Tuesday, November 28, 2006

எமது உடனடியான பணி!

மாவீரர் தினத்தில தேசியத் தலைவர் நிகழ்த்திய மாவீரர் தின உரை தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் புத்துணர்வையும் தோற்றுவித்துள்ளது. ஈழப் பிரச்சனையில் தலையிட்ட வெளிநாடுகள் இதுவரை பாடி வந்த "ஐக்கிய இலங்கை" என்று பல்லவிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

கடைசியாக நடந்த ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் போது மேற்குலகம் முன்வைத்த நான்கு கோட்பாடுகளில் "ஐக்கிய இலங்கை" என்பது முக்கியமான கோட்பாடாக இருந்தது. அப்பொழுது நாம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்.

"ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு" என்கின்ற கோட்பாடு ஒரு பாரிய அத்துமீறல் ஆகும். தமிழினம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திர தனியரசு அமைப்பதற்கு போராடி வருகிறது. ஆயினும் கடந்த 5 வருடங்களாக பேச்சுவார்த்தை மேசையில் தமிழீழத்தை வலியுறுத்தாது தமது நல்லெண்ணத்தை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆகவே சிறிலங்கா அரசும் பதிலுக்கு "ஐக்கிய இலங்கை" என்பதை அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு முன்னம் வலியுறுத்தாது இருப்பதே சரியாக இருக்கும். ஆனால் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் "ஐக்கிய இலங்கையை" வலியுறுத்துவதன் மூலம் ஒரு பகை நடவடிக்கையை மேற்கொள்கிறது என்றே கொள்ள வேண்டும். தற்பொழுது மேற்குலகமும் வெளிப்படையாக "ஐக்கிய இலங்கை, ஒருமைப்பாடு" என்று பேசுவது மிகவும் பக்கசார்பானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.

இப்படி விடுதலைப்புலிகளின் நல்லெண்ணத்தை கண்டுகொள்ளாது "ஐக்கிய இலங்கை" என்ற கோட்பாட்டையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்த உலக நாடுகளுக்கு தற்பொழுது தங்களுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தேசியத் தலைவர் உலக நாடுகளை நோக்கி தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான போராட்டத்தை அங்கீகரிக்குமாறு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார். உலக நாடுகளை தமிழீழத் தனியரசை அங்கீகரிக்க செய்வதற்கான உந்துதலை வழங்க வேண்டியது அந்தந்த நாடுகளில் வாழுகின்ற தமிழ் மக்களின் மாபெரும் கடமையாகும்.

இதை விட தமிழ் மக்கள் முன் முக்கியமான ஒரு பணி இருக்கிறது. தமிழினத்திற்கு என உலகில் ஒரு நாட்டை அமைக்கின்ற போராட்டத்திற்கு நல்லாதரவு வழங்கி பக்கபலமாக செயற்பாடுமாறு தேசியத் தலைவர் உலகத் தமிழினத்தை நோக்கி அன்போடு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் தமிழிகத்தில் வெளிவருகின்ற தினத்தந்தி, விடுதலை போன்ற சில ஊடகங்களே தேசியத்தலைவரின் மாவீரர்தின உரைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளன. மற்றைய பெரும்பாலான ஊடகங்கள் தேசியத் தலைவரின் தமிழ்நாட்டு மக்களுக்கான அழைப்பை இருட்டடிப்பு செய்துள்ளன. முக்கியத்துவம் கொடுக்க தவறியுள்ளன. தனியரசு தீர்மானம் பற்றி செய்தி போட்ட ஊடகங்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லப்பட்ட செய்தியை மறைத்து விட்டன. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய மாபெரும் எழுச்சியை மழுங்கடிப்பதே இந்த இருட்டடிப்பின் நோக்கமாக இருக்கும்.

ஆகவே உலகத் தமிழினத்தின் பெருந்தலைவராகிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமிழினத்தை நோக்கி விடுத்திருக்கின்ற செய்தியை உலகில் வாழுகின்ற எட்டுக் கோடிக்கும் மேற்பட்ட தமிழிர்களிடம் கொண்டு போய் சேர்க்கின்ற கடமை எமக்கு உண்டு. இதுவே நாம் உடனடியாக செய்ய வேண்டிய முதலாவது பணியாக இருக்கிறது.

No comments: