சில நாட்களுக்கு முன்பு வரை கிழக்கில் கருணா அணி, பிள்ளையான் அணி, ஈபிடிபி, புளொட் போன்ற ஒட்டுக்குழுக்களுக்கு இடையில் பல முனை மோதல்கள் நடந்து வந்தன. தற்பொழுது நிலைமை சிறிது அமைதியாக காணப்பாடுவது போல் தென்பட்டாலும், மீண்டும் எந்நேரமும் மோதல்கள் வெடிக்கலாம் என்று தெரிய வருகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் கருணா குழுவிற்குள் பிளவு ஏற்பட்டு கருணா அணியும் பிள்ளையான் அணியும் மோதிக் கொண்டன. இந்த மோதல்கள் சற்று தணிந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கருணா அணியோடு மற்றைய ஒட்டுக்குழுக்களாகிய ஈபிடிபி, புளொட், பத்மநாபா குழு ஆகிய ஒட்டுக்குழுக்கள் மோதலில் ஈடுபட்டன.
கருணா அணிக்கும் பிள்ளையான் அணிக்கும் இடையிலான பிரச்சனை தீhக்கப்பட்டுவிட்டதாக கருணா அணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் பிள்ளையான் அணி தொடர்ந்தும் கருணாவுக்கு எதிராக தனித்தே இயங்கே வருகின்றது. அத்துடன் தாமே உண்மையான "ரிஎம்விபி" என்றும் சொல்லி வருகிறது.
தற்பொழுது கிழக்கில் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்தையும் தன்னுடைய ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வந்துள்ள சிறிலங்கா அரசு அங்கு உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு முயன்று வருகின்றது. அப்படி உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறுமாயின் கருணா அணியின் கொலைப் பயமுறுத்தல்கள் காரணமாக விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற "தமிழ் தேசியக் கூட்டமைப்பு" போட்டியிட முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையை சாதகமாக்கிக் கொண்டு கள்ள வாக்குகள் மூலம் உள்ளுராட்சித் தேர்தலில் வென்றுவிடலாம் என்று கருணா அணி நம்புகின்றது.
அதே வேளை இந்தத் தேர்தலில் ஈபிடிபி போன்ற ஒட்டுக்குழுக்களும் போட்டியிட தயாராகி வருகின்றன. சில மாதங்களாக கிழக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே செயற்பட்டு வந்த ஈபிடிபி தற்பொழுது வேகமாக செயற்படத் தொடங்கி உள்ளது. தமிழ் மக்களுக்கு செய்து வரும் துரோகத்திற்கு கூலியாக சிறிலங்கா அரசிடம் பெற்றுள்ள அமைச்சுப் பதவி ஈபிடிபிக்கு சாதகமாக உள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் ஈபிடிபி வாகரைப் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கியது. அத்துடன் கிழக்குச் செயற்பாடுகள் குறித்து ஈபிடிபியின் தலைவர் தன்னுடைய சகாக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்த நேரத்தில் புளொட் இயக்கமும் கிழக்கில் செயற்பாடுகளை அதிகரிப்பதற்கு மேலும் சிலரை கிழக்கிற்கு அனுப்பியது. அத்துடன் பத்மநாபா குழுவும் கிழக்கிற்கு சென்றது.
இதனால் கடும் எரிச்சலடைந்து கருணா அணி தன்னுடைய சகோதர ஒட்டுக்குழுக்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியது. சில இடங்களில் ஈபிடிபிக்கும் கருணா அணியினருக்கும் இடையில் சிறு சிறு மோதல்கள் நடந்தன.
இந்த மோதல்கள் செங்கலடியில் பெரிதாக வெடித்தது. கடந்த 04.07.07 அன்று செங்கலடியில் ஈபிடிபியின் முகாமை கருணா அணியினர் சுற்றி வளைத்து தாக்குதல் தொடுத்தனர். ஈபிடிபியினரும் திருப்பித் தாக்கினர். இந்தச் சண்டையில் கருணா அணியினர் இருவர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். கடைசியில் கருணா அணியினர் தாம் வந்த வாகனத்தையும் விட்டு விட்டு ஓடினர்.
இதையடுத்து "உதயசூரியன் படையணி" என்ற பெயரில் கருணா அணியினர் ஈபிடிபிக்கு எதிராக துண்டுப் பிரசுரம் வினியோகித்தனர். கிழக்கில் ஈபிடிபியினர் செயற்படக்கூடாது என்றும், அப்படிச் செயற்படுபவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் அந்த துண்டுப்பிரசுரத்தில் மிரட்டப்பட்டிருந்தது.
இதே வேளை கொக்கட்டிச் சோலையில் வைத்து சில புளொட் உறுப்பினர்கள் கருணா அணியினரால் தாக்கப்பட்டனர். பத்மநாபா குழுவினர் மீதான தாக்குதல்களும் இடம்பெற்றன.
இப்படி கருணா அணியினர் மற்றைய ஒட்டுக்குழுக்களின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈபிடிபி, புளொட், பத்மநாபா குழு ஆகிய ஒட்டுக்குழுக்கள் சிறிலங்காவின் கிழக்கு மாகாண படைத்தளபதியை சந்தித்து முறையிட்டன.
அத்துடன் இந்த ஒட்டுக் குழுக்கள் வேறொரு வழியையும் கையாண்டன. ஈபிடிபி, புளொட், பத்மநாபா குழு ஆகியன கையாண்ட அந்த வழி கருணாவை அச்சத்திற்குள் உள்ளாக்கியது. கருணாவிற்கு எதிராக இயங்கி வரும் பிள்ளையானுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்துவதுதான் அந்த வழி. பிள்ளையானும் கருணாவிற்கு எதிரான ஒட்டுக்குழுக்களுடன் நட்புறவை பேணுவதற்கு முன்வந்தார்.
சுவிஸில் நடைபெற்ற புளொட் இயக்கத்தின் ஒரு கூட்டத்தில் இந்தக் கூட்டணி தன்னை வெளிப்படுத்தியது. அக் கூட்டத்தில் புளொட் இயக்கத்தின் சித்தார்த்தன், பத்மநாபா குழுவின் சிறிதரன், கடிதப் புகழ் ஆனந்தசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பிள்ளையான் அனுப்பிய செய்தியும் வாசிக்கப்பட்டது.
பிள்ளையான் தன்னுடைய செய்தியில் "கருணா அணி" சகோதர ஒட்டுக்குழுக்கள் மீது கொலைத் தாக்குதல்களை நடத்துவதை கண்டித்திருந்தார். புளொட் இயக்கத் தலைவர் உமாமகேஸ்வரனும் சகோதரப் படுகொலையில் கொல்லப்பட்டவர் என்பதையும் பிள்ளையான் சுட்டிக்காட்டினார். "புளொட் சகோதரர்கள்" தங்களுக்குள் மாறி மாறி நடத்திவந்த சகோதரப் படுகொலையில் உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்படி சகோதர ஒட்டுக்குழுக்களை கொலை செய்துவரும் கருணாவிற்கு எதிராக மற்றைய ஒட்டுக் குழுக்கள் ஒரு கூட்டணி அமைத்ததைக் கண்டு கருணா அச்சமுற்றார். இந்த நேரத்தில் ஈபிடிபியையும் கருணா அணியையும் மோதலை நிறுத்திக் கொள்ளும்படி அவர்களது எசமானர்களாகிய சிறிலங்கா படைத் தரப்பும் உத்தரவு போட்டது.
கடைசியில் வேண்டா வெறுப்பாக கருணா தரப்பும் ஈபிடிபி தரப்பும் ஒரு பகமைத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டன. ஆனால் இரு தரப்புமே மறு தரப்பை தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறன என்பதுதான் உண்மை. உள்ளுராட்சி சபை தேர்தல்கள் நடக்கும் பொழுது அனைத்து ஒட்டுக் குழுக்களும் மாறி மாறி தங்களுக்குள்ளும் அத்துடன் மக்களையும் கடித்துக் குதறப் போகின்றன என்று கிழக்கில் உள்ள மக்கள் அச்சம் தெரிவிக்கின்றார்கள்.
தமிழீழம் கேட்டவர்கள் இன்றைக்கு உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றுவதற்காக நடந்து கொள்ளுகின்ற முறை இப்படி இருக்கின்றது. இவர்கள் தங்களையும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் சொல்லித் திரிவதை எண்ணி தமிழ் மக்கள் சிரிக்கின்றார்கள்.
1 comment:
வெறி நாய்களும் சொறி நாய்களும் கடி படுகின்றன.... நல்ல விடயம்தான்!
Post a Comment