Friday, August 03, 2007

மகிந்த ராஜபக்ஸவை பலவீனப்படுத்தும் மேற்குலகம் - தமிழர் தரப்பை குறிவைத்து நடவடிக்கை!

சிறிலங்காவின் அரசியல் நிலை கடந்த சில வாரங்களாக மிகப் பரபரப்பாகக் காணப்படுகிறது. சிறிலங்காவின் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்கட்சிகள் தமது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. மகிந்தவின் அரசை கவிழ்க்கின்ற வேலைகள் திடீரென்று வேகம் எடுத்துள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ஸ எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பல உறுப்பினர்களை தன்னுடைய கட்சிக்குள் இழுத்தார். அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை வழங்கினார். 107 அமைச்சர்களோடு உலகின் மிகப் பெரிய அமைச்சரவையை மகிந்த ராஜபக்ஸ அமைத்தார்.

இந்த நேரத்தில் மகிந்தவின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த மங்கள சமரவீர போன்றோர் அரசில் இருந்த விலகினர் அல்லது விலக்கப்பட்டனர். விலகிச் சென்றவர்கள் மங்களவின் தலைமையில் "சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு" என்னும் கட்சியை தொடங்கினர்.

மங்களவின் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் செய்து கொண்டது. மகிந்தவிற்கு எதிரான கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்த கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்ட பேரணியையும் நடத்தின. மகிந்தவிற்கு ஆதரவான பேரணியும் நடைபெற்றது. ஆனால் எதிர்கட்சிகள் நடத்திய பேரணியிலேயே அதிகளவு மக்கள் திரண்டனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதாக மகிந்தவின் அரசு சிங்கள மக்களை நம்ப வைத்தாலும், அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவு சிங்கள மக்கள் மத்தியில் மகிந்தவிற்கு எதிரான உணர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

மகிந்தவின் அரசுக்கு எதிரான செயற்பாடுகள் வேகமடைந்து வரும் நிலையில், தற்பொழுது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் அரசில் இருந்து வெளியேறியுள்ளது. தான் வகித்த அமைச்சர் பதவிகளில் இருந்தும் விலகியுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ{ம் அரசில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவின் நாடாளுமன்றம் 225 உறுப்பினர்களைக் கொண்டது. அரசு அமைப்பதற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமானது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்பொழுது ஏறக்குறைய 70 உறுப்பினர்களையே நாடாளுமன்றத்தில் கொண்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் ஈடாட்டத்தில் இருப்பதால், உண்மையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை சரியான முறையில் கூறமுடியாது உள்ளது.

மங்கள சமரவீரவால் மேலும் சில உறுப்பினர்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னுடைய கட்சிக்குள் இழுக்க முடிந்தால் மகிந்தவின் அரசு கவிழ்ந்து விடும். ஜேவிபி (39 உறுப்பினர்கள்), ஜாதிக ஹெல உறுமய (7 உறுப்பினர்கள்) போன்ற கட்சிகள் ஆதரவு வழங்கினாலும் மகிந்தவின் அரசால் பெரும்பான்மை பலத்தை பெற முடியாது போய்விடும்.

மகிந்தவினுடைய அரசை கவிழ்க்கும் நடவடிக்கைகளுக்கு மேற்குலகின் ஆசிர்வாதம் இருப்பதாக நம்பப்படுகிறது.

மகிந்த ராஜபக்ஸ மீது கடும் அதிருப்தியில் மேற்குலகம் இருக்கிறது. மகிந்தவின் அடாவடித்தனமான நடவடிக்கைகள் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலை குழப்புகின்றன. மகிந்தவின் போர்முனைப்பு நடவடிக்கைகளால் விடுதலைப் புலிகள் மீது ஒரு அளவிற்கு மேல் அழுத்தங்களை செலுத்துவதில் தர்மசங்கடமான நிலையை மேற்குலம் எதிர்நோக்கியுள்ளது. மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி நடக்கக்கூடியவராக ரணில் விக்கிரமசிங்கவே இருக்கிறார்.

ஆகவே மேற்குலகின் ஆசீர்வாதத்தோடு மகிந்த ராஜபக்ஸவின் அரசைக் கவிழக்கும் நடவடிக்கைகள் மேலும் வேகம் பெறும். சில வேளைகளில் மகிந்தவின் அரசைக் கவிழ்க்கும் முயற்சி வெற்றி பெறவும் கூடும்.

ஆனால் அவ்வாறான ஒரு நிலை உருவாவது தமிழர் தரப்புக்கு நல்லது அல்ல. மேற்குலகின் ஆதரவோடு அமைகின்ற ரணிலின் அரசு தமிழர் தரப்பை சர்வதேசரீதியில் மேலும் பலவீனப்படுத்திவிடும். ரணிலின் புதிய அரசோடு தற்பொழுது உள்ள நிலையிலேயே பேசும்படி விடுதலைப் புலிகளுக்கு மேற்குலகம் கடும் அழுத்தங்களையும் கொடுக்கும்.

அதே போன்று மகிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடத்துவராக இருந்தால், அதுவும் தமிழர் தரப்பிற்கு பாதகமாகவே அமையும். தற்போது உள்ள நிலையில் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித செயற்பாட்டையும் மேற்கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளது. பொது தேர்தல் ஒன்று நடந்தால், கள்ளவாக்குகள் மூலம் ஒட்டுக் குழுக்கள் நாடாளுமன்றத்திற்குள் நுளையும் வாய்ப்பு ஏற்படும்.

ஆகவே மகிந்தவின் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் வெளியேறுவது குறித்து உண்மையில் தமிழர்கள் மகிழ்ச்சி அடைய முடியாது. தமிழ் மக்களுக்கு மகிந்த ராஜபக்ஸ மிகப் பெரும் அவலங்களைக் கொடுத்தாலும், அவருடைய போர்முனைப்பான அடவாடித்தனமான நடவடிக்கைகளே தமிழர்களுக்கு சாதகமான பலன்களையும் கொடுக்கப் போகின்றன.

மகிந்தவினுடைய நடவடிக்கைகளே சர்வதேச வலைப்பின்னலில் இருந்து தமிழர் தரப்பை ஓரளவு விடுவித்தது என்பது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

விடுதலைப் புலிகள் பெரும் போருக்கு தயாராகி வரும் நிலையில், மேற்குலகம் அவசரம் அவசரமாக இலங்கை அரசியலை தலைகீழாக மாற்ற முயற்சிக்கிறது. விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் முக்கிய நிலப் பரப்புக்கள் வரும் முன்னர், விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர மேற்குலகம் முனைந்து நிற்கிறது. அதற்காக இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறது.

ஆனால் விடுதலைப் புலிகள் வேகமாகவும் விவேகமாகவும் செயற்படுபவர்கள் என்பதையே உலகம் மீண்டும் உணர்ந்து கொள்ளும் நிலை ஏற்படும்.

1 comment:

Anonymous said...

"மகிந்த அரசு கவிழ்வது தமிழருக்கு ஆபத்தானது"
நல்ல கருத்து. சரியான பார்வை.


ஒரு ஈழத்தமிழன்.