Tuesday, July 10, 2007

சிவாஜி புறக்கணிப்பு - தொடரும் விவாதங்கள்!

சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள் என்று விடப்பட்ட அறைகூவல் வெற்றியைத் தரவில்லை. ஆனால் பரந்தளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. புறக்கணிப்பிற்கான அறைகூவல் வெற்றியைக் கொடுக்காததற்கான காரணம் பற்றி பலவாறு விவாதிக்கப்படுகிறது. பலர் பல காரணங்களைச் சொல்கிறார்கள். சிவாஜியைப் புறக்கணிப்பதற்கான காரணம் வலுவான முறையில் வைக்கப்படவில்லை என்ற காரணம் முக்கியமாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் இப்படிச் சொல்பவர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிவாஜியை புறக்கணிக்க கோரியவர்கள் ரஜனிகாந்த் தமிழர் விரோதப் போக்கை கொண்டவர் என்ற விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களுடைய வாதத்தை வைத்திருந்தார்கள். இன விடுதலைக்காக போராடுகின்ற ஒரு இனத்திடம் இதை விட வேறு வலுவான வாதத்தை வைக்க முடியுமா? மொழியும், பண்பாடும், நிலமும் சிதைக்கப்படுவதை எதிர்த்து ரத்தம் சிந்திப் போராடும் மக்கள் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்களிடம் வைக்கப்படக்கூடிய மிக வலுவான வாதம் இதை விட வேறு எதுவாக இருக்க முடியும்? இன விடுதலைக்காக போராடுபவர்களிம் இன மான உணர்வு நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடும், தமிழர்களுக்கு விரோதமானதை அவர்கள் புறக்கணிப்பார்கள் என்ற நம்பிக்கையோடும் சொல்லப்பட்ட உண்மையான காரணங்கள் அவைகள். "இந்தக் காரணம் போதவில்லை, இதை விட வேறு காரணங்களை கொண்டு வா" என்று சொல்பவன் தன்னை தமிழன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. ஆகவே புறக்கணிப்பிற்கு வலுவான காரணங்கள் சொல்லப்படாததன் காரணத்தாலேயே புறக்கணிப்பு வெற்றி அளிக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. புறக்கணிப்பிற்கு மிக வலுவான காரணம் முன்வைக்கப்பட்டது என்பதுதான் உண்மை. ஆயினும் புறக்கணிப்பு வெற்றி பெறாததற்கு என்ன காரணம்? இந்தக் கேள்விக்கு வேறு சில பதில்களையும் சிலர் முன்வைக்கின்றார்கள். தேசிய ஊடகங்கள் இந்தப் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும், மாறாக சிவாஜி படத்திற்கு பாரிய விளம்பரங்களை செய்தார்கள் என்றும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஒரு புறம் சிவாஜி திரைப்படத்தையும் தமிழக சினிமாவையும் தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடியபடி, மறுபக்கம் சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள் என்ற செய்தியையும் வெளியிட்டு அபத்தமான முறையில் நடந்து கொண்டன என்று பிரான்ஸில் வசிக்கும் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி அவர்கள் தன்னுடைய கட்டுரை ஒன்றில் சாடியிருக்கிறார். தேசிய ஊடகங்கள் தன்னை மீண்டும் மீண்டும் சிவாஜியை நோக்கித் துரத்துவதால், தான் தேசியத்தைக் காப்பாற்ற சிவாஜி திரைப்படத்தைப் பார்க்கப் போகின்றேன் என்று அவர் ஒருவித எள்ளலோடு தன்னுடைய கட்டுரையை முடித்திருந்தார். பரணி அவர்கள் கூறிய பெரும்பாலான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கனவையாக இருக்கின்றன. ஆயினும் அவர் ஒரு தவறான வழிகாட்டலை தன்னுடைய கட்டுரையில் செய்து விடுகின்றார். பலவீனமான எதிர்ப்பை பதிவு செய்வதை விட பேசாது இருந்துவிடுவதே சிறந்தது என்று ஒரு கருத்தை பரணி அவர்கள் முன்வைக்கின்றார். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல. தவறான அர்த்தத்தைக் கொடுகின்ற கருத்தும் ஆகும். ஆரம்பத்தில் எதுவுமே பலவீனம் போன்றுதான் தோற்றமளிக்கும். ஐம்பதாயிரம் தமிழர்கள் வசிக்கின்ற ஒரு நாட்டில் ஆயிரம் பேரோ, இரண்டாயிரம் பேரோ ஊர்வலம் செல்வதும் ஒரு பலவீனம்தான். உண்மையில் இது போன்ற ஊர்வலங்கள் அந்த நாட்டு மக்களிடம் பெறுகின்ற கவனிப்பைக் காட்டிலும், சிவாஜி மீதான புறக்கணிப்புக் கோரிக்கை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கவனிப்பை பெற்றது என்று துணிந்து சொல்லலாம். புலம்பெயர் நாடுகளில் தேசியத்திற்காக நடக்கின்ற பலவீனமான போராட்டங்கள் தேசியத்தை பலவீனப்படுத்தாத போது, சிவாஜி புறக்கணிப்புக் கோசம் மட்டும் அதை செய்துவிடும் என்று சொல்வது சரியல்ல. அத்துடன் "பலவீனமான போராட்டம்" என்பதை எதை வைத்து வகைப்படுத்தலாம் என்றும் எனக்குப் புரியவில்லை. முப்பது வருடங்களுக்கு முன்பு பீரங்கிகளோடு நின்ற சிங்களப் படைகளை எதிர்த்து தமிழ் இளைஞர்கள் ஒரு கைத்துப்பாக்கியோடு ஆரம்பித்த போராட்டமும் ஒரு பலவீனமான எதிர்ப்பாகத்தான் அப்பொழுது பார்க்கப்பட்டது. சாதிப் பேயை தமிழர்கள் மத்தியில் இருந்து விரட்டுவதற்கு ஐம்பது அறுபது வருடமாக முயற்சிகள் எடுக்கப்பட்டுத்தான் வருகின்றன. சாதியின் வீரியம் குறைந்திருக்கிறதே தவிர, அது இல்லாமல் போய்விடவில்லை. உண்மையை சொல்வது என்றால், தமிழர்களிடம் இருந்து ரஜனிகாந்தை விரட்டுவதை விட சாதியை விரட்டுவது கடினமானது. அப்படி இருந்தும் சாதியினை இல்லாது செய்யவும், அதன் வீரியத்தை குறைக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுத்தான் வருகின்றன. ஆகவே ஒரு முயற்சி ஆரம்பிக்கப்படுகின்ற போது, "இது பலவீனமானது, இவைகளை விட்டுவிட்டு பேசாது வீட்டில் இருங்கள்" என்று சொல்வது பரணி போன்ற ஒரு நல்ல எழுத்தாளருக்கு அழகு அல்ல. இது போன்ற எழுத்துக்கள் துணிந்து வருகின்ற ஒரு சிலரையும் சோர்வடையச் செய்து விடக்கூடும். அதே வேளை அவர் தேசிய ஊடகங்கள் என்று கருதப்படுகின்ற ஊடகங்கள் பற்றிக் கூறிய கருத்துக்கள் மிகச் சரியானவை. எள்ளி நகையாடியும், கடிந்தும் அவர் கூறிய கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால் இந்தத் தேசிய ஊடகங்கள் எவை என்பதில் தெளிவான நிலை இல்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும். இணையத் தள ஊடகங்கள் பற்றி நிலவுகின்ற குழப்பம் சொல்லி மாளாது. வானொலிகளில் எந்த வானொலியை தேசிய ஊடகங்களுக்குள் அடக்கலாம் என்றும் தெரியவில்லை. ஐரோப்பாவில் இது குறித்து ஒரளவு தெளிவு இருந்தாலும், அவுஸ்ரேலியாவில் போய் கேட்டால் அங்குள்ளவர்கள் தெளிவான பதிலை தருவார்களா என்பது சந்தேகமே. தொலைக்காட்சிகளை எடுத்துக் கொண்டால் தற்பொழுது தரிசனம் இயங்குகின்றது. ஆனால் விரைவில் ஐரோப்பாவில் இன்னும் ஒரு தொலைக்காட்சி வர இருப்பதாகவும், அதுவும் மற்றொரு தேசிய ஊடகமாக இயங்கும் என்றும் காற்றுவாக்கில் வருகின்ற செய்திகள் குழப்பத்தை தருகின்றன. இந்த இடத்தில் இன்னும் ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு பயணம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் நடந்து கொண்ட முறை பற்றி மறவன் புலவு சச்சிதானந்தன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். உண்மையில் சச்சிதானந்தன் அவர்கள் எழுதியதை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் செய்த குழப்படிகள் அதிகம். அப்பொழுது அரசியல் ஆய்வாளர் ஒருவருடன் நான் உரையாடிக்கொண்டிருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றியும் பேச்சு வந்தது. "என்ன செய்வது? விடுதலைப் புலிகளுக்கு தற்போதைய நிலையில் வேறு வழி இல்லை. இவர்களை வைத்துக் கொண்டுதான் சில வேலைகளை செய்ய வேண்டி இருக்கிறது. மிகக் கடினமான பலமான வேலைகளையும் இப்படி பலவீனமானவர்களை கொண்டு செய்ய வேண்டிய நிலை" என்று அவர் வேதனையோடு குறிப்பிட்டார். இந்தக் கூற்று புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசிய ஊடகங்கள் என்று கருதப்படுகின்ற ஊடகங்களுக்கும் பொருந்தும். இவைகளை வைத்துக் கொண்டு சிறிலங்காப் பொருட்களுக்கு எதிரான புறக்கணிப்பையோ, சிவாஜி திரைப்படத்திற்கு எதிரான புறக்கணிப்பையோ வெற்றிகரமாக செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனால் அதையும் மீறிச் செய்துதான் ஆக வேண்டும். ரஜனிகாந்த் என்கின்ற போதையின் வீரியம் வர வர அதிகமாகின்றதே தவிர குறையவில்லை. ஒரு நடிகர் மீதான ரசிப்பு என்பதையும் தாண்டி ரஜனிகாந்த் மீதான போதை எம்மவர்க்கு பல மடங்கு ஏறி விட்டது. அந்தப் போதையின் தாக்கம் இம் முறை மிக அதிகமாகவே உணரப்பட்டது. இந்தப் போதைக்குள் விடுதலைக்குப் போராடுகின்ற ஒரு இனம் அகப்படக்கூடாது என்கின்ற நல்ல எண்ணம் பல மட்டங்களில் உருவாகி வருவதனாலேயே இம் முறை சென்ற முறையை விட அதிகமாக புறக்கணிப்புக் கோசம் எழுந்தது. வரும் காலங்களில் இது மேலும் எழும். அதற்கு எங்கள் மத்தியிலே உள்ள சிந்தனையாளர்கள் வலுவூட்ட வேண்டும். ஆனால் புறக்கணிக்க வேண்டியதன் நியாயங்களை புரிந்தவர்கள் கூட "ரஜனி" போதையில் சிக்கி இருப்பதாக தெரிகிறது. ஆகவே நிறைய வியக்கியானங்களும் வருகின்றன. உண்மையில் இந்தப் போதையில் இருந்து தமிழ் மக்களை மீட்பது மிகவும் கடினமான பணிதான். ஆனால் நடக்காது என்று பேசாது இருக்கவும் வேண்டாம், பலமானது என்று சரமசம் செய்யவும் வேண்டாம். தமிழினத்திற்கு எதிரான எதனுடனும் சமரசம் செய்ய மாட்டோம் என்ற எண்ணத்தை தமிழர்கள் வளர்த்துக் கொண்டாலே போதும், வரும் காலத்திலாவது தமிழர்கள் என்ற பேரைக் கேட்டாலே ரஜனிகாந்திற்கு சும்மா அதிருகிற மாதிரி செய்து விடலாம்.

