Friday, May 25, 2007

நெடுந்தீவுத் தளத்தின் மீதான தாக்குதலின் முக்கியத்துவம்!

கடலிலும் தரையிலும் சண்டை செய்கின்ற வலிமை வாய்ந்த விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி நெடுந்தீவு கடற்படைத் தளத்தை நேற்று (24.05.07) தாக்கி அழித்த சம்பவம் சிறிலங்கா அரச தரப்பில் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதிகாலை 1 மணியளவில் விடுதலைப்புலிகளின் ஈரூடகப் படையணி நெடுந்தீவின் தென்பகுதியில் தரையிறங்கி, கடற்படைத் தளம் மீது தாக்குதலை தொடுத்தது. இரண்டு மணி நேர கடும் சமரின் பின்னர் கடற்படைத் தளம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

அதே வேளை சிறிலங்கா கடற்படையினரின் டோராப் படகுகளும், நீருந்து விசைப்படகுகளும் நெடுந்தீவுக்கு விரைந்து வந்தன. அந்தப் படகுகள் மீதும் கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர். ஒரு டோராப் படகு அழிக்கப்பட்டது. இரண்டு நீருந்து விசைப் படகுகள் சேதமாக்கப்பட்டன.

தாக்குதலை வெற்றிகரமாக முடித்த விடுதலைப் புலிகள் கடற்படைத் தளத்தில் சிறிலங்கா கடற்படையினர் விட்டுவிட்டு ஓடிய ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு அதிகாலை 7 மணியளவில் தளம் திரும்பினர்.

இந்தத் தாக்குதலில் 34 கடற்படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். விடுதலைப் புலிகள் தரப்பில் 4 போராளிகள் வீரச் சாவடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து பிற்பகல் வரை சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு மௌனம் சாதித்தது. பின்பு வழமை போன்று தமது தரப்பு இழப்புக்களை குறைத்து அறிவித்தது. தமது தரப்பில் 4 கடற்படையினர் கொல்லப்பட்டும், 4 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு தெரிவித்தது.

விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணியான ஈரூடகப் படையணி நடத்திய இந்தத் தாக்குதல் சிறிலங்கா தரப்பில் பல குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணியின் முதலாவது தாக்குதல் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் மண்டைதீவு படைத் தளத்தின் மீது இடம்பெற்றது. அந்தத் தாக்குதல் பற்றிய செய்தியில் விடுதலைப் புலிகள் தாம் கடலிலும் தரையிலும் சண்டை செய்ய வல்ல ஈருடகப் படையணி ஒன்றை உருவாக்கி இருப்பதை பிரகடனப்படுத்தி இருந்தனர்.

அமெரிக்காவின் ஈரூடகப் படையாகிய "மரைன்" உலகப் புகழ் வாய்ந்தது. அமெரிக்காவின் சுதந்திரத்திற்கான போரில் இருந்து இன்றைய ஈராக் போர் வரைக்கும் அமெரிக்காவினுடைய அனைத்துப் போர்களிலும் "மரைன்" படையணி முக்கிய பங்கு வகித்து வருகிறது. இன்றைக்கு உலகம் முழுவதையும் அமெரிக்கா தன்னுடைய வல்லாதிக்க அச்சுறுத்தலுக்குள் வைத்திருப்பதற்கு அதனுடைய "மரைன்" படையணி மிக முக்கிய காரணம்.

தமிழீழத்தின் களநிலவரங்களையும், புவியியல் அமைப்பையும் கொண்டு பாக்கின்ற போது "மரைன்" போன்ற ஒரு ஈரூடகப் படையணியை விடுதலைப் புலிகள் உருவாக்கியது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக அமைந்தது.

ஆயினும் மண்டை தீவு தாக்குதலுக்குப் பின்பு விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி தாக்குதல் எதையும் மேற்கொள்ளவில்லை. ஏறக்குறைய பத்து மாதங்கள் கழித்து நெடுந்தீவு மீது விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி ஒரு வெற்றிகரமான அதிரடித் தாக்குதலை நடத்தி இருக்கிறது.

பல மாதங்களுக்கு பிறகு யாழ் மாவட்டத்தில் உள்ள ஒரு படைத் தளம் மீதான தாக்குதலாக இது அமைகிறது.

யாழ் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளால் விரைவில் அடையக்கூடிய இலக்குகள் இருக்கின்றன. ஆனால் ஏறக்குறை 16 கடல்மைல்கள் தொலைவில் உள்ளதும், சிறிலங்கா படையினருக்கு சாதகமான இடத்தில் அமைந்துள்ளதுமான நெடுந்தீவுப் படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி தாக்குதலை நடத்தி தனது வலிமையை நிரூபித்து இருக்கிறது.

கொழும்பில் இருந்து யாழ்குடாவிற்கான வினியோகப் பாதையின் வழியில் நெடுந்தீவு அமைந்துள்ளது. நெடுந்தீவு விடுதலைப் புலிகளின் கைகளில் வீழுமானால் யாழ் குடாவிற்கான கடல் வினியோகம் முற்றாக துண்டிக்கப்படும்.

தற்போதைய நிலையில் யாழ் குடாவை கைப்பற்றாது நெடுந்தீவை மட்டும் கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய பலம் விடுதலைப்புலிகளுக்கு உண்டா என்பது ஒரு கேள்விக் குறியே. ஆயினும் நெடுந்தீவுத் தளம் மீதான இந்தத் தாக்குதல் யாழ் குடாவிற்கான வினியோகத்திற்கு விடப்பட்ட ஒரு பெரும் அச்சுறுத்தல் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அத்துடன் நெடுந்தீவுக் கடற்படைத் தளம் ஒரு ராடர் நிலையமாகவும் செயற்பட்டுவந்தது. வான்புலிகளின் வருகையின் பின்பு நெடுந்தீவின் ராடர் நிலையம் மேலும் முக்கியத்துவம் பெற்றதாக மாறியது. இந்த ராடர் நிலையத்தை நவீனப்படுத்துகின்ற திட்டமும் சிறிலங்கா அரசிடம் இருந்தது. தற்பொழுது அந்த ராடர் நிலையம் விடுதலைப் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டதோடு, ராடரையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றிருக்கிறார்கள்.

இப்படி பல வகைகளில் நெடுந்தீவுத் தளம் மீதான தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி இலங்கைத் தீவின் எப் பகுதியிலும் தரையிறங்கித் தாக்குதலை நடத்தி விட்டு தளம் திரும்பக் கூடிய வலிமையுடன் இருக்கிறது. துறைமுகங்களை மட்டும் அன்றி இலங்கைத் தீவின் கரையோரமாக உள்ள அனைத்து இராணுவ, பொருளாதார இலக்குகளையும் விடுதலைப் புலிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நெருக்கடி நிலை சிறிலங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

விரைவில் விடுதலைப் புலிகள் பாரிய படை நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் வன்னியில் பெரும் எடுப்பில் நடந்து வருகின்றன. "கறுப்பு ஜுலை" சில வாரங்களில் வருவதும் அந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அவ்வாறான ஒரு பாரிய படை நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் ஈருடகப் படையணி மிக முக்கிய பங்கை ஆற்றும் என்று நம்பலாம்.

4 comments:

வி.சபேசன் said...

http://www.webeelam.com

Anonymous said...

//அத்துடன் நெடுந்தீவுக் கடற்படைத் தளம் ஒரு ராடர் நிலையமாகவும் செயற்பட்டுவந்தது. வான்புலிகளின் வருகையின் பின்பு நெடுந்தீவின் ராடர் நிலையம் மேலும் முக்கியத்துவம் பெற்றதாக மாறியது. இந்த ராடர் நிலையத்தை நவீனப்படுத்துகின்ற திட்டமும் சிறிலங்கா அரசிடம் இருந்தது. தற்பொழுது அந்த ராடர் நிலையம் விடுதலைப் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டதோடு, ராடரையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றிருக்கிறார்கள்.//

Yes it's a successful operation. But i think they should not have taken that ladder to Vanni. It's probably given by india and we know how well it works. Instead they should have collected the loose bullets and taken it to vanni.

மு. மயூரன் said...

சபேசன்,

இத்தாக்குதலின்போது

1. வானூர்தி எதிர்ப்பு ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன

2. இலங்கை வான்படை உதவிக்கழைக்கப்பட்டும் அது மறுக்கப்பட்டிருக்கிறது.

எனும் முக்கிய குறிப்புக்களை இந்திய ராணுவ ஆய்வாளர் ராமன் தந்திருக்கிறார்.

கட்டாயம் பார்கவேண்டிய கட்டுரை


.

PRINCENRSAMA said...

பாரதிர நடக்கட்டும்
ஈரூடகப் படையணியின்
பாரிய படையெடுப்பு!

ஊரதிர வெடிக்கட்டும்
ஆதிக்க வாதிகளின்
அக்கிரமக் கோட்டைகள்!

வெல்லட்டும் எம் புலிப்படை! வெல்லட்டும்! வெல்லட்டும்!
நெடுந்தீவை மட்டுமல்ல
ஈழத்தீவு முழுதையும்!