Sunday, August 12, 2007

லலிதாவின் கதை!

எமது தளத்தில் வெளிவந்த "ஏமாற்றுக்காரர்களின் ஊர்வலம்" என்ற கட்டுரை குறித்து பல தரப்பிடம் இருந்து நேரடியாகவும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் பலவிதமான கருத்துக்கள் வந்தன. அதில் பெரும்பாலான கருத்துக்கள் டென்மார்க்கில் தன்னை அம்மன் என்று சொல்லி பக்தர்களை ஏமாற்றி வரும் அபிராமியை பற்றியதாக இருந்தது.

அபிராமியைப் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை தொடர்ந்தும் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்று பாராட்டுக்களும் வந்தன. நடமாடும் தெய்வத்தை தவறாகப் பேசாதீர்கள் என்று கண்டனங்களும் வந்தன. அத்துடன் அபிராமி பற்றி மேலும் அறிந்து கொள்கின்ற ஆவலும் பலரிடம் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

அவர்களுடைய ஆவலை ஓரளவு பூர்த்தி செய்யும் விதமாக டென்மார்க் அபிராமி பற்றிய மேலும் சில விபரங்களை சேகரிக்க முனைந்தோம். அப்படிச் சேகரித்ததில் டென்மார்க் அபிராமி பற்றி சில ஆச்சரியமான தகவல்களும் கிடைத்தன.

டென்மார்க் அபிராமியின் உண்மையான பெயர் லலிதா என்பது பலருக்கு தெரியாத செய்தி. இந்த லலிதா ஈழத்திலே ஒரு இளம் பெண்ணாக இருந்த காலத்திலேயே உரு ஆடி குறி சொல்கின்ற தொழிலை செய்து வந்திருக்கின்றார். லலிதா தன்னுடைய ஊராகிய ஏழாலையில் ஒரு சிறு குடிலை அமைத்து, அதில் ஒரு அம்மன் சிலையை வைத்து உரு ஆடி வந்திருக்கிறார்.

ஏழாலையில் வேறு பலரும் உரு ஆடுகின்று வேலையை செய்து வந்தார்கள். அதில் சிலர் மனம் பேதலித்து உரு ஆடுபவர்களாகவும், சிலர் அதை தொழிலாகவும் செய்பவர்களாகவும் இருந்தார்கள்.

ஏழாலையில் பலர் உரு ஆடுவதால் லலிதா பற்றிய தகவல்களை பெறுவது மிகவும் கடினமாகப் போய்விட்டது. பலர் ஏழாலையில் உரு ஆடிய மற்றைய பெண்களை லலிதாவோடு போட்டு ஒன்றாக குழப்பினார்கள். லலிதாவின் தந்தை உரு ஆடிக் குறி சொல்பவர் என்று சிலர் உறுதியாகச் சொன்னார்கள். கடைசியில் அது லலிதாவின் தந்தை அல்ல என்று தெரிய வந்தது. ஏழாலையில் உரு ஆடிய வேறொரு பெண்ணின் தந்தையை லலிதாவின் தந்தை என்று மாற்றி நினைத்து தகவல் சொல்லி விட்டார்கள். இப்படி பல குழப்பங்களோடுதான் லலிதா பற்றி அறிய முடிந்தது.

இப்படி பல குழப்பங்களுக்கு மத்தியில் சேகரித்த உண்மையான தகவல்கள்தான் இனி வருபவை.

ஏழாலையில் லலிதாவின் தாயின் சகோதரியும் உரு ஆடுதல், பேயோட்டுதல் போன்ற தொழில்களை செய்கின்ற ஒருவராக இருந்தார். (பேயாட்டுகின்ற போது லலிதாவின் பெரியம்மா முழிக்கின்ற முழியைப் பார்த்ததன் பாதிப்புத்தான் இப்பொழுது டென்மார்க்கில் லலிதா அடிக்கடி கண்களை உருட்டி உருட்டி முழித்துப்பார்ப்பது.) பெண்கள் உரு ஆடி குறி சொல்கின்ற பொழுது அதிக வசூல் வருவதைக் கண்ட லலிதா தானும் உரு ஆடும் தொழிலில் களம் இறக்க முடிவு செய்தார்.

ஏழாலையில் பல சைவ ஆலயங்கள் உண்டு. அவற்றில் ஒரு அம்மன் கோவில் சற்றுப் பெரியது. அதை ஏழாலை மக்கள் "பெரிய அம்மன் கோவில்" என்று சொல்லி வணங்குவார்கள். அந்தக் கோவிலில் உள்ள அம்மனையும் "பெரிய அம்மன்" என்றுதான் சொல்வார்கள்.

இந்த இடத்தில்தான் லலிதாவின் மூளை வேலை செய்தது. கோயில் என்ற பெயரில் ஒரு சிறிய குடிலைப் போட்டுக் கொண்டு லலிதா தன்னை "சின்ன அம்மன்" என்று சொல்லிக் கொண்டு உரு ஆடத் தொடங்கினார். ஏழாலையில் உள்ள பெரும்பாலான மக்கள் லலிதாவை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் அயலூர்களில் இருந்து சிலர் "சின்ன அம்மனிடம்" குறி கேட்கச் சென்றனர்.

இன்றைக்கும் டென்மார்க்கில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் லலிதாவிடம் செல்வதில்லை. அயல் நாடுகளில் உள்ளவர்கள்தான் செல்கின்றனர். சொந்த நாடான ஈழத்தில் பிரேமானந்தாவை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அவரை கடவுள் என்று நம்பி பலர் ஏமாந்து போகவில்லையா? அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்.

டென்மார்க்கிற்கு வந்த லலிதா உடனடியாக அபிராமி அவதாரம் எடுத்துவிடவில்லை. சிறிது காலம் மக்களை ஏமாற்றாமல் நல்ல ஒரு பெண்ணாக வாழ்ந்து வந்தார். ஆனால் பேராசை அவரை நீண்ட காலம் அப்படி இருக்க விடவில்லை. கிறிண்ட்ஸ்ரெட் என்ற நகரில் வாழ்ந்த லலிதாவும் அவருடைய கணவராகிய சிறிபாலனும் பிரண்டா என்ற நகருக்கு மாறி அங்கே ஒரு கோயிலை உருவாக்கினார்கள்.

இப்படித்தான் தாயகத்தில் சின்ன அம்மனாக இருந்த லலிதா டென்மார்க்கில் அபிராமியாக மாறினார்.

கிறிண்ட்ஸ்ரெட்டில் இருந்து பிரண்டாவிற்கு மாறியது பற்றி லலிதா பொய்யான கதை ஒன்றை பரப்பி வைத்திருக்கிறார். லலிதாவிற்கு திடீரென்று நோய் வந்து விட்டதாம். அம்மன் கனவில் வந்து தன்னை மறந்து போனதால்தான் இந்த நோய் வந்ததாக சொன்னாராம். அதன்பிறகு லலிதா ஊரில் வைத்து வழிபட்ட அம்மன் சிலையை தருவித்து பிரண்டாவில் தற்பொழுதுள்ள ஆலயத்தை உருவாக்கினாராம். இதுதான் லலிதா பரப்பியிருக்கின்ற கதை.

ஆனால் கிறிண்ட்ஸ்ரெட்டில் உள்ள மக்கள் உண்மையைப் போட்டு உடைத்தார்கள். டென்மார்க்கில் இருக்கின்ற மக்களில் அதிகமானவர்கள் லலிதாவின் கோவிலுக்குப் போவதில்லை. அதிலும் கிறிண்ட்ஸ்ரெட்டில் உள்ள மக்களில் ஒரிருவரைத் தவிர மற்றவர்கள் யாரும் லலிதாவின் கோயிலுக்கு செல்வதேயில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான பதிலில்தான் லலிதாவும் சிறிபாலனும் பிரண்டாவிற்கு ஓடிய காரணமும் இருக்கிறது.

லலிதாவின் கணவர் சிறிபாலன் கிறிண்ட்ஸ்ரெட்டில் செய்த அட்டாகசமே லலிதாவும் சிறிபாலனும் பிரண்டாவிற்கு ஓடியதன் காரணம். சிறிபாலன் அந்த நகரத்தில் கொண்டிருந்த தகாத உறவுகள் காரணமாக அங்குள்ள இளைஞர்களால் எச்சரித்து விரட்டப்பட்டார். (கண்ணியம் கருதி இது பற்றி விரிவாக எழுதுவதை தவிர்த்துக் கொள்கிறோம்) லலிதாவும் சிறிபாலனும் இளைஞர்களின் எச்சரிக்கைக்கு அஞ்சி பிரண்டாவிற்கு ஓடினார்களே தவிர, அம்மன் கனவில் வந்ததால் அல்ல.

பிரண்டாவிலே அமைக்கப்பட்ட ஆலயம் மக்கள் பணத்தில்தான் அமைக்கப்பட்டது. ஆனால் அதை தனது சொந்தப் பணத்தில் அமைத்ததாகத்தன் டென்மார்க்கின் ஊடகங்களுக்கு சொல்லி வருகிறார். மக்கள் தந்த பணத்தினால் அபிராமி என்கின்ற லலிதா பெரும் பணக்காரி ஆகிவிட்டார். ஒரு தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நேரத்தை விலை கொடுத்து வாங்குகின்ற அளவிற்கு, ஐரோப்பாவில் இருக்கும் வருமானம் குறைந்த கோவில்களிற்கு சில அன்பளிப்புக்களை வழங்குகின்ற அளவிற்கு லலிதாவிடம் பணம் புரள்கின்றது.

லலிதாவின் ஆலயத்திலே நடக்கின்ற திருமணங்கள் பற்றியும் ஒரு தகவல் கிடைத்தது. லலிதாவின் ஆலயத்திலே திருமணம் செய்பவர்கள் சம அந்தஸ்திலே இருக்க வேண்டுமாம். பொருளாதாரரீதியாகவும் அதை விட முக்கியமாக சாதிரீதியாகவும் சமமானவர்களாக இருக்க வேண்டுமாம். இதை லலிதா தரப்பினரே டென்மார்க் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி வழங்குகின்ற போது சொல்லியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சாதி வெறி பிடித்த ஒரு பெண்ணை கடவுள் என்று எம்மவர்கள் சிலர் நம்புவது வெட்கப்பட வேண்டிய விடயம்.

ஆனால் ஐரோப்பாவில் வாழ்கின்ற குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள சில தமிழர்கள் லலிதாவை அம்மன் என்று நம்புகின்றார்கள். லலிதா தங்களுடைய நோய்களை தீர்த்து வைத்ததாக சொல்கின்றனர். இவைகள் உண்மையா? இது பற்றிய மேலதிக விபரங்களோடு அடுத்த வாரம் உங்களைச் சந்திக்கின்றோம்.

3 comments:

வி.சபேசன் said...

ஏழாலையில் பலர் உரு ஆடுவதால் லலிதா பற்றிய தகவல்களை பெறுவது மிகவும் கடினமாகப் போய்விட்டது. பலர் ஏழாலையில் உரு ஆடிய மற்றைய பெண்களை லலிதாவோடு போட்டு ஒன்றாக குழப்பினார்கள். லலிதாவின் தந்தை உரு ஆடிக் குறி சொல்பவர் என்று சிலர் உறுதியாகச் சொன்னார்கள். கடைசியில் அது லலிதாவின் தந்தை அல்ல என்று தெரிய வந்தது. ஏழாலையில் உரு ஆடிய வேறொரு பெண்ணின் தந்தையை லலிதாவின் தந்தை என்று மாற்றி நினைத்து தகவல் சொல்லி விட்டார்கள். இப்படி பல குழப்பங்களோடுதான் லலிதா பற்றி அறிய முடிந்தது.

Anonymous said...

வெப்ஈழத்தில் டென்மார்க் அபிராமி அம்மனைபற்றிய விமர்சனத்தை பார்த்தேன், தயவு செய்து அந்த அபிராமி அம்மனைப்பற்றி தவறாக எழுதுவதை நிறுத்தவும். இந்த அபிராமி அம்மன் தான் தோன்றி அம்மனாக மனித ருபத்தில் இக்கலியுகத்தில் அவதரித்து உலகமக்களை நோய், பிணிகள், தீயவினைகள் போன்றவற்றில் இருந்து காப்பாற்றி அபருள்புரிகின்றார். இப்படிபட்ட நடமாடும் தெய்வத்தை தவறாக எழுதி தெய்வக்குற்றத்துக்கு ஆளாகாதீர்கள். உதாரணத்திற்கு வைத்தியரால் என் சுகவீனத்தை மாற்றமுடியாது கைவிடப்பட்ட நான் இன்று இந்த அபிராமி அம்மாவால் உயிர் பிழைத்துள்ளேன். அபிராமி அம்மன் டென்மார்கிலே பெரிய பணகாரர் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள், அப்படியல்ல ஆடம்பரமற்று இல்லறத்தை துறந்து துறவியாகி காவியுடையுடன் உறக்கமின்றி ஊன் இன்றி தன்னை பற்றி கவலைப்படாது இராப் பகல் என்று பார்க்காது மக்களின் துயர் துடைத்து வாழ வைக்கும் தாய் மக்களுக்காகவே ஆலயத்தை கட்டி மக்களுக்காகவே அந்த அபிராமி அம்மா வாழ்கின்றார். சபேசன் அவர்களே! நீங்களும் ஒருகாலத்தில் அந்த அபிராமி அம்மனிடம் போய் என்னை காப்பாற்றி அருள்புரிய வேண்டும் கேட்கும் காலம் வெகுவிரைவில் வரும்.



-அபிராமி அம்மன் பக்தன்

Anonymous said...

ஜெயலலிதான்னு நெனைச்சு ஓடிவந்தேன். என்னை ஏமாத்திட்டியே மக்கா!