ரிபிசி வானொலி நிலையம் 24.11.06 இரவு தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் சென்ற பிறகு சிலர் உள் நுளைந்து அங்கிருந்த கருவிகளை அடித்து சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இதனால் ரிபிசி வானொலி சில நாட்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் பின்னணி குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரிபிசி வானொலி விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கிற ஒரு வானொலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறிலங்கா அரசுக்கான பரப்புரைகளை பெருமளவில் மேற்கொள்வதால், ரிபிசி வானொலி சிறிலங்கா அரசின் பணத்தில் இயங்குவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்தும் உண்டு. இனவாத சிங்கள அரசின் இரண்டாவது தூதரகம் போன்று ரிபிசி இயங்குவது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விசனம் உண்டு.
இந்த நிலையில் ரிபிசி வானொலி மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. ரிபிசி வானொலி ஏற்கனவே இரண்டு முறை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படி ரிபிசி தாக்குதலுக்கு உள்ளாகின்ற ஒவ்வொரு முறையும் ரிபிசி தரப்பு விடுதலைப்புலிகள் மீதும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் பழியைப் போட்டு வந்தது. ஆனால் அதை ரிபிசி தரப்பினரால் நிரூபிக்க முடியவில்லை. மக்களும் அதை நம்பவில்லை. மாறாக காப்புறுதிப் பணம் பெறுவதற்காக அவர்களே தங்களுடைய நிலையத்தை சேதப்படுத்தியிருப்பார்கள் என்ற சந்தேகமே மக்கள் மனதில் மேலோங்கி இருந்தது.
இப்பொழுது மீண்டும் ரிபிசி வானொலி நிலையம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருப்பார்கள் என்பது நம்பக்கூடியதாக இல்லை. மாவீரர் தினத்திற்கு இரண்டு நாட்களே இருக்கின்ற நிலையில் இது நடந்துள்ளது. இலண்டனில் மாவீரர் தினம் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இந்த மாவீரர் தின நிகழ்வுகளை குழப்புவதற்கு சிறிலங்காவின் தூதரகமும், ஒட்டுக்குழுக்களும் பல முயற்சிகளில் இறங்கி உள்ளனர். பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், காவல்துறை போன்றவற்றிற்கு புகார் மேல் புகார் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு கெடுபிடிகள் வருவது போன்ற ஒரு செயலை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருக்க மாட்டார்கள்.
அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிபிசியில் நடந்த ஒரு கைகலப்பு சம்பந்தமான வழக்கும் சென்ற வாரமே லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கைகலப்பிலும் ரிபிசி தரப்பு விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
ஆகவே விடுதலைப்புலிகள் மீது பழியைப் போட்டு மாவீரர் தினத்தை குழப்புகின்ற அல்லது அதிக கெடுபிடிகளை உருவாக்குகின்ற நோக்கோடு, ரிபிசி வானொலி மீதான தாக்குதலை சிறிலங்கா அரசுக்கு சார்பானவர்களே மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமே வலுத்துக் காணப்படுகிறது.
இந்த இடத்தில் சிலரால் இன்னும் ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக ரிபிசி வானொலி சிறிலங்கா இராணுவத்தின் துணைக் குழு ஒன்றின் தலைவராகிய கருணாவின் உரையை மாவீரர் தினத்தில் ஒலிபரப்பி வந்தது. ஆனால் கருணா குழுவுக்குள் ஏற்பட்ட பிளவு ரிபிசியிலும் எதிரொலித்தது. ரிபிசி வானொலியில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருணா குழுவில் இருந்து பிரிந்த பரந்தன்ராஜன் குழுவை சேர்ந்தவர்கள். ஆகவே இம்முறை கருணாவின் உரையை ஒலிபரப்ப மறுத்துவிட்டார்கள். கருணாவின் உரையை ஒலிபரப்ப வேண்டும் என்று கருணா குழுவால் ரிபிசிக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. அத்துடன் ரிபிசி வானொலியில் உள்ள கருணாவின் ஆதரவாளர்களும் அழுத்தம் கொடுத்துள்ளார்கள். இதனால் ரிபிசிக்குள்ளேயே அடிதடி நடக்கின்ற அளவிற்கு சென்றதாகவும், ஆயினும் கருணாவின் உரையை ஒலிபரப்ப முடியாது என்று பரந்தன்ராஜன் குழுவினர் உறுதியாக கூறிவிட்டார்கள் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த கருணா குழுவினரே ரிபிசி மீதான தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்றும், அனேகமாக இதை ரிபிசியில் இருக்கின்ற கருணாவின் ஆதரவாளர்களே செய்திருப்பார்கள் என்றும், அவர்கள் தங்களின் கருத்தை உறுதியான முறையில் சொன்ன பொழுது, அதில் இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை எம்மால் மறுக்க முடியவில்லை.
இப்படி ரிபிசி மீது நடந்த தாக்குதல் குறித்த பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் எது உண்மை என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
No comments:
Post a Comment