விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குடும்பிமலையை (தொப்பிக்கல) சிறிலங்காப் படையினர் கைப்பற்றி விட்டதாக சிறிலங்காவின் படைத் தரப்பு அறிவித்துள்ளது.
ஏறக்குறைய மூன்று மாதங்கள் நடந்த சண்டைகளின் பின்னர் குடும்பிமலையின் மையப்பகுதியை சிறிலங்காப் படையினர் அடைந்துள்ளதாக அறிய முடிகின்றது. சில நாட்களுக்கு முன்பு குடும்பிமலைக்கு அண்மையில் உள்ள தரவைக்குளப் பகுதியை அடைந்த சிறிலங்காப் படைகள் இன்று குடும்பிமலைப் பகுதியை அடைந்தன.
சிறிலங்காப் படைகளின் இன்றைய முன்னேற்றத்தின் போது விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லை. விடுதலைப் புலிகள் தேவையற்ற இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு தமது முகாம்களை வேறு பகுதிக்கு மாற்றிக் கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் படையணிகள் தற்பொழுது குடும்பிமலையின் மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் குடும்பிமலைப் பகுதி உட்பட ஏறக்குறைய 60 கிலோமீற்றர் வரை நீளமான பெரும் காட்டுப் பகுதி உள்ளது. இந்தக் காட்டுப் பகுதியின் அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது சிறிலங்காப் படைகளுக்கு ஆகாத ஒரு விடயமாகும்.
தற்பொழுது சிறிலங்காப் படையினர் நிலைகொண்டுள்ள குடும்பிமலைப் பகுதியில் இருந்து சில நூறு மீற்றர்கள் தூரத்தில் விடுதலைப் புலிகள் நின்றாலும், அதை அறிய முடியாத அளவிற்கு அடர்ந்த காடுகளையும், சிறு குன்றுகளையும், நீரோடைகளையும் கொண்ட பகுதியாக அப் பகுதி திகழ்கிறது.
விடுதலைப் புலிகளின் படையணிகள் பாரிய இழப்புக்கள் எதையும் சந்திக்காத நிலையில் சிறிலங்காப் படைகள் குடும்பிமலையை அடைந்துள்ள நிகழ்வு கிழக்கு நிலவரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியது அல்ல என்றும், கிழக்கில் விடுதலைப் புலிகளின் செயற்படும் திறனில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் "குடும்பிமலையைப் பிடித்து மரம் வெட்டி விற்கலாமே தவிர, வேறு எந்த நலனும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குடும்பிமலையை சிறிலங்காப் படையினர் சென்றடைந்த நிகழ்வை பெரும் வெற்றியாக சித்தரித்து, அதற்கு வெற்றி விழா கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றார். இதன் மூலம் விடுதலைப் புலிகளின் மிக முக்கிய ஒரு பலமான தளத்தை கைப்பற்றி விட்டதாக ஒரு மாயை உருவாக்க முடியும் என்றும் மகிந்த நம்புகின்றார்.
ஆனால் மக்கள் எவரும் வாழாத காட்டுப் பகுதியான குடும்பிமலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் தொடர்ந்தும் நிற்காது, வெற்றிவிழா முடிந்த ஓரிரு மாதங்களின் பின்னர் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விடுவார்கள் என்றே நம்பப்படுகின்றது.
சில மாதங்களுக்கு முன்பு கிழக்கில் கைப்பற்றிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இருந்து சிறிலங்காப் படையினர் வெளியேறி விட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment