Tuesday, July 22, 2008

கமலின் பார்ப்பனிய முகம் (4)

தசாவதாரம் திரைப்படத்தின் மீது கருத்தியல் சார்ந்த காட்டமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பலர் சுட்டிக் காட்டும் ஒரு விடயம் “பூவராகன்” பாத்திரம். கமல் ஏற்ற பத்து வேடங்களில் ஒரு தலித் தலைவரின் வேடமாக பூவரகான் பாத்திரம் வருகின்றது. நிறைய புரட்சிக் கருத்துக்களைப் பேசிக் கொண்டே, கடைசியில் மேல்சாதியினருக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணிக்கிறது இந்தப் பாத்திரம்.

வராகம் என்றால் பன்றி என்று பொருள். தலித் தலைவர் ஒருவரின் பெயரை பன்றி என்று அர்த்தம் வருவதாகவும், உருவத்தை அழகற்ற விதத்திலும் கமல் உருவாக்கியதும், கடைசியில் அந்தப் பாத்திரத்தை மேல்சாதியினருக்காக உயிர்த் தியாகம் செய்வதாக சித்தரித்ததும் கமலுடைய பார்ப்பனிய முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்சாதியினருக்காக உயிரை தியாகம் செய்கின்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் அடிக்கடி காண்பிக்கப்படுகின்ற ஒன்று. இதற்கான சிந்தனை எங்கேயிருந்து வருகின்றது என்பதுதான் இங்கே முக்கியமானது. இந்தச் சிந்தனை மனு தர்மத்தில் இருந்து வருகின்றது.

மனு தர்மம் ஒவ்வொரு வர்ணத்தினருக்கும் கடமைகளை வகுத்துக் கொடுக்கின்றது. பாவங்களிற்கான தண்டனைகளை கூறுகிறது. சுவர்க்கத்திற்கு செல்வதற்கான வழி வகைகளை கூறுகின்றது.

மிக மிக தாழ்த்தப்பட்ட மக்களை மனு தர்மம் “பாகியசாதியினர்” என்று குறிப்பிடுகின்றது. இந்தப் “பாகியசாதியினர்” சுவர்க்கத்திற்கு செல்வதற்கு ஒரே ஒரு வழியை மட்டுமே மனு தர்மம் கூறுகிறது. அந்த வழியைத் தவிர வேறு எந்த வழியிலும் பாகியசாதியினர் சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது.

அந்த வழி எதுவென்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள். மனுதர்மத்தின் பாகியசாதியினனாகிய பூவராகன் பின்பற்றிய அதே வழிதான்.

மனு தர்மத்தின் பத்தாவது அத்தியாயம் 62வது சுலோகம் இப்படிச் சொல்கிறது: பார்ப்பனர், பசு, பெண், பாலன் இவர்களை காப்பாற்றுவதற்காக பாகியசாதியினர் பொருளை வாங்காமலே உயிரை விடுவது அவர்களுக்குச் சுவர்க்கத்திற்கு காரணமாகும்.

இந்தச் சுலோகம் கூறுவது போன்றே தலித்தாகிய பூவராகனும் பொருள் எதையும் வாங்காமலேயே தன்னை விட உயர்சாதியினரின் பாலர்களுக்காக உயிரை விடுகின்றான்.

மனு தர்மத்தில் இருந்து உருவான இந்தப் பார்ப்பனியச் சிந்தனையை தமிழ் சினிமா எத்தனையோ படங்களில் வெளிப்படுத்தியிருக்கிறது. தன்னை பகுத்தறிவுவாதி என்று பிரகடனப்படுத்தும் கமலும் அதே மனு தர்ம பார்ப்பனிய சிந்தனையை பூவராகன் பாத்திரம் மூலம் வெளிப்படுத்துகின்றார்.

இறந்து கிடக்கும் பூவராகனின் காலை ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் தொட்டுக் கும்பிடுகின்றார் அல்லது தொட்டுக் கும்பிடும்படி கேட்கப்படுகின்றார். மனநலம் குன்றிய ஒரு பார்ப்பன மூதாட்டி பூவராகனை தன்னுடைய மடியில் கிடத்தி தன்னுடைய மகன் என்று சொல்கிறார்.

பார்ப்பனர்களுக்குத்தான் நேரடியான சுவர்க்கம் உண்டு என்பது இந்து மதத்தின் பொதுவான கருத்து. மற்றைய வர்ணத்தினர் புண்ணியங்கள் செய்து, அடுத்த பிறப்பில் பார்ப்பனராக பிறந்துதான் சுவர்க்கத்தை அடைய வேண்டும். அடுத்த பிறப்பை எடுக்காமலேயே பார்ப்பனர்களைப் போன்று நேரடியாக சுவர்க்கம் செல்வது மற்றைய வர்ணத்தினருக்கு மிகவும் கடினம்.

மனு தர்மம் சொன்னதன்படி தன்னுடைய உயிரை தியாகம் செய்ததன் மூலம், பார்ப்பனர்களால் அடையக் கூடிய சுவர்க்கத்தை அடையும் தகுதி பெற்றுவிட்ட ஒருவனின் காலை தொட்டு வணங்குவது என்பதும், அந்த ஒருவன் பார்ப்பன மூதாட்டியால் “மகன்” என்று அழைக்கப்படும் “உயர்நிலையை” அடைவதும் பார்ப்பனிய இந்தத்துவ சிந்தனையின் எச்சங்களே தவிர வேறில்லை.

தசாவதாரத்தில் இஸ்லாமிய மக்கள் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்தும் இங்கே குறிப்பிட வேண்டும். ஏதோ அந்நிய தேசத்தவர்கள் போன்றும், நிறைய பிள்ளை குட்டி பெறுபவர்கள் போன்றும் இஸ்லாமியப் பாத்திரங்கள் காட்டப்பட்டது ஒரு புறம் இருக்கட்டும். கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம் உண்டு.

கமல் தாறுமாறாக லாரியை ஓட்டி இஸ்லாமியக் குடும்பம் வந்த வேன் ஒன்றின் மீது மோதி விடுகிறார். ரத்தக் காயம் பட்ட இஸ்லாமியப் பெண்மணியை இரத்தம் கொடுத்துக் காப்பாற்றுகிறார். தங்கள் மீது மோதி ரத்தக் காயம் ஏற்படுத்தியதே கமல்தான் என்று அறியாது, அந்த இஸ்லாமியக் குடும்பம் கமல் மீது நன்றி பாராட்டுகிறது. அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது.

அந்நிய தேசத்தவர்களான, நிறையப் பிள்ளை குட்டி பெறுபவர்களான இஸ்லாமியர்களை லாரியால் அடித்ததும் கமல்தான். அவர்களை காப்பாற்றியதும் அதே கமல்தான். காப்பாற்றிய கமலுக்கு இஸ்லாமியக் குடும்பம் நன்றியோடு இருக்கிறது. இந்த இடத்தில் குஜராத் மோடியின் சிந்தனை நினைவுக்கு வருகிறது.

ஆயிரக் கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்து விட்டு, அந்த மக்களுக்கு தான்தான் பாதுகாப்பு என்று மோடி சொல்கின்றார். உலகம் முழுவதும் இருக்கின்ற பேரினவாதச் சிந்தனை இது. “அடிப்பதும் நாங்களே, காப்பாற்றுவதும் நாங்களே” என்கின்ற இந்த பேரினவாதச் சிந்தனை இந்தியாவில் இந்துத்துவ பார்ப்பனியத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றது.

இந்தச் சிந்தனையின் வெளிப்பாடாக தசாவதாரத்தின் இஸ்லாமியக் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சியை புரிந்து கொள்கின்ற போது, கமலின் பார்ப்பனிய முகம் மேலும் கோரமடைகிறது.

இந்தத் தொடரை முடிக்கின்ற நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய இன்னம் ஒரு விடயம் உண்டு. கமல் தன்னுடைய படங்களில் அடக்குமுறையாளர்களான பார்ப்பனர்களை அப்பாவிகளாக சித்தரிக்கின்றார். அந்த அப்பாவிகளை காப்பதற்கு தான் இருப்பதாக காட்சி அமைக்கிறார். தசாவாதரம் படத்தின் இந்துத்துவ பார்ப்பனிய நலன்களுக்கு ஏதுவான வகையில் காட்சிகளை அமைக்கின்றார்.

இப்பொழுது இதன் அடிப்படிடையில் ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின் போது கமல் பேசிய பேச்சினை சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். சத்தியராஜ் போன்றவர்கள் தமிழ் தேசிய உணர்வை தட்டி எழுப்புவது போன்று பேச, அதை தணிப்பதற்கு கமல் தன்னுடைய “வள வளா” பேச்சின் மூலம் முனைந்தார்.

தமிழ் தேசிய உணர்வை தணிக்க வேண்டும் என்ற சிந்தனை பார்ப்பனிய நலன் சார்ந்தது அன்றி வேறென்ன?

கமலின் பார்ப்பனிய முகம் பற்றிய குற்றச்சாட்டை கமலினுடைய ஒரு வசனத்தையோ அல்லது ஒரு காட்சியையோ வைத்து நான் கூறவில்லை. தொடர்ந்து அவரைக் கவனித்த பின்பே இக் குற்றச்சாட்டை வைக்கின்றேன். இந்தத் தொடரின் நான்கு பாகங்களையும் படித்த உங்களுக்கு இது புரியும் என்று நம்புகின்றேன்.

பார்ப்பானாக நடிக்கின்ற சூத்திரனையும், சூத்திரனாக நடிக்கின்ற பார்ப்பானையும் நம்பாதே என்பது தந்தை பெரியாரின் கருத்து. இந்தக் கருத்து உண்மை என்று இதுவரை பல பார்ப்பனர்கள் தமது நடவடிக்கைகள் மூலம் எமக்கு நிரூபித்திருக்கிறார்கள். கமலின் அண்மைய நடவடிக்கைகளும் அவர் பற்றிய மறுவாசிப்பின் தேவையை உணர்த்தி நிற்கின்றன.

- வி.சபேசன்

http://www.webeelam.net

Saturday, July 12, 2008

கமலின் பார்ப்பனிய முகம் (3)

பார்ப்பனர்களை அப்பாவியாக சித்தரிக்கின்ற அரசியலுக்கு துணை போகின்ற கமல்ஹாசன் இந்துத்துவத்தின் இன்னொரு அரசியலுக்கும் தசாவதாரத்தின் மூலம் துணை போகின்றார். பாபர் மசூதி பிரச்சனைக்குப் பின் நடைபெற்றுவரும் இந்த அரசியலை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

“அறை எண் 305இல் கடவுள்” படத்தில் ஒரு காட்சி வரும். பிரகாஸ்ராஜ் ஒவ்வொரு மதத்தினதும் கடவுளின் வடிவத்தில் தோன்றுவார். இந்து மதத்தின் முறை வருகின்ற போது அங்கே விஸ்ணுவின் வடிவத்தில் பிரகாஸ்ராஜ் தோன்றுவார். இதுதான் அந்த அரசியல்.

சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ் சினிமாவின் பக்திப் படங்களைப் பார்க்கின்ற போது விஸ்ணு ஒரு துணைப் பாத்திரமாகத்தான் இருந்தார். இரண்டு மூன்று வசனங்களுக்கு மேல் அவருக்கு இருக்காது. தெலுங்கிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட “பக்த பிரகாலதா” போன்ற ஒரிரு திரைப்படங்களைத் தவிர மற்றைய பக்திப் படங்கள் அனைத்தும் “சிவமயமாகவே” இருந்தன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்சினிமாவில் இந்துக்களின் முதன்மையான கடவுள் என்றால் அது சிவன்தான். இன்றைக்கு நிலைமை மாறி விட்டது. சிவன் பின்தள்ளப்பட்டு விஸ்ணு முன்னிறுத்தப்பட்டு வருகின்றார். அதுவும் பாபர் மசூதி விவகாரத்திற்கு பின்பு ராமர், விஸ்ணு, கிருஸ்ணர் போன்ற கடவுள்கள் முன்னிறுத்தப்படுவது அதிகரித்துள்ளது.

முன்பு தமிழ் சினிமாவில் நாமத்தோடு கூடிய முகங்களை வெகு குறைவாகத்தான் பார்க்கலாம். அப்படி வருகின்ற முகங்களும் அநேகமாக நகைச்சுவைப் பாத்திரமாகத்தான் இருக்கும். ஆனால் இன்றைக்கு கிராமத்தில் இருந்த வருவதாகக் காட்டப்படும் பாத்திரங்கள்தான் அநேகமாக விபூதியை பூசிக் கொண்டு வருகின்றன. நகரத்து நாயகர்கள் நாமத்தோடு வருகின்றார்கள். பார்ப்பனப் பாத்திரங்களைக் காட்டுவது என்றால் கிராமமோ, நகரமோ அங்கே நாமம்தான் இருக்கின்றது. கடந்த சில வருடங்களாக மெது மெதுவாக நடந்து வருகின்ற இந்த மாற்றம் தற்பொழுது யாரும் உணராத வண்ணம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

மிகவும் திட்டமிட்டுச் செய்யப்படும் நுண்ணியமான அரசியல் இது. ராம ஜென்ம பூமி விவகாரத்தில் பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் விரும்பியது போன்று இந்துக்கள் என்று கருதப்படுபவர்களில் பெரும்பான்மையான மக்கள் ராமருக்காக கொதித்து எழவில்லை. இதற்கு தந்தை பெரியார் போன்றவர்கள் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்ச்சி ஒரு காரணமாக இருந்தாலும் வேறு ஒரு காரணமும் இருக்கிறது.

தம்மை இந்துவாக கருதி இந்துக் கடவுள்களை வணங்குகின்ற எததனையோ பேர் ராமனையோ, விஸ்ணுவையோ வணங்குவது இல்லை. ராமனை ஒரு கதையின் நாயகனாக மட்டும் கருதுகின்ற கோடிக் கணக்கான இந்துக்கள் இருக்கின்றார்கள். இவர்கள் சிவன் போன்ற வேறு கடவுள்களை தமது முதற் கடவுளாக வணங்கி வருபவர்கள். இவர்களுக்கு மத நம்பிக்கை இருந்தும், ராம ஜென்ம பூமி விவகாரம் இவர்களிடம் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் விஸ்ணு சார்ந்த கடவுள்களை மக்களிடம் முன்னிறுத்துவதற்கு பல வழிகளில் இந்துத்துவ சக்திகள் முயன்று வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதிதான் சினிமாக்களில் விஸ்ணு, ராமர் போன்றவற்றை இந்து மதத்தின் பெரும் கடவுள்களாக முன்னிலைப் படுத்துவது என்பது. இந்த வேலையை “தசாவதாரம்” திரைப்படம் மிகச் சிறப்பாகச் செய்கிறது.

மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படம் இந்துத்துவத்திற்கு சார்பான படமாக சிலரால் விமர்சிக்கப்படுவது உண்டு. மணிரத்தினமும் “துலுக்கச்சி” போன்று சொற்களின் மூலம் தன்னுடைய உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருந்தாலும், “பம்பாய்” திரைப்படத்தை ஆழமாக ஆராயாது விட்டால், மணிரத்தினத்தின் இந்துத்துவ சிந்தனையை கண்டுபிடிப்பது மிகக் கடினமாகி விடும். அந்தளவிற்கு மணிரத்தினம் தன்னை நடுநிலையாளராகக் காண்பிக்கும் நோக்கோடு படத்தில் வரும் காட்சிகளை அமைத்திருப்பார்.

இஸ்லாமியர்கள் வன்முறையில் இறங்குகின்ற காட்சி வந்தால், அடுத்ததாக இந்துக்கள் வன்முறையில் இறங்குகின்ற காட்சி வரும். ஒரு இஸ்லாமியர் கொல்லப்படும் காட்சி வந்தால், அடுத்து ஒரு இந்து கொல்லப்படும் காட்சி வரும். இப்படி இரு தரப்பும் சமாமான முறையில் தாக்கப்படுகின்ற மற்றும் தாக்குகின்ற கட்சிகளை மணிரத்தினம் கவனம் எடுத்து உருவாக்கியருப்பார்.

இந்தக் குறைந்தபட்ச நடுநிலைமையைக் கூட கமல் தன்னுடைய தசாவதாரம் படத்தில் வெளிப்படுத்தவில்லை. முற்று முழுதாகவே வைணவ சார்பு நிலை எடுக்கின்றார்.

தசாவதாரம் திரைப்படத்தின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். 12ஆம் நூற்றாண்டில் படம் ஆரம்பிக்கின்றது. சைவ மன்னனாகிய இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளின் சிலையை பெயர்த்து எடுக்கின்றான். அதை தடுக்க முயல்கின்ற வைணவப் பார்ப்பனராகிய ரங்கராஜன் நம்பி (கமல்) சைவ மன்னனாலும் சைவர்களாலும் துன்புறுத்தப்பட்டு பெருமாளின் சிலையோடு சேர்த்து கடலில் வீசி சாகடிக்கப்படுகின்றார்.

அந்தக் காட்சி முழுவதும் சைவர்கள் வில்லன்களாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். “கல்லை மட்டும் கண்டால்” பாடலின் வரிகளும் சைவத்தை தாழ்த்தியும், வைணவத்தியும் உயர்த்தியும்தான் எழுதப்பட்டிருக்கின்றன. “பெருமாள் புராணம்” அத்துடன் முடிந்து விடவில்லை. படம் முழுவதும் பெருமாள் வருகின்றார். கடைசியில் சுனாமி உருவாவதற்கு காரணமாக இருந்து சில இலட்சம் மக்களை கொன்று கோடிக் கணக்கான மக்களைக் காப்பாற்றுகின்றார்.

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். தசாவதாரம் பற்றி புளுகாங்கிதப்பட்டு விமர்சிக்கும் பகுத்தறிவு நண்பர்களும் உண்டு. கமல் மதத்திற்கு, கடவுளுக்கு எதிராக வசனங்களைப் பேசுகின்றார், பெருமாள் சிலையை சுடுகாடு வரைக்கும் தூக்கிக் கொண்டு ஓடுகின்றார், அதை தூக்கி எறிந்து விளையாடுகின்றார், “கடவுள் இருந்தால் நல்லா இருக்குமே” என்று வசனம் பேசுகின்றார் என்றெல்லாம் தமக்கு சார்பான விடயங்கள் பற்றி எழுதியும் பேசியும் தசாவதாரம் பகுத்தறிவைப் பறைசாற்றும் ஒரு திரைப்படம் என்று அடித்துக் கூறுகிறார்கள்.

ஆனால் இவர்களின் விமர்சனத்தில் அடிப்படையிலேயே ஒரு தவறு இருப்பதாக நான் கருதுகிறேன். படத்தின் நாயகனின் கோணத்தில் இருந்து விமர்சனத்தை செய்யக் கூடாது. பார்வையாளனின் கோணத்தில் இருந்துதான் ஒரு படத்தை விமர்சிக்க வேண்டும்.

பெருமாள் சிலை தூக்கி எறியப்படுவதைப் பார்க்கின்ற அதே பார்வையாளன்தான், அந்தச் சிலை ஒவ்வொருமுறையும் நிமிர்ந்த நிலையில் கம்பீரமாக பரவசப்படுத்தும் பின்னணி இசையோடு தரையில் வந்தமர்வதையும் பார்க்கின்றான். அப்பாவிக் கோவிந்து (கமல்) “கடவுளுக்கு” பக்கத்தில் தான் நிற்பதை அறியாமல் “கடவுள் இருந்தால் நல்லா இருக்கும்” என்று வசனம் பேசுவதையும் பார்க்கின்றான்.

சுனாமி வந்தது பற்றி கமல் செய்யும் தர்க்கங்களை கேட்கும் கடவுள் நம்பிக்கையுள்ள பார்வையாளன் சுனாமி வந்ததற்கு காரணமான சில விடயங்களை படத்தில் கவனிக்கின்றான். கோடிக்கணக்கான மக்களை காப்பதற்கும், தான் மீண்டும் வெளியில் வருதற்கும் சுனாமியை பெருமாள் கொண்டு வருகின்றார். ஆயினும் சுனாமியில் இலட்சக் கணக்கில் மக்கள் இறக்கின்றனர். அதற்கும் பார்வையாளன் சில காரணங்களை படத்தில் காண்கின்றான். பெருமாளை கடலில் வீசியதால் ஏற்பட்ட பாவத்தாலும், பார்ப்பான் ஒருவனை துன்புறுத்தி பெருமாளோடு கட்டி கடலில் வீசியதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோசத்தாலும் இந்த அழிவு நேர்ந்தது என்பது அந்தப் பார்வையாளனுக்குப் புரிகிறது. புரியாது போய் விடுமோ என்ற அச்சத்தில் ரங்கராஜ நம்பியும் பூணுலை உயர்த்தி வசனம் வேறு பேசி வைக்கிறார்.

பெரும்பான்மையான பகுத்தறிவாளர்களை தன்னுடைய கோணத்திலும், பெரும்பான்மையான கடவுள் நம்பிக்கையாளர்களை பார்வையாளனின் கோணத்திலும் படத்தைப் பார்க்க வைப்பதில் கமல் கண்ட வெற்றிதான், இன்றைக்கு இந்தப் படம் இப்படித் தாறுமாறாக வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது.

பகுத்தறிவாளர்களை திருப்திப்படுத்தும் படத்தின் வசனங்களும் காட்சிகளும் இருக்கட்டும். கடவுளை நம்புபவர்களின் மனதில் கமல் பெருமாளை பதிய வைத்து விட்டார். அதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம். வெளிப்படையாகவே வைணவத்திற்கு போட்டியான சைவத்துடன் மோதி, கிளைமாக்ஸில் வைணவம் வெற்றி பெறுகிறது.

பாபர் மசூதி பிரச்சனைக்குப் பிறகு அதிகரித்த அளவில் வைணவம் சார்ந்த கடவுள்களை முன்னிறுத்தி நடத்தப்பட்டு வரும் பல்வேறு விதமான பரப்புரைகளுக்கு சினிமாவும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்ற நிலையில், அதற்கு கமலும் தன்னுடைய தசாவதாரம் திரைப்படம் மூலம் துணை போய்விட்டார்.

தொடரும்..

- வி.சபேசன்

Saturday, July 05, 2008

கமலின் பார்ப்பனிய முகம் (2)

கமல்ஹாசன் தன்னை திராவிட கழகத்தை சேர்ந்த ஒருவராக பிரகடனப்படுத்தியிருப்பவர். அதனாலேயே அவரால் பல விமர்சனங்களில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடிகிறது. பகுத்தறிவுவாதிகளும் “எம்மவர்” என்ற பாசத்தோடு கமல் என்ன செய்தாலும் அதற்கு அவர்களே ஒரு சமாதானத்தையும் சொல்லி விட்டு போய் விடுகிறார்கள்.

பார்ப்பனர் அல்லாத இயக்குனரான சங்கரை ஒரு பார்ப்பனியவாதியாக இனங்காண முடிந்த இவர்களுக்கு கமலைப் பற்றி ஒரு சிறு சந்தேகம் கூட வரவில்லை என்பது ஆச்சரியமான விடயம்தான்.

தமிழ் சினிமாவில் பார்ப்பனர்களை மிகவும் அப்பாவிகளாக காட்டுகின்ற ஒரு வழக்கம் பல ஆண்டுகளாகவே நிலவி வருகின்றது. பார்ப்பன சமூகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தொடக்கி வைத்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது.

பார்ப்பனர்கள் ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்ற வரலாற்று உண்மையை உணர்ந்து தமிழ்நாட்டில் உருவான விழிப்புணர்ச்சி பெரும் திருப்பங்களை உருவாக்கியது. இந்த விழிப்புணர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழ்நாட்டின் அரசியலையே மாற்றியது. இந்த வரலாற்று உண்மைக்கு எதிரான முறையில் பார்ப்பனர்கள் உருவாக்க முனையும் மாய விம்பத்தின் ஒரு பகுதிதான் சினிமாக்களில் பார்ப்பனர்களை அப்பாவியாகக் காட்டுவது என்பது.

ஆதாவது ஒரு மக்கள் கூட்டத்தை கேவலப்படுத்தி அடக்கி வைத்திருந்த அடக்குமுறையாளர்களை “தனி மனித அப்பாவிகள்” என்று காட்டுகின்ற ஒரு அரசியல் இங்கே ஒளிந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்ப்பனர்களை “சூழ்ச்சி மிக்கவர்களாகவும்”, “சமூக அக்கறை அற்றவர்களாகவும்” சித்தரித்த கமல் தற்பொழுது பார்ப்பனர்களை தொடர்ந்து அப்பாவிகளாகவே சித்தரித்து வருகின்றார். இதனுடைய உச்சக்கட்டமாக வசூல்ராஜா திரைப்படத்தில் வந்த காட்சி அமைந்தது.

கமல் படிக்கும் மருத்துவக் கல்லூரியில் ஒரு அப்பாவி இளைஞனை மூத்த மாணவர்கள் “ராக்கிங்” (பகிடிவதை) செய்ய முனைவார்கள். அந்த அப்பாவி இளைஞனின் சட்டையைக் கழற்றி விட்டு அவனை நடனம் ஆடச் சொல்வார்கள். சட்டை கழற்றப்பட்ட அந்தப் அப்பாவி இளைஞனின் மேனியை பூணூல் அலங்கரித்திருக்கும்.

உண்மையில் அந்தக் காட்சியில் பூணூல் வர வேண்டிய எந்த அவசியமும் இல்லை. பூணூல் அணியாமல் கூட ஒரு அப்பாவி இளைஞனை சித்தரித்திருக்க முடியும். உண்மையான அப்பாவிகள் பூணூல் அணியாதவர்கள்தான். ஆனால் கமல் அங்கே பூணூலை திணிக்கிறார். கமல் வந்து தன்னையும் “ராக்கிங்” செய்யச் சொல்வார். மாணவர்கள் அமைதியாக இருப்பார்கள். “உருத்திராட்சக் கொட்டை அணிந்தவனை மட்டும்தான் ராக்கிங் செய்வீர்களா” என்று ஒரு கேள்வியைக் கேட்பார். பின்பு தன்னுடைய புஜபலத்தைக் காட்டி ராக்கிங் செய்த மாணவர்களையே ராக்கிங் செய்து விட்டு, பூணூல் அணிந்த அப்பாவியிடம் கமல் சொல்வார் “கவலைப்படாதே! நான் இருக்கிறேன்”.

வசூல்ராஜா திரைப்படத்தின் இயக்குனர் சங்கரோ, மணிரத்தினமோ இல்லை என்பதாலோ, இந்தப் படத்தில் கமல்தான் கதாநாயகன் என்பதாலோ இந்தக் காட்சி சொல்கின்ற செய்தியின் அர்த்தம் மாறிவிடப் போவதில்லை.

கமல் தயாரித்த நளதமயந்தியிலும் மாதவன் ஒரு அப்பாவிப் பார்ப்பனர்தான் என்பதையும் இங்கே கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கமல் கடவுளை நம்பாதவராக இருக்கலாம். ஆனால் பார்ப்பனியம் கொண்டிருக்கும் முகங்களில் பலவற்றை கமலும் கொண்டிருக்கிறார் என்பதுதான் இங்கு பிரச்சனை. கமலை ஒரு முற்போக்குவாதி என்று உறுதியாகச் சொல்பவர்கள் இதை மறுத்து பல உதாரணங்களைக் காட்டக் கூடும். கமல் பெண்கள், பாலியல் போன்ற விடயங்களில் முற்போக்காகச் சிந்திப்பவர் என்று பலர் கருதுகிறார்கள். “நாயகன்” திரைப்படத்தில் கமல் பாலியல் தொழில் செய்கின்ற ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக வருகின்ற காட்சியை உதாரணமாகச் சொல்பவர்கள் இருக்கின்றார்கள். “மும்பை எஸ்பிரஸ்” திரைப்படத்தில் வேறொருவருக்கு ஆசைநாயகியாக இருந்த ஒரு பெண்ணை கமல் திருமணம் செய்வது போன்று வரும்.

இப்படியான காட்சிகளின் மூலம் தமிழ் சினிமா கொண்டிருக்கும் உழுத்துப்போன பாரம்பரியங்களை உடைப்பதற்கு கமல் முயல்கின்றார் என்கின்ற கருத்து பலரிடம் உண்டு. ஆனால் இந்தக் காட்சிகளை நாம் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். இந்தக் காட்சிகள் பார்வையாளர்களின் மனதில் எவ்வித அதிர்வுகளையோ நெருடல்களையோ ஏற்படுத்தவில்லை. வெகு இயல்பாக பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளை ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது.

நாயகன் திரைப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்பவன் ஒரு தாதா. கடத்தல்களையும் கொலைகளையும் செய்கின்ற ஒருவன், அதாவது சட்டவிரோத தொழில் செய்கின்ற ஒருவன் சட்டவிரோத தொழில் செய்கின்ற ஒரு பெண்ணை திருமணம் செய்கின்றான். சோடிப் பொருத்தம் சரியாக இருக்கின்றது. பார்வையாளனும் இயல்பாக அதை ஏற்றுக்கொள்கிறான்.

மும்பை எஸ்பிரஸ் திரைப்படத்தில் கதாநாயகன் ஒரு திருடன். ஒரு திருடன் வேறொருவருக்கு ஆசைநாயகியாக இருக்கின்ற ஒரு நடனப் பெண்மணியை திருமணம் செய்வது பற்றியும் எந்தப் பார்வையாளனும் ஆட்சேபிக்கப் போவது இல்லை. கமல் தன்னை ஒரு “ஹீரோ” என்கின்ற வட்டத்தைத் தாண்டி படத்தில் வரும் பாத்திரமாக பார்வையாளர்களை ஏற்றுக் கொள்ளச் செய்ய வைப்பதில் வெற்றி பெற்று பல வருடங்கள் ஆகி விட்டது. ஆகவே ஒரு ஹீரோ பாலியல் தொழிலாளியை திருமணம் செய்கின்றான் என்ற காட்சியை விட, ஒரு கடத்தல்காரன் ; ஒரு பாலியல் தொழிலாளியை திருமணம் செய்கின்ற காட்சியே அங்கே முன்னிற்கிறது. இதில் எங்கே இருக்கிறது புரட்சி… இன்ன பிற?

கமல் தன்னை வித்தியாசமானவராகக் காட்டிக் கொள்ள முயன்றாலும், கடைசியில் பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனையோடு சமரசம் செய்து கொள்கிறார். கமல் பலரால் போற்றப்படுவதற்கு காரணமான எத்தனையோ விடயங்கள் உண்மையில் அப்படி அல்ல என்பதை சுட்டிக் காட்டவே “நாயகன்”, “மும்பை எக்ஸ்பிரஸ்” போன்ற உதாரணங்களை கூறினேன். இப்பொழுது மீண்டும் பார்ப்பனியம் சார்ந்த விடயத்திற்கு வருவோம்.

தசாவதாரம் படத்தின் மூலம் பார்ப்பனிய நலன் சார்ந்த ஒரு அரசியலுக்கு கமல் துணை போகின்றார். பாபர் மசூதி இடிப்பிற்கு பின்பு திரைப்படத் துறையில் பார்ப்பனிய சக்திகள் அதிகரித்த வகையில் செய்து வருகின்ற இந்த அரசியலை கமலும் செய்கிறார். அது என்ன?

தொடரும்….

- வி.சபேசன்

Friday, July 04, 2008

கமலின் பார்ப்பனிய முகம்

தசாவதாரம் - பலராலும் பல விதமாக விமர்சிக்கப்பட்டு விட்டது. என்னுடைய பங்கிற்கும் தசாவதாரம் படத்தைப் பார்த்த பொழுது, பார்த்து முடித்த பின்பு எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.

கமல் மீது எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு. தம்மைப் முற்போக்குவாதிகளாக காட்டிக் கொள்கின்ற பார்ப்பனர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்பு தம்முடைய உண்மையான பார்ப்பனிய முகத்தை காட்டி விட்டுப் போயிருக்கின்ற வரலாற்றுப் பதிவுகள் கமலைப் பார்க்கின்ற பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கும்.

ஆரம்பத்தில் முற்போக்குச் சிந்தனைகளோடு கதைகளை தந்த சுஜாதா கடைசியில் திரைப்படத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த பொழுது பார்ப்பனிய சக்திகளுடன்தான் கைகோர்த்துக் கொண்டார். பார்ப்பன சங்கத்தில் முழக்கமிடவும் செய்தார்.

கடவுள் மறுப்புக் கொள்கையுடையவராக தன்னை அறிமுகம் செய்த மணிரத்தினம், பார்ப்பன இந்துத்துவ நலன் சார்ந்த திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார். 39 வயதை அடைவதற்குள் இறந்து விட்ட பாரதி கூட ஆங்காங்கே தன்னுடைய பார்ப்பனிய சிந்தனைகளை வெளிப்படுத்தித்தான் இருக்கிறார்.

எம்மவர் என்று கருதப்பட்ட எழுத்தாளர் ஞானியும் தன்னுடைய பார்ப்பனிய முகத்தை வெளிப்படுத்தத் தொடங்கி விட்டாரா என்ற சந்தேகம் வருகின்ற அளவிற்கு அவருடைய இன்றைய எழுத்துக்கள் சில அமைகின்றன.

சுஜாதா போன்றவர்களின் சேர்க்கையால் ஏற்பட்ட விளைவோ தெரியவில்லை, கமலும் தன்னுடைய பார்ப்பனிய முகத்தை மெதுமெதுவாக வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பதாக அண்மைக் காலமாக நான் சந்தேகப்படுகின்றேன். தசாவதாரம் திரைப்படமும் அந்தச் சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.

கமல் ஒரு சிறந்த கலைஞன் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. தசாவதாரம் படம் மிகவும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. பல காட்சிகள் தமிழ் சினிமாவிற்கு புதிது. மீண்டும் ஒரு முறை பார்க்கலாம். கமல் கடைசியாக திரைக்கதை அமைத்த சில படங்கள் வெற்றி அடையாத போதும், தசாவதாரத்தின் மூலம் மீண்டும் தன்னை ஒரு சிறந்த திரைக்கதை அமைப்பாளராக கமல் நிரூபித்திருக்கிறார்.

சுனாமி வருகின்ற பொழுது கடற்கரையில் நிற்கின்ற ஜப்பானிய கமல் “சுனாமி மீண்டும் வருகிறது” என்று கத்துவார். ஒரு ஜப்பானியனைத் தவிர வேறு யார் அந்த இடத்தில் நின்றிருந்தாலும் இந்த வசனம் பொருந்தியிருக்காது. டிசம்பர் 2004 வரை தமிழர்கள் இலக்கியங்களில் வருகின்ற கடற்கோள்கள் பற்றி படித்திருக்கிறார்களே தவிர, சுனாமியை கண்டது இல்லை. (சுனாமி வருவதற்கு முன்பே கமல் தன்னுடைய “அன்பே சிவம்” படத்தில் சுனாமி பற்றி பேசியிருப்பார்.) ஜப்பானில்தான் அடிக்கடி சுனாமி வருவது உண்டு. “சுனாமி” என்ற சொல்லே ஜப்பானிய சொல்தான்.

சுனாமி வருவதை சொல்கின்ற ஜப்பானிய கமல் எவ்வித திணிப்பும் இன்றி, படத்தைப் பார்ப்பவர்களுக்கும் எவ்வித நெருடலும் ஏற்படாத வண்ணம் அங்கே வந்து சேர்கிறார். இப்படி படத்தில் வியப்பதற்கு பல விடயங்கள் உண்டு. முக்கியமாக கமலுடைய உடல்மொழியை சொல்ல வேண்டும்.

படத்தில் “மேக்அப்” படுமோசம் என்று படம் பார்த்த எல்லோரும் சொல்லி விட்டார்கள். முகமூடிகளை மாட்டியது போன்று இருக்கிறது. இந்தியன் திரைப்படத்தில் ஏற்பட்ட பிரமிப்பு தசாவதாரத்தில் ஏற்படவில்லை. சிரிப்புத்தான் வந்தது. முகமூடி போட்டது போன்ற “மேக்அப்” காரணமாக முகம் நடிக்க முடியாது போக, தன்னுடைய உடல்மொழி நடிப்பால் அந்தக் குறையை கமல் சமன் செய்கிறார். அமெரிக்க வில்லன், மனநலம் குன்றிய பாட்டி, தலித் தலைவர், ஜப்பானியர் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்றபடி கமலின் உடல்மொழி அமைகிறது. ஜப்பானிய கமல் சற்றுக் குள்ளமாக தெரிவதன் காரணம் கூட கமலின் நடிப்பே.

தசாவதாரம் படம் பற்றி எழுதுவதை விட கமலின் பார்ப்பனிய முகம் பற்றி எழுதுவதே என்னுடைய நோக்கம் என்பதால், படம் பற்றி எழுதுவதை குறைத்துக் கொண்டு விடயத்திற்கு வருகிறேன்.

கமல் பார்ப்பனிய சிந்தனைக்கு எதிரான ஒருவர் என்பதுதான் பலருடைய கருத்து. பார்ப்பனர்களை மறைமுகமாகச் சாடுகின்ற காட்சிகளை தன்னுடைய படங்களில் அவர் வைத்திருக்கின்றார். தேவர்மகன் படத்தில் கூட இரண்டு சகோதரர்களின் பகையில் வயிறு வளர்க்கின்ற ஒரு பார்ப்பனப் பாத்திரத்தை படைத்திருப்பார். நடிகர் மதன்பாப் செய்த அந்தப் பாத்திரம் இரண்டு சகோதரர்களின் பகையை அதிகரிக்கின்ற கைங்கர்யங்களிலும் ஈடுபடும்.

மகாநதியில் ஒரு பார்ப்பனர் (பூர்ணம் விஸ்வநாதன்) உலகில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டும் பகவான் மேல் பாரத்தை போட்டு விட்டு பேசாது இருப்பார். அக்கிரமத்திற்கு எதிராக போராடுகின்ற குணத்தோடு கமல் தோன்றுவார். இப்படி வெளிப்படையாக இல்லையென்றாலும் பார்ப்பனர்களை மறைமுகமாக என்றாலும் தன்னுடைய படங்களில் கமல் தோலுரித்திருக்கிறார்.

ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென்று வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் பார்ப்பனர்களுக்கு உதவுவதற்கு “நான் இருக்கிறேன்” என்று புஜபலத்தை காட்டியபடி வெளிப்படையாகவே வந்து குதித்தார் கமல்.

தொடரும்….

http://www.webeelam.net

Tuesday, April 29, 2008

கலைஞரின் பேச்சு சரியா?

"இலங்கையில் அமைதி ஏற்படுவதற்காக அங்கு மோதலில் ஈடுபடும் இரண்டு பிரிவினர்களுக்கும் இடையே இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த தீர்மானத்திற்கான விவாதத்தின் போது சர்ச்சைக்குரிய பல விடயங்கள் தமிழ்நாட்டின் சட்டசபையில் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த அநியாயங்கள் பற்றி பேசியவர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால் பிழையான ஒரு வரலாற்றுத் தகவல் அவைக் குறிப்பில் பதியப்பட்டு விட்டது. அதற்கு காரணம், அதைக் கூறியது தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

"இந்தியா தலையிட்டு இரண்டு பிரிவினரையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர வேண்டும்" என்ற தீர்மானத்தை கொண்டு வந்த கலைஞர் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் போகிற போக்கில் அவர் சொல்லி விட்டு போயிருக்கும் சில வார்த்தைகள் ஈழத் தமிழர்களை புண்படுத்தி விட்டன என்பதுதான் இங்கே வருந்தத்தக்க விடயம்.

அவர் சொன்னது இதுதான். "ஒரு குழுவாக அவர்கள் இருந்து போராடியிருந்தால் நேபாளம் போல வெற்றி பெற்று இருப்பார்கள். வேறு பல நாடுகளை போல விடுதலை பெற்றிருப்பார்கள். போராளிக் குழுக்களுக்குள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் இந்த போராட்டம் பலவீனமாகி விட்டது. இன்று அவர்களுக்கு பரிந்துரை செய்து பேச வேண்டி இருக்கிறது. இலங்கையில் விடுதலை பெற சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று போராளிகளுக்கு வேண்டுகோள் விடும் நிலைமை ஏற்பட்டது. ஒரு குழு இன்னொரு குழுவுடன் மோதும் போக்கை கடைப்பிடித்தது. தலைவர்கள் கொல்லப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள், சுடப்பட்டார்கள். அங்கு ம.பொ.சி. போன்று இருந்த அமிர்தலிங்கம் கொல்லப்பட வேண்டியவரா? விருந்துக்கு அழைக்கப்பட்டு சிற்றூண்டி வழங்கி தேனீர் எடுத்து வர அவரது மனைவி மங்கையற்கரசி சென்று வருவதற்குள் கணவரும் உடனிருந்த தோழர்களும் பிணமாக கிடந்தார்கள். போராளிகளே அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு போராட்டத்தை பலவீனமாக்கி விட்டார்கள்"

இதுதான் கலைஞர் சொன்னது. இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

நேபாளத்தில் நடந்தது அங்கே உள்ள அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம். ஒரு நாட்டுக்குள்ளேயே நடந்த பிரச்சனை அது. இலங்கைத் தீவில் நடப்பது ஒரு தேசிய இனம் தன்னை அடக்குகின்ற ஒரு நாட்டிடம் இருந்து விடுதலையாகும் போராட்டம். இது இரண்டு நாடுகளுக்கு (தமிழீழம், சிறிலங்கா) இடையிலான போராட்டம். இரண்டு தேசிய இனங்களுக்கு (தமிழர், சிங்களர்) இடையிலான போராட்டம்.

ஒரு தேசிய இனம் இன்னொரு நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு போராடுகின்ற போது, பல குழுக்களாக போராடி வெற்றி பெற முடியாது. அப்படி வெற்றி பெற்ற வரலாறும் உலகத்தில் வெகு வெகு குறைவு. அந்த வெற்றிகளும் தற்காலிகமான வெற்றிகளாக போனதையும் வரலாறு எமக்கு சொல்லித் தந்திருக்கிறது.

நேபாளத்தைப் போன்று ஒரு நாட்டுக்குள்ளேயே ஆட்சி மற்றும் அரசு மாற்றத்திற்கு போராடுகின்ற மக்கள் எத்தனை ஆயிரம் குழுக்களாக வேண்டுமென்றாலும் போராட முடியும். ஆனால் ஒரு பெரும்பான்மை இனத்திடம் இருந்து விடுதலை பெறப் போராடும் ஒரு இனம் அப்படிப் போராட முடியாது. நேபாளத்தை ஈழத்துடன் ஒப்பிடுவது மிகத் தவறான ஒன்று.

போராளிக் குழுக்களுக்குள் நடந்த மோதல்கள் போராட்டத்தைப் பலவீனப்படுத்தி விட்டன என்றும் கலைஞர் சொல்கிறார். இதை அவர் அன்றும் சொன்னார், இன்றும் சொல்கிறார். இப்படி ஒரு கருத்து உண்மையிலேயே அவருடைய மனதில் ஆழப் பதிந்துள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் இங்கே ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இந்திராகாந்தியின் பிரத்தியேகச் செயலாளராக இருந்தவர் இந்திராகாந்தி குறித்து ஒரு நூல் எழுதியிருக்கிறார். இந்திராகாந்தி விடுதலைப் புலிகள் குறித்து கொண்டிருந்த கருத்து அந்த நூலில் கூறப்படுகிறது. 'ஏனைய தமிழ்ப் போராளிக் குழுக்களையும் விட, தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினர்கள் தனித்துவமாகவும், கொள்கைப் பிடிப்பு உடையவர்களாகவும், கட்டுக்கோப்பாகவும் உள்ளார்கள். எதிர்காலத்தில், இந்தியாவின் அழுத்தத்திற்கு, விடுதலைப் புலிகள் பணிய மாட்டார்கள். ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கம், தன்னுடைய இலட்சியத்தில் உறுதி கொண்ட ஓர் இயக்கமாக வளர்ந்து வருகின்றது. அவர்களின் வளர்ச்சியை நாம் தடுக்க வேண்டும்." இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கருத்து இங்கே இந்திராகாந்தியின் கருத்தாக வெளிப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கோடு பல போராளிக் குழுக்களை அன்றைக்கு உருவாக்கிது இந்தியாதான். அந்தப் போராளிக் குழுக்களை விடுதலைப் புலிகளோடு மோதுவதற்கு தூண்டியதும் இந்தியாதான். கலைஞரும் அன்றைக்கு ரெலோ இயக்கத்திற்கு ஆதரவாக நின்று போராளிக் குழுக்களின் மோதல்களுக்கு ஏதோ ஒரு வகையில் துணை போனார் என்பதும் வரலாற்றில் உள்ள ஒரு செய்தி.

இந்தியாவின் திட்டப்படி பல போராளிக் குழக்கள் வளர்ச்சி பெற்று, விடுதலைப் புலிகளை இல்லாது ஒழித்து, கடைசியில் இந்தியா காட்டுகின்ற இடத்தில் கையெழுத்தைப் போட்டு விட்டு, அப்படியே தமிழீழ விடுதலைப் போராட்டமும் முடிவுறுவதானது கலைஞரின் விருப்பமாக இருக்காது என்று நாம் நம்புகிறோம். தமிழீழ போராட்டத்தை திசைதிருப்பிய மற்றைய போராளிக் குழுக்களை விடுதலைப் புலிகள் அடக்கி வைத்ததாற்தான் தமிழீழப் போராட்டம் இன்று வரை தக்க வைக்கப்பட்டு முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

கலைஞர் இன்னும் ஒரு குற்றச்சாட்டையும் சொல்லியிருக்கிறார். அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது பற்றிய விடயத்தை பேசியிருக்கிறார். தற்பொழுது இதற்கு என்ன அவசியம் வந்தது என்று தெரியவில்லை. தமிழ்செல்வனிற்கு அழுத என்னுடைய மனம் அமிர்தலிங்கத்திற்கும் அழுகிறது என்ற செய்தியை சொல்லி தன்னை நடுநிலையாளராக காட்ட கலைஞர் முனைகிறார் என்பது புரிகிறது.

அமிர்தலிங்கத்திற்காக யார் அழுகிறார்களோ இல்லையோ, தமிழீழ மக்கள் அழவில்லை என்பது இங்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விடயம். மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு, இந்தியப் படையின் பாதுகாப்பு இருந்தும் தன் சொந்தத் தொகுதியில் போட்டியிடாது, மட்டக்களப்பில் போட்டியிட்டு, அங்கும் வெற்றி பெறாது, தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர்தான் அமிர்தலிங்கம்.

இதை விட அமிர்தலிங்கம் கொலைக்குப் பின்னால் இந்திய உளவுத் துறையின் கரங்கள் இருக்கின்றன என்பதும் இங்கு கட்டாயம் சொல்லப்பட வேண்டிய ஒரு விடயம்.

தமிழீழ மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் துரோகம் புரிந்த பலரை விடுதலைப் புலிகள் தண்டித்துள்ளார்கள். அவைகளுக்கான உரிமைகோரல்களையும் விடுதலைப் புலிகள் செய்துள்ளார்கள். அதே போன்று சிங்களத் தலைவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களுக்கான பொறுப்பு விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட நேரங்களில் சிலவற்றை மறுத்து இருக்கிறார்கள். சிலவற்றை மறுக்காது மௌனமாகவும் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் உறுதியான முறையில் உத்தியோகபூர்வமாக மறுத்து விட்டு, பின்பு ஏற்றுக்கொண்ட ஒரு சம்பவமாக அமிர்தலிங்கம் மீதான தாக்குதல் அமைகிறது. முதலில் மறுப்பு, பின்பு உரிமை கோரல் என்று நடந்த இந்த குழப்பத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது.

தமிழீழ மக்களுக்கு செய்த துரோகத்தின் காரணமாக ஏறக்குறைய அனைத்துப் போரளிக் குழுக்களுமே அமிர்தலிங்கத்திற்கு மரண தண்டனை விதிப்பதாக அறிவித்திருந்தன. இது 80களின் தொடக்க காலத்தில் நடந்த ஒரு விடயம்.

1989ஆம் ஆண்டு ஜுலை 13ஆம் நாள் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் அமிர்தலிங்கம் என்பவரையே மக்கள் ஏறக்குறைய மறந்து போயிருந்தார்கள். ஒரு செல்லாக்காசாகிப் போய் விட்ட அவரை தண்டிக்க வேண்டும் என்ற சிந்தனையும் விடுதலைப் புலிகளிடமும் இல்லாது போயிருந்தது. அப்பொழுது சிறிலங்காவின் பிரேமதாசா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் கொழும்பில் நின்றனர்.

அந்த நேரத்தில் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினருக்குள் ஆச்சரியமும் குழப்பமும்தான் நிலவியது. இதை யார் செய்தார்கள், ஏன் செய்தார்கள் என்று அவர்களுக்கு புரியவில்லை. அப்பொழுது கொழும்பின் பிரபல அரசியல் ஆய்வாளராக இருந்து "ரீட்டா செபஸ்ரியான்" என்பவர் பேச்சுவார்த்தைக் குழுவினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமிர்தலிங்கம் கொலை பற்றி கருத்து கேட்டார். எந்தக் கருத்தும் உடனடியாக சொல்ல முடியாத காரணத்தினால் அவரை நேரடியாக வரச் சொல்லி விட்டு, பேச்சுவார்த்தைக் குழவினர் ஆழ்ந்த யோசனையில் இருந்தனர்.

இதை விட இன்னும் ஒரு செய்தி பரவியது. தாக்குதலின் போது அமிர்தலிங்கம் வீட்டுக் சென்றிருந்த பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டு விட்டார் என்று வதந்தி சிலரால் பரப்பப்பட்டது. உடனடியாக பிரேமதாசா அப்பொழுது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேயரட்ணாவை பேச்சுவார்த்தைக் குழுவினர் இருந்த இடத்திற்கு அனுப்பினார். ரஞ்சன் விஜேயரட்ண பேச்சுவார்த்தைக் குழுவினரை சந்தித்து, அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்தார்.

ஏற்கனவே இந்திய உளவுத்துறையால் வாங்கப்பட்டு விட்ட மாத்தையாவே அனைத்திற்கும் பின்னால் இருந்தார் என்பது பின்புதான் மெதுமெதுவாகத்தான் தெரிய வந்தது. விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா அரசுக்கும் நடந்த பேச்சுவார்த்தையை குழப்புவதற்காக மாத்தையாவின் ஆட்கள் மூலம் அமிர்தலிங்கத்தை இந்திய உளவுத் துறை கொலை செய்தது என்பதுதான் இங்கு அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

அமிர்தலிங்கத்தை கொலை செய்வதன் மூலம் இலங்கையில் பெரும் குழப்பம் தோன்றும், விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடையும் என்று இந்திய உளவுத் துறை கணக்குப் போட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது இலங்கைத்தீவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் இதைப் பற்றி பேசிய அளவிற்கு கூட யாரும் ஈழத்தில் பேசவில்லை. விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாச அரசுக்கும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இந்தியப் படை ஈழத்தை விட்டு வெளியேற்றப்பட்டது.

ஆனால் தொடர்ந்தும் மாத்தையா மூலம் இந்திய உளவுத்துறை ஈழத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. தன்னுடைய ஆட்களின் மூலம் பல அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் பற்றிய அதிருப்தி அலைகளை உருவாக்குவதற்கு மாத்தையா முயன்றார். ஒரு நேரத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மக்களை நேரடியாக திடீர் திடீர் என்று சந்தித்து கருத்துக் கேட்கின்ற நிலைமை உருவானது. மக்களும் தமது அதிருப்திகளை அப்பொழுது தெரிவித்திருந்தனர். கடைசியில் மாத்தையா தலைவராக இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியையே கலைக்கின்ற அளவிற்கு நிலைமை போனதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படி மாத்தையாவின் மூலம் இந்திய உளவுத்துறை மேற்கொண்ட நாசகார சதி நடவடிக்கைகள் நிறைய உண்டு. இதன் ஆரம்பமாக அமிர்தலிங்கம் மீதான கொலை அமைந்தது. அப்பொழுது மாத்தையா விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவராக இருந்ததனால் அவர் செய்த குற்றங்களுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பேற்க வேண்டியும் வந்தது.

ஆகவே கலைஞர் தமிழீழப் போராட்டம் பற்றி கூறிய விடயங்கள் சரியானவை அல்ல. அவர் கூறிய விடயங்களுக்கு குற்றம் சாட்டப்பட வேண்டியது இந்திய அரசும் அதன் உளவுத்துறையும்தான். இனியாவது இந்திய அரசு முன்பு விட்ட தவறுகளை மீண்டும் செய்யாது இருக்க வேண்டும். அதற்கு கலைஞர் தன்னால் ஆனதை செய்வார் என்று நம்புவோம்

Thursday, April 17, 2008

கடவுளுக்கு வருமா? வராதா?

"வணக்கம்மா" என்ற திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட அழைப்பிதழில் இருந்த படம்தான் இது. கடைசியில் இந்தப் படத்தால் திரைப்படத்தின் தொடக்க விழா நின்று விட்டது. இந்துத்துவ அமைப்புக்கள் போராட்டம் நடத்தும் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டின் காவல்துறையினர் தொடக்க விழாவிற்கு தடை விதித்து விட்டனர்.

ராமனும் அனுமனும் சிறிநீர் கழிப்பது போன்ற இந்தக் காட்சி திரைப்படத்தில் இடம்பெற இருக்கும் ஒரு நகைச்சுவைக் காட்சியாகத்தான் இருக்க முடியும். ராமன், அனுமான் வேடம் தரித்த இரண்டு நாடக நடிகர்கள் சிறுநீர் கழிக்கும் காட்சியாகவே இது பெரும்பாலும் இருக்கலாம். இது போன்று இந்துக் கடவுள்களை பயன்படுத்தி நிறைய நகைச்சுவைக் காட்சிகளை தமிழ் திரையுலகம் உருவாக்கியிருக்கிறது.

ரஜனிகாந்த் நடித்த உழைப்பாளி படத்தை ஒரு உதாரணமாக சொல்லலாம். அதில் ரஜனிகாந்த் சிவபெருமான் வேடத்தை போட்டுக் கொண்டு தன்னை துரத்துபவர்களிடம் இருந்து தப்பி ஓடுவார். மிகவும் புகழ் பெற்ற நகைச்சுவைக் காட்சி அது. ஒரு பார்ப்பனருடன் மோட்டர்சைக்கிளில் தப்பிப் போகின்ற ரஜனி, கடைசியில் ஒரு விரலைக் காட்டி தனக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பதாக சொல்லி, மோட்டார்சைக்கிளை விட்டு இறங்குவார். ரஜனி ஒரு விரலைக் காட்டியதும், "பகவானுக்கே வந்தா அது மழை பெஞ்ச மாதிரி" என்று அந்த பார்ப்பனர் சொல்வார்.

இதை விட கடவுள் வேடம் தரித்தவர்கள் பீடி குடிப்பது மாதிரியும், மது அருந்துவது மாதிரியுமான காட்சிகள் பல படங்களில் இடம் பெற்றிருக்கின்றன.

ஆனால் இவைகள் எவைக்குமே இந்துத்துவ கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்தக் காட்சிகள் தமது கடவுள்களை இழிவுபடுத்துகின்றன என்று அந்த கட்சிகள் கூறவில்லை. தற்பொழுது "வணக்கம்மா" படத்திற்கு மட்டும் பிரச்சனை கொடுப்பதற்கு இந்த அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதற்குக் காரணம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகத்துடன் ஈடுபாடு உள்ளவர் என்பதுதான்.

இந்துத்துவ அமைப்புக்களின் எதிர்ப்பிற்கு தெரிவிக்கப்படும் காரணங்கள் வலுவில்லாதவை என்பது நடுநிலையாக சிந்திக்கின்ற அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு விடயம்தான்.

ஆனால் ராமனும் அனுமனும் சிறுநீர் கழிக்கும் அழைப்பிதழை தமிழ்நாடு அரசோ அல்லது சென்னை மாநகராட்சியோ ஒரு வலுவான காரணத்தை சொல்லி தடைசெய்ய முடியும். உண்மையில் தெருவில் சிறுநீர் கழிப்பது சட்டப்படி குற்றம். ஆகவே ராமனையும், அனுமனையும் கடவுளாக வணங்கும் பக்தர்கள் இந்த அழைப்பிதழைப் பார்த்து, அவர்களும் தெருவில் சிறுநீர் கழித்தால், தமிழ்நாடே நாறி விடும். ஒரு குரங்கை கடவுள் என்று வணங்கும் "அறிவோடு" இருப்பவர்கள் இதைச் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அந்த வகையில் தமிழ்நாட்டின் சுகாதாரம் கருதி இந்த அழைப்பிதழை தடை செய்ய தமிழ்நாட்டு அரசிற்கு முழு உரிமையும் இருக்கிறது.

அதே வேளை இந்த அழைப்பிதழ் கடவுளை இழிவுபடுத்துகிறதா இல்லையா என்பதற்கு அப்பால் எனக்கு சில கேள்விகள் எழுகின்றன. கடவுள்களாகிய ராமனும் அனுமனும் சிறுநீர் கழிக்கின்ற காட்சி கடவுள்களை இழிவுபடுத்துவது போல் இருக்கின்றது என்பது இந்துத்துவ அமைப்புக்களின் வாதம். இப்பொழுது என்னுடைய கேள்வி எதுவென்றால், கடவுளுக்கு இயற்கை உபாதை உண்டா? கடவுள் மலம், சலம் கழிப்பாரா? அல்லது தன்னுடைய சக்தியால் அடக்கி வைத்திருப்பாரா? அல்லது கடவுளுக்கு அப்படி ஒன்றே இல்லையா?

இவைகளை அசட்டுத்தனமான கேள்விகள் என்று யாரும் புறந்தள்ள வேண்டாம். உண்மையில் இவைகள் ஆராயப்பட வேண்டிய கேள்விகள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! கடவுளுக்கு நித்திரை வருகிறது, கடவுளுக்கு பசிக்கிறது, கடவுளுக்கு அன்பு, கோபம், பழி என்று அனைத்து உணர்ச்சிகளும் வருகிறது, கடவுளுக்கு காமம் வருகிறது, கடவுளுக்குள் உடலறுவு நடக்கிறது, கடவுளுக்கு பிள்ளை பிறக்கிறது. இப்படி எல்லாமே மனிதனைப் போல் கடவுளுக்கு நடைபெறுகின்ற போது, ஏன் இந்த மலம், சலம் என்று எதுவும் வருவது இல்லை?

நித்திரை கொள்கின்ற கடவுளை காலையில் திருப்பள்ளிஎழுச்சி பாடி எழுப்புகின்றனர். பின்பு அவருக்கு பசிக்கும் என்று நிறைய தின்பண்டங்களை படைக்கின்றனர். கடவுள் உணவு அருந்துவதாக வேதங்களும் சொல்கின்றன. உணவு மட்டும் அல்ல, சோமபானமும் கடவுள் அருந்துகிறாராம். இவைகள் எல்லாம் வயிற்றுக்குள் சென்று ஒன்றுமே செய்யாதா? திருப்பள்ளியெழுச்சி பாடி கடவுளை துயில் எழுப்புபவர்கள், அவர் சாப்பிடுவதற்கு முதல் ஒரு திருமலசலகூடத்திற்கு அவரை அழைத்துச் செல்லாததன் காரணம் என்ன?

அனைத்து சக்திகளையும் கொண்ட கடவுளுக்கு எந்தப் பலவீனமும் இல்லை என்று சிலர் சொல்லலாம். ஆனால் பசி, காமம் இவை எல்லாம் ஒரு பலவீனம்தானே. தன்னுடைய மனைவியுடன் மட்டும் நின்று விடாது, வேறு பெண்களிடமும் இச்சை தீர்க்கின்ற நிலையில் கடவுள் இருப்பதாகத்தானே சொல்லப்படுகிறது.

வைணவ ஆலயங்களில் பரிவேட்டை என்று ஒரு விழா நடத்துவார்கள். அன்றைக்கு பெருமாளை கொண்டு போய் ஒரு தெருவில் வைத்துவிடுவார்கள். பெருமாளுக்கு தன்னுடைய துணைவியை பார்த்துப் பார்த்து அலுத்து விட்டதாம், அதனால் வேறு பெண்களிடம் செல்கிறார் என்பதுதான் இந்த விழாவின் பொருள். முன்பு பெருமாளைக் கொண்டு தாசிகள் வசிக்கும் தெருவில் வைப்பார்கள். தற்பொழுது ஏதோ ஒரு தெருவில் வைத்துவிட்டு வருவார்கள்.

பெருமாளுக்கே தாசிகளிடம் செல்லும் பலவீனம் இருக்கிறது. இதை விட கடவுளுக்கு நோய், தோசம் போன்றவைகளும் இருக்கிறன. இந்திரனுக்கு பால்வினை நோய்களில் ஒன்றாகிய "படர்தொடை வாழை" வந்தது. இந்திரனை கடவுள் இல்லை என்று விட்டு விட்டாலும், சிவபெருமானுக்கு முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனை இருந்ததே!

மோகினியாக உருமாறிய விஸ்ணு மீது காமம் கொண்டு அவரை துரத்திக் கொண்டு ஓடுகின்ற போதே, சிவனுக்கு விந்து வெளியேறி விடுகிறது. மருத்துவ உலகில் இதையும் ஒரு பிரச்சனையாகத்தான் பார்க்கிறார்கள். இந்தப் பிரச்சனையை மாற்றுவதற்கான சிகிச்சைகளும் இருக்கின்றன. எல்லாம் அறிந்த சிவன் இதை அறியாமல் போனது ஆச்சரியம்தான்.

மொத்தத்தில் கடவுள்களுக்கு நோய் நொடியில் இருந்து அனைத்துப் பிரச்சனைகளும் இருக்கின்றன. ஆனால் கடவுள்களுக்கு இயற்கை உபாதைகளான மலமும் சலமும் வருமா என்கின்ற கேள்விக்குத்தான் விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மலம், சலம் என்பன நாற்றமடிக்கும் விடயங்கள் என்பதால், இவைகள் தமக்கு வராத மாதிரி கடவுள்கள் செய்திருக்கின்றார்கள் என்ற முடிவுக்குத்தான் கடைசியில் என்னால் வர முடிந்தது.

ஆனால் இப்பொழுது எனக்குள் இன்னொரு கேள்வி எழுந்து, என்னை மிகவும் குழப்பி விட்டது. கடவுளுக்கு மலமும் சலமும் வராது என்பது சரி, ஆனால் தம்மை கடவுள்கள் என்று சொல்கின்ற புட்டபர்த்தி சாஜிபாபாவிற்கும், டென்மார்க் லலிதாவிற்கும் மலம், சலம் வருமா? வராதா? அப்படி வரும் என்றால், இவர்களை கடவுள் என்று எப்படிச் சொல்ல முடியும்?????

Tuesday, March 25, 2008

இந்து மதமும் பெண்களும் (பாகம் 9)

இந்தியாவின் மண்ணின் மைந்தர்களிடம் இருந்த பெண் தெய்வ வழிபாட்டை சிறுமைப்படுத்தும் நோக்கில் ஆரியர்கள் பெண்களை சிறுமைப்படுத்தினார்கள் என்பதை கடந்த பாகத்தில் பார்த்தோம்.

இன்றைக்கு வரைக்கும் தமிழ் மக்களிடம் இந்தப் பெண் தெய்வ வழிபாடு முக்கிய இடம் பிடித்திருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். எத்தனையோ கிராமங்களின் காவல் தெய்வமாக பெண் தெய்வங்களே இருக்கின்றன. பல இடங்களில் "அம்மன் வழிபாடு" ஒரு மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தமிழர்களை கவனித்தால் கூட அங்கும் பெண் தெய்வ வழிபாடு இருப்பதை பார்க்க முடியும். ஈழத்தில் மடுமாதாவும் தமிழ் நாட்டில் அன்னை வேளாங்கண்ணியும் மிக அதிகமாக வழிபடப்படுவதை கவனிக்கலாம்.

இன்றைய நிலையே இப்படி இருக்கின்ற போது, கொற்றவை காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லிப் புரிய வேண்டியது இல்லை. இப்படி உச்சம் பெற்றிருந்த பெண் தெய்வ வழிபாட்டை இல்லாது செய்வதற்காக ஆரியர்கள் பெண்களை மிக மிக இழிவுபடுத்தினார்கள்.

நாம் இந்தத் தொடர் முழுவதும் இரண்டு விடயங்களைப் பார்த்தோம். இந்து மதம் எப்படியெல்லாம் பெண்ணை இழிவுபடுத்துகிறது என்பதையும், ஏன் இழிவுபடுத்துகிறது என்பதையும் பார்த்தோம்.

எப்படியெல்லாம் இழிவுபடுத்துகின்றன என்பதை பல்வேறு சான்றுகளோடு தந்திருக்கிறேன். இந்தச் சான்றுகள் எவையும் எந்த ஒரு கடவுள் மறுப்பு நூல்களில் இருந்து பெறப்பட்டவை அல்ல என்பதை இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அனைத்து சான்றுகளுமே இந்து மதத்தை சேர்ந்த மத நம்பிக்கையாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களில் இருந்தே பெறப்பட்டன.

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். மனுதர்மத்திலிருந்து சில தரவுகளை தந்திருக்கிறேன். இவைகள் 1919ஆம் ஆண்டு இளையவல்லி கௌசிக இராமானுஜசாரியார் என்பவரால் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட "மனுதர்ம சாஸ்திரம்" என்னும் நூலில் இருந்து பெறப்பட்டவை. சமஸ்கிருதபாசையில் இருப்பதால், இதனால் சிலர் மட்டுமே பயன்பெறுகிறார்கள் என்றும், அதனால் எல்லோரும் பயன்படும் வண்ணம் தமிழில் மொழி பெயர்ப்பதாக அவர் எழுதியுள்ளார். இந்த மொழி பெயர்ப்பு சரியானது என்று சமஸ்கிருத பண்டிதராகிய வே. வேதாந்தசாரியார் என்பவர் உறுதி மொழி வழங்கி கையொப்பம் இட்டுள்ளார்.

திராவிட கழகங்கள் போன்ற கடவுள் மறுப்பு இயக்கங்கள் வெளியிட்ட நூல்களில் இருந்து தரவுகளைப் பெறும்போது, அந்தத் தரவுகள் குறித்து கடவுள் நம்பிக்கையாளர்கள் வழமை போன்று சந்தேகம் எழுப்பக்கூடும் என்பதனால், அவ்வாறான நூல்களை தவிர்த்து முற்று முழுதாக கடவுள் நம்பிக்கையாளர்கள் எழுதிய நூல்களை மட்டுமே என்னுடைய தொடருக்கு பயன்படுத்தியுள்ளேன். அதுவும் சமஸ்கிருதம் நன்கு அறிந்த பார்ப்பனர்கள் எழுதிய நூல்களையே பயன்படுத்தியிருக்கிறேன்.

ஆகவே இதிலே உள்ள தரவுகள் குறித்து கடவுள் நம்பிக்கையாளர்கள் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

திருமணத்தில், இறுதிச் சடங்கில் சொல்லப்படுகின்ற மந்திரங்கள் பெண்ணை மிகவும் இழிவுபடுத்துவதன் காரணத்தை ஆராயப் புகுந்ததில் இந்தத் தொடர் உருவாகியது. இந்து மதத்தின் கருத்தின்படி பெண் என்பவள் இழி பிறப்பு. சூத்திரர்கள் என்று தம்மால் அடையாளப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து தமது பெண் துணைகளைப் பெற்றதாலும், பெண் தெய்வ வழிபாட்டை சிறுமைப்படுத்த முனைந்ததாலும், இந்த கருத்தை ஆரிய இந்துமதம் உருவாக்கியது.

மந்திரங்கள் புனிதமானவை என்ற உறுதியான கருத்துருவாக்கம் பார்ப்பனர்கள் மனதில் இன்றும் இருப்பதால், இந்த மந்திரங்களை இன்று வரை தொடர்கிறார்கள். புதிய அர்த்தங்களைக் கொடுத்து தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொண்டு தொடர்கிறார்கள். மற்றவர்களையும் சமாதானப்படுத்துகிறார்கள்.

தாயை கொச்சைப் படுத்துகின்ற மந்திரம் பற்றி ஒருவர் விளக்கம் எழுதியிருந்தார். யார் எவராக வேண்டும் என்றாலும் இருக்கலாம், தாய் என்ற காரணத்திற்காக தவறுகள் மறைக்கப்படக் கூடாது என்ற பக்குவத்தை தருகின்ற உயர்ந்த தத்துவத்தை சொல்கின்ற மந்திரமாம் அது. இப்படியான சமாதானங்களை சொல்லி தம்மையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவர் ஒரு பெண்ணைப் பார்த்து "வர்றியா" என்று அழைத்தால், அந்த "வர்றியா" என்பதன் சரியான அர்த்தம் குறித்து நாம் ஒரு முடிவுக்கு வருவதற்கு அகப் புறச் சூழ்நிலைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். அழைத்தவர் யார், அவர் எப்படிப்பட்டவர், எந்த நேரத்தில் அழைத்தார் போன்றவைகளை எல்லாம் ஆராய வேண்டும்.

"வர்றியா" என்று அழைத்தவர் நான் சும்மா பேசுவதற்குத்தான் அழைத்தேன் என்று விளக்கம் சொல்வது போன்று மந்திரங்கள் குறித்த இந்த பார்ப்பனர்கள் இன்றைக்கு தருகின்ற விளக்கங்கள் இருக்கின்றன. அதனாற்தான் இந்த மந்திரங்களை கொண்டிருக்கின்ற இந்து மதம் பெண்கள் பற்றி என்ன சொல்கிறது என்பதை ஆராய வேண்டி தேவை ஏற்படுகிறது.

மந்திரங்கள் நேரடியாகவே அர்த்தங்களை தெளிவாகச் சொல்கின்றன. அப்படியிருந்தும் மந்திரங்களை காப்பாற்றுவதற்கு பார்ப்பனர்கள் புதிய அர்த்தங்களை தர முனைகிறார்கள். ஆனால் நேரடியான அர்த்தமும் சரி, அது பற்றிய பின்புல ஆய்வும் சரி பார்ப்பனர்கள் தருகின்ற புதிய அர்த்தங்கள் தவறானவை என்று நிரூபிக்கின்றன.

ஆகவே தமிழர்கள் பார்ப்பனர்களை வைத்து புரியாத மொழியில் செய்கின்ற சடங்குகளை புறக்கணிக்க முன்வர வேண்டும். சடங்குகள் செய்துதான் தீரவேண்டும் என்றால், அவற்றை தமிழில் செய்ய வேண்டும். இதுவே மானமுள்ள செயலாகும். இல்லை, உங்களுடைய தாயையும், சகோதரியையும், மனைவியையும் நீங்கள் கொச்சைப்படுத்த விரும்பினால், தாராளமாக சமஸ்கிருதத்தில் தொடர்ந்து சடங்குகளை செய்யுங்கள்.

இந்த தொடரை நீடித்து இந்து மதம் பெண்கள் பற்றி என்ன சொல்கிறது என்பதை மேலும் தோலுரித்துக் காட்ட முடியும். ஆனால் இதுவரை அம்பலப்படுத்தியது போதும் என்று நினைக்கிறேன். இந்து மதத்தில் அம்பலப்படுத்து வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. முக்கியமாக பகவத் கீதை.

இந்து மதம் இடையில் வந்த மதம் என்பதற்கும் மற்றைய மதங்களில் இருந்த மக்கள் அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் இந்து மதத்தில் சேர்க்கப்பட்டார்கள் என்பதற்கும் பகவத் கீதையே ஒரு ஆதாரம். தமிழ் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் கண்டிக்கும் வர்ணாச்சிரமத்தை, போற்றிப் பாதுகாக்கும் மனித குல விரோத நூலாக பகவத் கீதை இருக்கிறது.

அடுத்த தொடரில் பகவத் கீதையை வேறொரு கோணத்தில், ஆனால் சரியான கோணத்தில் காட்டப் போகிறேன். ஆவலோடு காத்திருங்கள்.

http://www.webeelam.com

Thursday, March 13, 2008

இந்து மதமும் பெண்களும் (பாகம் 8)

இந்து மதம் பெண்களை மிருகங்களை விடக் கேவலமாக கருதுவதை இதுவரை சான்றுகளோடு பார்த்த நாம், அதற்கான காரணத்தை இனிப் பார்ப்போம்.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அவைகள் ஆரியர்களின் வருகையோடு சம்பந்தப்பட்டவை. மத்திய ஆசியாவில் இருந்து பாலைவனங்களையும், மலைகளையும் கடந்து நெடிய பயணம் மேற்கொண்டு இந்தியாவிற்கு ஆரியர்கள் வந்த போது, அவர்கள் பெண்களை அழைத்து வரவில்லை.

எந்த மக்களை அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் ஆரியர்கள் இழிவுபடுத்தினர்களோ, அந்த மக்களிடம் இருந்துதான் தமது பெண் துணைகளை பெற்றுக் கொண்டார்கள். அந்த வகையில்தான் பெண்களும் சூத்திரர்களும் ஒன்று என்று இந்து ஆரிய வேதங்கள் குறிப்பிடுகின்றன.

ஆரியர்கள் இந்தியாவிற்கு நுழையும் போது பெண்களை அழைத்து வரவில்லை என்பதை பல வரலாற்று அறிஞர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளார்கள். இந்த ஆய்வுகளை ஆரியர்களின் புராணங்களும் மறைமுகமாக ஒத்துக் கொள்கின்றன.

புராணங்களிலும் வேதங்களிலும் மன்னர்களும், ரிசிகளும் தமது துணைகளை பழங்குடி மற்றும் சூத்திரர் என்று வகைப்படுத்தப்பட்ட மக்களிடம் இருந்தும் பெற்றுக் கொள்கின்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுவதை கவனிக்கலாம். ஆரியர்களின் வெற்றியைப் பாடும் இராமாயணத்தின் கதாநாயகியாகிய சீதையும் மண்ணில் இருந்து தோன்றியவள் என்பதையும் இங்கு நினைவுபடுத்துகின்ற பொழுது, இவைகள் சொல்கின்ற உட்கருத்துக்கள் புரியும்.

இப்படி தாம் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தியவர்களிடம் இருந்து பெற்ற பெண்களையும் சூத்திரர்களைப் போன்றே இழிவாக வரையறுக்கு வேண்டிய தேவை ஆரியர்களுக்கு உருவாகிவிட்டது. இதை விட பெண்களை இழிவுபடுத்துவதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது, இந்தியாவில் இருந்த வழிபாட்டு முறைதான் அந்தக் காரணம்.

உலகின் முதலாவது சமூகம் தாய் வழிச் சமூகமாகவே இருந்தது. பெண்களை மதித்து, பெண்களுக்கு கீழ்படிந்து, பெண்களை தெய்வமாக வழிபட்ட சமூகமாகவே அன்றைய சமூகம் இருந்தது. பின்பு ஆணாதிக்க சமூகம் உருவான போது பெண்களை மதிப்பதும், வணங்குவதும் இல்லாது போயின அல்லது குறைந்து போயின.

அதே வேளை பெண்களை சமமாக மதித்தார்களோ இல்லையோ, பெண் தெய்வங்களை முதற் தெய்வமாக வழிபடுவது மட்டும் பல இடங்களில் தொடர்ந்தது. பண்டைய நாகரீகங்களில் பெண் தெய்வ வழிபாடுகளே முதன்மை பெற்றிருந்தன. அதே போன்று சிந்து வெளிநாகரீகத்திலும் பெண் தெய்வ வழிபாடு உச்சம் பெற்றிருந்தது.

சிந்து வெளிநாகரீகத்தை கண்டுபிடித்த தொல்லியல் வல்லுனரான சேர் ஜோன் மார்ஸல் சிந்து வெளியில் பெண் தெய்வ வழிபாடு முதன்மையானதாக இருந்ததற்கான சான்றுகள் பலவற்றை கண்டுபிடித்தார். உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம். ஒரு இலச்சனையில் இரண்டு அரச மரக் கிளைகளுக்கு இடையில் ஒரு பெண் தெய்வம் நிற்கின்றது. அந்தப் பெண் தெய்வத்தை வணங்கியபடி மக்களும் மிருகங்களும் நிற்கின்றன. இப்படி எல்லோரும் வணங்கும் முழு முதற் தெய்வமாக பெண் தெய்வமே இருந்தது என்பதற்கு சான்றாக பல ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சிந்து வெளிநாகரீகத்தை தொடர்ந்து ஆராய்ந்தவர்களும் சிந்து வெளியில் பெண் தெய்வ வழிபாட்டு சமூகமே இருந்தது என்பதை உறுதிப்படுத்தினார்கள்.

அப்படியே தமிழகம் நோக்கி எமது பார்வையை திருப்பினால், அங்கும் பெண் தெய்வ வழிபாடே முதன்மை பெற்றிருந்ததைக் காணலாம். சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்தை "பெருங்கற்படைக் காலம்" என்று அழைப்பார்கள். இக் காலப் பகுதியில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டுத் தெய்வமாக "கொற்றவை" என்கின்ற பெண் தெய்வம் விளங்கி வந்தது.

பெருங்கற்படைக் காலத்து மக்கள் ஆநிரை கவர்கின்ற எயினர்களாகவும், வேட்டுவர்களாகவும் வாழ்ந்தனர். இந்த மக்கள் ஆநிரை கவரச் செல்கின்ற போதும், வேட்டைக்கு செல்கின்ற போதும் முதலில் கொற்றவையை வணங்கிய பின்பே செல்வர். இவர்களுடைய அனைத்து சடங்குகளிலும் கொற்றவை வழிபாடு இடம்பெற்றிருந்தது.

சிந்து வெளிநாகரீகத்தில் மக்களாலும், மிருகங்களாலும் வணங்கப்படுவது போன்று காட்சி தருகின்ற பெண் தெய்வம் ஆநிரை கவர்கின்ற எயினர்கள் வணங்கிய கொற்றவையா என்பது ஆய்வுக்கு உரியது.

சங்க இலக்கியங்கள் கொற்றவையை முருகனின் தாய் என்று குறிப்பிடுகின்றன. முருகனைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களிலும் "கொற்றவை சிறுவ" என்றும் "மலைமகள் மகனே" என்றும் கொற்றவை முதன்மைப்படுத்தப்படுகிறாள். ஆனால் சங்க காலத்தில் கொற்றவை வழிபாடு அருகிவிட்டது. கொற்றவையை வைத்து செய்யப்பட்ட சில வழிபாடுகள் சங்க காலத்தில் முருகனைக் வைத்து செய்யப்பட்டதை காணக் கூடியதாக இருக்கிறது.

சங்க காலத்தில் தமிழர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்களவு ஆரியர்களின் செல்வாக்கு ஊடுருவி விட்டதை இங்கே குறிப்பிட வேண்டும். அதுவரை தாய்வழிச் சமூகமாக இருந்த தமிழர்கள் அதன் பிறகு பெண் தெய்வங்களை தவிர்த்துக் கொண்டு, ஆண் தெய்வங்களை வழிபடத் தொடங்கினார்கள்.

இங்கே ஒரு விடயத்தை நாம் கவனிக்க வேண்டும். ஏறக்குறைய ஒரு ஆயிரம் ஆண்டுகள் கொற்றவையை மக்கள் வணங்கினார்கள். பின்பு கொற்றவை இருந்த இடத்தில் முருகன் வந்து விடுகின்றான். அப்படி முருகனைக் கொண்டு வருவதற்கு "கொற்றவையின் மகனே முருகன்" என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. சில நூறு ஆண்டுகள் கழிந்த பின்பு முருகன் இருந்த இடத்தில் "ஸ்கந்தன்" வந்து உட்கார்ந்து கொள்கிறான். இங்கே "முருகனும் ஸ்கந்தனும் ஒன்றுதான்" என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

(பெண் தெய்வ வழிபாட்டுச் சமூகமாக இருந்த தமிழர்கள், பின்பு ஆண் தெய்வ வழிபாட்டுச் சமூகமாக மாறி, பின்பு ஆரிய வழிபாட்டுச் சமூகமாக மாறிவிட்டதை கொற்றவை, முருகன், ஸ்கந்தன் என்கின்ற மூன்றையும் வைத்து இலகுவாக புரிந்து கொள்ளமுடியும்.)

இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். ஆண் தெய்வ வழிபாட்டினை உடைய ஆரியர்கள் இந்தியாவிற்குள் தமது தெய்வங்களை பரப்புவதற்காக, அந்த மண்ணின் மக்களுடைய தெய்வங்களை இழிவுபடுத்தினார்கள். பெண் தெய்வ வழிபாட்டை கேவலப்படுத்தும் நோக்கோடு, பெண்களையே கேவலப்படுத்தினார்கள். பெண் தெய்வங்கள் பற்றி காமம் சார்ந்த கதைகளையும் புனைந்தார்கள்.

ஆரம்பத்தில் ஆரியர்கள் பெண்கள் விடயத்தில் ஒரு சமரசப் போக்கை கடைப்பிடித்ததை சில இடங்களில் காணக் கூடியதாக இருக்கிறது. இந்திய மண்ணிலே பெண்கள் கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். சங்க இலக்கியங்களை படைத்த புலவர்களில் ஏறக்குறைய 50 பேர் பெண்கள் என்பதை இங்கே நினைவில் கொள்க. பெண்கள் கல்வி கற்றவர்களாக இருந்ததோடு மக்கள் தமது முதற் தெய்வங்களாக பெண் தெய்வங்களையும் வழிபட்டார்கள்.

ஆரியர்களும் இவைகளைப் பார்த்து "பெண் ஆணை விட நான்கு மடங்கு அறிவானவள்" என்று கூட தமது வேதங்களில் எழுதினார்கள். ஆணை விட பெண் பலம் மிக்கவள் என்றும் எழுதினார்கள். பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்த ஆதே ஆரியர்கள் தமது புராணத்தில் வாதில் ஆண்களை வென்ற அறிவு மிக்க ஒரு பெண்ணையும் படைத்திருக்கிறார்கள்.

உலகில் இருந்து வந்த அனைத்து அறிஞர்களையும் வாதம் செய்து வென்று, தன்னுடைய துணையை தானே தேர்ந்தெடுத்து, தன்னுடைய துணைக்கு வழிகாட்டியாக இருந்து, பின்பு கணவனோடு சேர்ந்து துறவும் மேற்கொண்ட மைத்ரேயி என்கின்ற ஒரு பெண் பாத்திரமும் வேதங்களில் வருகிறது. ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது, அங்கே இருந்து அறிவு மிக்க பெண்களைக் கண்டு இப்படி ஒரு பாத்திரத்தை அவர்கள் தமது கதைகளில் உருவாக்கியிருக்கக் கூடும்.

ஆனால் பின்பு மெது மெதுவாக அவர்கள் மைத்ரேயிக்களை இல்லாது செய்து, ஆணுக்கு அடங்கி நடக்கின்ற முட்டாள்தனமான சீதைகளையும் நளாயினிகளையும் உருவாக்கினார்கள். பெண்களுக்கு கல்வியை தடை செய்து அடக்கி ஒடுக்கினார்கள்.

இதற்கான காரணம் தமது மதத்தை (ஆண் தெய்வ வழிபாடு) இந்தியாவில் பரப்புவதுதான். அதற்கு தடையாக நின்ற பெண் தெய்வங்களையும், பெண்களின் அறிவையும் இழிவு செய்து இல்லாது ஒழித்தார்கள். ஒழிக்க முடியாத சில இடங்களில் சமரசம் செய்து கொண்டார்கள். பெண் தெய்வங்களை தம்முடைய ஆண் தெய்வங்களுக்கு அடங்கி நடக்கின்ற மனைவிகளாகவும், துணைவிகளாகவும் மாற்றினார்கள்.

(அடுத்த பாகத்துடன் முடிவுறும்)

http://www.webeelam.com

Monday, February 25, 2008

இந்து மதமும் பெண்களும் (பாகம் 7)

இந்து மதம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறது என்று சிலர் புருடா விட்டுக் கொண்டு திரிவார்கள். இன்றைக்கு உள்ள பெரிய மதங்களில் பெண் வழிபாடு உள்ள ஒரே மதம் இந்து மதம் என்று பெருமை வேறு பேசுவார்கள். இவர்கள் வணங்குகின்ற இந்தப் பெண் தெய்வங்களையே இந்து மதம் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதை அறிந்தால் இவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்.

வைணவத்தில் உள்ள வடகலை, தென்கலை பிளவிற்கு காரணமும் பெண்தான் என்று சொல்லியிருந்தேன். அப்படிச் சொன்னதற்கான காரணத்தை இனிப் பார்ப்போம். வடகலை, தென்கலை என்கின்ற இந்த இரண்டு பிரிவுகளிலும் ஏறக்குறைய 40 விதமான வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த இரண்டு பிரிவினரும் நிறத்தில் கூட சற்று வேறுபட்டிருப்பார்கள் என்று கூட சிலர் சொல்வது உண்டு.

வடகலை, தென்கலை வேறுபாடுகள் உருவாவதற்கான காரணங்களாக பிரபந்தங்கள் பற்றிய சர்ச்சை, ராமானுஜர் மற்றைய சாதியனரையும் பூணுல் அணிவித்து பார்ப்பனர் ஆக்கியதால் உருவாகிய வேறுபாடுகள் போன்றவைகளை காரணங்களாக சொல்வார்கள். ஆனால் இவைகளை விட இவர்களுக்குள் பிளவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பெருமாளின் துணைவியாராகிய பிராட்டியார் பற்றிய சர்ச்சைதான்.

வைணவர்கள் வணங்கும் பெருமாளோடு பக்கத்திலேயே பிராட்டியார் அமர்ந்திருக்கிறார். இந்தப் பிராட்டியாருக்கு பக்தர்களுக்கு மோட்சத்தை வழங்கும் சக்தி இருக்கிறாதா என்பதில்தான் வைணவர்களுக்குள் சர்ச்சை ஆரம்பமானது. "பரமாத்மா", "ஜீவாத்மா" போன்ற சொற்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். இராமாயணத்தை போதிக்கின்ற சிலர் இராமனை "பரமாத்மா" என்றும் சீதையை "ஜீவாத்மா" என்றும் கூறுவதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

பரமாத்மா என்று கடவுளையும் ஜீவாத்மா என்று மனிதப்பிறப்பையும் சொல்வார்கள். பெருமாளின் துணைவியாக இருந்தாலும், பிராட்டியார் ஒரு ஜீவாத்மா மட்டுமே என்பது ஒரு பிரிவினரின் வாதம். "பிராட்டியாரால் பக்தர்களுக்கு மோட்சத்தை வழங்க முடியாது, அவர் ஒரு பெண், பெண்ணிற்கு மோட்சம் வழங்கும் சக்தி இல்லை, வேண்டுமென்றால் பக்தருக்கு மோட்சம் வழங்கச் சொல்லி பெருமாளிடம் சிபாரிசு செய்யலாம்" என்ற கருத்தோடு அவர்கள் உறுதியாக நின்றார்கள்.

கடவுளின் மனைவியாக இருப்பதால், அவருக்கும் கடவுளின் அம்சம் வந்துவிடுகிறது என்றும், அதனால் அவராலும் பக்தர்களுக்கு மோட்சம் வழங்க முடியும் என்று மறுபிரிவினர் வாதிட்டார்கள். இப்படி ஆரம்பித்த பிரச்சனை வடகலை, தென்கலை என்று பிளவில் போய் முடிந்தது.

கடவுளுக்குப் பக்கத்தில் துணைவியாக அமர்ந்திருந்தாலும், பெண் என்பதால் அவருக்கு மோட்சம் வழங்கும் சக்தி உண்டா என்ற விடயத்தில் இந்து மதத்தால் ஒருமித்த கருத்தை காண முடியவில்லை என்பதைத்தான் இங்கு கவனிக்க வேண்டும். ஒரு புறம் அகிலாண்டேஸ்வரி, லோகநாயகி என்றெல்லாம் பெண் தெய்வங்களை புகழ்ந்து கொண்டே, மறுபுறம் ஒரு மோட்சம் வழங்குகின்ற சக்தி கூட இல்லை என்று சொல்லப்படுகின்ற நிலையில்தான் இந்தப் பெண் தெய்வங்களை இந்து மதம் வைத்திருக்கிறது.

ஆண் தெய்வங்களால் அழிக்க முடியாத அசுரர்களை பெண் தெய்வங்கள் அழித்ததாக புராணங்கள் இருக்கின்றனவே என்ற கேள்வி இந்த இடத்தில் உங்களுக்கு வரலாம். அந்தப் புராணங்களை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். பெண் தெய்வங்கள் ஆண் தெய்வங்களின் பலத்தைப் பெற்றுத்தான் அசுரர்களை அழித்திருப்பார்கள்.

பெண் தெய்வங்களுக்கு என்றே பெரும் எடுப்பில் கொண்டாடப்படுகின்ற நவராத்திரி பற்றிய புராணக் கதையிலும் இந்த விடயம் அடங்கியிருக்கிறது. பெண்ணால் மட்டுமே கொல்லப்படக் கூடிய வரம் பெற்ற மகிசாசுரனை அழிப்பதற்கு பராசக்தி தன்னுடைய பலத்தோடு மட்டும் செல்லவில்லை. ஒரு பெண்ணாகிய அவளால் அது முடியாது என்று, பராசக்தி அனைத்து ஆண் தெய்வங்களின் பலத்தையும் கேட்டுப் பெறுகிறாள். சிவன், விஸ்ணு, பிரம்மன், இந்திரன், தேவர்கள் என்று அனைத்து ஆண்களின் பலத்தையும் பெற்று மகிசாசுரனை அழிக்கிறாள். பெண்ணிற்கு தனித்து எந்த சக்தியும் இல்லை என்பதுதான் இங்கு உணர்த்தப்படுகிறது.

ஆண் தெய்வத்தோடு போட்டி போட்டு பெண் தெய்வங்கள் தோற்றுப் போன கதைகளை சொல்கின்ற ஓராயிரம் புராணங்கள் இந்து மதத்தில் உண்டு. பெண்கள் பொதுவாக நடனத்தில், நளினத்தில் வல்லவர்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் அப்படியான நடனத்திலும் சிவன் பார்வதியை வென்றுவிடுகிறார். அதுவும் எப்படி சிவன் வெற்றி பெறுகிறார் தெரியுமா?

சிவனிற்கும் பார்வதிக்கும் நடனப் போட்டி உச்சக் கட்டத்தை அடைகிறது. பார்வதி வெற்றி பெற்றுவிடும் நிலையில் இருக்கிறார். அப்பொழுது சிவன் வலதுகாலை நிலத்தில் ஊன்றியபடி இடது காலை மேலே தூக்கினார். நடனத்தில் ஒரு வகை என்று பார்வதி நினைத்துக் கொண்டிருக்க சிவனுடைய இடது கால் மேலும் உயர்ந்து கொண்டே போனது.

இடது காலை மேலே உயர்த்தி தன்னுடைய ஆண் குறி பார்வதியின் கண்ணில் படுவது போன்று சிவன் செய்தார். பார்வதி அதைக் கண்டு திகைத்துப் போய் செய்வதறியாது நின்றார். பார்வதி அதிர்ச்சியில் நிற்க, சிவன் இடது காலை தூக்கியபடியே தொடர்ந்து ஆடி வெற்றி பெற்றார். நடராஜர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

பெண் பலவீனமானவள் என்பதையும், பெண்ணை தோற்கடிக்க எந்த வழியையும் கையாளலாம் என்பதையும் இந்து மதம் இந்தப் புராணக் கதையின் மூலம் சொல்கிறது. தன்னுடைய கணவனின் ஆண்குறியைக் கண்டு செய்வதறியாது சிலை போல் நின்ற அதே பார்வதி ஒரு குதிரையின் குறியைக் கண்டு விரகதாபத்தில் துடித்த கதையும் உண்டு.

ஒரு முறை பார்வதி ஒரு குதிரையின் நீளமான குறியைக் கண்டு விட்டார். அதைக் கண்டு மோகித்து விரகதாபத்தில் பார்வதி துடித்தார். பார்வதி நிலையை உணர்ந்த சிவன் தானே ஒரு குதிரையாக மாறி பார்வதியை புணர்ந்து, அவருடைய விரகதாபத்தை தீர்த்து வைத்தார்.

இந்து மதம் சாதரண மானிடப் பெண்களைத்தான் இழிவுபடுத்துகிறது என்று யாரும் நினைத்து விட வேண்டாம். தெய்வங்கள் என்றாலும் அவைகள் பெண்களாக இருக்கின்ற போது, அந்தப் பெண்களையும் சேர்த்தே இந்து மதம் இழிவுபடுத்தி வந்திருக்கிறது.

பெண் தெய்வம் என்பவள் இறந்தவர்களுக்கு மோட்சம் வளங்கும் சக்தி அற்றவள், ஆணின் பலம் இல்லாமல் எதையும் செய்ய முடியாதவள், ஆண் தெய்வத்திற்கு அடங்கி இருக்க வேண்டியவள், கணவனிடமோ, குதிரையிடமோ, அல்லது வேறு யாரிடமோ ஆண்குறியை கண்டு விட்டால் வாய்பிளந்து நிற்பவள்.... இப்படித்தான் இந்து மதம் பெண் தெய்வங்களை "போற்றுகிறது".

பெண் தெய்வங்களுக்கு என்று நடத்தப்படுகின்ற விழாக்கள் கூட அருவருப்பான ஆணாதிக்க சிந்தனையை கொண்டவைதான். விழாக்களுக்கான காரணங்களை தேடிப் பார்த்தால், அவைகள் புரியும். எத்தனையோ கோயில்களில் இன்றைக்கும் ஆண் தெய்வங்களுக்கு விசேடமான நெய்வேத்தியமும், பெண் தெய்வங்களுக்கு மிகச் சாதரண படையலும் படைக்கப்படுகின்றன.

பெண் தெய்வங்களையே இந்து மதம் இழிவு படுத்துகின்ற போது, சாதரண மானிடப் பெண்களை மந்திரங்களிலும், நடைமுறையிலும் இழிவுபடுத்துவது குறித்து இனியும் உங்களுக்கு ஏதும் ஆச்சரியம் உண்டா?

பெண் பற்றி இந்து மதம் என்னவெல்லாம் சொல்கிறது என்பதை இதுவரை ஓரளவு பார்த்தோம். பெண் மீது இந்து மதம் இப்படி வெறுப்பை கொட்டுவது ஏன் என்பதை இனிப் பார்ப்போம்.

தொடரும்......

http://www.webeelam.com

Friday, February 15, 2008

இந்து மதமும் பெண்களும் (பாகம் 6)

புராணங்களை கதைகள் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அந்தக் கதைகளின் அடிப்படையில்தான் தமது சடங்குகளையும் விழாக்களையும் இந்துக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து மதம் என்பது வேதங்கள், சாத்திரங்கள், புராணங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் ரிக், யதூர் போன்ற வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. அதன் மூலம் இந்த வேதங்கள் பெண்களை இழிவுபடுத்துவதைக் கண்டோம்.

மனுதர்ம சாத்திரத்தையும் உதாரணம் எடுத்துப் பார்த்தோம். பகவத்கீதையையும் உதாரணத்திற்கு எடுத்தோம். பின்பு ஒரு புராணக் கதையையும் உதாரணத்திற்கு எடுத்தோம். எல்லாமே பெண்களை இழிவுபடுத்துகின்றன. பெண் தாழ்ந்த பிறப்பு என்று சொல்கின்றன. கற்பு அற்றவர்கள் என்கின்றன. தோசம் உள்ளவள் என்கின்றன.

நாம் பார்த்த புராணக் கதையின் படி பெண்ணினுடைய தோசம்தான் மாதவிடாயாக வெளிப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் தீட்டு என்று சொல்லி தள்ளி வைப்பதன் காரணம் இதிலிருந்துதான் வந்தது.

பெண்களை மூன்று நாட்களும் தள்ளி வைப்பதற்கு இன்றைக்கு சிலர் அசுத்தம், ஆரோக்கியம், அது, இது என்று விஞ்ஞான விளக்கங்கள் தருவார்கள். ஆனால் அவைகள் உண்மை இல்லை.

மேற்குநாட்டுப் பெண்கள் வீட்டில் தள்ளி இருப்பது இல்லை. அங்கு யாரையும் எந்தக் கிருமியும் பாதிக்கவில்லை. இன்றைக்கு பெண்கள் தமது மாதவிடாய் காலங்களிலும் பல ஆயிரம் பேர் வேலை செய்யும் தொழிற்சாலைகளிற்கு சென்று வேலை செய்கின்றார்கள். அங்கும் யாரையும் எந்தக் கிருமியும் பாதிக்கவில்லை.

ஆனால் இன்றைக்கும் மாதவிடாய் உள்ள ஒரு இந்துப் பெண்ணால் ஒரு கோயிலிற்கு சென்று வழிபட முடியாது. கோயிலில் யாரும் இல்லாத நேரத்தில் கூட போக முடியாது. தீட்டு என்று சொல்லி தடுத்து விடுவார்கள். மாதவிடாய் என்பது பெண்ணினுடைய தோசத்தின் வெளிப்பாடு என்று இந்து மதம் உறுதியாக நம்புவதே இதற்கு காரணம். ஒரு புராணக் கதை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு இது ஒரு உதாரணம்.

புராணங்களை வெறும் கதைகள் என்று தூக்கி எறியாது, அதை உண்மை என்று நம்பி தொடர்ந்தம் அவைகளை இந்து மதம் கடைப்பிடித்து வருவதாலேயே நாமும் அது குறித்து பேச வேண்டி உள்ளது. இந்து மதம் சொல்வதும் செய்வதும் அனைத்தும் பெண்களுக்கு எதிரானதே.

இந்து மதத்தில் பெண்ணை வைத்து ஒரு பிளவு ஏற்பட்டதாக சொல்லியிருந்தேன் அல்லவா? அதை இப்பொழுது பார்ப்போம்.

இந்து மதத்தில் பல பிரிவுகள் இருப்பதாக சொல்வார்கள். அதிலே சைவம், வைணவம் போன்றவைகள் முக்கியமானவை. சைவத்திலும் வீரசைவம், சிந்தாந்த சைவம் என்ற பிரிவுகள் இருக்கின்றன. வைணவத்தில் தென்கலை, வடகலை என்று பிரிவுகள் இருக்கின்றன.

வீரசைவம், சைவசிந்தாந்தம் போன்ற பிரிவுகளுக்கிடையில் பெரியளவில் சச்சரவுகள் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் வடகலைக்கும் தென்கலைக்கும் நடந்த பிரச்சனைகள் உலகப் பிரசித்தம். இன்றுவரை பல இடங்களில் இவர்களுக்குள் சர்ச்சைகள், பகையுணர்வுகள் உண்டு. ஒரு பிரிவினர் மற்ற பிரிவினருக்குள் திருமணம் செய்து கொள்வது என்பது வெகு வெகு குறைவு.

வடகலை, தென்கலை பிரிவுகளை நாமங்களை வைத்துத்தான் இனம் காண்பார்கள். வடகலையினர் "Y" வடிவத்திலே நாமம் கீறி நடுவில் ஒரு கோடு போடுவார்கள். தென்கலையினர் "U" வடிவத்தில் நாமம் கீறி ஒரு கோடு போடுவார்கள்.

இந்த நாமம் பற்றி இரு தரப்பும் தருகின்ற விளக்கம் ஒன்றுதான். நாமத்தின் இரு கரையும் உள்ள கோடுகள் பெருமாளின் பாதங்களாம். இரண்டு கோடுகளும் பெருமாளின் பாதங்கள் என்றால், நடுவில் சிவப்புக் வண்ணத்தில் உள்ள குறி எதுவென்று உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்.

சைவர்கள் ஆண்குறியை லிங்கம் என்று வணங்குவார்கள். வைணவர்கள் நெற்றியில் பூசுவார்கள். இதை பின்பு சந்தர்ப்பம் வரும் போது தனியாகப் பார்ப்போம்.

இந்த வடகலை, தென்கலை நாமம் பற்றிய ஒரு சர்ச்சை வெகுபிரசித்தம். சிறிரங்கம், காஞ்சிபுரம் பெருமாள் கோயில்களில் நின்ற யானைகளுக்கு எந்த நாமம் போடுவது என்ற பிரச்சனை வந்து அது நீதிமன்றத்தில் நீண்ட காலம் இழுபட்டது.

வெள்ளைக்காரர் காலத்தில் தொடங்கிய வழக்கு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் தொடர்ந்தது. சில நேரங்களில் ஒரு நாமத்திற்கு சார்பாக தீர்ப்பு வரும். ஆனால் அதற்குள் அந்த யானை இறந்து போயிருக்கும். இப்பொழுது புதிய யானைக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி நாமம் சாத்த மறு தரப்பு விடாது. அது பழைய யானைக்குத்தான் பொருந்தும், புதிய யானைக்கு எமது நாமத்தை சாத்தத்தான் வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றம் போவார்கள். அனேகமாக தீர்ப்பு வருவதற்கு முதல் அந்த யானையும் இறந்து போயிருக்கும்.

இங்கிலாந்து நீதிமன்றங்கள் வரை இந்தப் பிரச்சனை போனது. வெள்ளைக்கார நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இதை "Y,U" பிரச்சனை என்றுதான் அழைப்பார்கள். இப்படி பல வேடிக்கைகளையும் பகைகளையும் உருவாக்கிய இந்த "Y,U" பிரிவுகள் ஏன் உருவாகின என்று தெரியுமா? இதற்கு காரணம் பெண் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

தொடரும்.....

http://www.webeelam.com