Monday, July 30, 2007

விடுதலைப் புலிகளின் தாக்குதல் - எங்கே? எப்பொழுது?

விடுதலைப் புலிகள் சிறிலங்காப் படைகளுக்கு எதிராக பாரிய தாக்குதலை நடத்தப் போகின்றார்கள் என்கின்ற பரபரப்பான எதிர்பார்ப்பு பல மட்டங்களில் நிலவி வருகின்றது.
"மன்னாரில் விடுதலைப் புலிகள் படையணிகளை குவிக்கின்றார்கள்", "மணலாறு மீது தாக்குதல் நடத்தப் போகிறார்கள்" போன்ற செய்திகளையும் ஆய்வுகளையும் கொழும்பில் இருந்து வரும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளை தமிழ் ஊடகங்களும் மறுபிரசுரம் செய்ய, அதைப் படித்த தமிழ் மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துப் போய் கிடக்கிறது.
விடுதலைப் புலிகள் விரைவில் சிறிலங்காப் படைகளுக்கு எதிரான பெரும் தாக்குதல்களை நடத்துவார்கள் என்பது யாராலும் எளிதில் ஊகிக்கக்கூடிய ஒரு விடயம். விடுதலைப் புலிகள் அவசர ஆட்சேர்ப்பு நடத்துவது வெறும் விளையாட்டிற்கு அல்ல.
ஆனால் விடுதலைப் புலிகள் எங்கே எப்பொழுது தாக்குதல் நடத்துவார்கள் என்பதே கேள்விக்குறியான விடயமாக இருக்கிறது.
பொதுவாகவே விடுதலைப் புலிகள் ஜுலை மாதத்தில் பெரும் தாக்குதல்களை நடத்துவது வழமை. புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதன் பின்பு ஜுலை மாத தாக்குதல்கள் நடைபெறவில்லை. ஆனால் தற்பொழுது மகிந்தவின் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஈமச் சடங்கு நடத்தி முடித்துவிட்டதால், ஜுலை மாதம் முடிவதற்குள் விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் நடத்துவார்கள் என்று கருதப்படுகிறது.
ஜுலை மாதம் முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், விடுதலைப் புலிகள் ஓகஸ்ட் மாதத்தில் பெரும் தாக்குதலை நடத்தக் கூடும் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதமே சிறிலங்காப் படைகள் நடத்தின. அப்பொழுது மாவிலாறு, சம்பூர் ஆகிய பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. அத்துடன் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் விடுதலைப் புலிகள் யாழ் குடா மீது ஒரு தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறு கடந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் பெரும் மோதல்கள் நடந்த மாதமாக அமைந்தது. அந்த வகையில் சிறிலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக வருகின்ற ஓகஸ்ட் மாதத்தில் விடுதலைப் புலிகள் தமது தாக்குதலை ஆரம்பிப்பார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
விடுதலைப் புலிகள் எங்கே தமது தாக்குதல்களை நடத்துவார்கள் என்பது குறித்தும் பலவாறான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பெரும்பாலானவர்கள் யாழ் குடா, மணலாறு, மன்னார் என்ற மூன்று இடங்களை சுட்டிக் காட்டுகிறார்கள். இந்த மூன்று இடங்களை நோக்கியும் விடுதலைப் புலிகளின் படையணிகள் குவிக்கப்பட்டுவருவதையும் இதற்கு ஆதாரமாக குறிப்பிடுகிறார்கள்.
மணலாற்றை விடுதலைப் புலிகள் கைப்பற்றுவார்களாக இருந்தால், திருகோணமலையை விடுதலைப் புலிகள் அடைவது சுலபமாகிவிடும். திருகோணமலை விடுதலைப் புலிகளின் கைகளில் வீழுகின்ற பொழுது யாழ் குடாவிற்கான வினியோகம் தடைபட்டு யாழ் குடாவில் உள்ள சிறிலங்காப் படையினரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவார்கள்.
மணலாறில் விடுதலைப் புலிகளின் படையணிகள் குவிக்கப்பட்டு வருவதோடு, திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் விடுதலைப் புலிகளின் சில விசேட படையணிகள் தரையிறங்கி உள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மறுபுறம் மன்னாரில் உள்ள படைத் தளங்களை நோக்கியும் விடுதலைப் புலிகளின் படையணிகள் குவிக்கப்பட்டு வருவதாகவும் கூறுப்படுகிறது. மன்னார் கைப்பற்றப்பட்டு விடுதலைப் புலிகளின் படையணிகள் புத்தளம் வரை முன்னேறுவார்களாயின், சிறிலங்காவின் தலைநகரமே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.
இவை எல்லாவற்றையும் விட யாழ் குடாவை மீட்கும் நோக்கிலேய விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அமையும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
பூநகரிப் பகுதியிலும், முகமாலை முன்னரங்கப் பகுதிகளிலும் விடுதலைப் புலிகள் தமது நிலைகளை பலப்படுத்தி வருகிறார்கள். யாழ் குடாவில் இருந்து வன்னி மீதான சிறிலங்காப் படைகளின் தாக்குதல்களை தடுக்கும் பொருட்டு பூநகரியில் கடந்த சில மாதங்களாகவே ஆயிரக் கணக்கான புலி வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். தற்பொழுது மேலதிக படையணிகளும் அங்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
யாழ் குடாவைக் கைப்பற்றுவதை விட மன்னார், மணலாறு போன்ற பகுதிகளைக் கைப்பற்றுவது என்பது விடுதலைப் புலிகளுக்கு இலகுவானதாக இருக்கும். ஆனால் யாழ் குடாவை விடுதலைப் புலிகள் கைப்பற்றுவார்களானால், விடுதலைப் புலிகள் அசுர பலம் பெறுவார்கள்.
மன்னார், மணலாற்றுப் பகுதிகளை விட பெருந்தொகையான ஆயுதங்களும் ஆளணி வளமும் யாழ் குடாவில் கொட்டிக் கிடக்கின்றன.
மன்னார், மணலாறு போன்ற பகுதிகளை கைப்பற்றினாலும் தக்க வைப்பதற்கு கடுமையாக போராட வேண்டி வரும். சிறிலங்காப் படைகள் தமது முழுப் பலத்தையும் பாவித்து இழந்த பகுதிகளை மீட்க முயலும். ஆனால் புவியியல் ரீதியில் பார்க்கும் போது யாழ் குடாவை தக்க வைப்பது இலகுவானது.
யாழ் குடாவோ, மன்னாரோ, மணலாறோ விடுதலைப் புலிகளின் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று சொல்பவர்களோடு, ஒரே நேரத்தில் இந்த மூன்று இலக்கையும் விடுதலைப் புலிகள் தாக்குவார்கள் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இவ்வாறு விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து பலவாறான ஊகங்களும் கருத்துக்களும் கூறப்படுகின்றன.
ஆனால் இங்கே ஒன்றைச் சொல்லியாக வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு ஜுலை மாதம் என்பதற்காகவோ, ஒகஸ்ட் மாதம் என்பதற்காகவோ உடனடியாக, அவசரமாக ஒரு தாக்குதலை நடத்த வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.
ஏற்பாடுகளும் பூர்த்தியாகி சரியான தருணம் வருகின்ற போது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவார்கள். அது நாளையும் நடக்கலாம். மாதங்கள் கழித்தும் நடக்கலாம்.
எதுவாயிருப்பினும் விடுதலைப் புலிகளின் படையணிகள் தமிழ் மண்ணை மீட்கும் நாள் விரைவில் வரவேண்டும் என்பதே உலகெங்கும் வாழும் தமிழர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

1 comment:

Anonymous said...

பொறுமையுடம் காத்திருங்கள் உங்ககள் பங்களிப்பினை தவாறாது செய்யுங்கள்,நல்ல செய்தி விரைவில் வந்து சேரும்.