Tuesday, October 31, 2006

படிப்பினைகளை மறந்த சிறிலங்கா அரசு!

ஜெனீவாவில் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் நடந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை எதிர்பார்த்தது போன்று தோல்வியில் முடிவடைந்து விட்டது. விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் தாயகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இப் பேச்சுவார்த்தை பற்றி விடுதலைப்புலிகள் எவ்வித நம்பிக்கையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், மேற்குலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் பங்கு பற்றினர். ஆனால் சிறிலங்கா அரசு ஏ9 பாதையை திறப்பதற்கு மறுத்து விட்ட நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து விட்டது.

இப் பேச்சுவார்த்தையில் உலக நாடுகளின் விருப்பங்கள் என்று எரிக் சொல்கைம் வெளியிட்டுள்ள சில கோட்பாடுகள் கவனிக்கத் தக்க விடயங்கள் ஆகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேச்சுக்கள் நடைபெற வேண்டும் என்றும், இதுவரை இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து இன மக்களும் திருப்திப்படும் வகையில் தீர்வு அமைய வேண்டும் என்றும், அவ்வாறான தீர்வு இலங்கைத்தீவின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் உட்பட்ட தீர்வாக இருக்க வேண்டும் என்றும் உலக நாடுகள் எதிர்பார்ப்பதாக எரிக் சொல்கைம் தெரிவித்தார். இதில் கடைசி இரண்டு விடயங்களும் எக் காரணம் கொண்டும் நடைமுறை சாத்தியமற்றவைகள் ஆகும்.

தமிழ் மக்கள் திருப்திப்படக்கூடிய தீர்வை சிங்களம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது. அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு சிங்களத்தின் சிந்தனையில் பாரிய மாற்றம் உருவாக வேண்டும். அப்படி ஒரு மாற்றம் உருவாவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் சிங்களத் தலைமைகளால் இன்றுவரை எடுக்கப்படவில்லை. ஆகவே அனைத்து இன மக்களும் திருப்திப்படும் வண்ணம் ஒரு தீர்வு இலங்கைத்தீவில் சாத்தியமற்ற ஒன்றாகும்.

கடைசிக் கோட்பாடான "ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு" என்கின்ற கோட்பாடு ஒரு பாரிய அத்துமீறல் ஆகும். தமிழினம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திர தனியரசு அமைப்பதற்கு போராடி வருகிறது. ஆயினும் கடந்த 5 வருடங்களாக பேச்சுவார்த்தை மேசையில் தமிழீழத்தை வலியுறுத்தாது தமது நல்லெண்ணத்தை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆகவே சிறிலங்கா அரசும் பதிலுக்கு "ஐக்கிய இலங்கை" என்பதை அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு முன்னம் வலியுறுத்தாது இருப்பதே சரியாக இருக்கும். ஆனால் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் "ஐக்கிய இலங்கையை" வலியுறுத்துவதன் மூலம் ஒரு பகை நடவடிக்கையை மேற்கொள்கிறது என்றே கொள்ள வேண்டும். தற்பொழுது மேற்குலகமும் வெளிப்படையாக "ஐக்கிய இலங்கை, ஒருமைப்பாடு" என்று பேசுவது மிகவும் பக்கசார்பானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.

ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் தரப்பில் மேற்குலகின் இந்த "ஐக்கிய இலங்கை" கோட்பாடு குறித்து வெளிப்படையான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஊடகவியலாளர்கள் சுப.தமிழ்செல்வனிடம் இது குறித்து கேட்ட பொழுதும் அவர் நேரடியாக அதற்கு பதில் அளிக்கவில்லை. இவைகள் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் கலந்த சந்தேகங்களை உருவாக்கியது. ஆயினும் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த கடைசி நாள் சுப.தமிழ்செல்வன் ஊடகவியலாளர்களை சந்தித்த பொழுது ஒரு வாசகத்தின் மூலம் அந்த சந்தேகங்களை போக்கினார். ஊடகவியலாளர் சந்திப்பை வழமைக்கு மாறாக "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற தாரக மந்திரத்துடன் சுப.தமிழ்செல்வன் முடித்து வைத்தார். எரிக்சொல்கைம் "ஐக்கிய இலங்கை" என்று ஆரம்பித்து வைத்த பேச்சுவார்த்தை "தமிழீழமே புலிகளின் தாகம்" என்று முடிந்தது.

இப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததற்கு காரணம் ஏ9 பாதையை சிறிலங்கா அரசு திறக்க மறுத்ததே ஆகும். இப் பாதையை திறக்க மறுப்பதன் மூலம் யாழ் குடாவில் இருந்த மற்றைய பகுதிகளுக்கும், மற்றைய பகுதிகளில் இருந்து யாழ் குடாவிற்கும் மக்கள் சுதந்திரமாக சென்று வருவதற்கு உள்ள உரிமையை சிறிலங்கா அரசு மறுக்கிறது. முக்கியமாக யாழ் குடாவிற்கு அனைத்துவிதமான பொருட்கள் செல்வதையும் தடுத்து அறிவிக்கப்படாத ஒரு பொருளாதாரத்தடையை சிறிலங்கா அரசு விதித்துள்ளது.

இது சில பழைய சம்பவங்களை நினைவு படுத்துகிறது. ஈழப் போர் மூன்றும் ஏறக்குறைய இவ்வாறான ஒரு பிரச்சனையில் இருந்தே ஆரம்பம் ஆனது. அன்று விடுதலைப்புலிகள் சந்திரிகா அரசை பூநகரி இராணுவ முகாமை அகற்றி சங்குப்பிட்டிப் பாதையை திறந்து விடக் கோரினர். அப்பொழுது யாழ் குடாவையும் வன்னியையும் இணைக்கின்ற பாதைகளாக ஆனையிறவும், புநகரியும் இருந்தன. ஆனையிறவு சிறிலங்கா இராணுவத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்ததால், விடுதலைப்புலிகள் புலிகள் பூநகரிப் பாதையை மாற்று யோசனையாக முன்வைத்தனர். இதற்காக பேச்சுவார்த்தைகளையும், கடிதப் பரிமாற்றங்களையும் நடத்தினர். சந்திரிகா அரசுக்கு இரு தடவைகள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் சந்திரிகா அரசு விடுதலைப்புலிகளின் கோரிக்கையை உதாசீனம் செய்தது. கடைசியில் ஈழப் போர் 3 ஆரம்பமானது.

தற்பொழுது நடக்கின்ற பேச்சுவார்த்தையும் மீண்டும் ஒரு பாதைப் பிரச்சனையில் வந்து முட்டி நிற்கிறது. இது சிறிலங்கா அரசு வரலாற்றில் இருந்து எந்தவிதமான படிப்பினைகளையும் கற்றுக்கொள்வதில்லை என்பதையும், அவ்வாறு கற்றுக்கொள்கிற படிப்பினைகளையும் விரைவில் மறந்துவிடுகிறது என்பதையும் காட்டுகிறது. சிறிலங்கா அரசு இன்று யாழ்குடாவிற்கான வாசலாக உள்ள முகமாலையை மூடி உள்ளது. அன்று யாழ் குடாவிற்கான வாசல்களாக இருந்த ஆனையிறவும் பூநகரியும் இன்று யாருடைய கைகளில் இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சிறிலங்கா அரசு ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

1 comment:

ஈழபாரதி said...

ஆழ்த கருத்துக்கள், சிந்திக்கவேண்டிய தரவுகள். ஆனால் இவற்றை ஏற்கும் நிலையில் சிறீலங்கா இல்லை.