தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் பெரும் எழுச்சியுடன் நடாத்தப்பட்டு வருகின்றது.
வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவீரர்களை நினைவுகூர்ந்து நடத்தப்படுகின்றன. நேற்று ஞாயிற்றுக் கிழமை தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் முதலாவது மாவீரர் லெப்ரினன்ற் சங்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
யாழ் குடாவிலும் மக்கள் பல்வேறு வகையான நிகழ்வுகளின் மூலம் மாவீர்களை நினைவுகூர்ந்து வருகின்றார்கள். பலத்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அவர்கள் துணிவுடன் இச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இன்று யாழ் குடாவில் தேசியத் தலைவரின் 53ஆவது அகவையை முன்னிட்டு மக்கள் கேக் வெட்டியும் இனிப்புப் பண்டங்களை பரிமாறியும் தமது உணர்வை வெளிப்படுத்தினர். வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி போன்ற இடங்களில் இந் நிகழ்வுகள் இடம் பெற்றன.
அத்துடன் பருத்தித்துறையில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரின் 524ஆவது படைப் பிரிவின் முகாமிற்கு சிலர் இனிப்புப் பண்டங்களை தபால் மூலம் அனுப்பியுள்ளனர். இதனால் படையினர் பெரும் கோபமுற்று தபால்காரரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
இதே வேளை கொழும்பில் மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 64 சிறைக் கைதிகளினால் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தினம் கொண்டாடப்பட்டுள்ளது. கேக் மற்றும் இனிப்புகள் பரிமாறப்பட்டன.
பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் தாம் விடுதலைப் புலிகளோடுதான் நிற்கின்றோம் என்பதை உறுதியாக எடுத்துக்காட்டியுள்ளனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓரளவு நடைமுறையில் இருந்த காலத்தில் யாழ் குடாவில் பல பொதுமக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகளில் பங்குபற்றினர். இவர்களை இனங்கண்டு வைத்திருந்த சிறிலங்காப் படையினர் பின்பு நேரடியாகவும், ஒட்டுக் குழுக்கள் மூலமும் இந்த பொதுமக்களை படுகொலை செய்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகளில் பங்குபற்றிய பலர் வன்னிக்கு தப்பி ஓடி வந்தனர். வன்னிக்கு செல்ல முடியாத நிலையில் இருந்த மற்றையவர்கள் தேடித் தேடிப் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் யாழ் குடாவில் இனி இல்லை என்று நிலை வந்த பின்புதான் இந்தக் கொலைகள் ஓரளவு குறைந்தன.
ஆனால் மக்களின் உணர்வுகளை துப்பாக்கிக் குண்டுகள் மூலம் அடக்க முடியாது என்பது மறுபடியும் நிரூபணம் ஆகியுள்ளது. யாழ் குடா என்கின்ற திறந்த வெளிச் சிறையில் உள்ள மக்கள் என்றாலும் சரி, கொழும்பில் மகசீன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் என்றாலும் சரி, தமது விடுதலை நோக்கிய உணர்வுகளை வெளிப்படுத்தி நிற்கின்றனர்.
இதே வேளை வன்னியில் மாவீரர் தின நிகழ்வுகளின் போது பல நாசகர வேலைகளை நடத்துவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவீரர் தின நிகழ்வுகளின் போது, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் துயிலும் இல்லங்களில் நினைவுச் சுடர் ஏற்றுவது வழமை. இவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தளபதிகளை குறி வைப்பதற்கு ஒரு தனிப்பிரி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஆழ ஊடுருவும் படைப் பிரிவைச் சேர்ந்த பலரும் அதிகளவில் வன்னிக்குள் ஊடுருவியுள்ளனர். நேற்று புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர் ஒருவரும் பொதுமகன் ஒருவரும் கொல்லப்பட்டனர். கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் நோயாளர் காவுவாகனத்தின் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.
விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இவர்கள் வன்னிக்குள் நுளைந்துள்ளனர். ஆள ஊடுருவும் படையணியினரை தேடி அழிக்கும் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர். இன்று மன்னார் கட்டையடம்பன் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணியை சேர்ந்த ஒருவர் விடுதலைப் புலிகளின் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலும் அவரிடம் இருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
வன்னி மீது சிறிலங்கா வான்படையும் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. நேற்று கிளிநொச்சி தர்மபுரத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட நான்கு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
இன்று புதுக்குடியிருப்பிலும், கிளிநொச்சியிலும் சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் ஒரு சிறுவன் படுகாயமடைந்தான். 18 வீடுகள் சேதமடைந்தன. விமானங்கள் வட்டமிடுவதைக் கண்ட மக்கள் பாதுகாப்புத் தேடிக் கொண்டதால், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
சிறிலங்கா அரசு இத் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்கள் மீது நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முந்தைய இரவு இத் தளங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டதாக தமக்கு தகவல்கள் கிடைத்ததாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.
மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு வான்படையையும், ஆழ ஊடுருவும் படையணியையும் முடுக்கி விட்டுள்ளது இதன் மூலம் உறுதியாகிறது.
2 comments:
நேற்று திங்கட்கிழமை இரவு 8:00 மணியளவில் முள்ளியவளை ஒட்டுசுட்டான் வீதி வெள்ளமலை என்னுமிடத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊர்தி மீது சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஊர்தியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை மாவீரர் நாளையொட்டி தமது உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்துவதற்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வானில் சென்று கொண்டிருந்தபோது அவர்களை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர் தாக்குதலில் 11 பாடசாலை மாணவர்கள் உட்பட 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment