கி-பி 17ஆம் நூற்றாண்டு - தமிழ்நாட்டில் ஒரு கிராமம்
அந்த மூன்று பெண்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். பின்னால் சிலர் குதிரைகளில் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களின் முகங்களில் தாடி வளர்ந்திருந்தது. தமிழ் மண்ணிற்கு அந்நியமான ஆடைகளையும் மொழியையும் கொண்டிருந்தார்கள். கைகளில் வாளோடும் கண்களில் காமவெறியோடும் அவர்கள் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டிருந்தார்கள். குதிரைகளின் வேகத்திற்கு அந்தப் பெண்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் அந்தப் பெண்களை பிடித்து விட்டார்கள். ஒரு பெண் அழுது கொண்டு ஏதோ சொல்ல அவளை மட்டும் விட்டுவிட்டு மற்ற இரண்டு பெண்களையும் தூக்கிக் கொண்டு போனார்கள்.
இதை எல்லாம் தொலைவில் இருந்து இரண்டு அழகான விழிகள் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தது. அந்த விழிகளுக்கு சொந்தக்காரியான அவளும் அந்தக் கிராமத்தில்தான் இருக்கிறாள். அவளுக்கு தெரிந்து இத்தோடு பதினைந்து பெண்களை கொண்டு போய்விட்டார்கள். ஆட்சி அவர்களின் கையில் இருப்பதால் அவர்களை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவள் கலக்கத்தோடும் சிந்தனைகளோடும் வீடு நோக்கி நடந்தாள்.
அவள் கணவன் வெளியூரில் நடக்கும் ஏறுதழுவல் விளையாட்டிற்கு சென்றிருந்தான். அவன் அந்த ஊரிலேயே பெரும் வீரனாகத் திகழ்ந்தான். சிலம்பம், மல்யுத்தம் என்று அனைத்தும் கற்றிருந்தான். அவளும் ஒரு வீரனையே திருமணம் செய்வேன் என்று காத்திருந்து காளை அடக்கிய அவனை திருமணம் செய்து கொண்டாள். அவனைப் பற்றியும் அவன் வீரம் பற்றியும் அவள் மிகவும் பெருமை கொண்டிந்தாள். இந்தக் கிராமத்தில் உள்ள மற்ற ஆண்களும் என் கணவனைப் போல் வீரர்களாக இருந்தால், இந்த வெறியர்களை விரட்டி அடித்து விடலாம் என்று மற்றைய பெண்களுடன் பேசுவாள். அதில் அவள் கணவன் குறித்த பெருமையோடு அந்த வெறியர்களை துரத்தி அடிக்க வேண்டும் என்ற ஏக்கமும் சேர்ந்திருக்கும்.
இதுவரை காதால் மட்டும் கேள்விப்பட்டிருந்த அவர்களின் வெறியாட்டத்தை இப்பொழுது கண்ணாலும் கண்டு விட்டாள். அவளால் இருப்புக் கொள்ள முடியவில்லை. விட்டுக்குள்ளே அங்கும் இங்கும் நடந்தபடி அடிக்கடி வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் அவளது கணவன் குதிரையில் கம்பீரமாக வருவது தெரிந்தது.
கணவன் வீட்டுக்குள் வந்ததும்தான் கவனித்தாள். கையில் ஒரு வினோதமான பொருள் ஒன்றை வைத்திருந்தான். மஞ்சள் நிறத்தில் மாட்டுக்கு கட்டுகின்ற கயிறின் பருமனோடு அது இருந்தது. தூக்குக் கயிறும் அப்படித்தான் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறாள்.
"இது என்ன?" ஆச்சரியமாக அவனிடம் கேட்டாள். "இது தாலி" அவன் சொன்னான். அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. "தாலி இப்படியா இருக்கும்? தாலி மிகவும் மெல்லிதான நூலில் அல்லவா இருக்கும்?" அவள் திகைப்பு நீங்காதவளாக கேட்டாள். "தாலியை முன்பு பனை ஓலையிலும் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்படி தாலியை நான் இதுவரை கண்டது இல்லையே?" அவளின் கேள்வி தொடர்ந்தது. "இல்லை, இனிமேல் இதுதான் தாலி, அது மட்டும் அல்ல, இனிமேல் இதை எல்லோரும் பார்க்கும் வண்ணம் தினமும் அணிந்திருக்க வேண்டும், களற்றவே கூடாது" அவன் சொல்லிக் கொண்டே போனான். அவளுக்கு எதுவுமே புரியவில்லை. தாலி என்பது திருமணத்தின் போது ஒரு அடையாளமாக கட்டப்படுகின்ற ஒன்று என்று அவளுக்கு தெரியும். ஆனால் அதை எல்லோருக்கும் தெரிவது போன்று எந்த நேரமும் அணிந்து கொண்டு இருப்பதில்லை. அதனால் அவன் சொல்வது எல்லாம் அவளுக்கு புரியாத புதிராக இருந்தது. "பெண்களை காப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு, அவர்கள் திருமணமான பெண்களை ஒன்றும் செய்ய மாட்டார்களாம், அதனால் எங்களுக்குள் பேசி அருமையான வழி ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறோம், அதுதான் இந்தத் தாலி, இதுதான் இனி பெண்களுக்கு வேலி" அவன் பெருமையாக அந்தப் புதுவகையான தாலிக்கான காரணதை சொன்னான்.
அடுத்த நாள் அவளைக் காணவில்லை. அவன் எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. சில மாதங்கள் கழித்து வேறொரு ஊருக்கு சென்று வந்தவர்கள் செய்தி சொன்னார்கள். அங்கு ஒரு தாடிக்காரனுடன் அவள் சிரித்துப் பேசியபடி ஒன்றாக குதிரையில் போவதை அவர்கள் கண்டார்களாம்.
No comments:
Post a Comment