Thursday, July 05, 2007

கரும்புலிகள் - சில சிந்தனைகள்!

ஜுலை 5 - தமிழீழத்தில் கரும்புலிகள் தினம் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படுகின்ற நாள் இது. முதலாவது கரும்புலித் தாக்குதல் நடைபெற்று இருபது ஆண்டுகள் முடிவுற்றுள்ளன.

தமிழீழ விடுதலைப் போராட்டம் நெருக்கடிகளை சந்திக்கின்ற காலங்களில், அந்த நெருக்கடியில் இருந்து போராட்டத்தை மீட்பவர்கள் பெரும்பாலும் கரும்புலிகளாகவே இருக்கின்றனர்.

ஜுலை 5 1987ஆம் ஆண்டு நெல்லியடியில் முதலாவது கரும்புலித் தாக்குதலை கப்டன் மில்லர் நடத்தினார்.

அன்றைக்கு யாழ் குடா பெரும் நெருக்கடியில் சிக்கியிருந்தது. சிங்களப் படைகள் "ஒபரேசன் லிபரேசன்" நடவடிக்கை மூலம் வடமராட்சியின் பெரும்பகுதியை கைப்பற்றியிருந்தன. வடமராட்சியை கைப்பற்றியிருந்த சிங்களப் படைகள் யாழ்குடாவின் மற்றைய பகுதிகளையும் கைப்பற்றுவதற்கு ஆயத்த நிலையில் இருந்தன. யாழ் குடா மக்களை அச்சம் சூழ்ந்திருந்த காலம் அது.

அவ்வாறான ஒரு நேரத்தில்தான் ஜுலை 5 1987 அன்று விடுதலைப் புலிகள் நெல்லியடியில் அமைந்திருந்த படை முகாம் மீது தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலின் போது கப்டன் மில்லர் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு படைமுகாம் மீது மோதி வெடித்தார். சண்டை முடிவுக்கு வந்தது.

அந்தத் தாக்குதலில் கரும்புலி கப்டன் மில்லரோடு மேலும் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். ஏறக்குறைய நூறு சிங்களப் படையினர் பலியாகினர். இந்தத் தாக்குதல் சிங்கள அரசை அதிரச் செய்தது. யாழ் குடாவை கைப்பற்றும் திட்டத்தை கைவிடச் செய்தது.

இரண்டாம் ஈழப் போரின் போது தொலைநோக்கு சிந்தனையோடு வன்னியை துப்பரவு செய்யும் பணியை விடுதலைப் புலிகள் ஆரம்பித்தனர். கொக்காவில், மாங்குளம் போன்று முக்கிய முகாம்கள் கைப்பற்றப்பட்டன.

அப்பொழுது வன்னியின் மிகப் பெரிய தளங்களில் ஒன்றாக மாங்குளம் விளங்கியது. மாங்குள முகாமை கைப்பற்றினால்தான் வன்னியின் மைய்யப்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் இரண்டாவது கரும்புலித் தாக்குதல் நடந்தது.

நவம்பர் மாதம் 23ஆம் நாள் 1990ஆம் ஆண்டு மாங்குள முகாம் மீது கரும்புலி லெப்.கேணல் போர்க் வெடிமருந்து வாகனத்தை செலுத்தி வீரகாவியமானார். தொடர்ந்து பல நாட்களாக நடந்து வந்த மாங்குளச் சமர் முடிவுக்கு வந்தது. வன்னியின் பெரும்பகுதியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

தரைக் கரும்புலிகளை அடுத்து கடற் கரும்புலிகளும் தோற்றம் பெற்றனர். சிங்களக் கடற்படைக்கு எதிராக கடற்புலிகள் நடத்திய முதலாவது பெரும் தாக்குதல் கடற்கரும்புலித் தாக்குதலே ஆகும். இதை விட யாழ் குடாவை சிங்களப் படைகளின் இறுக்கமான முற்றுகையில் இருந்து மீட்டு கிளாலிப் பதையை திறந்து வைத்தவர்களும் கடற்கரும்புலிகள்தான்.

வெடிகுண்டு நிரப்பிய ஊர்த்தியோடு சென்று மோதி வெடிக்கின்ற தரை மற்றும் கடற் கரும்புலிகளோடு கொமாண்டோ பாணியிலான அதிரடித் தாக்குதலை நடத்தக்கூடிய கரும்புலிகள் அணிகளையும் விடுதலைப் புலிகள் உருவாக்கினர். இவ்வாறான கரும்புலி அணிகள் எதிரிக்கு மிகப் பெரும் அழிவுகளை ஏற்படுத்திக்கொடுத்தன.

ஓயாத அலைகள் மூன்றில் ஆனையிறவுச் சமரின் போது, ஆனையிறவைச் சுற்றியுள்ள ஆட்லறித் தளங்கள் மீது கரும்புலிகளின் அணிகள் அதிரடித் தாக்குதலை நடத்தி ஆட்லறிகளை அழித்து, ஆனையிறவு கைப்பற்றப்படுவதற்கு உறுதுணையாக இருந்தனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக கரும்புலிகளின் அதரடித் தாக்குதல் அணி கட்டுநாயக்க விமானத் தளம் மீதான தாக்குதல் சிறிலங்கா அரசையே முற்றுமுழுதாக நிலைகுயை வைத்தது. படைவலுச் சமநிலை ஏற்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கும் முக்கிய காரணியாக கட்டுநாயக்க தாக்குதல் அமைந்தது.

தரை மற்றும் கடற் கரும்புலிகளோடு விடுதலைப் புலிகள் வான்கரும்புலிகளையும் உருவாக்குவார்கள் என்ற ஊகம் சில மட்டங்களில் இருந்தது. விடுதலைப் புலிகள் விமானங்களை வைத்திருப்பது தெரிய வந்தபோது, விடுதலைப் புலிகள் விமானங்களைக் கொண்டு தற்கொடைத் தாக்குதல்களையே நடத்துவார்கள் என்று எதிர்வு கூறப்பட்டது.

ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. விடுதலைப் புலிகள் கரும்புலித் தாக்குதல்களுக்கு வான்புலிகளை பயன்படுத்த மாட்டார்கள். ஒரு விமானத்தை பெற்றுக் கொள்வதும், ஒரு விமானியை உருவாக்குவதும் மிகப் பெரும் செலவு பிடிக்கும் விடயங்கள். ஆகவே வான்புலிகளை தற்கொடைத் தாக்குதலுக்கு பயன்படுத்துவதை விடுதலைப் புலிகள் தவிர்த்துக் கொள்ளவே விரும்புவர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவரை 322 கரும்புலி வீரர்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளர். இதில் பெரும்பாலானவர்கள் கடற் கரும்புலிகள் ஆவார்கள்.

கரும்புலிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ளவர்கள் முகம் தெரியாமலேயே தம்மை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈந்துள்ளார்கள். தியாகங்களில் இது மிகப் பெரிய தியாகம் ஆகும்.

தாய்நாட்டிற்காக தமது உயிரைக் கொடுப்பது என்பதே மிகப் பெரிய தியாகம் ஆகும். அதிலும் சாவு நூறு வீதம் உறுதி என்றும், தன்னுடைய உடல் காற்றோடு காற்றோடு கலந்துவிடும் என்றும் தெரிந்து கொண்டு கரும்புலியாவது என்பது தியாகத்திலும் பெரும் தியாகம் ஆகும்.

இவை எல்லாவற்றையும் விட தமது பெயரைச் சொல்லி ஒரு வீரவணக்கம் கூட வெளிப்படையாக செய்ய முடியாது என்று தெரிந்தும் காற்றோடு கலந்து போவது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அரும் பெரும் தியாகம் ஆகும்.

அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவினர் பலர் வெளிநாடுகளில் தமது தாய்நாட்டிற்காக பணியாற்றுகின்ற நேரத்தில் எதிரிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அமெரிக்க அரசு பொறுப்பெடுக்க மாட்டாது. பல வேளைகளில் அவர்கள் அமெரிக்கர்கள் என்று கூடத் தெரிய வருவதில்லை. ஏதோ ஒரு தூர தேசத்தில் யாருமற்ற அநாதைப் பிணம் போன்று புதைக்கப்படுவார்கள்.

