Friday, September 07, 2007

சிலாவத்துறை நாடகம்

கிழக்கைக் கைப்பற்றிவிட்டதாக சொல்லிக்கொள்ளும் சிறிலங்கா அரசு, வடக்கிலும் மன்னாரின் சிலாபத்துறைப் பகுதியை கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளது.

சிலாபத்துறை, அரிப்பு போன்ற பகுதிகளை கடந்த 01.09.07 அன்று சிறிலங்காப் படைகள் சென்றடைந்தன. இதன் மூலம் வடக்கிலும் விடுதலைப் புலிகளின் ஒரு பகுதியை கைப்பற்றி விட்டதாக சிறிலங்கா அரசு தம்பட்டம் அடித்து வருகிறது.

கிழக்கை முற்றுமுழுதாகக் கைப்பற்றி விட்டதாக சிறிலங்கா அரசு சொல்வதிலும் உண்மை இல்லை. வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிலாபத்துறையை கைப்பற்றிவிட்டதாக சொல்வதிலும் உண்மை இல்லை.

கிழக்கு முற்றுமுழுதாக சிறிலங்காப் படைகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு அங்கு நடந்து வருகின்ற சம்பவங்களே சான்று. விடுதலைப் புலிகளே கிழக்கில் இல்லையென்று கூறிய சிறிலங்கா இராணுவம் கடந்த வாரம் அம்பாறையில் விடுதலைப் புலிகளின் முகாமில் இருந்து வந்த 8 இளவயதுப் போராளிகளை கைதுசெய்திருப்பதாக கூறியுள்ளது.

கடந்த 27.08.09 அன்று விடுதலைப் புலிகள் தம்மிடம் இணைந்த வயது குறைந்த 14 பேரை யுனிசெப் அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு விடுதலைப் புலிகள் முன்வந்தார்கள். இவர்களை அழைத்துக் கொண்டு பொத்துவில் திருக்கோவில் வீதியில் உள்ள தாண்டியடிக்கு விடுதலைப் புலிகள் வரும் போது சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை தாக்குதல் நடத்தியது.

இந்தத் திடீர் தாக்குதலினால் 14 சிறுவர்களும் பல திசைகளில் சிதறி ஓடினார்கள். இதில் 6 பேர் மீண்டும் விடுதலைப் புலிகளின் முகாம்களுக்கே திரும்பி சென்று விட்டார்கள். மிகுதி எட்டுப் பேரும் வழி தெரியாது காடுகளில் தத்தளித்த போது சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டார்கள்.

இந்தச் சம்பவம் சில விடயங்களை உணர்த்துகிறது. அம்பாறையில் அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றி விட்டோம் என்று சிறிலங்கா இராணுவம் கூறினாலும் அம்பாறையின் குறிப்பிட்டளவு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகள் முகாம்களை அமைத்து நிலைகொண்டுள்ளார்கள்.

அத்துடன் சில காரமங்களை பகலில் சிறிலங்கா அதிரடிப் படையும் இரவில் விடுதலைப் புலிகளும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட தாண்டியடிப் பகுதியில் பகலில் அதிரடிப் படையினர் நிலைகொண்டு விட்டு, மாலையானதும் விலகிச் சென்றுவிடுவார்கள். இரவில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அப் பகுதியில் இருக்கும். அதனாலேயே விடுதலைப் புலிகள் சிறுவர்களை ஒப்படைப்பதற்கு மாலை வேளையை தேர்ந்தெடுத்தார்கள்.

இரண்டாம் கட்ட ஈழப் போரின் போதும் இப்படித்தான் நடந்தது. ஆரம்பித்தில் சிறிலங்காப் படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினார்கள். காடுகளுக்குள் சிறு சிறு குழுக்காளாக பின்வாங்கிய விடுதலைப் புலிகள் பின்பு மெதுமெதுவாக கிராமங்களிலும் நடமாட்டத்தை தொடங்கினார்கள். அப்பொழுதும் பல கிராமங்களில் நிலைகொண்டிருந்த அதிரடிப் படை இரவு வேளைகளில் அங்கிருந்து விலகிவிடும். இவ்வாறு காடுகளிலும், இரவு நேரங்களில் கிராமப் புறங்களிலும் நடமாடிய புலிகள் பின்பு சிறிய சிறய கரந்தடித் தாக்குதல்கள் மூலமும், வடக்கில் நடந்த பெரும் சமர்களின் மூலம் கிழக்கில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை பெருப்பித்தார்கள்.

இன்று கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை என்று அனைத்துப் பிரதேசங்களிலும் விடுதலைப் புலிகளின் சிறிய சிறிய தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. பெரும்பாலானவை கண்ணிவெடி மற்றும் கிளைமோர் தாக்குதல்களாக இருக்கின்றன. ஒட்டுக்குழுக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஒட்டுக்குழுக்கள் ஒரு பக்கம் தங்களுக்குள் மோதிக்கொள்ள மறுபக்கம் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

அன்று நடந்த அதே சம்பவங்கள் கிழக்கில் மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளன. விரைவில் கிழக்கும் மீண்டும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வரும் என்று உறுதியாக நம்பலாம்.

கிழக்கில் சிறிலங்காப் படைகளின் பிடியில் இருந்து சில பகுதிகள் கைநழுவ ஆரம்பித்துள்ள இந்த வேளையில், சிறிலங்கா அரசு வடக்கில் ஒரு நாடகத்தை ஆடி முடித்திருக்கிறது. அதுதான் சிலாவத்துறையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக சிறிலங்கா அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை. சிறிலங்கா அரசு ஒரு மோசடியான ஏமாற்று நாடகம் செய்திருக்கிறது என்பதை வரைபடத்தைப் பார்த்தே இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

வவுனியாவில் இருந்து மன்னாரை நோக்கிச் சொல்கின்ற ஏ 30 பாதையும், மதவாச்சியில் இருந்து மன்னாரை நோக்கிச் சொல்கின்ற ஏ 14 பாதையும் சிறிலங்காப் படைகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலமாகவே இருக்கின்றன. இந்தப் பாதையின் வடக்குத் திசையிலேயே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி இருக்கிறது. இந்தப் பாதையிலும், அதற்கு அண்டிய பகுதிகளிலும் இருந்தபடிதான் சிறிலங்காப் படைகள் மடுவை நோக்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் சிலாவத்துறையில் இருந்து படைத்தளம் மீது ஒரு பாரிய தாக்குதலைத் தொடுத்தனர். அந்தத் தாக்குதலில்தான் மேயர் டாம்போ கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டார். மேயர் டாம்போ ஓட்டி வந்த வெடிமருந்து நிரப்பிய வண்டி இடையிலேயே சிறிலங்காப் படைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வெடித்துச் சிதறியது. அத்துடன் சிறிலங்கா வான்படையினர் மிகக் கடுமையான வான்தாக்குதல்களிலும் ஈடுபட்டனர்.

சிலாவத்துறைத் தாக்குதல் விடுதலைப் புலிகளுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் பின்வாங்க நேர்ந்தது. அதன் பிறகு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சண்டைகள் எதுவும் இப் பகுதியில் நிகழவில்லை.

சிறிலங்காப் படைகள் 1999ஆம் ஆண்டு பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட "ரணகோச" நடவடிக்கை மூலம் மடு, பள்ளமடு போன்ற பகுதிகளை கைப்பற்றியிருந்தன. பின்பு அந்தப் பகுதிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்றின் மூலம் மீட்கப்பட்டன. ஆனால் அப்பொழுதும் விடுதலைப் புலிகளின் படையணிகள் மதவாச்சி மன்னார் வீதியை தாண்டிச் செல்லவில்லை.

