டென்மார்க்கில் தன்னை அம்மன் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற அபிராமி எனப்படும் லலிதா என்கின்ற பெண்மணியை கடவுள் என்று உண்மையிலேயே நம்புகின்ற பலர் ஐரோப்பாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரை வாழும் தெய்வம், நடமாடும் தெய்வம் என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள்.
இப்படி இவர்கள் லலிதாவை நம்புவதற்கு என்ன காரணம்? ஆயிரக் கணக்காண தமிழர்களை முட்டாள்கள் ஆக்கி தன்னை நம்ப வைக்க லலிதாவால் எப்படி முடிந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில் ஒன்றும் கடினமில்லை. தன்னை கடவுள் என்று சொல்கின்ற அனைத்து மோசடிப் பேர்வழிகளும் கையாளுகின்ற அதே வழியைத்தான் லலிதாவும் கையாளுகிறார்.
தன்னிடம் வருபவர்களை பயமுறுத்துவது, வாயிலே இருந்து லிங்கம், மாணிக்கம் போன்ற வாய்க்குள் ஒளித்து வைக்கக்கூடிய மிகச் சிறிய பொருட்களை வாயிலிருந்து வரவழைத்து மாயாஜாலம் புரிவது, பெரும்பாலும் பலிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளவைகளையே சொல்வது, பலிக்காது விட்டால் விதி என்று சொல்வது. இவைகள்தான் லலிதா மக்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்துகின்ற வழிமுறைகள்.
லலிதா பலருடைய நோயைக் குணப்படுத்தி உள்ளதாக அவருடைய பக்தர்கள் புகழ்கின்றனர். அவ்வாறான கதைகளை பரப்புகின்றனர். இவைகள் உண்மையா என்று அறிவதற்கு பல இடங்களில் விசாரித்தோம். கிடைத்த தகவல்களுள் சுவாரஸ்யமான தகவல்களோடு அதிர்ச்சிகரமான தகவல்களும் இருந்தன.
டென்மார்க்கிலே லலிதாவின் கோயிலுக்கு சென்று வருகின்ற ஒருவர் இருந்தார். அவர் நாட்டின் மீது பற்றுக்கொண்டு நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தன்னால் இயன்ற பணிகளையும் செய்து கொண்டிருந்தார். திடீரென்று ஒருநாள் அவரை புற்றுநோய் தாக்கியது. மருத்துவர்கள் அவர் பிழைப்பதற்கு சாத்தியங்கள் மிகக் குறைவு என்று சொல்லிவிட்டனர்.
அவர் இடிந்து போனார். ஓடிப் போய் லலிதா முன் நின்றார். லலிதாவே சரணம் என்றார். லலிதாவும் "கவலைப்படாதே, உன்னுடைய நோய் குணமாகும்" என்று அருள்வாக்குச் சொன்னார். அவரும் அதை முழுவதும் நம்பி லலிதாவே கதியென்று கிடந்தார். மருத்துவர் தந்த மருந்துகளை கவனிக்காது விட்டார். மருத்துவர் தந்த மருந்துகளை விட லலிதாவே தன்னைக் காப்பார் என்று நம்பினார். ஓரிரு மாதங்களில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இதே போன்று ஜேர்மனியில் இன்னும் ஒருவர். அவருக்கும் புற்றுநோய் தாக்கியிருந்தது. லலிதாவைப் பற்றி கேள்விப்பட்டு லலிதாவிடம் நம்பிக்கையோடு போனார். லலிதாவைக் கண்டதும் அவருக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. அத்தனை நாளும் அவருக்கு இருந்த வலி குறைவது போல் இருந்தது. லலிதா மீது முழு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அவரிடமும் லிலிதா புற்றுநோய் நீங்கும் என்றுதான் அருள்பாலித்தார். லலிதா அவருக்கு ஒரு தேசிக்காயும் சந்தணமும் கொடுத்து அனுப்பினார்.
மிக உற்சாகத்துடன் வீடு திரும்பிய அவர் மருத்துவர் தந்த மருந்துகளை புறம் தள்ளினார். லிலதா தந்த தேசிக்காயை முகர்ந்து பார்ப்பதும், சந்தணத்தை பூசுவதுமே அவர் தனக்கு செய்த வைத்தியமாக இருந்தது. அவர் ஒரு வாரத்திலேயே இறந்து போனார்.
நாகரீகம் கருதி இறந்து போனவர்கள் பெயர் விபரங்களை தவிர்த்திருக்கிறோமே தவிர இவைகள் நூறு வீதம் உண்மையான சம்பவங்கள். தேவையேற்படின் இவைகள் உண்மையென்று நிரூபிப்பதற்கு தயாராகவே இருக்கிறோம். உண்மையில் இறந்து போன இருவரும் மருத்துவர்களின் ஆலோசனைகளை முற்றுமுழுதாக கடைப்பிடித்திருந்தால் மேலும் சில காலம் உயிர் வாழந்திருக்க முடியும். சில வேளைகளில் நோய் குணமாகி இருக்கவும் கூடும். ஆனால் லலிதாவின் பேச்சை நம்பி இறந்து போய்விட்டார்கள். இவர்களின் இறப்புக்கு லலிதாவும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.
இதே வேளை லலிதாவின் பக்தையாக இருந்து புற்றுநோய் குணமான ஒரு பெண்ணும் ஜேர்மனியில் இருக்கிறார்.
லலிதாவின் பக்தையான அவருக்கும் புற்றுநோய் வந்தது. மருத்துவர்கள் குணமடைவதற்கு சாத்தியங்கள் குறைவு என்றனர். லலிதாவோ வழமை போன்று நோய் குணமடையும் என்று சொன்னார். அந்தப் பெண் தினமும் வீட்டில் லலிதாவின் அம்மன் "மேக்கப்" போட்ட புகைப்படங்களை வைத்து வழிபட்டு வந்தார். அதே வேளை மருத்துவர் தந்த மருந்துகளை வேளாவேளைக்கு உட்கொண்டார். ஆனால் அவருக்கு நோய் குணமடையவில்லை. மேலும் தீவிரம் அடைந்தது.
அப்பொழுது ஒருநாள் அவருடைய "அலேலூயா" நண்பர்கள் சிலர் அவரை வற்புறுத்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அதன் பிறகு அவருடைய நோய் குணமடையத் தொடங்கிவிட்டது. இன்றைக்கு அவர் தன்னுடைய வீட்டில் இருந்த லலிதாவின் படங்களை களற்றி எறிந்துவிட்டார். இன்றைக்கு அவருடைய வீட்டில் "இயேசு ஜீவிக்கிறார்" என்ற வார்த்தைகளே தொங்குகின்றன. அவருடைய குடும்பமே "அலேலூயா" என்று கத்துகிறது.
உண்மையில் அவருடைய நோய் மாறியதற்கு யேசு காரணம் இல்லை. மருத்துவர் தந்த மருந்துகளும், அவர் தொடர்ந்து செய்த வைத்தியங்களுமே காரணம். ஆனால் அவர் யேசுதான் காரணம் என்று அப்பாவித்தனமாக நம்புகிறார். அவர் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு போகாது விட்டிருந்தாலும் அவருடைய நோய் குணமாகி இருக்கும். அப்பொழுது அவர் லலிதாதான் தன்னுடைய நோயைக் குணப்படுத்தியதாக நம்பியிருப்பார்.
இன்னும் ஒரு இளைஞனின் கதை இருக்கிறது. நோய் கண்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவனிடம் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக கூறினார்கள். புற்றுநோய்க்கான வைத்தியசாலைக்கும் அவன் மாற்றப்பட்டான். அவனுடைய இரத்தம் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது.
அவனுடைய தாயும் லலிதாவின் ஒரு பக்தைதான். தாய் லலிதாவிடம் போய் நின்று கதறினார். லலிதா மீண்டும் வழமையாகச் சொல்வது போன்று மகனுடைய நோய் குணமாகும் என்று சொன்னார்.
சில நாட்கள் கழித்து மருத்துவ பரிசோதனைக் கூடத்தில் இருந்து அறிக்கை வந்தது. மகனுக்கு வந்திருப்பது புற்றுநோயே அல்ல என்று அந்த அறிக்கை சொன்னது. இப்பொழுது அந்தத் தாய் பரவசத்தின் உச்சிக்கே போய் விட்டார்.
தகவல் லலிதாவிற்கும் போனது. இந்த அற்புதத்தை எல்லோரிடமும் சொல்லும்படி லலிதா கட்டளை இட்டார். இப்பொழுது அந்தப் அப்பாவித் தாய் லலிதா தன்னுடைய மகனின் புற்றுநோயை இல்லாமல் செய்த "அற்புதத்தை" காண்போரிடம் எல்லாம் சொல்லிவருகிறார்.
இங்கே உண்மையில் அந்த இளைஞனுக்கு புற்றுநோயே வரவில்லை. மருத்துவர்கள் புற்றுநோயாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டார்கள். அவ்வளவுதான். அந்த இளைஞனின் தாய் லலிதாவிடம் செல்லாதுவிட்டிருந்தாலும், அதே மருத்துவ அறிக்கைதான் வந்திருக்கும். செல்லவில்லை என்பதற்காக இல்லாத புற்றுநோய் இருப்பதாக அறிக்கை மாறியிருக்காது. ஆனால் இந்த சிறிய விடயத்தைக் கூட புரியாத அளவிற்கு அந்தத் தாய் அப்பாவியாக இருக்கிறார்.
இந்த அப்பாவித்தனமும், முட்டாள்தனமுமே லலிதா போன்றவர்களை கடவுளாக மாற்றி இருக்கிறது.
இந்த இடத்தில் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். பொதுவாக தம்மை கடவுள் என்று சொல்பவர்களிடம் கொடிய நோய்கள் வருகின்ற போதுதான் பலர் போவார்கள். புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வருகின்ற போது மருத்துவர்களும் குணப்படுவதற்கு சாத்தியங்கள் உண்டு என்று உறுதியாகச் சொல்லமாட்டார்கள். அப்படிச் சொல்லி குணமாகாது விட்டால் மருத்துவர்கள் பின்பு பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியும் வரும்.
இதைத்தான் இந்த சாமியாடிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தம்மை நம்பி வருபவர்களிடம் நோய் குணமாகிவிடும் என்று சொல்லிவிடுவார்கள். சிலவேளைகளில் குணமடைந்தால், தம்மால்தான் குணமானது என்று நம்பவைத்தம் விடுவார்கள். மருத்துவர்கள் கைவிட்ட எம்மை லலிதா காப்பாற்றிவிட்டார் என்று பக்தர்களும் நம்பி விடுவார்கள்.
இப்படித்தான் இவர்களின் பிழைப்பு நடக்கிறது. இவர்கள் தங்கள் பிழைப்புக்காக மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களின் பணத்தை பிடுங்குகிறார்கள். சிலவேளைகள் அவர்களுடைய சாவுக்கும் காரணமாகி விடுகிறார்கள். ஆனால் எமது மக்கள் விழிப்புறும் வரை எதுவுமே மாறப்போவது இல்லை.
No comments:
Post a Comment