Monday, November 13, 2006

'புற'த்திலும் புலத்திலும் பெண் கவிஞர்கள்!

சங்க கால இலக்கியத்தில் புறநானூற்றில் ஒரு பாடல் உண்டு. தமிழனுடைய வீரத்தைப் பற்றி பேசுகின்ற பொழுது இந்தக் புறநானூற்றுப் பாடல் சொல்லுகின்ற கதையை இன்று வரை உதாரணம் காட்டுகிற அளவிற்கு புகழ் பெற்ற பாடல் அது. அந்த பாடலின் சுருக்கம் இதுதான்.

ஒரு பெண் தன் கணவனை போருக்கு அனுப்புவாள். கணவன் போரில் வீரச் சாவு அடைந்து விடுவான். கணவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரனாக வீழ்ந்தான் என்ற செய்தி கேட்டு பெருமை கொள்வாள். அடுத்த நாள் போருக்கு தன் மகனை அனுப்புவாள். மகனும் போரில் இறந்து விட்டான் என்று செய்தி வரும். ஆனால் கூடவே இன்னும் ஒரு செய்தி வரும். அவளுடைய மகன் புறமுதுகு காட்டி ஓடுகின்ற பொழுது, முதுகில் காயம் பட்டு இறந்தான் என்பதே அந்தச் செய்தி. இதைக் கேட்ட அந்தப் பெண் துடித்துப் போவாள். போர்க்களம் நோக்கி ஓடுவாள். இறந்து கிடக்கும் உடல்களுக்குள் தன்னுடைய மகனை தேடுவாள். மகனைக் கண்டு பிடித்தவள், ஓடிச் சென்று மகனுடைய உடலைப் பார்க்கிறாள். மகன் மார்பில் காயம் பட்டு இறந்து கிடக்கிறான். தன்னுடைய மகனைப் பற்றி வந்த செய்தி பொய்யென்றும், உண்மையில் அவன் ஒரு வீரனாக மார்பில் காயம் பட்டு இறந்தான் என்றும் புரிந்து கொள்கிறாள். தன்னுடைய மகனை எண்ணி பெருமை கொள்கிறாள்.

ஈழத்தில் தாய்மார் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்புகின்ற பொழுது அவர்களை புறநானூற்று தாய் என்று சொல்வதன் காரணமும் மேற்சொன்ன புறநானூற்றுப் பாடல்தான். புறநானூற்றுப் பாடல்களில் வருகின்ற கதைகளில் ஒன்றைச் சொல்லும்படி கேட்கின்ற பொழுது, உடனடியாக சொல்லப்படுவதும் மேற்சொன்ன கதைதான். இந்தக் கதை ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. இந்தக் கதையை தருகின்ற பாடலை பாடியவர் காக்கைபாடினியார் என்கின்ற ஒரு பெண் புலவர்.

சங்க இலக்கியங்களை எழுதியவர்களில் 40இற்கும் மேற்பட்டவர்கள் பெண்புலவர்கள் என்று அறிய முடிகிறது. புறநானூற்றுப் பாடல்களை எழுதிய 32 புலவர்களில் 16 பேர் பெண்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைவரும் அறிந்த முக்கியமான சங்க கால புலவர் அவ்வையார். இவரே புறநானுற்றுப் பாடல்களில் அதிகமான பாடல்களை பாடியவர். நானூறு பாடல்களில் 33 பாடல்களை அவ்வையார் மட்டும் பாடி உள்ளார். அவ்வையார் அன்றைய மன்னர்களை இடித்து உரைக்கின்ற அளவிற்கு, போர்களில் சமாதானம் செய்கின்ற அளவிற்கு அரசியல் அந்தஸ்தும் பெற்றிருந்தார்.

அவ்வையாரின் பின் வந்த பல பெண் புலவர்கள் அவ்வையார் என்ற பெயரிலேயே தம்மையும் அழைத்துக் கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அதே வேளை ஆணாதிக்க சமூகம் பல அவ்வையார்களை ஒரு அவ்வையார் ஆக்கி விட்டது என்ற கருத்தும் உண்டு. அதியமானுடன் நட்புக் கொண்டிருந்த அவ்வையார், நல்வழி எழுதிய அவ்வையார், சேரமான் நாயனார் காலத்து அவ்வையார் என்று பல அவ்வையார்கள் வாழ்ந்தார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

சங்க காலத் தமிழர்களின் சமயத்தை ஆராய்கின்ற பொழுது, ஒரு பெண் புலவரின் பாடல் முக்கியமான சான்றுகளை தருகிறது. தாய்நாட்டைக் காக்க போரில் வீராச் சாவு அடைந்த ஒரு வீரனின் நடுகல்லை வணங்குவது பற்றி அல்லூர் நல்முல்லையார் என்ற பெண் புலவர் பாடி வைத்திருக்கிறார். கைம்பெண்களின் அவலத்தை, பெண்ணியக் கருத்துக்களை பெருங்கோப்பெண்டு என்ற பெண் புலவர் பாடியிருக்கிறார்.

புறநானுறில் இப்படி புகழ் பெற்ற பெண் புலவர்களின் படைப்புக்கள் விரவிக் கிடக்கின்றன. அதே போன்று அகநானுற்றுப் பாடல்களிலும் பெண் புலவர்கள் இருக்கிறார்கள். சங்க காலப் பெண் புலவர்களில் அவ்வையாருக்கு அடுத்தபடி புகழ் பெற்றிருந்த வெள்ளி வீதியார் என்ற பெண் புலவர் அகநானூற்றுப் பாடல்களில் பலதை பாடியுள்ளார்.

இவ்வாறு தமிழை அழகுபடுத்திய பெண் புலவர்களின் வரலாறு சங்க காலத்தோடு முடிந்து விடவில்லை. கி.பி 7, 8ஆம் நூற்றாண்டளவில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்தில் வாழ்ந்த அவ்வையார், ஆண்டாள் என்று தொடர்ந்தது. ஆண்டாளுடைய பாடல்களில் இருக்கின்ற இலக்கிய ரசனை வேறு எங்கும் இல்லை என்று சிலர் சொல்வார்கள். சிலர் ஆண்டாளை கம்பருடன் ஒப்பிட்டு பேசுவார்கள். உண்மையில் ஆண்டாளுடைய பாடல்களை படிக்கின்ற பொழுது, யாருமே அதில் மயங்கவே செய்வார். அதில் சொட்டுகின்ற கவி ரசம் அற்புதமானது. படிப்பவரை சொக்கிப் போகச் செய்வது.

இப்படி அவ்வையார்(கள்), காக்கைபாடினியார், வெள்ளிவீதியார், ஆண்டாள் என்று நீண்டு கொண்டு போன வரிசை திடீரென்று நின்று போய்விட்டது. ஆண்டாளுக்குப் பிறகு ஒரு பெண் புலவரை தேடிப் பார்த்தால், யாருமே அப்படி தென்படவில்லை என்பது ஒரு சோகமான செய்தி.

இன்றைக்கு புலம் பெயர் நாடுகளில் ஆண்களை விட பெண்களே அதிகமாக கவிதை எழுதுகிறார்கள். ஐரோப்பா, கனடா, அவுஸ்ரேலியாவின் ஒவ்வொரு நகரங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுடைய கவிதைகளின் வீச்சு ஒரு எல்லைக்குள் நின்று விடுகிறது. அல்லது கவிதைகளில் வீச்சே இல்லாமல் இருக்கிறது.

இந்தக் கவிஞர்களுடைய கவிதைகளில் புதிய விடயங்கள் இருப்பதில்லை. புதிய கருத்துக்கள் இருப்பதில்லை. புதிய காட்சிகள் இருப்பதில்லை. புதிய சொற்கள் இருப்பதில்லை. இதற்கு எமது ஆணாதிக்க சமூகமும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். பெண்கள் வீட்டிலும், தொடர் நாடகங்களிலும் அடைபட்டுக் கிடப்பதால் அவர்களிடம் புதிய தேடல்கள் இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. புதிய தேடல்கள் இல்லாததால் பெண் கவிஞர்களின் கவிதைகள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றி வருகின்றன.

உலக அரசியல், பகுத்தறிவு, வர்க்கப் போராட்டங்கள், சாதியம் போன்றவற்றையெல்லாம் பெரும்பாலும் பெண்களின் கவிதைகள் தொட்டுச் செல்வதில்லை. அதற்கான தேடல்களை செய்வதிலும் பெண் கவிஞர்கள் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.

புலத்திலே உள்ள பெரும்பாலான பெண் கவிஞர்கள் பெரும்பாலும் வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் கவிதை வாசிப்பதன் மூலமே தங்களுடைய கவிதைகளை வெளிக் கொணர்கிறார்கள். அந்தக் கவிதைகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே மாதிரியே இருக்கும். ஒருவர் முதலாவதாக சொன்ன வரியை வேறு ஒருவர் நான்காவதாக சொல்லுவார். ஒரு வரியை இரண்டு தடவைகள் சொல்ல வேண்டும் என்பது கட்டாய வழக்கமாக இருக்கும்.

இதை படிக்கின்ற பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி வரும். இதை எழுதுகின்ற நான் ஒரு சிறந்த கவிஞனா என்று? இதை எழுத எனக்கு என்ன தகுதி என்று அடுத்த கேள்வியும் தொடர்ந்து வரும். நான் சிறந்த கவிஞனோ, இல்லையோ, ஆனால் ஒரு மிகச் சிறந்த ரசிகன். நீங்கள் என்னிடம் ஆண்கள் எழுதிய 50 கவிதைகளையும் பெண்கள் எழுதிய 50 கவிதைகளையும் பெயரிடாமல் கொண்டு வாருங்கள். நான் சரியான முறையில் எது ஆண்கள் எழுதியது, எது பெண்கள் எழுதியது என்று பிரித்துக் காட்டுகிறேன். அதில் தவறுகள் வந்தால் கூட அவைகள் பத்துக்குள்தான் இருக்கும். அது முடியாது போனால் நான் சொன்னது தவறு என்று ஏற்றுக் கொள்கிறேன்.

இதில் இன்னும் ஒரு கொடுமை உண்டு. ஒரு சோக நிகழ்ச்சி நடந்தால் போதும். அதற்கான அஞ்சலி நிகழ்வில் பெண் கவிஞர்கள் வரிசையாக வந்து தங்களுடைய கவிதைகளின் மூலம் மேலும் துன்பத்தை தருவார்கள்.

சுனாமி வந்த பொழுதும் இதுதான் நடந்தது. வந்த அலை திரும்பிப் போகவில்லை. இங்கே இவர்கள் கவிதை வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். செஞ்சோலையில் குண்டு வீழ்ந்தது. மீட்புப் பணி முடியவில்லை. அதற்குள் கவிதைகள் அணி வகுத்து விட்டன. கடைசியாக வாகரையில் குண்டு வீசப் பட்ட பொழுதும், பெண் கவிஞர்கள் வானொலிகளில், தொலைக்காட்சிகளில் வந்து கவிதைகளை வீசி விட்டுப் போனார்கள்.

இதற்கான காரணம் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அடுத்த குண்டு எப்பொழுது விழும் என்ற இவர்கள் கவிதை எழுதி தயாராக வைத்திருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்று ஒரு கருத்து உண்டு.

ஒரு சாவு வீட்டில் ஆண்கள் காரியங்களைக் கவனிக்க, பெண்கள் சுற்றி இருந்து ஒப்பாரி பாடுவார்கள். அந்த ஒப்பாரியின் மூலம் தனிப்பட்ட கோப தாபங்களையும் சிலர் தீர்த்துக் கொள்வார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. எப்படி இருந்தாலும், அந்தப் பெண்களின் சோகம் அந்த இடத்தில் பாடலாக வெளிப்படுகிறது. இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த ஒப்பாரி வைக்கும் பழக்கும் குறைந்து விட்டாலும், அந்தத் தன்மை மரபணுக்கள் வழியாக காவிச் செல்லப்பட்டிருக்கலாம். அதன் வெளிப்பாடாக சோக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற பொழுது பெண்கள் கவிதை வாசிப்பதாக இருக்கக் கூடும். இப்படி ஒப்பாரிக்கு பதிலாக கவிதைகள் வாசிக்கப்படுகின்றனவா என்பது உண்மையிலேயே ஆய்வுக்கு உட்பட்டத்தப்பட வேண்டிய ஒரு விடயம். மாவீரர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவர்கள் வந்து மீண்டும் கவிதை வாசிக்கப் போகிறார்களே என்று நினைக்க பயமாக இருக்கிறது. சென்ற முறை அவர்கள் எழுதிய அதே கவிதைகள்தான் இம் முறையும் வரப் போகின்றன. இம் முறை சில வசனங்கள் இடம் மாறி இருக்கப் போகின்றன. அவ்வளவுதான்.

மொத்தத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள பெரும்பாலன பெண் கவிஞர்கள் ஒரே விதமான பாணியில் ஒரே விதமான கவிதைகளை எழுதி காலத்தை வீணே கடத்திக் கொண்டு போகிறார்கள். சில விதிவிலக்குகள் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் விதிவிலக்குகள் பொதுவிதி அல்ல. இங்கே பெண் கவிஞர்களை நோக்கி இதை எழுதுவதற்கும் காரணம் உண்டு. நான் முன்பே சொன்னது போன்று புலம்பெயர்ந்த நாடுகளில் அதிகமாக கவிதை எழுதுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு கவிதைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கின்ற கடப்பாடு அதிகம் உண்டு.

அது முடியாவிட்டால் ஒன்று செய்யுங்கள். நான் குறிப்பிட்ட விதிவிலக்குகளுக்குள் அடங்குபவர்களில் நீங்களும் ஒருவர் என்று எண்ணி ஆறுதல் பட்டுக் கொள்ளுங்கள். அல்லது என்னை ஆணாதிக்கவாதி என்றும், திமிர் பிடித்தவன் என்றும் திட்டி கவிதை எழுதி சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள்.

3 comments:

இளங்கோ-டிசே said...

சபேசன், பெண் படைப்பாளிகளை விமர்சனபூர்வமாய் அணுக விரும்பியிருக்கின்றீகள். நல்ல விடயம். பெண்கள் எழுதுகின்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காய் அவர்களின் படைப்புக்களை அளவுக்குமதிகமாய் பாராட்டத் தேவையில்லை. அத்தகைய பாராட்டுக்களை எழுதுகின்ற பெண்களும் விரும்பமாட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.

நீங்கள் சிலவிடயங்களை ஆகவும் தனிமைப்படுத்திப் பார்க்கின்றீர்களோ என்று தோன்றுகின்றது. குறிப்பாய் புலம்பெயர் பெண் படைப்பாளிகள் குறித்து வைக்கும் விமர்சனங்கள் ஆண்களுக்கும் பொருந்தக்கூடியவை. ஒரு துயரகரமான சம்பவம் நடந்தால் அதன் வடுக்கள் ஆறமுன்னரே கவிதைப் பாடி ஆபாசமாக்குவதைப் பெண்களைப் போலவே ஆண்களுந்தானே செய்கின்றார்கள்?

/உலக அரசியல், பகுத்தறிவு, வர்க்கப் போராட்டங்கள், சாதியம் போன்றவற்றையெல்லாம் பெரும்பாலும் பெண்களின் கவிதைகள் தொட்டுச் செல்வதில்லை. அதற்கான தேடல்களை செய்வதிலும் பெண் கவிஞர்கள் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை/
இப்படி நாம் கூறவெளிக்கிடும்போது ஒரு ஆண்பார்வை (அல்லது ஆணாதிக்கப் பார்வை) வந்துவிடுகின்றது அல்லவா? ஏன் நாங்கள் நினைப்பதை அல்லது இதுவரை செய்துகொண்டிருப்பதைத்தான் பெண்களும் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கவேண்டும்? நாம் எவற்றையும் திணிக்காமல் பெண்கள் தாங்கள் சொல்லவிரும்புவதைச் சொல்வதற்கான வெளியைக் கொடுக்கும்போது அவர்கள் தமக்குரிய தனித்துவத்துடன் புதிய தளங்களை உருவாக்கவும் கூடும் அல்லவா?
...
வீம்பாய் எதிர்விமர்சனம் வைக்கின்றேன் என்று நீங்கள் நினைக்காமாட்டீர்கள் என்றே நம்புகின்றேன். புலத்தின் ஆண் கவிஞர்கள் எழுதிக் கிழித்துத் தள்ளுகின்றார்கள்; பெண் கவிஞர்கள் அப்படியொன்றும் சாதிக்கவில்லை என்ற ஒரு தொனி வருவதலேயே மேலேயுள்ளவற்றைக் குறிப்பிட்டேன். அதேவேளை இரண்டு பாலிலும் குறிப்பிடத்தக்கவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவ்வளவே நன்றி.

வி.சபேசன் said...

வணக்கம் டிசே தமிழன்!

உங்கள் கருத்துக்கு நன்றி!

பெண்கள் ஒரு வட்டத்திற்குள் எழுதுகிறார்கள் என்று சுட்டிக்காட்டவே சில உதாரணங்களை (உலக அரசியல், பகுத்தறிவு, வர்க்கப் போராட்டங்கள்.....) சொன்னேன். இவைகள் பற்றித்தான் அவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு வட்டத்திற்குள்ளேயே இருக்காது அவர்களுடைய கவிதைகள் பரந்து விரிவு பட வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.

சோக நிகழ்ச்சிகளில் ஆண்கள் கவிதை வாசிக்கின்ற வேலையை செய்வது ஒப்பீட்டளவில் குறைவு என்றே நினைக்கிறேன். கடைசியாக வாகரையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட பொழுதும், ஊடகங்கள் நடத்திய கண்ணீர் வணக்க நிகழ்ச்சியில் ஆண்கள் அதிகமாக கண்டனமும் அஞ்சலியும் தெரிவித்தார்கள். உலக நாடுகளின் பரா முகத்தை அலசினார்கள். என்ன செய்யலாம் என்பது பற்றி பேசினார்கள். வந்தோம், ஒரு கவிதை வாசித்தோம், வேலை முடிந்தது என்று போனது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருந்தார்கள். இதுதான் என்னை "ஏன்" என்ற கேள்வியை எழுப்பத் தூண்டியது.

அதே வேளை இதே போன்ற ஆண்களும் இருப்பது உண்மை. அதை நான் மறுக்கவில்லை.

நளாயினி said...

வித்தியாசமான பார்வை. நன்றி.