Wednesday, July 12, 2006

"சிவாஜி" திரைப்படத்தை புறக்கணிக்க நேரிடும்!

இரு நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் திருமாவளவன் தலைமையில் ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும்படி ரஜனி, கமல் உட்பட அனைத்து திரையுலகினருக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இதே போன்ற ஒரு அழைப்பை இயக்குனர் தங்கர்பச்சானும் விடுத்திருந்தார். இயக்குனர் தங்கர்பச்சான் ஆனந்தவிகடனுக்கு வழங்கிய செவ்வியில் இந்த அழைப்பை விடுத்திருந்தார். இந்த செவ்வியின் பொழுது தங்கர்பச்சான் சில காட்டமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். "இருபது கோடி, முப்பது கோடின்னு போட்டுப் படமெடுக்கிறீங்களே... யாரை நம்பி? இந்தியாவுக்கு வெளியே உலகமெல்லாம் வாழ்கிற ஈழத் தமிழர்கள் உருவாக்கியிருக்கிற சந்தையை நம்பித்தானே? அப்போ அவங்க துயரத்திலும் நீங்க பங்கெடுக்கணுமா, இல்லையா?" என்றும் "ஒரு படம் முடிச்சுட்டு, துட்டை அள்ளிட்டு, ஆயில் மசாஜ் எடுக்கவும், இமயமலைக்கும், ஓய்வெடுக்க வெளிநாட்டுக்கும் போனா நாங்க எங்கே போறது? மனச்சாட்சி வேண்டாமா? நம்ம மக்களுக்கு ஒரு துன்பம் வரும் போது அதுக்கான பொறுப்பு வேண்டாமா? இந்தப் பிரச்னையைக் கண்டுக்காம இருக்கோமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி வேண்டாமா?" என்றும் மிகக் காட்டமாகவும் அதே வேளை நியாயமாகவும் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
தற்பொழுது இதை வேலை வெட்டியற்ற சில ரஜனி ரசிகர்கள் பிரச்சனையாக்க முயற்சிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜனிகாந்தை விமர்சித்ததற்காக தங்கர்பச்சான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இந்த ரசிகர்கள் குரல் எழுப்பி உள்ளார்கள். இவர்கள் விளம்பரத்துக்காகவே இவ்வாறு தங்கர்பச்சானை கண்டிப்பதாக தெரிகிறது. அத்துடன் தற்பொழுது இவ்வாறு குரல் எழுப்புகின்ற ரசிகர்கள் மிகக் குறைவானவர்களாகவும், பெரும்பான்மையான ரசிகர்கள் இதில் ஆர்வம் காட்டாதவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் வரும் நாட்களில் "தங்கர்பச்சான் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்கின்ற கோசம் மற்றைய ரஜனி ரசிகர்கள் மத்தியிலும் பரவலாம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இவ்வாறான ஒரு நிலையில் சில விடயங்களை நாம் சொல்லி வைக்க விரும்புகிறோம். இயக்குனர் தங்கர்பச்சானின் கருத்துக்கள் மிகச் சரியானவை. கேள்விகள் நியாயம் மிக்கவை. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழ் நாட்டு நடிகனுக்கும் உண்டு என்பதை சுட்டிக் காட்டிய இயக்குனர் தங்கர்பச்சான் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. வெளிப்படையாக அழைத்தும் ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணியில் கலந்து கொள்ளாத நடிகர்கள்தான் உண்மையில் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆகவே தேவையில்லாமல் பிரச்சனையை கிளப்புகின்ற ரசிகர்கள் மீது நடிகர் ரஜனிகாந்த் நடவடிக்கை எடுப்பது நல்லது. ரஜனி ரசிகர்களின் அர்த்தமற்ற நடவடிக்கைகள் நடிகர் ரஜனிகாந்திற்குத்தான் தீங்காக அமையும். தமிழினத்திற்காக குரல் கொடுக்கின்ற தங்கர்பச்சானுக்கு துணையாக தமிழர்கள் நிற்பார்கள். தங்கர்பச்சானுக்கு எதிராக ரஜனி ரசிகர்கள் போராட்டம் நடத்துவதையோ அல்லது அவ்வாறான ஒரு போராட்டத்தை நடிகர் ரஜனிகாந்த் கைகட்டி வேடிக்கை பார்ப்பதையோ உணர்வுள்ள தமிழர்கள் பொறுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். இதை நடிகர் ரஜனிகாந்தும் அவரது ரசிகர்களும் அலட்சியம் செய்தால், நடிகர் ரஜனிகாந்த நடித்து வெளிவர இருக்கும் "சிவாஜி" திரைப்படத்தை தமிழர்கள் புறக்கணிக்க நேரிடும்.

2 comments:

ஈழவன் said...

அண்ணை,
உந்த வண்டில் விடுற வேலைய எப்ப எங்கட சனம் நிப்பாட்டப் போகுதோ தெரியேல.
ஏதாவது உருப்படியாச் செய்யவேணும். அல்லது உப்பிடி உதார் விடுறதுகளை நிப்பாட்ட வேணும்.
எவனாவது சிவாஜி படத்தைப் புறக்கணிக்க முன்வாற நிலையில இருக்கிறானா?
ஏலுமெண்டா பண்ணிப்பாருங்கோ பாப்பம்.
முதலில செய்ய முடியிறதுகளைக் கதையுங்கோ. அதைவிட்டிட்டு வடிவேலுமாதிரி காத்தில வாள் வீசிக்கொண்டிருக்காதையுங்கோ.

ரஜனிக்கோ அவரின் ரசிகர்களுக்கோ சம்பந்ப்பட்ட பிரச்சினை தொடர்பாக ஒரு கண்டனப்பதிவு போடுவதோடு வேலை முடிந்தது. அதை ஏற்கனவே சில தமிழகத்தமிழர் செய்துவிட்டினம். அதைத்தாண்டி படத்தைப் புறக்கணிப்போம் எண்டுறது நகைப்புக்கிடமானது.
முடிஞ்சால் செய்துபாருங்கோ பாப்பம்.
ஜேர்மனியில மட்டுமாவது உங்களால அப்படியொரு புறக்கணிப்பைச் செய்ய முடியுமா? ஏலாத விசயங்களைக் கதைக்கிறதே எங்கட சனத்திட்ட பொழுதுபோக்காப் போயிட்டுது. அவனவன் கடைத்திறப்பு விழாவுக்கே கோடம்பாக்கத்திலயிருந்து ஆக்களைக் கூப்பிட்டு விழா நடத்திறான். இதுக்குள்ள சிவாஜியைப் புறக்கணிக்கப் போகினமாம் எண்டா எவன் நம்புவான்?

வி.சபேசன் said...

இது நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதப்பட்டது. அப்பொழுது ஒரு சில ரசிகர்கள்தான் பிரச்சனை செய்தார்கள். அவர்களும் வெறும் பெயருக்கும் புகழுக்கும்தான் அதை செய்தார்கள். பின்பு அடங்கி விட்டார்கள்.

மாறாக இதை அவர்கள் பெரிதாக்கி இருந்தால், பதிலுக்கு எங்களாலும் புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். நடிகர் ரஜனிகாந்த் ஐரோப்பாவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த பொழுது அதை ஒட்டுமொத்த தமிழர்களும் புறக்கணித்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

மற்றையபடி ரஜனியோ ரஜனிரசிகர்களோ எதுவும் செய்யாது அமைதியாக இருக்கின்ற பொழுது, "சிவாஜி" படத்தை புறக்கணிக்க செய்ய முடியாது. அவ்வளவு தூரம் விழிப்புணர்வு எங்கள் மத்தியில் வரவில்லை.