Wednesday, August 08, 2007

மீண்டும் படகேறும் பழ.நெடுமாறன்!

தமிழீழ மக்களின் போராட்டத்திற்காக உணர்வோடு குரல் கொடுக்கின்ற அமைப்புக்கள் பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் அதிரடியான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

யாழ் குடாவிற்கான பாதை நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள நிலையில் தேவையான அளவு உணவுப் பொருட்கள் இன்றி யாழ்ப்பாண மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த மக்களிற்காக தமிழ்நாட்டு தமிழர்கள் அன்போடு கொடுத்த உணவுப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது. கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசும் இப் பிரச்சனையில் அக்கறை இன்றிக் காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்களை அனுப்புவதற்கு அனுமதி வழங்குமாறு வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இதுவரை ஏற்படவில்லை. ஏறக்குறைய 6 மாதங்களாக ஒரு கோடி ருபாய்கள் பெறுமதிமிக்க உணவுப் பொருட்கள் தேங்கிப்போய் கிடக்கின்றன.

தமிழர்களை கொலை செய்கின்ற சிங்கள அரசுக்கு ஆயுத உதவிகளும், ராடர்களும் வழங்கி வரும் இந்திய அரசு தமிழ் மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதை தடுத்து வரும் நிலையில் கடந்த 04.08.07 அன்று விழுப்புரத்தில் ஒன்று கூடிய தமிழீழ ஆதரவு அமைப்புக்கள் யாழ்பாணத்திற்கு நேரடியாக படகில் சென்று பொருட்களை கொடுப்பது என்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.

தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களுடைய தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் ஆகிய கட்சிகள் உட்பட பல அமைப்புக்கள் கலந்து கொண்டன.

தீர்மானத்தின்படி வருகின்ற செப்ரம்பர் 11ஆம் நாள் தமிழின உணர்வாளர்கள் இரண்டு பிரிவுகளாக தங்களுடைய பயணத்தை ஆரம்பிக்கின்றார்கள். ஒரு பிரிவினர் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிப் புறப்படுகின்றனர். மற்றப் பிரிவினர் திருச்சியில் இருந்து நாகை நோக்கிப் புறப்படுகின்றனர். இந்தப் பயணத்தின் போது இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மையையும், மத்திய மாநில அரசுகளின் பாராமுகத்தையும் மக்களிடம் எடுத்துக்கூறி பரப்புரை மேற்கொண்டபடி வருவார்கள்.

இவ்வாறு ராமேஸ்வரத்திலும், நாகையிலும் உள்ள துறைமுகங்களுக்கு வந்தடையும் இவர்கள் அடுத்த நாள் செப்ரெம்பர் 12 அன்று படகுகளில் ஏறி யாழ்ப்பாணத்தை நோக்கிப் புறப்படுகிறார்கள்.

இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பழ நெடுமாறன் அவர்கள் இது குறித்து கூறிய பொழுது "பசியால் வாடும் இலங்கை தமிழர்களுக்கு உதவவே இப்பயணத்தை மேற் கொள்கிறோம், எனவே எங்களை கைது செய்தாலும் சுட்டுக் கொன்றாலும் நாங்கள் கவலைப்படபோவது இல்லை" என்றார்.

பழ நெடுமாறன் அவர்கள் தமிழீழம் நோக்கிப் புறப்படுவது இது முதற் தடவை அல்ல. போர் குறைவாக இருந்த 1982இலும், தற்காலிக சமாதானம் நிலவிய காலங்களிலும் (1987, 1990) தமிழீழம் வந்து சென்று இருக்கிறார்.

ஆனால் தற்பொழுது போன்று ஒரு 1983ஆம் ஆண்டு ஓகஸ்ட 15 அன்று நெடுமாறன் அவர்கள் படகு மூலம் ஒரு பயணத்தை ஆரம்பித்தார். 1983 ஜுலையில் நடந்த பெரும் இனப் படுகொலையை தொடர்ந்து ஈழத் தமிழர்களைக் காப்பதற்கு ஒரு தியாகப் பயணத்தை மேற்கொள்ள பழ. நெடுமாறன் அவர்கள் முடிவெடுத்து, அதை அறிவித்தார்.

அப்பொழுது சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலி பழ.நெடுமாறன் அவர்களை கிண்டல் செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். "இந்தியர்கள் இலங்கைக்கு வருவது தீர்வையற்ற பொருட்களை வாங்கத்தான், நீங்களும் வாருங்கள், வந்து பொருட்களை வாங்கிச் செல்லுங்கள்" என்று பழ. நெடுமாறன் அவர்களுக்கு தான் கடிதம் எழுதியுள்ளதாக லலித் அத்துலத் முதலி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

உண்மையில் லலித் அத்துலத் முதலி அவ்வாறான கடிதம் எதையும் எழுதவில்லை. ஆனால் பழ. நெடுமாறன் அவர்கள் வந்தால் சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என்ற திட்டத்தோடு மன்னார் கடற்பகுதியில் சிறிலங்கா கடற்படை நிறுத்தப்பட்டடிருந்தது.

இந்த நிலையில் படகுகளில் பயணத்தை ஆரம்பித்த பழ. நெடுமாறன் மற்றும் தொண்டர்களை நடுக்கடலில் வைத்து இந்தியக் கடற்படை தடுத்து நிறுத்திக் கைது செய்தது.

அதன் பிறகு 1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 அன்று ரகசியமாக படகில் தமிழீழம் வந்து மக்களை சந்தித்தார். இது சிறிலங்கா அரசுக்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது. கிண்டல் செய்த லலித் அத்துலத் முதலிக்கு மூக்கறுந்தது போலானது. விடுதலைப் புலிகள் பாதுகாப்பு அளிக்க பழ.நெடுமாறன் அவர்கள் தமிழீழத்தின் பல மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்தார்.

தற்பொழுது மீண்டும் ஒரு முறை படகேறி அல்லலுறும் தமிழ் மக்களுக்கு உதவவென பழ.நெடுமாறன் அவர்கள் தயாராகி வருகின்றார். 1983ஆண்டு போன்று இம் முறையும் இந்திய அரசு அவரை இடையிலேயே தடுத்து நிறுத்தும். சில வேளைகளில் செப்ரெம்பர் 11ஆம் நாள் போரட்டம் ஆரம்பமாகும் இடங்களிலேயே பழ. நெடுமாறன் அவர்களும் மற்றைய தலைவர்களும் கைது செய்யப்படவும் கூடும்.

ஆயினும் இவ்வாறான ஒரு போராட்டத்தை நடத்த முன்வந்திருப்பது போற்றத்தக்கதாகும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இதுவரை நடத்தி வந்த மென்மையான போரட்டங்களோடு இது போன்ற ஓரளவு கடுமையை வெளிப்படுத்துகின்ற போராட்டங்களையும் நடத்த முனைவது ஒரு நல்ல திருப்பமாகும்.

இதுவரை ஈழத் தமிழர்களுக்காக பட்டினிப் போர், பொதுக்கூட்டம் போன்ற போராட்டங்களை நடத்தியவர்கள், படகுகளில் ஏறி நேரடியாக ஈழத்திற்கு புறப்படுகின்ற போராட்டத்தை நடத்த முனைவது தமிழ்நாட்டில் உள்ள தமிழுணர்வாளர்கள் அடங்க மறுத்து போராடத் தயாராகி வருவதைக் காட்டுகிறது.

ஈழத் தமிழர் விடயத்தில் பட்டும் படாமலும் நடந்து கொள்ளும் தமிழ்நாட்டு அரசையும் இது போன்ற போராட்டங்களே தட்டி எழுப்பும்.

1983ஆண்டில் பழ.நெடுமாறன் அவர்கள் ஈழத் தமிழர்களை காப்பாற்ற படகில் வர முயன்ற போது, அந்தப் போராட்டத்திற்கு அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்திருந்தார். 1985ஆம் ஆண்டு இந்திய அரசுக்கு தெரியாமல் இரகசியமாக தமிழீழப் பயணம் மேற்கொண்ட போதும் கலைஞர் கருணாநிதி பெருமிதமாக பழ.நெடுமாறனை பாராட்டி, அவரை மாவீரன் என்று போற்றி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தமிழீழ மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புகின்ற முயற்சிகளுக்கு கலைஞர் மட்டும் ஆதரவாக இருக்கவில்லை. இந்திய அரசு கூட 1987ஆம் ஆண்டில் நேரடியாக கப்பல்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்களை அனுப்ப முயற்சித்தது. உணவுப் பொருட்களை ஏற்றி வந்த இந்தியக் கப்பல்களை சிறிலங்கா கடற்படை நடுக் கடலில் வைத்து திருப்பி அனுப்பியது. அதன் பிறகு சில நாட்கள் கழித்து இந்திய வான்படையின் விமானங்கள் யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களை பரசூட் உதவியுடன் வீசிச் சென்றன.

இன்றைக்கு தமிழ்நாட்டு அரசும் இந்திய அரசும் யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்களை அனுப்புவதற்கு தடையாக நிற்கின்றன. முதல்வராக இருக்கின்ற கலைஞர் அன்று போன்று வாழ்த்து தெரிவிக்காது விட்டாலும் கூட, இது போன்ற போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்ட காரணத்தையும், போராட்டம் நடத்துபவர்களின் பக்கம் உள்ள நியாயத் தன்மையையும் உணர்ந்து ஆவன செய்ய வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எதுவாயிருப்பினும் தமிழ்நாட்டு அரசுக்கும், இந்திய அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை இறுக்கமாகவும் உறுதியாகவும் சொல்வதாக இந்தப் போராட்டம் அமைந்தால், அதுவே ஒரு பெரும் வெற்றியாக இருக்கும்.

No comments: