ஈழத்திற்கு தாம் சேகரித்த நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு அனுமதி தரவேண்டும் என்று வலியுறுத்தி பழ. நெடுமாறன் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாநிலைப் போரட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு பேசியதோடு, கலைஞரின் செய்தியை ஒரு அறிக்கையாகவும் வெளியிட்டு பழ. நெடுமாறன் அவர்களை உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடும்படி கோரியிருந்தார்.
ஆனால் கலைஞரின் உத்தியோகபூர்வமான வேண்டுகோளை எதிர்பார்ப்பதாக பழ. நெடுமாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கலைஞர் கருணாநிதி அவர்கள் பழ.நெடுமாறன் அவர்களை உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடும்படி உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோள் குறித்து போராட்டக் குழுவினருடன் பழ. நெடுமாறன் அவர்கள் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்வது என்றும், அதே வேளை கலைஞரின் சந்திப்பிற்கான அழைப்பை ஏற்பது என்று முடிவாகியுள்ளது.
இதையடுத்து பழ. நெடுமாறன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் மூன்றாவது நாளான இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கலைஞர் கருணாநிதி தற்பொழுது சுற்றுப் பயணம் மேற்கோண்டிருக்கிறார். இரண்டு நாள் கழித்தே அவர் சென்னை திரும்புகிறார். பழ. நெடுமாறன் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட மறுத்தது குறித்து கலைஞர் ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரியவருகிறது.
தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கையாக கலைஞர் இதை சந்தேகிக்கிறார் என்றும் அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. பழ. நெடுமாறன் அவர்களுடைய இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுகின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டதும் கலைஞரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
பழ. நெடுமாறன் அவர்களின் தூய்மையான போராட்டம் அரசியல் ஆக்கப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனினும் கலைஞர் பழ. நெடுமாறன் அவர்களுடன் மேற்கொள்ளவிருக்கும் சந்திப்பை அடுத்த இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
1 comment:
http://www.tamilantelevision.com/editor/progrfile/tamilantvvideo3.wmv
Post a Comment