Tuesday, January 08, 2008

சாவு வீட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனம்!

அண்மையில் ஜேர்மனியில் உள்ள ஒரு நகரத்தில் சாவு ஒன்றின் இறுதி நிகழ்வில் நடந்த சில சம்பவங்கள் பத்திரிகை மற்றும் இணைய ஊடகங்களில் பரபரப்பான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. சாவடைந்தவரின் மனவியிடம் இருந்து தாலியை சிலர் பலவந்தமாக கழற்றியதாக சொல்லப்படுகின்ற சம்பவமே பரபரப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அங்கே நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த ஒரு ஊடகவியலாளர் மிகுந்த வேதனையோடு நடந்தவற்றை விபரித்தார்.

"அந்தப் பெண்ணை மிகவும் மெல்லிய சேலை ஒன்றை உடுத்தி கடும் குளிரில் அழைத்து வந்தார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை விரதம் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவரைச் சாப்பிடக் கூட விடவில்லை. கணவரை இழந்த சோகத்தாலும், சுற்றத்தாரின் துன்புறுத்தல்களாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அவரை தாலியைக் கழற்றி கணவரின் உடல் கிடந்த பெட்டியின் மேல் வைக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால் அந்தப் பெண் தாலியைக் கழற்ற மறுத்துவிட்டார். தாலியைக் கழற்றி வைத்தால்தான் கணவரின் ஆத்மா சந்தியடையும் என்று சிலர் அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தினார்கள். அந்தப் பெண் தாலியைக் கழற்ற மாட்டேன் என்று உறுதியாக நின்றார்.

ஐயோ..எழும்பிப் பாராப்பா....கழட்ட வேண்டாமெண்டு சொல்லப்பா....நானென்ன பாவம் செய்தனான்.....உன்னோட வாழ்த்தானே வெளிநாடு வந்தனான்.....எனக்கேனிந்த நிலை....நான் கழட்டிப் போடுறதுக்காக அவர் எனக்கு இதைக் கட்டயில்லை....நான் போடத்தான் இதைக் கட்டினவர்....நான் கழட்ட மாட்டேன்....என்னை விடுங்கோ....ஐயோ என்னை விடுங்கோ.....ஐயோ கடவுளே ஏனிப்படி ஒரு சம்பிராதயத்தை படைச்சனி.....அவருடைய உருக்கமான கதறல் யாருடைய மனத்தையும் தொடவில்லை. நான் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகப் பேசியும் அவர்கள் தாலியைக் கழற்றுவதில் பிடிவாதமாக நின்றார்கள்.

அதன் பிறகு நடந்ததுதான் மிகப் பெரிய கொடுமை. சில பெண்கள் அவரை இறுகப் பிடித்துக் கொள்ள, ஒருவர் அவருடைய தாலியை பலவந்தமாகக் கழற்றினார். அந்தப் பெண் கதறித் துடித்தும் சம்பிராதயம் என்ற பெயரில் இப்படியான ஒரு ஈனச் செயலைப் புரிந்தார்கள்"

அந்த ஊடகவியலாளர் இவைகளை விவரிக்க நாம் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றோம். அந்த சம்பிரதாயக் கொடுமை அத்துடன் முடியவில்லை.

இறந்தவரின் உடலை தகனம் செய்கின்ற அறைக்குள் கொண்டு சென்ற பின்பு அவருடைய உடலை எரிப்பதற்கான மின் அழுத்தியை இறந்தவரின் ஒன்பது வயதை மகனை அழுத்தச் சொன்னார்கள். அந்தச் சிறுவன் தந்தையின் உடலை எரிக்க மாட்டேன் என்று கதறி அழுதான். எரிக்காவிட்டால் அப்பா பேயாக வருவார் என்று பயமுறுத்தி அந்தச் சிறுவனை மின்அழுத்தியை பலவந்தமாக அழுத்தச் செய்தார்கள்.

இந்தச் சம்பவங்களால் அங்கே நின்றிருந்த ஜேர்மனியர்களும், மற்றைய இனத்தவர்களும் மிகவும் அதிர்ச்சி அடைந்து காணப்பட்டார்கள். தம்முடைய நாட்டில் இருந்து கொண்டு சம்பிரதாயம் என்ற பெயரில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து ஜேர்மனியர் ஒருவர் கடும் விசனப்பட்டார். மிகவும் பின்தங்கியுள்ளதாக கருதப்படுகின்ற தங்களுடைய நாடுகளில் கூட இது போன்ற கொடுமைகள் இடம்பெறுவது இல்லை என்று அங்கே நின்ற ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

பிரச்சனை இத்துடன் முடிந்துவிடவில்லை. எம்மோடு பேசிய அந்த ஊடகவியலாளர் நடந்த சம்பவங்களை ஊடகங்கள் மூலம் வெளிக் கொணர்ந்திருந்தார். இதை அடுத்து அவர் சிலரால் மிரட்டப்பட்டார். மர்ம தொலைபேசி அழைப்புக்கள் மூலம் தொல்லைப்படுத்தப்பட்டார். இதையடுத்து தற்பொழுது இப் பிரச்சனை காவல்துறை வரை சென்றுள்ளது.

நடந்த நிகழ்வுகள் வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளதால், அனைத்திற்கு ஆதாரம் இருக்கின்றன. தாலி பலவந்தமாக கழற்றப்பட்ட காட்சி அந்த விடியோவில் பதிவாகியிருக்கிறது. வீடியோ தற்பொழுது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப் பிரச்சனை மனித உரிமை சார்ந்த சில அமைப்புக்களின் கவனித்திற்கும் போயிருக்கிறது. கணவனை இழந்த பெண்ணின் கழுத்தில் இருந்து தாலியை பலவந்தமாக கழற்றியது, ஒன்பது வயதுச் சிறுவனை தந்தையை எரிப்பதற்கான மின்னழுத்தியை அழுத்தச் செய்தது போன்றவைகள் மிகவும் பாரதூரமான விடயங்கள். இப் பிரச்சனை நீதிமன்றம் செல்லுமிடத்து, இச் செய்கைகளுக்கு தூண்டியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படக்கூடிய நிலைமையே தற்பொழுது காணப்படுகின்றது.

சம்பிரதாயம் என்று பேசுபவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தாலி என்பதே தமிழருடையதா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. தாலிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பல தமிழறிஞர்கள் ஆதாரங்களை தருகின்றார்கள். தமிழர்களிடம் தாலி இருந்தது என்று வாதிடுபவர்கள் கூட "தாலி ஒரு முக்கியமான புனிதமான ஒன்றாக இருந்தது இல்லை" என்பதை ஒத்துக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழர் பண்பாடு என்று சொல்லிக்கொண்டு இவ்வாறான அத்துமீறல்களை செய்வது முட்டாள்தனமானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

இந்து மதச் சம்பிரதாயம் என்று சொல்லி ஒரு காலத்தில் பெண்களை உடன்கட்டை ஏற வைத்தார்கள். உடன்கட்டை ஏறிய பெண்களை "சதி" என்று சொல்லி வழிபடுவும் செய்தார்கள். இந்து மதத்தினுடைய காட்டுமிராண்டித்தனமான இந்தப் பழக்கத்தை பின்பு ஆங்கிலேய அரசு தடை செய்தது.

ஆனால் காட்டுமிராண்டி இந்து மதச் சம்பிரதாயங்களில் மிச்சம் உள்ள சம்பிராதயங்களாகிய "தாலியறுப்புக்கள்" போன்றவை தொடர்கின்றன.

இதை புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் செய்வது மாபெரும் வெட்கக்கேடு. முன்னேறிய நாகரீகமான ஒரு இனம் என்று பெருமையாக தன்னை சொல்வதற்கு தமிழினத்திற்கு ஏதாவது அருகதை உண்டா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. பாரதி சொன்னது போன்று பெரும்பாலான தமிழர்கள் "எருமைகளாகவே" இருக்கின்றார்கள் என்பதற்கு மேற்சொன்ன சம்பவம் சான்று.

இச் சம்பவம் ஏதோ ஒரு இடத்தில் ஒரேயொருவருக்கு மட்டும் நடந்துள்ளது என்று இதை அலட்சியப்படுத்த முடியாது. கணவரை இழந்த பெரும்பாலான பெண்களுக்கு இந்தக் கொடுமை எல்லா இடங்களிலும் நடக்கின்றது. கணவரின் இறுதி நிகழ்வில் தாலியைக் கழற்றச் சொல்லி, சம்பிரதாயத்தின் பெயரிலும் மதத்தின் பெயரிலும் பெண்கள் கட்டாயப்படுத்தப்படுவது பல இடங்களில் நடக்கின்றது. பெண்கள் உரிமை என்று வாய் கிழியப் பேசுகின்ற யாரும் இதைப் பற்றி அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

தாலி என்பது உலோகப் பொருள் ஒன்றினால் செய்யப்பட்ட ஒரு ஆபரணம். அதற்கு உயிரோ, புனிதமோ, ஒரு மண்ணும் கிடையாது. அதை வைத்துக் கொண்டு இத்தனை அடாவடித்தனம் செய்வது அடி முட்டாள்தனமானது. தாலி என்பதை "அன்புச் சின்னம்" என்று சிலர் சொல்வார்கள். அது உண்மையெனில் கணவன் மீதான அன்பு இருக்கும் வரை அந்த தாலியை அப் பெண் கழற்ற வேண்டிய அவசியம் இல்லை. கழற்ற வேண்டுமா என்பதையும் அப்படி கழற்ற வேண்டுமென்றால் அதை எப்பொழுது கழற்ற வேண்டும் என்பதை தாலியை அணிந்திருக்கும் பெண்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, சுற்றியிருப்பவர்கள் அல்ல.

இந்த காட்டுமிராண்டித்தனங்கள் தொடருமாயின் இவைகளை வெளிநாட்டு ஊடகங்களினதும் சட்டத்தினதும் கவனத்திற்கும் கொண்டு செல்வதைத் தவிர வேறு வழி இருக்கப் போவதில்லை.

- நமது நிருபர்கள்

http://www.webeelam.com

13 comments:

Anonymous said...

I support your comment aginst the poor women who lost her husband. Un education is the cause for all these behaviours. We have to raise our voice agingst the helpless and affected people.

Anonymous said...

Please putup the video with faces covered.....

Since this is not a place to support without evidences

G.Ragavan said...

அடக் கொடுமையே... கேடு கெட்ட கூட்டமா இருக்கும் போல இருக்கே. இதுக்குப் பேரு பண்பாடுன்னு எவன்யா சொன்னான்? அந்த ஜெர்மனியப் போலீஸ் எல்லாரையும் முட்டிக்கி முட்டிக்கி தட்டுனாத்தான் சரி வரும்.

வவ்வால் said...

//Un education is the cause for all these behaviours. We have to raise our voice agingst the helpless and affected people.//

சம்பவம் நடந்தது ஜெர்மனியில்னு சொன்ன பிறகும் , கல்வி அறிவு இல்லாமைனு சொல்றாரே, ஜெர்மனிக்குள்ள போற அளவுக்கு படிச்சவங்க தானே?

மேலும், தாலியை கழட்டு, சின்னப்பையனை வைத்து சிதையை மூட்டு என்றுச்சொன்னது யார் , கண்டிப்பாக அப்பெண்ணின் உறவினர்களாக தான் இருக்க வேண்டும்,அப்படி இருக்கும் போது மூன்றாம் மனிதர்களை சொல்வது போல யாரோ என்று சொல்வது ஏன்?

மேலும் சென்னையில் கூட மின்சார தகனக்கூடம் உள்ளது, இங்கே எல்லாம் அப்படி மற்றவர்களை மின்னழுத்தியை அழுத்த அனுமதிக்க மாட்டார்கள்.அந்த ஊழியர் தான் செய்வார்.

ஒரு அடையாளமாக ஒரு சூடம் கொளுத்தி உடல் மீது வைக்க வேண்டும்.அதுவும் கூட உள்ளே வைக்க சொல்வார்களா, இல்லை அந்த அறையின் வெளியில் வைக்க சொல்வார்களா எனத்தெரியவில்லை.கேள்விப்பட்டது இது தான்!

துளசி கோபால் said...

இங்கேயும் ஒரு சாவுச் சடங்கில் தாலியைக் கழட்டி இறந்தவர் உடல்மீது வைத்ததை முதல்முதலில் பார்த்தபோது கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன்.

இறந்தவர் வயது போனவர். அவர் மனைவி ஒரு குழந்தைபோல பார்த்துக்கொண்டு அங்கே உட்கார்ந்திருந்தார். அந்தப் பாட்டியைப் பார்த்த்தும் என் மனசைப் பிழிந்தது போல உணர்ந்தேன். 'தாலியைக் கழட்டி வையுங்கோ'என்றதும் சொன்னதைக் கேட்கும் குழந்தையின் செய்கைபோல அவரே அதை கழட்டி இறந்தவர் மீது வைத்தார். ஐய்யோ.....

வெளியே வந்ததும் மற்ற ஆக்களிடம் கதைத்ததில் அதுதான் வழக்கமெண்டார்களப்பா.

மகா கொடுமை. அப்போதே அதைப்பற்றி எழுதவேண்டுமென்ற வேகம் இருந்தது. உள்ளுர் மக்களாச்சே என்று பின்வாங்கிவிட்டேன்.

ஆனால், அன்பின் தாலியை கழட்டுவதும் கழட்டாமல் இருப்பதும் பெண்ணின் விருப்பமாக இருக்கவேண்டும். சம்பிரதாயம் என்ற பெயரில் நடக்கும் கொடுமை இது(-:

பனிமலர் said...

மதம் கொண்ட இந்து மதம் இன்னமும் எத்தணை காலம் தான் மதத்தின் பெயரால் இந்த வகை கொடுமைகளை நிகழ்த்த போகின்றதோ. அந்த பெண் எதற்கெல்லாம் வருந்துவாள், விதி செய்தது போதாது என்று மதம் சதியும் செய்கின்றதாம். மறுமணம் வரையில் வந்த நாகரீகம் மறுபடியும் பின்னோக்கி ஏன் செல்ல நினைகின்றதோ அந்த கடவுளுகே வெளிச்சம்.

கோவி.கண்ணன் said...

பெண்களை அவள் விருப்பத்திற்கு மாறாக மனரீதியாக சித்தரவதை செய்யும் சடங்கு தாலியை சுழற்றச் சொல்வது.

:(

பாச மலர் / Paasa Malar said...

மிகவும் கொடுமை..சொந்த நாட்டில்தான் உறவினர்கள் தொல்லையிருக்கும்...அந்நிய மண்ணிலுமா...

Anonymous said...

This incident is exaggerated by some one who needed publicity for their feminism chat and also like to show their poor view over and against hiduism.

I agree that violence which is used to push the people to take self decision is not always good in any society in this world and it’s against humanity.

But one thing is very common phenomenon around the world.

People are not usually keeping properties owned by loved one whom they lost. Because, when they deal with those properties almost always every day they can raise their past in the memories in frequent manner, which led them feel more sadness and loose their interset in life.

For example, once girl/guy breaks his/her love heart for some reason they don’t like to keep memorable things they handled because they can arise their past memories and make them feel more sadness.

This is very common human feeling and easy to understandable, but some poor view feminism chatters are trying to use even this sad moment to express their feminism interest and freedom of women in the society.

Noone in the world knows how Jewelleries worn by a woman are taking up her social freedom..??! Is it true social freedom is controlled by jewellery and some sort of social customs?

I don’t think so. Some people are making a false view in the society regarding this.

simplly..think how a fashion or a custom can control human - mind power and his/her thinking???!

suppose if you say true, then other question will arise how our ancestor become into modern man with wonderful revolutionary views from that much bottom level of living style and customs they had???!

Anonymous said...

It looks like the blooger has never visited or seen any ezavu. Some places they dramatize it, I still remember one of my friends comments when they visited a village and happen to see a ezavu, ...they keep crying by hitting the head and chest, crying loudly but eating in the afternoon with Payasam and sweet etc., So they though ( the children) Its a nice festival... everything has to be seen in context, infact after the 13th day, they read sundara kandam from Ramayanam, just to go with the nice feelings.

Anyway don't see on the surface ( Ninipul vendam), see the meaning and then try to understand it.

பனிமலர் said...

மிகைப்படுத்தியதாக ஏதும் தெரியவில்லை. வெளி நாட்டில் வாழும் யாரும், தனது சொந்த பந்தங்களுடன் வாழுவது கிடையாது. மாறாக, நட்புலகம் தவிற அவர்களுக்கு வேறு கதி இல்லை. அப்படி இருக்கும் கால், ஆணாக இருந்தால் அவனை தேற்ற முடியும். கனவனை இழந்தோருக்கு காட்டுவது இல் என்று படித்தது இல்லை போலும் இவர்கள். என்ன தான் வெளி நாடு சென்றாலும் இன்னமும் இட்லியும் வடையும் தான் சாப்பிடுகிறோம் ஆனால், மத கடமைகள் என்று வந்தால் மட்டும் ஏன் முரண்டு பிடிகிறீர்கள் என்று கேட்பது போல் இருக்கிறது அனானிகளின் பின்னூட்டம். இப்படி ஒரு இழப்பு தன்னந்தனியாக இருக்கும் போது தனக்கு வந்தால் தான் தெரியும் அதுவும் பிஞ்சு குழந்தையை கையில் கொடுத்துவிட்டு போனால். அந்த பெண்ணின் நிலையில் இருந்து பாருங்கள் புரியும் பதிவர் என்ன சொல்ல வருகிறார் என்று.

வி.சபேசன் said...

மின்சாரம் மூலம் தகனம் செய்யப்படும் இடங்களில் பொதுவாக யாரையும் உள்ளே அனுமதிப்பது இல்லை. "வெளவ்வால்" சொன்னது போன்று உடல் இருக்கும் பெட்டியின் மீது ஒரு கற்பூரத்தை கொழுத்தி உள்ளே அனுப்புவார்கள். ஆனால் இங்கே நடந்தது அப்படி அல்ல. "எங்கள் மத முறைப்படி மகன்தான் கொள்ளி வைக்க வேண்டும்" என்று அடம்பிடித்து சிறுவனை மின்அழுத்தியை அழுத்தச் செய்தார்கள்.

இங்கே அனானி ஒருவர் ஒரு அர்த்தமற்று கருத்தை எழுதியிருக்கிறார். கணவன் இறந்தால் அந்த பெண்ணிற்கு கணவனின் நினைவை இல்லாமல் ஆக்குவதற்குத்தான் தாலியை கழற்றச் செய்கிறார்கள் என்பது போன்ற அர்தத்தில் எழுதியிருக்கிறார்கள்.
மனைவி இறந்தால் எதை அறுத்து கணவனுக்கு மனைவியின் நினைவை இல்லாமல் செய்வார்கள்? அங்கே புதிய கலியாணம் கட்டி வைத்துத்தான் இல்லாமல் செய்வார்கள்.
ஒன்றை கவனித்துப் பாருங்கள். கணவன் இறந்தவுடன் அந்தப் பெண்ணிடம் இருந்து தாலி பறிக்கப்படுகின்றது. பூ பறிக்கப்படுகின்றது. பொட்டு பறிக்கப்படுகின்றது. சேலை பறிக்கப்படுகின்றது. ஆனால் அவள் தொடர்ந்து கணவனின் பெயரோடு வாழ வேண்டி இருக்கின்றது. அவளுடைய பெயரில் இருந்து கணவனின் பெயரை யாரும் நீக்குவது இல்லை. அவள் நீக்கி புதிய பெயரை இணைக்க முயன்றாலும் அதற்கும் நாலு கதைகள் சொல்வார்கள்.
கணவனின் நினைவை இல்லாமல் செய்வதற்கு தாலியை கழற்றுகிறார்கள் என்று காரணம் சொல்பவர்கள், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை காப்பற்ற வேண்டும் என்று நினைக்கின்ற மதவெறியர்களாகத்தான் இருக்க முடியும்.

இன்னொரு அனானிக்கு இது எல்லாம் சாதரணமாகத் தெரிகிறது. இங்கே மிகக் கொடுமையான விடயமே இதுதான். ஏற்கனவே கணவனை இழந்து நிற்கும் ஒரு பெண்ணை சம்பிரதாயத்தின் பெயரில் சித்திரவதை செய்வது இவர்களுக்கு சாதரணமாகத் தெரிகிறது. இப்படியான மனிதர்களைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.

Unknown said...

பெயர் குறிப்பிடாமல் வந்து பிதற்றுவதிலே இவர்கள் அறியாமை புரிகிறது; அந்தப் பெண் விரும்பாவிடில்
விட்டுவிட வேண்டியதே மனிதத் தன்மை .
இந்த அர்த்தமற்ற பேக்கூத்துக்கள் மூலம் இந்து மதம் வளர்க்க விரும்பும்; இந்தப் பெயரற்ற ஆத்மாக்கள்
ஆணானால் ;விரைவில் உயிரற்றவர்களாகி இவர்கள் மனைவிமாரின் தாலியைக் கழட்டி இவர்களுக்கு
மோட்சம் காட்டும்; இந்தச் சடங்கு இவர்கள் வீட்டில் விரைவில் ,நடக்க நாம் எல்லோரும் பிரார்த்தனை
செய்வோம்.
தலைவலியும் காச்சலும் தனக்கு வந்தால் தெரியும்;
இது வெறும் ஊருக்கு உபதேசமாக இருக்கக் கூடாது.