Wednesday, October 18, 2006

வீரப்பனின் இரண்டாம் ஆண்டு நினைவு!

இன்று வீரப்பனின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம். பின்வரும் கட்டுரை வீரப்பனின் ஓராண்டு நினைவில் எழுதப்பட்டது:

ஒகேனக்கல் என்பது தமிழ்நாட்டின் ஒரு எல்லைப் பகுதி. தமிழர்களுக்கு சொந்தமானது. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பிரதேசம். அதற்கு அப்பால் கர்நாடகம் உள்ளது. இப்பொழுது திடீரென்று ஓகேனக்கல் பகுதி தன்னுடையது என்று கர்நாடகம் சொந்த கொண்டாட ஆரம்பித்துள்ளது. கன்னட அதிகாரிகளும் காவல்துறையும் அங்கே ஆக்கிரமிப்பு செய்துவிட்டன. கையாலாகத தமிழ்நாடு அரசும் மற்றைய கட்சிகளும் கையை பிசைந்தபடி உள்ளன. இப்பொழுது மத்திய அரசின் ஆய்வுக்குழு வந்து ஓகேனக்கல் பகுதி யாருக்கு சொந்தம் என்று ஆய்வு செய்யப் போகிறதாம். இவ்வளவு காலமும் தமிழ்நாட்டின் பகுதியாகவிருந்த ஒரு இடத்தை உண்மையில் தமிழ்நாட்டுக்கு சொந்தமா என்று ஆய்வு செய்வதை தமிழர்கள் கைகட்டி ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு இழிவு நிலை.

ஆனால் சென்ற ஆண்டு 18.10.2004 வரை தமிழ் மண்ணை ஆக்கிரமிக்கும் எண்ணம் கன்னடர்களுக்கு வந்ததில்லை. ஒகேனக்கலும் அதை அண்டிய பகுதிகளும் வீரப்பன் என்கின்ற தமிழர் தன்னுடை ஆளுகையில் வைத்திருந்தார். அவருடைய பகுதிக்குள் கால் வைக்க யாருக்கும் துணிவு வரவில்லை. அந்த தமிழ் மண்ணிற்கு அவர் காவலிருந்தார்.

வீரப்பனை பலருக்கு சந்தனமரக் கடத்தல்காரராகவும் கொலைகாரராகவுமே தெரியும். ஆனால் அவருக்குள் நல்ல ஒரு இனப்பற்றும் கண்ணியமும் மிகுந்திருந்தது. அப்பாவி மக்களை வீரப்பன் துன்புறுத்தியதாக தகவல் இல்லை. அவர் அவரது பகுதியில் வாழ்நத மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக இருந்தார். அந்த மக்கள் இன்றும் வீரப்பன் மீது மிகவும் அன்பு வைத்திருக்கிறார்கள். முதலில் அரசியல்வாதிகளால் சந்தனமரக்கடத்தல்காரராக ஆக்கப்பட்ட வீரப்பன் காலவோட்டத்தில் ஒரு தமிழ் போராளியாக மாற்றம் பெற்றார். கர்நாடகத்திலோ அல்லது ஈழத்திலோ தமிழர்கள் துன்புறுத்தப்படுவதை கேள்விப்படும் போதெல்லாம் வீரப்பன் மிகவும் கொதிப்புற்று காணப்படுவார். கன்னட நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்கள் தமிழர்களுக்கு எதிரான கலவரத்தில் முன்னிலை வகிப்பவர்கள். கர்நாடக சட்டசபை உறுப்பினர் நாகப்பா தமிழர்களுக்கு எதிராக விசத்தை கக்குபவர். வீரப்பன் நடிகர் ராஜ்குமாரை கடத்தி வந்து தமிழ்நாட்டிற்கு கவேரி நீரை வழங்குதல், பெங்களுரில் திருவள்ளுவர் சிலையை திறக்கச் செய்தல், அப்பாவி தமிழ் கைதிகளை விடுவித்தல் போன்ற தமிழ்நாட்டின் கோரிக்கைகளை வலியுறித்தினார். கடைசியில் கர்நாடகத்தின் வாய்மூல உறுதி மொழிகளை ஏற்றும் கர்நாடகத்தில் உள்ள அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்கிற நல்லெண்ணத்திலும் ராஜ்குமாரை விடுவித்தார். பின்பு நாகப்பாவை கடத்தி வந்தும் தமிழர்களின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். பின்பு காவல்துறையினர் நாகப்பாவை விடுவிக்க மேற்கொண்ட முயற்சியில் நாகப்பா கொல்லப்பட்டார்.

வீரப்பன் பல முறை தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக கன்னட வெறியர்களுக்கு தண்டனை வழங்கியவர். கர்நாடக எல்லைக் கிராமங்களில் "தமிழர்களை தாக்கினால் வீரப்பன் வந்து சுட்டு விடுவான்" என்கின்ற பயம் கன்னடர்களுக்கு நன்றாகவே இருந்தது.

காலம் பிந்தியாயினும் தமிழ் போராளியாக மாறிய வீரப்பன் 18.10.2004 அன்று சதி செய்து கொல்லப்படும் வரை அவ்வாறே வாழ்ந்தார்.

இன்று வீரப்பன் இல்லை. ஒகேனக்கல் மண் பறிபோகப்போகிறது. ஒரு விடுதலை போராட்டத்திற்கு சிறந்த தளமாக விளங்கக்கூடிய வீரப்பனின் காட்டுப்பகுதியும், அந்த காட்டுப்பகுதியை அக்குவேறு ஆணிவேறாக அறிந்த இனப் பற்றுள்ள வீரப்பனும் இல்லாததன் வலி விரைவில் உணரப்படலாம். -

வி.சபேசன் (19.10.2005)

No comments: