Tuesday, June 26, 2007

புரிந்துணர்வு ஒப்பந்தமே சிறிலங்காவைக் காக்கும்!

இலங்கைத் தீவின் நிலைமை குறித்து ஆராய்வதற்கு நோர்வே, யப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட இணைத்தலைமை நாடுகள் நோர்வேயில் மாநாடு ஒன்றினை கூட்டியுள்ளன.

இணைத் தலைமை மாநாடுகள் இலங்கைப் பிரச்சனை குறித்து ஒரு தீர்க்கமான முடிவினை இந்த மாநாட்டில் எடுக்கும் என்று எதிர்பார்ப்பு சிலர் மத்தியில் ஏற்பட்டுள்ள போதும், வழமை போன்று இந்த மாநாடும் சில "கண்டனங்கள், வருத்தங்கள்" என்ற அளவிலேயே முடிவுறும் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் தங்களுடைய நிலைப்பாட்டை மீண்டும் ஒரு முறை தெளிவாகக் கூறியுள்ளனர்.

தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் பொறுபாளர் திரு சு.ப.தமிழ்செல்வன் அவர்கள் தமிழ்நெட் இணையத்திற்கு வழங்கிய செவ்வியில் "தெற்கில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் தீர்வு காணலாம் என்ற பழைய நாடகத்தினை விடுத்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையான அளவில் நடைமுறைப்படுத்துவதே தற்போதைய பிரச்சனையில் இருந்து இலங்கையை காப்பாற்றும்" எனவும் தெரிவித்துள்ளார்.

அச்செவ்வியின் சுருக்கம் பின்வருமாறு:

இலங்கையில் நிரந்தர அமைதிக்காகவும் இனப்பிரச்சினையின் நிரந்தர தீர்வுக்காகவும் இணைத்தலைமை நாடுகள் கூடி விவாதிப்பதை வரவேற்கின்றோம். இராணுவ தீர்வை விடுத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு இணைத்தலைமை நாடுகள் விடுத்த அழைப்பை வரவேற்பதோடு இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

குறிப்பாக இன அழிப்பு, கடத்தல்கள், கொலைகள், மனிதவுரிமை மீறல்கள் என்பவை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அத்துடன் இணைத்தலைமை நாடுகளின் ஜக்கிய ஒருமைப்பாடு சம்பந்தமாக தமிழ்மக்களின் சந்தேகங்கள் வலுப்பெறுகின்றன. சிலநாடுகள் கொழும்பை இராணுவத்தீர்வினை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கின்றன. அதேசமயம் மற்றும் சிலர் அரசியல் தீர்விற்கு அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர்.

சர்வதேச சமூகம் இலங்கையில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு பிரயோகித்த அழிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஏற்றுக்கொண்டு, சிறீலங்கா அரசாங்கத்தை போர்நிறுத்த ஒப்பந்தத்தை 100 வீதம் நடைமுறைப்படுத்தி சமாதான பேச்சு வார்தையினை மேற்கொள்வதற்கு வழிவகை செய்யும் என நான் நம்புகிறேன்.

நாம் என்றும் தோற்கடிக்கப்படவில்லை. நாம் இராணுவ தந்திரோபாயங்களை இடம், சூழல், நேரம் என்பவற்றை கருத்தில் கொண்டு பிரயோகிக்கின்றோம். குறிப்பாக கிழக்கில் சிங்களப் படைகள் எமது பகுதி நோக்கி முன்னேற முயலுவதும் எமது கடும் எதிர்தாக்குதலால் கடுமையான இழப்புகளுடன் பின்வாங்குவதும் சாதாரண நிகழ்வே. எந்த மக்களும் தமது நிலம் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு படைகளால் ஆக்கிரமிக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள். வெகு விரைவில் இலங்கை படைகள் தாம் சிக்கியுள்ள பொறியினை உணர்வார்கள்.

இவ்வாறு தமிழ்செல்வன் அவர்களுடைய செவ்வி அமைந்திருந்தது.

விடுதலைப் புலிகள் இணைத் தலைமை நாடுகளுக்கும் சிறிலங்காவிற்கும் தங்களுடைய நிலைப்பாட்டை உறுதியாகவும் வெளிப்படையாகவும் கூறி உள்ளனர். இந்த நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க சிறிலங்கா முன்வந்தால் மட்டுமே, சிறிலங்காவினை அழிவில் இருந்து காக்க முடியும்.

3 comments:

Anonymous said...

சுத்த அபத்தமான பார்வை. 100% போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தினால்
தமிழர்களே பாதிக்கப்படுவார்கள்.

இன்னும் 6 ஆண்டு காலத்திற்கு 100% போர் நிறுத்தம் பேணப்பட்டால்.....

1. கிழக்கு மாகாணம் சிங்களக் குடியேற்றத்தால் நிரம்பிவிடும்.
( குடியேற்றம் செய்யக்கூடாது என போர் நிறுத்த உடன்படிக்கையில்
விதிகள் எதுவும் இல்லை)

2. விடுதலைப் புலிகள் கடலில் இறங்க முடியாது.(ஏனெனில் புலிகள் கடல் போக்குவரத்தில் ஈடுபடலாம் என போர் நிறுத்த உடன் படிக்கையில்
எந்த விதியும் இல்லை. கடற்பயிற்சி, ஆயுதம் உட்பட அவசிய‌
பொருட்கள் முற்றாக தடைப்படும்.

3. நோர்வே உடன்பாட்டில் தமிழ் ஈழத் தீர்வுக்கு பதிலாக அதிகாரப் பரவலாக்களுடன் கூடிய இணைப்பாட்சி ஏற்கப்பட்டது. சாமாதானப் பேச்சு வார்த்தையில் இணைப்பாட்சிக்கு இலங்கை அரசு புத்திசாலித்தனமாக இறங்கி வ்ந்தால், தமிழர்களின் தனி நாட்டுக் கோட்பாடு. கை விட்டே ஆகவேண்டும். இதை விரும்புகின்றீர்க‌ளா?


4. எங்க‌ள் போராட்ட‌ம் இன்னும் 6 ஆண்டுக‌ள் தேக்க‌ம‌டைய‌ வேண்டுமா?


ஒரு ஈழ‌த் த‌மிழ‌ன்

வி.சபேசன் said...

ஒரு ஈழத் தமிழன்!

நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரி. ஆனால் போர்நிறுத்த ஒப்பந்தம் என்றைக்குமே 100 வீதம் சிறிலங்கா அரசால் கடைப்பிடிக்கப்பட்டது இல்லை.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை 100 வீதம் கடைப்பிடிப்பதாக இருந்தால், சிறிலங்காப் படைகள் மீண்டும் தங்கள் பழைய நிலைகளுக்கு பின்வாங்க வேண்டும். மக்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டும். உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும். கருணா குழு உட்பட அனைத்து துணைக் குழுக்களின் ஆயுதங்களும் களையப்பட வேண்டும்.

இப்படி போர்நிறுத்த ஒப்பந்தம் 100 வீதம் கடைப்பிடிக்கப்பட்டால், அதில் தமிழர் தரப்பிற்கும் நன்மைகள் உண்டு. ஆனால் அது அன்றைக்கும் நடக்கவில்லை. இனியும் நடக்கப் போவதில்லை.

நீங்கள் பாதகமான அம்சங்களாக குறிப்பிட்ட கடல் சார்ந்த பிரச்சனைகள் சம்பந்தமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எதுவும் தெளிவாக இல்லை. ஒஸ்லோ ஒப்பந்தத்தை புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குள் உள்ளடக்க முடியாது.

வேறுவிதத்தில் பார்த்தால் நீங்கள் சொல்வதைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்தான் சிறிலங்காவைக் காக்கும். காரணம் அதில் சிறிலங்காவிற்கு பல நன்மைகள் உண்டு. இதில் தமிழீழத்தை குறிப்பிடவில்லை. சிறிலங்கா அரசு கெட்டிக்காரத்தனமான அரசாக இருந்தால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 100 வீதம் கடைப்பிடித்து, சிறிலங்காவை காத்து, தமிழீழத்தை பலவீனப்படுத்தும். ஆனால் சிறிலங்கா அரசு அப்படிச் செய்யாது. மாறாக அழிவை நோக்கித்தான் போகும்.

வி.சபேசன் said...
This comment has been removed by the author.