Thursday, June 28, 2007

விஞ்ஞானம் அமர்ந்த இடத்தில் மூடநம்பிக்கை??!!!

இந்தியாவின் ஜனாதிபதியாக விரைவில் புதியவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தற்பொழுது ஜனாதிபதியாக உள்ள அப்துல்கலாமின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது.

அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதியாக வருவதையே பெரும்பாலான இந்திய மக்கள் விரும்புகிறார்கள். அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதியாவதை இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அனுமதிக்கிறது. ஆனால் ஓரளவு தனித்துவத்தோடு செயல்படுகின்ற அப்துல் காலம் மீண்டும் ஜனாதிபதியாவதை இந்தியாவின் பெரும்பாலான கட்சிகள் விரும்பவில்லை.

இந்தியாவில் "ஜனாதிபதி" என்கின்ற பதவி அதிகாரங்கள் அற்ற பதிவியாக இருந்தாலும், அந்தப் பதவிக்கு ஒரு மதிப்பையும் மிடுக்கையும் அப்துல் கலாம் வழங்கியிருந்தார்.

தமிழராகிய அப்துல் கலாம் ஒரு அணு விஞ்ஞானி. தன்னுடைய பதவிக் காலத்தில் பல இலட்சம் மாணவர்களை சந்தித்து, அந்த மாணவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவதையும் கற்றுக்கொடுப்பதையும் தன்னுடைய பெரும் பணியாகக் கொண்டிருந்தார்.

அப்துல் கலாம் ஒரு இஸ்லாமியராக இருந்த போதும் அவர் ஒரு மதச் சார்பு அற்ற நாட்டின் ஜனாதிபதியாக சரியான முறையில் கடமையாற்றி இருக்கின்றார். ஜனாதிபதிப் பதவி கிடைத்த போது "அல்லாவின் அருளால்தான் இந்தப் பதவி கிடைத்தது" என்று அவர் சொன்னதில்லை.

அப்துல் கலாமின் இடத்தில் தற்பொழுது மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிரதீபா பாட்டீல் என்பவர் காங்கிரஸ் கட்சியால் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இவரை காங்கிரஸ் கட்சியோடு, அதன் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளும், சிவசேனையும் ஆதரிப்பதால் பிரதீபா பாட்டீல் இந்தியாவின் ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது.

இந்தப் பிரதீபா பாட்டீல் தனக்கு ஜனாதிபதி பதவி கிடைக்க இருப்பதன் காரணம் குறித்து திருவாய் மலர்ந்துள்ளார்.

"மவுண்ட் அபுவில் உள்ள பிரம்மகுமாரிகள் ஆன்மீக பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு தாதிஜியை சந்தித்துப் பேசினேன். அப்போது தாதிஜி உடலில், பாபா ஆவி ரூபத்தில் புகுந்து எனக்கு அருள் வாக்கு சொன்னார். பாபா, தாதிஜி மூலமாக, நீ அதிர்ஷ்டசாலி, மிகப் பெரிய பொறுப்பு உனக்கு காத்துள்ளதாகவும் அருள் வாக்கு சொன்னார். அந்த சமயத்தில்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் என்னை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு எனது சம்மதம் தேவை என்றும் சோனியா காந்தியிடமிருந்து தகவல் வந்தது"

இப்படி புதிய ஜனாதிபதியாக இருக்கின்ற பிரிதீபா பாட்டீல் மகிழ்ச்சி பொங்க பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். விஞ்ஞானத்தின் மூலம் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற உழைத்த ஒரு மனிதர் இருந்த இடத்தில், ஆவி வந்து அருள் வாக்கு சொல்வதை நம்புகின்ற ஒரு பெண்மணி அமர்வது முரண்பாடான வேதனை.

தன்னுடைய மூட நம்பிக்கையை பதவி கிடைக்கும் முன்னமே வெளிப்படுத்துகின்ற ஒருவர் மதச் சார்பு அற்ற நாடு என்று மார் தட்டிக் கொள்கின்ற இந்தியாவின் ஜனாதிபதிப் பதவிக்கு வருவது இன்னும் ஒரு வேதனை.

ஆனால் தனித்துவத்தோடு செயற்படுகின்ற அப்துல் கலாம் போன்றவர்களை விட ஆவிகளை நம்புகின்ற பிரதீபா பாட்டீல் போன்றவர்களையே இந்தியாவின் கட்சிகள் விரும்புகின்றன என்பதுதான் உண்மை.

6 comments:

Anonymous said...

http://thatstamil.oneindia.in/news/2007/06/28/patil.html

நேசம் said...

பிரதிபா பாட்டீல் போன்ற பிற்போக்கு வாதிகளை காங்கிரசு முன்நிறுத்தியதன் மூலம் இந்திராவின் பாதையில் ஏதேச்சதிகாரப்போக்குடன் சோனியாவும் செல்லத்தொடங்கிவிட்டார்என்பது தெளிவாகிட்டது.
.கலைஞர் ஜாக்கிரதை.ஸ்டாலின் ஜாக்கிரதை கனிமொழியும் ஜாக்கிரதை
இவர்கள் முதலில் கெஞ்சுவார்கள் பின்னர்மென்னியை பிடிப்பார்கள் என்பது குறித்து தமிழினப்புள்ளிகள் எச்சரிக்கையாய் இருப்பார்களா? abusalih sarjunsalih@yahoo.com

Anonymous said...

இவரை பற்றி ஒரு நல்ல செய்தியும் உண்டு...

ராஜஸ்தான் மாநில அரசு சில மாதங்களுக்கு முன் தமிழ் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்தததை போல் ஒரு மத மாற்ற தடை சட்டம் கொண்டு வந்த போது இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படி உரிமைகளுக்கு எதிரானது என எழுதி திருப்பி அனுப்பியவர்.

தனிப்பட்ட முறையில் எப்படி இருந்தால் என்ன?

Anonymous said...

விஞ்ஞானம் விடை பெறுகிறது.
அஞ்ஞானம் கடை விரிக்கிற்து.

ச.மனோகர் said...

அப்பாடா! என்னடா யாரும் இதை பற்றி பதிவு போடவில்லையே என் நினைத்துக்கொண்டிருந்தேன்..நீங்கள் போட்டுவிட்டீர்கள்.

இது பற்றிய என் பதிவு...

http://babumanohar.blogspot.com/2007/06/blog-post.html

Anonymous said...

ஊழல் குற்றச்சாட்டு வந்த பின்பு பிரதீபா பாட்டீல் போட்டியில் இருந்து விலகுவதுதான் நியாயமாக இருக்கும்.