Thursday, December 04, 2008

இந்தியாவுடன் மீண்டும் உறவை ஏற்படுத்துவதற்கான அழைப்பு - பலவீனத்தின் வெளிப்பாடா?

தேசியத் தலைவர் இம் முறை நிகழ்த்திய மாவீரர் தின உரையில் இந்தியாவை நோக்கி நட்புக் கரத்தை நீட்டியிருக்கிறார். இதைப் பற்றி பலர் பலவாறு எழுதி வருகிறார்கள். சிங்களத்தினதும், ஒட்டுக் குழுக்களினதும் ஊடகங்கள் எப்போதும் போன்று “விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள், அதனாற்தான் இந்தியாவின் தயவை வேண்டி நிற்கின்றார்கள்” என்று எழுதி வருகின்றன.

தேசியத் தலைவர் இந்தியாவை நோக்கி பல முறை நட்புக் கரத்தை நீட்டியிருக்கின்றார். ஆனால் இந்திய அதிகார பீடம் தேசியத் தலைவரின் அழைப்பை ஒவ்வொரு முறையும் தவறாகவே அர்த்தப்படுத்தி இருக்கின்றது.

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியப் படையினர் கனரக பீரங்கிகள், டாங்கிகள், வானூர்த்திகள் சகிதம் தமிழீழ மண் மீது 10 ஒக்டோபர் 1987 அன்று போரைத் தொடுத்திருந்தனர். இந்தியப் படை போரை ஆரம்பித்து, தமிழ் மக்கள் மீது படுகொலையை கட்டவிழ்த்து விட்டிருந்த போதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ராஜீவ்காந்திக்கு கடிதம் மூலம் நட்புக் கரத்தை நீட்டி தன்னுடைய நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினார்.

போர் ஆரம்பித்து இரண்டு நாளில் 12 ஒக்டோபர் 1987 அன்று தேசியத் தலைவர் ராஜீவ்காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். “கனம் பிரதம மந்திரி அவர்களே” என்று ஆரம்பித்த அந்தக் கடிதத்தில் தேசியத் தலைவர் இப்படிக் குறிப்பிட்டார்.

“இந்திய மக்கள் மீது எமக்குள்ள நல்லுறவின் அடிப்படையிலும், சமாதானமும் நல்லெண்ணமும் பேணப்படும் அவசியத்தை முன்னிட்டும், இராணுவ நடவடிக்கைகளை உடன் கைவிடும்படி நான் உங்களை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்”

இத்தனைக்கும் இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு ஒரு நாள் முன்புதான் இந்தியப் படை தேசியத் தலைவரை கொன்று விடுவதற்காக ஒரு நடவடிக்கையை யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள பிரம்படி என்னும் இடத்தில் மேற்கொண்டிருந்தது. சிறப்புப் பயிற்சி பெற்ற இந்தியப் படையினர் தேசியத் தலைவரும் வேறு மூத்த தளபதிகளும் இருந்த பகுதியை சுற்று வளைத்து தாக்குதலை மேற்கொண்டது.

தேசியத் தலைவர் இருந்த வீட்டில் அப்பொழுது கவிஞர் காசியானந்தனும் தங்கியிருந்தார். இந்தியப் படையினர் தம்மை முற்றுகை இட்டிருப்பதை அறிந்த பிரபாகரன் அங்கே இருந்து பின்வாங்காது தானும் ஆயுதம் ஏந்தி சண்டை செய்தார் என்று காசியானந்தன் எழுதியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் இந்தியப் படையின் முற்றுகையை வெற்றி கண்டு, இந்தியப் படைக்கு மிகப் பெரிய அழிவையும் தோல்வியையும் கொடுத்து, இரண்டு இந்தியப் படையினரை கைதும் செய்த பிற்பாடு, அடுத்த நாள் தேசியத் தலைவர் ராஜீவ்காந்திக்கு மேற்கண்ட வாசகங்கள் அடங்குகின்ற கடிதத்தை எழுதினார்.

இந்திய மக்களோடு எமக்கு நல்லுறவு எப்போதும் உண்டு என்பதை வலியுறுத்தி சமாதானத்தை வேண்டி நின்றார்.

ஆனால் ராஜீவ்காந்தியிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. மாறாக இந்தியப் படையினரின் கொலைவெறியாட்டம் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு கடிதத்தை தேசியத் தலைவர் ராஜீவ்காந்திக்கு எழுதினார்.

“கனம் பிரதம மந்திரி அவர்களே, தமிழ் பகுதிகளில் சாவும் அழிவுமாக நிலைமை நாளுக்கு நான் படுமோசமடைந்து வருவதால், நான் மீண்டும் உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றேன்” என்று ஆரம்பித்த அந்தக் கடிதத்தில், இந்திப் படையினர் தமிழீழ மண்ணில் செய்யும் படுகொலைகளையும் அழிவுகளையும் விளக்கி, தமது தரப்பில் உள்ள நியாயப்பாடுகளையும் கூறி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

இந்தக் கடிதத்தை எழுதுகின்ற பொழுது பல இடங்கிளல் இந்தியப் படை விடுதலைப் புலிகளிடம் பலத்த அடி வாங்கியருந்தது. பல நூற்றுக் கணக்கான இந்தியப் படையினர் கொல்லப்பட்டிருந்தனர். இரண்டு நாட்களில் விடுதலைப் புலிகளின் கதையை முடித்து விடுவோம் என்று புறப்பட்ட இந்தியப் படை, யாழ் குடாவை கைப்பற்ற முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. சண்டைகளின் போது 18 இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டும் இருந்தனர்.

ஆயினும் தேசியத் தலைவர் இந்தியா மக்கள் மீது கொண்டிருந்த அன்பினாலும், தமிழீழத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்டு வரும் அழிவினை முடிவுக்கும் கொண்டு வரும் நோக்கத்தோடும் இந்திய ஆட்சியாளர்களை நோக்கி நட்புக் கரத்தை நீட்டினார்.

ஆனால் இந்திய அதிகார பீடம் மீண்டும் மீண்டும் தமிழீழம் நீட்டிய நட்புக் கரத்தை உதறித் தள்ளியது. போர் தொடர்ந்தது. ஒரு மாதத்திற்கு மேலாக பல இலட்சம் படையினரையும் கனரக மற்றும் நவீன ஆயுதங்களையும் பயன்படுத்தி சண்டை செய்த இந்தியப் படையினர் யாழ் குடாவைக் கைப்பற்றினர். விடுதலைப் புலிகள் வன்னிக் காடுகளுக்குள் பின்வாங்கினர்.

வன்னிக் காட்டில் இருந்தபடி தேசியத் தலைவர் மீண்டும் ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதினார். 13ஜனவரி1988 அன்று எழுதிய அந்தக் கடிதத்தில் தேசியத் தலைவர் சமாதானமும் இயல்புநிலையில் திரும்பும் வண்ணம் சமரச முயற்சிகளை மேற்கொள்ளும்படி மீண்டும் அன்போடு வேண்டிக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் மக்களின் உயிருக்கும் நலனுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுமாயின், இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்க தயார் என்றும், அதன் பின்பு அதிகாரம் மிக்க தமிழ் மாநில ஆட்சியமைப்பை உருவாக்கும் பேச்சுக்களின் முக்கிய பங்களிப்பை வழங்குவோம் என்றும் கூறி, போர் நிறுத்தம் செய்து பேச்சுக்களை தொடங்க உடன் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று தான் நம்புவதாகவும் தேசியத் தலைவர் ராஜீவ்காந்தியிடம் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தக் கடிதத்திற்கும் இந்திய அதிகாரம் எந்த ஒரு பிரதிபலிப்பையும் காட்டவில்லை. விடுதலைப் புலிகள் வேறு வழிகளிலும் இந்தியா மீதான அன்பையும் நல்லெண்ணத்தையும் தெரிவித்து நட்புக் கரத்தை நீட்டினார்கள். இந்திய ஈழப் போரில் கைது செய்யப்பட்ட இந்தியப் படையினரை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவித்தார்கள். ஆனால் இவைகள் எவையும் இந்தியா அதிகார பீடத்தின் சிந்தனையை மாற்றவில்லை.

விடுதலைப் புலிகளிடம் இருந்த நல்லெண்ண அழைப்பு வந்த நேரங்களில், அதை இந்தியா அதிகார பீடம் எவ்வாறு நோக்கியது என்பதை இந்திய அமைதிப் படைகளின் தளபதியாக இருந்த திபேந்தர் சிங் தன்னுடைய புத்தகம் ஒன்றில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

“கவலைக்குரிய விடயம் என்னவென்றால், விடுதலைப் புலிகளிடம் இருந்து இப்படியான வேண்டுகோள்கள் வரும் போதெல்லாம் அவர்களது கதை முடிவுக்கு வருகிறது என்றுதான் டில்லியில் கருதப்பட்டது. அதனால் பேசுவதை விடுத்து இராணுவ அழுத்தத்தை மேலும் முறுக்கி விட வேண்டும் என்பதுதான் நிலைப்பாடாக இருந்தது. கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் ஒரு தடவை டில்லிக்கு அனுப்பி வைத்த அவசரச் செய்தியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சி நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இவ் விடயம் குறித்து இந்திய இராணுவத் தலைமைச் செயலகத்திற்கு நான் அனுப்பி வைத்த செய்தியில் விடுதலைப் புலிகள் இயக்கம் அப்படியான ஒரு கட்டத்திற்கு வரவில்லை என்பதுதான் யதார்த்தம் என்று தெரிவித்தேன்”

திபேந்தர் சிங்கின் இந்தக் கூற்றின் மூலம் இந்திய அதிகார பீடம் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண அழைப்பை எந்தக் கண்ணோட்டத்தோடு நோக்கியது என்பது தெளிவாகின்றது.

இந்திய ஈழப் போர் முடிவுற்ற பின்னரும் விடுதலைப் புலிகள் இந்தியாவை நோக்கி பல முறை நட்பு பேணும் அழைப்பை விடுத்திருக்கிறார்கள். தற்பொழுது மாவீரர் தின உரையில் மீண்டும் ஒரு முறை தமிழீழ தேசத்தால் சமாதான அழைப்பு உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டிருக்கிறுது.

“எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம்” என்றும், “இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்” என்றும், “இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்” என்றும் மிகத் தெளிவாக இந்தியாவை நோக்கி நல்லெண்ண சமாதான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகள் நட்புக் கரத்தை நீட்டுகின்ற பொழுது, அதை பலவீனமாக நோக்குவது எவ்வளவு பெரிய தவறு என்பதை காலம் உணர்த்திச் சென்றுள்ளது. ஆனால் வரலாற்றில் இருந்து பாடம் கற்காத சிலர் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் அழைப்பை பலவீனமாகவே சித்தரித்து வருவது, அப்படிச் சித்தரிப்பவர்கள் குறித்த பரிதாபத்தையே ஏற்படுத்துகிறது.

http://www.webeelam.net

Friday, November 21, 2008

தமிழுணர்வாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்கள் வழங்கிய பேட்டியின் தொடர்ச்சி…..

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் நடிகர் சத்தியராஜ் அவர்கள் எமக்கு சென்ற வாரம் புதன் கிழமை அன்று பேட்டி வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதியை கடந்த வாரம் வெளியிட்டிருந்தோம். இப்பொழுது பேட்டியின் மிகுதியை தருகிறோம்.

நீங்கள் திடீரென்று படங்களில் நடிப்பதைக் குறைத்து விட்டீர்கள் போன்று தெரிகிறது. இதற்கு ஏதும் விசேட காரணங்கள் உள்ளதா?

விசேடமான காரணம் எதுவும் இல்லை. இந்த வருடம் என்னுடைய மகள் திவ்யாக்கும் அதன் பிறகு மகன் சிபிக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமண வேலைகள், குறிப்பாக சொல்வது என்றால் திருமணத்தில் பெரிய வேலையே எல்லோரையும் நேரில் பார்த்து அழைப்புக் கொடுப்பதுதான், 30 வருடம் நான் சினிமாத் துறையில் இருப்பதால் இதற்கு பெரிய ஒரு கால அவகாசம் தேவைப்பட்டது, அதனால் படங்களைக் கொஞ்சம் குறைக்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது. இப்பொழுது மறுபடியும் இந்த மாதம் 20ஆம் திகதியில் இருந்து நிறையப்; படங்களை ஒத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஒரு நாலைந்து வருடங்களாக பார்த்தீர்கள் என்றால், அதிகப் படங்களில் நடித்த கதாநாயகன் சத்தியராஜ் என்று பெயர் வரும். அடுத்த ஆண்டில் இருந்து மீண்டும் அப்படி வருகின்ற அளவிற்கு நிறைய படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

சினிமாத்துறையைப் பொறுத்தவரை நடிகர் ரஜனிகாந்தும் நீங்களும் ஒருவர் மீது ஒருவர் மதிப்போடும் புரிந்துணர்வோம் பழகுபவர்களாக அறியப்பட்டவர்கள். ஆனால் இடையில் நீங்கள் தெரிவித்த சில காட்டமான கருத்துகள் நடிகர் ரஜனிகாந்தையே குறிப்பிடுவதாக பலரால் புரிந்து கொள்ளப்பட்டது. அதன் பிறகு ஈழத் தமிழருக்கான உண்ணாவிரத மேடையில் ரஜனிகாந்தின் உரையின் முடிவில் அவரை மேடையில் வைத்தே பாராட்டினீர்கள்? நடிகர் ரஜனிகாந்த் பற்றி உங்களுடைய கருத்து என்ன? சற்று விரிவாக சொல்ல முடியுமா?

ரஜனி அவர்கள் என்னுடைய மிகச் சிறந்த நண்பர். என்னுடைய வளர்ச்சியில் மிகவும் அக்கறை உள்ளவர். கர்நாடகாத் தமிழர்கள் பிரச்சனை என்று வருகின்ற பொழுது, அவர் கர்நாடகாக்காரர்களிடம் மன்னிப்போ வருத்தமோ தெரிவித்த பொழுது, அதற்குத்தான் நான் எதிர்ப்புத் தெரிவித்தேன். மேடையில் நான் பேசிய பேச்சுக்கள் ரஜனிகாந்த் அவர்களுக்கு எதிராக பேசியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதே சமயம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அவர் தைரியமாக குரல் கொடுத்த பொழுது அவரைப் போய் பாராட்டினேன். அப்படி பாராட்டுவது ஒரு தமிழனுடைய கடமை என்ற முறையில் அவரை பாராட்டினேன்.ரஜனிகாந்த் அவர்கள் பற்றி என்னுடைய கருத்தை கேட்டிருக்கிறீர்கள். மிகவும் வசீகரமான ஒரு நடிகர். தமிழ் சினிமாவின் பார்வையாளர்களை அதிகப்படுத்திய பெருமை ரஜனி படத்தை சாரும். இதை நாம் மறுக்கவே முடியாது. தமிழ் படத்தினுடைய வியாபாரம், பார்வையாளர்கள் பன்மடங்கு பெருகியதற்கு முக்கியமான காரணம் ரஜனி அவர்களுடைய படங்கள். அந்த வகையில் அவரை நான் மிகவும் பாராட்டுகிறேன். ஒரு அற்புதமான நடிகர் அவர். நாம் பார்க்கிற ரஜனிகாந்தை தாண்டி ஒரு ரஜனி இருக்கிறார். ஒன்பது ருபாய் நோட்டு மாதவப்படையாச்சி மாதிரி வேடம் எல்லாம் மிகச் சிறப்பாக அவரால் செய்ய முடியும். ஆனால் ஒரு வட்டத்துக்குள் மாட்டிக் கொண்டதால் அவரால் வெளியில் வர முடியவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் என் வளர்ச்சியில் மிகவும் அக்கறை உள்ள ஒரு நல்ல நண்பர்.

திரையில் மட்டுமே பார்த்த நடிகர்களை அரசியலுக்கு வரும்படி நெருக்குதல் கொடுக்கும் ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதில் தவறு யார் பக்கம்?

இந்த அப்பாவித்தனத்தில் இருந்து ரசிகர்கள் வெளியே வர வேண்டும். என்றைக்குமே தவறு சம்பந்தப்பட்டவர்கள் மீதுதான். இங்கே ரசிகர்கள் மேல்தான் தவறு. சினிமாவில் பார்க்கின்ற கதாநாயகனை உண்மையிலேயே ஒரு வீரன் சூரன் என்று நீங்கள் நம்பக் கூடாது. நடிகர்களுடைய சமுதாயப் பார்வை என்ன? சமூகநீதியைப் பற்றி அவர்களுடைய சிந்தனை எப்படி இருக்கிறது? இதை எல்லாம் தெரிந்து கொண்டுதான் நீங்கள் உங்களுடைய அபிமான நடிகரை தலைவனாக நினைக்கலாமே தவிர மற்றையபடி வெறும் நடிகராகத்தான் அவர்களைப் பார்க்க வேண்டும். ஒரு நடிகர் மீது வெறும் நடிகராக அபிமானம் வைப்பது தவறு அல்ல. ஆனால் இவரால்தான் சமுதாய மாற்றம் ஏற்படும் அரசியில் மாற்றம் ஏற்படும், இவர்தான் எம்மை எல்லாம் காப்பாற்றுவார் என்றெல்லாம் நம்பி ஏமாறுவது உங்களுடைய அப்பாவித்தனம்தான்.இந்த நேரத்தில் என்னுடைய சகோதர நடிகர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், அரசியலுக்கு வருகிறேன் அரசியலுக்கு வருகிறேன் என்று வித்தை காட்டி ரசிகர்களை ஏமாற்றாதீர்கள். வருவது என்றால் வந்து விடுங்கள். வரவில்லை என்றால் வரவில்லை என்று சொல்லி விடுங்கள். ஏனென்றால் அந்த ரசிகர்களுக்கு உள்ளுரில் பல பிரச்சனைகள் இருக்கும். அரசியலுக்கு வருவேன் என்பது போன்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ரசிகர்களுக்கு உள்ளுரில் பிரச்சனை வரும். ரசிகனும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பான் “நமது அண்ணன் அரசியலுக்கு வரப் போகிறார்” என்று. அதை உள்ளுரில் சொல்லிக் கொண்டும் திரிவான். வருகிறேன் என்று விட்டு வராமல் விட்டீர்கள் என்றால் அப்பொழுது உள்ளுருக்குள் பல பிரச்சனை ரசிகனுக்கு ஏற்படும். அதனால் அரசியலுக்கு வருவது என்றால் வருகிறேன் என்று சொல்லி விடுங்கள். வரவில்லை என்றால் வரவில்லை என்று முடிவாகச் சொல்லி விடுங்கள்.

ஈழத் தமிழர் பிரச்சனையை தெளிவாக உணர்ந்தவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால் திரையுலகம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்துகின்ற போராட்டங்களில் சிலருடைய பேச்சுக்கள், ஈழ மதுரை, இலங்கை வாழ் இந்தியர்கள் போன்றன ஈழப் போராட்ட வரலாற்றுக்கு முரணாக அமைந்து விடுகின்றன. அவர்கள் நல்ல ண்ணத்தில் பேசினாலும், இப்படியான பேச்சுகள் தமிழ்நாட்டு மக்களிடமும் குழப்பமான கருத்துகளை பரப்பி விடும் ஆபத்தும் இருக்கிறது. வரும் காலத்தில் திரையுலகம் நடத்தக் கூடிய போராட்டங்களில் இது போன்ற குழப்பகரமான கருத்துகளை எப்படித் தவிர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள்?

நல்ல யோசனை. நிச்சயமாக பரிசீலிக்க வேண்டிய யோசனை. ஆர்வத்தில் வரலாறு தெரியாமல் சில பேர் குழப்பமாக பேசினாலும் கூட, அதற்கு பிறகு பேசியவர்கள் அருமையான விளக்கத்தையும் பதிலையும் கொடுத்து விடுகிறார்கள். இன்னொரு வகையில் பார்த்தால் இப்படி குழப்பமாக சிலர் பேசுவதால் பல உண்மைகள் வெளியில் வருகின்றன. ஈழத் தமிழர் வாழ்க்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்பதில் யாருக்கும் முரண்பாடு கிடையாது. சிலர் வரலாற்றை சரியாக புரிந்து கொள்ளாமல் பேசும் பொழுது, உதாரணத்திற்கு தோழர் திருமாவளவன் அங்கு வந்திருந்தார், அவர் அதற்கு சரியான விளக்கத்தை கொடுத்தார். இலங்கையில் உள்ள தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் என்ற உண்மையை சொல்வதற்கான சூழ்நிலை அவர்கள் தவறாக பேசியதால்தான் வருகிறது. அதாவது ஒரு வகையில் அந்த மைனஸிலும் ஒரு பிளஸ் கிடைத்திருக்கிறது. என்றாலும் இனிமேல் பேசுவதற்கு முன்னால் நீங்கள் சொன்னது போன்று, ஒரு சிறிய வகுப்பு நடத்தி விடுவது நல்லது என்று நினைக்கிறேன்.

ஈழத் தமிழர்களுக்கு ஈழப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

இன்று உலகமே வியந்து பாராட்டும் இனம் தமிழினம் என்ற பெயரை தமிழினத்திற்கு வாங்கிக் கொடுத்ததே ஈழத் தமிழினம்தான். அப்படிப்பட்ட தெளிவான சிந்தனை உள்ள ஈழத்தமிழர்களின் போராட்டம் நிச்சயமாக வெல்லும். அதே சமயத்தில் ஈழத் தமிழர்களிடம் இன்னும் ஒரு கோரிக்கையையும் வைக்கின்றேன். உங்களிடம் உள்ள மூடப் பழக்க வழக்கங்களை விட்டு விடுங்கள். தந்தை பெரியாரின் புத்தகங்களை படித்து, அவர் என்ன சொன்னார் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு, வாழ்க்கையை நடத்தும் பொழுது அல்லது ஒரு போராட்டத்தை நடத்தும் பொழுது இன்னும் அது நன்மையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இப்படிச் சொல்லி பேட்டியை முடித்துக் கொண்டார் நடிகர் சத்தியராஜ் அவர்கள். அவருடைய வேலைப் பழுக்களுக்கு மத்தியிலும் எமக்கு நேரம் ஒதுக்கித் தந்து எம்மோடு உரையாடி எமது கேள்விகளுக்கு தயங்காமல் பதில் சொன்னதற்கு நன்றி சொல்லி அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டோம்.

- வி.சபேசன்

Friday, November 14, 2008

தமிழுணர்வாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்களுடன் ஒரு பேட்டி

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களில் முன்னிற்பவர்களில் நடிகர் சத்தியராஜ் முக்கியமானவர். சிங்கள இனவெறி அரசின் தமிழினப் படுகொலைகளை கண்டிப்பதில் அவர் வெளிப்படுத்தும் ஆக்ரோசம் பலரை அவரை நோக்கித்த திரும்பிப்பார்க்கச் செய்திருக்கிறது.

சத்தியராஜ் அவர்களை http://www.webeelam.net/ இணையம் மற்றும் “ஒரு பேப்பர்” சார்பில் பேட்டி காண முடிவு செய்தோம். எமது தோழர்கள் அவரை புதன்கிழமை அன்று பேட்டி காணச் சென்ற பொழுது கூட, அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் ஒன்றில் கலந்து விட்டுத்தான் வந்திருந்தார். ஈழத் தமிழர்களுக்காக புதுடெல்லியில் ஆர்ப்பட்டம் செய்வதற்கு இந்தியக் கம்யூனிசக் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் செல்கின்ற தொடருந்து வண்டியை கொடி அசைத்து வழி அனுப்பி விட்டு வந்து அமர்ந்தவர் உடனேயே எம்முடைய கேள்விகளுக்கு கலகலப்பாகவும் அதேவேளை ஆணித்தரமாகவும் பதில்களைக் கூறத் தொடங்கினார். இனி பேட்டி..

“பெரியார்” திரைப்படத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தீர்கள். தந்தை பெரியார் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது. அவருடைய வீச்சு மிகப் பெரியது. ஒரு பெரும் நெருப்புப் போன்றவர் அவர். ஆனால் “பெரியார்” திரைப்படம் தந்தை பெரியாரை சரியான முறையில் வெளிக்கொணரவில்லை என்கின்ற விமர்சனம் சில பெரியாரியவாதிகளிடம் இருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “பெரியார்” திரைப்படம் பெரியாரை சரியான முறையில் வெளிக்கொணர்ந்ததா?

என்னுடைய நடிப்பு சிறப்பாக இருந்தது என்று நீங்கள் கூறியதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில பெரியாரியவாதிகளுக்கு படம் பற்றி சில குறைகள் இருக்கிறது. அது உண்மைதான். படப்பிடிப்பேன் போது நான் இயக்குனருடன் கலந்து ஆலோசித்தேன். உதாரணத்திற்கு பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டத்தை வசனம் மூலமாக சொல்லியிருப்போமே தவிர காட்சி மூலமாக சொல்லவில்லை. இயக்குனர் ஞானராஜசேகரன் ஒரு காலத்தில் சென்சார் போர்ட்டில் அதிகாரியாக இருந்தவர். சென்சார் வரையறைகளுக்கு உட்பட்டு எப்படி படம் எடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெளிவாகத் தெரியும். அவர் “மோகமுள்”, “பாரதி” என்று அனைத்துப் படங்களுக்கும் விருது வாங்கியவர். ஒரு இயக்குனரின் பார்வையின்படிதான் சினிமா. தந்தை பெரியார் மிகவும் வேகமான மனிதர். மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவார். ஆனால் சென்சார் சிக்கல்கள் வரும் என்பதகால் வேகமான பெரியாரை சற்று மிதப்படுத்தி விட்டோம். இயக்குனர் பார்வையில் அதுதான் சரி என்று இயக்குனர் நினைத்தார். பிள்iயார் சிலை உடைப்புப் போராட்டம், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றை வசனமாகத்தான் காட்டினோம்.இதை விட 95 வருடம் வாழ்ந்த பெரியாருடைய வாழ்க்கையை இரண்டரை மணி நேர சினிமாவாக சுருக்குவது மிகவும் சிரமமாக இருந்தது. எந்தச் செய்தியும் விட்டுப் போய்விடக் கூடாது, உதாரணத்திற்கு ஆரம்பகாலத்தில் தந்தை பெரியார் “மைனராக” இருந்தார். அதையும் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் எதிர்ப்பாளர்கள் “பெரியார் மைனராக இருந்ததை நீங்கள் சொல்லவில்லையே” என்று கேட்பார்கள். இதனால் அனைத்து விடயங்களையும் சொல்ல வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் இருந்ததால், நிறைய விடயங்களை நாம் தொட்டு தொட்டு போக வேண்டியதாகி விட்டது. இருந்தாலும் கூட பெரியாரியவாதிகளாக இல்லாதவர்களுக்கும் பெரியார் படம் தந்தை பெரியார் மீது ஒரு மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. இதை நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கிறேன். நீங்கள் சொன்ன குறைகள் இருந்தாலும் கூட, அந்தக் குறைகளையும் தாண்டி தந்தை பெரியாரை மூட நம்பிக்கையாளர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்த ஒரு மிகப் பெரிய பணியை இந்தப் படம் செய்திருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறீர்கள். நடித்தது போதும் என்று எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா? ஒரு பகுத்தறிவாளராகிய தங்களுக்கு சினிமாவை விட்டுவிட்டு சமூக அவலங்களுக்கு எதிரான மக்கள் பணியில் முற்றுமுழுதாக ஈடுபடுவோம் என்ற சிந்தினை ஏற்பட்டது உண்டா?

மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்ற சிந்தனை இருக்கிறது. ஆனால் சினிமாவை விட்டு விலகி வந்து அல்ல. நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள், நான் ஓய்வு எடுக்கும் இடமே படப்பிடிப்பு தளம்தான். பலர் சினிமா சூட்டிங் போவதை ஒரு பெரிய வேலையாக நினைப்பார்கள். ஆனால் நான் ஓய்வு எடுக்கும் இடமே அதுதான். சினிமாவை நான் விரும்பி, ஊரை விட்டு பெற்றோரிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து, பல கம்பனிகளில் கெஞ்சிக் கூத்தாடி அவ்வளவு சிரமப்பட்டு, நடிகன் ஆனேன். என்னை மாதிரி பல நடிகர்களும் இப்படித்தான். என்னால் சினிமாவை விட்டு விட்டு வர முடியாது. அது மட்டும் இல்லாமல் ஒரு நடிகனாக இருப்பதால், மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கிறது. சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற பொழுது அந்தக் குரல் நடிகனுடையதாக இருப்பதால் பரவலாக சென்று சேர்கிறது. அப்படி இருக்கின்ற பொழுது நடிகனாக இருப்பது ஒரு பிளஸ் பொயின்றாகத்தான் அமைகிறது. இதை விடுவதற்கு நான் விரும்பவில்லை.அதுவும் இல்லாமல் சில நடிகர்களுக்கு வயது ஆனதன் பிற்பாடு வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. என்ன வேடத்தில் நடிப்பது என்ற சிக்கல் வந்து விடும். ஆனால் சில நடிகர்கள், குறிப்பாக நடிகர் அமிதாப்பச்சனை எடுத்தீர்கள் என்றால், அவருக்கு வயது ஆக ஆகத்தான் பல வித்தியாசமான வேடங்கள் வருகின்றன. அது மாதிரி எனக்கும் வயது ஆக ஆக நல்ல வேடங்கள் வருகின்றன. உதாரணத்திற்கு இருபது வருடங்களுக்கு முன்னால் தந்தை பெரியாராக என்னால் நடித்திருக்க முடியாது. ஒன்பது ருபாய் நோட்டின் மாதவப்படையாச்சி வேடம் இருபது வருடங்களுக்கு முன்னால் போட்டிருந்தால் இத்தனை சிறப்பாக வந்திருக்காது. அப்பொழுதும் வேதம்புதிது பாலுத்தேவர் போன்ற வேடங்களை செய்திருந்தாலும், தற்பொழுது செய்வது போன்று முதிர்ச்சியோடு மாதவப்படையாச்சியை செய்திருக்க முடியாது. ஆகவே எனக்கு இன்னும் வயது ஆக பலவிதமான வேடங்களை செய்யக்கூடிய வாய்ப்பு வருகிறது. அந்த வாய்ப்பை வந்து ஒரு கலைஞனாக நான் இழக்க விரும்பவில்லை. ஒரு கலைஞனாக இருந்து கொண்டு சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற போது, அந்தக் குரல் பலமாக ஒலிக்கும் என்றும் நான் நம்புகிறேன்

இன்றைக்கு தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏற்பட்டிருக்கும் எழுச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்த உணர்வு நீடித்து நிற்குமா? அல்லது அரசியல் காரணிகளால் நீர்த்துப் போய் விடுமா?

நீடித்து நிற்கும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. இன்றைக்கு பல தமிழின உணர்வாளர்கள் பல உண்மைகளை வெளியில் சொல்லக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழக மக்கள் மத்தியில் ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழக மக்களுக்கு இருக்கும் சிறு சிறு சந்தேகங்களை பல தலைவர்கள் இன்றைக்கு நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்வது என்றால் இன்றைக்கும் நான் “உண்மை” பத்திரிகையில் அதன் ஆசிரியர் வீரமணி ஐயா எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தேன். ஈழத்தில் என்ன பிரச்சனை, ஈழ வரலாறு என்பன “உண்மை” பத்திரிகையில் தெளிவாக எழுதியிருக்கிறார். அதைப் போல தமிழின உணர்வாளர்கள் பலரும் பல மேடைகளில் பல உண்மைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் வரும்போது இந்த எழுச்சி நிச்சயமாக அடங்காது என்கின்ற நம்பிக்கை எனக்கு ஆழமாக இருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் நிவாரண நிதி சேகரிக்கப்படுகிறது. இது ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வு பற்றிய சிந்தனையை திசை திருப்பி விடும் என்று சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள். இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

திசை திரும்பாது என்பது என்னுடைய நம்பிக்கை. திசை திருப்பவும் மக்கள் விட மாட்டார்கள். இன்றைக்கு எல்லா இடங்களிலும் ஒரு எழுச்சி வந்திருக்கிறது, ஒரு புரிதல் வந்திருக்கிறது. அதனால் திசை திருப்புகின்ற வேலை நடக்காது. உடனடித் தேவை என்பது இந்த நிவாரணம்தான். நிரந்தரத் தேவை போர்நிறுத்தம், அதன் பிறகு பேச்சுவார்த்தை, அதன் பிறகு தீர்வு என்று இருந்தாலும் கூட உடனடித் தேவையாக நிவாரணம் இருக்கிறது. அதனால் இந்த நிவாரணம் இந்த நேரத்தில் அத்தியாவசியமானது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

நடிகர் சங்க உண்ணாவிரதத்தின் போது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்கால சந்ததியினருக்கு ஈழப் போராட்டம் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியத்தை நினைவுபடுத்திப் பேசினீர்கள். மிகவும் அருமையான ஒரு கருத்து அது. இந்தக் கருத்தை சொல்வதற்கு உங்களைத் தூண்டியது எது?

நான் சமீபத்தில் சில விடயங்கள் கேள்விப்பட்டேன். புலம்பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் அவர்களுடைய கடுமையான உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் பொருளாதாரரீதியா ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்கிறார்கள். அடுத்த சந்ததி பணக்கார வீட்டு பிள்ளைகளாக பிறந்து விட்டார்கள். இந்தப் பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு எப்பொழுதுமே இந்த வலி தெரியாது. அந்த வலியை நாம்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்த வலியை நாம் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால், அவர்களுக்கு அந்த வேகம் குறைந்து விடும். அந்த வேகம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை என்பதால்தான் அதை நான் அங்கே சொன்னேன். தெய்வமகன் படத்தில் கூட ஒரு காட்சி வரும். அப்பா சிவாஜியும் மகன் சிவாஜியும் பேசிக் கொண்டிருக்கின்ற பொழுது, மகன் சிவாஜி “உங்க அப்பா ஏழை எங்க அப்பா பணக்காரன்” என்று சொல்வதாக ஒரு காட்சி வரும். அதுவும் ஞாபகத்திற்கு வந்தது.

நடிகர் சங்க உண்ணாவிரதத்தின் போது சில நடிகர்கள் தெரிவித்த குழப்பமான கருத்துகள், நடிகர் ரஜனிகாந்த் பற்றி நினைப்பது என்ன? நடிகர்களை அரசியலுக்கு வரச் சொல்லி அழுத்தம் கொடுக்கும் ரசிகர்கள், இதில் நடிகர்கள் செய்ய வேண்டியது என்ன? ஈழத் தமிழ் மக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன போன்ற கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளிக்கிறார் சத்தியராஜ். பேட்டியின் தொடர்ச்சி அடுத்த வாரம் வெளிவரும்.

- வி.சபேசன்

Wednesday, November 05, 2008

ஒபாமா - உலக அரசியலில் மாற்றம் வருமா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்று விட்டார். போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகப் பெரிய வெற்றியை ஒபாமா பெற்றிருக்கிறார். ஒபாமாவின் வெற்றியை உலகமே கொண்டாடுகிறது.

ஜேர்மனியில் நேற்று இரவு ஒரு பேருந்து விபத்து நடந்தது. ஓட்டுனருடன் சேர்த்து 33 பேர் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. 20 பேர் உடல் கருகி மாண்டு போனார்கள். தப்பியவர்களில் பலர் ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வழக்கமாக இப்படியான ஒரு கோர விபத்து நடைபெற்றால், ஜேர்மனிய ஊடகங்கள் அல்லோலகல்லோப்படும். செய்திகள், ஆராய்ச்சிகள் என்று ஒரு வாரம் இதைப் பற்றித்தான் ஊடகங்கள் பேசும்.

ஆனால் ஜேர்மனியில் அனைத்து ஊடகங்களிலும் ஒபாமா சிரிக்கின்றார். செய்தி வாசிப்பவர்களும் சிரித்தபடி வாசிக்கின்றார்கள். பேருந்து விபத்தைப் பற்றிய செய்தியை இரண்டாவதாக வாசிக்கின்ற போது மட்டும் முகத்தை வருத்தமாக வைத்திருக்கிறார்கள். பின்பு மீண்டும் மலர்ந்த முகத்தோடு மறுபடியும் ஒபாமா பற்றி வேறு ஒரு செய்தியை வாசிக்கிறார்கள். இன்றைக்கு நடந்த விமான விபத்தில் தமது உள்நாட்டு அமைச்சரை பலி கொடுத்திருக்கின்ற மெக்சிக்கோவிலும் இதே நிலைமைதான் இருக்கக் கூடும்.

கட்டுரையின் மிகுதியை வாசிக்க..

http://www.webeelam.net

அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். http://www.webeelam.net/ ஐ தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். ஆனால் என்னுடைய பதிவுகளை அளிக்க முடியவில்லை. தமிழ்மணத்திற்கு எழுதிக் கேட்டேன். ஓடையில் தவறு இருக்கலாம் என்று பதில் வந்தது. ஓடையில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் பதிவுகளை சேர்க்க முடியவில்லை. இதைப் பற்றிய அனுபவம் உள்ளவர்களை உதவும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். http://www.webeelam.net/ இல் எழுதும் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க முடிந்தால், இங்கே என்னால் அதிகமான பங்களிப்பை செய்ய முடியும் என்று நினைக்கின்றேன்.

நன்றியுடன்

வி.சபேசன்

Monday, October 27, 2008

கலைஞரின் முடிவு நியாயமா?

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வதற்கான கெடுவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்ய மாட்டார்கள் என்பது போன்ற செய்திகள் வருகின்றன. இது பல ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையை சற்றுக் கவனித்துப் பார்த்தால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வது நல்லது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள முடியும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமமு பதவிகளை ராஜினமா செய்தால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை ஒரு குறிப்பிட்டளவிற்கு அனுமதித்துள்ள கலைஞரின் ஆட்சி இல்லாமல் போவதோடு, கலைஞரையும் இந்தத் தள்ளாத வயதில் சிறையில்தான் நாம் பார்க்க வேண்டி ஏற்படும்.

இதை நாம் சற்று விளக்கமாகப் பார்க்க வேண்டும். முதலில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று அனைத்துக் கட்சி மாநாட்டில் தீர்மானம் எடுத்தார்கள். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று வருகின்ற பொழுது, திமுக, தமிழ்நாடு காங்கிரஸ், பாமக, இரண்டு கம்யூனிசக் கட்சிகள், மதிமுக என்று அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்கில் வருவார்கள்.

ஆனால் இரண்டு நாட்களிலேயே காங்கிரஸ் கட்சி மாற்றிப் பேச ஆரம்பித்து விட்டது. டெல்லியைக் கேட்டுத்தான் முடிவு சொல்ல வேண்டும் என்று கூறி விட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அனைத்துக் கட்சி மாநாட்டில் எடுத்த முடிவிற்கு ஏற்றபடி தொடர்ந்தும் இருந்திருக்குமாயின் நிலைமை வேறு மாதிரி போயிருக்கும். உண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கலைஞரின் முதுகில் குத்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்துக் கொண்டு, கலைஞரால் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி, காங்கிரஸின் மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்தால், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களும் கலைஞரின் அரசுக்கு கொடுக்கும் ஆதரவை திரும்பப் பெற்று, கலைஞரின் ஆட்சியைக் கவிழ்ப்பார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியால் கலைஞரின் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது போனாலும் கூட, மத்திய அரசு மீண்டும் விடுதலைப் புலிகளைச் சாட்டியே கலைஞரின் அரசை கலைத்து விடும்.

இந்திய அரசின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதங்கள்தான். அது கவிழ்ந்தாலும் கூட காங்கிரஸ் கட்சி பெரிதாக கவலைப்படப் போவது இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் 2011இல்தான் வருகிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் கலைஞரின் ஆட்சி தமிழ்நாட்டில் இடம்பெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டால், அது கலைஞருக்கு பெரும் இழப்பாக இருக்கும். விரும்பத்தாகத பல விளைவுகளும் ஏற்படும்.

தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டால், மீண்டும் கலைஞரால் ஆட்சிக்கு வரமுடியாதா என்ற கேள்வி சிலருக்கு எழுலாம். அதனுடைய பதில் இன்றைய நிலையில் இல்லை என்பதே.

தமிழ்நாடு மக்கள் ஒரு போதும் ஈழத் தமிழர் விவகாரத்தின் அடிப்படையில் தேர்தலில் வாக்களிப்பது இல்லை. தமிழீழ மக்களுக்கு ஆதரவு கொடுத்தாலும், தமிழ்நாட்டை ஆள்வதற்கு யார் பொருத்தமானவர்கள் என்ற விடயத்திற்கே முன்னுரிமை கொடுப்பார்கள். தமிழீழத்தையும் தமிழ்நாட்டு அரசியலையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள்.

இப்பொழுது தமிழ்நாட்டு மக்கள் கலைஞரின் தலைமையில் நடக்கும் ஆட்சி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் திமுக அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை திமுகவை சேர்ந்தவர்களே ஒத்துக் கொள்கிறார்கள். மக்கள் திமுக அரசு மீது கோபத்தில் இருப்பதற்கு மின்வெட்டும், விலைவாசி உயர்வும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் தினமும் பல மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. பல இடங்களில் 12 மணி நேரம் மின்வெட்டு இருப்பதாக சொல்கின்றார்கள். திடீர் திடீரென்று மின்சாரம் இல்லாமல் போகின்றது. எப்பொழுது மீண்டும் மின்சாரம் வரும் என்று தெரியாத நிலை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் பல விதமான அசவுகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இது மக்களை அரசின் மீது கடும் கோபம் கொள்ளச் செய்திருக்கின்றது.

மின்வெட்டுக்கு திமுக அரசு மட்டும் காரணம் அல்ல. இதே நிலை கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இருக்கின்றது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்றபடி மின்உற்பத்தி அதிகரிக்கப்படுவதற்கு முன்னைய மத்திய மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம். முன்பு இருந்த அதிமுக ஆட்சி மின்சாரத்தை சேமித்து வைத்திருந்திருக்க வேண்டும். அதே போன்று திமுகவும் ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரத்தை சேமிக்க தொடங்கியிருக்க வேண்டும். யாரும் பெரிதாக அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை. தவறு அனைவர் மீதும்தான்.

ஆனால் தமிழ்நாட்டில் தற்பொழுது திமுக ஆட்சியில் இருப்பதால், அவர்கள் மீதே மக்களின் கோபம் திரும்புகின்றது.

கலைஞர் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவது பற்றியும் இன்றைக்கு எதிர்மறையான விமர்சனங்களே இருக்கின்றன. அனைவரும் தொலைக்காட்சி பார்ப்பதால்தான் மின்சாரம் போதவில்லை என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அத்துடன் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதில் பல குளறுபடிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

விலைவாசி உயர்வும் மக்களைப் பாடாய்ப்படுத்துகிறது. ஒரு ருபாய்க்கு அரிசி வழங்கியும், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து போய் நிற்கின்றது. இவைகள் எல்லாம் திமுக அரசு மீது மக்களை கடும் அதிருப்தி கொள்ளத் செய்திருக்கிறது.

இந்த நிலையில் திமுக அரசு கவிழ்ந்தோ, அல்லது கலைக்கப்பட்டோ தமிழ்நாட்டிற்கு தேர்தல் வந்தால், ஜெயலலிதாவின் அதிமுகவே அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்கின்ற நிலைமை இருக்கிறது. ஜெயலலிதா முதல்வரானதும் அவர் செய்கின்ற முதல் வேலையாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்தார் என்ற குற்றச்சாட்டில் கலைஞரை கைது செய்து உள்ளே தள்ளுவதாகவே இருக்கும். அப்படியே திருமாவளவன், பாரதிராஜா, ராமநாராயணன் என்று எல்லோரும் உள்ளுக்குப் போக வேண்டியதுதான். ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒரு மூச்சு விடக் கூட முடியாத நிலை தமிழ்நாட்டில் தோன்றும்.

(இப்படி ஒரு நிலை தோன்றினால் அதை எதிர்த்து உறுதியோடு போராடுவதற்கு திமுக போன்ற பெரிய கட்சிகள் தயாராக இல்லை என்பது இதில் ஒரு வேதனையான விடயம். ஈழத் தமிழர்களின் பொருட்டு சிறை செல்வதற்கு வெகு குறைவானவர்களே தயாராக இருப்பார்கள். அதுவும் "தேசிய பாதுகாப்புச் சட்டம்" பாயும் என்றால், சிறை செல்வதற்கு யார்தான் தயாராக இருப்பார்கள்?)

தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் அனைத்தும் அரசியல் கணக்குப் போடுவதில்தான் இன்றைக்கு மும்மரமாக நிற்கின்றன. அது தேவையானதும் கூட. இன்னும் ஆறு மாதத்தில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசின் மீது மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியை எப்படிச் சமாளிப்பது என்று திமுகவும் காங்கிரசும், மக்களின் அதிருப்தியை எப்படி வாக்குகள் ஆக்குவது என்று அதிமுக போன்ற எதிர்க்கட்சிகளும் கணக்கப் போட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு தமிழ்நாட்டின் கட்சிகள் பல வினோதமாதன நிலைப்பாடுகளை எடுப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். காங்கிரஸ் முதுகில் குத்தியும் கலைஞர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடரும் என்கிறார். ஜெயலலிதாவின் அறிக்கையால் வைகோ சிறைக்கு செல்லவேண்டி வந்ததன் பின்பும், அதிமுகவுடன்தான் கூட்டணி என்று மதிமுக சொல்கிறது. அனைத்தும் தேர்தல் படுத்தும் பாடு.

ஜெயலலிதா முதலில் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து விட்டு, திடீரென்று தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டதற்கும் இதுதான் காரணம். கலைஞர் பேசாது இருந்த பொழுது, சிங்கள அரசையும் இந்திய அரசையும் கண்டித்து அறிக்கை விட்டார். கலைஞரும் ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கத் தொடங்கியதும், அவருடைய மூளை வேறு கணக்குப் போடத் தொடங்கி விட்டது.

தமிழ்நாட்டு மக்களின் திமுக அரசு மீதான அதிருப்தியால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களைப் பெறக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மத்தியில் அமையப் போகின்ற ஆட்சிக்கு அதிமுகவின் தயவு தேவைப்படும் நிலை ஏற்படலாம். அப்பொழுது அதைப் பயன்படுத்திக் கொண்டு கலைஞரின் அரசைக் கலைக்கச் சொல்லி மிரட்டலாம். விடுதலைப் புலிகள் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிகரித்து விட்டது என்று மீண்டும் மத்திய அரசை நச்சரிக்கலாம் என்றெல்லாம் கணக்குப் போட்டு விட்டு, தன்னுடைய சுதியை மாற்றிக் கொண்டார்.

திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால்தான் வைகோவும் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருப்பது நல்லது என்று நினைக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மதிமுகவிற்கு ஒதுக்கும் நான்கு ஐந்து இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்குப் போடுகிறார். கலைஞரும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியை பகைத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் எதுவும் கிடைக்காமல் அல்லாட வேண்டியிருக்கும் என்று விட்டுக் கொடுத்துப் போகத் தொடங்கியிருக்கிறார்.

கலைஞர் காங்கிரஸ் கட்சியைப் பகைத்து, அதனால் ஆட்சி கவிழ்ந்து, அவரும் சிறைக்கு செல்வதை யாரும் இன்றைய நிலையில் விரும்ப மாட்டார்கள். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பதால்தான் ஓரளவு என்றாலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் இந்தப் பரப்புரையை தொடர்வதற்கு வாய்ப்பும் இருக்கின்றது. இது மிக முக்கியமானது.

இதுவரை நடந்த போராட்டங்களினால் கலைஞருக்கும் தமிழீழ மக்களிற்கும் சில நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. விலகிச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சி திமுகவுடன் சற்று நெருங்கி வரத் தொடங்கியிருக்கிறது. அத்துடன் இரண்டு வாரங்கள் மின்வெட்டுப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பேசவில்லை. தமிழீழ மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவு கிடைத்திருக்கிறது. சிங்கள அரசையும் சற்று எரிச்சல்படுத்த முடிந்திருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவை பெறுவதற்கான பரப்புரைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதுதான் தற்போது உள்ள அவசியமான ஒரு செயற்பாடு. இன்று இல்லாவிட்டாலும் நாளை இதனால் பல நன்மைகள் ஏற்படலாம். ஆகவே கலைஞரை வெறுமனே திட்டித் தீர்ப்பதை நிறுத்தி விட்டு, உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

- வி.சபேசன் (27.10.08)

Sunday, October 26, 2008

இந்தியக் கூட்டமைப்பு உடைவதற்கான காரணிகள்

தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான எழுச்சி தினம் தினம் புதிய பரபரப்புகளை உருவாக்கி வருகின்றது. மதிமுகவின் தலைவர் வைகோ, பொருளாளர் கண்ணப்பன், திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் போன்றோர் “இந்திய இறையாண்மைக்கு” எதிராக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை உருவாகின்ற ஒவ்வொரு முறையும் அதற்கு எதிரான சக்திகளும் சுறுசுறுப்பாக செயற்படத் தொடங்கும். ராஜீவ்காந்தி கொலையில் இருந்து இந்திய ஒருமைப்பாடு வரை பேசி மக்களுக்கு பூச்சாண்டி காட்ட முற்படும். இம்முறையும் அப்படியே நடக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு உயர்ந்த ஒரு இடம் இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள். பல்வேறுபட்ட கருத்துக் கணிப்புகளின் ஊடாக வெளிக்கொணரப்பட்ட உண்மை இது. தமிழீழத்திற்கும், தமிழீழ மக்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழத் தேசியத் தலைவருக்கும் உணர்வுபூர்வமான ஆதரவை தமிழ்நாட்டு மக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

இவற்றைக் கண்டு பதறியடித்துப் போய் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் தங்கபாலு, அதிமுகவின் ஜெயலலிதா, பிஜேபியின் ராதகிருஸ்ணன், இந்து முன்னணியின் ராமகோபாலன், மற்றும் துக்ளக் சோ, இந்து ராம், சுப்ரமண்யசுவாமி என்று எல்லொரும் கச்சை கட்டிக் கொண்டு அறிக்கை விடத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழின உணர்வாளர்களை கைது செய்யும்படி கலைஞரின் அரசு மீது இவர்கள் அழுத்தத்தை பிரயோகிக்கிறார்கள்.

தமிழீழத் தனியரசு உருவானால் தமிழ்நாடும் பிரிந்து போய் விடும் என்று இந்தியாவின் பார்ப்பனிய சக்திகள் நீண்ட காலமாகவே பரப்புரை செய்து வருகின்றன. ஆனால் இது ஒரு அர்த்தமற்ற வாதமாகவே இருக்கிறது. இந்தியாவின் மாநிலங்கள் தனி நாடு ஆவதற்கான காரணிகள் போதுமான அளவு இந்தியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே இருக்கின்றன. அந்தக் காரணிகளுக்கும் தமிழீழத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. யார் விரும்புகிறார்களோ, இல்லையோ இந்தியா இன்னும் 50 ஆண்டுகளுக்குள் பல தனிநாடுகளாக மாறிவிடும் என்று சொல்வதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு முக்கிய காரணங்களைப் பார்ப்போம்.

இந்தியாவில் இன்றைக்கு தேசியக் கட்சிகள் என்று சொல்லக் கூடிய கட்சிகளாக இரண்டு கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியுமே அவைகள். இந்த இரண்டு கட்சிகளும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் முக்கிய கட்சிகளாக விளங்குகின்றன.

ஆனால் இன்றைக்கு இந்த இரண்டு தேசியக் கட்சிகளையும் விட இந்தியாவின் மாநிலங்களில் உள்ள அந்தந்த மாநிலக் கட்சிகள் பலம் மிகுந்த கட்சிகளாக வளர்ந்து வருகின்றன. காங்கிரசும் பிஜேபியும் மூன்றாம் இடத்தில் கூட இல்லாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தேசியக் கட்சி என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்ற காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து போய் தனிக் கட்சி கண்டவர்களும் இன்றைக்கு மாநிலங்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

மாநிலக் கட்சிகள் பலம் பெற்று வருவதை கடந்த தேர்தல்களின் பெறுபேறுகளில் இருந்து சுலபமாக புரிந்து கொள்ள முடியும். 1951இல் நடந்த இந்தியாவின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் 400இற்கும் மேற்பட்ட இடங்களை தேசியக் கட்சிகள் கைப்பற்றிக் கொள்ள, வெறும் 34 இடங்களையே மாநிலக் கட்சிகள் பெற்றன. ஆனால் இன்றைய நிலையில் மாநிலக் கட்சிகள் பெரும் வளர்ச்சியடைந்து நிற்கின்றன.

1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏறக்குறைய 350 இடங்களை தேசியக் கட்சிகள் பெற்றுக் கொள்ள, 190 வரையான இடங்களை மாநிலக் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் பெற்றன. 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏறக்குறைய 300 இடங்களை தேசியக் கட்சிகள் பெற்றுக் கொள்ள, 240 வரையான இடங்களை மாநிலக் கட்சிகள் சுயேட்சைகளும் சேர்ந்து பெற்றன. 1999 தேர்தலில் பாரிய வித்தியாசம் இல்லையென்றாலும் மாநிலக் கட்சிகள் மேலும் சில இடங்களை அதிகமாகக் பெற்றுக் கொண்டன.

கடைசியாக 2004ஆம் ஆண்டு தேர்தலில் 283 இடங்களை தேசியக் கட்சிகள் பெற, மாநிலக் கட்சிகளும் சுயேட்சைகளும் 260 இடங்களைப் பெற்றுள்ளன. வெறும் 34 பேரோடு ஆரம்பித்த கணக்கு இன்றைக்கு 260 இடங்கள் வரை வந்து நிற்கின்றது.

சிலர் இந்தியாவின் கம்யூனிசக் கட்சிகளையும் தேசியக் கட்சிகளின் பட்டியலுக்குள் சேர்ப்பர். ஆனால் இந்தக் கட்சிகளும் மேற்கு வங்கம் போன்ற ஒரிரு மாநிலங்களில் மட்டுமே பலமாக இருக்கின்றன. அந்த மாநிலங்களை தாண்டி மற்றைய மாநிலங்களில் அந்தக் கட்சிகள் வலுவாக இல்லை. இந்தக் கட்சிகள் தமது கம்யூனிசக் கொள்கைகளை விட தாங்கள் ஆளுகின்ற மாநிலத்தின் நலன்களை முன்னிலைப்படுத்துவது இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விடயம்.

இந்த வகையில் மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் தமது பலத்தை அதிகரித்துக் கொண்டு போகின்றன. தேசியக் கட்சிகள் என்று சொல்லப்படுகின்ற காங்கிரசும், பிஜேபியும் பலமிழந்து, மாநிலக் கட்சிகளின் தயவில் நிற்க வேண்டிய நிலை ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் உருவாகி வருகின்றது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் என்பது காங்கிரசிற்கும் பிஜேபிக்கும் நடக்கின்ற போட்டி என்று ஒரு புறம் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் தேசியக் கட்சிகளுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும் நடக்கன்ற போட்டியாக மாறிவிட்டது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மாநிலக் கட்சிகள் மேலும் அதிக இடங்களை பெற்றுக் கொள்ளும் என்று உறுதியாக சொல்லலாம்.

இப்படி மாநிலக் கட்சிகள் பலம் பெற்று ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்குகின்ற பொழுது, மாநிலங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் இந்தியாவை பல தனிநாடுகளாக உடைந்து போக தூண்டும். மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் மாநிலக் கட்சிகள் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி பேச்சுவார்த்தை மூலம் தனித் தனி நாடுகளாக தமது மாநிலங்களை ஆக்கிக் கொள்ளும்.

இந்தியத் தேசிய உணர்வு நீர்த்துப் போய், மொழித் தேசிய உணர்வை மாநில நலன் சார்ந்த பிரச்சனைகள் மேலும் ஓங்கச் செய்யும். இதில் தண்ணீர் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும். வரும் காலத்தில் தண்ணீரால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை சுருக்கமாகப் பார்ப்போம்.

உலகின் மூன்றில் இரண்டு பாகமாக தண்ணீராக இருக்கின்றது. ஆனால் 96.5 வீதமான தண்ணீர் உப்புநீராக மனிதனுக்கு பிரயோசனம் அற்றுக் கிடக்கிறது. மிகுதி 3.5 வீதத்தில் கூட 1.8 வீதமான தண்ணீர் மனிதனுக்கு பிரயோசனப்படாதவாறு ஐஸ் கட்டியாக உறைந்து போயிருக்கிறது. ஆகவே 1.7 வீதமான தண்ணீரே மனிதனால் பயன்படுத்தப்படக்கூடிய நிலையில் இருக்கின்றது.

அதிகரித்து வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கையால் நீரின் தேவையும் அதிகரித்து வருகின்றது. சில நாடுகளின் நீரின் விலை எண்ணையின் விலையை தாண்டிப் போய் விட்டது. நீர்ப் பற்றாக்குறையால் ஆண்டு தோறும் 5 மில்லியன் மக்கள் உலகில் இறக்கின்றார்கள் என்பதில் இதில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி. இன்றைக்கு எண்ணைய்க்காக நடக்கும் யுத்தங்கள் போன்று வரும் காலத்தில் நீருக்காக யுத்தங்கள் நடக்கும் என்று பல நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. மனிதனால் நீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. நீர்ப் பற்றாக்குறை என்பது மனிதனை எந்தச் செயலையும் செய்யத் தூண்டும்.

மற்ற எல்லா நாடுகளையும் விட இந்தியாவிலேயே மக்கள் தொகை வேகமாக அதிகரித்துக் கொண்டு வருகின்றது. 2050இல் 200 கோடியை இந்திய மக்களின் தொகை தாண்டி விடும் என்று சொல்லப்படுகிறது. உலகில் உள்ள குடிநீரில் 4 வீதமான குடிநீர் இந்தியாவில் இருக்கின்றது என்பது இதில் இந்திய ஒருமைப்பாட்டிற்கு சாதகமான செய்தி. ஆனால் இந்த நீர் சில குறிப்பிட்ட மாநிலங்களிலேயே இருக்கின்றது என்பதும், பல மாநிலங்கள் பெரும் நீர்ப் பற்றாக்குறையில் திணறிக் கொண்டிருப்பதும் இதில் பாதகமான செய்தி.

2050இல் 200 கோடியை இந்திய மக்கள் தொகை தாண்டுகின்ற பொழுது நீர் வளம் உள்ள மாநிலங்களே நீருக்காக திண்டாட வேண்டி வரும். இவற்றை விட நீர் வளம் பொருந்திய மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை அமைத்து நீரைச் சுரண்டத் தொடங்கியிருக்கின்றன. மக்கள் தொகையும் பெருகி, இருக்கின்ற நீர்வளத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டி விட, மற்றைய மாநிலங்களோடு தற்பொழுது பகிர்ந்து கொள்கின்ற சிறிய அளவிலான நீரைக் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநில அரசு அயல் மாநிலங்களுடன் செய்து கொண்ட நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தது. அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. எததனையோ நடுவர் மன்றங்கள் அமைத்தும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரைக் கொடுக்க மறுக்கின்றது. ஆந்திராவிற்கும் கர்நாடகத்திற்கும் நதிநீர் பிரச்சனை இருக்கின்றது. இப்படி ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இடையில் இந்த நீர்ப் பிரச்சனை இருக்கின்றது.

இந்த நீர்ப் பிரச்சனை இந்தியத் தேசிய உணர்வை இல்லாமல் செய்கின்றன. மாநில தேசிய உணர்வுகள் மேலோங்குகின்றன. மற்றைய மாநிலத்தவர்கள் தமது மாநிலங்களில் குடியேறி தமது வளங்களை சுரண்டுவதாகக் கூட சில இடங்களில் குரல்கள் ஒலிக்கின்றன. மும்பையாக இருக்கட்டும், கர்நாடகமாக இருக்கட்டும், மாநில நலனுக்காக ஒலிக்கின்ற குரல்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலைதான் இன்றைக்கு இருக்கின்றது.

நீர்ப் பற்றாக்குறை விரைவில் மிகப் பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்று தெரிந்தும் இந்திய அரசு அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியதாக தெரியவில்லை. மழை நீரை சேகரிக்கின்ற, நதி நீர் கடலில் கலக்காமல் தடுக்கின்ற, கடல்நீரை குடிநீராக மாற்றுகின்ற என்று எந்த ஒரு ஏற்பாட்டிலும் இந்திய அரசு தீவிரமாக இறங்கியதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மாநில அரசுகளும் இதைப் பற்றி சிந்தித்ததாக தெரியவில்லை.

தொலைநோக்கு சிந்தனையோடு நீர்ப் பிரச்சனையை தீர்ப்பதற்கு நேரத்தையும் நிதியையும் ஒதுக்குவதை விட்டு விட்டு, இந்திய அரசு சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புகிறது. 1950களில் மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நிலாவுக்கு ராக்கட் அனுப்பி விளையாட்டுக் காட்டியதை, ஏறக்குறைய 40 ஆண்டுகள் கழித்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்து இந்திய அரசு செய்கிறது. இந்தியாவும் நிலவுக்கு ராக்கெட் அனுப்பியது என்கின்ற ஒரு பெருமையை தவிர, இதில் அப்படி என்ன வரப் போகிறது என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இந்தப் பெருமை இந்திய தேசிய உணர்வை தற்காலிகமாக கட்டிக் காக்கும் என்று இந்திய அரசு கணக்குப் போடக் கூடும்.

சச்சின் டெண்டுல்கரும், நிலாவில் இந்திய ராக்கட்டும் தண்ணீர் பிரச்சனையின் முன்பு எதுவுமே இல்லாமல் போய்விடும். தண்ணீர் பிரச்சனையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால், கடைசியில் இந்தியா பல நாடுகளாக உடைந்து போவதை தடுக்க முடியாது. இப்படி இந்தியா உடைவதற்கான காரணிகள் இந்தியாவிற்கு உள்ளேயே இருக்கின்றன. அதற்கு தீர்வு காண்பதை விட்டு விட்டு வேறு இடங்களில் இந்திய அரசு காரணத்தை தேடுகிறது. பொய்யான கற்பிதங்களை செய்கிறது.

கடைசியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். வரும் காலத்தில் மாநிலக் கட்சிகள் மேலும் பலம் பெற்று, மாநில உணர்வுகள் இன்னும் மேலோங்கி, தண்ணீர் பிரச்சனையும் பூதாகரமாக மாறி இருக்கின்ற நிலையில், “இந்தியாவோடு இருந்த காரணத்தால் எங்களால் தமிழீழ மக்களுக்கு உதவ முடியவில்லையே” என்ற வேதனையான உணர்வும் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்குமாயின், அது இந்தியா உடைவதை மேலும் துரிதப்படுத்துமே தவிர, குறைக்காது.

- வி.சபேசன்

Friday, October 17, 2008

நாமும் நடுவிரலைக் காட்டுவோம்!

அண்மையில் கனடாவில் நடந்த துடுப்பாட்டப் போட்டியின் போது அங்கு வாழும் தமிழர்கள் சிறிலங்கா அரசுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளையாட்டு மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத்தக்களவு தமிழர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். “சிறிலங்காவில் இனப்படுகொலையை நிறுத்து” என்ற பதாகையை தாங்கிய வானூர்த்தி ஒன்றும் பறக்கப்பட விடப்பட்டது.

துடுப்பாட்டப் போட்டியைக் காண வந்திருந்த சிங்களவர்கள் தமிழர்களின் இந்தப் போராட்டத்தை கேலி செய்தனர். கைவிரல்களை துப்பாக்கி போன்று மடக்கி, தமிழர்களை சுடுவோம் என்று எச்சரித்தனர். சிலர் நடுவிரலை காட்டினர். ஒரு சில சிங்களவர்கள் வன்முறையில் இறங்க முயன்ற பொழுது கனடாவின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இப்படி சிங்களவர்கள் வெளிநாட்டிலும் தமது இனவாதத்தை கைவிடவில்லை என்பதை நிரூபித்தனர். சாதாரண சிங்கள மக்கள் இப்படி தமிழர்களின் கவனயீர்ப்புப் போராட்டத்தினை கேலி செய்து அவமானப்படுத்த முற்பட, மைதானத்திற்குள் தடுப்பாட்டம் செய்து கொண்டிருந்த சிறிலங்காவின் துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்யா தமிழர்களை நோக்கி நடுவிரலை உயர்த்திக் காட்டினார்.

விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் இருக்கின்றன. விளையாடுபவர்களையோ, பார்வையாளர்களையோ அவமதிக்கும் செயலில் ஒரு விளையாட்டு வீரர் ஈடுபடக் கூடாது. ஆனால் இந்த விதிகளை புறந்தள்ளி விட்டு, சனத் ஜெயசூர்யா தமிழர்களை நோக்கி நடுவிரலைக் காட்டி, தமிழினத்தின் மீதான தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தினார்.

ஆயினும் சனத் ஜெயசூர்யா ஒரு விடயத்தில் கவனமாக நடந்து கொண்டார். தான் நடுவிரலைக் காட்டுவதை நடுவர்கள் யாரும் உணர்ந்து விடக் கூடாது என்பதற்காக தன்னுடைய கையை கன்னத்தோடு வைத்து, ஒரு பக்கவாட்டாக, தமிழர்களுக்கு மட்டும் தெரிவது போன்று நடுவிரலைக் காட்டினார். சில நொடிகளில் நடந்து விட்ட இந்தச் சம்பவத்தை பலர் கவனிக்கவில்லை. ஆனால் தம்மை நோக்கி நடுவிரல் காட்டப்பட்டதை மைதானத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தமிழர்கள் கண்டார்கள்.

மைதானத்திற்கு வெளியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தமிழர்களை நோக்கி விளையாட்டினை பார்க்க வந்த சிங்களவர்கள் நடுவிரலைக் காட்ட, மைதானத்திற்கு உள்ளே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி சனத் ஜெயசூர்யா நடுவிரலைக் காட்டினார்.

நடுவிரல் காட்டுவது பற்றி சில சுவையான தகவல்கள் இருக்கின்றன......

மிகுதியை வாசிக்க இங்கே வாருங்கள்

http://www.webeelam.net

Friday, September 12, 2008

பூசாரிகளை நோக்கி ஒரு அறைகூவல்!

கடந்த சில மாதங்களிற்கு முன்பு சமஸ்கிருத “மந்திரங்கள்” பற்றி நான் எழுதியிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழர்களின் விழாக்களில் சொல்லப்படும் வடமொழி மந்திரங்கள் எவ்வளவு தூரம் ஆபாசமும் அருவருப்பும் கொண்டவை என்பதை அதில் விளக்கியிருந்தேன்.

இந்த வடமொழி மந்திரங்களை மேலும் ஆராய்ந்து அதை ஒரு தொடராகவும் (இந்து மதமும் பெண்களும்) எழுதியிருந்தேன். அண்மையில் அதை ஒரு சிறு நூலாகவும் ஜேர்மனியில் வெளியிட்டிருந்தேன். இந்த நூலினைப் படித்த சில தீவிர மதவாதிகள் என்னை ஒரு பகிரங்க விவாதத்திற்கு வரும்படி அழைத்திருந்தார்கள்.

ஜேர்மனியில் உள்ள இந்து ஆலயங்களில் பூசை செய்கின்ற பல பூசாரிகள் விவாதத்திற்கு வருவார்கள் என்றும், எனக்கு அவர்கள் விளக்கம் தருவார்கள் என்றும் அவர்கள் எனக்கு அறியத் தந்திருந்தார்கள். அவர்களுடைய சவாலை நான் ஏற்றுக் கொண்டேன். பூசாரிகள் தங்கள் “பொன்னான” நேரத்தை ஒதுக்கி விவாதத்தில் கலந்து கொள்வதற்காக விவாதத்திற்கான நாளும் இடமும் ஒரு மாதத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கடந்த 7.09.08 ஞாயிற்றுக் கிழமை அன்று ஜேர்மனியில் உள்ள டோட்முண்ட் நகரில் விவாதம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. சரியான நேரத்திற்கு நான் சென்றிருந்தேன். எந்த ஒரு பூசாரியும் அங்கு வரவில்லை. இந்து மதத்தைப் பற்றி எள்ளளவு அறிவு கூட இல்லாத சிலர் அங்கு வந்து என்னுடன் அடாவடித்தனமாக நடக்க முற்பட்டார்கள். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பூசாரிகளின் வருகைக்காக நான் காத்திருந்தேன்.

ஒரு மணித்தியாலம் தாமதமாக “ஜெயந்திநாதசர்மா” என்கின்ற ஒரே ஒரு பூசாரி மட்டும் வந்தார். ஆனால் அவரால் என்னுடன் விவாதம் செய்ய முடியவில்லை. மந்திரங்களின் அர்த்தத்தை தன்னால் விளங்கப்படுத்த முடியாது என்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்ட அவர் அதற்கு தம்மிடம் வேறு ஆட்கள் இருப்பதாகவும், அந்த “அறிஞர்கள்” அனைவரும் விரைவில் எனக்கு விளக்கத்தை தருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் அவர் தனக்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டு சென்று விட்டார்.

ஏழாம் திகதி அன்று அனைத்து ஆலய பூசாரிகளும் என்னுடன் விவாதம் செய்து மந்திரங்கள் பற்றிய “புனிதமான(?)” விளக்கத்தை எனக்கு தருவார்கள் என்று கூறியதால்தான் நான் அன்றைக்கு அங்கு சென்றிருந்தேன். ஆனால் அங்கே வந்த ஒரேயொரு பூசாரியான ஜெயந்திநாதசர்மாவோ இன்னொரு நாள் விளக்கத்தை தருவதாக சொல்லி விட்டு ஓடி விட்டார்.

ஜெயந்திநாதசர்மா சென்ற பின்பும் என்னுடன் ஒரு சிலர் அடாவடித்தனமாக நடந்து கொண்டார்கள். அடியாட்கள் போன்று அவர்களின் நடத்தை இருந்தது. என்னை பேசவிடாது தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

ஆனால் ஒரு சிலர் ஆரோக்கியமான முறையில் தமது கருத்துக்களை முன்வைத்தார்கள். அவர்களுடன் நான் நடத்திய நீண்ட உரையாடலிற்குப் பின்பு அவர்களாகவே ஒரு தீர்மானத்தை முன்வைத்தார்கள். அதன்படி ஒரு ஆண்டு கால எல்லைக்குள் ஜேர்மனியில் நடைபெறும் ஆலய வழிபாடு, திருமணங்கள் உட்பட தமிழர் நிகழ்வுகள் அனைத்தும் தமிழில் நடைபெறுவதற்கு தாம் ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள். என்னுடைய நோக்கமும் விருப்பமும் அதுவாகவே இருந்தது.

இது உண்மையில் நல்ல ஒரு திருப்பமாக அமைந்தது. இந்து மதத்திற்கு ஆதரவாக வாதாட வந்தவர்களே இந்தத் திட்டத்தை முன்வைத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம். இவர்களின் இந்த முயற்சிக்கு என்னால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவதாக நான் வாக்குறுதி அளித்திருக்கிறேன். ஆனால் இங்கே உள்ள பூசாரிகளை மீறி இவர்களால் வெற்றி பெற முடியுமா என்பது இதில் உள்ள மிகப் பெரிய கேள்வி.

இப்பொழுது இதை இங்கே எழுதுவதன் மூலம் இரண்டு விடயங்களை பதிவு செய்ய நினைக்கின்றேன். முதலாவது ஜேர்மனியில் டோட்முண்ட் நகரில் கூடிய தமிழர்கள் ஒரு ஆண்டுக்குள் அனைத்து ஆலயங்கள், திருமணங்கள் போன்றவற்றில் தமிழைக் கொண்டு வரவதற்கு முடிவெடுத்துள்ளார்கள் என்பது.

மற்றது ஜெயந்திநாதசர்மா எனக்கு அளித்த வாக்குறுதி. இந்து மத அறிஞர்கள் ஒன்று கூடி பொது இடத்தில் பகிரங்கமாக என்னுடன் விவாதித்து என்னுடைய மந்திரங்கள் பற்றிய நூலுக்கு பதில் தருவார்கள் என்பது. இந்த வாக்குறுதியை இவர்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காக நான் இந்தப் பூசாரிகளை நோக்கி பகிரங்கமான சவாலை விடுக்கின்றேன்.

மந்திரங்கள் பற்றியும் அதன் பின்புலம் பற்றியும் நான் எழுதியவை மிகச் சரியானவை. இதை எங்கேயும் எந்த மேடையிலும் வந்து சொல்வதற்கு நான் தயார். இந்து மதம் பற்றி எந்தக் கொம்பனுடன் வேண்டுமென்றாலும் விவாதம் செய்வதற்கு நான் தயார். இது என்னுடைய பகிரங்கமான அறைகூவல். (குறிப்பு: இந்த அறைகூவல் பத்திரிகை, இணையத்தளங்கள், துண்டுப் பிரசுரங்கள் ஊடாக எதிர்தரப்பிற்கு அறிவிக்கப்படுகின்றது) - வி.சபேசன்

Tuesday, July 22, 2008

கமலின் பார்ப்பனிய முகம் (4)

தசாவதாரம் திரைப்படத்தின் மீது கருத்தியல் சார்ந்த காட்டமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பலர் சுட்டிக் காட்டும் ஒரு விடயம் “பூவராகன்” பாத்திரம். கமல் ஏற்ற பத்து வேடங்களில் ஒரு தலித் தலைவரின் வேடமாக பூவரகான் பாத்திரம் வருகின்றது. நிறைய புரட்சிக் கருத்துக்களைப் பேசிக் கொண்டே, கடைசியில் மேல்சாதியினருக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணிக்கிறது இந்தப் பாத்திரம்.

வராகம் என்றால் பன்றி என்று பொருள். தலித் தலைவர் ஒருவரின் பெயரை பன்றி என்று அர்த்தம் வருவதாகவும், உருவத்தை அழகற்ற விதத்திலும் கமல் உருவாக்கியதும், கடைசியில் அந்தப் பாத்திரத்தை மேல்சாதியினருக்காக உயிர்த் தியாகம் செய்வதாக சித்தரித்ததும் கமலுடைய பார்ப்பனிய முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்சாதியினருக்காக உயிரை தியாகம் செய்கின்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் அடிக்கடி காண்பிக்கப்படுகின்ற ஒன்று. இதற்கான சிந்தனை எங்கேயிருந்து வருகின்றது என்பதுதான் இங்கே முக்கியமானது. இந்தச் சிந்தனை மனு தர்மத்தில் இருந்து வருகின்றது.

மனு தர்மம் ஒவ்வொரு வர்ணத்தினருக்கும் கடமைகளை வகுத்துக் கொடுக்கின்றது. பாவங்களிற்கான தண்டனைகளை கூறுகிறது. சுவர்க்கத்திற்கு செல்வதற்கான வழி வகைகளை கூறுகின்றது.

மிக மிக தாழ்த்தப்பட்ட மக்களை மனு தர்மம் “பாகியசாதியினர்” என்று குறிப்பிடுகின்றது. இந்தப் “பாகியசாதியினர்” சுவர்க்கத்திற்கு செல்வதற்கு ஒரே ஒரு வழியை மட்டுமே மனு தர்மம் கூறுகிறது. அந்த வழியைத் தவிர வேறு எந்த வழியிலும் பாகியசாதியினர் சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது.

அந்த வழி எதுவென்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள். மனுதர்மத்தின் பாகியசாதியினனாகிய பூவராகன் பின்பற்றிய அதே வழிதான்.

மனு தர்மத்தின் பத்தாவது அத்தியாயம் 62வது சுலோகம் இப்படிச் சொல்கிறது: பார்ப்பனர், பசு, பெண், பாலன் இவர்களை காப்பாற்றுவதற்காக பாகியசாதியினர் பொருளை வாங்காமலே உயிரை விடுவது அவர்களுக்குச் சுவர்க்கத்திற்கு காரணமாகும்.

இந்தச் சுலோகம் கூறுவது போன்றே தலித்தாகிய பூவராகனும் பொருள் எதையும் வாங்காமலேயே தன்னை விட உயர்சாதியினரின் பாலர்களுக்காக உயிரை விடுகின்றான்.

மனு தர்மத்தில் இருந்து உருவான இந்தப் பார்ப்பனியச் சிந்தனையை தமிழ் சினிமா எத்தனையோ படங்களில் வெளிப்படுத்தியிருக்கிறது. தன்னை பகுத்தறிவுவாதி என்று பிரகடனப்படுத்தும் கமலும் அதே மனு தர்ம பார்ப்பனிய சிந்தனையை பூவராகன் பாத்திரம் மூலம் வெளிப்படுத்துகின்றார்.

இறந்து கிடக்கும் பூவராகனின் காலை ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் தொட்டுக் கும்பிடுகின்றார் அல்லது தொட்டுக் கும்பிடும்படி கேட்கப்படுகின்றார். மனநலம் குன்றிய ஒரு பார்ப்பன மூதாட்டி பூவராகனை தன்னுடைய மடியில் கிடத்தி தன்னுடைய மகன் என்று சொல்கிறார்.

பார்ப்பனர்களுக்குத்தான் நேரடியான சுவர்க்கம் உண்டு என்பது இந்து மதத்தின் பொதுவான கருத்து. மற்றைய வர்ணத்தினர் புண்ணியங்கள் செய்து, அடுத்த பிறப்பில் பார்ப்பனராக பிறந்துதான் சுவர்க்கத்தை அடைய வேண்டும். அடுத்த பிறப்பை எடுக்காமலேயே பார்ப்பனர்களைப் போன்று நேரடியாக சுவர்க்கம் செல்வது மற்றைய வர்ணத்தினருக்கு மிகவும் கடினம்.

மனு தர்மம் சொன்னதன்படி தன்னுடைய உயிரை தியாகம் செய்ததன் மூலம், பார்ப்பனர்களால் அடையக் கூடிய சுவர்க்கத்தை அடையும் தகுதி பெற்றுவிட்ட ஒருவனின் காலை தொட்டு வணங்குவது என்பதும், அந்த ஒருவன் பார்ப்பன மூதாட்டியால் “மகன்” என்று அழைக்கப்படும் “உயர்நிலையை” அடைவதும் பார்ப்பனிய இந்தத்துவ சிந்தனையின் எச்சங்களே தவிர வேறில்லை.

தசாவதாரத்தில் இஸ்லாமிய மக்கள் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்தும் இங்கே குறிப்பிட வேண்டும். ஏதோ அந்நிய தேசத்தவர்கள் போன்றும், நிறைய பிள்ளை குட்டி பெறுபவர்கள் போன்றும் இஸ்லாமியப் பாத்திரங்கள் காட்டப்பட்டது ஒரு புறம் இருக்கட்டும். கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம் உண்டு.

கமல் தாறுமாறாக லாரியை ஓட்டி இஸ்லாமியக் குடும்பம் வந்த வேன் ஒன்றின் மீது மோதி விடுகிறார். ரத்தக் காயம் பட்ட இஸ்லாமியப் பெண்மணியை இரத்தம் கொடுத்துக் காப்பாற்றுகிறார். தங்கள் மீது மோதி ரத்தக் காயம் ஏற்படுத்தியதே கமல்தான் என்று அறியாது, அந்த இஸ்லாமியக் குடும்பம் கமல் மீது நன்றி பாராட்டுகிறது. அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது.

அந்நிய தேசத்தவர்களான, நிறையப் பிள்ளை குட்டி பெறுபவர்களான இஸ்லாமியர்களை லாரியால் அடித்ததும் கமல்தான். அவர்களை காப்பாற்றியதும் அதே கமல்தான். காப்பாற்றிய கமலுக்கு இஸ்லாமியக் குடும்பம் நன்றியோடு இருக்கிறது. இந்த இடத்தில் குஜராத் மோடியின் சிந்தனை நினைவுக்கு வருகிறது.

ஆயிரக் கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்து விட்டு, அந்த மக்களுக்கு தான்தான் பாதுகாப்பு என்று மோடி சொல்கின்றார். உலகம் முழுவதும் இருக்கின்ற பேரினவாதச் சிந்தனை இது. “அடிப்பதும் நாங்களே, காப்பாற்றுவதும் நாங்களே” என்கின்ற இந்த பேரினவாதச் சிந்தனை இந்தியாவில் இந்துத்துவ பார்ப்பனியத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றது.

இந்தச் சிந்தனையின் வெளிப்பாடாக தசாவதாரத்தின் இஸ்லாமியக் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சியை புரிந்து கொள்கின்ற போது, கமலின் பார்ப்பனிய முகம் மேலும் கோரமடைகிறது.

இந்தத் தொடரை முடிக்கின்ற நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய இன்னம் ஒரு விடயம் உண்டு. கமல் தன்னுடைய படங்களில் அடக்குமுறையாளர்களான பார்ப்பனர்களை அப்பாவிகளாக சித்தரிக்கின்றார். அந்த அப்பாவிகளை காப்பதற்கு தான் இருப்பதாக காட்சி அமைக்கிறார். தசாவாதரம் படத்தின் இந்துத்துவ பார்ப்பனிய நலன்களுக்கு ஏதுவான வகையில் காட்சிகளை அமைக்கின்றார்.

இப்பொழுது இதன் அடிப்படிடையில் ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின் போது கமல் பேசிய பேச்சினை சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். சத்தியராஜ் போன்றவர்கள் தமிழ் தேசிய உணர்வை தட்டி எழுப்புவது போன்று பேச, அதை தணிப்பதற்கு கமல் தன்னுடைய “வள வளா” பேச்சின் மூலம் முனைந்தார்.

தமிழ் தேசிய உணர்வை தணிக்க வேண்டும் என்ற சிந்தனை பார்ப்பனிய நலன் சார்ந்தது அன்றி வேறென்ன?

கமலின் பார்ப்பனிய முகம் பற்றிய குற்றச்சாட்டை கமலினுடைய ஒரு வசனத்தையோ அல்லது ஒரு காட்சியையோ வைத்து நான் கூறவில்லை. தொடர்ந்து அவரைக் கவனித்த பின்பே இக் குற்றச்சாட்டை வைக்கின்றேன். இந்தத் தொடரின் நான்கு பாகங்களையும் படித்த உங்களுக்கு இது புரியும் என்று நம்புகின்றேன்.

பார்ப்பானாக நடிக்கின்ற சூத்திரனையும், சூத்திரனாக நடிக்கின்ற பார்ப்பானையும் நம்பாதே என்பது தந்தை பெரியாரின் கருத்து. இந்தக் கருத்து உண்மை என்று இதுவரை பல பார்ப்பனர்கள் தமது நடவடிக்கைகள் மூலம் எமக்கு நிரூபித்திருக்கிறார்கள். கமலின் அண்மைய நடவடிக்கைகளும் அவர் பற்றிய மறுவாசிப்பின் தேவையை உணர்த்தி நிற்கின்றன.

- வி.சபேசன்

http://www.webeelam.net

Saturday, July 12, 2008

கமலின் பார்ப்பனிய முகம் (3)

பார்ப்பனர்களை அப்பாவியாக சித்தரிக்கின்ற அரசியலுக்கு துணை போகின்ற கமல்ஹாசன் இந்துத்துவத்தின் இன்னொரு அரசியலுக்கும் தசாவதாரத்தின் மூலம் துணை போகின்றார். பாபர் மசூதி பிரச்சனைக்குப் பின் நடைபெற்றுவரும் இந்த அரசியலை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

“அறை எண் 305இல் கடவுள்” படத்தில் ஒரு காட்சி வரும். பிரகாஸ்ராஜ் ஒவ்வொரு மதத்தினதும் கடவுளின் வடிவத்தில் தோன்றுவார். இந்து மதத்தின் முறை வருகின்ற போது அங்கே விஸ்ணுவின் வடிவத்தில் பிரகாஸ்ராஜ் தோன்றுவார். இதுதான் அந்த அரசியல்.

சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ் சினிமாவின் பக்திப் படங்களைப் பார்க்கின்ற போது விஸ்ணு ஒரு துணைப் பாத்திரமாகத்தான் இருந்தார். இரண்டு மூன்று வசனங்களுக்கு மேல் அவருக்கு இருக்காது. தெலுங்கிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட “பக்த பிரகாலதா” போன்ற ஒரிரு திரைப்படங்களைத் தவிர மற்றைய பக்திப் படங்கள் அனைத்தும் “சிவமயமாகவே” இருந்தன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்சினிமாவில் இந்துக்களின் முதன்மையான கடவுள் என்றால் அது சிவன்தான். இன்றைக்கு நிலைமை மாறி விட்டது. சிவன் பின்தள்ளப்பட்டு விஸ்ணு முன்னிறுத்தப்பட்டு வருகின்றார். அதுவும் பாபர் மசூதி விவகாரத்திற்கு பின்பு ராமர், விஸ்ணு, கிருஸ்ணர் போன்ற கடவுள்கள் முன்னிறுத்தப்படுவது அதிகரித்துள்ளது.

