Thursday, December 04, 2008

இந்தியாவுடன் மீண்டும் உறவை ஏற்படுத்துவதற்கான அழைப்பு - பலவீனத்தின் வெளிப்பாடா?

தேசியத் தலைவர் இம் முறை நிகழ்த்திய மாவீரர் தின உரையில் இந்தியாவை நோக்கி நட்புக் கரத்தை நீட்டியிருக்கிறார். இதைப் பற்றி பலர் பலவாறு எழுதி வருகிறார்கள். சிங்களத்தினதும், ஒட்டுக் குழுக்களினதும் ஊடகங்கள் எப்போதும் போன்று “விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள், அதனாற்தான் இந்தியாவின் தயவை வேண்டி நிற்கின்றார்கள்” என்று எழுதி வருகின்றன.

தேசியத் தலைவர் இந்தியாவை நோக்கி பல முறை நட்புக் கரத்தை நீட்டியிருக்கின்றார். ஆனால் இந்திய அதிகார பீடம் தேசியத் தலைவரின் அழைப்பை ஒவ்வொரு முறையும் தவறாகவே அர்த்தப்படுத்தி இருக்கின்றது.

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியப் படையினர் கனரக பீரங்கிகள், டாங்கிகள், வானூர்த்திகள் சகிதம் தமிழீழ மண் மீது 10 ஒக்டோபர் 1987 அன்று போரைத் தொடுத்திருந்தனர். இந்தியப் படை போரை ஆரம்பித்து, தமிழ் மக்கள் மீது படுகொலையை கட்டவிழ்த்து விட்டிருந்த போதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ராஜீவ்காந்திக்கு கடிதம் மூலம் நட்புக் கரத்தை நீட்டி தன்னுடைய நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினார்.

போர் ஆரம்பித்து இரண்டு நாளில் 12 ஒக்டோபர் 1987 அன்று தேசியத் தலைவர் ராஜீவ்காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். “கனம் பிரதம மந்திரி அவர்களே” என்று ஆரம்பித்த அந்தக் கடிதத்தில் தேசியத் தலைவர் இப்படிக் குறிப்பிட்டார்.

“இந்திய மக்கள் மீது எமக்குள்ள நல்லுறவின் அடிப்படையிலும், சமாதானமும் நல்லெண்ணமும் பேணப்படும் அவசியத்தை முன்னிட்டும், இராணுவ நடவடிக்கைகளை உடன் கைவிடும்படி நான் உங்களை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்”

இத்தனைக்கும் இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு ஒரு நாள் முன்புதான் இந்தியப் படை தேசியத் தலைவரை கொன்று விடுவதற்காக ஒரு நடவடிக்கையை யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள பிரம்படி என்னும் இடத்தில் மேற்கொண்டிருந்தது. சிறப்புப் பயிற்சி பெற்ற இந்தியப் படையினர் தேசியத் தலைவரும் வேறு மூத்த தளபதிகளும் இருந்த பகுதியை சுற்று வளைத்து தாக்குதலை மேற்கொண்டது.

தேசியத் தலைவர் இருந்த வீட்டில் அப்பொழுது கவிஞர் காசியானந்தனும் தங்கியிருந்தார். இந்தியப் படையினர் தம்மை முற்றுகை இட்டிருப்பதை அறிந்த பிரபாகரன் அங்கே இருந்து பின்வாங்காது தானும் ஆயுதம் ஏந்தி சண்டை செய்தார் என்று காசியானந்தன் எழுதியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் இந்தியப் படையின் முற்றுகையை வெற்றி கண்டு, இந்தியப் படைக்கு மிகப் பெரிய அழிவையும் தோல்வியையும் கொடுத்து, இரண்டு இந்தியப் படையினரை கைதும் செய்த பிற்பாடு, அடுத்த நாள் தேசியத் தலைவர் ராஜீவ்காந்திக்கு மேற்கண்ட வாசகங்கள் அடங்குகின்ற கடிதத்தை எழுதினார்.

இந்திய மக்களோடு எமக்கு நல்லுறவு எப்போதும் உண்டு என்பதை வலியுறுத்தி சமாதானத்தை வேண்டி நின்றார்.

ஆனால் ராஜீவ்காந்தியிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. மாறாக இந்தியப் படையினரின் கொலைவெறியாட்டம் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு கடிதத்தை தேசியத் தலைவர் ராஜீவ்காந்திக்கு எழுதினார்.

“கனம் பிரதம மந்திரி அவர்களே, தமிழ் பகுதிகளில் சாவும் அழிவுமாக நிலைமை நாளுக்கு நான் படுமோசமடைந்து வருவதால், நான் மீண்டும் உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றேன்” என்று ஆரம்பித்த அந்தக் கடிதத்தில், இந்திப் படையினர் தமிழீழ மண்ணில் செய்யும் படுகொலைகளையும் அழிவுகளையும் விளக்கி, தமது தரப்பில் உள்ள நியாயப்பாடுகளையும் கூறி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

இந்தக் கடிதத்தை எழுதுகின்ற பொழுது பல இடங்கிளல் இந்தியப் படை விடுதலைப் புலிகளிடம் பலத்த அடி வாங்கியருந்தது. பல நூற்றுக் கணக்கான இந்தியப் படையினர் கொல்லப்பட்டிருந்தனர். இரண்டு நாட்களில் விடுதலைப் புலிகளின் கதையை முடித்து விடுவோம் என்று புறப்பட்ட இந்தியப் படை, யாழ் குடாவை கைப்பற்ற முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. சண்டைகளின் போது 18 இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டும் இருந்தனர்.

ஆயினும் தேசியத் தலைவர் இந்தியா மக்கள் மீது கொண்டிருந்த அன்பினாலும், தமிழீழத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்டு வரும் அழிவினை முடிவுக்கும் கொண்டு வரும் நோக்கத்தோடும் இந்திய ஆட்சியாளர்களை நோக்கி நட்புக் கரத்தை நீட்டினார்.

ஆனால் இந்திய அதிகார பீடம் மீண்டும் மீண்டும் தமிழீழம் நீட்டிய நட்புக் கரத்தை உதறித் தள்ளியது. போர் தொடர்ந்தது. ஒரு மாதத்திற்கு மேலாக பல இலட்சம் படையினரையும் கனரக மற்றும் நவீன ஆயுதங்களையும் பயன்படுத்தி சண்டை செய்த இந்தியப் படையினர் யாழ் குடாவைக் கைப்பற்றினர். விடுதலைப் புலிகள் வன்னிக் காடுகளுக்குள் பின்வாங்கினர்.

வன்னிக் காட்டில் இருந்தபடி தேசியத் தலைவர் மீண்டும் ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதினார். 13ஜனவரி1988 அன்று எழுதிய அந்தக் கடிதத்தில் தேசியத் தலைவர் சமாதானமும் இயல்புநிலையில் திரும்பும் வண்ணம் சமரச முயற்சிகளை மேற்கொள்ளும்படி மீண்டும் அன்போடு வேண்டிக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் மக்களின் உயிருக்கும் நலனுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுமாயின், இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்க தயார் என்றும், அதன் பின்பு அதிகாரம் மிக்க தமிழ் மாநில ஆட்சியமைப்பை உருவாக்கும் பேச்சுக்களின் முக்கிய பங்களிப்பை வழங்குவோம் என்றும் கூறி, போர் நிறுத்தம் செய்து பேச்சுக்களை தொடங்க உடன் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று தான் நம்புவதாகவும் தேசியத் தலைவர் ராஜீவ்காந்தியிடம் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தக் கடிதத்திற்கும் இந்திய அதிகாரம் எந்த ஒரு பிரதிபலிப்பையும் காட்டவில்லை. விடுதலைப் புலிகள் வேறு வழிகளிலும் இந்தியா மீதான அன்பையும் நல்லெண்ணத்தையும் தெரிவித்து நட்புக் கரத்தை நீட்டினார்கள். இந்திய ஈழப் போரில் கைது செய்யப்பட்ட இந்தியப் படையினரை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவித்தார்கள். ஆனால் இவைகள் எவையும் இந்தியா அதிகார பீடத்தின் சிந்தனையை மாற்றவில்லை.

விடுதலைப் புலிகளிடம் இருந்த நல்லெண்ண அழைப்பு வந்த நேரங்களில், அதை இந்தியா அதிகார பீடம் எவ்வாறு நோக்கியது என்பதை இந்திய அமைதிப் படைகளின் தளபதியாக இருந்த திபேந்தர் சிங் தன்னுடைய புத்தகம் ஒன்றில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

“கவலைக்குரிய விடயம் என்னவென்றால், விடுதலைப் புலிகளிடம் இருந்து இப்படியான வேண்டுகோள்கள் வரும் போதெல்லாம் அவர்களது கதை முடிவுக்கு வருகிறது என்றுதான் டில்லியில் கருதப்பட்டது. அதனால் பேசுவதை விடுத்து இராணுவ அழுத்தத்தை மேலும் முறுக்கி விட வேண்டும் என்பதுதான் நிலைப்பாடாக இருந்தது. கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் ஒரு தடவை டில்லிக்கு அனுப்பி வைத்த அவசரச் செய்தியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சி நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இவ் விடயம் குறித்து இந்திய இராணுவத் தலைமைச் செயலகத்திற்கு நான் அனுப்பி வைத்த செய்தியில் விடுதலைப் புலிகள் இயக்கம் அப்படியான ஒரு கட்டத்திற்கு வரவில்லை என்பதுதான் யதார்த்தம் என்று தெரிவித்தேன்”

திபேந்தர் சிங்கின் இந்தக் கூற்றின் மூலம் இந்திய அதிகார பீடம் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண அழைப்பை எந்தக் கண்ணோட்டத்தோடு நோக்கியது என்பது தெளிவாகின்றது.

இந்திய ஈழப் போர் முடிவுற்ற பின்னரும் விடுதலைப் புலிகள் இந்தியாவை நோக்கி பல முறை நட்பு பேணும் அழைப்பை விடுத்திருக்கிறார்கள். தற்பொழுது மாவீரர் தின உரையில் மீண்டும் ஒரு முறை தமிழீழ தேசத்தால் சமாதான அழைப்பு உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டிருக்கிறுது.

“எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம்” என்றும், “இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்” என்றும், “இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்” என்றும் மிகத் தெளிவாக இந்தியாவை நோக்கி நல்லெண்ண சமாதான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகள் நட்புக் கரத்தை நீட்டுகின்ற பொழுது, அதை பலவீனமாக நோக்குவது எவ்வளவு பெரிய தவறு என்பதை காலம் உணர்த்திச் சென்றுள்ளது. ஆனால் வரலாற்றில் இருந்து பாடம் கற்காத சிலர் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் அழைப்பை பலவீனமாகவே சித்தரித்து வருவது, அப்படிச் சித்தரிப்பவர்கள் குறித்த பரிதாபத்தையே ஏற்படுத்துகிறது.

http://www.webeelam.net

No comments: