மூன்று பெண் கரும்புலிகளும் ராஜேஸ்வரி படித்த கட்டுரைக்குள் அடங்குகிறார்களா என்பதை தமிழச்சி ஒரு முறை சொல்வாரா? வேண்டாம். இதற்கும் பதில் சொல்ல வேண்டாம். அந்த பெண் போராளிகளை பதில் என்ற பெயரில் யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்.

தலித் மாநாட்டில் "இது விடுதலைப் புலிகளுக்கு எதிரானது இல்லை" என்று அறிவிக்க முயன்றதற்கே அங்கே பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. தலித் மாநாடு வெளிப்படையாகவே "தமிழ் தேசியம் தலித் மக்களுக்கு எதிரானது" என்று பிரகடனம் செய்து விட்டது.

இதற்கெல்லாம் எமக்கு ஒரு பதிலும் விளக்கமும் இனி வேண்டாம். சில பொறுக்கிகள் செய்த ஆத்திரமூட்டும் செயல்களால் அவசரப்பட்டு தமிழச்சி சில தவறுகளைச் செய்து விட்டார். பரவாயில்லை. நடந்தது நடந்துவிட்டது. இனிமேலாவது பெரியார் விழிப்புணர்வு இயக்கம் இது போன்ற தமிழின விரோத செயற்பாடுகளுக்கு துணை போகாது இருக்கட்டும்.

தந்தை பெரியாரை தலித் மக்களின் விரோதி என்று பிரச்சாரம் செய்கின்ற ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதே போன்ற விடுதலைப் புலிகளையும் தலித் மக்களின் விரோதிகள் என்று பிரச்சாரம் செய்கின்ற ஒரு கூட்டம் ஈழத் தமிழிரடையேயும் இருக்கிறது.

ஆனால் தந்தை பெரியாரும் தலித் மக்களின் விரோதி அல்ல. விடுதலைப் புலிகளும் தலித் மக்களின் விரோதிகள் அல்லர். இருவருமே தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திப்பவர்கள். அதற்காக பாடுபடுபவர்கள்.

தந்தை பெரியாரை தமிழின விரோதி என்று "குருவிகள்" எழுதுகிறார். விடுதலைப் புலிகளை தலித் விரோதிகள் என்று சோபாசக்தி எழுதுகிறார். இதில் எதை நம்பினாலும், அவர்கள் பகுத்தறிவு அற்ற வெங்காயங்களாகத்தான் இருக்க முடியும்.

தற்பொழுது தமிழச்சி கடைப்பிடிக்கும் மௌனம் வரவேற்கத்தக்கது. சில நையாண்டிப் பதிவுகள் வந்தும், அதைக் கண்டு கொள்ளாது, தொடர்ந்தும் பெரியார் கருத்துக்களை வலைப் பதிவேற்றி வருவது மகிழ்ச்சியை தருகிறது. இதற்கு நான் நன்றி சொல்கிறேன்.

ஈழத் தமிழர்களின் அரசியலுக்குள் சிக்குப்படாது பெரியார் கொள்கைகளை பரப்புகின்ற பணியை தமிழச்சி தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதற்கு என் போன்ற ஈழத் தமிழர்கள் என்றும் துணையாக இருப்போம்.

இந்த நேரத்தில் தோழர் மாசிலாவிற்கும் நான் நன்றியை சொல்ல வேண்டும். தமிழச்சியின் தோழர் என்ற முறையில் அவர் தமிழச்சிக்காக வாதாடினார். அதில் சில சொற்களை அவசரப்பட்டு சிந்தியாது பயன்படுத்தி இருந்தார். ஆனால் ஒரு விடயத்தில் அவர் தெளிவாக இருந்தார்.

ஈழத் தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்த தலித் மாநாட்டை அவர் தன்னுடைய வலைப்பதிவில் விளம்பரப்படுத்தவில்லை. தமிழச்சி தினமும் தலித் மாநாட்டிற்கு விளம்பரம் செய்த போதும், மாசிலா தலித் மாநாட்டை விளம்பரப்படுத்தாது அமைதி காத்தார். இது அவருடைய தெளிவான சிந்தனையை காட்டுகிறது. தமிழச்சியின் நெருங்கிய தோழராக இருந்தாலும், இந்த விடயத்தில் நடுநிலையை கடைப்பிடித்த மாசிலாவிற்கு என்னுடைய நன்றிகள்.

அத்துடன் தலித் மாநாட்டின் உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு எமக்காக வாதாடிய தமிழ்நாட்டு உறவுகளுக்கும் என்னுடைய நன்றிகள். பெரியார் சிந்தனைகளை பரப்ப நாம் இணைந்து பணியாற்றுவோம்!

1 comment:

Anonymous said...

தலித் மாநாடு "புலியெதிர்ப்பு மாநாடு" போன்றும் "ஈபிஆர்எல்எப்(பத்மநாபா) மாநாடு" போன்றும் நடந்தது என்று ராஜகரன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதை படித்தீர்களா?