அவளை இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். அவள் புலம்பெயர் நாடொன்றில் வாழ்பவள். அழகானவள். தாய் தந்தை சொல்லை தட்டாதவள். நவநாகரீக உடைகள் அணிவது அவளுக்கு பிடிக்காது. தமிழ் கலாச்சாரப்படி வாழ்பவள் என்று அவளைப் பற்றி மற்றவர்கள் பேசுவார்கள். இதில் அவளுக்கு பெருமையும் கூட.
அவளுக்கு ஒரு நண்பி இருக்கிறாள். இல்லை, இருந்தாள். அந்த நண்பி 16 வயதில் இருந்தே வேற்று இனத்தவன் ஒருவனைக் காதலித்தாள். அவனுடன் நகரம் முழுவதும் சுற்றினாள். 18 வயது ஆனவுடன் அவனுடன் ஒன்றாக வாழவும் சென்று விட்டாள். கடந்த 5 வருடமாக திருமணம் செய்யாமல் அவனுடனேயே வாழ்ந்த வருகிறாள். அந்த நண்பியைப் பற்றி அந்த நகரத்தில் உள்ளவர்கள் பலவாறு பேசுவார்கள். அந்த நண்பி அணிகின்ற உடைகள் பற்றியும், துணைவனுடன் டிஸ்கோ செல்வது பற்றியும் பேசி பொழுது போக்குவார்கள்.
இதனால் அந்த நண்பியுடன் அவள் பேசுவதை அவளது பேற்றோர்கள் தடை செய்து விட்டார்கள். தமது மகளும் "கெட்டுப்" போய் விடுவாள் என்ற அச்சம் அவர்களுக்கு.
இப்படி கட்டுப்பாடாக வளர்ந்த அவளை இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். வந்தவன் அழகாக இருந்தான். அவனைப் பார்த்தவுடன் அவளுக்குப் பிடித்து விட்டது. அவளுடைய குடும்பம் அவனுடைய குடும்பத்துடன் வழமையான வார்த்தைகளையும் உணவுகளையும் பரிமாறிக் கொண்டது. தொடர்ந்து பேசி நல்ல நாள் பார்ப்போம் என்று சொல்லி அவர்கள் பிரிந்தார்கள். சில நாட்களில் உண்மையாகவே பிரிந்து விட்டார்கள். அவனுடைய குடும்பத்தின் பின்னணி பற்றி திடீரென வந்த ஒரு செய்தி அல்லது வதந்தி அவளுடைய தந்தையை யோசிக்க செய்தது. கடைசியில் அவன் வேண்டாம் என்று முடிவெடுக்கவும் வைத்தது.
அவளுடைய பெற்றோருக்கு அவள் ஓரே மகள் என்பதால் அவளுடைய திருமணத்தில் அவர்கள் மிகவும் கவனமாகவும் கண்டிப்பாகவும் இருந்தர்கள்.
அவளால் இப்பொழுது கவலைப்பட மட்டுமே முடிந்தது. இந்த சில நாட்களில் அவனை மனதுக்குள் அவள் பல முறை ரசித்திருக்கிறாள். அவனுடன் வாழ்வதை எண்ணிப் பார்த்திருக்கிறாள். அவனுடன் மாலை வேளைகளில் நதிக் கரையில் நடந்து போவதாக கனவு கண்டிருக்கிறாள். இன்னும் என்னென்னமோ கற்பனை செய்திருக்கிறாள். இப்பொழுது அந்தக் கற்பனைகள் வெறும் கற்பனைகள் ஆகி விட்டன.
ஆனால் இது அவளுக்கு முதற் தடவை அல்ல. இதற்கு முன்பும் நான்கு பேர் அவளை பெண் பார்த்திருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் ஒவ்வொரு விதத்தில் அழகாகவே இருந்தார்கள். புகைப்படம் பார்த்து அவளுக்கு பிடித்திருந்த பின்பே பெண் பார்க்கும் படலம் அரங்கேறுவதால், அவர்களையும் அவளுக்கு பிடித்தே இருந்தது. ஆனால் அவர்களுடன் அவள் நடத்திய கனவுலக வாழ்க்கையும் ஒவ்வொரு காரணங்களால் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இதில் ஒருவனுடன் எல்லாம் முற்றாகி தொலைபேசியில் அவனுடன் உரையாடுகின்ற அளவிற்கு வந்தது. ஆனால் அதுவும் சீதனப் பிரச்சனையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடக்கமால் போய் விட்டது. தற்பொழுது வந்தவன் ஐந்தாவது. அதுவும் குடும்பப் பின்னணி சரியில்லை என்று நிறுத்தப்பட்டு விட்டது.
பின்பு மீண்டும் புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. அவளுக்கு பிடித்தவர்களை பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. அவளுக்கும் பெற்றோருக்கும் பிடித்தவர்களை ஜாதகத்திற்கு பிடிக்கவில்லை. இப்படி புகைப்படங்களில் நிறையப் பேரை பார்த்து ஒருவாறு ஒன்று சரிவருகிறது.
அவளை மீண்டும் பெண் பார்க்க வருகிறார்கள். இப்பொழுது வந்தவனும் அழகாக இருக்கிறான். வந்தவனை அவளுக்கு பிடித்திருக்கிறது. அவளின் அம்மா அவனிடமும் அவனின் பெற்றோரிடமும் பெருமையாகச் சொல்கிறாள். "எங்கள் மகளை நாங்கள் மிகவும் கட்டுப்பாடாக வளர்த்திருக்கிறோம், இதுவரை எங்கள் மகள் ஒரு ஆணைக் கூட தலை நிமிர்ந்து பார்த்தது இல்லை...." அம்மா சொல்லிக் கொண்டே போகிறாள்.
1 comment:
......
Post a Comment