Saturday, September 22, 2007

ராமன் தேடிய சீதை

சீதை அலறித் துடித்தாள். தீநாக்குகள் அவளை சுட்டன. "என்னை கொன்றுவிடாதீர்கள், நான் ஒரு பாவமும் அறியாதவள்" சீதை கதறினாள். ராமன் ஒரு குரூரச் சிரிப்போடு அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான். அரியாசனத்திற்காக சோரம் போன சுக்கிரீவனும் விபீடணனும் செய்வதறியாது தலைகுனிந்து நின்றனர்.

அப்பொழுது சத்தம் கேட்டு அங்கே அனுமானும், லக்குமணனும் மற்றவர்களும் ஓடி வந்தார்கள். அவர்கள் ஓடி வருவதைப் பார்த்த ராமன் சீதையை கருக்கிக் கொண்டிருந்த தீயை அணைத்தான். "சீதை தன்னை தூய்மையானவள் என்று நிரூபிக்க தீயில் இறங்கிவிட்டாள், நல்ல வேளை அக்கினிதேவன் காப்பாற்றி விட்டான்" ராமன் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.

அப்பொழுது சீதை தப்பி விட்டாளே தவிர, அவளது வாழ்க்கை அதன் பிறகு நரகமாகி விட்டது. தினமும் ராமன் குடித்துவிட்டு வந்து சீதையை அடித்து உதைப்பான். மிகக் கொடிய வார்த்தைகளால் அவளை துன்புறுத்துவான். சீதைக்கு ஆறுதல் சொல்வதற்கு யாரும் இல்லாமல் போய்விட்டது. இடையிடையே சீதை தன்னுடன் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொண்ட ராவணனை நினைத்துக் கொள்வாள்.

ஒரு நாள் ராமன் குடித்துவிட்டு போதை தலைக்கேற ஆடியாடி வந்தான். சீதையைக் கண்மண் தெரியாமல் அடித்தான். அவளை இனிமேல் தன்முன் நிற்கக் கூடாது என்று சொல்லி காட்டுக்கு விரட்டி விட்டான். காட்டில் உள்ள மிருகங்களுக்கு சீதை பலியாகட்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஆனால் சீதை காட்டுக்குள் வாழப் பழகிக் கொண்டாள். அங்கே இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தாள். செய்தி ராமனை எட்டியது. ராமனுடைய சந்தேகம் மேலும் அதிகரித்தது. சீதையை இனியும் உயிருடன் விடக் கூடாது என்று நினைத்தான். காடெல்லாம் தேடி அலைந்தான். ஆனால் சீதையை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு நேரத்தில் சலித்துப் போய் சீதையை தேடுவதை ராமன் கைவிட்டுவிட்டான். தன்னுடைய வெறியை குடித்தும் பெண்களுடன் கும்மாளமிட்டும் ஆற்றிக் கொண்டான். கிண்ணரி, உதமா, நாட்டியப் பெண்கள், வேலைக்காரப் பெண்கள் என்று யாரையும் ராமன் விட்டு வைக்கவில்லை. அனைவரிடமும் தன்னுடைய பசியை தீர்த்துக் கொண்டான்.

ஒரு நாள் காட்டுக்குள் வேட்டைக்குச் சென்ற ராமனின் படைவீரர்கள் ராமன் தேடிய சீதையை கண்டு விட்டனர். ராமனிடம் ஓடிச் சென்று, அவன் தேடிய சீதையை கண்ட செய்தியை சொன்னார்கள். ராமன் வெறியோடு காட்டுக்கு புறப்பட்டான்.

இந்த முறை சீதையால் தப்ப முடியாது போய்விட்டது. சீதை ராமனிடம் அகப்பட்டு விட்டாள். ராமன் சீதையை கடுமையாக சித்திரவதை செய்தான். சீதை பலவாறு கெஞ்சியும் விடவில்லை. சித்திரவதை தாளாது சீதை மூர்ச்சித்துவிட்டாள். ராமன் ஒரு குழியை தோண்டி அதற்குள் போட்டு சீதையை மூடினான்.

"சீதை பூமாதேவியன் மகள் அல்லவா! அதனால் பூமியே பிளந்து சீதையை உள் வாங்கிக் கொண்டது" சில காலம் கழித்து அயோத்தியில் மக்கள் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.

1 comment:

Anonymous said...

கம்பனைத்தான் எனக்குத் தெரியும்.

உங்களை மாதிரி வம்பர்களும் இருப்பது இன்றுதான் தெரியும்