கொல்லப்பட்டால் முகவரி இன்றி புதைக்கப்படுவோம் என்று தெரிந்தும் இது போன்று பல நாடுகளின் புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள் தாய் நாட்டிற்காக உலகின் பல பாகங்களிலும் பணிபுரிந்து வருகிறார்கள். தாய்நாட்டிற்காக இவர்கள் மிகப் பெரிய தியாகத்தை செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

இப்படி இன்றைக்கும் சில வேளைகளில் என்றைக்கும் வெளிப்படையாக பெயர் சொல்லி திருவுருவப் படத்திற்கு மாலை போட்டு வீரவணக்கம் செய்ய முடியாதபடி வீரச்சாவடைந்த பல கரும்புலிகள் உண்டு. இவர்கள் தமிழீழ தேசத்தை மிகப் பெரும் அச்சுறுத்தலில் இருந்து காத்தவர்கள்.

கரும்புலிகளின் தாக்குதலை தற்கொலைத் தாக்குதல் என்று பலர் வர்ணித்தாலும், தம்மையே கொடையாகக் கொடுப்பதால் தற்கொடைத் தாக்குதல் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

தமிழீழப் போராட்டத்தை நெருக்கடிகளில் இருந்து மீட்டவர்களும் மிகப் பெரும் அச்சுறுத்தல்களில் இருந்து காத்தவர்களுமாகிய கரும்புலிகளை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே மேற்குலக நாடுகள் பார்க்கின்றன.

ஒரு காலத்தில் வியந்து பார்க்கப்பட்ட தற்கொடைத் தாக்குதல்கள் இன்றைக்கு பல நாடுகளினால் அச்சத்தோடு பார்க்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்களை இலக்கு வைத்து அல்கைதா போன்ற தீவிரவாத இயக்கங்கள் நடத்துகின்ற தாக்குதல்கள் ஆகும். பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்படுகின்ற தற்கொடைத் தாக்குதல்கள் அந்தத் தற்கொடைத் தாக்குதலுக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன.

ஆனால் விடுதலைப் புலிகள் பொதுமக்களை இலக்கு வைத்து ஒருபோதும் தற்கொடைத் தாக்குதல்களை நடத்தவதில்லை. பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இலக்குகளை தாக்கும் போது கூட பொதுமக்களின் பாதிப்பை தவிர்ப்பதில் கூடிய கவனம் செலுத்துவார்கள்.

ஆயினும் உலகின் மிக அதிகமான தற்கொடைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் விடுதலைப் புலிகள் என்பதும் விடுதலைப் புலிகளின் தற்கொடைப் படையணி நவீனமானதும், நெறிப்படுத்தப்பட்டதும், கடும் பயிற்சி பெற்றதும் ஆகும் என்பதும் மேற்குலக நாடுகளுக்கு அச்சத்தையே கொடுக்கின்றன.

விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு முக்கிய நிபந்தனையாக கரும்புலிகள் அணியை கலைக்க வேண்டும் என்ற நிபந்தனையை அமெரிக்கா முன்வைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழீழ மக்களின் மிகப் பெரும் பலமாக கரும்புலிகள் விளங்குவதாலேயே மேற்குலக நாடுகள் இவ்வாறு நடந்து கொள்கின்றன.

கரும்புலிகள்தான் ஒரு பிரச்சனை என்றால், அது குறித்து மேற்குலக நாடுகள் கவலை கொள்ளத் தேவை இல்லை. இன்றைக்கு விடுதலைப் புலிகள் பெற்றுவருகின்ற படைக்கல வளர்ச்சி உயிராயுதத்திற்கு மாற்றீடாக அமைகின்றது.

தரைச் சண்டைகளில் கரும்புலிகளை பயன்படுத்துவது பெருமளவு குறைந்து போயுள்ளது. கடற்சமர்களில் கடற்கரும்புலிகளின் தாக்குதல் இல்லாமலேயே டோராப் படகுகளை கடற்புலிகள் மூழ்கடிக்கத் தொடங்கி உள்ளார்கள். கொழும்பில் கரும்புலிகளின் அதரடித் தாக்குதல் அணி நடத்த வேண்டிய தாக்குதல்களை வான்புலிகள் நடத்துகின்றனர்.

உயிராயுதத்திற்கு மாற்றீடான படைக்கலங்களை தமிழீழ தேசம் முற்றுமுழதாக பெறுகின்ற போது, தற்கொடைத் தாக்குதல்களை நடத்த வேண்டிய தேவையும் இல்லாது போகும்.

No comments: