தமிழீழ நீதித்துறை தமிழீழத்தில் வாழும் சிறுவர்களின் உரிமைகளை பேணும் பொருட்டு "சிறுவர் பாதுகாப்பு சட்டத்தை" உருவாக்கி வெளியிட்டுள்ளது. 83 பிரிவுகளை அடக்கிய இச் சட்டமூலத்தில் சிறுவர் தொழில், சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள், சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற மிக முக்கிய விடயங்கள் அடங்குகின்றன. இச் சட்டத்தை தமிழீழ நீதித்துறை உருவாக்கி இருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என கொள்ளத்தக்கது. தமிழீழத்தின் இறமையை இச் சட்டம் காத்து நிற்கிறது.
இச் சட்டம் படையில் சிறுவர்களை சேர்ப்பதற்கான வயது எல்லைகளை நிர்ணயிக்கிறது. 17 வயதிற்கு உட்பட்டவர்களை படையில் சேர்த்துக் கொள்வதும், 18 வயதிற்கு உட்பட்டவர்களை சண்டைகளில் ஈடுபடுத்துவதும் இச் சட்டத்தின்படி குற்றங்கள் ஆகின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது சிறிலங்கா அரசும், மேற்குலக நாடுகளும் வைக்கின்ற முக்கிய குற்றச் சாட்டாக சிறுவர்களை படையில் சேர்க்கின்ற விவகாரம் இருந்து வந்தது. விடுதலைப்புலிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதற்காக சிறுவர்களை படையில் சேர்க்கின்ற விவகாரத்தை பேச்சுவார்த்தை நிரலில் சேர்க்க வேண்டும் என்று சிறிலங்கா அரசு வலியுறுத்தி வந்தது. கடந்த ஜேனீவா பேச்சுவார்த்தையில் இது குறித்து விடுதலைப்புலிகளிடம் உறுதிமொழியும் கேட்கப்பட்டது.
ஒரு விடுதலைப்போராட்டம் என்பது மக்கள் போராட்டம் ஆகும். அதில் அனைத்து மக்களும் மத, சாதி, பால், வயது வேறுபாடு இன்றி கலந்து கொள்வார்கள். இதுநாள் வரை உலகத்தில் நடந்த அனைத்து விடுதலைப் போராட்டங்களும் அப்படித்தான் நடந்தன. இதற்கு மேற்குலக நாடுகளும் விதிவிலக்கல்ல. தமிழீழத் தேசியத் தலைவர் கூட 14 வயதிலேயே போராட்டத்தில் இணைந்து விட்டதாக சொல்வார்கள். அடக்கப்படுகின்ற, அழிக்கப்படுகின்ற இனம் அரசியல் தெளிவு பெறுவதற்கு 18 வயது அவசியம் இல்லை. ஆனால் இன்று உலகின் பார்வை மாறி வருகிறது. 18 வயதிற்கு உட்பட்டவர்கள் சண்டைகளில் ஈடுபடுவது பற்றி மாறுபாடான கருத்துக்கள் வலுப் பெறுகின்றன.
இதற்கு இணங்க விடுதலைப்புலிகளும் கடந்த சில வருடங்களாகவே 17 வயதிற்கு உட்பட்டவர்களை படையில் சேர்ப்பதில்லை. 18 வயதிற்கு உட்பட்டவர்களை சண்டைகளில் ஈடுபடுத்துவதும் இல்லை. ஆயினும் ஆண்டுக்கு இரு தடவையாவது ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர் உரிமை மையங்கள் விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதாக புள்ளி விபரங்களை வெளியிடும். யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவும் அறிக்கைகள் வெளியிடும். இதில் பெரும்பாலானவை பொய்யான தகவல்களாக இருக்கும். அல்லது சிறுவர்கள் வயதை மறைத்து விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்ததாக இருக்கும்.
விடுதலைப்புலிகளும் முடிந்தவரை வயது குறைந்தவர்களை இனம் கண்டு மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தாலும், விடுதலை போராட்டத்திற்கு எதிரான சக்திகள் இவ் விவகாரத்தை தூக்கிப் பிடித்தபடிதான் இருக்கின்றன.
இப்பொழுது அவைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் "சிறுவர் பாதுகாப்புச் சட்டம்" வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் தமிழீழத்தில் சிறுவர்களை படையில் சேர்ப்பது என்பது ஒரு சட்டப் பிரச்சனை. 17 வயதிற்கு உட்பட்ட ஒருவர் படையில் சேர்க்கப்பட்டால், கண்காணிப்புக் குழுவிடமோ, வேறு சர்வதேச நிறுவனங்களிடமோ முறையிட வேண்டிய அவசியம் இல்லை. அருகில் உள்ள தமிழீழ காவல்துறையிடம் முறையிட்டு நீதி பெற முடியும்.
ஆகவே சிறிலங்கா அரசோ, கண்காணிப்புக்குழுவோ, மேற்குலகமோ "சிறுவர் பாதுகாப்பு" குறித்து விடுதலைப்புலிகளிடம் பேசத் தேவையில்லை. எம்மிடம் போதுமான அளவு அதற்கான சட்டங்கள் இருக்கின்றன.
No comments:
Post a Comment