கிழக்கில் விரைவில் உள்ளுராட்சி சபைத் தேர்தலையும் மகாண சபைத் தேர்தலையும் நடத்தவதற்கு சிறிலங்கா அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மகாண சபை தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என்றாலும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறான ஒரு தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட முடியாதை நிலை நிலவுகிறது. அதனால் கருணா குழுவே அதிக இடங்களை கைப்பற்றக் கூடிய நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது. தமிழினத்திற்கு துரோகம் இழைக்கின்ற கருணா குழுவிற்கு கிழக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்ற ஆச்சரியாமான கேள்வி எழலாம். வாக்களிப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு என்பதுதான் அதற்கு பதில்.
அதற்கு காரணம் கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் உருவாக்கிவிடப்பட்டள்ள பகைமை உணர்வுகள். பல ஆண்டுகளாகவே முஸ்லீம்கள் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக அங்குள்ள தமிழ் மக்கள் ஏதாவது ஒரு தமிழ்கட்சிக்கு வாக்களித்து பழகிவிட்டார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்பது கிழக்கில் பல ஆண்டுகளாக நடைபெறவே இல்லை. புறக்கணிக்கவும் மாட்டார்கள்.
ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தேர்தலில் நின்றால் அவர்களிற்கு வாக்களிப்பார்கள். இல்லையென்றால் வேறு ஏதாவது தமிழ் கட்சிக்கு வாக்களித்து விடுவார்கள். இதுதான் கிழக்கில் உள்ள வாக்களிப்பு நிலைமை. இவ்வாறான நிலை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒட்டுக் குழுக்கள் தமிழ் முஸ்லீம் உறவு ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக செயற்பட்டு வருகிறார்கள்.
தமிழர்களும் முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட பிணக்குகளை ஆராய்கின்ற போது இரு தரப்பிலும் மாறி மாறி தவறுகள் இருந்து வந்ததையும், அவைகளை சிறிலங்கா அரசு சரியாகப் பயன்படுத்திக்கொண்டதையும் காணக்கூடியதாக உள்ளது.
1915ஆம் ஆண்டு சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. அப்பொழுது இலங்கையை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேய அரசு முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்திய சிங்களத் தலைவர்களையும், காடையர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆங்கிலேய அரசு முஸ்லீம்களுக்கு சார்பாக நடந்து கொள்வதாக சிங்களத் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இந்த நேரத்தில் தமிழர்களின் தலைவர்களாக இருந்தவர்கள் முஸ்லீம்களும் தமிழர்கள் என்ற ரீதியில் முஸ்லீம்களை ஆதரித்திருக்க வேண்டும். ஆகக் குறைந்தது நடுநிலையாவது வகித்திருக்க வேண்டும். ஆனால் தமிழர்களின் தலைமை ஒரு பெரும் தவறை இழைத்தது. அன்றைக்கு தமிழர் தலைவராக இருந்த சேர்.பொன் இராமநாதன் சிங்களவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்.
அப்பொழுது முதலாம் உலக யுத்தம் (1914 - 1918) நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். கப்பற் போக்குவரத்து என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாக இருந்தது. ஆனால் ஆபத்தையும் பொருட்படுத்தாது சேர்.பொன் இராமநாதன் இங்கிலாந்த பயணமானார். அங்கே சிங்களவர்களுக்காக வாதாடினார். வாதாடி கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களையும், காடையர்களையும் விடுவிக்கச் செய்தார். இலங்கை திரும்பிய இராமநாதனை சிங்களவர்கள் ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ரதத்தை சிங்களவர்களே இழுத்தனர்.
சில தமிழர்கள் இராமநாதனை ரதத்தில் வைத்து சிங்களவர்கள் இழுத்த சம்பவத்தை பெருமையோடு குறிப்பிடுவார்கள். உண்மையில் தமிழர்கள் வெட்கப்பட வேண்டிய சம்பவம் அது. அன்றைய தமிழர் தலைமை முஸ்லீம்களுக்கு எதிரான சிங்களவர்களுக்கு ஆதரவாக நின்று பெரும் தவறைச் செய்து விட்டது. முஸ்லீம்களை பிரித்து வைத்து விட்டது.
அதன் பிற்பாடு பல ஆண்டுகள் கழித்து தந்தை செல்வா அவர்கள் இரண்டு சமூகங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டார். அதில் ஓரளவு வெற்றியம் கண்டார். தந்தை செல்வாவின் தலைமையிலான தமிழரசுக் கட்சியின் சார்பில் முஸ்லீம்கள் வெற்றி பெற்றனர். தமிழர்கள் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் உள்ள தொகுதிகளைக் கூட முஸ்லீம் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கி அவர்களை தமிழரசுக் கட்சி வெற்றி பெற வைத்தது.
ஆனால் இம் முறை முஸ்லீம் பிரதிநிதிகள் தவறு செய்தனர். தமிழர்களினதும் மற்றும் முஸ்லீம்களினதும் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றவர்கள் கட்சி மாறி அரசில் இணைந்தனர். இது ஒரு முறையோ அல்லது இரு முறையோ மட்டும் நடைபெறவில்லை. பட்டியல் போடுகின்ற அளவிற்கு பலமுறை நடந்தது. ஒரு நேரத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் முஸ்லீம் பிரதிநிதிகளிடம் "கட்சி மாறக் கூடாது" என்று சத்தியம் வாங்க வேண்டிய அளவிற்கு ஒவ்வொரு முறையும் கட்சி மாறுதல் நடந்தது. சத்தியம் செய்து கொடுத்துவர்களும் அதைக் காப்பாற்றவில்லை.
அதன் பிறகு ஆயுதம் தாங்கிய ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான பொழுது, தமிழ் - முஸ்லீம் உறவு தழைப்பது போன்ற காட்சிகள் தென்பட்டன. சிங்கள பௌத்தர் அல்லாத அனைவரையும் சிறிலங்காவில் இருந்து இல்லாமல் செய்கின்ற திட்டத்தையே சிங்கள அரசுகள் கொண்டுள்ளன என்கின்ற உண்மையை உணர்ந்த முஸ்லீம் இளைஞர்களும் விடுதலை இயக்கங்களில் இணைந்து தமிழீழத் தாயகம் அமைப்பதற்கு போராடினர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி நூற்றுக் கணக்கான முஸ்லீம்கள் மாவீரர் ஆகி உள்ளனர். லெப் கேணல் ஜீனைதீன் என்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது முஸ்லீம் மாவீரர் ஆவார்.
இவ்வாறு ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் தமிழர் முஸ்லீம் ஒற்றுமையில் வளர்ச்சி ஏற்பட்டாலும், கடைசியில் இரண்டு சமூகங்களையும் பிளவு படுத்துகின்ற சிங்கள அரசின் முயற்சியே வெற்றி பெற்றது. இதற்கு சில தமிழ் ஆயுதக் குழுக்கள் முஸ்லீம் மக்கள் மீது அடாவடித்தனமான முறையில் நடந்து கொண்டதும் துணை போனது.
முஸ்லீம்கள் மத்தியில் உருவான தனிக் கட்சிகளும் அரசியல் இலாபம் கருதி தமிழர் முஸ்லீம் ஒற்றுமை ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தன. இவை எல்லாவற்றையும் விட 1990ஆம் ஆண்டில் நடந்த படுகொலைகளும், முஸ்லீம்கள் வெளியேற்றமும் இரண்டு சமூகத்தினர் மத்தியிலும் மிகப் பெரிய இடைவெளியை உருவாக்கின. அந்த இடைவெளி குறைந்த விடக் கூடாது என்பதில் இன்றைக்கு வரைக்கும் பல தீய சக்திகள் வெகு கவனமாக செயற்பட்டு வருகின்றன.
1990ஆம் ஆண்டு ஒகஸ்டின் ஆரம்பத்தில் காத்தான்குடி, ஏறாவூர் போன்ற பகுதிகளில் நூற்றுக் கணக்கான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முஸ்லீம்கள் மத்தியில் பதட்டத்தையும் தமிழர் மீது வெறுப்பையும் ஏற்படுத்துவதற்கான அனைத்துச் செயற்பாடுகளையும் சிறிலங்காப் புலனாய்வுத்துறை செய்தது. பல கிராமங்களில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுவதாக பொய்யான செய்திகளையும் பரப்பியது. முஸ்லீம்கள் மீதான படுகொலைகளின் பின்னால் சிறிலங்காவின் புலனாய்வுத்துறை செயற்பட்டது என்று நம்புவதற்கு வலுவான காரணங்கள் உண்டு.
முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிறிலங்கா இராணுவத்திற்கு அஞ்சி வீரமுனைக் கிராமத்திற்கு இடம் பெயர்ந்திருந்த தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும் முஸ்லீம் துணைப் படையினரும் இணைந்த பெரும் படுகொலை ஒன்றை நிகழ்த்தினர். 400இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். வேறு பல தமிழ் கிராமங்களும் சிறிலங்கா இராணுவத்தின் முஸ்லீம் துணைப் படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகின. தமிழ் மக்கள் மீதான தாக்குதலின் பின்னால் முஸ்லீம் ஒட்டுக் குழுவான "ஜிகாத்" செயற்படுவதாக அன்று விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இவ்வாறு இரு சமூகங்களுக்கும் இடையில் கடும் பகையை உருவாக்கிய சிறிலங்காப் புலனாய்வுத்துறை யாழ் குடாவில் உள்ள முஸ்லீம்களையும் கலவரத்திற்கு தூண்டியது. அவ்வாறான ஒரு கலவரத்தை தடுப்பதற்கு அன்றைய நிலையில் தம்மிடம் பலம் இல்லை என்பதை உணர்ந்த விடுதலைப் புலிகள் முஸ்லீம்களை யாழில் இருந்து வெளியேற்றினர். இது முஸ்லீம்கள் மனதில் மேலும் ஒரு வடுவாகிப் போனது.
தமிழர் முஸ்லீம் உறவின் அவசியத்தினை உணர்ந்த விடுதலைப் புலிகள் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதற்கு மன்னிப்புக் கோரினர். தமிழ் மக்கள் யாழில் மீண்டும் குடியேறுகின்ற நிலை வருகின்ற போது முஸ்லீம் மக்களும் யாழில் மீண்டும் குடியேற்றப்படுவர் என்று வாக்குறுதியும் வழங்கினர். முஸ்லீம் கட்சிகளோடும், மதத் தலைவர்களோடும் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவிற்கு வழி வகுத்தனர்.
ஆனால் சிறிலங்காப் புலனாய்வுத்துறை இப்பொழுதும் வேகமாக செயற்பட்டது. ஒட்டுக் குழுக்களான கருணா குழுவையும், ஜிகாத் குழுவையும் பயன்படுத்தி மீண்டும் மாறி மாறி கொலைகளை நிகழ்த்தியது. இன்று வரைக்கும் தமிழினத்தின் மத்தியில் தமிழர் முஸ்லீம் என்ற பிளவை உருவாக்குவதிலும், இரு சமூகங்கள் மத்தியில் பகையை வளர்ப்பதிலும் சிறிலங்கா அரசு வெற்றி பெற்று வருகிறது என்பது வேதனையான உண்மை.
தமிழர்களும் முஸ்லீம்களும் பகையோடு இருப்பதால் பலன் பெறுவது கிழக்கை பிரிக்க விரும்புகின்ற சிங்கள அரசும், ஒட்டுக் குழுக்களுமே ஆகும். முஸ்லீம்களை கொலை செய்வதிலும் கிராமங்களை விட்டு விரட்டி அடிப்பதிலும் சிறிலங்காப் படைகளும் கருணா குழுவும் முன்னிலையில் நின்று செயற்படுகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போதே கருணா முஸ்லீம்களுடன் கடுமையாகச் செயற்பட்டார் என்ற செய்திகள் பல உண்டு. இதற்காக அவர் வடக்கிற்கு அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.
அன்றைக்கே முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் பகைமையை வளர்க்கின்ற முயற்சிகளில் கருணா ஈடுபட்டதானது கருணாவிற்கு நீண்ட காலத்திட்டம் இருந்ததா என்ற கேள்வியை எழுப்புகின்றது. அதே போன்று யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றுவதில் முன்னின்று ஆர்வமாக செயற்பட்டவர் யார் என்று பார்த்தால் அங்கும் ஒரு ஆச்சியமான பதில் இருக்கிறது. விடுதலைப் புலிகளின் அன்றைய பிரதித் தலைவர் மாத்தையாவே அவர்.
இவ்வாறு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பின்பு துரோகிகளாக இனம் காணப்பட்டார்கள். இது இவர்கள் அந்நிய சக்திகளிடம் பல ஆண்டுகளுக்கு முன்பே விலை போய்விட்டார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் உயர்ந்த பண்பு வெளிப்படுகிறது. மாத்தையா, கருணா போன்றவர்கள் விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்தாலும், அவர்களை விடுதலைப் புலிகள் காட்டிக் கொடுப்பதில்லை. தமது இயக்கத்தில் இருந்த பொழுது அவர்கள் செய்த செயற்பாடுகளுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்ளும் சிறந்த பண்பை விடுதலைப் புலிகளிடம் காணக் கூடியதாக உள்ளது.
தமிழினத்தை வடக்கு கிழக்கு என்றும் தமிழர் முஸ்லீம் என்று பிளவு படுத்துகின்ற தீய சக்திகளுக்கும் கறுப்பு ஆடுகளுக்கும் மத்தியில் இரண்டு சமூகங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் விடுதலைப் புலிகள் உறுதியாகவே இருக்கிறார்கள். முஸ்லீம் சமூகத்தை தனிக் கலாச்சாரம் உள்ள ஒரு தனித்துவமான சமூகமாக அங்கீகரித்திருக்கும் விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் முஸ்லீம்களுக்கு தனி அலகு வழங்கவும் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால் முஸ்லீம்கள் மீது வெறுப்புக்களை வளர்த்து வைத்திருக்கும் தமிழர்களும், தமிழர்கள் மீது வெறுப்புக்களை வளர்த்து வைத்திருக்கும் முஸ்லீம்களும் குறிப்பிட்டளவு இருக்கிறார்கள். உண்மையான ஒற்றுமை ஏற்படுவதற்கு இவர்களே தடையாக இருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்ற தமிழர்களில் கூட பலர் முஸ்லீம்கள் விடயத்தில் மாத்தையாக்களாகவும், கருணாக்களாகவும் சிந்திப்பதை பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஒற்றுமை ஏற்படுவதற்கு மனம் திறந்த பேச்சு அவசியம். தமிழர் தரப்பில் உள்ள தலைவர்களும் அறிஞர்களும் முதலில் தமிழர்களுடன் பேச வேண்டும். முஸ்லீம்கள் பற்றி தமிழர்கள் மத்தியில் உள்ள அச்சங்களையும் சந்தேகங்களையும் களைய வேண்டும். இதையே முஸ்லீம் தலைவர்களும் தமது மக்கள் மத்தியில் செய்ய வேண்டும். அரசியல் இலாபத்திற்காக சில முஸ்லீம் கட்சிகளும், தமிழ் ஒட்டுக் குழுக்களும் இதற்கு தடையாக இருந்தாலும், இதை செய்துதான் தீர வேண்டும்.
ஒற்றுமை ஏற்படவில்லை என்றால் கிழக்கு விடுவிக்கப்படாதவரை அங்கு நடைபெறும் தேர்தல்களில் ஒட்டுக் குழுக்கள் மக்கள் வாக்குகளைப் பெற்று ஊராட்சி, மகாணசபை, நாடாளுமன்றம் என்று வளர்ச்சி அடைவது நடந்துதான் தீரும்.
1 comment:
நல்ல கட்டுரை. தமிழர் முஸ்லீம் பிரச்சனையை நன்றாக விளக்கியுள்ளீர்கள்
Post a Comment