Monday, February 11, 2008

இந்து மதமும் பெண்களும் (பாகம் 5)

பார்ப்பனன் ஒருவனுடைய மகனைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோசம் பிடித்து விட்டது என்று கடந்த தொடரில் பார்த்தோம் அல்லவா? இப்பொழுது தன்னுடைய தோசத்தை இந்திரன் எப்படி தீர்த்துக் கொள்கிறான் என்று பார்ப்போம்.

இந்திரன் மிகவும் விகார உருவத்தோடும் செல்வம், பொலிவு அனைத்தும் இழந்து அலைந்து கொண்டிருந்தான். தன்னுடைய தோசத்தை யாரிடமாவது இறக்கி வைத்தால், தன்னுடைய தோசம் போய்விடும் என்று இந்திரனுக்கு தோன்றியது.

முதலில் இந்திரன் பூமாதேவியிடம் போனான். தன்னுடைய தோசத்தை பெற்றுக் கொள்ளும்படி வேண்டினான். பூமாதேவி தோசம் முழுவதையும் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டாள். வேண்டுமென்றால் தோசத்தில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்வதாக கூறினாள். பதிலுக்கு தான் கேட்கும் வரத்தை தரவேண்டும் என்று பூமாதேவி சொன்னாள்.

இந்திரன் சம்மதித்து ஒரு பகுதி தோசத்தை பூமாதேவியிடம் இறக்கி வைத்தான். பூமிக்கு இப்படி பிரம்மஹத்தி தோசத்தில் ஒரு பகுதி வந்ததனால்தான் பூமியில் பல பாலைவனங்கள் உருவாகினதாம். தோசத்தை பெற்றுக் கொண்ட பூமாதேவி பூமி பிளந்தால் மீண்டும் ஒன்றாக சேருகின்ற வரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டாள்.

இந்திரன் அடுத்ததாக மரங்களிடம் போனான். மரங்களிடம் ஒரு பகுதி தோசத்தை கொடுத்தான். மரங்களிற்கு தோசம் வந்ததால்தான் அதில் இருந்து பசை வடிகிறதாம். மரம் தன்னுடைய கிளைகள் வெட்டுப்பட்டால் மீண்டும் முளைக்கும் வரத்தை கேட்டுப் பெற்றது.

கடைசியாக இந்திரன் பெண்களிடம் போகிறான். தன்னுடைய நிலையை சொல்லி பெண்ணிற்கு தன்னுடைய மிகுதி தோசத்தை கொடுக்கிறான். பெண் பிரம்மஹத்தி தோசத்தை கொண்டதால் என்ன ஆனது தெரியுமா?

பார்ப்பனனின் மகனை கொலை செய்த தோசத்தை பெண்கள் பெற்றுக் கொண்டதால், அவர்களுக்கு மாதவிடாய் வரத் தொடங்கியது. தோசத்தை பெற்றுக் கொண்ட பெண் கர்ப்பமாய் இருக்கும் காலத்திலும் ஆண் சுகம் வேண்டும் என்ற வரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டாள். வரத்தை இந்திரன் அருளினான்.

பொதுவாக மிருகங்கள் கர்ப்ப காலத்தில் ஒன்று சேராது. ஆனால் மனிதர்களுக்கு அப்படியில்லை. மனிதர்களால் கர்ப்பமாக இருக்கும் காலங்களிலும் சேர முடியும். இதற்கு காரணம் தோசத்தைப் பெற்றுக் கொண்ட பெண் அதற்கு ஈடாக இந்திரனிடம் பெற்ற வரந்தானாம்.

இந்து மதம் என்று சொல்லப்படுகின்ற பார்ப்பனிய மதத்தில் ஒன்றை நீங்கள் கவனிக்கலாம். அந்த மதத்தில் உள்ள அனைத்து தத்துவங்களுமே பார்ப்பனர் உயர்ந்தவர் என்றும் மற்றவர் இழிபிறப்புகள் என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கும். ஒரு பார்ப்பனனுக்கு தீங்கு செய்ததால்தான் பூமியில் பாலைவனங்கள் உருவாகின என்றும், மரங்களில் பாசை வடிகிறது என்றும், பெண்களுக்கு மாதவிடாய் வருகிறது என்றும் ஒரு செய்தியையும் இந்தப் புராணக் கதை சொல்கிறது.

இந்த இடத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். தொடரைப் படித்த சிலர் இந்து மதத்தின்படி ஆண்கள்தான் உயர்ந்தவர்களா என்று என்னிடம் கேட்டிருந்தார்கள். அது தவறு. பார்ப்பன ஆண்கள் உயர்ந்தவர்கள் என்பதுதான் சரி. இதைத்தான் இந்து மதம் அனைத்து வேதங்களிலும், சாத்திரங்களிலும், புராணங்களிலும் வலியுறுத்துகிறது. பார்ப்பன ஆண்களை தவிர மற்றைய அனைவரும் தாழ்ந்தவர்கள். இழி பிறப்புக்கள். பெண்கள் எந்த வர்ணமாக இருந்தாலும் இழிவானவர்கள்.

மனுதர்மம், பகவத் கீதை, வேதங்கள், சாத்திரங்கள் இந்து மத இதிகாசங்கள் என்று அனைத்தும் பெண்கள் பற்றிச் சொல்கின்ற கருத்துக்களையே மேற்கண்ட புராணக் கதையும் சொல்கிறது.

நாம் மனுதர்மத்திலும் பகவத் கீதையிலும் சில உதாரணங்களைப் பார்த்தோம். அவைகளின் கருத்துப் படி பெண் இழி பிறப்பானவள். காம குணம் உள்ளவள். கற்பு நிலையற்றவள்.

ஏன் பெண் இழிபிறப்பானவள்? அவள் பிரம்மஹத்தி தோசத்தை பெற்றிருக்கிறாள்.

பெண் காம குணம் உள்ளவளா? ஆம், அவள் மாதவிடாயால் மூன்று நாட்கள் ஆண்சுகத்தை பெற முடியாது என்று அறிந்து அதற்குப் பதிலாக, கர்ப்ப காலத்திலும் ஆண்சுகத்தை பெறுவதற்கு வரம் வேண்டியிருக்கிறாள்.

ஏற்கனவே நாம் பார்த்த சுலோகங்கள் சொல்கின்ற அதே கருத்தை இந்தக் கதையும் திருப்பிச் சொல்வதை கவனித்துப் பாருங்கள்.

இப்படி பெண்களை இழிபிறப்புகளாகவும் காமப்பிசாசுகளாகவும் இந்து மதம் கருதுவதால்தான், மந்திரங்களில் பெண்ணிற்கு நிறையக் கணவர்கள் உண்டு என்றும், பெண் அவளுடைய பிள்ளையை வேறு ஆடவனுக்கு பெற்றிருக்கக்கூடும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்து மத ஆச்சாரியார்களுக்கு பெண் மீது இத்தனை வெறுப்பு வந்ததற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அது என்ன காரணம் என்ற கேள்வி உங்களுக்கு வரக் கூடும். வர வேண்டும். கேள்விகள் வந்தால்தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அதற்கு பதிலை சொல்வதற்கு முன்பு இன்னும் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். பெண் பற்றிய பிரச்சனையால் இந்து மதத்தில் ஒரு பெரும் பிளவே ஏற்பட்டது. அதை முதலில் பார்ப்போம்.

தொடரும்.....

http://www.webeelam.com

No comments: