முருகனும் பிள்ளையாரும் மாம்பழத்திற்காக உலகைச் சுற்றிவந்த கதை ஏறக்குறைய அனைவரும் அறிந்த ஒன்று. சைவ சமயப் பாடப் புத்தகங்களில் படித்தோ, வீட்டில் பெரியவர்கள் சொல்லியோ இந்தக் கதையை அறிந்திருப்பார்கள்.
ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு செய்தியை சொல்கின்றன. ஒவ்வொரு கதை உருவாக்கப்படுவதற்கும் பலவிதமான காரணங்கள் இருக்கின்றன. கற்பனைக் கதைகள் என்று சொல்லப்பட்டாலும் உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சிறுவர்களுக்கானவை என்று சொல்லப்படுகின்ற நீதிக் கதைகள், புராணக் கதைகள், உருவகக் கதைகள் தொடங்கி இன்றைய சினிமா வரை அனைத்துமே இந்த வரையறைக்குள் அடங்கும்.
ஒரு முற்றுமுழுதான நூறு வீதமான கற்பனையை செய்ய மனித மூளையால் முடியாது. அவ்வாறு மனிதனுடைய மூளையின் அமைப்பு இல்லை. இதைப் பற்றி பின்பு ஒருமுறை விரிவாகப் பார்க்கலாம்.
புராணக் கதைகளில் வருகின்ற தேவர், அசுரர் ஆகியோர் ஆரியர் மற்றும் திராவிடர்களையே குறிக்கின்றன என்றும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான போர் ஆரிய திராவிடப் போர்களை குறிக்கின்றன என்றும் பலரால் தர்க்கரீதியாக நிறுவப்பட்டுள்ளது. இராமாயணம் போன்ற கதைகள் யாரைக் குறிக்கின்றன என்பது போன்ற ஆய்வுகளும் பல முறை நடைபெற்றுள்ளன.
அதே வேளை தமிழர்களால் வணங்கப்பட்ட கடவுள்கள் சிலவும் ஆரிய மயப்படுத்தப்பட்டு இந்தப் புராணக் கதைகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்தக் கடவுள்களை பாத்திரங்களாக கொண்டுள்ள கதைகள் சொல்கின்ற செய்தி என்ன என்கின்ற ஒரு கேள்வி எழுகின்றது.
தமிழர்களால் வணங்கப்பட்ட கடவுள்கள் ஆரியர்களால் இல்லாது செய்யப்பட்டும், பெயர் மாற்றத்தோடு உள்வாங்கப்பட்டும் விட்டன. இந்தக் கடவுள்களுள் முருகன் முக்கியமானவன். ஒரு மன்னனாக இருந்து தமிழர்களை காத்து நின்றவன் என்று நம்பப்படுகின்ற முருகன் கட்டம் கட்டமாக ஆரியமயப்படுத்தப்பட்டான்.
முருகன் என்கின்ற அழகிய தமிழ் பெயரை சுப்ரமண்யன் என்று மாற்றி பின்பு அந்த மன்னனை குழந்தை ஆக்குவதற்கு பாலசுப்ரமண்யன் என்றும் மாற்றிவிட்டார்கள்.
அத்துடன் வளர்ந்த முருகனுக்கு 6 தலைகள் முளைக்கச் செய்தார்கள். 12 கைகளை பூட்டினார்கள். ஒரு காதல் மனைவியோடு வாழ்ந்த முருகனோடு இன்னொரு பெண்ணையும் இணைத்தார்கள். அந்தப் பெண்ணை மனைவியாக்கி உண்மையான மனைவியை வப்பாட்டி ஆக்கினார்கள். முருகனின் பிறப்புக் குறித்து ஆபாசமான அருவருப்பான கதைகளையும் உருவாக்கினார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக மன்னனாக இருந்தவனின் அண்ணனாக பிற்காலத்தில் வந்த யானைத் தலையுடன் கூடிய ஒரு வினோத உருவத்தை கற்பித்தும் விட்டார்கள்.
முருகனை ஆரிய இந்துமதத்திற்குள் உள்ளடக்குகின்ற வேலை மிகவும் இலகுவாக நடைபெறவில்லை. அதற்கு நீண்ட காலம் எடுத்தது.
உண்மையில் ஆரியர்கள் முருக வழிபாட்டை இல்லாமல் செய்யமுடியாத நிலையிலேயே முருகனை உள்வாங்க முனைந்தார்கள். அவர்களுடைய விருப்பம் என்பது "முருகன்" என்கின்ற ஒன்றை மெதுமெதுவாக இல்லாமல் செய்வதுதான்.
இரண்டு ஆயிரம் ஆண்டுகள் சென்ற பின்னர் அது இன்றைக்கு கைகூடி வருகின்ற நிலையில் உள்ளது. சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கடவுள் நம்பிக்கை உள்ள பல சான்றோர்களைப் பார்த்தால், அவர்களில் பெரும்பாலானவர்கள் முருக பக்தர்களாக இருப்பார்கள். ஒரு காலத்தில் முருகபக்தியை அடிப்படையாகக் கொண்டு நிறைய சினிமாக்களும் வந்தன.
ஆனால் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் ஐயப்ப பக்தர்களாகவும், ஆஞ்சநேய பக்தர்களாகவும், சாய்பாபா பக்தர்களாகவும்தான் இருக்கிறார்கள். தமிழர்கள் முருகனை மெதுமெதுவாக மறந்துகொண்டு வருகிறார்கள்.
தமிழின எதிரிகளோடு வேலெடுத்து போராடி தமிழர்களை காத்த எங்களின் மன்னவன் முருகன் மேலும் மேலும் தேடப்பட வேண்டியவனும், கண்டுபிடிக்கப்பட வேண்டியவனே தவிர மறக்கப்பட வேண்டியவன் அல்ல.
ஆரம்பத்தில் சொன்னது போன்று ஒவ்வொரு கதையும் ஏதோவொரு செய்தியையும், சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டவை என்ற அடிப்படையில் முருகன் சம்பந்தமான இரண்டு புராணக் கதைகளை எடுத்துக்காட்டாக பார்க்கின்ற போது சில சிந்தனைகள் வருகின்றன.
தமிழ் கடவுளாகிய முருகன் பிரம்மனிடம் மந்திரத்தின் பொருள் கேட்கின்றான். பதில் சொல்லத் தவறுகின்ற பிரம்மனை தலையில் கொட்டி சிறையில் அடைக்கின்றான். படைத்தல் உட்பட அனைத்து விடயங்களையும் தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொள்கிறான். கடைசியில் பரமசிவன் முருகனைக் கெஞ்சிக் கேட்டதன்படி பிரம்மனை விடுதலை செய்கிறான்.
இந்தக் கதை முருகன் ஆரியர்களை வெற்றிகொண்ட சம்பவத்தின் அடிப்படையில் எழுந்திருக்கும். அதே போன்று முருகனின் கலகம் தோற்றுப் போன கதையையும் புராணம் சொல்கிறது. அதுதான் மாம்பழத்திற்கு உலகத்தை சுற்றி வந்த கதை.
புராணக் கதைகளில் நாரதன் என்கின்ற பாத்திரம் பிரபல்யமானது. அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்களை உளவு பார்ப்பதும், அவர்களை தவறான பாதையில் திசைதிருப்புவதுமே நாரதன் என்கின்ற பாத்திரத்தின் முக்கிய வேலையாக இருக்கும்.
இந்த நாரதன் என்கின்ற பாத்திரம் தமிழ் கடவுள் முருகன் தோற்கடிக்கப்பட்ட மாம்பழக் கதைகயிலும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. நாரதன் கொடுத்த மாம்பழத்தினால் பிரச்சனை உருவாகிறது. மாம்பழம் யாருக்கு என்ற பிரச்சனையில் முடிவு காண உலகத்தை சுற்றி வருகின்ற போட்டி வைக்கப்படுகின்றது.
உண்மையான உலகத்தை சுற்றி வந்த முருகன் தோற்றுப் போகிறான். சிவனையும் பார்வதியையும் சுற்றி வந்த கணபதி வெற்றிபெறுகிறான்.
கணபதி தன்னுடைய குடும்பத்தை சுற்றி வந்து குடும்பத்திற்குள்ளேயே நிற்கின்றான். குடும்பத்திற்குள் நிற்பவன் வெற்றி பெறுகிறான். குடும்பத்திற்குள் வர மறுக்கின்ற முருகன் தோற்றுப் போகிறான்.
இங்கே குடும்பம் என்பது ஆரிய இந்துத்துவத்தை குறிக்கின்றது. இந்தக் குடும்பத்திற்குள் அடங்காதவன் தோற்றுப் போவான் என்பதுதான் இந்தக் கதை சொல்கின்ற செய்தி.
கணபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் முருகன் அதை ஏற்க மறுத்து கலகம் செய்கிறான். தொடர்ந்தும் "குடும்பத்திற்குள்" அடங்க மறுத்து வெளியேறுகிறான். ஆனால் மலைகளிலும் காடுகளிலும் கோவணத்தோடு அலைகின்ற நிலைதான் முருகனுக்கு ஏற்படுகிறது.
மொத்தத்தில் இந்தக் கதை தெளிவான முறையில் சொல்கின்ற செய்தி இதுதான். "ஒழுங்காக ஆரியக் குடும்பத்திற்குள் இருங்கள்! இல்லையேல் கோவணத்துடன்தான் அலைவீர்கள்!"
2 comments:
உங்களுக்கெல்லாம் வேறு வேலைகளே இல்லையா?
இந்தக் கதைக்குள் இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதா????
Post a Comment