Sunday, October 26, 2008

இந்தியக் கூட்டமைப்பு உடைவதற்கான காரணிகள்

தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான எழுச்சி தினம் தினம் புதிய பரபரப்புகளை உருவாக்கி வருகின்றது. மதிமுகவின் தலைவர் வைகோ, பொருளாளர் கண்ணப்பன், திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் போன்றோர் “இந்திய இறையாண்மைக்கு” எதிராக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை உருவாகின்ற ஒவ்வொரு முறையும் அதற்கு எதிரான சக்திகளும் சுறுசுறுப்பாக செயற்படத் தொடங்கும். ராஜீவ்காந்தி கொலையில் இருந்து இந்திய ஒருமைப்பாடு வரை பேசி மக்களுக்கு பூச்சாண்டி காட்ட முற்படும். இம்முறையும் அப்படியே நடக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு உயர்ந்த ஒரு இடம் இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள். பல்வேறுபட்ட கருத்துக் கணிப்புகளின் ஊடாக வெளிக்கொணரப்பட்ட உண்மை இது. தமிழீழத்திற்கும், தமிழீழ மக்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழத் தேசியத் தலைவருக்கும் உணர்வுபூர்வமான ஆதரவை தமிழ்நாட்டு மக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

இவற்றைக் கண்டு பதறியடித்துப் போய் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் தங்கபாலு, அதிமுகவின் ஜெயலலிதா, பிஜேபியின் ராதகிருஸ்ணன், இந்து முன்னணியின் ராமகோபாலன், மற்றும் துக்ளக் சோ, இந்து ராம், சுப்ரமண்யசுவாமி என்று எல்லொரும் கச்சை கட்டிக் கொண்டு அறிக்கை விடத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழின உணர்வாளர்களை கைது செய்யும்படி கலைஞரின் அரசு மீது இவர்கள் அழுத்தத்தை பிரயோகிக்கிறார்கள்.

தமிழீழத் தனியரசு உருவானால் தமிழ்நாடும் பிரிந்து போய் விடும் என்று இந்தியாவின் பார்ப்பனிய சக்திகள் நீண்ட காலமாகவே பரப்புரை செய்து வருகின்றன. ஆனால் இது ஒரு அர்த்தமற்ற வாதமாகவே இருக்கிறது. இந்தியாவின் மாநிலங்கள் தனி நாடு ஆவதற்கான காரணிகள் போதுமான அளவு இந்தியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே இருக்கின்றன. அந்தக் காரணிகளுக்கும் தமிழீழத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. யார் விரும்புகிறார்களோ, இல்லையோ இந்தியா இன்னும் 50 ஆண்டுகளுக்குள் பல தனிநாடுகளாக மாறிவிடும் என்று சொல்வதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு முக்கிய காரணங்களைப் பார்ப்போம்.

இந்தியாவில் இன்றைக்கு தேசியக் கட்சிகள் என்று சொல்லக் கூடிய கட்சிகளாக இரண்டு கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியுமே அவைகள். இந்த இரண்டு கட்சிகளும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் முக்கிய கட்சிகளாக விளங்குகின்றன.

ஆனால் இன்றைக்கு இந்த இரண்டு தேசியக் கட்சிகளையும் விட இந்தியாவின் மாநிலங்களில் உள்ள அந்தந்த மாநிலக் கட்சிகள் பலம் மிகுந்த கட்சிகளாக வளர்ந்து வருகின்றன. காங்கிரசும் பிஜேபியும் மூன்றாம் இடத்தில் கூட இல்லாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தேசியக் கட்சி என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்ற காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து போய் தனிக் கட்சி கண்டவர்களும் இன்றைக்கு மாநிலங்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

மாநிலக் கட்சிகள் பலம் பெற்று வருவதை கடந்த தேர்தல்களின் பெறுபேறுகளில் இருந்து சுலபமாக புரிந்து கொள்ள முடியும். 1951இல் நடந்த இந்தியாவின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் 400இற்கும் மேற்பட்ட இடங்களை தேசியக் கட்சிகள் கைப்பற்றிக் கொள்ள, வெறும் 34 இடங்களையே மாநிலக் கட்சிகள் பெற்றன. ஆனால் இன்றைய நிலையில் மாநிலக் கட்சிகள் பெரும் வளர்ச்சியடைந்து நிற்கின்றன.

1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏறக்குறைய 350 இடங்களை தேசியக் கட்சிகள் பெற்றுக் கொள்ள, 190 வரையான இடங்களை மாநிலக் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் பெற்றன. 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏறக்குறைய 300 இடங்களை தேசியக் கட்சிகள் பெற்றுக் கொள்ள, 240 வரையான இடங்களை மாநிலக் கட்சிகள் சுயேட்சைகளும் சேர்ந்து பெற்றன. 1999 தேர்தலில் பாரிய வித்தியாசம் இல்லையென்றாலும் மாநிலக் கட்சிகள் மேலும் சில இடங்களை அதிகமாகக் பெற்றுக் கொண்டன.

கடைசியாக 2004ஆம் ஆண்டு தேர்தலில் 283 இடங்களை தேசியக் கட்சிகள் பெற, மாநிலக் கட்சிகளும் சுயேட்சைகளும் 260 இடங்களைப் பெற்றுள்ளன. வெறும் 34 பேரோடு ஆரம்பித்த கணக்கு இன்றைக்கு 260 இடங்கள் வரை வந்து நிற்கின்றது.

சிலர் இந்தியாவின் கம்யூனிசக் கட்சிகளையும் தேசியக் கட்சிகளின் பட்டியலுக்குள் சேர்ப்பர். ஆனால் இந்தக் கட்சிகளும் மேற்கு வங்கம் போன்ற ஒரிரு மாநிலங்களில் மட்டுமே பலமாக இருக்கின்றன. அந்த மாநிலங்களை தாண்டி மற்றைய மாநிலங்களில் அந்தக் கட்சிகள் வலுவாக இல்லை. இந்தக் கட்சிகள் தமது கம்யூனிசக் கொள்கைகளை விட தாங்கள் ஆளுகின்ற மாநிலத்தின் நலன்களை முன்னிலைப்படுத்துவது இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விடயம்.

இந்த வகையில் மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் தமது பலத்தை அதிகரித்துக் கொண்டு போகின்றன. தேசியக் கட்சிகள் என்று சொல்லப்படுகின்ற காங்கிரசும், பிஜேபியும் பலமிழந்து, மாநிலக் கட்சிகளின் தயவில் நிற்க வேண்டிய நிலை ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் உருவாகி வருகின்றது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் என்பது காங்கிரசிற்கும் பிஜேபிக்கும் நடக்கின்ற போட்டி என்று ஒரு புறம் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் தேசியக் கட்சிகளுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும் நடக்கன்ற போட்டியாக மாறிவிட்டது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மாநிலக் கட்சிகள் மேலும் அதிக இடங்களை பெற்றுக் கொள்ளும் என்று உறுதியாக சொல்லலாம்.

இப்படி மாநிலக் கட்சிகள் பலம் பெற்று ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்குகின்ற பொழுது, மாநிலங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் இந்தியாவை பல தனிநாடுகளாக உடைந்து போக தூண்டும். மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் மாநிலக் கட்சிகள் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி பேச்சுவார்த்தை மூலம் தனித் தனி நாடுகளாக தமது மாநிலங்களை ஆக்கிக் கொள்ளும்.

இந்தியத் தேசிய உணர்வு நீர்த்துப் போய், மொழித் தேசிய உணர்வை மாநில நலன் சார்ந்த பிரச்சனைகள் மேலும் ஓங்கச் செய்யும். இதில் தண்ணீர் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும். வரும் காலத்தில் தண்ணீரால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை சுருக்கமாகப் பார்ப்போம்.

உலகின் மூன்றில் இரண்டு பாகமாக தண்ணீராக இருக்கின்றது. ஆனால் 96.5 வீதமான தண்ணீர் உப்புநீராக மனிதனுக்கு பிரயோசனம் அற்றுக் கிடக்கிறது. மிகுதி 3.5 வீதத்தில் கூட 1.8 வீதமான தண்ணீர் மனிதனுக்கு பிரயோசனப்படாதவாறு ஐஸ் கட்டியாக உறைந்து போயிருக்கிறது. ஆகவே 1.7 வீதமான தண்ணீரே மனிதனால் பயன்படுத்தப்படக்கூடிய நிலையில் இருக்கின்றது.

அதிகரித்து வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கையால் நீரின் தேவையும் அதிகரித்து வருகின்றது. சில நாடுகளின் நீரின் விலை எண்ணையின் விலையை தாண்டிப் போய் விட்டது. நீர்ப் பற்றாக்குறையால் ஆண்டு தோறும் 5 மில்லியன் மக்கள் உலகில் இறக்கின்றார்கள் என்பதில் இதில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி. இன்றைக்கு எண்ணைய்க்காக நடக்கும் யுத்தங்கள் போன்று வரும் காலத்தில் நீருக்காக யுத்தங்கள் நடக்கும் என்று பல நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. மனிதனால் நீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. நீர்ப் பற்றாக்குறை என்பது மனிதனை எந்தச் செயலையும் செய்யத் தூண்டும்.

மற்ற எல்லா நாடுகளையும் விட இந்தியாவிலேயே மக்கள் தொகை வேகமாக அதிகரித்துக் கொண்டு வருகின்றது. 2050இல் 200 கோடியை இந்திய மக்களின் தொகை தாண்டி விடும் என்று சொல்லப்படுகிறது. உலகில் உள்ள குடிநீரில் 4 வீதமான குடிநீர் இந்தியாவில் இருக்கின்றது என்பது இதில் இந்திய ஒருமைப்பாட்டிற்கு சாதகமான செய்தி. ஆனால் இந்த நீர் சில குறிப்பிட்ட மாநிலங்களிலேயே இருக்கின்றது என்பதும், பல மாநிலங்கள் பெரும் நீர்ப் பற்றாக்குறையில் திணறிக் கொண்டிருப்பதும் இதில் பாதகமான செய்தி.

2050இல் 200 கோடியை இந்திய மக்கள் தொகை தாண்டுகின்ற பொழுது நீர் வளம் உள்ள மாநிலங்களே நீருக்காக திண்டாட வேண்டி வரும். இவற்றை விட நீர் வளம் பொருந்திய மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை அமைத்து நீரைச் சுரண்டத் தொடங்கியிருக்கின்றன. மக்கள் தொகையும் பெருகி, இருக்கின்ற நீர்வளத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டி விட, மற்றைய மாநிலங்களோடு தற்பொழுது பகிர்ந்து கொள்கின்ற சிறிய அளவிலான நீரைக் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநில அரசு அயல் மாநிலங்களுடன் செய்து கொண்ட நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தது. அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. எததனையோ நடுவர் மன்றங்கள் அமைத்தும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரைக் கொடுக்க மறுக்கின்றது. ஆந்திராவிற்கும் கர்நாடகத்திற்கும் நதிநீர் பிரச்சனை இருக்கின்றது. இப்படி ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இடையில் இந்த நீர்ப் பிரச்சனை இருக்கின்றது.

இந்த நீர்ப் பிரச்சனை இந்தியத் தேசிய உணர்வை இல்லாமல் செய்கின்றன. மாநில தேசிய உணர்வுகள் மேலோங்குகின்றன. மற்றைய மாநிலத்தவர்கள் தமது மாநிலங்களில் குடியேறி தமது வளங்களை சுரண்டுவதாகக் கூட சில இடங்களில் குரல்கள் ஒலிக்கின்றன. மும்பையாக இருக்கட்டும், கர்நாடகமாக இருக்கட்டும், மாநில நலனுக்காக ஒலிக்கின்ற குரல்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலைதான் இன்றைக்கு இருக்கின்றது.

நீர்ப் பற்றாக்குறை விரைவில் மிகப் பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்று தெரிந்தும் இந்திய அரசு அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியதாக தெரியவில்லை. மழை நீரை சேகரிக்கின்ற, நதி நீர் கடலில் கலக்காமல் தடுக்கின்ற, கடல்நீரை குடிநீராக மாற்றுகின்ற என்று எந்த ஒரு ஏற்பாட்டிலும் இந்திய அரசு தீவிரமாக இறங்கியதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மாநில அரசுகளும் இதைப் பற்றி சிந்தித்ததாக தெரியவில்லை.

தொலைநோக்கு சிந்தனையோடு நீர்ப் பிரச்சனையை தீர்ப்பதற்கு நேரத்தையும் நிதியையும் ஒதுக்குவதை விட்டு விட்டு, இந்திய அரசு சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புகிறது. 1950களில் மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நிலாவுக்கு ராக்கட் அனுப்பி விளையாட்டுக் காட்டியதை, ஏறக்குறைய 40 ஆண்டுகள் கழித்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்து இந்திய அரசு செய்கிறது. இந்தியாவும் நிலவுக்கு ராக்கெட் அனுப்பியது என்கின்ற ஒரு பெருமையை தவிர, இதில் அப்படி என்ன வரப் போகிறது என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இந்தப் பெருமை இந்திய தேசிய உணர்வை தற்காலிகமாக கட்டிக் காக்கும் என்று இந்திய அரசு கணக்குப் போடக் கூடும்.

சச்சின் டெண்டுல்கரும், நிலாவில் இந்திய ராக்கட்டும் தண்ணீர் பிரச்சனையின் முன்பு எதுவுமே இல்லாமல் போய்விடும். தண்ணீர் பிரச்சனையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால், கடைசியில் இந்தியா பல நாடுகளாக உடைந்து போவதை தடுக்க முடியாது. இப்படி இந்தியா உடைவதற்கான காரணிகள் இந்தியாவிற்கு உள்ளேயே இருக்கின்றன. அதற்கு தீர்வு காண்பதை விட்டு விட்டு வேறு இடங்களில் இந்திய அரசு காரணத்தை தேடுகிறது. பொய்யான கற்பிதங்களை செய்கிறது.

கடைசியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். வரும் காலத்தில் மாநிலக் கட்சிகள் மேலும் பலம் பெற்று, மாநில உணர்வுகள் இன்னும் மேலோங்கி, தண்ணீர் பிரச்சனையும் பூதாகரமாக மாறி இருக்கின்ற நிலையில், “இந்தியாவோடு இருந்த காரணத்தால் எங்களால் தமிழீழ மக்களுக்கு உதவ முடியவில்லையே” என்ற வேதனையான உணர்வும் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்குமாயின், அது இந்தியா உடைவதை மேலும் துரிதப்படுத்துமே தவிர, குறைக்காது.

- வி.சபேசன்

9 comments:

Anonymous said...

உண்மை,அப்படி ஒரு நிலை வரவேண்டும்.

வி.சபேசன் said...

மணி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

" யார் விரும்புகிறார்களோ, இல்லையோ இந்தியா இன்னும் 50 ஆண்டுகளுக்குள் பல தனிநாடுகளாக மாறிவிடும் என்று சொல்வதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு முக்கிய காரணங்களைப் பார்ப்போம். "


சபேசன்‍.



எதை எந்த நேரத்தில் பேசுவது என்பது தெரியாதா? இதை எழுதுவதற்கு என்ன தேவை வந்துள்ளது? எதிர்கால நிகழ்வுகள் எதிர்காலத்தை தீர்மானிக்கட்டும்.

ஈழத் தமிழருக்கு உதவுவதாக எண்ணி அறீவீனமாக எழுதுவதை நிறுத்த வேண்டும்.

தலைவர் பிரபாகரனின் இன்றைய நெருக்கடி ஆயுதம் ஏந்திய சிங்கள இராணுவம் மாத்திரமல்ல............ இடம், பொருள் தெரியாமல் எழுதுகின்றவர்கள் தரும் தொல்லையும் தான்.

யாகாவராயினும் நா காக்க.


ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

Situation doesn't look like as you mentioned. Indian democracy and consitutation will uphold all its rights. TN politicians are not really interested in solving the problems and they would like to play with troubled waters. If at all a solution for TamilEeelam, it rests mainly on LTTE. Though Tamils are very supportive of LTTE on various occasions, One can wonder how long it can ask or allow a section of tamils-more than a generation in Eelam to suffer like these. There could definitely a compromise worked-out this time.. It's very SAD...for these people on the ground there..

வி.சபேசன் said...

கருத்துச் சொன்ன அநானி மற்றும் ஒரு ஈழத் தமிழனுக்கு நன்றி

ஒரு ஈழத் தமிழன்!
"தமிழீழத்தால் தனித் தமிழ் நாடு உருவாகி விடும்" என்று இந்தியாவில் சிலர் பூச்சாண்டி காட்டிக் கொண்டு திரிகிறார்கள். தனித் தமிழ்நாடு அல்ல, தனிக் கேரளா, தனிக் கர்நாடகா, தனி ஆந்திர, தனி மஹாராஸ்டிரா, தனிக் காஸ்மீர் என்று நிறைய தனி நாடுகள் உருவாவதற்கான காரணங்கள் இந்தியாவில் உண்டு. இதைப் பற்றிய ஒரு எதிர்வுகூறலை செய்திருக்கின்றேன். அவ்வளவே.

இந்திய வரைபடம் ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. இந்திய வரைபடத்தை இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் ஒரு போதும் தீர்மானித்தது இல்லை. இனியும் தீர்மானிக்க மாட்டார்கள். இந்திய மக்களே இந்திய வரைபடத்தை ஒவ்வொரு முறையும் மாற்றி அமைக்கிறார்கள்.

தமிழீழத்தால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எந்த ஆபத்தும் நேராது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு இது பொருத்தமான நேரம் என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

webeelam.netஇல் இந்திய இறையாண்மை என்ற தலைப்பில் நீங்கள் இணைத்துள்ள படங்களைப் பார்த்தேன்... ஆயிரம் அர்த்தங்களைக் கொண்ட படங்கள்...

வி.சபேசன் said...

சூரி,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

Very realstic analysis, it is true that third world war for water. we have seen multinational companies like coke, pepsi they are trying to put water(manfucaturing??) plant near by river bed, unforutnetly our goverment also allowed them to take/dig and sell.

Our consitution says provide basic needs to people is state's responsiblity, where as allowing multinational to sell natural resources to us.

thanks for realstic analysis.

Hari

வி.சபேசன் said...

ஹரி,
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி