Monday, January 14, 2008

"சம்பிரதாயம்" என்பதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாதி வெறி!

சாவு வீட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனம்" என்ற தலைப்பில் கணவனின் இறுதி நிகழ்வில் மனைவியின் தாலி பலவந்தமாக கழற்றப்பட்ட சம்பவம் பற்றி எழுதியிருந்தோம்.

இந்தச் சம்பவம் எமக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்திருந்தது. ஆனால் பலருக்கு இது ஒரு சாதரண விடயமாகத்தான் பட்டது. அது மட்டும் அல்ல. தாலி அறுப்புச் சடங்கை ஆதரிக்கவும் செய்தார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் சம்பந்தப்பட்ட பெண்ணின் கதறலை நையாண்டி செய்து நகைச்சுவைப் பதிவுகளையும் எழுதினார்கள்.

இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான சம்பிரதாயங்களை ஆதரித்து, கட்டிக் காப்பாற்றுவதற்கு எமது தமிழ் சமூகம் முனைவதற்கு என்ன காரணம்? கணவனை இழந்து கதறுகின்ற பெண்களை சம்பிரதாயத்தின் பெயரில் சித்திரவதை செய்யும் சடங்குகளை விடமாட்டோம் என்று படித்தவர்கள் கூட அடம்பிடிப்பதற்கு என்ன காரணம்?

இதற்கு மதவெறி ஒரு முக்கிய காரணம். இதனோடு சாதிவெறியும் ஒரு காரணம். சாவுவீட்டில் நடக்கின்ற சம்பிரதாயங்களுக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் ஆச்சரியப்படலாம். சம்பந்தம் இருக்கிறது. இதைச் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். அதற்கு முன் அண்மையில் டென்மார்க்கில் நடந்த ஒரு கூத்தைப் பார்ப்போம்.

சில வாரங்களுக்கு முன்பு டென்மார்க்கில் ஒருவர் இறந்து விட்டார். அவருக்கான இறுதி நிகழ்வுகளை நடத்தித் தர ஒரு பார்ப்பனரை அழைத்த போது அவர் மறுத்துவிட்டார். தன்னுடைய சாதிப் பிரிவு அதைச் செய்வது இல்லை என்றும், பார்ப்பனர்களில் உள்ள "சைவஐயர்" என்னும் பிரிவுதான் சாவுவீட்டில் இறுதி நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்று அவர் சொல்லிவிட்டார். அப்படி செய்யவில்லையென்றால் தான் 31ம் நாள் நிகழ்வுகளை செய்து தரமாட்டேன் என்றும் சொல்லி விட்டார். அவர் ஆலயங்களில் பூசை செய்யும் பிரிவைச் சேர்ந்தவர். இவர்களை ஈழத்தில் "சிவாச்சாரியார்கள்" என்று சொல்வார்கள்.

இறந்தவரின் உறவினர்கள் "சைவஐயரை" தேடி கடைசியில் லண்டனில் ஒருவரைக் கண்டுபிடித்தார்கள். அவர் ஏறக்குறைய 1000 யுரோக்களை கூலியாகக் கேட்டார். அத்துடன் இறுதி நிகழ்வுகளுக்கு தேவையானவை என்று மிக நீளமான பொருட்களின் பட்டியலைக் கொடுத்திருந்தார். எல்லாவற்றிற்கும் சம்மதித்து அவரை லண்டனில் இருந்து வரவழைத்து இறுதி நிகழ்வுகளை செய்தார்கள்.

இனிமேல் இறப்பு ஏதாவது நடந்தால் லண்டனில் இருந்துதான் "சைவஐயரை" அழைக்க வேண்டும் என்பதால், டென்மார்க்கில் உள்ள சில தமிழர்கள் கூடி இதற்காக ஒரு சங்கம் அமைத்துள்ளார்கள். தமிழுக்கு சங்கம் அமைத்த காலம் போய், இன்றைக்கு ஐரோப்பாவில் செத்த வீடு செய்வதற்கு சங்கம் அமைக்கின்ற அளவிற்கு தமிழன் வந்து விட்டான்.

இந்தச் சங்கத்தின் மூலம் தமிழர் கலாச்சாரப்படி இறுதி நிகழ்வுகள் செய்ய என்று சொல்லி டென்மார்க் அரசிடம் பணம் பெற்று, அதன் மூலம் "சைவஐயரால்" ஆகும் செலவை ஈடு செய்வதுதான் அவர்கள் திட்டம்.

இந்தச் சங்கத்தை அமைப்பதற்கான முதலாவது கூட்டம் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்ட ஒருவர் இப்படிச் சொன்னார், "நான் ஒரு செத்த வீட்டிற்கு கொள்ளிப் பானை கொத்தினேன், அதன் பிறகு எல்லோரும் என்னைத்தான் கொள்ளிப்பானை கொத்தக் கூப்பிடுகிறார்கள், நாங்கள் என்ன அந்த ஆட்களோ?". இப்படி கோபமாகவும் வருத்தமாகவும் கேட்ட அவர் நிறையப் புரட்சிக் கவிதைகளை எழுதுபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தச் சங்கத்தின் நோக்கம் டென்மார்க் அரசிடம் இருந்து பணம் பெறுவது மட்டும் அல்ல. சாதியையும் கட்டிக் காப்பதுதான். தனியாளாக கொள்ளிப் பானை கொத்தினால், அவர்களுடைய சாதி மானம் போய் விடுமாம். சங்கத்தின் பெயரில் கொத்தினால், அது பறவாயில்லையாம்.

சாவு வீட்டிற்கு சைவஐயரை அழைத்து 31ஆம் நாள் நிகழ்விற்கு சிவாச்சாரியர்களை அழைத்து, பார்ப்பன வர்ணத்தில் உள்ள சாதிகளின் இருப்பையும் பிழைப்பையும் காப்பதோடு, வேளாள சாதியினரின் ஆதிக்கத்தின் அடையாளத்தையும் தக்க வைப்பதே இந்த சங்கத்தின் நோக்கம்.

இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். இந்துத் தமிழர்கள் தமது வாழ்க்கையில் பல நிகழ்வுகளை சந்திக்கின்றார்கள். பிறந்தநாள், பூப்புனிதநீராட்டு விழா, திருமணம் என்று நிறைய நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றர்கள். ஆனால் ஒரு சாவு நிகழ்வில் வெளிப்படுவது போன்று வேறு எந்த நிகழ்விலும் சாதிகளின் இருப்பு வெளிப்படுத்தப்படுவது இல்லை.

ஒரு சாவின் போது சலவைத் தொழில் செய்யும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து வெள்ளை கட்டுவார்கள். பறை அடிக்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து பறை அடிப்பார்கள். இறந்தவரின் மகனுக்கு மொட்டை அடிக்கும் வேலையோடு, வேறு சிறு வேலைகள் செய்வதற்கு முடி வெட்டும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள். பூசை சம்பந்தப்பட்ட வேலைகளை செய்ய "சைவஐயர்" சமூகத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள். இடுகாட்டில் விறகுகளை வெட்டியான் சமூகத்தை சேர்ந்தவர் அடுக்கி வைப்பார். இத்தனை சாதிகளும் வந்து போன பின்னர் 31ஆம் நாள் "சிவாச்சாரியார்கள்" வருவார்கள்.

இதுதான் இந்து சம்பிரதாயப்படி நடக்கின்ற சாவு ஒன்றின் இறுதி நிகழ்வு. ஒரு சாவு நிகழ்வில் கூட மனிதர்களுக்குள் பல சாதிகள் உண்டு என்பதையும், அவர்களுக்கு என்று தனியான தொழில்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அந்தச் சாதிகளில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பன உண்டு என்பதையும் வெளிப்படுத்தும் மனிதத்திற்கு விரோதமான ஒரு சம்பிரதாயமே இந்த இந்து மதச் சம்பிரதாயம் எனப்படுவது.

இங்கே புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த சம்பிரதாயங்களை அப்படியே நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது வேளாள பார்ப்பனிய சாதி வெறியனருக்கு ஒரு குறையாகவே இருக்கின்றது. இதனால் சங்கங்கள் அமைத்து "இந்து சம்பிரதாயம்" என்ற பெயரில் சாதிகளின் இருப்பை முடிந்தவரை தக்க வைக்க முனைகின்றார்கள்.

சாதிகளின் இருப்பை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்வதற்கும் இந்த சாதி வெறியர்கள் தயாராக இல்லை. மிகவும் உணர்வுபூர்வமானதாக கருதப்படும் தாலி விடயத்தில் மாற்றங்களை கொண்டு வருவதானது, பின்பு மற்றைய விடயங்களிலும் மாற்றங்களை கொண்டுவருவதற்கு ஒரு உந்துகோலாக அமைந்து விடும் என்பதுதான் இவர்களுடைய முக்கிய அச்சம்.

சாம்பல் கரைப்பதற்கு சைவஐயர்கள் வரவேண்டும் என்பதும் 31ஆம் நாள் சிவாச்சாரியார் வரவேண்டும் என்பதும் சம்பரதாயத்தின் பெயரில்தான் நடக்கிறது. தாலியை அணிந்தபடி வந்து பின்பு தாலியை கழற்றி கணவனின் பிணத்தின் மீது வைக்க வேண்டும் என்பதும் சம்பிரதாயத்தின் பெயரில்தான் நடக்கிறது. ஒரு சம்பிரதாயத்தை முற்றிலும் இல்லாமல் செய்வது என்பது மற்றைய சம்பிரதாயங்களையும் காலப் போக்கில் இல்லாமல் செய்து விடக் கூடும். இதனால் சாதிவெறி பிடித்தவர்கள் சம்பிரதாயங்களை மாற்ற மாட்டோம் என்று பிடிவாதமாக நிற்கிறார்கள்.

ஒரு புறம் பெண்கள் மறுமணம் செய்யக் கூடாது என்ற பிற்போக்குச் சிந்தனை, மறுபுறம் இந்தச் சம்பிரதாயங்களை நீக்கி விட்டால் இந்து மதத்தில் வேறு ஒரு மண்ணும் இல்லையே என்ற கவலை, இன்னொரு புறம் சாதிகளின் இருப்பை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என்ற வெறித்தனம், இவைகள் எல்லாம் சேர்ந்துதான் இவர்களை "சம்பிரதாயம்" என்று கூக்குரல் இட வைக்கின்றது. காட்டுமிராண்டித்தனமாக நடக்கச் செய்கிறது.

http://www.webeelam.com

No comments: