Friday, July 06, 2007

குடும்பிமலையில் கடும் மோதல்!

மட்டக்களப்பில் குடும்பிமலைப் பகுதியல் (தொப்பிக்கல) விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் கடும் மோதல் நடந்து வருகின்றது.

கடந்த இரண்டு மாதங்களாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான குடும்பிமலையை கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படைகள் கடும் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் விடுதலைப் புலிகளின் கடும் எதிர்தாக்குதலால் அந்த முயற்சிகள் நிறைவேறவில்லை.

இன்று அதிகாலை சிறிலங்காப் படைகள் மீண்டும் தமது முன்னகர்வு முயற்சியை ஆரம்பித்துள்ளன. சிறிலங்காப் படையினருக்கு உதவியாக சிறிலங்கா வான்படையின் விமானங்களும் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

சிறிலங்கா படையினரின் முன்னகர்வு முயற்சியை எதிர்த்து விடுதலைப் புலிகள் கடும் எதிர்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் நீண்டதூர எறிகணைகளினால் தாக்குதல் நடத்தி வருவதாக சிங்கள படைத் தரப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு உயரதிகாரி உட்பட ஆறு படையினர் கொல்லப்பட்டும், ஏழு படையினர் காயமடைந்தும் உள்ளனர் என்று சிறிலங்காப் படைத் தரப்பு அறிவித்துள்ளது. ஆயினும் படையினரின் இழப்பு மேலும் அதிகம் என்று தெரியவருகிறது.

சிறிலங்காப் படையினர் குடும்பிமலையில் உள்ள விடுதலைப் புலிகளின் பிரதான முகாமான "பெய்ருட்" முகாமை அடைவதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். பல நாட்களுக்கு முன்பே விடுதலைப் புலிகளின் பிரதான முகாமை அண்மித்து விட்டதாக படைத் தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால் இன்று வரை விடுதலைப் புலிகளின் முகாமை படையினரால் நெருங்க முடியவில்லை.

சிறிலங்காப் படையினர் தமது முழு வலுவையும் பிரயோகித்து குறிப்பிட்ட பகுதியைக் கைப்பற்றினாலும், அதுக்கு கிழக்கு நிலவரத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும், விடுதலைப் புலிகள் தமது முகாமை வேறு பகுதிக்கு நகர்த்தி தொடர்ந்தும் கிழக்கில் செயற்படுவார்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அம்பாறையை சில மாதங்களிற்கு முன்னர் முற்றுமுழுதாக கைப்பற்றி விட்டதாக சிறிலங்காப் படைகள் தெரிவித்திருந்தன. ஆனால் தற்பொழுது மீண்டும் விடுதலைப் புலிகள் அம்பாறையில் சில பகுதிகளில் செயற்படத் தொடங்கி உள்ளனர். கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும் கொண்டுள்ளனர்.

ஆகவே ஒரு முகாமைக் கைப்பற்றி சிங்களப் படைகள் வெற்றிவிழாக் கொண்டாடினாலும், உண்மை நிலவரம் வேறு மாதிரியானதாகவே இருக்கும்.

No comments: