Tuesday, November 21, 2006

மாவீரர் வாரமும் எதிர்பார்ப்புக்களும்!

நவம்பர் மாதம் இலங்கைத்தீவின் அரசியலில் ஒரு பரபரப்பை, திருப்பத்தைக் கொடுக்கின்ற மாதம். அதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதோ! நவம்பர் மாதம் வந்து விட்டது. இலங்கைத் தீவின் அடுத்த ஆண்டு அரசியல், இராணுவப் போக்கை தீர்மானிக்கின்ற மாவீரர் வாரம் அண்மிக்கிறது.

மாவீரர் தினம் 1989ஆம் ஆண்டில் இருந்து தமிழீழ மக்களால் நினைவுகூரப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முதலாவதாக வீரச் சாவடைந்த சங்கர் என்கின்ற சத்தியநாதனின் நினைவு நாள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு, அந்த நாளில் தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை ஈந்த அனைத்து போராளிகளும், பொதுமக்களும் நினைவு கூரப்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக மாவீரர் தினம் என்பது மாவீரர் வாரம் என்று பரிமணித்து நினைவு கூரப்படுகிறது. இந்த மாவீரர் வாரம் நெருங்க, நெருங்க தமிழீழ மக்களிடம் பரபரப்பும், எதிர்பார்ப்பும் அதிகரிக்கும். சிங்கள அரசும், அதன் இராணுவ இயந்திரமும் திகிலோடு மாவீரர் வாரத்தை எதிர்கொள்ளும்.

மாவீரர் வாரம் மேலும் இரண்டு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது. அக் காரணங்களில் மிகவும் முக்கியமான தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை. இந்த உரை தமிழீழத்தின் அடுத்த ஆண்டிற்கான கொள்கை விளக்க உரையாக அமையும். இலங்கைத் தீவின் அடுத்த ஆண்டு அரசியல் நிலவரம் எப்படி இருக்கப் போகிறது என்பதை ஓரளவு எதிர்வு கூறுவது தேசயத் தலைவரின் இந்த மாவீரர் தின உரையை வைத்துத்தான்.

இரண்டாவது காரணம் மாவீரர் வாரத்திலோ, அல்லது அதற்கு அண்மைய நாட்களிலோ விடுதலைப்புலிகள் ஒரு பெரும் தாக்குதலை நடத்துவார்கள். இந்தப் பெருந்தாக்குதல் ஒவ்வொரு முறையும் பெரும் வெற்றி அடைவதோடு, சிறிலங்காவின் இராணுவத்தை சின்னபின்னமாக்கி விட்டுத்தான் ஓயும். விடுதலைப்புலிகள் தாக்குவார்கள் என்று தெரிந்தும் சிறிலங்கா இராணுவத்தால் விடுதலைப்புலிகளின் தாக்குதலை முறியடிக்க முடிந்தது இல்லை.

சிறிலங்கா அரசோடு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை ஆரம்பித்த பிறகுதான் சிறிலங்கா அரசு மாவீரர் வாரத்தை சற்று நிம்மதியோடு கழிக்கத் தொடங்கியது. ஆனால் இப்பொழுது நிலமைகள் மீண்டும் மோசமாகி பேச்சுவார்த்தைகள் ஒரு புறமும் மோதல்கள் மறு புறமும் நடக்கின்ற ஒரு புதிய நிலை உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் தேசியத் தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு, ஏதாவது தாக்குதல் நடக்குமா என்ற எதிர்பார்ப்பும் சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது.

சென்ற ஆண்டும் இதே காலப் பகுதியில் நிலமை மோசமடைந்து காணப்பட்டது. சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகள் மீது தமிழீழம் எங்கும் நிழல் யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தது. அத்துடன் மக்கள் படையினருக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் பல இடங்களில் மோதல்கள் நடந்தன. இனவாத சிந்தனையோடு மகிந்தவின் அரசு பதவியேற்றும் சில வாரங்கள்தான் ஆகி இருந்தன.

அந்த நிலையில் சென்ற ஆண்டு வந்த மாவீரர் வாரமும் பலத்த எதிர்பார்ப்புக்களை உருவாக்கி விட்டிருந்தது. தேசியத் தலைவர் யுத்தத்தை அறிவிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலானவர்களிடம் பரவிக் கிடந்தது. ஆனால் தேசியத் தலைவரின் உரை அவ்வாறு அமையவில்லை. அதனாற்தான் என்னவோ, இந்த முறை சென்ற ஆண்டோடு ஒப்பிடுகின்ற பொழுது எதிர்பார்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது.

ஆனால் நாள் நெருங்க, நெருங்க எதிர்பார்ப்பு இயல்பாக அதிகரிக்கவே செய்யும். பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது அந்தரத்தில் தொக்கி நிற்பதாலும், மோதல்கள் தொடர்வதாலும், தேசியத் தலைவரின் உரை மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது.

இந்த நேரத்தில் இன்னும் ஒரு எதிர்பார்ப்பு சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு தேசியத் தலைவர் மகிந்த அரசுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்து விட்டது என்றும், அதனால் இந்த மாவீரர் தின உரையில் தேசியத் தலைவர் சிறிலங்க அரசுக்கு எதிரான யுத்தத்தை பிரகடனப்படுத்துவார் என்ற கருத்தும் சிலரிடம் காணப்படுகிறது. ஆகக் குறைந்தது அதிரடியாக ஒரு மிகக் குறுகிய காலக் கெடுவையாவது அறிவிப்பர் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் தேசியத் தலைவர் மாவீரர் தின உரையில் ஒரு யுத்தத்தையோ, காலக்கெடுவையோ அறிவிப்பார் என்று நான் நினைக்கவில்லை.

மாவீரர் தின உரை என்பது ஒரு தேசத்தின் தலைவரால் ஒரு புனித நாளில் வெளியிடப்படுகின்ற ஒரு கொள்கை விளக்க உரை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறான ஒரு உரையில் யுத்தப் பிரகடனங்கள், காலக்கெடுக்கள், சவால்கள் போன்றன இடம்பெற மாட்டாது.

இம் முறை மாவீரர் தின உரை பெரும்பாலும் சர்வதேசத்தை நோக்கியதாகவே இருக்கும் என்று நம்பலாம். சிறிலங்கா அரசின் தொடர்ச்சியான போர் அணுகுமுறைகளையும், மேற்குலகின் வாக்குறுதிகளையும், வேண்டுகோள்களையும் மதித்து விடுதலைப்புலிகள் முழு அளவிலான போரை ஆரம்பிக்காதது மாத்திரம் அன்றி பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியதையையும் சுட்டிக்காட்டி சர்வதேசத்தை ஒரு தீர்க்கமான நிலையை எடுக்குமாறு தேசியத் தலைவர் தனது உரையில் வலியுறுத்தக்கூடும். இதுவே மாவீரர் தின உரையின் முக்கிய பகுதியாக அமையும்.

சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் மேற்குலகின் அழுத்தம் விடுதலைப்புலிகள் மீதே அதிகமாக இருந்தது. விடுதலைப்புலிகளின் ராஜதந்திரம் மிக்க நடவடிக்கைகளாலும், ஆச்சரியப்படத்தக்க பொறுமையாலும் விடுதலைப்புலிகள் மேற்குலகின் அழுத்தங்களை சிறிலங்கா அரசை நோக்கி திருப்பி விட்டிருக்கிறார்கள். தற்பொழுது சர்வதேசத்தின் மீது விடுதலைப்புலிகள் அழுத்தம் போடுகின்ற நிலை வந்திருக்கிறது என்று சொன்னால் கூட அது மிகையாக இருக்கப் போவதில்லை. இன்றைக்கு மேற்குலக நாடுகள் வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளிடம் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி விட்டு வருவதை இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

இப்பொழுது அழுத்தம் என்பது சிறிலங்கா அரசின் மீதே மேற்குலக நாடுகளால் போடப்படுகிறது. ஆனால் சிறிலங்கா அரசின் விட்டுக்கொடாத் தன்மையால் ஒர தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டிய நிலைக்கு மேற்குலகம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை ஒரு உந்துதலாக அமையக் கூடும்.

இங்கே சொல்லப்படுகின்ற அழுத்தங்கள், வாக்குறுதிகள் போன்றவைகள் உள்ளுக்குள் நடக்கின்ற விடயங்களே அன்றி வெளிப்படையாக நடக்கின்ற விடயங்கள் அல்ல என்பதை இதை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வருடம் சிறிலங்கா அரசு ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தியதாலும், பல நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளதாலும், விடுதலைப்புலிகள் நடத்துகின்ற நவம்பர் மாத பெருந்தாக்குதல்கள் போன்று இம் முறையும் நடைபெறுமா என்ற கேள்வியும் சிலரிடம் உண்டு. ஆனால் மாவீரர் வாரத்தை குழப்புகின்ற நோக்கோடும், விடுதலைப்புலிகளை உச்சகட்ட சீற்றத்திற்கு ஆளாக்கி, விடுதலைப்புலிகளாகவே முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பிக்கச் செய்கின்ற நோக்கோடும் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தாக்குதலுக்கு சிறிலங்கா அரசு திட்டமிடுவதாக தாயகத்தில் இருந்து வருகின்ற சில செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசை இவ்வாறான ஒரு தாக்குதலை செய்ய விடாது தடுப்பதற்காக விடுதலைப்புலிகள் முன்கூட்டியே ஒரு தற்காப்புத் தாக்குதலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதை இந்தச் செய்தி சொல்கிறது. ஆனால் விடுதலைப்புலிகள் சர்வதேச சமூகத்திடம் இது குறித்து முறையிட்டு அழுத்தங்கள் மூலம் சிறிலங்கா அரசை இது போன்ற தாக்குதலில் ஈடுபட விடாது தடுக்கின்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது.

விடுதலைப்புலிகளின் இம் முயற்சி வெற்றி பெறுவதிலேயே மற்றையவைகள் தங்கி உள்ளன. அவ்வாறு விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்துவதாக இருந்தால் கூட அவைகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறாத வகையிலேயே இருக்கும். முடிக்கின்ற வேளையில் ஒன்றைச் சொல்ல வேண்டும்.

இங்கே கூறப்பட்டிருக்கின்ற சில கணிப்புக்கள் அப்படியே பலிக்க வேண்டும் என்றும் எந்தக் கட்டாயமும் இல்லை. விடுதலைப்புலிகளையும் அவர்களின் செயற்பாடுகளையும் சரியான முறையில் யாராலும் கணிக்க முடியாது. அப்படி கணிக்கப்பட முடியாதவர்களாக இருப்பதும் அவர்களின் வெற்றியின் காரணங்களில் ஒன்று. விடுதலைப்புலிகள் செய்த பிறகோ அல்லது சொன்ன பிறகோதான் சில விடயங்கள் புரிய வரும். விடுதலைப்புலிகளைப் பற்றி முற்கூட்டியே சொல்லப்பட்ட கணிப்புக்கள் சில வேளைகளில் சரியாக இருக்கும், சில வேளைகளில் தவறாக இருக்கும்.

ஆனால் விடுதலைப்புலிகள் செய்கின்ற கணிப்புக்கள் ஒருபோதும் தவறாக இருந்தது இல்லை.

1 comment:

Thamil said...

ஆழ்த கருத்துக்கள்,தமிழ் மணகருவிப்பட்டையை நீங்கள் நிறுவவில்லையா? மீண்டும் மீண்டும் படிகாதவர்கள் படிக்கவேண்டிய கட்டுரை, தமிழ்மணத்தில் ஜந்து நிமிடத்தில் மறைந்துவிடும் இந்த கட்டுரை, போடப்படும் பின்னூட்டங்களாள்தான் மீண்டும் மீண்டும் மேலே வரும், எல்லோருக்கும் ஒரே நேரத்தில் படிக்க வாய்பு கிடைப்பதில்லை. கவனத்தில் கொள்ளவும். நன்றிகள்.