13 comments:

Anonymous said...

நான் ரஜனி ரசிகன் கிடையாது... எனக்கு எப்போதுமே ரஜனியை பிடித்ததும் இல்லை.. ஆகவே புறக்கணி எனும் வேண்டுகோள் எனக்கு கேட்ட வில்லை....

சிவாஜி புறக்கணிப்பு வேண்டிய கால இடைவெளியில் வைக்கப்பட்டு இருக்கவில்லை.. அதனால் பலவீனமானது போண்ற தோற்றத்தை தந்தது... இந்த முறை மருத்துவர் தமிழ்குடியேந்து கூட எதிர்க்காமல் பேசாமலேயே இருந்துவிட்டார்... அதனால் உரிய இடத்தில் இருந்து வேண்டுகோள்கள், அதற்கான காரணங்கள் பறக்க வில்லை.. இதனால் மக்களுக்கு தேவையான புரிதலை ஊட்ட முடிய வில்லை என்பதே உண்மை...

ஆனால் எதிர்வரும் காலங்களில் ரஜனியின் படங்களை புறக்கணிக்க வேண்டிய காரணங்களை இப்போதிருந்தே பேச ஆரம்பிக்கலாம்...!

ஈழபாரதி said...

நல்லதொரு ஆய்வு ஆரம்பத்தில் மெதுவாகவே தொடங்கும் காலப்போக்கில் அதுவே நெருப்பென பற்றிக்கொள்ளும், புறக்கணிப்புடனேயே அதற்க்கான மாற்றையும் கொடுக்கவேண்டும், மாற்றுக்கள் இல்லாது மக்கள் மனதில் மாற்றங்கள் தோன்றாது.

Anonymous said...

Why do you pay attention to Krishna Parani? Krishna Parani is a EMPTY MAN. NO Tamils pay Attention to his Words.

Our Tamil TVs GIVE importance to SIVAJI.

oru Eelath thamilan

Anonymous said...

உங்கள் கருத்துக்களை பார்த்தால் எனக்கு வேதனையாக இருக்கிறது. உங்கள் வலியை புரியாமல் பேசுகிறேன் என நீங்கள் நினைக்கலாம். ரஜினி என்ற மனிதனை புறக்கணிப்பதன் மூலம் என்ன சாதிக்க முடியும் என்பது எனக்கு விளங்கவில்லை. ரஜினி மேலான கோபத்தை என்னால் குறை சொல்ல முடியாது. ஆனால் ராமதாஸ் போன்ற அரசியல்வாதிகளிடம் வைத்திருக்கும் நம்பிக்கை நகைப்புக்குரியதாய் உள்ளது.

இன்றைய சூழலில் ஈழமக்களின் இன்னல்களைப் பற்றி தமிழகத்தில் கவலையற்ற சூழல் நிகழ்வதற்கு காரணமே இந்திய அரசியல்வாதிகள்தான். அதிகாரத்தின் மேல் ஆசை கொண்டு, கொள்கைகளை பற்றிக் கவலைப் படாது கூட்டணி அரசியல் நடத்தும் இவர்கள் பாபா பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடியதுதான் தமிழனின் தன்மானத்தை காக்கும் செயல் என்றால் ,அது நகைப்புக்குரிய விசயம்.

அவர்களுக்கு வேண்டியது காசு. அதை கொடுத்தால் ரஜினி சிகரெட் பிடிக்காமல் நடித்ததற்கு பாராட்டு கடிதம் எழுதுவார்கள். மற்றபடி கொள்கை பிடிப்பு எங்கேயுள்ளது இவர்களிடம்? இவ்வாறான அரசியல்வாதிகளின் அலட்சியத்தை பொறுத்துக் கொள்கிறீர்கள். ஆனால் ஒரு நடிகன், அதுவும் செல்லாக் காசு என அரசியல் கட்சிகளால் பட்டம் சூட்டப்பட்ட நடிகன், உங்கள் நலனுக்கு ஒன்றும் செய்யவில்லை என கோபம் கொள்கிறீர்கள்.

உங்கள் விரோதிகள் முதலில் இந்திய அரசியல் கட்சிகளே. அவர்களிடம் கேள்வி கேளுங்கள் தைரியமிருந்தால். அதை விடுத்து ரஜினி புறக்கணிப்ப்ய் எல்லாம் பக்கங்களை நிரப்ப மட்டுமே உதவும்.

-ராஜ்குமார்

குட்டிபிசாசு said...

யாழில் சிவாஜி படம் பார்க்க மக்கள் அலைமோதுகிறார்கள் என ஒரு ஈழத்தமிழர் தன் பதிவில் கூறினார். அதற்கு நான் தமிழகத்தில் தான் இதுபோன்ற படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பொழுதுபோக்காக பார்க்கிறார்கள், போராடும் ஒரு இனம் பார்க்கக்கூடிய படம் இது அல்ல என்று கூறினேன். போராடும் இனம் திரைப்படம் பார்க்கக்கூடாதா? என்று அவர் பதில் கூறினார். சிலர் அது அவர்கள் முடிவு அதை சொல்ல நீ யார் என்று கேட்டனர்.

நான் படம் பார்க்க வேண்டாம் என்று கூறவில்லை. இது போன்ற வெறுமனே ஜல்லியடிக்கும் மசாலாப் படங்கள் பார்ப்பவர் மூளையை மழுங்கத்தான் செய்யும். என் தோழர் 'கானாபிரபா' கூறியது போல 'செவன் சாமுராய்' போன்ற படங்களை பார்த்தாலாவது நாம் இழந்த விழுமியங்களை கட்டி எழுப்ப உதவும்.
ஈழத்தில் தமிழர் இன்னல்கள் பல அனுபவிப்பதாக யாம் செய்தியின் வாயிலாக அறிகிறோம். அத்தியாவசியப் பொருட்கள் கூட அதிக விலையில் விற்பதாக படித்துள்ளேன். உயிரையும், மானத்தையும் காப்பாற்றிக்கொள்ள உடமைகளை விட்டு தாய்மண்ணிலிருந்து வெளியேறும் தமிழர் நிலை, வரிசையில் நின்று அதிக அளவில் பணம் கொடுத்து ஒரு மசாலா படம் பார்க்கும் வகையில் உள்ளதா?

தாங்கள(திரு.சபேசன்)் முன் வைத்த காரணம் அடிப்படை பொருட்கள் கொடுக்க மறுக்கும் இலங்கையரசு, சிவாஜியை அனுமதிப்பதேன் என்று கேட்டீர்கள். அதற்கு ஒரு ஈழதமிழர் வன்னியிலும் தான் சிவாஜி வெளியாகி மிகுந்த வரவேற்ப்புடன் ஓடுகிறது என்றார். இதற்கு தங்கள் பதில் என்ன என்று கூறவில்லை.

வி.சபேசன் said...

வன்னியில் சிவாஜி திரைப்படம் ஓடியது குறித்து என்னால் அறிய முடியவில்லை. அங்கே உள்ள நிலையில் படம் ஓடியிருக்காது என்றுதான் நினைக்கின்றேன். ஆயினும் ஒரு முறை சரியாக விசாரித்து விட்டுச் சொல்கிறேன்.

அப்படி வன்னியில் சிவாஜி திரைப்படம் ஓடியிருந்தாலும், அது மற்றைய திரைப்படங்களில் ஒன்றாகவே அங்குள்ள மக்களால் பார்க்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற இடங்களில் சிவாஜி திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் வீரம் விளையும் வன்னி மண்ணில் ஏற்படாது.

அந்த வகையில் சிவாஜி திரைப்படம் வன்னியில் ஓடி அது பற்றி நாம் அறியாது இருந்தாலும், அதில் வியப்பதற்கும் ஒன்றும் இல்லை.

சயந்தன் said...

பகீயின் பதிவில் பார்த்த பிறகு கேட்ட அளவில் புலிகளின் குரல் வானொலியை சேர்ந்த ஒருவர் வன்னியில் சிவாஜி ஓடியதை உறுதிப் படுத்தினார்.

Anonymous said...

Don't you guys have any useful work to do?

The movie here is for recreation not for changing one's life.

I am very sure that the people are really smart enough to take what they want.

Please don't waste your and others precious time.

There is lot more important things in the world to discuss

Anonymous said...

// enlight said...

Don't you guys have any useful work to do?

The movie here is for recreation not for changing one's life.

I am very sure that the people are really smart enough to take what they want.

Please don't waste your and others precious time.

There is lot more important things in the world to discuss //

வந்துட்டான்ய்யா வெள்ளைகாரனுக்கு ஷு தொடைக்கிற வெளக்கெண்ணை. நீ இதுவரை உருப்படியா என்ன செய்தனு சொன்னா நாங்க திருத்திப்போம்.

Anonymous said...

Sivajinu pera Ketaley summa adhuruthula"-Boss
Bachelor of Social Service-"anbula Rajinikanth"

Anonymous said...

"அப்படி வன்னியில் சிவாஜி திரைப்படம் ஓடியிருந்தாலும், அது மற்றைய திரைப்படங்களில் ஒன்றாகவே அங்குள்ள மக்களால் பார்க்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற இடங்களில் சிவாஜி திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் வீரம் விளையும் வன்னி மண்ணில் ஏற்படாது."



ச‌பேச‌ன் அவ‌ர்க‌ளே!! இது ஒரு முட்டாள்த‌னமான‌ க‌ருத்து. வ‌ன்னி ம‌க்க‌ள் என்ன‌ ஞானிக‌ள் அல்ல‌து அறிவுச் சுட‌ர்க‌ளா? அவ‌ர்க‌ள் பார்த்திருன்தால்(?)
அவ‌ர்க‌ளும் ச‌ராசரி ர‌சிக‌ர்க‌ள்தான். த‌ய‌வுசெய்து வ‌ன்னியை ஞான‌பூமி என‌ நினைத்து கொள்ள‌ வேண்டாம்.

ஒரு ஈழ‌த் த‌மிழ‌ன்

வி.சபேசன் said...

வன்னி ஒரு பல விடயங்களில் ஒரு ஞானபூமியாகத்தான் இருக்கின்றது. அது வேறு விடயம். ஆனால் நான் சொன்ன காரணம் அது அல்ல. பெரும் எடுப்பில் போருக்கு தயராகி வருகின்ற வன்னி மண்ணில் "சிவாஜி" படத்திற்கு கிடைக்கின்ற மரியாதை என்பது "ஒரு சினிமாப் படம்" என்பதுதான்.

தமிழ்நாட்டைப் போன்றோ அல்லது இப்பொழுது ஐரோப்பா, கனடாவில் நடப்பதைப் போன்றோ "சிவாஜி" திரைப்பட வெளியீடு ஒரு "விழா" அல்ல. அவ்வாறான நிலையில் வன்னியில் வாழும் மக்களின் சிந்தனை இல்லை.

தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளில் நடப்பைவையும் வன்னியில் நடப்பதையும் ஒன்றாக போட்டுக் குழப்பக்கூடாது.

தேவன் said...

ச‌பேச‌ன் அவ‌ர்க‌ளே!! இது ஒரு முட்டாள்த‌னமான‌ க‌ருத்து. வ‌ன்னி ம‌க்க‌ள் என்ன‌ ஞானிக‌ள் அல்ல‌து அறிவுச் சுட‌ர்க‌ளா? அவ‌ர்க‌ள் பார்த்திருன்தால்(?)
அவ‌ர்க‌ளும் ச‌ராசரி ர‌சிக‌ர்க‌ள்தான். த‌ய‌வுசெய்து வ‌ன்னியை ஞான‌பூமி என‌ நினைத்து கொள்ள‌ வேண்டாம்.

ஒரு ஈழ‌த் த‌மிழ‌ன்


வன்னி நிர்வாகத்துக்குள் அரைவேக்காட்டுத்தனப் பருப்புக்கள் அவியாது கண்டியளோ?
சினிமாவின் தாக்கம் அங்கும் விரல்களை வெட்டுவிக்கிறதா, இல்லை தம்மைத்தானே கொழுத்துவிக்கிறதா?
ஞானம் அங்கு இருக்கோ இல்லையோ தெரியாது. ஆனால் ஞானசூனியங்களுக்கு வித்தியாசம் தெரியாது பாருங்கோ.