முன்பு தமிழ் சினிமாவில் நாமத்தோடு கூடிய முகங்களை வெகு குறைவாகத்தான் பார்க்கலாம். அப்படி வருகின்ற முகங்களும் அநேகமாக நகைச்சுவைப் பாத்திரமாகத்தான் இருக்கும். ஆனால் இன்றைக்கு கிராமத்தில் இருந்த வருவதாகக் காட்டப்படும் பாத்திரங்கள்தான் அநேகமாக விபூதியை பூசிக் கொண்டு வருகின்றன. நகரத்து நாயகர்கள் நாமத்தோடு வருகின்றார்கள். பார்ப்பனப் பாத்திரங்களைக் காட்டுவது என்றால் கிராமமோ, நகரமோ அங்கே நாமம்தான் இருக்கின்றது. கடந்த சில வருடங்களாக மெது மெதுவாக நடந்து வருகின்ற இந்த மாற்றம் தற்பொழுது யாரும் உணராத வண்ணம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

மிகவும் திட்டமிட்டுச் செய்யப்படும் நுண்ணியமான அரசியல் இது. ராம ஜென்ம பூமி விவகாரத்தில் பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் விரும்பியது போன்று இந்துக்கள் என்று கருதப்படுபவர்களில் பெரும்பான்மையான மக்கள் ராமருக்காக கொதித்து எழவில்லை. இதற்கு தந்தை பெரியார் போன்றவர்கள் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்ச்சி ஒரு காரணமாக இருந்தாலும் வேறு ஒரு காரணமும் இருக்கிறது.

தம்மை இந்துவாக கருதி இந்துக் கடவுள்களை வணங்குகின்ற எததனையோ பேர் ராமனையோ, விஸ்ணுவையோ வணங்குவது இல்லை. ராமனை ஒரு கதையின் நாயகனாக மட்டும் கருதுகின்ற கோடிக் கணக்கான இந்துக்கள் இருக்கின்றார்கள். இவர்கள் சிவன் போன்ற வேறு கடவுள்களை தமது முதற் கடவுளாக வணங்கி வருபவர்கள். இவர்களுக்கு மத நம்பிக்கை இருந்தும், ராம ஜென்ம பூமி விவகாரம் இவர்களிடம் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் விஸ்ணு சார்ந்த கடவுள்களை மக்களிடம் முன்னிறுத்துவதற்கு பல வழிகளில் இந்துத்துவ சக்திகள் முயன்று வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதிதான் சினிமாக்களில் விஸ்ணு, ராமர் போன்றவற்றை இந்து மதத்தின் பெரும் கடவுள்களாக முன்னிலைப் படுத்துவது என்பது. இந்த வேலையை “தசாவதாரம்” திரைப்படம் மிகச் சிறப்பாகச் செய்கிறது.

மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படம் இந்துத்துவத்திற்கு சார்பான படமாக சிலரால் விமர்சிக்கப்படுவது உண்டு. மணிரத்தினமும் “துலுக்கச்சி” போன்று சொற்களின் மூலம் தன்னுடைய உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருந்தாலும், “பம்பாய்” திரைப்படத்தை ஆழமாக ஆராயாது விட்டால், மணிரத்தினத்தின் இந்துத்துவ சிந்தனையை கண்டுபிடிப்பது மிகக் கடினமாகி விடும். அந்தளவிற்கு மணிரத்தினம் தன்னை நடுநிலையாளராகக் காண்பிக்கும் நோக்கோடு படத்தில் வரும் காட்சிகளை அமைத்திருப்பார்.

இஸ்லாமியர்கள் வன்முறையில் இறங்குகின்ற காட்சி வந்தால், அடுத்ததாக இந்துக்கள் வன்முறையில் இறங்குகின்ற காட்சி வரும். ஒரு இஸ்லாமியர் கொல்லப்படும் காட்சி வந்தால், அடுத்து ஒரு இந்து கொல்லப்படும் காட்சி வரும். இப்படி இரு தரப்பும் சமாமான முறையில் தாக்கப்படுகின்ற மற்றும் தாக்குகின்ற கட்சிகளை மணிரத்தினம் கவனம் எடுத்து உருவாக்கியருப்பார்.

இந்தக் குறைந்தபட்ச நடுநிலைமையைக் கூட கமல் தன்னுடைய தசாவதாரம் படத்தில் வெளிப்படுத்தவில்லை. முற்று முழுதாகவே வைணவ சார்பு நிலை எடுக்கின்றார்.

தசாவதாரம் திரைப்படத்தின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். 12ஆம் நூற்றாண்டில் படம் ஆரம்பிக்கின்றது. சைவ மன்னனாகிய இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளின் சிலையை பெயர்த்து எடுக்கின்றான். அதை தடுக்க முயல்கின்ற வைணவப் பார்ப்பனராகிய ரங்கராஜன் நம்பி (கமல்) சைவ மன்னனாலும் சைவர்களாலும் துன்புறுத்தப்பட்டு பெருமாளின் சிலையோடு சேர்த்து கடலில் வீசி சாகடிக்கப்படுகின்றார்.

அந்தக் காட்சி முழுவதும் சைவர்கள் வில்லன்களாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். “கல்லை மட்டும் கண்டால்” பாடலின் வரிகளும் சைவத்தை தாழ்த்தியும், வைணவத்தியும் உயர்த்தியும்தான் எழுதப்பட்டிருக்கின்றன. “பெருமாள் புராணம்” அத்துடன் முடிந்து விடவில்லை. படம் முழுவதும் பெருமாள் வருகின்றார். கடைசியில் சுனாமி உருவாவதற்கு காரணமாக இருந்து சில இலட்சம் மக்களை கொன்று கோடிக் கணக்கான மக்களைக் காப்பாற்றுகின்றார்.

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். தசாவதாரம் பற்றி புளுகாங்கிதப்பட்டு விமர்சிக்கும் பகுத்தறிவு நண்பர்களும் உண்டு. கமல் மதத்திற்கு, கடவுளுக்கு எதிராக வசனங்களைப் பேசுகின்றார், பெருமாள் சிலையை சுடுகாடு வரைக்கும் தூக்கிக் கொண்டு ஓடுகின்றார், அதை தூக்கி எறிந்து விளையாடுகின்றார், “கடவுள் இருந்தால் நல்லா இருக்குமே” என்று வசனம் பேசுகின்றார் என்றெல்லாம் தமக்கு சார்பான விடயங்கள் பற்றி எழுதியும் பேசியும் தசாவதாரம் பகுத்தறிவைப் பறைசாற்றும் ஒரு திரைப்படம் என்று அடித்துக் கூறுகிறார்கள்.

ஆனால் இவர்களின் விமர்சனத்தில் அடிப்படையிலேயே ஒரு தவறு இருப்பதாக நான் கருதுகிறேன். படத்தின் நாயகனின் கோணத்தில் இருந்து விமர்சனத்தை செய்யக் கூடாது. பார்வையாளனின் கோணத்தில் இருந்துதான் ஒரு படத்தை விமர்சிக்க வேண்டும்.

பெருமாள் சிலை தூக்கி எறியப்படுவதைப் பார்க்கின்ற அதே பார்வையாளன்தான், அந்தச் சிலை ஒவ்வொருமுறையும் நிமிர்ந்த நிலையில் கம்பீரமாக பரவசப்படுத்தும் பின்னணி இசையோடு தரையில் வந்தமர்வதையும் பார்க்கின்றான். அப்பாவிக் கோவிந்து (கமல்) “கடவுளுக்கு” பக்கத்தில் தான் நிற்பதை அறியாமல் “கடவுள் இருந்தால் நல்லா இருக்கும்” என்று வசனம் பேசுவதையும் பார்க்கின்றான்.

சுனாமி வந்தது பற்றி கமல் செய்யும் தர்க்கங்களை கேட்கும் கடவுள் நம்பிக்கையுள்ள பார்வையாளன் சுனாமி வந்ததற்கு காரணமான சில விடயங்களை படத்தில் கவனிக்கின்றான். கோடிக்கணக்கான மக்களை காப்பதற்கும், தான் மீண்டும் வெளியில் வருதற்கும் சுனாமியை பெருமாள் கொண்டு வருகின்றார். ஆயினும் சுனாமியில் இலட்சக் கணக்கில் மக்கள் இறக்கின்றனர். அதற்கும் பார்வையாளன் சில காரணங்களை படத்தில் காண்கின்றான். பெருமாளை கடலில் வீசியதால் ஏற்பட்ட பாவத்தாலும், பார்ப்பான் ஒருவனை துன்புறுத்தி பெருமாளோடு கட்டி கடலில் வீசியதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோசத்தாலும் இந்த அழிவு நேர்ந்தது என்பது அந்தப் பார்வையாளனுக்குப் புரிகிறது. புரியாது போய் விடுமோ என்ற அச்சத்தில் ரங்கராஜ நம்பியும் பூணுலை உயர்த்தி வசனம் வேறு பேசி வைக்கிறார்.

பெரும்பான்மையான பகுத்தறிவாளர்களை தன்னுடைய கோணத்திலும், பெரும்பான்மையான கடவுள் நம்பிக்கையாளர்களை பார்வையாளனின் கோணத்திலும் படத்தைப் பார்க்க வைப்பதில் கமல் கண்ட வெற்றிதான், இன்றைக்கு இந்தப் படம் இப்படித் தாறுமாறாக வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது.

பகுத்தறிவாளர்களை திருப்திப்படுத்தும் படத்தின் வசனங்களும் காட்சிகளும் இருக்கட்டும். கடவுளை நம்புபவர்களின் மனதில் கமல் பெருமாளை பதிய வைத்து விட்டார். அதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம். வெளிப்படையாகவே வைணவத்திற்கு போட்டியான சைவத்துடன் மோதி, கிளைமாக்ஸில் வைணவம் வெற்றி பெறுகிறது.

பாபர் மசூதி பிரச்சனைக்குப் பிறகு அதிகரித்த அளவில் வைணவம் சார்ந்த கடவுள்களை முன்னிறுத்தி நடத்தப்பட்டு வரும் பல்வேறு விதமான பரப்புரைகளுக்கு சினிமாவும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்ற நிலையில், அதற்கு கமலும் தன்னுடைய தசாவதாரம் திரைப்படம் மூலம் துணை போய்விட்டார்.

தொடரும்..

- வி.சபேசன்

Saturday, July 05, 2008

கமலின் பார்ப்பனிய முகம் (2)

கமல்ஹாசன் தன்னை திராவிட கழகத்தை சேர்ந்த ஒருவராக பிரகடனப்படுத்தியிருப்பவர். அதனாலேயே அவரால் பல விமர்சனங்களில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடிகிறது. பகுத்தறிவுவாதிகளும் “எம்மவர்” என்ற பாசத்தோடு கமல் என்ன செய்தாலும் அதற்கு அவர்களே ஒரு சமாதானத்தையும் சொல்லி விட்டு போய் விடுகிறார்கள்.

பார்ப்பனர் அல்லாத இயக்குனரான சங்கரை ஒரு பார்ப்பனியவாதியாக இனங்காண முடிந்த இவர்களுக்கு கமலைப் பற்றி ஒரு சிறு சந்தேகம் கூட வரவில்லை என்பது ஆச்சரியமான விடயம்தான்.

தமிழ் சினிமாவில் பார்ப்பனர்களை மிகவும் அப்பாவிகளாக காட்டுகின்ற ஒரு வழக்கம் பல ஆண்டுகளாகவே நிலவி வருகின்றது. பார்ப்பன சமூகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தொடக்கி வைத்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது.

பார்ப்பனர்கள் ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்ற வரலாற்று உண்மையை உணர்ந்து தமிழ்நாட்டில் உருவான விழிப்புணர்ச்சி பெரும் திருப்பங்களை உருவாக்கியது. இந்த விழிப்புணர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழ்நாட்டின் அரசியலையே மாற்றியது. இந்த வரலாற்று உண்மைக்கு எதிரான முறையில் பார்ப்பனர்கள் உருவாக்க முனையும் மாய விம்பத்தின் ஒரு பகுதிதான் சினிமாக்களில் பார்ப்பனர்களை அப்பாவியாகக் காட்டுவது என்பது.

ஆதாவது ஒரு மக்கள் கூட்டத்தை கேவலப்படுத்தி அடக்கி வைத்திருந்த அடக்குமுறையாளர்களை “தனி மனித அப்பாவிகள்” என்று காட்டுகின்ற ஒரு அரசியல் இங்கே ஒளிந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்ப்பனர்களை “சூழ்ச்சி மிக்கவர்களாகவும்”, “சமூக அக்கறை அற்றவர்களாகவும்” சித்தரித்த கமல் தற்பொழுது பார்ப்பனர்களை தொடர்ந்து அப்பாவிகளாகவே சித்தரித்து வருகின்றார். இதனுடைய உச்சக்கட்டமாக வசூல்ராஜா திரைப்படத்தில் வந்த காட்சி அமைந்தது.

கமல் படிக்கும் மருத்துவக் கல்லூரியில் ஒரு அப்பாவி இளைஞனை மூத்த மாணவர்கள் “ராக்கிங்” (பகிடிவதை) செய்ய முனைவார்கள். அந்த அப்பாவி இளைஞனின் சட்டையைக் கழற்றி விட்டு அவனை நடனம் ஆடச் சொல்வார்கள். சட்டை கழற்றப்பட்ட அந்தப் அப்பாவி இளைஞனின் மேனியை பூணூல் அலங்கரித்திருக்கும்.

உண்மையில் அந்தக் காட்சியில் பூணூல் வர வேண்டிய எந்த அவசியமும் இல்லை. பூணூல் அணியாமல் கூட ஒரு அப்பாவி இளைஞனை சித்தரித்திருக்க முடியும். உண்மையான அப்பாவிகள் பூணூல் அணியாதவர்கள்தான். ஆனால் கமல் அங்கே பூணூலை திணிக்கிறார். கமல் வந்து தன்னையும் “ராக்கிங்” செய்யச் சொல்வார். மாணவர்கள் அமைதியாக இருப்பார்கள். “உருத்திராட்சக் கொட்டை அணிந்தவனை மட்டும்தான் ராக்கிங் செய்வீர்களா” என்று ஒரு கேள்வியைக் கேட்பார். பின்பு தன்னுடைய புஜபலத்தைக் காட்டி ராக்கிங் செய்த மாணவர்களையே ராக்கிங் செய்து விட்டு, பூணூல் அணிந்த அப்பாவியிடம் கமல் சொல்வார் “கவலைப்படாதே! நான் இருக்கிறேன்”.

வசூல்ராஜா திரைப்படத்தின் இயக்குனர் சங்கரோ, மணிரத்தினமோ இல்லை என்பதாலோ, இந்தப் படத்தில் கமல்தான் கதாநாயகன் என்பதாலோ இந்தக் காட்சி சொல்கின்ற செய்தியின் அர்த்தம் மாறிவிடப் போவதில்லை.

கமல் தயாரித்த நளதமயந்தியிலும் மாதவன் ஒரு அப்பாவிப் பார்ப்பனர்தான் என்பதையும் இங்கே கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கமல் கடவுளை நம்பாதவராக இருக்கலாம். ஆனால் பார்ப்பனியம் கொண்டிருக்கும் முகங்களில் பலவற்றை கமலும் கொண்டிருக்கிறார் என்பதுதான் இங்கு பிரச்சனை. கமலை ஒரு முற்போக்குவாதி என்று உறுதியாகச் சொல்பவர்கள் இதை மறுத்து பல உதாரணங்களைக் காட்டக் கூடும். கமல் பெண்கள், பாலியல் போன்ற விடயங்களில் முற்போக்காகச் சிந்திப்பவர் என்று பலர் கருதுகிறார்கள். “நாயகன்” திரைப்படத்தில் கமல் பாலியல் தொழில் செய்கின்ற ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக வருகின்ற காட்சியை உதாரணமாகச் சொல்பவர்கள் இருக்கின்றார்கள். “மும்பை எஸ்பிரஸ்” திரைப்படத்தில் வேறொருவருக்கு ஆசைநாயகியாக இருந்த ஒரு பெண்ணை கமல் திருமணம் செய்வது போன்று வரும்.

இப்படியான காட்சிகளின் மூலம் தமிழ் சினிமா கொண்டிருக்கும் உழுத்துப்போன பாரம்பரியங்களை உடைப்பதற்கு கமல் முயல்கின்றார் என்கின்ற கருத்து பலரிடம் உண்டு. ஆனால் இந்தக் காட்சிகளை நாம் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். இந்தக் காட்சிகள் பார்வையாளர்களின் மனதில் எவ்வித அதிர்வுகளையோ நெருடல்களையோ ஏற்படுத்தவில்லை. வெகு இயல்பாக பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளை ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது.

நாயகன் திரைப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்பவன் ஒரு தாதா. கடத்தல்களையும் கொலைகளையும் செய்கின்ற ஒருவன், அதாவது சட்டவிரோத தொழில் செய்கின்ற ஒருவன் சட்டவிரோத தொழில் செய்கின்ற ஒரு பெண்ணை திருமணம் செய்கின்றான். சோடிப் பொருத்தம் சரியாக இருக்கின்றது. பார்வையாளனும் இயல்பாக அதை ஏற்றுக்கொள்கிறான்.

மும்பை எஸ்பிரஸ் திரைப்படத்தில் கதாநாயகன் ஒரு திருடன். ஒரு திருடன் வேறொருவருக்கு ஆசைநாயகியாக இருக்கின்ற ஒரு நடனப் பெண்மணியை திருமணம் செய்வது பற்றியும் எந்தப் பார்வையாளனும் ஆட்சேபிக்கப் போவது இல்லை. கமல் தன்னை ஒரு “ஹீரோ” என்கின்ற வட்டத்தைத் தாண்டி படத்தில் வரும் பாத்திரமாக பார்வையாளர்களை ஏற்றுக் கொள்ளச் செய்ய வைப்பதில் வெற்றி பெற்று பல வருடங்கள் ஆகி விட்டது. ஆகவே ஒரு ஹீரோ பாலியல் தொழிலாளியை திருமணம் செய்கின்றான் என்ற காட்சியை விட, ஒரு கடத்தல்காரன் ; ஒரு பாலியல் தொழிலாளியை திருமணம் செய்கின்ற காட்சியே அங்கே முன்னிற்கிறது. இதில் எங்கே இருக்கிறது புரட்சி… இன்ன பிற?

கமல் தன்னை வித்தியாசமானவராகக் காட்டிக் கொள்ள முயன்றாலும், கடைசியில் பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனையோடு சமரசம் செய்து கொள்கிறார். கமல் பலரால் போற்றப்படுவதற்கு காரணமான எத்தனையோ விடயங்கள் உண்மையில் அப்படி அல்ல என்பதை சுட்டிக் காட்டவே “நாயகன்”, “மும்பை எக்ஸ்பிரஸ்” போன்ற உதாரணங்களை கூறினேன். இப்பொழுது மீண்டும் பார்ப்பனியம் சார்ந்த விடயத்திற்கு வருவோம்.

தசாவதாரம் படத்தின் மூலம் பார்ப்பனிய நலன் சார்ந்த ஒரு அரசியலுக்கு கமல் துணை போகின்றார். பாபர் மசூதி இடிப்பிற்கு பின்பு திரைப்படத் துறையில் பார்ப்பனிய சக்திகள் அதிகரித்த வகையில் செய்து வருகின்ற இந்த அரசியலை கமலும் செய்கிறார். அது என்ன?

தொடரும்….

- வி.சபேசன்

Friday, July 04, 2008

கமலின் பார்ப்பனிய முகம்

தசாவதாரம் - பலராலும் பல விதமாக விமர்சிக்கப்பட்டு விட்டது. என்னுடைய பங்கிற்கும் தசாவதாரம் படத்தைப் பார்த்த பொழுது, பார்த்து முடித்த பின்பு எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.

கமல் மீது எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு. தம்மைப் முற்போக்குவாதிகளாக காட்டிக் கொள்கின்ற பார்ப்பனர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்பு தம்முடைய உண்மையான பார்ப்பனிய முகத்தை காட்டி விட்டுப் போயிருக்கின்ற வரலாற்றுப் பதிவுகள் கமலைப் பார்க்கின்ற பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கும்.

ஆரம்பத்தில் முற்போக்குச் சிந்தனைகளோடு கதைகளை தந்த சுஜாதா கடைசியில் திரைப்படத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த பொழுது பார்ப்பனிய சக்திகளுடன்தான் கைகோர்த்துக் கொண்டார். பார்ப்பன சங்கத்தில் முழக்கமிடவும் செய்தார்.

கடவுள் மறுப்புக் கொள்கையுடையவராக தன்னை அறிமுகம் செய்த மணிரத்தினம், பார்ப்பன இந்துத்துவ நலன் சார்ந்த திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார். 39 வயதை அடைவதற்குள் இறந்து விட்ட பாரதி கூட ஆங்காங்கே தன்னுடைய பார்ப்பனிய சிந்தனைகளை வெளிப்படுத்தித்தான் இருக்கிறார்.

எம்மவர் என்று கருதப்பட்ட எழுத்தாளர் ஞானியும் தன்னுடைய பார்ப்பனிய முகத்தை வெளிப்படுத்தத் தொடங்கி விட்டாரா என்ற சந்தேகம் வருகின்ற அளவிற்கு அவருடைய இன்றைய எழுத்துக்கள் சில அமைகின்றன.

சுஜாதா போன்றவர்களின் சேர்க்கையால் ஏற்பட்ட விளைவோ தெரியவில்லை, கமலும் தன்னுடைய பார்ப்பனிய முகத்தை மெதுமெதுவாக வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பதாக அண்மைக் காலமாக நான் சந்தேகப்படுகின்றேன். தசாவதாரம் திரைப்படமும் அந்தச் சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.

கமல் ஒரு சிறந்த கலைஞன் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. தசாவதாரம் படம் மிகவும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. பல காட்சிகள் தமிழ் சினிமாவிற்கு புதிது. மீண்டும் ஒரு முறை பார்க்கலாம். கமல் கடைசியாக திரைக்கதை அமைத்த சில படங்கள் வெற்றி அடையாத போதும், தசாவதாரத்தின் மூலம் மீண்டும் தன்னை ஒரு சிறந்த திரைக்கதை அமைப்பாளராக கமல் நிரூபித்திருக்கிறார்.

சுனாமி வருகின்ற பொழுது கடற்கரையில் நிற்கின்ற ஜப்பானிய கமல் “சுனாமி மீண்டும் வருகிறது” என்று கத்துவார். ஒரு ஜப்பானியனைத் தவிர வேறு யார் அந்த இடத்தில் நின்றிருந்தாலும் இந்த வசனம் பொருந்தியிருக்காது. டிசம்பர் 2004 வரை தமிழர்கள் இலக்கியங்களில் வருகின்ற கடற்கோள்கள் பற்றி படித்திருக்கிறார்களே தவிர, சுனாமியை கண்டது இல்லை. (சுனாமி வருவதற்கு முன்பே கமல் தன்னுடைய “அன்பே சிவம்” படத்தில் சுனாமி பற்றி பேசியிருப்பார்.) ஜப்பானில்தான் அடிக்கடி சுனாமி வருவது உண்டு. “சுனாமி” என்ற சொல்லே ஜப்பானிய சொல்தான்.

சுனாமி வருவதை சொல்கின்ற ஜப்பானிய கமல் எவ்வித திணிப்பும் இன்றி, படத்தைப் பார்ப்பவர்களுக்கும் எவ்வித நெருடலும் ஏற்படாத வண்ணம் அங்கே வந்து சேர்கிறார். இப்படி படத்தில் வியப்பதற்கு பல விடயங்கள் உண்டு. முக்கியமாக கமலுடைய உடல்மொழியை சொல்ல வேண்டும்.

படத்தில் “மேக்அப்” படுமோசம் என்று படம் பார்த்த எல்லோரும் சொல்லி விட்டார்கள். முகமூடிகளை மாட்டியது போன்று இருக்கிறது. இந்தியன் திரைப்படத்தில் ஏற்பட்ட பிரமிப்பு தசாவதாரத்தில் ஏற்படவில்லை. சிரிப்புத்தான் வந்தது. முகமூடி போட்டது போன்ற “மேக்அப்” காரணமாக முகம் நடிக்க முடியாது போக, தன்னுடைய உடல்மொழி நடிப்பால் அந்தக் குறையை கமல் சமன் செய்கிறார். அமெரிக்க வில்லன், மனநலம் குன்றிய பாட்டி, தலித் தலைவர், ஜப்பானியர் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்றபடி கமலின் உடல்மொழி அமைகிறது. ஜப்பானிய கமல் சற்றுக் குள்ளமாக தெரிவதன் காரணம் கூட கமலின் நடிப்பே.

தசாவதாரம் படம் பற்றி எழுதுவதை விட கமலின் பார்ப்பனிய முகம் பற்றி எழுதுவதே என்னுடைய நோக்கம் என்பதால், படம் பற்றி எழுதுவதை குறைத்துக் கொண்டு விடயத்திற்கு வருகிறேன்.

கமல் பார்ப்பனிய சிந்தனைக்கு எதிரான ஒருவர் என்பதுதான் பலருடைய கருத்து. பார்ப்பனர்களை மறைமுகமாகச் சாடுகின்ற காட்சிகளை தன்னுடைய படங்களில் அவர் வைத்திருக்கின்றார். தேவர்மகன் படத்தில் கூட இரண்டு சகோதரர்களின் பகையில் வயிறு வளர்க்கின்ற ஒரு பார்ப்பனப் பாத்திரத்தை படைத்திருப்பார். நடிகர் மதன்பாப் செய்த அந்தப் பாத்திரம் இரண்டு சகோதரர்களின் பகையை அதிகரிக்கின்ற கைங்கர்யங்களிலும் ஈடுபடும்.

மகாநதியில் ஒரு பார்ப்பனர் (பூர்ணம் விஸ்வநாதன்) உலகில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டும் பகவான் மேல் பாரத்தை போட்டு விட்டு பேசாது இருப்பார். அக்கிரமத்திற்கு எதிராக போராடுகின்ற குணத்தோடு கமல் தோன்றுவார். இப்படி வெளிப்படையாக இல்லையென்றாலும் பார்ப்பனர்களை மறைமுகமாக என்றாலும் தன்னுடைய படங்களில் கமல் தோலுரித்திருக்கிறார்.

ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென்று வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் பார்ப்பனர்களுக்கு உதவுவதற்கு “நான் இருக்கிறேன்” என்று புஜபலத்தை காட்டியபடி வெளிப்படையாகவே வந்து குதித்தார் கமல்.

தொடரும்….

http://www.webeelam.net

Tuesday, April 29, 2008

கலைஞரின் பேச்சு சரியா?

"இலங்கையில் அமைதி ஏற்படுவதற்காக அங்கு மோதலில் ஈடுபடும் இரண்டு பிரிவினர்களுக்கும் இடையே இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த தீர்மானத்திற்கான விவாதத்தின் போது சர்ச்சைக்குரிய பல விடயங்கள் தமிழ்நாட்டின் சட்டசபையில் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த அநியாயங்கள் பற்றி பேசியவர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால் பிழையான ஒரு வரலாற்றுத் தகவல் அவைக் குறிப்பில் பதியப்பட்டு விட்டது. அதற்கு காரணம், அதைக் கூறியது தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

"இந்தியா தலையிட்டு இரண்டு பிரிவினரையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர வேண்டும்" என்ற தீர்மானத்தை கொண்டு வந்த கலைஞர் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் போகிற போக்கில் அவர் சொல்லி விட்டு போயிருக்கும் சில வார்த்தைகள் ஈழத் தமிழர்களை புண்படுத்தி விட்டன என்பதுதான் இங்கே வருந்தத்தக்க விடயம்.

அவர் சொன்னது இதுதான். "ஒரு குழுவாக அவர்கள் இருந்து போராடியிருந்தால் நேபாளம் போல வெற்றி பெற்று இருப்பார்கள். வேறு பல நாடுகளை போல விடுதலை பெற்றிருப்பார்கள். போராளிக் குழுக்களுக்குள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் இந்த போராட்டம் பலவீனமாகி விட்டது. இன்று அவர்களுக்கு பரிந்துரை செய்து பேச வேண்டி இருக்கிறது. இலங்கையில் விடுதலை பெற சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று போராளிகளுக்கு வேண்டுகோள் விடும் நிலைமை ஏற்பட்டது. ஒரு குழு இன்னொரு குழுவுடன் மோதும் போக்கை கடைப்பிடித்தது. தலைவர்கள் கொல்லப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள், சுடப்பட்டார்கள். அங்கு ம.பொ.சி. போன்று இருந்த அமிர்தலிங்கம் கொல்லப்பட வேண்டியவரா? விருந்துக்கு அழைக்கப்பட்டு சிற்றூண்டி வழங்கி தேனீர் எடுத்து வர அவரது மனைவி மங்கையற்கரசி சென்று வருவதற்குள் கணவரும் உடனிருந்த தோழர்களும் பிணமாக கிடந்தார்கள். போராளிகளே அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு போராட்டத்தை பலவீனமாக்கி விட்டார்கள்"

இதுதான் கலைஞர் சொன்னது. இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

நேபாளத்தில் நடந்தது அங்கே உள்ள அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம். ஒரு நாட்டுக்குள்ளேயே நடந்த பிரச்சனை அது. இலங்கைத் தீவில் நடப்பது ஒரு தேசிய இனம் தன்னை அடக்குகின்ற ஒரு நாட்டிடம் இருந்து விடுதலையாகும் போராட்டம். இது இரண்டு நாடுகளுக்கு (தமிழீழம், சிறிலங்கா) இடையிலான போராட்டம். இரண்டு தேசிய இனங்களுக்கு (தமிழர், சிங்களர்) இடையிலான போராட்டம்.

ஒரு தேசிய இனம் இன்னொரு நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு போராடுகின்ற போது, பல குழுக்களாக போராடி வெற்றி பெற முடியாது. அப்படி வெற்றி பெற்ற வரலாறும் உலகத்தில் வெகு வெகு குறைவு. அந்த வெற்றிகளும் தற்காலிகமான வெற்றிகளாக போனதையும் வரலாறு எமக்கு சொல்லித் தந்திருக்கிறது.

நேபாளத்தைப் போன்று ஒரு நாட்டுக்குள்ளேயே ஆட்சி மற்றும் அரசு மாற்றத்திற்கு போராடுகின்ற மக்கள் எத்தனை ஆயிரம் குழுக்களாக வேண்டுமென்றாலும் போராட முடியும். ஆனால் ஒரு பெரும்பான்மை இனத்திடம் இருந்து விடுதலை பெறப் போராடும் ஒரு இனம் அப்படிப் போராட முடியாது. நேபாளத்தை ஈழத்துடன் ஒப்பிடுவது மிகத் தவறான ஒன்று.

போராளிக் குழுக்களுக்குள் நடந்த மோதல்கள் போராட்டத்தைப் பலவீனப்படுத்தி விட்டன என்றும் கலைஞர் சொல்கிறார். இதை அவர் அன்றும் சொன்னார், இன்றும் சொல்கிறார். இப்படி ஒரு கருத்து உண்மையிலேயே அவருடைய மனதில் ஆழப் பதிந்துள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் இங்கே ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இந்திராகாந்தியின் பிரத்தியேகச் செயலாளராக இருந்தவர் இந்திராகாந்தி குறித்து ஒரு நூல் எழுதியிருக்கிறார். இந்திராகாந்தி விடுதலைப் புலிகள் குறித்து கொண்டிருந்த கருத்து அந்த நூலில் கூறப்படுகிறது. 'ஏனைய தமிழ்ப் போராளிக் குழுக்களையும் விட, தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினர்கள் தனித்துவமாகவும், கொள்கைப் பிடிப்பு உடையவர்களாகவும், கட்டுக்கோப்பாகவும் உள்ளார்கள். எதிர்காலத்தில், இந்தியாவின் அழுத்தத்திற்கு, விடுதலைப் புலிகள் பணிய மாட்டார்கள். ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கம், தன்னுடைய இலட்சியத்தில் உறுதி கொண்ட ஓர் இயக்கமாக வளர்ந்து வருகின்றது. அவர்களின் வளர்ச்சியை நாம் தடுக்க வேண்டும்." இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கருத்து இங்கே இந்திராகாந்தியின் கருத்தாக வெளிப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கோடு பல போராளிக் குழுக்களை அன்றைக்கு உருவாக்கிது இந்தியாதான். அந்தப் போராளிக் குழுக்களை விடுதலைப் புலிகளோடு மோதுவதற்கு தூண்டியதும் இந்தியாதான். கலைஞரும் அன்றைக்கு ரெலோ இயக்கத்திற்கு ஆதரவாக நின்று போராளிக் குழுக்களின் மோதல்களுக்கு ஏதோ ஒரு வகையில் துணை போனார் என்பதும் வரலாற்றில் உள்ள ஒரு செய்தி.

இந்தியாவின் திட்டப்படி பல போராளிக் குழக்கள் வளர்ச்சி பெற்று, விடுதலைப் புலிகளை இல்லாது ஒழித்து, கடைசியில் இந்தியா காட்டுகின்ற இடத்தில் கையெழுத்தைப் போட்டு விட்டு, அப்படியே தமிழீழ விடுதலைப் போராட்டமும் முடிவுறுவதானது கலைஞரின் விருப்பமாக இருக்காது என்று நாம் நம்புகிறோம். தமிழீழ போராட்டத்தை திசைதிருப்பிய மற்றைய போராளிக் குழுக்களை விடுதலைப் புலிகள் அடக்கி வைத்ததாற்தான் தமிழீழப் போராட்டம் இன்று வரை தக்க வைக்கப்பட்டு முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

கலைஞர் இன்னும் ஒரு குற்றச்சாட்டையும் சொல்லியிருக்கிறார். அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது பற்றிய விடயத்தை பேசியிருக்கிறார். தற்பொழுது இதற்கு என்ன அவசியம் வந்தது என்று தெரியவில்லை. தமிழ்செல்வனிற்கு அழுத என்னுடைய மனம் அமிர்தலிங்கத்திற்கும் அழுகிறது என்ற செய்தியை சொல்லி தன்னை நடுநிலையாளராக காட்ட கலைஞர் முனைகிறார் என்பது புரிகிறது.

அமிர்தலிங்கத்திற்காக யார் அழுகிறார்களோ இல்லையோ, தமிழீழ மக்கள் அழவில்லை என்பது இங்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விடயம். மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு, இந்தியப் படையின் பாதுகாப்பு இருந்தும் தன் சொந்தத் தொகுதியில் போட்டியிடாது, மட்டக்களப்பில் போட்டியிட்டு, அங்கும் வெற்றி பெறாது, தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர்தான் அமிர்தலிங்கம்.

இதை விட அமிர்தலிங்கம் கொலைக்குப் பின்னால் இந்திய உளவுத் துறையின் கரங்கள் இருக்கின்றன என்பதும் இங்கு கட்டாயம் சொல்லப்பட வேண்டிய ஒரு விடயம்.

தமிழீழ மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் துரோகம் புரிந்த பலரை விடுதலைப் புலிகள் தண்டித்துள்ளார்கள். அவைகளுக்கான உரிமைகோரல்களையும் விடுதலைப் புலிகள் செய்துள்ளார்கள். அதே போன்று சிங்களத் தலைவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களுக்கான பொறுப்பு விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட நேரங்களில் சிலவற்றை மறுத்து இருக்கிறார்கள். சிலவற்றை மறுக்காது மௌனமாகவும் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் உறுதியான முறையில் உத்தியோகபூர்வமாக மறுத்து விட்டு, பின்பு ஏற்றுக்கொண்ட ஒரு சம்பவமாக அமிர்தலிங்கம் மீதான தாக்குதல் அமைகிறது. முதலில் மறுப்பு, பின்பு உரிமை கோரல் என்று நடந்த இந்த குழப்பத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது.

தமிழீழ மக்களுக்கு செய்த துரோகத்தின் காரணமாக ஏறக்குறைய அனைத்துப் போரளிக் குழுக்களுமே அமிர்தலிங்கத்திற்கு மரண தண்டனை விதிப்பதாக அறிவித்திருந்தன. இது 80களின் தொடக்க காலத்தில் நடந்த ஒரு விடயம்.

1989ஆம் ஆண்டு ஜுலை 13ஆம் நாள் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் அமிர்தலிங்கம் என்பவரையே மக்கள் ஏறக்குறைய மறந்து போயிருந்தார்கள். ஒரு செல்லாக்காசாகிப் போய் விட்ட அவரை தண்டிக்க வேண்டும் என்ற சிந்தனையும் விடுதலைப் புலிகளிடமும் இல்லாது போயிருந்தது. அப்பொழுது சிறிலங்காவின் பிரேமதாசா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் கொழும்பில் நின்றனர்.

அந்த நேரத்தில் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினருக்குள் ஆச்சரியமும் குழப்பமும்தான் நிலவியது. இதை யார் செய்தார்கள், ஏன் செய்தார்கள் என்று அவர்களுக்கு புரியவில்லை. அப்பொழுது கொழும்பின் பிரபல அரசியல் ஆய்வாளராக இருந்து "ரீட்டா செபஸ்ரியான்" என்பவர் பேச்சுவார்த்தைக் குழுவினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமிர்தலிங்கம் கொலை பற்றி கருத்து கேட்டார். எந்தக் கருத்தும் உடனடியாக சொல்ல முடியாத காரணத்தினால் அவரை நேரடியாக வரச் சொல்லி விட்டு, பேச்சுவார்த்தைக் குழவினர் ஆழ்ந்த யோசனையில் இருந்தனர்.

இதை விட இன்னும் ஒரு செய்தி பரவியது. தாக்குதலின் போது அமிர்தலிங்கம் வீட்டுக் சென்றிருந்த பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டு விட்டார் என்று வதந்தி சிலரால் பரப்பப்பட்டது. உடனடியாக பிரேமதாசா அப்பொழுது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேயரட்ணாவை பேச்சுவார்த்தைக் குழுவினர் இருந்த இடத்திற்கு அனுப்பினார். ரஞ்சன் விஜேயரட்ண பேச்சுவார்த்தைக் குழுவினரை சந்தித்து, அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்தார்.

ஏற்கனவே இந்திய உளவுத்துறையால் வாங்கப்பட்டு விட்ட மாத்தையாவே அனைத்திற்கும் பின்னால் இருந்தார் என்பது பின்புதான் மெதுமெதுவாகத்தான் தெரிய வந்தது. விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா அரசுக்கும் நடந்த பேச்சுவார்த்தையை குழப்புவதற்காக மாத்தையாவின் ஆட்கள் மூலம் அமிர்தலிங்கத்தை இந்திய உளவுத் துறை கொலை செய்தது என்பதுதான் இங்கு அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

அமிர்தலிங்கத்தை கொலை செய்வதன் மூலம் இலங்கையில் பெரும் குழப்பம் தோன்றும், விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடையும் என்று இந்திய உளவுத் துறை கணக்குப் போட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது இலங்கைத்தீவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் இதைப் பற்றி பேசிய அளவிற்கு கூட யாரும் ஈழத்தில் பேசவில்லை. விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாச அரசுக்கும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இந்தியப் படை ஈழத்தை விட்டு வெளியேற்றப்பட்டது.

ஆனால் தொடர்ந்தும் மாத்தையா மூலம் இந்திய உளவுத்துறை ஈழத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. தன்னுடைய ஆட்களின் மூலம் பல அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் பற்றிய அதிருப்தி அலைகளை உருவாக்குவதற்கு மாத்தையா முயன்றார். ஒரு நேரத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மக்களை நேரடியாக திடீர் திடீர் என்று சந்தித்து கருத்துக் கேட்கின்ற நிலைமை உருவானது. மக்களும் தமது அதிருப்திகளை அப்பொழுது தெரிவித்திருந்தனர். கடைசியில் மாத்தையா தலைவராக இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியையே கலைக்கின்ற அளவிற்கு நிலைமை போனதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படி மாத்தையாவின் மூலம் இந்திய உளவுத்துறை மேற்கொண்ட நாசகார சதி நடவடிக்கைகள் நிறைய உண்டு. இதன் ஆரம்பமாக அமிர்தலிங்கம் மீதான கொலை அமைந்தது. அப்பொழுது மாத்தையா விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவராக இருந்ததனால் அவர் செய்த குற்றங்களுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பேற்க வேண்டியும் வந்தது.

ஆகவே கலைஞர் தமிழீழப் போராட்டம் பற்றி கூறிய விடயங்கள் சரியானவை அல்ல. அவர் கூறிய விடயங்களுக்கு குற்றம் சாட்டப்பட வேண்டியது இந்திய அரசும் அதன் உளவுத்துறையும்தான். இனியாவது இந்திய அரசு முன்பு விட்ட தவறுகளை மீண்டும் செய்யாது இருக்க வேண்டும். அதற்கு கலைஞர் தன்னால் ஆனதை செய்வார் என்று நம்புவோம்

Thursday, April 17, 2008

கடவுளுக்கு வருமா? வராதா?

"வணக்கம்மா" என்ற திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட அழைப்பிதழில் இருந்த படம்தான் இது. கடைசியில் இந்தப் படத்தால் திரைப்படத்தின் தொடக்க விழா நின்று விட்டது. இந்துத்துவ அமைப்புக்கள் போராட்டம் நடத்தும் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டின் காவல்துறையினர் தொடக்க விழாவிற்கு தடை விதித்து விட்டனர்.

ராமனும் அனுமனும் சிறிநீர் கழிப்பது போன்ற இந்தக் காட்சி திரைப்படத்தில் இடம்பெற இருக்கும் ஒரு நகைச்சுவைக் காட்சியாகத்தான் இருக்க முடியும். ராமன், அனுமான் வேடம் தரித்த இரண்டு நாடக நடிகர்கள் சிறுநீர் கழிக்கும் காட்சியாகவே இது பெரும்பாலும் இருக்கலாம். இது போன்று இந்துக் கடவுள்களை பயன்படுத்தி நிறைய நகைச்சுவைக் காட்சிகளை தமிழ் திரையுலகம் உருவாக்கியிருக்கிறது.

ரஜனிகாந்த் நடித்த உழைப்பாளி படத்தை ஒரு உதாரணமாக சொல்லலாம். அதில் ரஜனிகாந்த் சிவபெருமான் வேடத்தை போட்டுக் கொண்டு தன்னை துரத்துபவர்களிடம் இருந்து தப்பி ஓடுவார். மிகவும் புகழ் பெற்ற நகைச்சுவைக் காட்சி அது. ஒரு பார்ப்பனருடன் மோட்டர்சைக்கிளில் தப்பிப் போகின்ற ரஜனி, கடைசியில் ஒரு விரலைக் காட்டி தனக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பதாக சொல்லி, மோட்டார்சைக்கிளை விட்டு இறங்குவார். ரஜனி ஒரு விரலைக் காட்டியதும், "பகவானுக்கே வந்தா அது மழை பெஞ்ச மாதிரி" என்று அந்த பார்ப்பனர் சொல்வார்.

இதை விட கடவுள் வேடம் தரித்தவர்கள் பீடி குடிப்பது மாதிரியும், மது அருந்துவது மாதிரியுமான காட்சிகள் பல படங்களில் இடம் பெற்றிருக்கின்றன.

ஆனால் இவைகள் எவைக்குமே இந்துத்துவ கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்தக் காட்சிகள் தமது கடவுள்களை இழிவுபடுத்துகின்றன என்று அந்த கட்சிகள் கூறவில்லை. தற்பொழுது "வணக்கம்மா" படத்திற்கு மட்டும் பிரச்சனை கொடுப்பதற்கு இந்த அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதற்குக் காரணம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகத்துடன் ஈடுபாடு உள்ளவர் என்பதுதான்.

இந்துத்துவ அமைப்புக்களின் எதிர்ப்பிற்கு தெரிவிக்கப்படும் காரணங்கள் வலுவில்லாதவை என்பது நடுநிலையாக சிந்திக்கின்ற அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு விடயம்தான்.

ஆனால் ராமனும் அனுமனும் சிறுநீர் கழிக்கும் அழைப்பிதழை தமிழ்நாடு அரசோ அல்லது சென்னை மாநகராட்சியோ ஒரு வலுவான காரணத்தை சொல்லி தடைசெய்ய முடியும். உண்மையில் தெருவில் சிறுநீர் கழிப்பது சட்டப்படி குற்றம். ஆகவே ராமனையும், அனுமனையும் கடவுளாக வணங்கும் பக்தர்கள் இந்த அழைப்பிதழைப் பார்த்து, அவர்களும் தெருவில் சிறுநீர் கழித்தால், தமிழ்நாடே நாறி விடும். ஒரு குரங்கை கடவுள் என்று வணங்கும் "அறிவோடு" இருப்பவர்கள் இதைச் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அந்த வகையில் தமிழ்நாட்டின் சுகாதாரம் கருதி இந்த அழைப்பிதழை தடை செய்ய தமிழ்நாட்டு அரசிற்கு முழு உரிமையும் இருக்கிறது.

அதே வேளை இந்த அழைப்பிதழ் கடவுளை இழிவுபடுத்துகிறதா இல்லையா என்பதற்கு அப்பால் எனக்கு சில கேள்விகள் எழுகின்றன. கடவுள்களாகிய ராமனும் அனுமனும் சிறுநீர் கழிக்கின்ற காட்சி கடவுள்களை இழிவுபடுத்துவது போல் இருக்கின்றது என்பது இந்துத்துவ அமைப்புக்களின் வாதம். இப்பொழுது என்னுடைய கேள்வி எதுவென்றால், கடவுளுக்கு இயற்கை உபாதை உண்டா? கடவுள் மலம், சலம் கழிப்பாரா? அல்லது தன்னுடைய சக்தியால் அடக்கி வைத்திருப்பாரா? அல்லது கடவுளுக்கு அப்படி ஒன்றே இல்லையா?

இவைகளை அசட்டுத்தனமான கேள்விகள் என்று யாரும் புறந்தள்ள வேண்டாம். உண்மையில் இவைகள் ஆராயப்பட வேண்டிய கேள்விகள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! கடவுளுக்கு நித்திரை வருகிறது, கடவுளுக்கு பசிக்கிறது, கடவுளுக்கு அன்பு, கோபம், பழி என்று அனைத்து உணர்ச்சிகளும் வருகிறது, கடவுளுக்கு காமம் வருகிறது, கடவுளுக்குள் உடலறுவு நடக்கிறது, கடவுளுக்கு பிள்ளை பிறக்கிறது. இப்படி எல்லாமே மனிதனைப் போல் கடவுளுக்கு நடைபெறுகின்ற போது, ஏன் இந்த மலம், சலம் என்று எதுவும் வருவது இல்லை?

நித்திரை கொள்கின்ற கடவுளை காலையில் திருப்பள்ளிஎழுச்சி பாடி எழுப்புகின்றனர். பின்பு அவருக்கு பசிக்கும் என்று நிறைய தின்பண்டங்களை படைக்கின்றனர். கடவுள் உணவு அருந்துவதாக வேதங்களும் சொல்கின்றன. உணவு மட்டும் அல்ல, சோமபானமும் கடவுள் அருந்துகிறாராம். இவைகள் எல்லாம் வயிற்றுக்குள் சென்று ஒன்றுமே செய்யாதா? திருப்பள்ளியெழுச்சி பாடி கடவுளை துயில் எழுப்புபவர்கள், அவர் சாப்பிடுவதற்கு முதல் ஒரு திருமலசலகூடத்திற்கு அவரை அழைத்துச் செல்லாததன் காரணம் என்ன?

அனைத்து சக்திகளையும் கொண்ட கடவுளுக்கு எந்தப் பலவீனமும் இல்லை என்று சிலர் சொல்லலாம். ஆனால் பசி, காமம் இவை எல்லாம் ஒரு பலவீனம்தானே. தன்னுடைய மனைவியுடன் மட்டும் நின்று விடாது, வேறு பெண்களிடமும் இச்சை தீர்க்கின்ற நிலையில் கடவுள் இருப்பதாகத்தானே சொல்லப்படுகிறது.

வைணவ ஆலயங்களில் பரிவேட்டை என்று ஒரு விழா நடத்துவார்கள். அன்றைக்கு பெருமாளை கொண்டு போய் ஒரு தெருவில் வைத்துவிடுவார்கள். பெருமாளுக்கு தன்னுடைய துணைவியை பார்த்துப் பார்த்து அலுத்து விட்டதாம், அதனால் வேறு பெண்களிடம் செல்கிறார் என்பதுதான் இந்த விழாவின் பொருள். முன்பு பெருமாளைக் கொண்டு தாசிகள் வசிக்கும் தெருவில் வைப்பார்கள். தற்பொழுது ஏதோ ஒரு தெருவில் வைத்துவிட்டு வருவார்கள்.

பெருமாளுக்கே தாசிகளிடம் செல்லும் பலவீனம் இருக்கிறது. இதை விட கடவுளுக்கு நோய், தோசம் போன்றவைகளும் இருக்கிறன. இந்திரனுக்கு பால்வினை நோய்களில் ஒன்றாகிய "படர்தொடை வாழை" வந்தது. இந்திரனை கடவுள் இல்லை என்று விட்டு விட்டாலும், சிவபெருமானுக்கு முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனை இருந்ததே!

மோகினியாக உருமாறிய விஸ்ணு மீது காமம் கொண்டு அவரை துரத்திக் கொண்டு ஓடுகின்ற போதே, சிவனுக்கு விந்து வெளியேறி விடுகிறது. மருத்துவ உலகில் இதையும் ஒரு பிரச்சனையாகத்தான் பார்க்கிறார்கள். இந்தப் பிரச்சனையை மாற்றுவதற்கான சிகிச்சைகளும் இருக்கின்றன. எல்லாம் அறிந்த சிவன் இதை அறியாமல் போனது ஆச்சரியம்தான்.

மொத்தத்தில் கடவுள்களுக்கு நோய் நொடியில் இருந்து அனைத்துப் பிரச்சனைகளும் இருக்கின்றன. ஆனால் கடவுள்களுக்கு இயற்கை உபாதைகளான மலமும் சலமும் வருமா என்கின்ற கேள்விக்குத்தான் விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மலம், சலம் என்பன நாற்றமடிக்கும் விடயங்கள் என்பதால், இவைகள் தமக்கு வராத மாதிரி கடவுள்கள் செய்திருக்கின்றார்கள் என்ற முடிவுக்குத்தான் கடைசியில் என்னால் வர முடிந்தது.

ஆனால் இப்பொழுது எனக்குள் இன்னொரு கேள்வி எழுந்து, என்னை மிகவும் குழப்பி விட்டது. கடவுளுக்கு மலமும் சலமும் வராது என்பது சரி, ஆனால் தம்மை கடவுள்கள் என்று சொல்கின்ற புட்டபர்த்தி சாஜிபாபாவிற்கும், டென்மார்க் லலிதாவிற்கும் மலம், சலம் வருமா? வராதா? அப்படி வரும் என்றால், இவர்களை கடவுள் என்று எப்படிச் சொல்ல முடியும்?????