Sunday, June 18, 2006

கலைஞர் மீண்டும் தமிழினத்திற்கு துரோகம்!

கலைஞரின் அரசு ஈழத் தமிழர்களுக்கு செய்து கொண்டிருக்கும் ஒரு துரோகச் செயல் குறித்து அதிர்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கருணா குழுவினர் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கு கலைஞரின் அரசு அனுமதி அளித்துள்ளது என்பதே அந்த அதிர்ச்சிகரமான தகவல் ஆகும். இந்தத் தகவலை மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கருணா குழு தமிழகத்தில் ஆட்சேர்ப்பதற்கு ஈழத் தமிழரில் அக்கறை கொண்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கலைஞரின் அரசு அதை அலட்சியம் செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
கருணா குழுவுக்கான ஆட்சேர்ப்பு தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாம்களிலேயே நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சேர்ப்பு கருணா குழுவைச் சேர்ந்த பரந்தன்ராஜன் தலைமையில் நடைபெற்று வருகிறது. விடுதலைப்புலிகளின் தாக்குதல்களினால் கருணா குழுவிற்கு பெரும் ஆட்தட்டுப்பாடு நேர்ந்துள்ளது. ஈழத்தில் ஆட்களை திரட்ட முடியாத நிலையில் உள்ள கருணா குழு, பரந்தன்ராஜன் மூலம் தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழர்களை தமது குழுவில் சேர்க்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளது. ஈழத்தில் இருந்து படகுகள் மூலம் அகதிகளாக வருகின்ற தமிழ் மக்கள் மண்டப முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். அனைத்தையும் இழந்து நிற்கின்ற இவர்கள் தமிழ்நாட்டிலும் சிறைக் கைதிகள் போன்று மண்டப முகாம்களில் வைக்கப்படுவதினால் கடும் விரக்திக்கு ஆளாகிறார்கள். இவ்வாறு விரக்தியின் உச்சத்தில் நிற்பவர்களையே பரந்தன்ராஜன் குழுவினர் அணுகுகின்றனர். கருணா குழுவில் இணைவதற்கு சம்மதித்தால் உடனடியாக 10.000 ருபாய்கள் தருவதாகவும் ஈழத்திற்கு சென்றதும் மேலும் அதிகமான பணம் தருவதாகவும் ஆசை காட்டி வருகிறார்கள்.
இந்த பரந்தன்ராஜன் ஒரு வருடத்திற்கு முன்பு தமிழகத்தில் இருந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தான். இதை அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு சிலர் கொண்டு வந்ததை அடுத்து, பரந்தன்ராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அப்பொழுது இந்திய உளவுத்துறையாகிய "றோ" தலையிட்டு பரந்தன்ராஜனை விடுதலை செய்யும் படி தமிழக அரசுக்கு அழுத்தம் வழங்கியது. கடைசியில் தமிழகத்திற்குள் இனி காலடி வைக்க மாட்டேன் என்று எழுத்து மூலமான உத்தரவாதத்தை பரந்தன்ராஜனிடம் வாங்கிக் கொண்டு தமிழக அரசு பரந்தன்ராஜனை விடுவித்தது. இதன் பிறகு சிறிலங்காவிற்கு திரும்பிய பரந்தன்ராஜன் சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து பல அப்பாவித் தமிழ் மக்களை கொலை செய்து வந்தான். தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மீண்டும் இந்தியா திரும்பிய பரந்தன்ராஜன் தமிழகம் செல்லாது கர்நாடகத்தில் உள்ள பெங்களுரில் தங்கியிருந்தான். தற்பொழுது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பரந்தன்ராஜன் தமிழகத்தில் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளான்.
ஈழத்தில் தமிழ் மக்களை கொலை செய்வதற்கும், மீண்டும் யுத்தத்தை ஆரம்பிப்பதற்கான சதி நடவடிக்கைகளுக்கும் கருணா குழுவையே சிறிலங்கா அரசு பயன்படுத்தி வருகிறது. இதை கலைஞர் தலைமையிலான தமிழக அரசு நன்கு அறிந்தும், பரந்தன்ராஜனை தமிழகத்தில் கருணா குழுவிற்கு ஆட்களை சேர்ப்பதற்கு அனுமதித்துள்ளது. "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்", "தமிழ் கட்டாய பாடம்" போன்று நல்ல திட்டங்களைப் போட்டு சரியான பாதையில் நடை போடத் தொடங்கிய கலைஞரின் அரசு, சில நாட்களுக்கு முன்புதான் பெற்றோல் விலை உயர்வின் மூலம் தமிழக மக்களின் அதிருப்தியை சம்பாதித்தது. தற்பொழுது ஈழத் தமிழர்களின் தலையிலும் இடியை இறக்கி உள்ளது. ஜெயலலிதா தலைமையிலான முன்னைய அரசு செய்ததற்கு நேர் எதிராக செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக, ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு கலைஞர் அரசு துணை போவதானது, தமிழ் மக்களுக்கு செய்யக் கூடிய மிகப் பெரிய துரோகம் ஆகும். இதை உலகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

Saturday, June 03, 2006

பெரிய மனிதர்!

அந்தப் பெரிய மனிதர் ஆட்டு மந்தைகளுக்கு நடுவில் உட்கார்ந்திருந்தார். சாந்தமான அவரது முகம் ஒளி பொருந்தியதாக இருந்தது. அதை தெய்வீக ஒளி என்று அங்குள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள். அவரது போதனைகள் அந்தப் பகுதியில் அவரை மிகவும் பிரபலப்படுத்தியிருந்தன. ஆலோசனை சொல்வதோடு தீர்ப்பு வழங்குபவராகக் கூட அந்தப் பெரிய மனிதர் இருந்தார். அவரையும் அவரது சித்தாந்தங்களையும் எதிர்க்கின்ற மனிதர்களும் அங்கு இருந்தார்கள்.
திடீரென்று ஆடுகள் பரபரப்பாகின. அங்கும் இங்கும் ஓடின. பெரிய மனிதர் நிமிர்ந்து பார்த்தார். ஒரு கூட்டம் அவரை நோக்கி ஆவேசமாக வந்து கொண்டிருந்தது. பெரிய மனிதர் எவ்வித சலனமும் இன்றி, அவரை நோக்கி வருகின்ற கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். வந்து கொண்டிருக்கின்றவர்கள் ஆண்களாக இருந்தார்கள். பெரும்பாலும் இளைஞர்களாக வேறு இருந்தார்கள். கூட்டம் நெருங்கி வந்த பொழுதுதான் பெரிய மனிதர் அதைக் கவனித்தார். அவர்கள் ஒரு இளம் பெண்ணை இழுத்து வந்து கொண்டிருந்தார்கள்.
அந்தப் பெண்ணை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார். அவர் மட்டும் அல்ல, அவளை ஊரே அறிந்திருந்தது. உலகின் மிகப் பழமையான தொழிலை செய்கின்ற பாவப்பட்ட பெண் அவள். கசக்கப்பட்டதால் தேகமும் மனமும் வாடிப் போயிருந்தாள். அவளின் கண்களில் பீதி தெரிந்தது. அவளை உருவாக்கிய சமூகம் இப்பொழுது அவளை அழிப்பதற்காக இழுத்து வந்திருந்தது.
பெரிய மனிதர் தன் முன் நடுங்கியபடி நிற்கும் பெண்ணையும் கூட்டத்தினரையும் மாறி மாறிப் பார்த்தார். அவரது பார்வையில் ஆச்சரியமும் கேள்விகளும் தெரிந்தன. "இவள் பாவத் தொழிலை செய்பவள், இவளைத் தண்டிக்க வேண்டும்". கூட்டத்தினர் அவளை இழுத்து வந்த காரணத்தை உரத்த குரலில் சொன்னார்கள். அந்தக் குரலில் ஒருவிதமான அதிகாரத் தொனி இருப்பதை பெரிய மனிதர் கவனித்தார். அந்தப் பெண் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்துக்கு இடம் இல்லை என்பதை சொல்கின்ற தொனி அது. அவளை எப்படி தண்டிக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறார்களே தவிர, தண்டிக்க வேண்டுமா, இல்லையா என்று கேட்பதற்கு அவர்கள் வரவில்லை.
"இவளின் தலையை வெட்ட வேண்டும்" என்றார் ஒருவர்.
"இவளை உயிரோடு கொளுத்த வேண்டும்" என்றார் மற்றொருவர்.
"இவளை பட்டினி போட்டுக் கொல்ல வேண்டும்" என்றார் வேறொருவர்.
"இவளை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்" என்றார் இன்னொருவர்.
அந்த இடத்தில் நிறைய கற்கள் இருப்பதைக் கண்ட கூட்டம் "கல்லால் எறிந்து கொல்வோம்" என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. சிலர் கற்களை கையில் எடுத்தும் விட்டார்கள். பெரிய மனிதர் அவர்களை அமைதியாகப் பார்த்தார். "இவளிடம் செல்லாத ஒருவன், பாவம் செய்யாத ஒருவன் இவள் மீது கல்லை எறியட்டும்". பெரிய மனிதரின் குரல் கம்பீரமாக கணீர் என்று ஒலித்தது. இதை எதிர்பாராத கூட்டம் திடுக்கிட்டுப் போனது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பெரிய மனிதரின் கூற்றில் இருந்த நியாயம் அவர்களை வெட்கப்படச் செய்தது. அனைவரும் தலை குனிந்தார்கள். ஒரு நீண்ட நிசப்தம் நிலவியது.
ஒரு இளைஞன் கூட்டத்தில் இருந்து மெதுவாக வெளியே வந்தான். அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்தான். கூட்டம் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தது. இளைஞன் பெரிய மனிதரிடம் வந்தான். கல்லை அவர் முன் வைத்தான். "இவளிடம் செல்லாத நீங்கள், பாவம் செய்யாத நீங்கள் இவள் மீது கல்லை எறியுங்கள்". இளைஞனின் குரல் இன்னும் கம்பீரமாக ஒலித்தது.
இப்பொழுது பெரிய மனிதர் தலை குனிந்தார்.
- வி.சபேசன்