Friday, March 03, 2006

டென்மார்க்கில் குடி கொண்ட "சந்திரமுகி"???!!!

பொதுவாக எனக்கு நடிகர் ரஜனிகாந்தையும் இயக்குனர் சங்கரையும் பிடிக்காது. நடிகர் ரஜனிகாந்த் அரசியல் சம்பந்தமாக ஒரு முடிவை எடுப்பார் என்னும் நம்பிக்கையில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு தெளிவான பதிலைச் சொல்லாது அந்த இளைஞர் சக்தியை ரஜனிகாந்த் வீணடிக்கின்றார் என்னும் கோபம் எனக்கு நடிகர் ரஜனிகாந்த் மீது எப்போதும் உண்டு. அதே போல் தன்னுடைய படங்களில் நசூக்காக பார்ப்பனியத்தை புகுத்துவதால் எனக்கு சங்கரையும் பிடிக்காது. ஆனால் தற்பொழுது இவர்கள் இருவருக்கும் ஒரு விதத்தில் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். இருவரும் அண்மையில் என் போன்றவர்களுக்கு ஒரு உதவி புரிந்திருக்கிறார்கள்.
ரஜனிகாந்த் "சந்திரமுகி" என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் தமிழர் வாழும் தேசமெங்கும் வெற்றிகரமாக ஓடியது. அதே போன்று அடுத்து வந்த சங்கரின் "அந்நியன்" என்கின்ற படமும் பெரும் வெற்றியை பெற்றது. இரண்டு படங்களின் கதைகளும் ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற மனம் சம்பந்தமான அதி தீவிர மனப் பிறள்வு நோய்களை அடிப்படையாக கொண்டவை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனாக மாறும் கதையை கொண்டவை. அவ்வாறு மாறுவதற்கான மருத்துவக் காரணங்களை ஓரளவு புரியும்படி இந்தப் படங்கள் சொல்லிச் சென்றன.
ஆகவே ரஜனிகாந்த் மற்றும் சங்கரின் புண்ணியத்தில் சில விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வது தற்பொழுது ஓரளவு இலகுவாக இருக்கிறது. இனிமேல் ஒரு மனிதப் பிறப்பு சந்திரமுகியாகவோ, அந்நியனாகவோ, அம்மனாகவோ, வைரவராகவோ மாறுவதை புரிய வைப்பதற்கு மருத்துவச் சொற்களை தேட வேண்டியதில்லை. மருத்தவரீதியான விளக்கமும் கொடுக்க வேண்டியதில்லை. இலகுவாக இது "சந்திரமுகி நோய்", இது "அந்நியன் நோய்" என்று புரியவைக்கலாம்.
இப்பொழுது விடயத்திற்கு வருவோம். மத நம்பிக்கைகள் மிகுந்துள்ள பல நாடுகளில் சில மனிதர்கள் தங்களை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் சொல்லிவருகிறார்கள். இவ்வாறு மனிதர்களை கடவுளாக நம்புகின்ற பழக்கம் தமிழர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே உண்டு. முன்பு சிறுவயதில் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் எங்களின் உறவினர் வீட்டில் அவர்களது சாமி அறையில் வழக்கமாக உள்ள படங்களோடு மேலும் இரண்டு படங்கள் இருந்தன. இரண்டு படங்களில் இருந்தவர்களின் தோற்றமும் ஏறக்குறைய ஒரே மாதிரியே இருந்தது. ஒருவர் நல்ல வெள்ளை. மற்றவர் மிகவும் கருப்பு. வெள்ளை முகத்தோடு இருந்தவரை நான் ஏற்கனவே பல படங்களில் கண்டிருக்கிறேன். அவர் புட்டபர்த்தியில் இருக்கின்ற சத்ய சாயிபாபா என்பவர். ஆனால் அவரைப் போன்றே சடா முடியுடன் கருப்பாக இருந்தவரை எனக்கு யாரென்று தெரியவில்லை. உறவினரிடம் அவர் யாரென்று கேட்டதில் அவர் மிகப் பெரிய மகானென்றும், கடவுளின் அவதாரம் என்றும், இரண்டாவது சத்ய சாயிபாபா போன்றவர் என்றும் விளக்கம் சொன்னார். அந்தக் கடவுளின் அவதாரம் இப்பொழுது சிறையில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது. ஆம், கடவுள் என்று அவரை நம்பி வந்த பக்தைகளுக்கு வலுக்கட்டாயமாக சிற்றின்பத்தை அருளிய பிரேமானந்தாதான் அவர். என்னுடைய உறவினர் இப்பொழுதும் பிரோமானந்தாவின் படத்தை வைத்து வழிபடுகிறாரா என்பதை அறியமுடியவில்லை.
முன்பு கடவுளாக கருதப்பட்ட பிரேமானந்தா தற்பொழுது போலிச் சாமியாக தூற்றப்படுகிறார். பிடிபட்டால் போலிச்சாமி என்றும் பிடிபடாத வரை நல்ல சாமி என்றும் சொல்லுகின்ற மடமை மிகுந்த இந்த சமூகத்தை என்னவென்று சொல்வது? தங்களை சாமிகள் என்று சொல்லுகின்ற சில பேர் பல நல்ல காரியங்களை செய்வது உண்டு. தனக்குள் அம்மன் வருவதாக சொல்லுகின்ற கேரளாவைச் சேர்ந்த மாதா அமிர்தாயி என்பவர் நிறைய அனாதை ஆச்சிரமங்களை நடத்துகிறார். பல ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்கின்றார். துன்பப் படுகின்ற பல பேருக்கு ஆதரவாக இருந்து வருகிறார். ஆனால் இவ்வளவையும் அவரது சொந்தப் பணத்தில் இருந்து செய்கின்றாரா என்றால் இல்லை என்பதே பதில். அது அவரை அம்மனின் மறு உருவமாக நம்புகின்றவர்கள் கொடுத்த பணமே அவ்வளவும். ஆகவே மக்கள் பணத்தை மீண்டும் மக்களுக்கு வழங்குகிறார். இதில் அவரை போற்றுவதற்கு என்ன இருக்கிறது? ஆயினும் தன்னை கடவுள் என்று சொல்லுகின்ற பலரைப் போல் இவரும் இல்லாது எதோ சமூகத்திற்கும் கொஞ்சம் செய்கின்றார் என்று ஆறுதல் கொள்ளலாம். இவரைப் போன்று மக்களுக்கு தொண்டு செய்பவர்களாக இன்றுவரை கருதப்படுகின்ற மனிதர்களாகிய புட்டபர்த்தியில் இருக்கும் சத்யசாயி பாபா அல்லது மேல்மருவத்தூரில் இருக்கும் அம்மா என்று பலர் உண்டு. ஆனால் என்னதான் தர்ம காரியங்கள் செய்தாலும் ஒரு மானிடப் பிறப்பு தன்னை கடவுள் என்று சொல்லுகின்ற பொழுது அந்த நிமிடத்திலேயே ஒரு மோசடிப் பேர்வழியாக மாறிவிடுகிறான் அல்லது மாறிவிடுகிறாள்.
ஆனால் மக்களை ஏமாற்றுகின்ற எண்ணம் இன்றி உண்மையிலேயே தங்களில் சாமி வருவதாக நினைக்கின்ற மனிதர்களும் உண்டு. இவர்களுக்கு இந்த "சந்திரமுகி நோய்" பீடித்திருக்கிறது என்று அர்த்தம். அவர்கள் சிறு வயதில் கேட்ட கடவுள் சம்பந்தமான கதைகளில் ஒன்றிப் போய் பக்தி முற்றி இவ்வாறான மன நோய்க்கு ஆளாகுகிறார்கள். ஆகவே இவர்களின் நோக்கம் மக்களை ஏமாற்றுவது அல்ல. இவர்கள் கங்கா சந்திரமுகியாக மாறியது போன்று, அம்பி அந்நியனாகவும் ரெமோ ஆகவும் மாறியது போன்று அம்மனாகவும் முருகனாகவும் வைரவராகவும் மாறி விடுகிறார்கள்.
1986 ஆம் ஆண்டில் இதே போன்று என்னுடைய இன்னொரு உறவினர் திடிரென்று உருவெடுத்து ஆடத் தொடங்கி விட்டார். நாகபாம்பு மாதிரி வளைந்து நெளிந்து ஆடினார். தன்னுடைய கருவிழிகளை உள்ளே செருகி கண்களை வெண்மையாக்கி நாக்கை அடிக்கடி வெளியே நீட்டி நிலத்தில் ஊர்ந்தபடி ஆடினார். தன்னை நாக தம்பிரான் என்றும் சொன்னார். அதன் பிறகு எங்களின் ஊருக்கு அருகில் இருந்த ஒரு நாகதம்பிரான் கோவிலில் கிழமையில் ஒரு நாள் அவர் உரு ஆடி குறி சொல்லத் தொடங்கினார். உண்மையில் அவர் மீது நாகதம்பிரன் வந்து இறங்குவதாக பலர் நம்பினார்கள் அவரிடம் குறி கேட்க சென்றார்கள். அவருடைய வீட்டில் அடிக்கடி நாக பாம்பு வந்து செல்வதாக கதைகளும் உலாவத் தொடங்கின. அந்தப் பகுதிக்குள் அவர் மிகவும் பிரபலமானார். ஆனால் திடீரென்று அவருக்குள் நாதம்பிரான் வருவது குறையத் தொடங்கியது. அவர் உரு வந்து ஆடுகின்ற வேகம் குறைந்து போனது. மெது மெதுவாக முற்றிலுமாக நின்று போனது. நாகதம்பிரான் ஒன்றும் அவரை விட்டுவிட்டு வேறு வீடு பார்த்துச் செல்லவில்லை. உண்மையில் அவரிடம் நாகதம்பிரான் வரவில்லை. என்னுடைய உறவினர் என்பதால் அவர் மக்களை ஏமாற்றினார் என்று நம்புவதற்கு என்னுடைய மனம் இடம் தரவில்லை. அவருக்கும் வந்தது இந்தச் சந்திரமுகி நோயே. தற்பொழுது அவர் பூரணமாகக் குணமாகி தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக கேள்விப்பட்டேன்.
இவ்வளவையும் நான் எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு. இங்கே ஐரோப்பாவில் டென்மார்க்கில் ஒரு பெண்மணியை அம்மன் என்று நம்பி சில தமிழர்கள் வழிபட்டு வருகின்றார்கள். அந்த பெண்மணிக்கு தீபாராதனை செய்வதும் பாலூற்றுவதும் தேரில் வைத்து இழுப்பதும் என அங்கே சிலர் அடிக்கின்ற கூத்தை அறிவுள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். ஆனால் நான் கேள்விப்பட்டவரை டென்மார்க்கை விட மற்றைய நாடுகளில் உள்ளவர்கள்தான் அந்தப் பெண்மணியை அதிகமாக வழிபடுகிறார்களாம். அந்தப் பெண்மணியும் தன் பங்கிற்கு குழந்தைகள் அச்சப்படும் வண்ணம் கண்களை உருட்டுவதும் காவி உடை அணிந்து வேப்பிலைகளுக்கு மத்தியில் உட்கார்ந்திருப்பதும் என மக்கள் நம்புவதற்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறார். அம்மன் என்றால் இப்படித்தான் இருப்பார் என்று வேலைவெட்டியற்ற யாரோ ஒருவன் சொன்னதை நம்பி அந்தப் பெண்மணியும் அவ்வாறான கோலம் பூண்டு உலா வருகிறார். அவரது வாயில் இருந்து பச்சைக் கலரில் ஒரு வித திரவம் வருகிறது. அதை அற்புதம் என்று அங்கே போகின்றவர்கள் கன்னத்தில் வேறு போட்டுக் கொள்கிறார்கள். பிரேமானந்தாவின் வாயில் இருந்தும் லிங்கம் வந்தது. கைகளில் இருந்து வீபூதி கொட்டியது. வாயில் இருந்து அதற்குள் அடங்கக்கூடிய சிறிய லிங்கத்தையும் திரவத்தையும் எந்த ஒரு மந்திரவாதியாலும் வெளியே எடுக்க முடியும். ஆனால் தன்னைக் கடவுள் என்று சொல்லுகின்ற யாரும் வாயில் இருந்து பூசணிக்காயை எடுத்ததில்லையே? அப்படிச் செய்வதில்தானே அற்புதம் உள்ளது. அந்தப் பெண்மணி சில நோய்களை குணப்படுத்தியிருப்பதாக சிலர் சொன்னார்கள். ஐரோப்பாவில் கூட சில ஐரோப்பியர்கள் வெறும் கைகளாலேயே சிலருடைய நோய்களை குணப்படுத்துகிறார்கள். அவர்கள் அதற்கென்றே மருத்துவகூடங்களை திறந்து வைத்திருக்கின்றார்கள். அந்த மருத்துவர்கள் ஒரு போதும் தங்களை கடவுள் என்று சொல்வது இல்லை. அட, மதி கெட்ட என் தமிழினமே நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்! கடவுள் என்கின்ற ஒன்று இருந்தாலும் கூட, ஒருபோதும் ஒரு மனிதப் பிறப்பு கடவுள் என்று ஆக முடியாது. அப்படி தன்னை கடவுள் என்று ஒருவன் சொன்னால், ஒன்று அவன் அயோக்கியனாக இருக்க வேண்டும் அல்லது மன நொய் பிடித்தவனாக இருக்க வேண்டும். அதே போன்று டென்மார்க்கில் கோயில் கொண்ட அந்த அபிராமியும் மக்களை ஏமாற்றுகிறவராகவே இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் அவருக்கு சந்திரமுகி நோய் பிடித்திருக்கின்றது. ஆகவே அவருக்கு தேவை வைத்தியமே அன்றி நெய்வேத்திய ஆராதனைகள் அல்ல. அவர் மற்றவர்ளைக் குணப்படுத்துவதை விடுத்து முதலில் அவரைக் குணப்படுத்தும் வழியைப் பாருங்கள்.
டென்மார்க்கில் இப்படியென்றால் ஜேர்மனியில் அனுமன் என்கின்ற குரங்கிற்கு கோயில் கட்டி வைத்துள்ளார்கள். வாரத்தில் ஒருநாள் விசேட வழிபாடு நடை பெறுகிறது. நாம் ராமனையே தமிழர்களின் எதிரி என்கின்ற பொழுது, இவர்கள் அந்த ராமனிற்கு அடிமைச் சேவகம் புரிந்த குரங்கை வழிபடுவதை எந்த வகையில் சேர்ப்பது? மனிதர்களின் கடவுளை மனித வடிவில் சித்தரிப்பதை ஒரளவு பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஒரு குரங்கு எப்படி மனிதர்களுக்கு கடவுளாக முடியும்? அப்படியென்றால் இந்த மனிதர்கள் இன்னும் பரிமாண வளர்ச்சி அடையிவில்லை என்றுதானே அர்த்தம். பொதுவாகவே ஈழத் தமிழர்கள் இந்தக் குரங்கை அதிகமாக வழிபடுவதில்லை. தமிழ்நாட்டில் கூட குரங்கு வழிபாடு குறைவே. அயல் மாநிலமான ஆந்திராவிலும் வட இந்தியாவிலுமே இந்தக் குரங்கு வழிபாடு அதிகம் உண்டு. ஆனால் சிலர் பிழைப்புக்காக குரங்கு வழிபாட்டை தமிழர்கள் மத்தியில் திணிக்கின்றனர். மக்களை நம்ப வைப்பதற்காக பல செப்படி வித்தைகளை செய்த வண்ணமும் உள்ளனர். ஜேர்மனியில் உள்ள இந்தக் குரங்குக் கோயிலிற்கு ஈழத்தில் இருந்து ஒரு மனிதர் வருவார். அவருக்குள் இந்தக் குரங்குக் கடவுள் புகுந்து அருள் வாக்கு சொல்வதாக அங்கே செல்கின்ற மக்கள் நம்புகின்றனர். அந்த மனிதர் நம்பிக்கைக்கு விரோதமானவர்கள் யாராவது வந்தால் உதைப்பாராம். எனக்கு அவர் வருகின்ற பொழுது அவரிடம் உதை வாங்கி அவரை சில நாட்கள் உள்ளே வைக்க வேண்டும் என்று ஆசை.
சரி, நான் அதிகமாக கிண்டல் செய்யவில்லை. வாசிக்கின்ற சிலரின் மனம் புண்படும். ஆகவே ஒரு சமரசத் திட்டத்திற்கு வருகிறேன். டென்மார்க்கில் வாழும் அந்த அம்மனும் ஜேர்மனிக்கு வருகின்ற அந்த ஆஞ்சநேயனும் நான் கேட்பதைச் செய்து காட்டட்டும். அப்படிக் கடினமான ஒன்றையும் நான் கேட்கப்போவதில்லை. அம்மனாலும் ஆஞ்சநேயராலும் செய்ய முடிந்ததைத்தான் கேட்கின்றேன். அடுத்து முறை ஆஞ்சநேயர் ஜேர்மனி வருகின்ற பொழுது விமானத்தில் வராது ஆஞ்சநேயரைப் போல் கடலைத் தாண்டி பறந்து வரட்டும். அபிராமி அம்மனும் ஒரு மிருகக் காட்சிச் சாலைக்குச் சென்று தன்னுடைய வாகனமாகிய சிங்கத்தில் அமர்ந்து விட்டு வரட்டும். அதன் பிறகு நிச்சயமாக அவர்களைக் கடவுள் என்று நானும் வழிபடுவேன்.
-வி.சபேசன் (13.02.06)

1 comment:

Chellamuthu Kuppusamy said...

சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இரசிக்க மட்டுமில்லாது உணரவும் முடிகிறது.

-குப்புசாமி செல்லமுத்து