ஆகவே மதவாச்சி மன்னார் வீதிக்கு தெற்குப் புறமாக இருக்கின்ற, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத சிலாவத்துறை, அரிப்பு போன்ற பகுதிகளுக்கு தன்னுடைய படையினரை நடைபயணம் செய்ய வைத்துவிட்டு, சிறிலங்கா அரசு தன்னுடைய சிங்கள மக்களை ஏமாற்றி உள்ளது.

இதை வேறுவிதமாக விளக்குவது என்றால் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச சபைகளில் மாந்தை மேற்கு, மடு ஆகிய இரண்டு பிரதேசசபைப் பகுதிகளின் பெரும்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மன்னார் நகரம், நானாட்டான், முசலி ஆகிய மூன்று பிரதேச சபைக்குள் அடங்குகின்ற பகுதிகளின் பெரும்பகுதி சிறிலங்காப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.இதில் முசலி பிரதேச சபைப் பகுதிக்குள் அடங்குகின்ற சிலாவத்துறை, அரிப்புப் பகுதியிலேயே சிறிலங்காப் படைகள் தமது "பாரிய படை நடவடிக்கையை" செய்திருக்கின்றன.

சிலாவத்துறை, அரிப்பு போன்ற பகுதிகளில் சிறிலங்காப் படைகளின் நிலைகள் இல்லாத இடங்களில் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்கள் இருந்தது உண்மை. சிலாவத்துறையை ஒரு வழங்கல் பாதையாகவும் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவ்வாறான பகுதிகள் இலங்கைத் தீவு முழுவதும் இருக்கின்றன. அதற்காக அப் பகுதிகள் அனைத்தும் இராணுவரீதியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என்று வரையறுக்க முடியாது.

ஆனால் இந்த நடவடிக்கை மூலம் சில நன்மைகள் இருப்பதாக சிறிலங்கா அரசு கருதுகிறது. விடுதலைப் புலிகள் மன்னார் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் சிறிலங்கா அரசுக்கு இருக்கிறது. அப்படி விடுதலைப் புலிகள் மன்னாரில் இருக்கின்ற தள்ளாடி போன்ற படைத் தளங்களை தகர்ப்பார்களாயின் மன்னாரின் தெற்குப் பகுதி நோக்கி விடுதலைப் புலிகளின் படையணிகள் வேகமாக நகர்ந்து முன்னேறிவிடலாம். அல்லது சிலாவத்துறைப் பகுதியில் தமது படைகளை அனுப்பி மன்னார் மீது பல முனைத் தாக்குதலைகளை விடுதலைப் புலிகள் தொடுக்கலாம்.

மன்னாரின் தெற்குப் பகுதியிலும் பாரிய படைத்தளங்களை நிறுவுவதன் மூலம் இவைகளை தடுத்து விட்டதாக சிறிலங்கா அரசு கருதுகிறது. இதைக் கருத்தில் கொண்டே சிலாவத்துறை நோக்கி படைகளை சிறிலங்கா அரசு நகர்த்தியுள்ளது. அத்துடன் வடக்கிலும் ஒரு பகுதியை கைப்பற்றி விட்டதாக பெரும் பிரச்சாரங்களை மேற்கொண்டு சிங்களவர்களையும் குசிப்படுத்தலாம் என்று நம்புகிறது.

இப்படி சிறிலங்கா அரசு பல கணக்குகளைப் போட்டாலும், விடுதலைப் புலிகளின் நகர்வுகளால் அவைகள் பிழைத்துப் போகும் என்பதுதான் உண்மை

1 comment:

Anonymous said...

என்னமோ சொல்லுங்க. நீங்க சொல்லுங்க கேட்கிறோம். கிழக்கு இலங்கைப் பிரதேசம் பறிபோனபோதும் என்னமோ காரணம் சொன்னீர்கள்!
இப்போதும் என்னமோ சொல்றீங்க.

சார்! வன்னி முழுவதும் பறிபோனாலும் இப்படித்தான் எழுதுவீர்களா?

புள்ளிராஜா