மந்திரங்களில் பெண் இழிவுபடுத்தப்படுவதற்கு காரணம் என்ன என்பதை இனிப் பார்ப்போம். இந்து மதத்திற்கு பெண்கள் மீது வெறுப்பு ஏன் உருவானது என்பதை பார்ப்பதற்கு முன், இந்த மதத்தின் மற்றைய நூல்கள் பெண்களைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதையும் பார்த்து விடுவோம்.
இந்த மத வேதங்களின் படி பெண் என்பவள் ஒரு கீழான பிறவி. சூத்திரர்கள் எப்படி கீழான பிறவிகள் என்று இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் சொல்கிறதோ, அதே போன்றுதான் பெண்களும் கீழான பிறவிகள். பல இடங்களில் சூத்திரர்களை விடவும் மிகக் கீழான நிலையில்தான் பெண்களை இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் வைத்திருக்கின்றன.
இந்த இடத்தில் சுருக்கமாக இன்னும் ஒரு விடயத்தைப் பார்ப்போம்.
இஸ்லாமியர்கள் குர்ரானையும் கிறிஸ்தவர்கள் பைபிளையும் கொண்டு இந்திய துணைக் கண்டத்திற்குள் நுழைந்த பொழுது, பார்ப்பனர்களுக்கு அதைப் போன்று எந்த நூலை தங்களுடைய பார்ப்பனிய இந்து மதத்தின் மதநூலாக காட்டுவது என்று தெரியவில்லை.பொதுவான இந்து மதம் என்கின்ற ஒன்று இல்லாத பொழுது, அதற்கு என்று எப்படி ஒரு பொதுவான மதநூல் இருக்க முடியும்?
என்றாலும் பார்ப்பனர்கள் மனுதர்மத்தையும், பகவத்கீதையையும் இந்து மத "பைபிள்களாக" முன்வைத்தார்கள். பார்ப்பனிய மதம்தான் இந்து மதம் என்று பார்க்கின்ற போது இது ஒரு சரியான செயல்தான். மனுதர்மம், பகவத்கீதை போன்றவைகள் வேறு மொழிகளிலும் அச்சிடப்பட்டன.
உண்மையில் இன்று வரை இந்து மதம் மனுதர்மத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஆலய வழிபாடுகள், விழக்கள், சடங்குகள் என்று அனைத்துமே மனுதர்மம் வகுத்துக் கொடுத்தன்படிதான் இயங்குகிறது. இதை விட முக்கியமாக அரசுகள் கூட மனுதர்மத்தின் அடிப்படையில் இயங்க வைக்கப்பட்டன.
மனுநீதி சோழன் போன்ற சொற்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். மனுதர்மம்தான் மனுநீதி. மனுதர்மத்தின் படி பார்ப்பனர்களுக்கு கட்டுப்பட்டு, அவர்களின் ஆலோசனைப்படி ஆட்சி செய்த சோழனை "மனுநீதிச் சோழன்" என்று அழைத்தார்கள்.
இந்த இடத்தில் இன்னும் ஒரு சிறு தகவல். பல நாடுகளை வென்று ஆசியாவின் பெரும் வல்லரசாக விளங்கிய சோழப் பேரரசு வீழ்ந்ததும் இந்த "மனுதர்ம" பார்ப்பனர்களினால்தான். பல போர்களைப் புரிந்ததால், பல பாவங்கள் சேர்ந்து விட்டதாக சோழ மன்னன் நம்பவைக்கப்பட்டான். அந்தப் பாவங்களைப் போக்குவதற்கு பார்ப்பனர்களுக்கு நிறைய தானங்கள் கொடுக்க வேண்டும் என்று பார்ப்பனர்களால் அவனிடம் சொல்லப்பட்டது. பார்ப்பனர்களுக்கு பொன்னும், பொருளும், நிலமும் வழங்கி, மிகுதிப் பணத்தில் கோயில்களும் கட்டி சோழப் பேரரசு தன்னுடைய பலத்தை இழந்து வீழ்ச்சி கண்டது. இதை பின்பு தனியாகப் பார்ப்போம்.
(இதனால்தான் பார்ப்பனராகிய மதன் சோழப் பேரரசு பற்றிய வரலாற்றை எழுதுவதற்கு "வரலாறே இல்லை" என்று ஒரு பொய்யைச் சொல்லி மறுத்தாரா என்பது தனியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு விடயம்)
இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருகிறேன்.
மனுதர்மம் பலரால் கிழி கிழியென்று கிழிக்கப்பட்டு துவைத்துக் காயபோடப்பட்டு விட்டதால், தற்பொழுது மனுதர்மத்தை முன்னிறுத்துவதைக் குறைத்துக் கொண்டு பகவத் கீதையை முன்னிறுத்தி வருகிறார்கள்.
இந்த மனுதர்மமாக இருக்கட்டும் அல்லது பகவத் கீதையாக இருக்கட்டும் அல்லது மற்ற வேதங்களாக இருக்கட்டும், பெண்ணைப் பற்றி என்ன சொல்கிறது? முதலில் மனுதர்மம் சொல்கின்ற சில விடயங்களைப் பார்ப்போம்.
மனுதர்மமத்தின் தொடக்கம் ஏறக்குறைய பைபிள் போன்றுதான் இருக்கிறது. பைபிளைப் போன்றே உலகம் உருவான கதையில் தொடங்குகிறது. பின்பு ஒவ்வொரு வர்ணத்தினருடைய கடமைகள், குணங்கள், பாவங்கள், தண்டனைகள் என்று விரிகிறது.
இதிலே 9வது அத்தியயாம் பெண்களைப் பற்றி பேசுகிறது. 9வது அத்தியாயத்திலே மனுதர்மம் பெண்கள் பற்றி சொல்கின்ற சில விடயங்களைப் பார்ப்போம்.
பெண்கள் இளமைப் பருவத்தில் தந்தையாலும் பின்பு கணவனாலும், மூப்பில் மைந்தனால் காக்கப்படுபவர்கள். அவர்கள் சுயமாக இயங்கும் தன்மை உடையவர்கள் அல்லர்.(சுலோகம் 3)
பெண்கள் கற்புநிலை அற்றவர்களாகவும், நிலையான மனம் அற்றவர்களாகவும், நட்புத்தன்மை அற்றவர்களாகவும் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.(சுலோகம் 15)
இந்தச் சுபாவம் பெண்களைப் படைக்கின்ற போதே பிரம்மனால் கொடுக்கப்பட்டிருக்கிறது(சுலோகம் 16)
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகசிந்தனை போன்றவைகள் பெண்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது(சுலோகம் 17)
பெண்களுக்கு என்று மந்திரங்கள் இல்லை. பெண்களுக்கு மனச்சுத்தி கிடையாது. பெண்களின் பாவத்தை போக்குவதற்கான மந்திர உபதேசமும் கிடையாது. பெண்கள் பொய்யைப் போன்று பரிசுத்தம் அற்றவர்கள்(சுலோகம் 18)
பெண்கள் சுயமாக இயங்குகின்ற தன்மை அற்றவர்கள். பெண்கள் இயற்கையாகவே நிலையான மனம் அற்றவர்கள். கற்பு நிலை அற்றவர்கள். காமம், கோபம், துரோகம் அனைத்தும் பெண்களுக்காவே படைக்கப்பட்டிருக்கிறது. இவைகைள எல்லாம் பெண்களைப் படைக்கும் போது பிரம்மன் அவர்களுக்காக உருவாக்கியுள்ளார். இந்தப் பாவங்களை மாற்ற முடியாது. அதற்கான மந்திரங்கள் எதுவும் எல்லை. பெண்கள் மந்திரங்களை ஓதவும் கூடாது. மனுதர்மம் பெண்கள் பற்றிச் இப்படித்தான் சொல்கிறது.
இதை விட ஒரு பெண் ஒவ்வொரு ஜாதிக்காரனுடன் உறவு வைத்தால் என்ன தண்டனை, கணவனுக்கு பணிவிடை செய்யாவிட்டால் என்ன தண்டனை என்று மற்றைய சுலோகங்கள் நீண்டு, பெண்களை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அத்தனை தூரம் மனுதர்மம் அசிங்கப்படுத்துகிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக பெண் குழந்தைகளை பெறுவதையே குற்றம் என்றுதான் மனுதர்மம் சொல்கிறது.
ஒரு ஆண் எப்பொழுது தன்னுடைய மனைவியை "விவாகரத்து" செய்யலாம் என்று மனுதர்மம் விளக்குகிறது.
மலடியான மனைவியை எட்டு வருடத்திற்குப் பின்பும், ஊனம் உள்ள பிள்ளையை பெறுபவளை பத்து வருடத்திற்கு பின்பும், பெண்களையே பெறுபவளை பதினொரு வருடத்திற்குப் பின்பும், தீங்கு சொல்பவளை உடனடியாகவே நீக்கி விட்டு வேறு விவாகம் செய்து கொள்க. நீக்கப்பட்ட மனைவியர்களுக்கு எந்தப் பொருளும் கொடுக்கத் தேவை இல்லை.(சுலோகம் 81)
இந்து மத வேதங்கள், சாத்திரங்களின் படி பெண் இயற்கையாகவே கற்புநிலை அற்றவள். நிலையான மனம் அற்றவள். காமம் உடையவள். பெண் பிறப்பு ஒரு இழிவான பிறப்பு. அதை மந்திரங்களால் மாற்ற முடியாது. பெண் குழந்தையை பெறுவதே குற்றம்.
இப்பொழுது ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். திருமணத்தில், ஈமச் சடங்கில் பெண் கற்பு அற்றவள் என்ற அடிப்படையில் சொல்லப்படும் மந்திரங்களின் அடிப்படை புரிகிறது அல்லவா?
ஆயினும் உங்களுக்கு வேறு சில கேள்விகள் எழக் கூடும். இந்தத் தொடரை தொடர்ந்து படிக்கின்ற போது அவைகளுக்கான பதில்களையும் நீங்கள் பெறுவீர்கள்.
தொடரும்.....
No comments:
Post a Comment