Tuesday, July 24, 2007

வவுனியாவில் இருவேறு தாக்குதல்கள் - 18 படையினர் பலி!

இன்று வவுனியா மாவட்டத்தில் சிறிலங்காப் படைகள் மீது நடந்த இரு வேறு தாக்குதல்களில் ஆகக் குறைந்தது 18 படையினர் பலியாகினர். பத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இன்று மன்னாரில் இருந்து 30 பேர் கொண்ட சிறிலங்காப் படையணி ஒன்று பேருந்தில் மதவாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இவர்கள் விடுமுறையில் சென்று கொண்டிருந்த படையினர் என்று சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பு கூறுகிறது.
சிறிலங்கா படையணியின் பேருந்து பிற்பகல் 1 மணியளவில் வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளத்தை அடைந்த பொழுது கிளைமோர் தாக்குதலுக்கு இலக்கானது. இந்தக் கிளைமோர் தாக்குதலில் 14 படையினர் கொல்லப்பட்டனர். பத்திற்கும் மேற்பட்ட படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். காயமடைந்த படையினர் உடனடியாக உலங்குவானூர்த்திகளின் மூலம் அனுராதபுர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கிளைமோர் தாக்குதலை அடுத்த அப் பகுதியை சுற்றி வளைத்த சிறிலங்காப் படைகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர். இதில் அப்பாவிப் பொதுமக்களும் காயமடைந்தனர். காயமடைந்த இரண்டு பொதுமக்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வருகிறது.
அதே வேளை இன்று அதிகாலை வவுனியா மாவட்டத்தின் கிழக்குப்புறம் அமைந்துள்ள திருவேகம பகுதியில் சிறிலங்கா ஊர்காவல் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.
தமிழர் பகுதிகளில் அத்துமீறி குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு காவலாக இந்த ஊர்காவல் படையினர் செயற்பட்டு வருகின்றனர். தற்பொழுது ஊர்காவல் படையினருக்கு கனரக ஆயுதப் பயிற்சி உட்பட இராணுவத்தினருக்கு இணையான பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தாக்குதல்களில் 18 படையினர் கொல்லப்பட்டதை அடுத்து சிறிலங்காவின் வான்படையின் யுத்த விமானங்கள் வன்னியில் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளன. முல்லைத்தீவில் உள்ள ஒட்டிசுட்டான் பகுதியிலேயே சிறிலங்காவின் விமானங்கள் குண்டு வீசின. அப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆட்லறி நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது.
சிறிலங்காப் படையினருக்கு எதிரான பலமுனைத் தாக்குதல்கள் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.webeelam.com

No comments: