Saturday, June 03, 2006

பெரிய மனிதர்!

அந்தப் பெரிய மனிதர் ஆட்டு மந்தைகளுக்கு நடுவில் உட்கார்ந்திருந்தார். சாந்தமான அவரது முகம் ஒளி பொருந்தியதாக இருந்தது. அதை தெய்வீக ஒளி என்று அங்குள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள். அவரது போதனைகள் அந்தப் பகுதியில் அவரை மிகவும் பிரபலப்படுத்தியிருந்தன. ஆலோசனை சொல்வதோடு தீர்ப்பு வழங்குபவராகக் கூட அந்தப் பெரிய மனிதர் இருந்தார். அவரையும் அவரது சித்தாந்தங்களையும் எதிர்க்கின்ற மனிதர்களும் அங்கு இருந்தார்கள்.
திடீரென்று ஆடுகள் பரபரப்பாகின. அங்கும் இங்கும் ஓடின. பெரிய மனிதர் நிமிர்ந்து பார்த்தார். ஒரு கூட்டம் அவரை நோக்கி ஆவேசமாக வந்து கொண்டிருந்தது. பெரிய மனிதர் எவ்வித சலனமும் இன்றி, அவரை நோக்கி வருகின்ற கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். வந்து கொண்டிருக்கின்றவர்கள் ஆண்களாக இருந்தார்கள். பெரும்பாலும் இளைஞர்களாக வேறு இருந்தார்கள். கூட்டம் நெருங்கி வந்த பொழுதுதான் பெரிய மனிதர் அதைக் கவனித்தார். அவர்கள் ஒரு இளம் பெண்ணை இழுத்து வந்து கொண்டிருந்தார்கள்.
அந்தப் பெண்ணை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார். அவர் மட்டும் அல்ல, அவளை ஊரே அறிந்திருந்தது. உலகின் மிகப் பழமையான தொழிலை செய்கின்ற பாவப்பட்ட பெண் அவள். கசக்கப்பட்டதால் தேகமும் மனமும் வாடிப் போயிருந்தாள். அவளின் கண்களில் பீதி தெரிந்தது. அவளை உருவாக்கிய சமூகம் இப்பொழுது அவளை அழிப்பதற்காக இழுத்து வந்திருந்தது.
பெரிய மனிதர் தன் முன் நடுங்கியபடி நிற்கும் பெண்ணையும் கூட்டத்தினரையும் மாறி மாறிப் பார்த்தார். அவரது பார்வையில் ஆச்சரியமும் கேள்விகளும் தெரிந்தன. "இவள் பாவத் தொழிலை செய்பவள், இவளைத் தண்டிக்க வேண்டும்". கூட்டத்தினர் அவளை இழுத்து வந்த காரணத்தை உரத்த குரலில் சொன்னார்கள். அந்தக் குரலில் ஒருவிதமான அதிகாரத் தொனி இருப்பதை பெரிய மனிதர் கவனித்தார். அந்தப் பெண் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்துக்கு இடம் இல்லை என்பதை சொல்கின்ற தொனி அது. அவளை எப்படி தண்டிக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறார்களே தவிர, தண்டிக்க வேண்டுமா, இல்லையா என்று கேட்பதற்கு அவர்கள் வரவில்லை.
"இவளின் தலையை வெட்ட வேண்டும்" என்றார் ஒருவர்.
"இவளை உயிரோடு கொளுத்த வேண்டும்" என்றார் மற்றொருவர்.
"இவளை பட்டினி போட்டுக் கொல்ல வேண்டும்" என்றார் வேறொருவர்.
"இவளை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்" என்றார் இன்னொருவர்.
அந்த இடத்தில் நிறைய கற்கள் இருப்பதைக் கண்ட கூட்டம் "கல்லால் எறிந்து கொல்வோம்" என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. சிலர் கற்களை கையில் எடுத்தும் விட்டார்கள். பெரிய மனிதர் அவர்களை அமைதியாகப் பார்த்தார். "இவளிடம் செல்லாத ஒருவன், பாவம் செய்யாத ஒருவன் இவள் மீது கல்லை எறியட்டும்". பெரிய மனிதரின் குரல் கம்பீரமாக கணீர் என்று ஒலித்தது. இதை எதிர்பாராத கூட்டம் திடுக்கிட்டுப் போனது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பெரிய மனிதரின் கூற்றில் இருந்த நியாயம் அவர்களை வெட்கப்படச் செய்தது. அனைவரும் தலை குனிந்தார்கள். ஒரு நீண்ட நிசப்தம் நிலவியது.
ஒரு இளைஞன் கூட்டத்தில் இருந்து மெதுவாக வெளியே வந்தான். அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்தான். கூட்டம் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தது. இளைஞன் பெரிய மனிதரிடம் வந்தான். கல்லை அவர் முன் வைத்தான். "இவளிடம் செல்லாத நீங்கள், பாவம் செய்யாத நீங்கள் இவள் மீது கல்லை எறியுங்கள்". இளைஞனின் குரல் இன்னும் கம்பீரமாக ஒலித்தது.
இப்பொழுது பெரிய மனிதர் தலை குனிந்தார்.
- வி.சபேசன்

No comments: