இன்று சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே நாராயணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
திராவிடர் கழகம் திமுகவுடன் நல்லுறவை பேணி வருவதால், இந்தத் தீர்மானம் சில இடங்களில் எதிர்பார்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும் ராஜீவ்காந்திக்கும் நிலவி வந்த நல்லுறவை குலைத்து இந்திய ஈழப் போர் வெடிப்பதற்கு காரணமாக இருந்தவர்களில் எம். கே நாராயணனும் ஒருவர். அத்துடன் தம்முடைய சொற்படி நடக்காத விடுதலைப் புலிகள் மீது இன்று வரை வஞ்சம் வைத்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்.
பார்ப்பனிய சிந்தனைகளின் மொத்த உருவமாக திகழும் எம். கே நாராயணன் 1990ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்படுவதற்கும் காரணமாக இருந்தவர்.
தமிழ் நாடு அரசு ஈழத் தமிழர்கள் மீது அனுதாபத்தை வெளிப்படுத்துகின்ற போதெல்லாம், தமிழ்நாட்டிற்கு ஓடி வந்து கலைஞரை நாகரீகமாக மிரட்டி விட்டு செல்கின்ற வேலையை செய்து வருகிறார். அண்மையிலும் சிறிலங்காவிற்கு இந்திய ஆயுத உதவி செய்கின்ற விவகாரத்தில் கலைஞரை சந்தித்திருந்தார்.
இச் சந்திப்பின் பிறகு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் உட்பட பலர் சிறிலங்காவிற்கு ஆயுத உதவி வழங்க உள்ளதாக தெரிவித்தும் கலைஞர், அதற்கு இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பார்ப்பனிய அதிகார வர்க்கத்தின் சக்தியை மீறி தமிழ்நாட்டின் தலைவர்களால் செயற்பட முடியாது உள்ளதையே இது காட்டுகிறது.
இந்த நிலையில் திராவிடர் கழகம் தன்னுடைய பொதுக்குழு எம். கே நாராயணனை நீக்கும்படி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
ஆயினும் தங்களுடைய சாதிய நலன்களுக்காக ஒரு தேசத்தையே தவறான பாதையில் தள்ளுகின்ற எம். கே நாராயணன் போன்ற தீய சக்திகளை இந்திய மக்கள் இனம் காணுகின்ற வரை, இவர்களை நீக்குவது கடினமாகவே இருக்கும்.
10 comments:
தந்தை பெரியார் அவர்கள் எதையும் எதிர்க்கும் போது அதன் ஆணி வேரையேப் பிடுங்கி எறிய முயல்வார்.
இந்திய வெளிவிவ்காரத்துறையின் அநியாயங்களின் ஆணிவேர் எம்.கே,நாராயணன்.ராவும்,தெற்கு பிளாக்கும் யாருக்கும் அடங்காத அட்டூழியச் சர்வாதிகாரிகளாகவும்,பிரச்சார இயக்கங்கங்களாகவும் விளங்குவதை ஒழிக்க வேண்டும்.
கொஞ்ச்ங்கூடப் பதில் சொல்ல வேண்டிய அவ்சியமில்லாமல் அத்தனை ராணுவ உதவிகளையும் அள்ளி வீசிச் சிங்கள இன்வாத அரசின் ஏவுகணையாக விள்ங்க அறிவுரை கூறும் இவர்கள் விரட்டப்பட்டால்தான் இந்தியா ஈழமக்களின் பரிதவிப்பைஉணர முடியும்.
ஒழிக நாராயணன்களும்,நரசிம்மன்களும்.
இது ஒரு இலகுவான வேலை இல்லை. நாரயாணன் டில்லி மத்திய அரசின் மிக முக்கிய வேலைத்திட்டங்களை நகர்த்துபவர். ஈழப்பிரச்சினைக்காக ஒரு முக்கியமான மனிதரை நீக்க டில்லி ஒரு போதும்
விரும்பாது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் இலங்கை நெருக்கடி ஒரு சிறிய பாகமே.
ஒரு ஈழத் தமிழன்.
கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பினாலும் அனுப்புவார்களே தவிர நாரயணனை அனுப்ப மாட்டார்கள்
அர்த்தமற்ற கட்டுரை.
நாராயணன் போன்றவர்கள் நீக்கப்படப் போவதில்லை. நாராயணனை நீக்குவது என்றால், இந்திய ஈழப் போரின் போதே நீக்கியிருக்க வேண்டும்.
பொதுவாக உலக நாடுகளில் தமது நாட்டை தவறான வழியில் இட்டுச் செல்கின்ற அதிகாரிகள் தமது பதவியை ராஜினமா செய்வார்கள் அல்லது செய்ய வைக்கப்படுவார்கள். முன்னாள் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் றும்ஸ்வெல்ட்டின் ராஜினமாவை அண்மைய உதாரணமாக கொள்ளலாம்.
அதே போன்று புலனாய்வுத்துறை, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலர் ராஜினமா செய்த, செய்ய வைக்கப்பட்ட நிறைய உதாரணங்கள் உண்டு.
ஆனால் இந்திய-ஈழப் போர் முடிந்த பிற்பாடு அந்தப் போரிற்கு காரணமான அதிகாரிகளோ, அல்லது இந்திய அரசுக்கும், இராணுவத்திற்கும் தவறான தகவல்களைக் கொடுத்து இந்திய இராணுவம் பல இடங்களில் தோல்விகளுக்கு காரணமாக இருந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோ, யாருமே பதவி விலகவும் இல்லை. பதவி நீக்கப்படவும் இல்லை. ஒரு விசாரணை கூட நடத்தப்படவில்லை.
அன்றைக்கு தவறு செய்தவர்கள் இன்றைக்கும் தொடர்ந்து தவறு செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களை யாரும் தண்டிக்கவும் முடியாது. நீக்கவும் முடியாது. காரணம் உண்மையான அதிகாரம் அவர்களிடம்தான் இருக்கிறது.
வி.சபேசன் அவர்களே!!
பின்னூட்டத்தில் எழுதியது நீங்கள் தான் என்றால், இந்தக் கட்டுரையை பதிவிட்டது சுத்த அபத்தமான செயல் என ஏற்றுக்கொள்ள முடிகிறதா?.
திராவிட கழகம் போன்ற ஒரு குட்டிக்கட்சியால் டில்லியில் மாற்றம் வரும் என்பது ஒரு அபத்தமான கற்பனையாகத் தோன்றவில்லையா?.
உணர்ச்சிவசப்படுவதால் நம்பகத்தன்மை தொலைந்துவிடும்.
ஒரு ஈழத்தமிழன்
வீரமணிக்கு, எனது வாழ்த்துகள். தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் உங்களுக்கு எனது நன்றிகள்.
ஒரு வேண்டுகோள், நாராயணனை ஒரு இனத்திற்கு செய்கின்ற துரோகத்திற்காக அவரை கூண்டில் எற்ற வழி செய்ய வேண்டும்.
"ஒரு ஈழத் தமிழன்" அவர்களே!
"நாராயணன் நீக்கப்படுவார்" என்று நான் எங்குமே எழுதவில்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்
பார்ப்பனிய அதிகார வர்க்கத்தை மீறி தமிழ்நாட்டுத் தலைவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றும், நாராயணன் போன்றவர்களை நீக்குவது மிகக் கடினம் என்றும், அது இந்திய மக்கள் விழிப்புணர்வு பெற்றால் மாத்திரமே முடியும் என்றும் எழுதியிருக்கிறேன்.
ஈழத் தமிழர்களின் வேறு சில ஊடகங்களே "நாராயணன் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று எழுதியிருக்கின்றன.
//ஈழத் தமிழர்களின் வேறு சில ஊடகங்களே "நாராயணன் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று எழுதியிருக்கின்றன.//
அட போங்கண்ணை.
கையில சில டொலர்கள் இருந்தால் எவனும் ஓர் இணையப்பக்கம் தொடங்கலாம் எண்ட நிலை வந்தபிறகு அவனவன் நினைச்சபாட்டுக்கு தளங்கள் தொடங்கி, தாங்கள்தான் ஈழத்தமிழரின் ஏகபோக செய்தித்தளம் எண்ட தோரணையில நடத்திக்கொண்டிருக்கிறாங்கள். புலிகளின் அதிகாரபூர்வ செய்தித்தளம் எண்ட தோற்றப்பாட்டை ஏற்படுத்திறதிலயும் விண்ணண்கள்.
"கொத்தாபாய மீது சர்வதேசத்தடை" எண்டு கேள்விக்குறி கூடப் போடாமல் செய்தி போடுவாங்கள். சண்டையில புலிகளே நினைக்காத இடங்களிலயெல்லாம் படையணிகளைத் தரையிறக்கம் செய்வாங்கள். இடங்களைப் பிடிப்பாங்கள்.
எட்டுவருசத்துக்கு முந்தி நடந்த விமானத்தாக்குதலையும் அதில கொல்லப்பட்ட பொதுமக்களையும் பற்றிய செய்தியை இண்டைக்கு நடந்ததெண்டு போடுவாங்கள். வெறிமுறிஞ்ச பிறகு அல்லாட்டி ஆராவது எடுத்துச் சொன்னபிறகு நைசா செய்தியை ஒளிச்சு வைப்பாங்கள், ஒரு வருத்தம்கூடத் தெரிவிக்காமல்.
உந்தத் தமிழ்ச் செய்தித்தளங்களை ஆராவது தெண்டிச்சு நிப்பாட்டினால் நல்லது. உவங்கள் சிங்களவங்கள் உதுகளை விட்டிட்டு தமிழ்நெற்றைப் போய் நிப்பாட்டியிருக்கிறாங்கள். அவங்கள் விசயகாரங்கள்.
செய்திகளை முந்திக்கொடுக்கும் அவசரத்திலும், தமிழர்களுக்கு சார்பான செய்திகளை கொடுக்க வேண்டும் என்ற அவாவிலும் இப்படிச் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இது நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது
Post a Comment